இலங்கை இந்தியாவை தாண்டி இன்று சர்வதேச ரீதியில் பெரிதும் பேசப்படும் விடயம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம்.பல வருட காத்திருப்புக்கள், இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் பல ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி கைக்கு வருகிறது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், தாங்களும் பங்குதாரராகிறோம், தடுக்க முயன்ற சீனாவின் இராஜதந்திர முயற்சிகளை தோற்கடித்து விட்டோம் என பெருமிதம் கொள்கின்ற சந்தர்ப்பத்தில், இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை மீறி அதை தனது துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்ற திடீர் முடிவை பெப்ரவரி 1ஆம் திகதி இலங்கை அரசு எடுத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்தது இந்தியாவிற்கு.
இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்ட முத்தரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை செயற்படுமென எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஆணையம் பெப்ரவரி 1ஆம் திகதி பிற்பகல் அறிக்கையொன்றை அவசரமாக வெளியிட்டு இலங்கை தனது முடிவை பரிசீலிக்கும் என நம்ம்பியிருந்தது இந்தியா..
இந்தியாவின் இந்த அறிக்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சீனாவிடமிருந்து 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பெற்று இந்திய மத்திய வங்கியிடம் அந்நிய செலாவணி சலுகையின் கீழ் இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் டொலர் கடனை மீள செலுத்தியது இலங்கை.
கடந்த 2 ஆம் திகதி கடன் தவணை நிறைவடைந்துள்ள நிலையில், உரிய காலப்பகுதியில் கடன் திரும்பி செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல குறிப்பிட்டார் என பெப்ரவரி 5-ம் திகதி திடீரென செய்திகள் வெளியாகின.
சீனாவிடம் கடன்வாங்கி அவசரமாக இலங்கை இந்தியாவிற்கு கடனை திருப்பி செலுத்தியதன் மூலம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்பட மாட்டாது என்ற செய்தியைம், இலங்கையின் நண்பன் சீனாதான் மற்றும் சீனாவின் இராஜதந்திரமே வென்றது என்ற செய்தியையும் உலகிற்கு சொல்லப்பட்டதாகவே அரசியல் அவதானிகளால் பார்க்கப்பட்டது.
இலங்கையிடம் ஏமாந்து விட்டோமே, இந்தியா – சீனா இடையிலான பனிப்போர் எல்லை பகுதிகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில், சீனாவின் இராஜதந்திரத்தில் தோற்றுவிட்டோமே என்ற கோபமும், இலங்கை எங்களை மீறி செயற்பட்டால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சமும் இந்திய அரசிற்கு ஒன்றுபட எழுந்துள்ளது.
இதனையடுத்து தனது வல்லாதிக்க பலத்தை, இராஜதந்திர பலத்தை வைத்து இலங்கையின் பிரதான துறைமுகமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பகுதியை மேம்படுத்த இந்தியாவுடன் எட்டியிருந்த ஒப்பந்தத்தை வழங்கா விட்டால் இலங்கை எங்கும் போராட்டம் வெடிக்கும், உங்கள் ஆட்சியை கவிழ்ப்போமென நேரடியாக மிரட்டியது இந்தியா என கொழுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை இந்தியாவை விட்டு அந்நியப்படும்போதெல்லாம் இலங்கையை அடிபணிய வைக்க வழக்கமாக இந்தியா பயன்படுத்தும் துருப்புச்சீட்டுத்தான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்கள். ஆனால் இம்முறை முஸ்லீம் மக்களின் ராஜபக்ச எதிர்ப்பையும் பயன்படுத்த இந்தியா ஜோசித்த நிலையிதான், முஸ்லிம்களின் முக்கிய கோரிக்கையான கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்து, முஸ்லிம்களை தன்வசப்படுத்தி இந்தியாவின் முயற்சியை சற்று பலவீனப்படுத்த முயற்சித்தார் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆனால் அதுவும் தற்போது குழப்ப நிலையிலேயே உள்ளது .
ஆனால் காலகாலகாமாக இந்தியாவின் நலனுக்கான, பாதுகாப்பிற்கான துருப்பு சீட்டுக்காக பயன்படும் தமிழர்களை இந்தியாவிடம் இருந்து பிரிக்க ராஜபக்ச அரசால் முடியாது,
இலங்கை வடக்கு கிழக்கு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி இந்தியாவிடம் அந்நியப்படுத்த முயற்சிக்க முடியாது, ஏனென்றால் தமிழ் மக்களின் கோரிக்கைகளே ராஜபக்சக்களை சர்வதேச கூண்டில் ஏற்றவேண்டுமென்பதுதான்.
இதனை தாண்டி இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைளை, தமிழ் மக்களுக்கான தீர்வினை இந்தியா பெற்றுக்கொடுக்குமென்பது கானல் நீர்தான்.
இந்தியா எந்த காலத்திலும் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை, தமிழர்களை எப்போதும் தென்னிலங்கை ஆட்சியாளர்களிற்கு எதிரான நிலைப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறது,
இந்தியா, அப்போதுதான் இலங்கை எப்போதெல்லாம் தங்களை மீறி செயற்படுமோ அப்போதெல்லாம் அவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகளை வைத்து இலங்கை அரசை சர்வதேசத்தில் சிக்க வைப்போமென மிரட்டி தங்களுக்கு சாதகமாக அவர்களை மாற்றுவார்கள்.
அப்படியாகத்தான் சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களால் ஈழத்தமிழர்கள் பல பாரபட்ஷமான செயற்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்க, தமிழ் இளைஞர்களின் உணர்ச்சியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சமூக இயக்கங்களை ஆயுத குழுக்களாக மாற்றி அவர்களுக்கு பயிற்சி வழங்கி அவர்களுக்கு உதவுவதுபோல் உதவி ஸ்ரீலங்கா அரசிற்கெதிராக மோதவிட்டு இன்றைய சூழ்நிலைபோல் அன்று தங்களின் கையை மீறி சென்ற இலங்கைக்கு இந்தியாவை அரவணைத்து செல்ல வேண்டுமென்ற அவசியத்தை உருவாக்கி இருந்தார்கள்.
இந்த இந்தியாவின் ராஜதந்திரத்தை புரிந்துகொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், இந்திய ராஜதந்திர வழியிலேயே சென்று அதை மெல்ல மெல்ல தமிழ் மக்களுக்கான உரிமையை கோரி தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் மக்களுக்கான இயக்கமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மாற்றி இந்தியாவின், மிரட்டல்கள், அடக்குமுறைகளை, இராஜதந்திரத்தை முறியடித்து, தனது கொள்கையில் பயணித்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைக்காக போராட உருவாகிய தமிழ் இயக்கங்களுக்கு பல உதவிகளை செய்து தன்வசப்படுத்தி தமிழ் ஆயுத குழுக்களை விடுதலைப்புலிகளுடன் மோதவிட்டு, தோற்றுப்போகவே சிங்கள அரசுடன் இணைத்து தமிழ் மக்களுக்கெதிராகவே செயற்பட வைத்தது இந்தியா, அதனை தொடர்ந்து இந்திய அமைதிப்படையாக இலங்கைக்குள் நுழைந்து தமிழர்களை துன்பப்படுத்தி பலரை கொன்றொழித்து, அதனை யாருக்கெதிராக போராடுகிறோமோ, யார் எங்கள் எதிரியோ அவர்களாளேயே பொறுத்து கொள்ள முடியாமல் அவர்கள் உதவியுடனேயே அன்று அந்த இந்திய அட்டூழிய படையை வெளியேற்றினர் விடுதலைப்புலிகள் என்ற இந்திய அரசின் கோர வரலாற்றையும் யாரும் மறக்கவில்லை.
அதனை தொடர்ந்து ராஜபக்ச அரசிற்கு உலகத்தின் ஆதரவை திரட்டிக்கொடுத்து ஆயுதம் வழங்கி, 2009-ம் ஆண்டு பல மக்களையும் கொலை செய்து, காணாமல் ஆக்கி, உடல் அவையங்களை இழக்கவைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மௌனிக்கவைத்தது இந்திய அரசாங்கம்.
போர் முடிந்து 10 வருடங்கள் கழிந்து விட்ட நிலையில், தமிழ் மக்கள் சரியான அரசியல் தீர்வின்றியும், போரின்போது இடம்பெற்ற போர்குற்றங்களுக்கு நீதியின்றியும், பெற்றோர்கள் தங்கள் காணாமல்போன பிள்ளைகளை தேடியலைந்துகொண்டும், அவயங்களை இழந்தவர்கள் வறுமையிலும், துன்பத்திலும் , பொதுமக்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியாமலும் போரின் வடுக்களுடனும், வலிகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இதனை இவ்வளவு காலமும் கண்டும் காணாமலும் இருந்துகொண்டு சிங்கள அரசுடன் பாதிக்கப்பட்ட ஈழத்து தமிழ் மக்களை வைத்து பேரம்பேசி பல ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டு வந்த நிலையில், இன்று தங்களுக்கும் இலங்கை அரசிற்கும் முறுகல் வந்ததென்பதற்காக மீண்டும் தங்களது துருப்பு சீட்டான ஈழத்தமிழ் மக்களை தங்களது அடிமைகளான தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளை பயன்படுத்தி, இளைஞர்களை உசுப்பேற்றி, விலை கொடுத்து மீண்டும் ஆயுத குழுக்களை உருவாக்க இந்தியா முயற்சி செய்கின்றது என பேசப்படுகிறது.
இதற்கு முன்னோட்டமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஆயுத குழுக்களிலிருந்து அரசுடன் இணைந்து செயற்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தென்னிலங்கையில் தாக்குதல் நடத்தும் ஒப்பந்தங்களை வழங்க முனைவதாகவும், இலங்கையின் சில தமிழ், ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தமிழ் மக்களை உசுப்பேற்றும் பணியை செயற்படுத்துவதற்கு பேரம் பேசப்படுவதாகும் பேசப்படுகிறது.
இந்தியாவின் இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி மீண்டும் ஈழத்தமிழினம் பலியாகப்போகின்றதா? இல்லையே இந்தியா – இலங்கை மோதல்களை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டதொடரில் இலங்கையை சிக்க வைத்து இந்தியாவின் சதிக்குள்ளிருந்து சாதுரியமாக ஈழத்தமிழினம் தப்பிக்கப்போகின்றதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்