கடந்த ஒன்பது வருடங்களாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்று வந்த நபர் கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநாச்சியை சேரந்த ஜெயராம் ராமநாதனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் 2010ஆம் ஆண்டு நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ஜப்பான் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தொட்டலங்க பாலத்திற்கு வெடி குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டியதாக முதல் குற்றச்சாட்டும், கடும் சேதம் விளைவிக்க கூடிய குண்டுகளை உடமையில் வைத்திருந்ததாக இரண்டாம் குற்றச் சாட்டும் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முக்கிய சான்றாக எதிரியினால் சுயவிருப்பில் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்து அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் சுயமாகப் வழங்கப்பட்டதா என்பதனை உறுதிப்படுத்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையில் எதிரியின் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில்,
எதிரியை 2008ஆம் ஆண்டு புறக்கோட்டை பொலிசார் கைது செய்து கடுமையாக தாக்கி பின்னர் இரகசிய பொலிசாரிடம் எதிரியை ஒப்படைத்துள்ளனர்.
விசாரணையின் போது கடும் தாக்குதலை மேற்கொண்ட இரகசிய பொலிசார் மேலதிக விசாரணைக்ககாக அவரை பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் பயங்கரவாதத் தடைப்பிரிவு பொலிசார் எதிரியை கடுமையாக தாக்கி குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
பொலிசாரின் சித்திரவதையினால் எதிரிக்கு ஒன்பது காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும், குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் பதிவு செய்யப்படவில்லை என்பதனையும் குறுக்கு விசாரணையில் எதிரி தரப்பால் நிரூப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க தனது தீர்ப்பில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் எதிரியிடமிருந்து சுயமாக பெறப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.
அத்துடன் எதிரிக்கு எதிராக வேறு சான்றுகளை இல்லையென அரச சட்டத்தரணி நீதிமன்றிற்கு தெரிவித்ததையடுத்து நீதிபதி எதிரியை விடுதலை செய்தார்.