எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
தமிழீழ விடுதலை புலிகள் என்ற உன்னத அமைப்பின் தமிழீழ நடைமுறையரசு தனது அரச கட்டமைப்பை உருவாக்கித் தமிழீழத்தை அரசாட்சி செய்த காலத்தில் அரசுக்குத் தேவையான பல பிரிவுகளை உருவாக்கி இருந்தது. அந்த வகையில் தமிழீழத்தின் நீதி நிர்வாகத்தை நிர்வகிப்பதற்கென்றும் பிரிவுகள் உருவாக்கம் கண்டன. தமிழீழ காவல்துறை உருவாக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ அரசு மௌனிக்கும் வரை இயங்குநிலையில் இருந்தது தமிழீழ காவல்துறை. இறுதியாக அரசியல்துறையின் பொறுப்பாளராக இருந்து இலங்கை அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட திரு நடேசன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட அக் கட்டமைப்பு பலத்த சவால்களையும் தடைகளையும் தாண்டி நிமிர்ந்து நின்றது. பின் நாட்களில் திரு இளங்கோ அவர்களின் பொறுப்பின் கீழ் செயற்பட்ட காவல்துறை மக்களுக்காக மக்களின் பணிகளைச் செய்த அதே நேரம் களமுனைகளில் படையணிகளாக நின்ற சண்டையிட்ட வரலாற்றையும் மறக்கலாகாது.
இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தமக்கான பாதுகாப்பின்மை அதிகாரமின்மை சுதந்திரமாக பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை என்ற பதற்றமான சூழலிலே தெருவில் தென்பட்ட இளைஞர்கள் யாவரையும் புலி என்று சுட்டுக்கொன்றும், காணாமல் ஆக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்தும் நீதிகேட்க சென்ற தாய் தமக்கை, தங்கை, துணையாள்ஆகியோரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியும் தனது ஆணவச் செருக்கையும் அதிகாரத் திமிரையும் பிரயோகித்ததன் விளைவாகவே பின்னால் எமக்கான ஒரு தனி தமிழீழம் அமைய வேண்டும் என்ற சிந்தனையில் படைத்துறை, அரசியல்த்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை என்ற பெரும் கட்டமைப்புக்களுக்கு அடுத்து மக்களுக்கான பொது நிர்வாக சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற தலைவரின் சிந்தனையின் செயல்வடிவம் தமிழீழ காவல்துறை.
‘இலங்கை பொலிசாரின் ஆதரவோடு தமிழர்களின் வரலாறு கூறும் யாழ் பொது நூலகத்தில் இருந்த 97000மேல் புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதன்’ பத்தாமாண்டு நினைவு நாளான 1991ம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் திகதி (01.06.1991) தமிழீழ காவல்துறைக்காக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்தனர்.
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பா.நடேசன் அவர்களின் பொறுப்பில் தமிழீழ காவல்துறையின் முதலாம் அணி பயிற்சி முடித்து ஒரு தனியரசை நிறுவப் போரிடும் ஒரு தேசிய இனமாகிய எமது விடுதலைப்போர் வரலாற்றில் பொறித்து வைக்கப்பட வேண்டிய நிகழ்வாக 1991ம் ஆண்டு, கார்த்திகை 19ம் திகதி அன்று தமிழீழ காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 1991 கார்த்திகை 19ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கபட்ட ‘தமிழீழ காவல்துறை’ யினது செயற்பாடுகள் அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை, அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படுகிறது. இக் காவல்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது “தமிழீழக் காவல்துறையினர் நல்லொழுக்கம், நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களோடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்மந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் மக்களின் தொண்டர்களாய்… பாதுகாவலர்களாய்… சேவைநோக்கம் உடையவர்களாய் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவல்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார்.
அமைதிக்கான வர்ணமாகவும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டும்; என்பதற்காகவும் பார்ப்பவர் மனங்களில் பாதுகாப்பும் தமக்கான நீதியும் கிடைக்கும் என்ற சிந்தனையை தோற்றுவிப்பதற்காகவே இளம் நீல மேல் சட்டையும் கரும் நீல நீள்கால்ச்சட்டையும் அவரவர் பணிசார்ந்த இலட்சணைகளையும் அணிந்து எனது மக்களுக்காக பணியாற்ற புறப்பட்டார்கள் காவற்றுறையின் அதிரடிப்படை தவிர்ந்த ஏனைய பிரிவுகளின் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான நிறம் கொண்ட ஆடையினையே அணிந்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் பெண் என்ற சமத்துவநிலையை கருத்தில் கொண்டு காவல் துறையினுடைய முதலாவது அணியில் மகளீர் அணியும் தத்தமது பொறுப்புக்களில் பணிபுரிய புறப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் சாதாரண தரம் வரை கல்வி கற்ற இளைஞர் யுவதிகள் மற்றும் சேவை மனப்பாங்குடைய இளைஞர் யுவதிகள் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கற்கவும் மற்றும் சமூகத்திலே உள்ள மக்களினுடைய தேவைப்பாடுகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் மூத்த உறுப்பினர்களால் பயிற்சி வழங்கப்பட்டு வெளியேறினார்கள்.
காவல் துறையின் பிரிவுகளாக ஆய்வுத் திணைக்களம், மகளீர், சிறுவர் அமைப்பு மற்றும் குற்றவியல் பிரிவு, ,விசேட குற்றபிரிவு போக்குவரத்து பிரிவு, உள்ளக பாதுகாப்பு பிரிவு, புலனாய்வுபிரிவு, அதிரடிப்படைப் பிரிவு, மக்கள் தொடர்பு சேவை பிரிவு, காவல்துறை மருத்துவ பிரிவு மற்றும் தொழிநுட்பப் பிரிவு, தமிழீழ தேசிய தலைவரின் நேரடி விசாரைண பிரிவு ,ஆளணி மற்றும் நிர்வாக பிரிவு ,விசேட தாக்குதல் பிரிவு, கைதிகள் பரமரிப்புப் பிரிவு, கைதிகள் பரிமாற்ற பிரிவு, மக்கள் பொதுநல சேவை பிரிவு போன்ற பல பிரிவுகள் இயங்கின தமிழீழ காவல் துறை தேசிய தலைவரின் நேரடி வழிகாட்டலில் இயங்கியது இதற்கு பொறுப்பாளர்களாக 1991ம் ஆண்டு முதல் பா.நடேசனும் அவர்களும் பின்னர் 2007ம் ஆண்டு இளங்கோ என்ற ரமேஸ் அவர்களும் பொறுப்பு வகித்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம்.
அன்று தமிழீழத்தில் படிப்படியாக பரவலாக பணிமனைகளைத் திறந்து தமது சேவையை மக்களுக்கு வழங்கினார்கள். இதில் தமிழீழ காவல்துறையின் பெண்கள் அணியின் வளர்ச்சியும் அபாரமானது. அயல்நாடுகளான சிறிலங்காவிலோ, இந்தியாவிலோ நடைமுறையில் காணப்படாத பல சமூக சீர்திருத்தத்திற்கான சட்ட ஒழுங்குகளையும், செயற்பாடுகளையும் செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வளர்ச்சிப் பெருக்கானது தமிழீழப் பெண்களை முன்னேற்றகரமான, துணிவுள்ள பெண்களாக வாழ வகைசெய்ய முனைவதில் வெற்றிகண்டனர். மிகக்குறைந்த வளங்களோடும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்பலத்தோடும் யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவற்றுறையின் சேவை படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. தமிழீழ எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது இவர்கள் செயற்பட்டுள்ளனர்.
அருகிய வளங்களும், பெருகிய தேவைகளும் கொண்ட சமூகச் சூழலில் முரண்பாடுகளும், மோதல்களும், கசப்பும், காழ்ப்புணர்ச்சியுமே மனிதர்களின் இயல்பாகிப்போகிறது. இதனால்தான் சமூக வாழ்வில் சில வரையறைகளும், நியதிகளும் தவிர்க்க முடியாத தேவைகள் ஆகின்றன. இந்த வரையறைகளை வடிவமைத்து மக்களின் மத்தியில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதே ஒரு அரசாங்கத்திற்கான காவற்துறையின் பணியாகும். அதிலும் போராடும் ஒரு தேசத்தின் நடைமுறை யதார்த்தம் மிகவும் சிக்கலானது. மக்களது இயல்பு வாழ்வே குழம்பிப்போயிருக்கும்போது சட்டங்கள் நலிவடைந்து போக குற்றங்கள் அதிகரிக்கும். எமது தமிழீழத்தைப் பொருத்தவரை தேச விடுதலையுடனான சமூக விடுதலையையும் முன்னெடுக்கும் கொள்கைக்கு அமைவாக மக்களின் இயல்பான நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு பலமிக்க கட்டமைப்பாகவே தமிழீழக் காவற்துறை உருவாக்கப்பட்டது.
காலத்துக்கு காலம் எமது விடுதலையின் பாதைகள் விரிவடைய எமது காவல்துறை உறுப்பினர்களும் சர்வதேச மட்டத்திலான தொழில்சார் நிபுணத்துவங்களை பெற வேண்டுமென்ற நோக்கில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர். ஒரு கட்டுக்கோப்பான காவல்துறை நிர்வாக சேவையில் மக்களிடம் எவ்வகையான பிரச்சினைகள் உருவாகின்றதோ அவையாவும் பொதுநிர்வாகமான தமிழீழ காவல்துறையினரால் சட்டத்தின் முன் யாவரும் சமமென்ற ரீதியில் அதிகார பாரபட்சம் அல்லது சொந்த பந்தம் என்ற உறவுகளுக்கு அப்பாற்பட்டு ‘தோழமைக்கு உரிமைகொடு கடமை நேரங்களில் தவிர்த்துக்கொள்’ என்ற சிந்தனைகளுக்கு அமைவாக பிணக்குகள், வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்களும் வழங்கப்பட்டு வந்தது.
மக்களின் தேவைபாடுகள் பல்வேறுபட்ட கோணங்கள் பல்வேறுபட்ட வகையில் மாறுவது போலவே அவர்களுடைய குற்றச் செயல்களும் மாற்றம் அடையும் என்பதுதான் உண்மை ஆனாலும் எமது தமிழீழ காவல்துறையின் செயற்பாடுகள் சுயநலங்களை துறந்த பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டு அமைந்தது. எவ் வாறெனில் பெண்கள் தமது ஆடை ஆபரண அலங்காரங்களை பணிநிலமைகளுக்கேற்ப மாற்றிக் கொண்டனர். திருமணமான திருமணமற்ற ஆண் பெண் உறுப்பினர்கள் மக்களுக்காக அயராது பணிபுரிந்தனர். அது மட்டுமன்றி ஆயுதங்களை கையாளுதல், வாகனங்களைச் செலுத்துதல், மக்களை ஒழுங்குபடுத்துதல், பிரச்சினையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் பாதுகாப்பளித்தல் போன்ற விடயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருந்தனர்.
தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை நிறுவி காட்டிய சிறப்பு கொண்டது. காவற்றுறை,சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயுதப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் நிழல் அரசு காலத்தில் தனித்துச் செயற்பட்டு வந்த தமிழ் மண்ணை தமிழர்கள் ஆண்ட காலங்கள் அவை. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று தமிழீழ தேசத்தின் வடக்கு – கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம்.
பாடசாலைகளில் மாணவர்களுக்கான போக்குவரத்து, அடிப்படை சட்ட திட்டங்களை கற்பித்தல் மற்றும் மகளீர், சிறார்கள், குழந்தைகள் தொடர்பான விவகாரங்களை கையாளுதல் அனர்த்த காலங்களில் எவ்வாறு உடனடியாக செயற்படுதல் துப்பாக்கிச் சூடு, ஆயுத மோதல்கள், விமான குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏனைய விபத்துக்களில் இருந்து எம்மையும் பிறரையும் எவ்வாறு பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துதல். போதைவஸ்து மற்றும் குடும்ப வன்முறைகள், துஸ்பிரயோகங்கள் தொடர்பான சமூக குற்றங்கள் ஏற்படாது பாதுகாத்தல் தொடர்பான சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல். மற்றும் யுத்த கைதிகளுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தல் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டினுடைய இரகசியங்களை பேணுதல் போன்ற விவகாரங்களையும் இலகுவாக கையாள்வதற்கு ஏற்றவகையில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
ஊழல், இலஞ்சம் துளியளவுமற்ற கறைபடியாத துறை தமிழீழக் காவற்றுறை என்பதோடு எந்த ஒரு குறையும் எங்கள் மண்ணில் படியாமல் காவல் நின்று மாதிரி நேர்த்தியான அரசை நிறுவ துணை நின்றார்கள் . போர்ச்சூழலில் சமூகக் கட்டமைப்புக் குலையாது பாதுகாத்த பெருமை தமிழீழக் காவற்றுறையைச் சாரும். 2002 ஆண்டு புலிகள் அரசு ஒப்பந்தத்தின் பிரகாரம் திறக்கப்பட்ட A9 நெடுஞ்சாலை காவல்துறையின் சேவையையும் எம்மவர்களின் தேவைப்பாட்டையும் அதிகரிக்கச் செய்தது. அரசு புலிகள் பிரதேசங்களுக்கு அப்பால் உள்வரும் வெளிச்செல்லும் வாகனங்களுடைய கண்காணிப்பு, மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களை கண்காணித்தல், உறவினர்களை இணைத்தல் போன்ற பெரும் பொது நிர்வாக சேவையை பொறுப்பேற்று திறம்பட நடாத்தியமை சர்வதேசத்தையும் வியக்கச்செய்தது. வளர்ந்து வரும் ஒரு விடுதலை இனத்தின் மக்களுக்கான ஒரு நிர்வாக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகம் எம்மிடம்தான் கற்றக்கொண்டது.
தலைவனின் நேரிய சிந்தனையிலே சிறப்பாக பணியாற்றிய பலர் கடமைகளின் போது தம் உயிர்களையும் தம் மக்களுக்காக தியாகம் செய்து கொண்டனர். அதுமட்டுமன்றி கைவிட்டு போன அரசு புலிகளின் ஒப்பந்த மீறல்கள் (2006.08.11) ஒரு தலைவனின் பாதுகாப்பிலே குறிக்கப்பட்ட நில எல்லைகளுக்குள் நான்கு திசைகளும் சூழ ஒடுக்கப்பட்டனர். தரை, கடல், ஆகாயம் வழியான மும்முனை தாக்குதல்கள் எம்மக்கள் மீது தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக முகமாலையிலிருந்து கிளிநெச்சி நோக்கியும் வடகிழக்கிலிருந்து முல்லைத்தீவு நோக்கியும் வடப்பகுதியின் தெற்கிலிருந்து கிளிநொச்சியை நோக்கியும் வடமேற்கிலிருந்து கிளிநொச்சி நோக்கியும் அதாவது முகமாலை, நாயாறு, ஓமந்தை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் திரள்திரளாக இடம்பெயர வைத்தது. அக் காலகட்டத்தில் மக்களை பாதுகாக்கும் பாரிய பணியை ,தமிழீழ காவல்துறையே பணியேற்றுச் செய்தது.
வன்னியில் போர் கடுமையாக நடைபெற்ற காலப்பகுதியில் மிதிவண்டிகள் மட்டுமே காவற்றுறையின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. பலபத்து மைல்கள் போய் குற்றவாளியொருவரைக் கைதுசெய்து மிதிவண்டியிலேயே அழைத்துவருவார்கள். தாயக எல்லைகளைப் பாதுகாக்கும் பணியிலும் அவ்வப்போது காவல் துறையினர் செயற்பட்டார்கள்.
காவல்துறை உறுப்பினர்கள் ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலும் ஆயுதம் ஏந்திய தமிழீழ வீர வீராங்கனைகளாகவே பணியாற்றினர்கள். 2008 காலப்பகுதியில் பிரதான நிர்வாக மையமான கிளிநொச்சி மோதல்களின்றி பின்வாங்கப்படவே மக்களினுடைய நெருக்குவாரம் முல்லைத்தீவு நோக்கி நகரத்தொடங்கியது. புலிகளும் மக்களும் அனைத்து கட்டுமானங்களும் அல்லோல கல்லோலபட்டு சிதறிகிடந்த வேலையில் பெண்கள், முதியோர், வலுவிழந்தோர் சிறார்கள் மனநலன் பாதிக்கப்பட்டோர் உறவுகளை இளந்தோர் என்ற பல வகையினரை தம் குடும்பங்களை விட்டு பிரிந்து சேவை என்ற நோக்கத்தோடு இறுதிவரை உழைத்து கடமையாற்றி கண்மூடிய காவல்துறை ஆண் பெண் மாவீரர்களும் அகமரியாதைக்குரியவர்களே.
நாளுக்கு நாள் கைப்பெற்றப்பட்ட எம்முடைய வாழ்விடங்கள் வளமிழந்து போக வருமோர் படை எமை காக்கவென்று ஐ.நா வை நம்பியிருக்க உலக வல்லரசுகள் தோள்கொடுத்து நடாத்திய இனவழிப்பின் முள்ளிவாய்க்கால் மனித படுகொலையில் சொந்த உறவுகளின் உயிரற்ற உடலங்களை கூட ஆறடி இல்லை எனினும் எட்டிய அளவில் புதைத்து எம் விடுதலை மாவீர்களின் வித்துடல்களை அவர்களின் பெற்றோர் முகவரிதேடி கையளித்து அவர்களின் கோப தாபங்களை காட்டிய வேலைகளிலும் கடமையோடு மக்கள் சேவகர்களாகவே காவல்துறை இறுதிவரை உறுதியோடு ஓயாது பணிசெய்தது.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘யாழ்தேவி’ முறியடிப்புச் சமர் உட்பட 2009 வரை பல சமர்களில் அவர்கள் துணைப்படையணியாகவும் செயற்பட்டார்கள். சிலர் களத்தில் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். இறுதிப்போரின் போது தமிழீழ காவல் துறையினர் ஆனோர் எறிகணை வீச்சு, வான்குண்டு வீச்சு ஆகியவற்றிற்கு நடுவில் நின்று எம்மக்களின் துயர்போக்கிய காட்சிகளை உங்கள் கண்முன்னே நிறுத்தும் படிமங்களை இணைக்கிறேன், கண்ணீர் நினைவுகளை மீட்டுப் பாருங்கள்.என்ன துயர் வந்தாலும் என்ன இடர் ஏற்பட்டாலும் மக்களுக்காக வேலை செய்பவர்களே காவற்றுறையினர். அதை மெய்ப்பித்தார்கள் தமிழீழ காவல் துறையின் காவலர்கள் அன்று. எனது நாட்டின் காவற்றுறையினை எண்ணி பெருமிதம் அடைகிறேன். இந்த மக்கள் பணியின் போது வீரச்சாவடைந்த எமது காவலர்களுக்கு வீரவணக்கம் (நடைமுறையரசின் கீழ் என்பதால் வீரவணக்கம் என்பதே சரி) செலுத்தி படிமங்களைப் பார்ப்போமாக.
18.05.2009 வரையும் எமது துறையை வழிநடாத்தி வீரச்சாவை தழுவிய விடுதலைபுலி மாவீரர்களையும் காவல்துறை மாவீர்களையும் காவல்துறை பணியாளர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்வதோடு எம் தேசம் உயிர்பெறும், ஓர்நாள் எங்கள் சந்ததி என்ற நம்பிக்கையில் இந்நாளை நினைவு கூறும் என்ற நம்பிக்கையுடன்அரும்பங்காற்றிய தமிழீழக் காவற்றுறை 2009 முள்ளிவாய்க்காலோடு அமைதியாகி போனது.
அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்பட்டு இன்றோடு (19.11.2021) 30 வருடங்கள் நிறைவாகின்றன. இன்று மலிந்து கிடக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், கடத்ததல் காணாமல் போகச் செய்தல், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு, வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை எனப் போராடி வருகிறார்கள். ‘இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?’ என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டுப் பார்க்கிறார்கள். அதனால் மக்கள் இன்று அமைதி இன்றி பரிதவிக்கின்றார்கள்.
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”