இனப்படுகொலை யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்ச அரசினால் தமிழர் தாயக நிலப்பரப்பில் பெருமளவு பாடசாலை மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், பாடசாலைகள், தேவாலயங்களில் தஞ்சம் புகுந்த சிறுவர்கள், பொது மக்களை ஈவிரக்கம் இன்றி இலக்குவைத்து, விமானத் தாக்குதல்களினாலும், கிளைமோர்த் தாக்குதல்களின் மூலமும், தரை மற்றும் கடல்வழித் தாக்குதல்களினாலும் பெருமளவான சிறுவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
வன்னியில் செஞ்சோலைச் சிறுவர் காப்பகம் மீது சிங்கள விமானப்படையினர் வீசிய குண்டுகளால் கொத்துக் கொத்தாக மாணவர்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டனர். இலங்கை விமானப்படைகள் தமிழர் தாயகத்தின் மீது மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்கள் எண்ணுக்கணக்கற்றவை. சிறுவர்கள் அமைதியாக கல்வி கற்ற அந்த இடங்களின் மீது உலங்குவானூர்தி (ஹெலி), சீ.பிளேன், சியாமாச் செட்டி, அன்ரனோவ், சகடை ( பட்டப்பெயர்), புக்காரா என தொடங்கி தமிழரின் உயிர் குடித்த விமானங்கள் தாயகத்தின் வானில் தலைகாட்ட முடியாத நிலையில்; ‘மிக்’ என்றும் ‘கிபிர்’ என்றும் ‘சுப்பசொனிக்’ என்றும் அப்பாவி தமிழரின் உயிர் குடிக்க சிறுவர்கள் மீது குண்டுகளை வீசி அவர்களைக் கொன்று குவித்து உலகமே கண்ணீர் விட்ட சோகத்தை நிகழ்த்தியது இனவாத சிங்களப் பேரினவாத அரசு. குமுதினிப படகில் ( நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்குமிடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள படகு) பயணித்த பலரை 1984 ஆம் ஆண்டு கடற்படை வெட்டியும் குத்தியும் கொன்றது. இதில் 6 மாத பச்சிளம் பாலகன் துப்பாக்கி முனையிலுள்ள கத்தியினால் கடற்படையினரால் குத்திக் கொலை செய்யப்பட்டான். மூன்று முறை அந்த பிஞ்சு நெஞ்சில் குத்தி கொன்ற கடற்படை இன்றும் தமிழர் தாயகத்திலேயே இனவெறியோடு நிலை கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி அன்று சின்னஞ்சிறுசுகளின் கலகலப்பான பேச்சுக்களுடன் பூஞ்சோலையாக காணப்பட்டது. பகல் 12.30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இனவெறி அரசின் ‘புக்காரா’ விமான்ங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தி இருந்தன. இந்த கொலை வெறிபிடித்தவர்களின் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 21 பாடசாலை மாணவர்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது 40 அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். இது பாடசாலை மாணவர்கள் படையினரால் கூண்டோடு அழிக்கப்பட்ட மற்றுமொரு சம்பவம். இவ்வாறு பள்ளி மாணவர்கள், பச்சிளம் குழந்தைகளை வகைதொகையின்றி பலியெடுத்த வரலாறு மிகக் கொடியது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிப்பீடமேறிய சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது கலவரங்கள் என்ற போர்வையில் திட்டமிட்டு மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும், அவயங்களை இழந்தவர்களாகவும் பல்லாயிரக் கணக்கானோர் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இவ்வாறு 2006ம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை கொத்துக்கொத்தாக சிறுவர்களை படுகொலை செய்திருக்கின்றது இந்த பேரினவாத அரசு. தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான சிட்டுக்களை சிங்கள தேசத்து படைகள் துடிக்கத் துடிக்க படுகொலை செய்தார்கள். பாலுக்கு அழுத பாலகர்கள் தாய் மார்பில் பாலருந்தும் முன் மடிந்த நிலையில் வன்னியில் கொல்லப்பட்டார்கள். கஞ்சிக்கு வரிசையில் நின்றவர்கள் மீது மகிந்த ஏவிய குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அந்த இடத்திலேயே மாண்டனர். செல்வீச்சின் போதும் விமான குண்டு வீச்சின் போதும் சிதறிக்கொல்லப்பட்ட கற்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தாயின் கருவறையிலே சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்தது.
செஞ்சோலைப் படுகொலை
சிங்களப்படைக்கும் தமிழீழத்தின் தமிழர் படைக்கும் இடையே நீண்ட சமாதானத்தின் பின்னர் 2006 ஆகஸ்ட் 11 திகதி கடுமையான சண்டை ஆரம்பித்தது. அந்த தொடர் சமரின் மூன்றாவது நாள் தான் இக் கொடிய சம்பவம் அரங்கேறியது. தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பேர் குருதியால் எழுதப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் அதிகளவான பெண்கள் அதுவும் மாணவிகள் ஒரே தடவையில் கொல்லப்பட்டது என்பது இந்த் 2006 ஆகஸ்ட் 14 இல் செஞ்சோலை என்னும் சிறுமிகள் இல்லத்தின் வளாகத்தில் வைத்து கொல்லப்பட்ட சம்பவமாகும். இந்த துயர் படிந்து இன்றோடு 15 வருடங்கள் கடக்கின்றது. ஐ.நாவின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப் மற்றும் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பாளர்கள் படுகொலை நடந்த இடத்தை பார்வையிட்டார்கள். அத்தோடு அறிக்கையும் விட்டார்கள். வன்னிப்பகுதியின் முல்லைத்தீவு மாவட்டம் வல்லிபுனத்தில் செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் வளாகத்தில். கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவப் பயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 53 மாணவிகள் உட்பட 61பேர் சில மணித்துளிகளில் மரணித்துபோனமை ஈழமண்ணை சோகத்தில் மூழ்கடித்தது. இந்த பயிற்சி நெறி 11-08 2006 இல் இருந்து 20-08-2006 வரை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் பயிற்சிநெறி தொடங்கிய மூன்றாவது நாளானா 2006-08-14 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணியளவில் கண்மூடித்தனமான வான் தாக்குதல்களுக்கு இலக்காகியது. பேரினவாத அரச படைகளின் நான்கு அதிவேக யுத்த விமானங்கள் (கிபிர்) மிலேச்சத்தனமாக காலை வேலையில் ஆறு முறை 16 குண்டுகளை கொட்டியது. இதில் 53 பாடசாலை மாணவிகள் படுகொலைசெய்;ப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி காணப்பட்டன. 129 மாணவிகள் பரிய காயங்கள் உட்பட 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் 25 மாணவிகளது நிலைமை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
33 உடல்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பலத்த சேதமடைந்த நிலையில் உள்ள மற்ற உடல்கள் அடையாளம் காணப்பட்டார்கள். உடல் சிதறி கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக்கொண்டு கிடந்தார்கள். படுகாயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தார்கள். கனவுகளை சுமந்து துள்ளிக்குதித்து ஓடிய கால்கள் பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப்போய் கிடந்தன. படுகாயமடைந்தவார்களில் மூன்று மாணவியர்களுக்கு கால்கள் துண்டிக்கப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.. இவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்கள்.
காயமடைந்த 52 சிறுமிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 13 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறைந்தது 64 காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களில் மேலும் காயப்பட்ட மூன்று மாணவிகள் முல்லைத்தீவு வைத்தியசாலையினால் கண்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். சிறீலங்கா பயங்கரவாத விசாரணைத் திணைக்களம் உடனடியாக காயப்பட்ட மூன்று மாணவிகளையும் கைதுக்குள்ளாக்கினர். இறுதியாக மூன்று மாணவிகளும் விடுவிக்கப்படடு வன்னியிலுள்ள தமது வீடுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களுள் காயமடைந்த ஒரு மாணவி வவுனியாவில் இறந்துவிட்டார். மற்றைய இரு மாணவிகளும் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு திரும்ப எடுத்துச் செல்லப்பட்டனர். சில மாதங்களின் பின் இரு மாணவிகளும் எங்கே தங்குகின்றார்கள் என்பதே மர்மமாக மாறியது. அவர்களது பெற்றோர்கள் மட்டும் ஏற்கனவே ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில்அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏறத்தாழ இரு வருடங்களாக எதுவித குற்றச்சாட்டுக்களுமின்றி இந்த இரு மாணவிகளது தடுத்துவைத்தலானது அவர்களதுபெற்றோருக்கு விளங்கிக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. இந்த மாணவிகள் தங்களின் நாளாந்தக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அதிகாலை வேளை கிணற்றடியிலும், மலசல கூடத்திலும், சமையலறையிலும் பயிற்சிக்கூடத்திற்குச் செல்வதற்கு தாயராக இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்ட கண் இமைக்கும் நேரத்துள் நான்கு திசைகளாலும் போடப்பட்ட குண்டுகள் மாணவிகளை எந்த திசை ஊடாகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத வகையில் திட்டமிட்டு குண்டுமழை பொழிந்திட அங்கிருந்த பலநூற்றுக்கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது.
ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் எப்போதும் ரத்தக்கறை மாறாது இருக்கிறது. உலக வரலாற்றில் நடந்த மறக்கமுடியாத பேரவலமாக தமிழன் வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது. எம் இனிய பள்ளிக் குழந்தைகளின் பேரிழப்பு – அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இந்த கொலை பற்றி வாய்மூடி மௌனிகளாகவே இருந்தனர். இன்றுவரை அந்தப் பாரிய படுகொலை பற்றி எந்தவித விசாரணைகளோ அல்லது பொறுப்புக்கூறல்களோ இடம்பெறவில்லை. சிங்கள அரசு தமிழ்ச் சமூகத்தின் கல்வி உரிமையை மறுத்துள்ளது. வரலாற்றில் சிங்கள தீவிர வாதிகள் எப்போதும் தாக்கியே வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவது இதுதான் முதற்தடவையல்ல. அரசின் முப்படைகளினதும் வெறியாட்டத்தால் அப்பாவித் தமிழர்கள் பட்டபாடு வார்த்தைகளால் எழுதிவிடமுடியாது. ஏனெனில் அந்த வலியை பதிவுசெய்யும் ஆற்றல் இந்த வார்த்தைகளுக்கு இல்லை.
தமிழீழக் கல்வி மேம் பாட்டுப் பேரவை
தமிழீழக் கல்வி மேம் பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக் கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டித் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1993 மாசி 13 நாள் இல் வெளியிட்ட அறிக்கையில் ‘’மனிதவளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது ஆணிவேர் போன்றது” என்று கூறியிருந்தார். சமுதாய விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்கும் மாணவர்களின் கல்வி கற்கும் உரிமைக்கு இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயலவில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமையாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்.
தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியைக் கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத்தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரசபடைகள் அமைதியைக் கலைத்துவிடுகின்றன.
இத்தனை தடைகளையும் தாண்டித் தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அரசின் பொதுத்தராதர சாதாரணதரத் தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக் கல்வி மேம் பாட்டுப் பேரவை மாதிரிப் பரீட்சைகளை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப்பூர்வமாகப் பாராட்டுவதுடன் இத்தேர்வில் தேற்றி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
செஞ்சோலை…
பெற்றோரை இழந்து தமிழீழக் குழந்தைகளாக வளர்க்கப்படும் இடம் செஞ்சோலை என்பது உலகம் அறிந்த உண்மை. யுனிசெப் மற்றும் பல்வேறு நாட்டுத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் செஞ்சோலைக்கு வருகை தந்து பாராட்டியிருந்தமையினையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். உலகம் அறிந்த உண்மையை சிங்கள அரசு அறியவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வல்லிபுனம் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாகவுள்ள பகுதி. குடாநாட்டிலிருந்து 1995 இல் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தவர்களுக்கு நன்கு தெரியும். இந்த குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியிலேதான் வல்லிபுனம் செஞ்சோலை வளாகமும் உள்ளது. செஞ்சோலை என்றதும் தாயகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றாக தெரியும். இந்த வளாகத்திற்கு அருகில் பல நலன்புரி நிலையங்கள், வேறு பல சிறுவர் இல்லங்கள் என பலவுள்ளன. மனிதநேய நடவடிக்கைகள் நிறைந்த ஒரு பகுதியே வல்லிபுனம்.
செஞ்சோலை வளாகம் தாக்குதலுக்கு இலக்காகும்போது செஞ்சோலை இல்லத்தைச் சேர்ந்த தமிழீழக் குழந்தைககள் இருக்கவில்லை. அவர்கள் 2006ம் வருடம் தை மாதம் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள். ஆனால், வள்ளிபுனம் – செஞ்சோலை வளாகம் தொடர்ந்தும் செஞ்சோலை வளாகமாகவே இருந்தது. இங்கு வதிவிட பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுவது வழமையானதொன்று. காரணம் ஏற்கனவே சிறுமியர் இல்லமாக இது செயற்பட்டமையால் மாணவிகள் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இவ்வளாகம் இருப்பதே. அத்துடன், இந்த வளாகம் ஐ.நா. அமைப்புகளூடாக பயிற்சிப் பட்டறைக்கான இடமென இலங்கை அரசாங்கத்தாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால் இங்கு பல பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றுவந்தன. அதேபோன்றதொரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இலங்கை அரசின் விமானப் படை கோரத்தாண்டவமாடி தமிழரை துன்பத்தில் வாடவிட்டுள்ளது. 11ஆம் திகதி முதல் 20ம் திகதிவரை இச்செஞ்சோலை வளாகத்தில் க.பொ.த. உயர்தர மாணவிகளுக்கான 10 நாள் வதிவிட பயிற்சி நெறி நடைபெற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
முன்னால் அதிபர் தம்பிராசா ரவீந்திரன்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி நிர்வாக எல்லைக்குட்பட்ட ‘ஜெயபுரம்’ என்ற பிரதேசத்தில் இருந்து ஒரு தன்னம்பிக்கை மிக்க ஒருவர்தான் இந்த ஓய்வு பெற்ற 61 வயதுடைய பாடசாலை அதிபர் ‘தம்பிராசா ரவீந்திரன்’ அவர்கள் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சால் தனது வலது கையை இழந்த நிலையில் அங்கு வாழும் கடுமையான உழைப்பாளியாக விளங்கிடும் ஓய்வுநிலை அதிபர் ரவீந்திரன் அவர்களின் கூறுகையில்.
நான் தம்பிராசா ரவீந்திரன் எனது சொந்த இடம் யாழ் வேலனை. 1990ற்கு முன்னதாகவே முழங்காவில் பகுதிக்குத் திருமணம் செய்து வந்து குடியேறினேன்.1991 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றபின் ஒரு நல்ல ஆசானாகச் செயற்பட வேண்டும் என்கிற அவாவும் உத்வேகமும் என்னுள் குடிகொண்டது. தொடர்ந்து பல்வேறு பாடசாலைகளிலும் ஆசிரியராகக் கடமையாற்றினேன். அரியாலை நாகபடுவான் பாடசாலை, பூநகரி மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் அதிபராகச் சேவையாற்றி இருக்கின்றேன். மனவலிமையும் உடல் வலிமையும் வளர்க்கும் அளவில் பல்வேறு கடினமான வேலைகளைச் செய்ய என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். அது தான் இப்போது கையை இழந்த நிலையிலும் ஓய்வூதியத்தை மட்டுமே எதிர்பார்த்து இராமல் ஓய்வு இன்றித் தோட்ட வேலைகளையும் கையைப் பயன்படுத்தி இடர்பாடுகள் இல்லாமல் செய்கின்ற வலிமையை எனக்கு தந்திருக்கிறது. எனது இளமைக் காலத்தில் கல்வியோடு பல விளையாட்டுக்களிலும் நான் ஈடுபடுவேன். எனது கையும் காலும் எப்போதும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கும்.
உண்மையில் இப்போது கை இல்லை என்பதை மறந்து நானாகவே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட முனைகிறேன். இரண்டு கைகளையும் பயன்படுத்திச் செய்ய வேண்டிய கடினமான வேலைகள் தான் எனது கையைச் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை பறித்து விட்டது; என்பதை எனக்கு ஞாபகமூட்டுகிறது. கை இல்லாமல் வெட்டுவதற்கும் கொத்துவதற்கும் ஒரு கையாலே பாரங்களை தூக்குவதற்கும் இசைவாக்கம் அடைந்து விட்டேன். இருகரம் கூப்பி இந்த வல்லமையை தந்த கடவுளுக்கு நன்றி தான் சொல்ல முடியவில்லையே தவிர நான் ஏனைய எல்லா வேலைகளையும் செய்யக் கூடியவன் தான்.
நான் அதிகமான மாணவர்களை உருவாக்கி இருக்கின்றேன் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. சேவைக் காலம் முழுவதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு தான் ஒரு ஆசிரியராக பணியாற்றி இருக்கின்றேன். தரம் 1 தொடக்கம் உயர் தரம் வரை எல்லா வகுப்புக்களுக்கும் கற்பித்த அனுபவம் இன்றும் எங்காவது செல்கின்ற போது ஒவ்வொரு அலுவலகங்களிலும் என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருக்கும் போது எனது கற்பித்தல் வீணாகவில்லை என்கிற ஒரு திருப்தி ஏற்படுகிறது.
நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் அதாவது இன்றைய பாடசாலைகளில் மாணவர்களின் ஆசிரியர்களின் உறவு நிலை எப்படி இருக்கின்றது. ஆசிரியர்களுக்கான மதிப்பு எப்படி இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பல்வேறு குற்றங்களும் கலாசாரச் சீரழிவுகளும் பாடசாலைகளில் இடம் பெறுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச பாடசாலைகளில் எவ்வித சீரழிவுகளும் இடம் பெறவில்லை. ஒரு ஒழுங்கு முறையான நிர்வாக அமைப்பின் கீழ் எல்லா விடயங்களும் இடம் பெற்றது. மாணவர்கள் ஆசிரியர்களைப் பய பக்தியோடு தாயாகத் தந்தையாக நோக்கினார்கள். அந்த அளவுக்கு மக்களை குறிப்பாக மாணவர்களை இயக்கம் வழி நடத்தினார்கள். மரியாதைப் பண்பு நிறைந்த மாணவர்களாக மனிதர்களாக வாழும் மனநிலைக்கு மாணவர்களை விடுதலைப் புலிகள் இட்டுச் சென்றார்கள் எனலாம்.
ஒரு விடுதலை இயக்கமாக அவர்கள் மாணவர்களை வழி நடத்துவதில் அக்கறை செலுத்தினார்கள். எதிர்காலத் தமிழ் ஈழத்தின் அங்கங்களாக மாணவர்கள் ஒவ்வொரு வரும் இருக்கிறார்கள். என்பதை கருத்திற் கொண்டு மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் நல்லெண்ணத்தை விதைத்தார்கள் என்பதை ஒரு ஆசிரியராக அதிபராக நான் சான்றுபடுத்துகின்றேன். மாணவர்களுக்குத் துறை சார்ந்த ஆற்றலை ஏற்படுத்திட தலமைத்துவப் பயிற்சிகளும் வழங்கினார்கள். அதன் காரணமாக ஏராளமான இயக்கப் பிள்ளைகளின் விருப்பத்துக்குரிய ஆசானாக நானும் இருந்திருக் கின்றேன். அந்த அரிய காலம் இன்னும் எனக்கு மகிழ்ச்சியாக நினைவில் சங்கமிக்கின்றது.
விடுதலைப் போராளிகள் பெரியவர்களுக்குக் கொடுக்கும் மதிப்பு அவர்கள் தலைவரின் பிள்ளைகள் என்பதைச் சந்தேகம் இன்றி வெளிப்டுத்தியது. இயக்கத்தின் மீதான எனது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் சாட்சியாகும் வகையில் எனது மகனும் இயக்கத்தில் இணைந்து மருத்துவப் போராளியாகத் தனது சேவையை மக்களுக்கும் போராளிகளுக்கும் இறுதிவரை வழங்கினான். இன்றும் என்னால் மறக்க முடியாத கறைபடிந்த நாள் செஞ்சோலை மீது சிங்கள வான்படை நடத்திய கொலை வெறித் தாக்குதலே. அப்பாவி மாணவர்களைத் தனது மிலேச்சத்தனமான தாக்குதல்களால் கொன்றொழித்த அந்தப் படுகொலை ஆறாத வடுவாக என் மனத்தில் பதிந்திருக்கின்றது.
கிளிநொச்சிக் கல்வி வலயத்தால் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும். இதைத்தவிர இப்பயிற்சி நெறியைப் பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிதியம் (women’s rehabilitation and development (CWRD) இணைந்து முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தின் 18 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டு தேர்தெடுக்கப்பட்ட அறிவு சார்ந்த மாணவர்கள் சுமார் 400 பேர் பத்து நாட்கள் வதிவிடப் பயிற்சியில் சமூக தலமைத்துவத் திறன்கள், முதலுதவி, பால், பால்நிலை சமத்துவம், தன்னம்பிக்கையை, வினைத்திறனுடனான நேரமுகாமை, மற்றும் குழுவேலை போன்றவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இப்பயிற்சிப் பட்டறை நடைபெறுவதாக தீர்மானிக்கப் பட்டு பயிற்சி நடந்து கொண்டிருந்த வேளை ‘கிபிர்’ விமான குண்டுத் தாக்குதலை சிங்கள அரசு நிகழ்த்தியது. இதில் உயிரிழந்த அத்தனை மாணவிகளும் அறிவுத்துறையில் திறமை மிக்கவர்கள். அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் எத்தனை புத்தி ஜீவிகளை ஈழத்து மண்ணில் எமது சமுதாயம் கொண்டிருக்கும் என அவர் கூறினார்.
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் இளங்குமரன்.
பயிற்சிப்பட்டறை குறித்து தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் இளங்குமரன் கூறுகையில்; “இதுவொரு வருடாந்த பயிற்சிப்பட்டறை. கிளிநொச்சி கல்வி வலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சி நெறிக்கு பெண்கள் புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி நிலையம் நிதியுதவியையும் ஆதரவையும் வழங்கியிருந்தது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 18 பாடசாலைகளைச் சேர்ந்த உயர்தர மாணவிகளும் வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பெண்களும் இப்பயிற்சியில் பங்கெடுத்திருந்தனர். பங்குபற்றிய மாணவர்கள் பயிற்சிப்பட்டறைக்குத் தம்மைத் தயார்ப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றது. தயாராகிக்கொண்டிருந்த மாணவர்களில் ஒரு பகுதியினர் விமானத்தின் இரைச்சல் சத்தத்தைக் கேட்டு அலறி அடித்து ஓடிப் பாதுகாப்பு எடுத்துக்கொண்டனர்.
இம்மாணவர்கள் அனர்த்த முகாமைத்துவம், தலமைத்துவம், இடர்கால முதலுதவி, பயிற்சி நெறிமூலம் தனிநபர் ஆற்றல் ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்காக ஆசிரியர்களாலும் துறைசர் நிபுணர்களாலும், அரங்கமூடாக கற்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்ப்பட்டதாக விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. விடுதலைப்புலிகள் சிங்கள மக்களையோ, மாணவர்களையோ அல்லது சிறுவர்களையோ இலக்குவைத்து முன்னெடுத்ததுமில்லை, முன்னெடுக்கவுமில்லை. இதில் மிகவும் வேடிக்கையான விடையம் என்னவெனில், விடுதலைப்புலிகள் செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதலுக்குப் பழிக்குப் பழி வாங்கிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தில் தெற்கில் இயங்கிய பாடசாலைகள் அனைத்தும் சிங்கள அரசால் மூடப்பட்டது. அப்படியானால் வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவித் தமிழ் மாணவிகள் தான் என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டது என்பதை எவரும் இலகுவில் புரிந்து கொள்வார்கள்.
பத்துநாள் பயிற்சிப்பட்டறையில் கொடும் கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளாகள்.
மு/வித்தியானந்தா கல்லூரி மாணவிகள்
- நிவேதனா தமிழ்வாசன்
- அனோயா சுந்தரம்
- தயானி கிரிதரன்
- புவனேஸ்வரி புவனசேகரம்
மு/குமுளமுனை மகாவித்தியாலைய மாணவிகள்
- நிந்துயா நல்லபிள்ளை
- ராஜிதா வீரசிங்கம்
- கௌசிகா உதயகுமார்
- சுகிர்தா சாந்தகுமார்
- தாட்சாயணி விவேகானந்தம்
மு /புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவிகள்
- பென்சிடியூலா மகாலிங்கம்
- தர்சிகா தம்பிராசா
- சுதர்சினி துரைலிங்கம்
மு/உடையார்கட்டு மகாவித்தியாலைய மாணவிகள்
- கோகிலா நாகலிங்கம்
- மதனி பாலகிருஸ்ணன்
- விதுசா கனகலிங்கம்
- நிருபா கனகலிங்கம்
- அருட்செல்வி முருகையா
- இந்திரா முத்தையா
- கோகிலா சிவமாயஜெயம்
- சாந்தகுமாரி நவரட்ணம்
- கார்த்திகாயினி சிவமூர்த்தி
- சத்தியகலா சந்தானம்
- தபேந்தினி சண்முகராஜா
மு/விசுவமடு மகாவித்தியாலைய மாணவிகள்
- நந்தினி கணபதிப்பிள்ளை
- யசோதினி அருளம்பலம்
- ரம்ஜா ரவீந்திரராசா
- தீபா நாகலிங்கம்
- தீபா தம்பிராசா
- நிரஞ்சலா திருநாவுக்கரசு
- நிசாந்தினி நகுலேஸ்வரன்
- தயாளினி தம்பிமுத்து
- கேமாலா தர்மகுலசிங்கம்
- சிந்துஜா விஜயகுமார்
- ஜெசீனா சந்திரன்
மு /முல்லைத்தீவு மகாவித்தியாலைய மாணவிகள்
- கம்சனா ராஜ்மோகன்
- கலைப்பிரியா பத்மநாதன்
- தனுஷா தணிகாசலம்
- சுகந்தினி தம்பிராசா
- வத்சலாமேரி சிவசுப்பிரமணியம்
- திவ்யா சிவானந்தம்
- பகீரஜி தனபாலசிங்கம்
- கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை
கிளி/தர்மபுரம் மகாவித்தியாலைய மாணவிகள்
- நிவாகினி நீலையனார்
- மங்களேஸ்வரி வரதராஜா
- மகிழ்வதனி இராசேந்திரம்
மு /செம்மலை மகாவித்தியாலைய மாணவிகள்
- கிருத்திகா வைரவமூர்த்தி
- திசானி துரைசிங்கம்
- வசந்தராணி மகாலிங்கம்
- நிவேதிகா சந்திரமோகன்
மு /ஒட்டுசுட்டான் மகாவித்தியாலைய மாணவி
- நிலோஜினி செல்வம்
கிளி /முருகானந்தா மகாவித்தியாலைய மாணவிகள்
- பிருந்தா தர்மராஜா
- சர்மினி தேவராசா
கிளி /பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவி
- லிகிதா குபேந்திரசிங்கம்
செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் உயிரிழந்த செஞ்சோலை பணியாளர்களது விபரம்:
- சந்திரசேகரன் விஜயகுமாரி
- சொலமொன் சிங்கராசா ஆகியோர் கொல்லப்பட்டனர்.
செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் காயமடைந்த மாணவிகளின் விபரம்:
- நாகலிங்கம் உசாந்தினி
- சதாசிவம் பிரியதர்சினி
- ரவீந்திரன் பிரியதர்சினி
- ஆறுமுகம் தயாளினி
- குலேந்திரன் சுயித்தா
- நடராசா சிறிவித்தியா
- சி.மதுசா
- குணநாதன் ஜசிதேவி
- சிவனேஸ்வரன் நகுலேஸ்வரி
- முருகேசு இந்திரவதனா
- குகனேந்திரன் அஜித்தா
- வெள்ளிரூபன் துசாந்தினி
- சுந்தரம்பிள்ளை கஜேந்தினி
- செல்வானந்தன் ஜான்சி
- நிர்மலகுமார் நிசாந்தி
- நடராசா கிந்துஜா
- மகேந்திரம் சர்மிளா
- சண்முகராசா தனுசா
- வெற்றிவேல் சுதர்சினி
- ரவிதாசன் சிந்துஜா
- சூரியகுமார் சியாமினி
- பூபாலசிங்கம் விஜிந்தா
- முருகன் கௌசி
- ஞானசேகரம் நிரூஜா
- மகாலிங்கம் கோபிகா
- புலேந்திரராசா சுதர்சினி
- நடராசாலிங்கம் கவிதா
- செல்வநாயகம் அமுதாசினி
- மகேந்திரராசா நிரூசா
- கதிரேசன் பிரமிளா
- புஸ்பவதி
- ஆறுமுகநாதன் மேகலா
- கணேசலிங்கம் கோகிலா
- விஜயசிங்கம் நிதர்சினி
- றொபேட் யோகராசா துஸ்யந்தி
- செல்வரத்தினம் சர்மிளா
- சிவலிங்கம் கமலரூபினி
- மாணிக்கராசா தயாவிழி
- சிறிஸ்குமார் வித்தியா
- இராஜேந்திரம் மீனலோஜினி
- தங்கவேல் கலைச்செல்வி
- ஜீவரட்ணம் கிருபாஜினி
- கலைச்செல்வன் கேமா
- சின்னராசா சுஜீவா
- மாணிக்கராசா தயாவிழி
- மாணிக்கம் கோமதி
- யோகராசா ரேகாந்தினி
- பாலசிங்கம் ஜானிகா
- கந்தசாமி சோபிகா
- அந்தோணிப்பிள்ளை விஜிதா
- மாணிக்கம் மேனகா
- கிட்ணன் சுலோஜினி
- ஜெயக்கொடி சங்கீதா
- இரத்தினசிங்கம் மேகலா
- ஆனந்தராசா மேரிபவிதா
- கணேசன் ரூபவதனி
- ஆனந்தராசா டயாணி
- கணபதிப்பிள்ளை சுஜிவா
- மகாலிங்கம் யாழினி
- அரசகுலசிங்கம் லக்சனா
- நாகராசா தனுசா
- கணேஸ் ராதிகா
- திருநாவுக்கரசு நிரஞ்சினி
- சண்முகலிங்கம் ஜெசினா
- துரைரத்தினம் சுபத்திரா
- புஸ்பானந்தி மயில்வாகனம்
- யாழினி மகாலிங்கம்
- சிவானந்தம் சிந்துஜா
- யோகராசா சாளினி
- உதயகுமார் பிரியா
- சிவானுப்பிள்ளை சுகந்தினி
- சபாரட்ணம் சௌமியா
- நவரத்தினசிங்கம் அனுசியா
- வேலுப்பிள்ளை தர்சனா
- பேணாட் பிரபாலினி
- ஆறுமுகம் உமாமகேஸ்வரி
- வையாபுரி யுகனாதேவி
- பொன்னையா துஸ்யந்தி
- யோகலிங்கம் வேஜினியா
- யோகராசா பிரபாஜினி
- இராசேந்திரம் அருள்நாயகதீபா
- அசோக்சந்திரன் ஜனனி
- வாமதேவா ஜனனி
- செல்வராசா சுஜிதா
- ஆனந்தராசா ரஞ்சிதா
- சிவராசா சயந்தா
- கணேசலிங்கம் இந்துஜா
- தெய்வேந்திரம்பிள்ளை வித்தியா
- இராசதுரை பிரசன்னா
- ஆனந்தராசா சுகிர்தா
- ஜெயக்கொடி கார்த்திகா
- புவியரசன் நிரூஜா
- மகேசலிங்கம் செந்துஜா
- தர்மராசா தயாரூபினி
- குமாரவேல் மாலினி
- பாலசிங்கம் சுமித்திரா
- தமிழ்முத்து தயாளினி
- நந்தகுமார் சுபா
- கைலாயப்பிள்ளை கலையரசி
- சிறி கஸ்த்தூரி
- தர்மபாலன் தர்சிகா
- சூரியகுமார் சிந்துஜா
- சாயினி
- ராஜேஸ்வரன் சிறிவித்தியா
- ரவிச்சந்திரன் சாயித்தியா இவை கிடைக்கப்பெற்ற விபரங்கள் .
படுகொலை செய்யப்பட்டு படகாயமடைந்த பாடசாலை மாணவிகளை அப்போது பதவியில் இருந்த இராணுவப்பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கொல்லப்பட்டவர்கள் மாணவிகள் இல்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார் , சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவிகளே என்பதை உறுதிசெய்தன. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், மற்றும் சர்வதேச சிறுவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என எவையும் நடவடிக்கை எடுக்கத் தவறி இருந்தமை இன்றைய நாளில் சுட்டிக்காட்டத்தக்க விடயம்.
செஞ்சோலை வளாகத்தில் அப்பாவி மாணவிகளை இனப்படுகொலை சிங்களப் படை கொன்றது மாத்திரமல்லாமல் கொல்லப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள சிறுவர் போராளிகளெனக் கூறி வெளியுலகுக்கு உண்மையை மூடிமறைக்க இனவெறி அரசாங்கம் முயல்வது அனைவரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. செஞ்சோலை வளாகம் புலிகளின் பயிற்சி முகாமெனவும் அங்கு சிறுவயது போராளிகளே இருந்ததாகவும் கூறி 2004 ஆம் ஆண்டு தமது விமானமொன்று எடுத்த படமொன்றையும் காட்டியுள்ளன காட்டுமிராண்டிப் படைகள். இதைவிட ஒருபடி மேலே சென்ற பேரினவாத அரசின் அமைச்சரும் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக பேசவல்லவருமான கெஹகிலிய ரம்புக்வெல,” கொல்லப்பட்டது சிறுவயது போராளிகள். அரசுக்கெதிராக செயற்படும் எவராயினும் அதாவது வயது, பால் வேறுபாடின்றி கொல்வோம்” என தமது அரசும் இனவெறிபிடித்தே அலைகின்றது என்பதனை பறைசாற்றினார்.
ஆனால், சம்பவ இடத்திற்கும் வைத்தியசாலைகளும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்ட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவும் யுனிசெஃப்பும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மாணவிகள் என்பதனை வெளிப்படுத்தியது. எனினும், தனது பொய்ப் பிரசாரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்த இந்த பொய்யையே மீண்டும் கூறியுள்ளார்.
தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர் அலறியடித்தவாறு செஞ்சோலை வளாகத்துக்கு ஓடிவந்தனர். கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளையும் உள்ளாளா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்ட தமது பிள்ளை தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் அங்கிருந்த அனைவரையும் அழவைத்தது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் செஞ்சோலை வளாகத்தின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்ட அப்பாவி மாணவிகளின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபியில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் புகைப்படங்களையோ அல்லது அவர்களின் பெயர்களையோ பொறிக்க முடியாதென இலங்கைப் பொலிஸார் தடை விதித்தார்கள். இது தொடர்பாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிசார் ஏற்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். நினைவுத்தூபியில் உயிரிழந்தவர்களின் படங்களையோ அல்லது பெயரையோ பொறிக்க முடியாது என்று பொலிசார் எச்சரிக்கை செய்துவருகின்றார்கள்.
ஆண்டு தோறும் நினைவேந்தல் இடம்பெறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் அமைக்கப்பட்ட நினைவு வளைவிற்கு அருகில் வழமையாக இடம்பெற்று வரும்நிலையில் குறித்த இடத்தில் நினைவேந்தல் நடத்த பொலீசார் தடை விதித்திருந்தனர். இருந்தபோதிலும் பொலீஸ் மற்றும் படையினரின் தடைகளையும் மீறி அருகில் உள்ள மக்களும் தங்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வந்து சுடர் ஏற்றி அஞ்சலி வணக்கம் செலுத்தியுள்ளார்கள். நினைவேந்தல் இடம்பெற்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலீசார் மற்றும் அரசபுலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு அஞ்சலி நிகழ்வினை மேற்கொள்பவர்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவருகின்றார்கள்.
அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கும் அவலத்துடன் கல்வியை இழந்து நிற்கும் கவலையும் சேர்ந்ததால் அவர்கள் நெஞ்சம் கனன்று கொண்டிருக்கிறது. அரசின் இத்தகைய வஞ்சகத்தனம் தமிழினத்தை மேலும் மேலும் விரக்தி நிலைக்குத்தான் தள்ளும். பிரிந்து சென்று, சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையில் தமிழர் தாயகத் தில் தன்னாட்சி அதிகாரத்தை நிறுவுவதே தங்களுக்கு உள்ள ஒரே மார்க்கம் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டை அரசின் இத்தகைய வஞ்சகத்தனம் மேலும் உறுதிப்படுத்தி ஊக்குவிக்கும். சிங்களர் ஆணவத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஈழத் தமிழர்கள் மீண்டும் அகிம்சை வழியில் புரட்சியுடன் எழுவார்கள் என்பது உறுதி. அதுவே உண்மை அதுவே மெய்மை நிலை.
படம் – த. வி. பு- ஊடகப் பிரிவு