1987ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் இந்திய – புலிகள் போர் ஆரம்பித்து சில நாட்களில் இந்திய படைவீரர்கள் 18 பேரை தமிழீழ விடுதலைப்புலிகள் கைதிகளாக பிடித்தனர். அதன் பின்னர் நிகழ்த்த வரலாற்றில் இருந்து மனைந்துபோன இரு வரலாற்று சம்பவங்களை பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் எழுதிய தமிழீழம் சிவக்கிறது எனும் நூலில் இருந்து இங்கு பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன்.
“போர்க் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த 18 இந்திய இராணுவ படையினரை கட்டி அவர்கள் உடலில் டயர்களைப் போட்டு உயிரோடு புலிகள் கொளுத்திவிட்டார்கள்” என இந்திய அரசு திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் செய்தது. புலிகள் கொடூரமானவர்கள் என்று சித்திரிப்பதில் வானொலியும் தொலைக்காட்சியும் முன்னின்றன.
ஆனால், நடந்தது. என்ன? இந்தியாவின் பொய்முகத்தை விடுதலைப்புலிகள் அம்பலப்படுத்தினார்கள். 1987ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உலகப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 18 இந்திய வீரர்களையும் விடுதலைப்புலிகள் கொண்டுவந்து விடுவித்தார்கள். இந்தியப் படையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாண நகருக்குள் புலிகள் கைதிகளுடன் புகுந்தது எப்படி என்பது தெரியாமல் இந்திய அதிகாரிகள் திகைத்தனர்.
விடுவிக்கப்பட்ட இந்திய படையினரிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளரிடம் கூறினார்கள். ஆனால், புலிப் போராளி “நாங்கள் இவர்களைச் சித்திரவதை செய்தோமா? என்று கேளுங்கள்” எனக் கூறினார். கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான வாமன்சிட்டி ‘அப்படி யொன்றும் நடக்கவில்லை. நாங்கள் மிக நன்றாகவே நடத்தப்பட்டோம்.” என்று கூறினார்.
இந்திய இராணுவ அட்டூழியங்கள் பற்றிய சில புகைப்படங்களை புலிகள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கிவிட்டு விடைபெற்று வந்ததைப் போலவே மாயமாக மறைந்துபோனார்கள். அவர்கள் மறைந்ததும் இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களை மிரட்டினார்கள் “புகைப்படங்களை எங்களிடம் திரும்பத் தந்துவிடுங்கள். இல்லையென்றால் இன்னொருமுறை இலங்கை வரவிடமாட்டோம்” என்றார்கள். வேறு வழியில்லாமல் பத்திரிக்கையாளர்கள் அந்தப் படங்களைத் திருப்பிக் கொடுத்தார்கள்.
தங்கள் மக்களைக் கொன்று குவித்த ஆக்கிரமிப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் தம்மிடம் பிடிபட்டபொழுது போர்க் கைதிகளுக்குரிய மரியாதையுடன் அவர்களைப் புலிகள் நடத்தித் தமிழர் தம் பண்பாட்டினை நிலைநிறுத்திக் காட்டினார்கள். ஆனால், இந்தியப் படையோ தூதனாக வந்த புலிவீரனை நயவஞ்சகமாகப் படுகொலை செய்தது.
கட்டுவன் சந்தியில் சிங்கள இராணுவத்துடன் மூண்டெழுந்த போரில் எதிர்பாராத விதமாக ‘ஜோனி’யின் நெற்றியின் நடுவில் பாய்ந்த குண்டு காதுக்கு மேலாகத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எப்படியோ பிழைத்தார் ஜோனி. அவர் நெற்றிக்குள் ஓர் உலோகத் தகடு பதிப்பிக்கப்பட்டது. ஆனாலும், மறுபடியும் களம் காணவே அவன் துடித்தார்.
இந்தியப் படையுடன் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த ஜோனி மதுரைக்குக் கொண்டுவரப்பட்டு எங்கள் ஐயா பழ நெடுமாறன் இல்லத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிலநாள்கள் அவர் தங்கியிருந்தார். அப்பொழுது சென்னையில் இருந்த தளபதி கிட்டு ஜோனியை உடனடியாகச் சென்னைக்கு அனுப்புமாறு அழைத்தார். முழுமையாகக் குணமடையாத நிலையில் ஜோனியை அனுப்பிவைக்க நெடுமாறன் ஐயா தயங்கினார். ஆனால், தளபதி கிட்டுவின் அழைப்பை ஏற்று ஜோனி சென்னை போவதில் அவசரம் காட்டினார். அரைகுறை மனத்தோடு அவரை நெடுமாறன் ஐயா அனுப்பிவைத்தார்.
சென்னை சென்ற ஜோனிக்கு மிக முக்கியமான பணிதரப்பட்டது. கிட்டுவுடன் ‘ரா’ அதிகாரிகள் நடத்திய பேச்சுகள் பற்றித் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கூறி அவரின் கருத்தை அறிந்துவர ஒருவரை அனுப்ப வேண்டியிருந்தது. தலைவர் பிரபாகரன் இருக்குமிடம் தெரிந்த, அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரையே அனுப்ப முடியும். இந்தத் தகுதிகள் படைத்தவன். ஜோனி ஒருவனே. எனவே, அவரையே கிட்டு அனுப்பிவைத்தார்.
இந்திய இராணுவ விமானத்தில் யாழ்ப்பாணம் அழைத்துச்செல்லப் பட்ட ஜோனி தலைவர் பிரபாகரன் அவர்களை இரகசியமாகச் சந்தித்து விட்டுத் திரும்பும்பொழுது இராணுவம் அவரை வளைத்துக்கொண்டது. பிரபாகரன் இருக்குமிடத்தைக் கூறும் படி நிர்ப்பந்தித்தது. ஜோனி மறுத்து விட்டான். அவரிடமிருந்து எந்த இரகசியத்தையும் பெறமுடியாத ஆத்திரத்தில் இந்திய இராணுவம் ஜோனியைச் சுட்டுக் கொன்றது.
கைதிகளாகப் பிடிபட்ட பாரத வீரர்களைப் பரிவோடு நடத்தி விடுதலை செய்தனர் புலிகள். இது தமிழர்தம் பண்பாடு. தூதுவனாக வந்தவனைப் படுகொலை செய்தது இந்திய இராணுவம். இது பாரதப் பண்பாடு.