அடிக்கடி எதுவாகவோ
ஆக்கிவிடுகிற ஒன்றன்
வினோதத்தை
கோபம் என்று பெயரிட்டுக்கொண்டோம்
எப்படியும்.., எங்கிருந்தோ
வந்துவிடுகிற அதன் பாட்டில்
நாம் இசைந்துவிடுகிறோம்
முள்ளந்தண்டு நாற்காலியில்
ஏதோவொரு
மூலையில் அது உருவாகியிருக்கும்
என நம்பவைத்தாலும்
இதயத்தின் ஏதோவொரு
பெயரிடப்படாத சோனையறைச் சுவர்களில் சிறுநீர் பாய்ச்சிவிடுகிற கோபம்;
நாசியில் ஏற்படுத்துகிற நாற்றம்
எரிச்சலை ஏற்படுத்துகிறது
கோபித்துக்கொள்ளுதலில்
ஒரு ஏமாற்றம் இருக்கிறது,
ஒரு துரோகம் பின் தொடர்கிறது,
ஒரு இயலாமை..,
ஒரு முட்டாள்த்தனம்..,
ஒரு பரிகாசம்..,
ஒரு தோல்வி..,
இவையெல்லாம்
கோவத்திற்கான முத்திய
விந்தை உருவாக்கியவை
கோபம் எனும் வார்த்தையின்
அக்குளில் கண்ணீர்
கனதியாகப் பெருக்கெடுக்கிறது
அது ஒரு தேசத்தை
ஒரு குடியை
அழித்துவிடுகிறது
ஏன் தன்னைத்தானே
தற்கொலையின்
வன்மக்குறிக்கு
புணரக்கொடுக்கிறது
கோவம் ஒரு
கொடிய விஷம்
அதன் வீரியம் வீக்கமடையும்போதெல்லாம்
ஒழுக்கம் கற்பழிக்கப்படுகிறது
ஒரு பாவத்திற்கான
பரிந்துரையை
கோபமே முன் மொழிகிறது
தொடற்சியாய்
அழுத்தப்படுகிற
ஒன்றன் எதிர்புத்தான்
கோபமாக பிறப்பெடுத்திருக்கவேண்டும்
கோபம் குடிகளை அழித்தது
கோபம் தேசங்களை அழித்தது
இப்பொழுது
இயற்கையின் கோபம்
பிரபஞ்சத்தை அழிக்கத்
தயாராகிவிட்டது
அனாதியன்