ஈழத்தமிழ் தேசிய இனம் காலத்திற்கு காலம் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்குமுறைகள், இனப்படுகொலைகள் நில ஆக்கிரமிப்புக்கள் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மட்டுமின்றி எமது வரலாற்று ரீதியான மற்றும் ஆத்மார்த்த ரீதியான அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது. ஈழ தேசத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தனியான தேசிய இனத்தவர்கள். தாயகப் பிரதேசத்திற்கென்று தனியான வரலாறு, மொழிச்சிறப்பு, தனித்துவமான பண்பாட்டு விழுமிய வழக்காறுகள் என்பவற்றுடன் பொருளாதார வளங்களையும் இயல்பாகக் கொண்டிருப்பவர்கள். முன்னாள் ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தனியான தேசிய இனமொன்றுக்கு வகுத்த வரைவிலக்கணப்படி தேவையான பரிமாணங்கள் முழுமையினையும் தன்னகத்தே கொண்ட இனமாக தனித்துவமாக வாழ்ந்திருக்கின்றோம்.
அந்நிய ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறை அதிகரித்து இராணுவ ரீதியாக நசுக்கப்படும் போது அவற்றிக்கு எதிராக ஈழத்தமிழனத்தின் விடுதலைக்காக இந்த விதிக்குட்பட்டு ஆயுதப் போராட்டத்தை பல அமைப்புக்கள் ஆரம்பித்தாலும். பொது இலட்சியத்தை உறுதியாகத் தீர்க்கமான முறையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த சக்தியாக மக்கள் விரும்பிடும் மக்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளே விளங்கினர்கள் அல்லது இயங்கினார்கள் என்றால் மிகையாகாது. எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வழியாக இருந்த ஆயுதப்போரை விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் படிப்படியாக தீவிரப்படுத்தி வந்தனர். தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்களால் புதிது புதிதாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு புலிகள் என்றால் மக்கள்… மக்கள் என்றால் புலிகள் என அணிதிரண்டு உலகத் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் தலைவன் தமிழீழத் தேயத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
விடுதலைப்புலிகளின் முதலாம் கட்ட ஈழப்போர் காலத்தில் ஒரு திருப்பு முனையாக 1987 யூலை மாதம் அமைந்தது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது. அப்போது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி ‘நாங்கள் தீவிரவாதிகளைப் பேச்சுக்கு அழைத்த காலம் போய்விட்டது. இப்போது போருக்கு வாருங்கள் என அவர்களை அறைகூவி அழைக்கிறோம்’ என தமிழ் மக்களை நோக்கிச் சவால் விட்டார். இந்தச் சவாலை ‘கரும்புலி கப்டன் மில்லர்’ ஏற்றுக்கொண்டார். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வகுத்த திட்டத்தை நெறிப்படுத்தி தன்னை அழித்துப் படைமுகாம்களை அழிக்கும் முதல் நடவடிக்கையை நிகழ்த்தினார். இதன் தாக்கம் சிறிலங்கா இராணுவத்திற்கு மரண அடியாக விழுந்த போது ஆட்சிப்பீடம் கதிகலங்கிப் போனது. அதன் பின்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது இராஜதந்திர முயற்சியின் ஒரு காய் நகர்த்தலாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இலங்கை – இந்திய ஒப்பந்தமான இது தமிழ் மக்களின் பாதுகாப்பு, தேசியம், இறைமை என்பவற்றை உறுதிப்படுத்தும் என அப்போதைய ராஜீவ் காந்தி அரசினால் உத்தரவாதம் செய்யப்பட்டது.
இந்திய இராணுவம் உலகத்தின் இரண்டாவது பெரிய இராணுவம். அமைதி காக்கும் நோக்கம் என்ற போர்வையில் ஈழமண்ணில் கால் பதித்திட 1987 ஜூலையில் பெரிய விமானங்கள் மூலம் இந்திய அமைதிகாக்கும் படையைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட 4வது, 36வது, 54வது, 57வது படைப்பிரிவு ராணுவத்தினர் இலங்கைக்கு வந்தார்கள். இலங்கையின் தமிழர் பகுதிகளில் ஊர்வலம் வந்த இந்திய ராணுவத்தை பூமாலையிட்டு வரவேற்றார்கள் தமிழர்கள். 1987 ஆகஸ்ட் 4-ந்தேதி தம் மக்களிடம் இயக்கத்தின் நிலையை விளக்க சுதுமலையில் சொற்பொழிவாற்றினார் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். இந்தியா நமக்கு சாதகமாயிருக்கும் என நம்புகிறோம் என பேசிய மறுநாள் 5-ந்தேதி விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதி யோகி தலைமையிலான போராளிகள், அமைதிப்படை ஜெனரல் குபேந்தர்சிங்கிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
1985 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் பல முகாம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையான போராளிகளுக்கு மத்தியில் ஆக்கிரமிப்பின் குறியீடுகளாய் இருந்தன. மிகக் குறைந்தளவிலான ஆயுதங்களையும் கொண்டு தளபதி கேணல் கிட்டு முகாம்களைச் சூழ வியூகங்களை அமைத்து குடா நாட்டைப் பூரண கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான போரிடும் திறன் நிலைநாட்டப்பட்ட இக்காலகட்டத்தில் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக லெப். கேணல் திலீபன் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தினதும் பாதுகாப்பை தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறிய இந்திய சிடம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த போதும் சிறிலங்கா அரசு தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. இந்திய இராணுவமும் அதனைச் செயற்படுத்தவில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டு தமிழர்களுக்குரியன வழங்கப்படாத போது புலிகள் தமது போரை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மீண்டும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சை வழியிலான போரை முன்னெடுக்கத் தலைப்பட்டனர். காந்திய வழியிலான விடுதலைப்புலிகளின் முதலாவது சாத்வீகப்போராக விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்த் துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதப் போரை முன்னெடுத்தார்.
யாழ்ப்பாணம் ஊரெழு எனும் கிராமத்தில் தந்தையான நாகலிங்கம் இராசையா ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார். இராசையா தம்பதியினருக்கு நான்காவது கடைக்குட்டி மகனாக 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பார்த்தீபன் பிறந்தார். கடைசி மகனான பார்த்திபன் பிறந்து 9 ஆவது மாதம் தனது தாயாரை இழந்தான். பார்த்திபனுக்கு 3 மூத்த சகோதரர்கள் உள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்த திலீபன் 1982 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் திறமைச் சித்தியெய்தி யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடத்துக்குத் தெரிவானான். தனது பள்ளிப் பருவத்தில் சிறந்த சதுரங்க வீரனாக விளங்கிய திலீபன் மாவட்டத்தில் சிறந்த சதுரங்க வீரனாக 4 தடவைகள் தெரிவு செய்யப்பட்டான். அத்தோடு விளையாட்டுக்குழுவின் தலைவனாகவும் விளங்கினான்.
1983 ஆம் ஆண்டு யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டு இனக்கலவரத்தால் மிகவும் மனமுடைந்த திலீபன் தமிழ் மக்களின் விடிவுக்கு தமிழீழம் தவிர்ந்த வேறெந்த மாற்றீடும் கிடையாது என்ற முடிவுக்கு வந்தான். யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் தன்னனையும் இணைத்துக் கொண்டார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார்.
07.09.1987 அன்று கோட்டை இராணுவ முகாம் முன்வழிமறிப்புச் செய்ய மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரை. பொதுக்கூட்டத்தில் திலீபன் அவர்கள் ஆற்றிய கடைசி உரையில் எழுச்சியுடன் போராடினால் எவரும் இப்பபோராட்டத்துக்கு மதிப்பளித்தேயாகவேண்டும்.. மக்கள் அனைவரும் முழுமையாகப் போராடத் தயாரானால் நிச்சயமாகத் தமிழீழத்தை அமைக்கமுடியும். நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராகவேண்டும். என உரைத்தான் திலீபன்.
தமிழீழ தேசத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையான உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ மாணவர் அமைப்ப, சுதந்திரப்பறவைகள் ரடோ (சுயுனுழு) போன்ற அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் ஊடாக பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தார். சுதந்திரப்பறவைகள் மூலம் பெருமளவு மகளிர் விடுதலைப் போராட்டத்தினுள் உள்வாங்க்பட்டனர். மாணவர்கள் தமிழீழ மாணவர் அமைப்பின் மூலம் விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை வழங்கத் தலைப்பட்டனர்.
போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதில் ஊடகங்கள் என்றுமே பங்களிப்புச் செய்து வருகின்றன. திலீபன் இதை விளங்கிக் கொண்டு ஊடக உருவாக்கங்களை தமிழீழ மண்ணிற்கென்றே மேற்கொண்டார். அச்சு ஊடகங்கள் மட்டுமன்றி இலத்திரனியல் ஊடகங்களும் நிறுவப்பட்டன.
திலீபனின் அரசியல் பணி பல தளங்களிலும் விரிவடைந்திருந்தது. 1987-07-05 அன்று முதல் கரும்புலித் தாக்குதலை நெல்லியடியில் கரும்புலி கப்டன் மில்லர் நிகழ்த்திய போது மில்லரின் கடைசிப் பொழுது வரை திலீபன் கூடவிருந்தார். மில்லரின் தாக்குதல் திலீபனுக்கு புதியதொரு திடசங்கற்பம் கொள்ளக் காரணமானது. மில்லரைப் போலவே தானும் போராட்ட வரலாற்றில் புது சகாப்தம் ஒன்றைப் படைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார். விரைவிலேயே அப்படி ஒரு காலம் இந்திய இராணுவத் தலையீட்டின் வடிவில் கிடைத்தது. தமிழீழ மண்ணில் புதியதொரு போருக்கான வடிவை அவர் வடிவமிட்டார்;. தேசியத் தலைவருடன் வாதாடி அதற்கான அனுமதியையும் பெற்றார்.
ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்தது. பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்கு பறைசாற்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து . 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 26 செப்டெம்பர் மாதம்1987ஆம் ஆண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அன்று இந்திய அரசுக்கு 5 அம்ச கோரிக்கை
1 பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை’ இந்திய அரசிடம் நீதி கேட்டு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய கோரிக்கை எதுவும் நிறைவேறாமல் பன்னிரண்டாம் நாள் நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற போராளி திலீபன் அவர்கள், தன்னுடைய 23ஆவது வயதில் திலீபன் லெப். கேணல் திலீபனாக வீர சவடைந்தார். அன்று முதல் இன்று வரை தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.
பன்னிரு நாட்கள் தன்னை உருக்கி எரிந்தணைந்த எங்கள் திலீபனை அண்ணாவை இழந்து 34 ஆண்டுகள் கடந்துபோய்விட்டது. நல்லூர் வீதியில் நாவரண்டு நாவரண்டு எங்களுக்காய் தன்னை இழந்துகொண்டிருந்த திலீபன் அண்ணா ஒரு துளி நீரும் அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னையே வருத்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. தமிழ்மக்களை நோக்கி ஏவிவிடப்பட்ட அரச அடக்குமுறையிலிருந்;து பாதுகாப்பதற்காக இந்திய அமைதிகாப்பு படையினர் வந்திருக்கின்றார்கள். இனிமேல் எந்த வித பிரச்சனைகளும் இல்லை. சுதந்திரமான விடுதலை கிடைக்கப்போகின்றது என எண்ணிய காலத்தில் திலீபனின் தியாகப்பயணமே மக்கள் மனதில் தமது எதிர்காலம் பற்றிய உண்மையான நிலையை வெளிச்சம்போட்டு காட்டிய கணங்கள் அவை.
இந்த ஆயுதப் போராட்ட வழியில் முக்கிய இடம் வகித்தவர்களில் ஒருவரான திலீபன் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல, அஹிம்சை வழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழிப் போராட்ட வழிகள் தோல்வியடைந்த காரணத்தால் ஆயுத வழிப்போராட்டம் மிக வீச்சுக் கொண்டு ஆரம்பமானது. திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
வீதி வீதியாக தீபம் ஏந்தியும் மலர்கள் தூவியும் மக்கள் தங்கள் இறுதி மரியாதையை கண்ணீருடன் செலுத்தினார்கள். 28-9-1987 மதியம் அளவில் சுதுமலை அம்மன் மைதானத்ததில் மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் பிரசாத் தலைமையில் இறுதி வணக்க உரைகள் நடந்து தீலிபன் விரும்பிய படி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அவரின் புகழுடல் கையளிக்கப்பட்டது.
உண்மையில் அவர்கள் அனைவரும் போராளிகளே. அவர்கள் அனைவரும் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்களே. அவர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் எண்ணங்களை இறுதிவரை உறுதியாக நிறைவேற்றியவர்கள். எந்த நேரம் என்றாலும் எந்த இடம் என்றாலும் மக்களுக்காகப் பணியாற்றும் தன்மை கொண்டிருந்தவர்கள். அரசியல் தெளிவும் மக்கள் மீதான நேசமும் அவர்களை உயர்ந்த சிந்தனையோடு எமது தமிழீழ தேசியத்தலைவர் எம்மை உருவாக்கிய போது எதை எதிர்பார்த்து உருவாக்கினாரோ அதை இறுதிக் கணம்வரை நான் செய்த வலியோடு தான் இன்றும் வாழ்கிறேன்.
இந்தியாவோ சிங்கள அரசுக்கும் கை கொடுத்தது, தமிழர் போராளி குழுக்களிடமும் கைகுலுக்கியது. நேரத்துக்கு தகுந்தாற்போல் ஆதரவு – எதிர்ப்பு நிலையை எடுத்து பிரச்சனையை தீர்க்காமல் புகைய வைத்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் இலங்கை பிரதமராக பிரேமதாசா இருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி முடிவுகள் எடுத்தார். அந்த முடிவுகளின் படி, இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த அமைதி காக்கும் படை இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அமைதிகாக்கும் படையாக இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் அமைதியானதா என்று கேட்டால், இந்தியாவின் அமைதிப்படை ஈழத்தில் எல்.டி.டி.ஈ கொரில்லாக்களை அடையாளம் காணமுடியாமல் கடுமையாக நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பொதுமக்கள் என பலரும் கொல்லப்பட்டனர். பாலியல் வல்லுறவு, சித்ரவதை, கொலை உட்பட பலவித மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இந்திய அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டார்கள்.
எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவத் தமிழீழ மண்ணில் வாழ வேண்டும் என்ற திலீபன் அவர்களின் கனவினை சுமந்த மக்கள் அன்று முதல் திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் சனங்களால் அவரது நினைவுநாளைக் பல அடக்குமுறை சவால்களுக்கு மத்தியிலும் நினைவேந்தி வருகின்றார்கள்.
அமைதிப் படையாகக் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி, சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை ஒவ்வொரு ஆண்டும் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை உயிர் துறந்த அந்த நிலத்தில், அந்த நிலத்தின் மக்களால்; இம்முறை பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தமை மிக வேதனையினைத் தரும் செயலாகும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த ஈழத்தமிழ் மறவன் திலீபனின் நினைவேந்தல் தடைகளைத் தகர்த்தெறிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நிலத்திலும் புலத்திலும்; தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதனாலும் அழிக்க முடியாத திலீபனின் நினைவுகளையும் சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனால் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் புரட்சிகர சிந்தனைகளில் இருந்து
- நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும்.
- தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும்.
- விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.
- மக்கள் அனைவரும் எழுச்;சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது.
- எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். இதற்கு வேறு யாருடைய தயவையும் எதிர்பார்க்கக்கூடாது.
- நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.
- எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், கருதப்படும்.
- நான் ஆத்மரீதியாக உணர்கிறேன். இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எனது மக்கள் நிச்சயமாக விடுதலையடைவார்கள்.
- ஒரு மாபெரும் சதிவலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும்.
- என் போராட்ட வரலாற்றுச் சாதனைகளையிட்டு நான் மாபெரும் மகிழ்ச்சியும் பூரண திருப்தியும் அடைகிறேன்.
- எமது போராட்டத்தை அமைதி தழுவியதாகவே அல்லது இரத்தம் தோய்ந்ததாகவோ அமையவேண்டுமெனத் தீர்மானிக்கவேண்டியவர்கள் இங்குள்ள முதலாளித்துவ ஆட்சியாளர்களே.
- சுதந்திரத்திற்கு விலையாக எங்கள் உயிரையே கொடுக்கத் தயாராக உள்ளோம்.
- மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாகத் தமிழீழத்தை எனது இறப்பின் மூலம் பெற்றுத்தரும். இதனை வானத்திலிருந்து இறந்த ஏனைய போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.
- மரணம் ஒரு தடவைதான் வரும். அதற்காக மானத்தை விற்றுச் சீவிக்கமுடியுமா? இறப்புக்குப் பயந்து இனத்தை அழியவிட முடியுமா?
- இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும்.
- எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்.
- எமது மண்ணின் விடுதலையை நேசிக்காத எவரும் இம் மண்ணை ஆள அருகதையற்றவர்கள்.
மக்கள் புரட்சி என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விட்டுச் சென்ற வாசங்கள் மக்களின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அந்தப் புரட்சி எப்படி உருவாகப் போகின்றது. அதற்குரிய காலம் தான் எங்களுக்கு எப்பொழுது பிறக்கப் போகின்றது என்பது எல்லோரின் மனங்களிலும் எழுகின்ற ஒரு கேள்வியாகவும் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இல்லை என்பதையும் இன்றைய யதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. குறுகிய கால அரசியல் இலக்குகளுக்கு அப்பால் தமிழர் அபிலாஷைகளை மனதிலிருத்தி அனைத்து அரசியல் தரப்புக்களும் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டிய அவசியத்தை நாம் வலியுறுத்தி மக்கள் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் தேவையினை உணர்ந்துள்ளார்கள்.
மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும் ஆயினும் கடந்த காலங்களை நினைத்து ஏங்குவதைவிட எதிர்காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் ஒருங்கிணைந்து திலீபனின் முக்கிய கோரிக்கைகளில் முதல் கோரிக்கைகளையும் நினைவில் கொண்டு வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டி உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் முன்னேடுக்கும் நில ஆக்கிரமிப்புக்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளை விவகாரம், இலங்கை இராணுவப்படை வலுவில் 75% இற்கு மேலான படையினரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் நிலைப்படுத்தி உள்ளனர். அதனால் இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் முழுநேரக் கண்காணிப்பில் தமிழர் பிரதேசங்களை வைத்திருக்கின்றனர். இதன் முடிவு இப்போதும் வலிந்து காணாமல் ஆக்கப்படல், மக்களின் திடீர் மரணங்கள், கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் என்றும் ஊடக சுதந்திரத்தை பறித்து ஊடகவியலாளர்களை கைது செய்தல் என தொடர்கதையாகவே தொடர்கின்றது. எம் மக்களை எமது மண்ணிலிருந்து களைந்தெறிவதனை நோக்கமாக கொண்டு வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பினை அழிப்பிபையும் வாழும் தமிழ் மக்களின் தேசிய வாழ்வின் அத்திவாரங்களை அழிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரச்சாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி. தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த – உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான் எனத் தொடங்கும் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவையொட்டி அன்று தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)
தமிழ்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும். விடுதலைப்புலிகள் வாழ வேண்டுமென்றோ ஆளவேண்டுமென்றோ ஆசை கொள்ளவில்லை. எமது மக்களின் நிரந்தரமான சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராகவுள்ளோம். மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காகன பொறிமுறைமை பற்றி தாயகத்திலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள அறிவார்ந்தோர் உட்பட அனைத்து மக்களும் வயது வேறுபாடின்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை செயல் வடிவமாக தாயக பரப்பெங்கும் தீவிரமான வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வெகுஜன போராட்டங்கள் தாயகப் பரப்பையும் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்க்க தக்க வகையில் சிங்களத்தின் தலைநகரிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆப்போது தீலிபன் கனவு நிறைவேறும்.
நிலவன்.