நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
– தேசியத் தலைவரின் சிந்தணையில் இருந்து.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் பிரிவின் முதலாவது பயிற்சிமுகாம் 1985 ஆவணி 18 அன்று அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்லாயிரம் பெண்கள் தம்மைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளதோடு வீரச்சாவடைந்துமுள்ளனர். தமிழர் சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை – 2ஆம் லெப். மாலதி 34 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.
அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.
ஆக்கிரமிப்புக்கும் கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள். தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள். தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.
அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.
தமிழீழத் தேசயத்தலைவரின் எண்ணக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள் மாலதி . அந்நிய ஆக்கிரமிப்பில் தமிழர் தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். தாய்நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள் மாலதி , அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.
2ஆம் லெப். மாலதி 34 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது. அந்நாளே தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆணாதிக்கத்தின் பிடியிலும், சமுகத்தின் பிடியிலும் சிக்குண்டிருந்த தமிழீழ பெண்களிடம் பேரெழுச்சியை தோற்றுவித்திருந்தது. இப் பேரெழுச்சயானது பெண்கள் தம்மை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள ஓர் ஊன்றுகோளாக அமைந்திருந்தது. போராட்டத்தில் இணைந்துகொண்ட பெண்கள் களத்தில் ஆண்போராளிகளுக்கு நிகராகவும் சமுதாயத்தில் பெண் விடுதலைக்காகவும் போராடி வாகை சூடினார்கள்.
ஈழத்தமிழர் வரலாறு வீரவரலாறாகப் படைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த வரலாற்றில் தமிழீழப் பெண்களின் வீரமும், தியாகமும், பங்களிப்பும் பெருமைப்பட வேண்டிய விடயம். அந்தப் பெருமைக்கு வழிகாட்டியாக அடிமை விலங்குகளால் கட்டுண்டு கிடந்த பெண்கள் சமூகத்துக்கு சமத்துவ நிலை வழங்கிய பெருமை தேசியத் தலைவர் அவர்களைச் சாரும்.
தமிழ் பெண்களின் வாழ்க்கை சமய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்குள் உட்படுபவை. பாரம்பரிய நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் அவர்களது சுதந்திரம் கட்டுப்பட்டு அடிமை நிலைப்படுத்தப்பட்ட சமூகமாக இருந்து வந்த நிலையில் தேசியத் தலைவர் அவர்கள் அளித்த சமத்துவ நிலை அவர்களின் அடிமைத் தனத்தை தகர்த்தெறிந்து. ஆண்களுக்கு நிகரான ஆற்றல் கொண்டவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டினர்.
இந்த ஆற்றலை வீரத்தை வெளிப்படுத்தி எதிர்காலப் பெண்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தான் 2ம் லெப் மாலதி ஆவார். மன்னார் ஆட்காட்டிவெளியைச் சேர்ந்த பேதுறு சகாயசீலி என்ற பெண் தமிழீழ தேச விடுதலைப் போராட்டத்தில் சிறு வயதில் இணைந்து கொண்டவர். இவ்வாறு இணைந்து கொண்ட 2ம் லெப் மாலதி அவர்கள் கடந்த 10.10.1981ம் திகதி அன்று யாழ் கோப்பாய் பகுதியில் நடந்த இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் வீரச்சாவடைந்தார். மாலதி காட்டிய முன்னுதாரணமான வீர வரலாறு தான் அதன் பின்னரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரமாயிரம் பெண்கள் இணைவதற்கு வழிகோலியது.
அடுப்பங்கரையும், அகப்பையுமாக சமையல் கட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள் இயந்திரத் துப்பாக்கிகளைத் தூக்கி எதிரியை சுட்டு வீழ்த்துகின்ற, எதிரிகளுடன் கள முனைகளில் நின்று சமர் புரிகின்ற, கடலில் சென்று எதிரியின் விசைப்படகை முற்றுகையிட்டு தாக்கும் மனோ உறுதியை தேசிய விடுதலைப் போராட்டம் களமமைத்துக் கொடுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்து தேசியத் தலைவர் அவர்கள் அன்று சொன்ன கருத்துப் பகிர்வு சிந்திக்க வேண்டிய விடயம்.
எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்து தான் எமது விடுதலை இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியலில் மையப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணிதிரட்டியது. இவ்வகையில் தமிழீழ சமூகம் மத்தியில் ஒரு புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது.
காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண் இனம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கின்றது. சீருடை தரித்து நிற்கின்றது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து எமது போராட்டத்தின் புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும், தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்றார் தேசியத் தலைவர் அவர்கள்.
அந்த வீர சாதனைகளின் உச்சமாக நெஞ்சிலே வெடி குண்டுகளைச் சுமந்து சென்று எதிரிகளை அல்லது எதிரிகளின் இலக்குகளை அழித்து விடுதலைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற தடைகளை தகர்த்தெறிந்து சாதனை படைத்துள்ளார்கள் என்றால் தமிழீழப் பெண்கள் பெருமைக்குரியவர்கள் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை. சிங்கள அரசின் தமிழின அழிப்பு நடவடிக்கை என்பது ஒரு உளவியல் ரீதியான போராட்டமாக நாம் கருத வேண்டியுள்ளது. ஏனெனில் தமிழ் மக்களை கொன்றழிப்பது, வீடுகளை நாசம் செய்வது, கிபீர் விமானத் தாக்குதல், பல்குழல் பீரங்கித் தாக்குதல், ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் மக்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகவுள்ளது.
இவ்வாறான பாதிப்புக்களால் தமிழினம் சோர்ந்து விடக் கூடாது. ஒரு விடுதலைப் போராட்டத்தில் சாவும், அழிவும், துன்பமும், துயரமும் தவிர்க்க முடியாதவை. பெரிய தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் புரிந்து தான் நாம் எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என தேசியத் தலைவர் கூறியிருக்கிறார்.
2ம் லெப் மாலதி அவர்கள் அன்று இந்திய வல்லாதிக்க இராணுவத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டு வீரச்சாவடைந்தார். இந்த வீரமரணம் தான் 2ம் லெப் மாலதியை நினைவு கூருவதற்கு வழி வகுத்திருக்கின்றது. அதுமாத்திரமின்றி ஆயிரமாயிரம் பெண்கள் விடுதலைப் போராட்டத்தில் இணைவதற்கும் பெண்கள் பற்றி பெருமை கொள்வதற்கும் வழிவகுத்துள்ளது. எனவே இன்றைய சூழலில் கூடப் பெண்கள் தேசிய எழுச்சி பெற்று விடுதலைப் போராட்டத்திற்கு தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். அடுப்பூதும் பெண்கள் எல்லோரும் ஆயுதங்கள் தூக்கி களமுனைகளில் நின்று எதிரியைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக மாறுகின்ற போது எதிரியின் பல்குழல் பீரங்கியும் கவச வாகனமும் எமது தாயக பூமிக்குள் கால் வைக்க முடியாது என்பதை எதிர்காலத்தில் நிஜமாக்க வேண்டிய பொறுப்பு தமிழீழத் தாயகப் பெண்களின் வரலாற்று கடைமையாகும்.
தமிழர் தாயகம் மீது ஏற்படுத்தியிருக்கும் அவலங்கள் நிரந்தரமானவை அல்ல. அவை தற்காலிகமானவை என்ற உறுதிப்பாட்டுடன் தமிழீழப் பெண்கள் விழித்ததெழுந்தார்கள். மன்னார் அடம்பனில் சிங்கள இராணுவத்தின் மீதான தாக்குதலின் பின்னர் பெண்புலிகளின் தாக்குதல் வரலாறு தொடங்கியது. அன்றிலிருந்து தீச்சுவாலை வரையான பல களங்களில் பெண் புலிகளின் பங்களிப்பு வெளிப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவானது விடுதலைப் புலிகளின் சகல வேலைத் திட்டங்களிலும் பல படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றிருந்தனர். கடல் மற்றும் தரைக் கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் தீரத்தை வெளிப்படுத்தினர். யுத்தத்தை எதிர்கொள்வதிலும் சண்டை செய்வதிலும் எல்லோரும் சம அளவில் உழைக்க வேண்டியிருந்தது. இதில், பெண்களுக்கு ஒப்பீட்டளவில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. எனினும் போர்க்களத்தில் அத்தனைச் சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் அவர்களாற் சாதிக்க முடிந்தது.
ஜெயசிக்குறு ஓராண்டு வெற்றிநாளுக்கு களமுனைக்குச் சென்ற பொதுமக்களுக்கு அவர்கள் படும் சிரமங்கள் தெரிந்தன. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஏறத்தாள ஒன்றரை வருடங்கள் நடை பெற்றது. அனைத்துக் கால நிலைகளிலும் சண்டை நடந்தது. மழைக்காலத்தில் பதுங்குகுழிகளுக்குள் வெள்ளம்.. மழை பொழியப்பொழிய சண்டை. நெஞ்சு முட்டும் தண்ணீருக்குள் நாள் முழுவதும் நின்று சண்டைசெய்திருந்தார்கள். அனைத்துப் பதுங்குகுழிகளும் அவர்களே வெட்டினார்கள்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரின்போது உடலுளைப்பு மிகமிகக் கடினமாயிருந்தது. பதுங்குகுழி அமைப்பதும் அணைகள் அமைப்பதும் காப்பரண்கள் அமைப்பதும் மிகக்கடுமையான வேலைகள். தமக்குரியஅனைத்து வேலைகளையும் அவர்களேதான் செய்தார்கள். பின்வாங்கி வரவர புதிய காப்பரண்கள் அமைக்கவேண்டும். தங்களுக்கான சகல நிர்வாக வேலைகளைக்கூட அவர்களேதான் செய்தார்கள். மருத்துவர்களாகவும் சாரதிகளாகவும் பெண்களே இருந்தார்கள். களமுனைக் கட்டளைத் தளபதிகளாகவும் அவர்கள் இருந்து வழிநடத்தினார்கள்.
முன்பு ஆண்போராளிகளின் அணிகளுடன் பெண்போராளின் அணிகளும் கலந்து தாக்குதல் மேற்கொண்ட நிலை, ஒரு கட்டத்தில் தனித்துத் தாக்குதல் நடத்தும் நிலைக்கு வளர்ச்சியடைந்தது. முக்கிய மரபுவழி எதிர்ப்புச் சமர்களில் அவரவர் பகுதிகளை அவரவரே தனித்துப் பாதுகாத்துச் சண்டை செய்தனர். எதிரியின் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட பெண்புலிகளால் தனித்துச் செய்யப்பட்டன. முக்கியமாக தரைக்கரும்புலித் தாக்குதல்கள் சில அவ்வாறு நிகழ்த்தப்பட்டன.
தீச்சுவலை முறியடிப்புச் சமரில் பெண்புலிகளின் பங்களிப்பு அளப்பரியது. தளபதி கேணல் பால்ராஜின் கூற்றுப்படி, முறியடிப்புச் சமரிற் பங்குபற்றி அந்நடடிக்கையை முறயடித்தவர்கிளில் 60 வீதமானவர்கள் பெண்போராளிகளே. தமக்கென சிறப்புப் படையணிகளையும் கனரக ஆயுதப்படையணிகளையும் கொண்டிருந்த மகளிர் படையணி, கடலிலும் தன் பங்கைச் சரிவரச் செய்துள்ளது. ஆட்லறிகள் வரை சகல கனரக ஆயுதங்களையும் பயன்படுத்தும் மகளிர் அணிகள் உருவாக்கப்பட்டிருந்தன.
தமிழீழ தேசியத் தலைவரின் தீர்க்க தரிசன சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட மகளிர் படையணிகள் தமிழர்களுக்கு சர்வதேச முகவரியைப் பெற்றுக்கொடுத்தன. தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி நடைபெற்றபோது அனைத்துலகப் பெண்கள் எழுச்சி நாள் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. இதில் பெண் போராளிகளும் பங்கெடுத்திருந்தனர்.
சங்க கால இலக்கியமோ, தமிழீழ போர்க்கால இலக்கியமும் காட்டாத ஒரு மேன்மையான தியாகச் செயலின் உச்சத்தை இறுதிபோரின் சமர்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தில் காணலாம். தமிழீழ விடுதலைப் போராட்ட வலராற்றில் விடுதலைப் புலிகளின் ஓர்மத்துக்கும், விடாமுயற்சியையும் காட்டிநின்ற ஆனந்தபுர பெரும் சமருக்கு மகளிர்படையணிகள் சார்பாக தலைமை தாங்கிய மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா , சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்க்கா அவர்களுடன் போர்க்களத்திற்கு சென்ற மாலதி படையணித் தளபதி கேணல் தமிழ்ச்செல்வி அவர்கள் தனது சிறு குழந்தையை போராளியான தனது கணவர் பூவண்ணனிடம் விட்டுவிடு போர்க்களத்துக்குச் சென்றார். இதில் பல நூறு பெண் போராளிகளின் வீர வலராறு பற்றி ஆனந்தபுர சமர் வரலாற்றுப்பதிவுகள் பதிவிடுகின்றன.
‘04.04.2009ல் அதிகாலையில் இடம்பெற்ற பெரும் உடைப்புச் சமரில் பிரிகேடியர் விதுசாஇ பிரிகேடியர் துர்கா உள்ளிட்ட பெரும் தளபதிகள் வீரமரணமடைய அன்றைய தினம் இரவே எஞ்சிய போராளிகள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மீண்டும் ஒரு உடைப்புச் சமரை மேற்கொள்ள தளபதிகளும் போராளிகளும் தயாராகினர். அந்த உடைப்புச் சமருக்கு எஞ்சிய மகளிர் போராளிகளையெல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு தமிழ்ச்செல்வி களம் இறங்கினாள். எப்படியாவது பெட்டி முற்றுகைக்குள் இருக்கும் போராளிகளைக் காப்பாற்றி முற்றுகையை உடைத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில் இருந்தது. இறுதியாக ஒரேயொருவார்த்தை ‘என்ர பிள்ளையைப் பத்திரமாகப் பாருங்கோ…’ அது தான் அவளது கடைசித் தொடர்பாடலாக இருந்தது.
அந்த உடைப்புச்சமர் உக்கிரமாய் நடந்து பச்சைப்புல்மோட்டைக் கடல் நீரேரியூடாக ஒரு உடைப்பொன்றை ஏற்படுத்தி போராளிகள் நகர்ந்து கொண்டிருக்கும் போதுதான் தற்துணிவும் விடாமுயற்சியும், வைராக்கியமும் கொண்ட தமிழ்ச்செல்வி என்கின்ற பெருமலை எதிரியின் குண்டேந்தி அந்த இடத்திலேயே சரித்திரமாய் வீரவரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்துக்கொண்டாள்.’
இவ்வாறாக வீரம்நிறைந்த பெண்கள் தமிழீழத்தில் வாழ்ந்தார்கள் என்பது உலகே கண்டு வியந்த உண்மை என்பதுடன் அவர்கள் தமது அக உணர்வுகளை போர்க்கால இலக்கியங்கள் வாயிலாக வெளிப்படுத்தவும் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கெல்லாம் காரணம் அப்பெண்களுக்கான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் வழங்கிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் ஆழ்ந்த சிந்தனையே ஆகும் .
தமிழ்த்தேச விடுதலையின் முக்கியமான ஒரு கால கட்டத்தில் நிற்கின்றோம். இந்தக் கால கட்டத்தில் தமிழீழப் பெண்களின் எழுச்சி நாள் மற்றும் 2ம் லெப் மாலதி அவர்களின் 34வது ஆண்டு நினைவு நாளையும் நினைவு கூறும் இத்தருணத்தில் தமிழீழப் பெண்கள் தீர்க்கமான சில வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியது காலத்திற்கு அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சி இல்லாமற்போன பின்னர் தமிழீழத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களின் நலன்களைக் கவனிக்கக்கூடிய எந்தக் கட்டமைப்பும் உறுதியாக இல்லை. எமது தமிழ்ச் சமூகத்தில் தனியே பெண் போராளிகளுக்கு மட்டும் பொருந்திய பாரிய மாற்றம் தொடர்ச்சியாக சமூகத்தில் பின்பற்றப்படாததுதான் பெண்கள் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு காரணம். தலைவரின் சிந்தனைகளுக்கு ஏற்ப பெண் சமூகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தினால் மட்டுமே பெண்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.
தமிழீழ விடுதலைப்புலிகளினால் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட காலத்தின் பின்னர் அதாவது 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழீழ பெண்கள் சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றிக்கெல்லாம் ஒரே தீர்வு தமிழீழமாகும். காலமிட்ட கட்டளைப்படி வரலாறிட்ட வழியில் தமிழீழம் வெல்லும் வரை போராடுவோமென தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளான இன்று தமிழாழ் இணைந்து நாம் உறுதியெடுத்துக் கொள்வோம்.