‘எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்’
மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.
– தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்.
”எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்’
– தேசியத் தலைவர் (2008) உரையில் இருந்து
எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது, தமிழீழத்தின் விடிவுக்காகவும், உயர்வுக்காகவும், உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும். உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும், எமது சகபோராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும். புனிதத் தன்மை வாய்ந்ததுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்படவேண்டியவையாகும்.
இம் மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய கூரல் என்பது ஒரு நிகழ்வாக இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரவேண்டும். இந்த எமக்குரிய உயரிய நிகழ்வை தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த, ஒருங்கிணைந்த பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்.
மரணத்தை வென்று எங்கள் இதயக் கோயில்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மாவீரர்கள். தமிழீழத்தின் மிகப் பெரிய நிகழ்வாக, எழுச்சியாக, புனிதமாக உணர்வார்ந்த நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் எமது தேச விடுதலையும் தேசத்தின் விடியலுக்காக வீரச்சாவடைந்த மாவீரர்கள் மறக்க முடியாதவர்கள் அவர்கள் சுமந்த எங்கள் தேசக் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. தமிழீழ நிலப்பரப்பில் இன்று கடுமையாக பேரினவாத சிங்களப் அரசும் அதன் உளவுத்துறையின் அச்சுறுத்தல் மற்றும் பொலிஸ் கெடுபிடிகளுக்கும் அடக்குமுறைகளுக்கு மத்தியில் இயலுமைக் கேற்ப மிகவும் உணர்வுபூர்வமாகவும் பேரெழுச்சியுடனும் மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
மாவீரர் நாள் (கார்த்திகை 27)
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் வடமராட்சி கம்பர்மலை என்னும் கிராமத்தைச் சேர்ந்த முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் என்ற சத்திய நாதன் இந்தியாவில் தலைவர் மடியில் சாய்ந்தான் அந்த நாளே மாவீரர் நாளாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் ‘கார்த்திகை 27ஆம் நாளை மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி முல்லைத்தீவு மணலாறு நித்திகைக்குளம் காட்டுப்பகுதி ஏறத்தாழ அறுநூறுக்கும் அதிகமான போராளிகளின் முன்னிலையில் – (முதன் முதலில் மாவீரர்களின் நினைவெழுச்சி நாளாகப் பிரகடனப்படுத்தி உரையாற்றும் போது, ‘எமது போராட்டத்தில் இன்று ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.
முதல் முறையாக இன்று இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் எமது இயக்கத்தில் வீரச்சாவு அடைந்த ஒவ்வொரு போராளிக்குமாகத் தனிப்பட்ட நினைவு நாட்களைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து அந்த நாளையே மாவீரர் நாள் ஆகப் பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு
அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவதாக வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமாக இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக எங்கள் மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர் களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலைப் போராட்டத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லாப் போராளிகளும் சமம் என்னும் ஓர் நோக்கத்துடனும் இந்த நாளை நாம் எழுச்சி நாளாகக் கொண்டாட முடிவு எடுத்துள்ளோம்.
அதாவது எமது போராளிகளை நினைவு கூரும் தினத்தை ஒரு நாளில் வைப்பதால் எல்லோரும் அன்று எமது இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர்வரை எல்லோரையும் சமமாகத்தான் கருதுகிறோம் என்பதுடன், வீரச்சாவு அடைந்த எல்லா போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக நினைத்து மாவீரர் நாளாக இன்று கொண்டாடுகிறோம். இல்லாவிட்டால் காலப்போக்கில் குறிப்பிட்ட சிலசில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாவீரர்நாள் கொண்டாடுவதற்கு முடிவெடுத்தோம்.
ஓர் இனத்தைப் பொறுத்த வரை வீரர்களையும் அறிவாளிகளையும் பெண்களையும் மதிக்காத இனம் ஓர் காட்டுமிராண்டி இனமாகத்தான் மாறி அழிந்துவிடும். எங்களுடைய இனத்தில் அறிவாளிகள் இருக்கிறார்கள். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எங்கள் இனத்தில் பெண்களை புனிதமாக மதிக்கப்படுகிறார்கள். அதேவேளை வீரர்களுக்குத்தான் பஞ்சமாக இருந்தது. ஆனால் இன்று இந்த மாவீரர் நாளில், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம். ஆம், எமது வீரர்களைக்கூட நாம் கௌரவிக்க ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் எங்களுடைய இனத்தில் வீரர்கள் என்றால் யார் என்று கேட்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று நாம் எம் இனத்தின் வீரர்களை நினைவு கூரும் நாள் ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனவே இனி எமது இனம் நிச்சயமாக அழியாது.
இன்று எமது இனம் உலகிலேயே தலைநிமிர்ந்து இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எமது 1307 போராளிகளின் உயிர்த்தியாகம்தான். அவர்கள் தமது உயிரையே மதியாது போராடிய உண்மையான தியாகம் தான் எங்களுக்கு இன்று உலக நாடுகளில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த மாவீரர் நாளை நாங்கள் எங்களுடைய வாழ்நாளில் முக்கியமான விழாவாக இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் கொண்டாட ஆரம்பிக்க வேண்டும்’ என்றார்.
இந்திய ஆக்கிரமிப்புப் படை தாயக பூமியை கையகப்படுத்தி அட்டூழியங்களை மேற்கொண்டிருந்த அவ்வேளை இந்திய தமிழீழப் போர் உக்கிரம் அடைந்து கொண்டிருந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் தினமும் தம்முயிரை தமிழீழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். முதன் முதலில் நடாத்தப்பட்ட மாவீரர் நிகழ்வில் அதாவது 1989-ஆம் ஆண்டு மாவீரர் நாளில் நினைவு கூரப்பட்ட 1307 மாவீரர்கள் வீரச்சாவடைந்திருந்தார்கள். 1990-ஆம் ஆண்டு தமிழீழ மக்களால் இயன்றளவு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டது. மாவீரர் நாள் ஒரு சோக நிகழ்வு அல்ல அது ஒரு தேசத்தின் மலரும் நினைவுகள் எங்கள் வீரர்களை போற்றும் நிகழ்வு, எம் தேசத்தை காக்கப் புறப்படுவதற்காக ஆயிரம் ஆயிரம் போராளிகளால் உறுதி எடுக்கப்படும் நிகழ்வு கல்லறை தெய்வங்களுக்காக நிறுவி, அவர்கள் மீது உறுதியெடுத்து, அவர்கள் நினைவுகளை சுமந்து மக்களும் போராளிகளும் பயணிப்பதற்கான ஆலயமாக துயிலும் இல்லங்கள் உருவெடுத்தன.
துயிலும் இல்லங்களின் மகிமை
விடுதலைப்போரின் ஆரம்பகாலகட்டத்தில், களப்பலியான புலிவீரர்களின் உடல்கள் புதைத்தல், எரித்தல் என்ற இரு வகையாகவும் சிறப்பிக்கப்பட்டன. பெற்றாரின் மதநம்பிக்கை மற்றும் விருப்பத்திற்கு அமைவாகவும், போராளிகளின் வித்துடல்கள் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்தன. பொது மயானங்களில் அப்போது போராளிகளின் வித்துடல்கள் தகனம் செய்யப்பட்டன. அல்லது நல்லடக்கம் செய்யப்பட்டன. போராட்ட காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வித்துடல்களை புதைக்கவேண்டிய கட்டாய தேவை ஏற்பட்டது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போரிட்ட காலத்தில், தேசியத் தலைவரும் அவருடைய போராளிகளும்; மணலாறுக் காடுகளில் நிலையெடுத்திருந்தனர். களப்பலியான வீரர்களை தகனம் செய்தால், இந்திய இராணுவத்தினர் புகை எழும் திசையையும், புலிகளின் மறைவிடங்களையும் கண்டறிந்து விடுவார்கள், என்ற காரணத்திற்காக ஆங்காங்கே காடுகள் தோறும் வித்துடல்கள் புதைக்கப்பட்டன.
மணலாற்றில் புதைக்கப்பட்ட மாவீரர்கள் ஒரே இடத்தில் அதாவது மணலாறு துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக மீண்டும் விதைக்கப்பட்டன. இத்துயிலும் இல்லத்திற்கு ஒரு தனிப்பட்ட வீரவரலாறு உண்டு என்பது வெளிப்படை. போர் நடந்த இடங்களில் கைவிடப்பட்ட, அல்லது புதைக்கப்பட்ட வீரர்களின் வித்துடல்கள், சாதகமான நிலை தோன்றிய பின்பு மீட்டெடுத்து, எடுத்துச்செல்லும் பாரம்பரியம் உலகில் உண்டு. துயிலும் இல்லம் என்ற சொற்றொடரை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கியுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றோம் 1990ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு வரை, நவம்பர் 21 தொட்டு 27 வரையிலான ஒருவாரம் மாவீரர் வாரமாக சிறப்பிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டிலிருந்து, நவம்பர் 25, 26, 27 ஆம் நாட்கள் மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்படு வருகிறது.1989இல் மாவீரர் நாளுக்காக தலைவர் முதன்முதலில் உரை நிகழ்த்தினார்.
மாவீரர்நாள் உரை
மாவீரர்நாள் உரை தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 1989ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் நவம்பர்-27ம் அன்று மாவீரர்நாள் உரை உரைக்கப்பட்டுள்ளது. இவ்வுரை அன்றிலிருந்து அவரது மாவீரர் நாள் உரை தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்கால நடவடிக்கைகளை அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்து ஒரு கொள்கை உரையாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. இவ் தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலி பரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்றுக் கொண்டோர்ர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசு உட்பட சர்வதேச சமூகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து உன்னிப்பாக செவிமடுத்துள்ளது. அந்த உரைக்கு உலகெங்கும் மிகுந்த மதிப்பளிக்கப்பட்டது.
மாவீரர் எழுச்சி நாள்
1989 ஆம் ஆண்டு1993ஆம் ஆண்டுவரை மாவீரர் எழுச்சி நாள் நள்ளிரவு 12மணிக்கு நடைபெற்று வந்துள்ளது. 1994ஆம் ஆண்டு தொட்டு, மாவீரர் நாள் நள்ளிரவில் இருந்து, மாலை 6.05 மணிக்கு மாற்றப்பட்டது. முதல் மாவீரன் லெப். சங்கர் வீரச்சாவடைந்த நேரமும் அதுவாகும். இதற்கு முன் தலைவரின் மாவீரர் நாள் உரை அமையும். மாவீரர் உரை முடிந்ததும் 6.05 மணிக்கு தமிழீழம் எங்கணும் அனைத்துத் மதவேறுபாடுகல் இல்லாது அணைத்து வழிபாட்டு இடங்களிலும்; ஒரு நிமிடம் நினைவெலி எழுப்பப்படும் அதன் பின் அகவணக்கம் செலுத்தப்படும். மாவீரர் துயிலும் இல்லங்கள் யாவற்றிலும் ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றார் உரித்தாளர்கள் நண்பர்கள் போராளிகள் போன்றோரால் சுடர் ஏற்றப்படும்.
மாவீரர்களின் வித்துடல்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி இங்கு விதைக்கப்படுகின்றன. மாவீரர் பற்றிய எண்ணக்கருவை இச்சொற்றொடர் உணர்த்துகிறது. முதலாது துயிலும் இல்லம், கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் கோப்பாய் துயிலுமில்ல மண்ணில், போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்டதோடு, எரிக்கப்பட்டும் வந்தன. 1991இல் வித்துடல்கள் எரிக்கப்டமாட்டாது, புதைக்கப்படும் என்ற தீர்மானம் தேசியத் தலைவரினால் எடுக்கப்பட்டது. இதுபற்றி 1991ஆம் ஆண்டின் ஐப்பசி – கார்த்திகை விடுதலைப்புலிகள் ஏடு, மாவீரர்களைத் தகனம் செய்வதற்கென்று அமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில், இப்போது மாவீரர்கள் புதைக்கப்பட்டு, இங்கே கல்லறைகள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது என்றென்றும் தியாகத்தின் சின்னமாக, எமது மண்ணில் நிலைபெறும். என்று கூறுகிறது. இம்முடிவானது, போராளிகளுள் மிகப் பெரும்பாலானோரின் விருப்பத்திற்கிணங்கவே என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வித்துடல்கள் புதைக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டபின், முதன்முதலான கப்டன் சோலையின் வித்துடல் கோப்பாய் துயிலும் இல்லத்தில், 1991 ஆம் ஆண்டு ஜூலை 14ம் நாள் விதைக்கப்பட்டுள்ளது.
வித்துடல் கிடைக்காமல் போனால், நினைவுக்கற்கள் நாட்டும் வழமை, உண்டு. அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலும் இல்லத்திலும், அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலும் இல்லத்திலும், வைப்பது எமது இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்திலும், முள்ளியவளை துயிலும் இல்லத்திலும், விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய நினைவுக்கற்கள் தென் தமிழீழ துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுள்ளன. மாவீரர்களான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது வித்துடல்கள் பாரிஸ் பொது மயானத்தில் விதைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான நினைவுக்கற்கள் விசுவமடு துயிலும் இல்லத்தில் நிறுவப்பட்டன.
தமிழரின் விடுதலையை நெஞ்சில் சுமந்து மாண்ட மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் கட்டும் வேலைகள் 1990 ஆம் ஆண்டின் இறுதி பகுதியில் தொடங்கினாலும் 1991-ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரபல வரைபட கலைஞர் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக துயிலும் இல்லத்தினை வரைந்து மாதிரி செய்து கொண்டிருந்தார். அதன்படியே கட்டுமானப் பணிகளை போராளிகள் மக்கள் என அனைவரும் ஆரம்பித்தார்கள்.
இவ்வாறு அமைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட இல்லங்களில் ஏற்கனவே சண்டை நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட மாவீரர்களை அகழ்ந்தெடுத்து புதிய இல்லங்களுக்கு கொண்டுவரும் முடிவுகளும் எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய இராணுவக் காலப்பகுதியில் சண்டைகளில் மாண்டுபோன, அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்ட மாவீரர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கோப்பாய், வடமராட்சி, மற்றும் வன்னி ஆகிய இடங்களில் துயிலும் இல்லங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். ஆரம்பத்தில் பிராந்தியங்களுக்கு ஒரு துயிலும் இல்லமாக இருந்து பின்னர் மாவட்டங்களுக்கு ஒன்று என விரிவாக்கப்பட்டது. பின்னர் மேலும் பல துயிலுமில்லங்கள் பிரதேச ரீதியாக அமைக்கப்பட்டது.
வித்துடல்கள் விதைத்தல்
சமர்களங்களில் வீரச்சவடைந்தால் அல்லது ஆக்கிரமிப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டால் இவர்களை வீரச்சாவடைந்தார் என அழைப்பது வழக்கம். நோய் நிலையில் மற்றும் திடிர் மரணம் அல்லது முதுநிலை வரும் மரணங்களில் இறந்த போராளிகளை சாவடைந்தார் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. மாவீரனின் வித்துடல் கிடைக்கப்பெற்றதும், தியாக சீலம் என்னும் ஓரிடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பதனிடப்பட்ட அந்த வித்துடல் உரிய முறையில் பதனிடப்பட்டு சீருடை அணியப்பட்டு அதே நேரத்தில் அந்த மாவீரனுடைய விபரங்கள் உறுதிசெய்யப்பட்டு, அந்த மாவீரருக்குரிய இராணுவ பதவி நிலை வழங்கப்பட்டும். வித்துடல் பேழையில் வைக்கப்பட்டு மாவீரர் பெயரும் பதவிநிலையும் பேழையில் பொறிக்கப்படு மாவட்ட அரசியல்துறையூடாக வித்துடல் அடங்கிய பேழை இராணுவ மரியாதையுடன், பெற்றார் அல்லது உறவினர் வீட்டிற்கு எடுத்துவரப்படும் வீட்டு வீரவணக்கம் முடிந்தபின், அவர் படித்த பாடசாலை மற்றும் வீரவணக்க நிகழ்விற்காக வித்துடல் ஒரு பொது மண்டபம் அல்லது மாவீரர் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டடு அதன்பின் வீரவணக்கக்கூட்டம் மண்டபத்தில் நடாத்தப்படும்.
அகவணக்கம் செலுத்தப்படுவதை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்படுகிறது. அடுத்ததாக ஈகைச்சுடர் பின்பு வித்துடலுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பெற்றார் மனைவி கணவன் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதைதொடர்ந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மலர்வணக்கம் செய்வார்கள். நினைவுக்கல் நாட்டும் நிகழ்விற்கும், இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டது நினைவுக்கல் நிகழ்வில் மாவீரனின் படம் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டபின் உரித்தாளரிடம் கையளிக்கப்பட்டது.
வித்துடலுக்கு மலர்மாலை, மலர்வணக்கம் செலுத்தப்பட்டபின், அகவணக்கம் செலுத்தப்படும் நினைவுரைகள் நிகழ்த்தப்படு. இறுதியாக இராணுவ மரியாதையுடன் வித்துடல் துயிலும் இல்லம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மலர்வணக்கம் செய்யப்படுகிறது. அதன்பின் விசேட பீடத்தில் வைக்கப்பட்ட பேழையும், வித்துடலும் மேடைக்கு கொண்டு வரப்பட்டு அதில் வைக்கப்படு அப்போது உறுதிமொழி வாசிக்கப்படுகிறது. உறுதிமொழி வாசிக்கப்பட்ட பின், இராணுவ மரியாதை வேட்டுஒளிகள் தீர்க்கப்பட்டு. தாயகக்கனவுப் பாடல் ஒலித்தபின், அனைவரும் அகவணக்கம் செலுத்திட வித்துடல் புனித விதைகுழிக்கு இராணுவ மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டு விதைக்கப்படும். அனைவரும் கைகளால் மண்ணெடுத்து, விதைகுழியில் போடுவதே வித்துடல் விதைக்கப்படும் நிகழ்வு நடுகல்லானால் மலர் வணக்கம் செய்கின்றனர்.
மாவீரர் துயிலுமில்லத்தில் வாசிக்கப்படும் உறுதிமொழி.
“எங்கள் உயிரோடும் உதிரத்தோடும் ஒன்றாகக் கலந்துவிட்ட இறுதி இலட்சியமாம் தமிழீழத்தாயகத்தை மீட்டெடுக்கும் புனிதப்போரிலே
களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் வேங்கைகளின் வரிசையில்
இங்கு மீளாத்துயிலில் உறங்கிக்கொண்டிருக்கும் வீரவேங்கை……… சேர்ந்துகொண்டான்.
சாவு இவனது பேச்சையும் மூச்சையும் நிறுத்தியதே தவிர இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கியுள்ளது. இவன் ஆணிவேர் அறுபடாத ஆலமரம். மீண்டும் வேர்விடுவான் விழுதெறிவான்.
புதிதாகப்பிறக்கும் புலிகளுக்குள்ளே இவன் புகுந்துகொள்வான்.
நெஞ்சுகனக்கும் தாயக விடுதலைக் கனவோடு எமைப்பிரிந்து செல்லும் இவனின் கனவை நாங்கள் நனவாக்குவோமென்று இவனின் விதைகுழி மீது உறுதியெடுத்துக்கொள்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்று நின்றும் துணிந்து சென்றும் களமாடி வீரச்சாவடைந்த இவ் வீரவேங்கைக்கு நாங்கள் வீரவணக்கத்தைச் செலுத்தும் இவ்வேளையில் எங்கள்; தாயக மீட்புப் போருக்கு மீண்டும் எங்களை தயார்படுத்திக் கொள்கின்றோம்.
ஒருகண நேரம் இந்த வீரனுக்காக குனிந்து கொண்ட எமது தலைகளை மீண்டும் நிமிர்த்திக்கொண்டு புனிதப் போருக்குப் புறப்படுகின்றோம்.
“புலிகளின்தாகம் தமிழீழத்தாயகம்”
(எல்லைப்படை கிராமியப்படை மாணவர்படை) உறுதியுரை. மக்கள் படைக்கட்டுமானத்திற்கான உறுதியுரை.
“எமது தாயகமாம் தமிழீழத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து இழந்துவிட்ட எம் இறைமையையும் இனத்தின் மதிப்பையும் நிலைநாட்ட தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் தலைமையின் கீழ் அணிதிரண்டு இறுதிவரை தேசத்தின் விடுதலைக்காகவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் உண்மையுடன் நின்று உழைப்பேன் என்று இத்தால் உறுதியெடுத்துக்கொள்கின்றேன்.”
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழநிலத்தில் அமையப் பெற்ற மாவீரர் துயிலுமில்லங்களின் பெயர் விரிப்பு:-
- திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- திருகோணமலை வெளியகுளம் மாவீரர் துயிலுமில்லம்.
- திருகோணமலை தியாகவனம் மாவீரர்துயிலுமில்லம்.
- திருகோணமலை உப்பாறு மாவீரர் துயிலுமில்லம்.
- மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம்.
- மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம்.
- மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லம்.
- அம்பாறை உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- முல்லைத்தீவில் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம்.
- விசுவமடு மாவீரர் துயிலுமில்லம்.
- துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- அளம்பில் மாவீரர் துயிலுமில்லம்.
- மணலாறு புனிதபூமி மாவீரர் துயிலுமில்லம்.
- மணலாறு உதயபீடம் மாவீரர் துயிலுமில்லம்.
- களிக்காடு மாவீரர் துயிலுமில்லம்.
- கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.
- முழங்காவில் மாவீரர் துயிலுமில்லம்.
- வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லம்.
- ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லம்.
- பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம்.
- யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம்.
- தென்மராட்சி கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம்.
- வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லம்.
- வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம்.
- மன்னார் முள்ளிக்குளம் மாவீரர் கல்லறைகள்.
2009 இடப்பெயர்வு காரணமாக தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்களின் பெயர் விரிப்பு:-
- தர்மபுரம் மாவீரர் நினைவுத்தடங்கள்
- சுகந்திரபுரம் மாவீரர் நினைவுத்தடங்கள்
- இரணைப்பாலை மாவீரர் நினைவுத்தடங்கள்
- பச்சைப்புல்வெளி மாவீரர் நினைவுத்தடங்கள்
- முள்ளிவாய்க்கால் மேற்கு மாவீரர் நினைவுத்தடங்கள்.
- முள்ளிவாய்க்கால் கிழக்கு மாவீரர் நினைவுத்தடங்கள்
அலங்காரம் (சோடனை)
எமது அமைப்பைச் சார்ந்த வீரச்சாவு, வீரவணக்கக்கூட்டம், துயிலுமில்ல, மாவீரர் விசேட நிகழ்வு வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமூக சமய, வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல், எமது தேசியக்கொடி நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.
எமது அலங்கார முறையும், நிறங்களும்
சிவப்பு, மஞ்சள், கறுப்பு – தேசியக்கொடியைப் பிரதிபலிக்கும், கறுப்பு கரும்புலிகள் தினத்திற்கும் கரும்புலிகள் சம்பந்தமான நிகழ்வுகட்கு மட்டும் கலந்து சோடிக்கலாம்.
வீரச்சாவு கல் நாட்டலுக்கு சிவப்பு, மஞ்சள் துணிகளைப் பாவித்தல் வேண்டும்.
மேசைவிரிப்பு, பீட விரிப்புகளும் சிவப்பு, மஞ்சள் துணியாகவே இருத்தல்வேண்டும். வெள்ளை விரித்தலைத் தவிர்த்தல் நன்று. இச்சோடனைகள் தனித்துவமாக மாவீரர்களின் தற்கொடைத் தியாகம், அமைப்பு இலட்சியங்களை மக்கள் மனங்களில் தோன்றிப் பதிந்து எமது போராட்டத்தின் பால் இணைந்து செயற்பட வழிசமைத்தல்வேண்டும்.
நவம்பர் 27 மாலை நிகழ்வுகள்
தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை
மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக்கூடியதாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.
நினைவொலி எழுப்புதல். (06.05 மணி)
தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்றவகையில் நிறுத்தப்பட்டு அமைதிபேணப்படல்வேண்டும்.
நினைவொலி எழுப்பலும், சுடரேற்றலும்,
27 ஆம் திகதி சுடரேற்றலும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சம காலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும் அந்த நேரத்தை தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும், மக்கள் வெள்ள உணர்வு கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும், வாசலிலும் மாவீரரின் சுடர் ஒளியை அனைவரும் ஏற்றுவர்.
சுடரானது சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப்பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாகவே நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந் நேரத்தில் எங்கும் ஒளிரவேண்டும். சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகளை ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீபங்கள் எரியும் போது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூரவேண்டும்.
இந்த சுடரேற்றும் நிகழ்வானது.
விடுதலைப்பாதைக்கு
உறுதியையும், உணர்வையும்
கொடுத்து நிற்கின்றது.
அகவணக்கம் (6.06மணி)
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 06.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும் இந்நேரம் இல்லங்களிலும், ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தல் வேண்டும்.
அகவணக்கம்
‘தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும்
சிறிலங்கா இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலைசெய்யப்பட்ட மக்களையும், நாட்டுப்பாற்றாளர்களையும், மாமனிதர்களையும், நினைவுகூர்வோமாக.’…….. எனக்கூறி அகவணக்கம் தொடங்க வேண்டும்.
முடிக்கும் போது – ‘நிறைவு செய்வோமாக’
அகவணக்கம் செய்யும் போது இரண்டு முக்கிய விடையங்களைக் கவனிக்க வேண்டும்:
- அக வணக்கம் செய்வதற்கு (1 நிமிடம், 2 நிமிடம் என்று) நேர அவகாசம் கூறக்கூடாது.
- முடிவில் ‘நன்றி’ என்று கூறக்கூடாது. ‘நிறைவு செய்வோமாக’ என்றே கூறவேண்டும்.
அகவணக்கம் செலுத்தப்படும்போது மாவீரர்களின் தியாகங்களையும் ஈகங்களையும் நினைவு கூர்ந்து மனதில் வணக்கம் செலுத்தலாம்.
ஈகைச்சுடரேற்றல் (06.07 மணி)
அகவணக்கம் நிறைவுற்றதும் 06.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படல்வேண்டும் (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)
மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் அதேநேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்குசெய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.
இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராத பொது மக்கள் தமது இல்லங்களில், பொதுஇடங்களில், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரியமுறைப்படி ஈகைச்சுடர் ஏற்றுவர் ஈகைச்சுடர் ஏற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் (மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாது வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறுவகையில் ஒலி, ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல்வேண்டும்.)
மாவீரர் வணக்கப் பாடல்
முதலாவதாக மாவீரர் வணக்கப் பாடல் 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. மாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் வணக்கப் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும்.1991ஆம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இசைவாணர் கண்ணன் வர்ண இராமேஸ்வரன் குழுவினர் மாவீரர் மேடையில் நின்று முதன்முதலில் மாவீரர் நினைவு வணக்கப் பாடலை பாட கோட்டையிலிருந்து சிங்களப்படை ஓடியது. அப்போதைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கேணல்.பானு அவர்களால் அங்கிருந்து அதன் தாங்கியுடனையே கொண்டுவரப்பட்ட மணி மூலம் நினைவொலி எழுப்பப்பட அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் வீரம் பெருமிதம் கவலை என பல்வேறு உணர்வுகளுன் கண்ணீர் மல்க மாவீரரை நினைவு கூர்ந்த அந்த நாளை மீண்டும் நினைவு கூர்கையில் மெய் சிலிர்க்கின்றது.
மாவீரர்கள் விபரம்
2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழ் அனுஷ்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கரும்புலிகள் 259 உள்ளடங்குகின்றனர். எல்லைப்படை மாவீரர்கள்- 281 இதில் பெண்கள்-05 , ஆண்கள்-276 ஆகும் . காவற்து மாவீரர்கள் – 50 இதில் பெண்கள்-03 ,ஆண்கள்-47 ஆகும் . மாமனிதர்கள் -19 மற்றம் நாட்டுப்பற்றாளர்கள்-480 இதில் பெண்கள்-28, ஆண்கள்-452 ஆகும் (31-10-2008 மாவீரர் பணிமனை மாவீரர் நாள் விரிப்பு) 31-10-2008 முதல் 27-11-2008 வரை 276 மாவீரர்கள் உள்ளடங்களாக 2008 மாவீரர் எழுச்சி நாள் வரையில் 22390 மாவீரர்கள் எனப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது. இதன் பின்னர் ஏற்பட்ட இறுதிப் போர்க்கால இடப்பெயர்வு காரணமாக தற்காலிக நினைவுத் தடங்களாக மேலும் துயிலும் இல்லங்கள் 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் இறுதிவாரம் வரை 6 தற்காலிக மாவீரர் நினைவுத்தடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்பெற்றது. அதற்கு பிட்பட்ட காலப் பகுதியில் போராளிகள் வீரச்சாவடைகின்ற இடங்களில் மாவீரர்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டது. வீரச்சாவடையும் மாவீரர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ளலாம்.
மாவீரர் குடும்ப கௌரவிப்பு
தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி, புதிய புறநானூற்று புலிகளாய் வரலாற்று தாயின் மடி உறங்கும் மாவீரச்செல்வங்களை மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப் படுகிறார்கள். முன்னர் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. தற்போது சில ஆண்டுகளாக புலம்பெயர் நாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
துயிலுமில்லங்களை சேதப்படுத்தல்
மனித நாகரிகத்தின் ஆரம்பம் தொட்டு இன்று வரையான அதன் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியில் நாகரிகங்களை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு வரலாற்றுத் தடங்களை பதித்தவர்கள் எங்கள் மாவீரர்கள். தமிழீழத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் எம் மக்களை மட்டும் அழிக்கவில்லை. ஊடாக உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள். எம் வீரர்களின் துயிலும் இல்லங்களையும் இன்று சிங்கள படைகளினால் ‘புல்டோசர்’ போட்டு கிழறி எறிந்துள்ளார்கள். வீதிகளில் அங்காங்கே இருந்த மாவீரர்களின் நினைவுச் சின்னங்களை உடைத்து எறிந்துள்ளார்கள்.
துயிலும் இல்லங்கள் பக்கமே போக கதிகலங்கி நின்ற படையினர் இன்று புலிகள் அழிக்கப்பட்டு விட்டதென்ற மமதையில் அரக்கத்தனமான வேலைகளை செய்கின்றார்கள். எதிரியாக இருந்தாலும் இறந்தவரின் உடலை அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற உலக மரபு இருந்தும் புலிகளின் இறந்த போராளிகளின் உடல்களை தெருத்தெருவாக இழுத்துச்சென்று அசிங்கப்படுத்தி உலக மரபையே மீறினது சிங்கள அரச படைகள். இப்படிப்பட்ட படையிடமா துயிலும் இல்லங்களின் மகிமை என்னவென்று கேட்கமுடியும் கேட்பதும் மகா தவறு.
தமிழ்மக்களைப் பாதுகாத்தும் அவர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்தவர்கள் மாவீரர்கள். மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசாங்கத்தால் சிதைத்து விட முடியாது. தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் தமிழ் மக்களுக்காக இந்த மாவீரர்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் ஏராளம் ஏராளம் இலகுவில் அறிந்து கொள்ள முடியா தியாகங்கள் அவை. தமிழ்மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த இந்த மாவீரர்களைக் காலம் காலமாக நினைவு கூர்ந்து பூசிக்க வேண்டியது தமிழர்களாய் பிறந்த அனைவரினதும் கடமை.
தாயகத்தில் மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது. தாயகத்தில் இருந்த அத்தனை மாவீரர்களின் நினைவாலயங்களும் அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டு விட்டன. ஈழத்தில் மாவீரர்களை நினைவு கூருவதற்கு சிங்களப் பேரினவாத அரசு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்தக் கட்டத்தில் மாவீரர்களை நினைவு கூரும் பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் மானத்தமிழ் மக்களிடம் தான் உள்ளது. மாவீரர்களின் வரலாற்றைக் கட்டிக் காப்பது தொடக்கம் மாவீரர் எழுச்சி நாள் பாரம்பரியங்களை அழிந்து விடாமல் காக்கும் பொறுப்பும் இவர்களுடையதே. இதற்கு ஒன்றுபட்ட வேலைத்திட்டங்களே அவசியம்.
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் (நவம்பர்-27)
மனித வரலாற்றில் வீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக் கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் இன ஆக்கிரமிப்புக்கும் இனப் படுகொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கு இனவழிப்புக்கும் எதிராக சுதந்திர தமிழீழ விடுதலையை அடிநாதமாகக் கொண்டு அதற்கான விடுதலைப் போரை முன்னிறுத்தி தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். ஆயுதங்கள் மே 2009-இல் மௌனிக்கப்பட்ட பின்னர் நிலத்திலும் புலம்பெயர் தமிழர்களினாலும் தமிழ்நாட்டு இனமானத் தமிழர்களினால் மாவீரர் எழுச்சி நாள் விடுதலையினை அறைகூவிநிற்கின்றது
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் மாவீரர் மாண்புகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி தமிழ்த் தேசிய உணர்வை மேம்படுத்துவதற்காகவும் மாவீரர் நாள் தொடர்பான பூரண தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் வருடாவருடம் நவம்பர் 27 இற்கு முதல்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களை திகதிகளுடன் குறிப்பிட்டு அல்லது குறித்த நாட்டின் மாவீரர் தினம் கொண்டாடப்பட முன்பு மூன்று நாட்களைக் குறிப்பிட்டு அந்நாட்களில் மாவீரர் தொடர்பான விளக்கவுரைகளை முன்னெடுத்தல்வேண்டும். குறிப்பாக (மாவீரர் சாதித்த அருஞ்செயல்கள், தியாகங்கள், மாவீரர் வரலாறுகள் போன்றவற்றை விளக்குவதன்மூலம் இளைய தலைமுறையினரூடாக எமது மாவீரர்கள் தியாகங்கள் கட்டிக்காத்தல்வேண்டும்.
மாவீரர் எழுச்சி நாள் மண்டப நிகழ்வு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்.
ஆரம்ப நிகழ்வுகள்
01.பொதுச்சுடர்
02.தேசியக்கொடி ஏற்றல்
03.ஈகைச்சுடர்
04.மலர்வணக்கம்
05.அகவணக்கம்
06.உறுதியுரை
07.நினைவுரை
எமது மாவீரர் நிகழ்வுகள் அமைப்பு நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைச்சுடர் ஏற்றுதல் கட்டாயமாகும். மங்கள விளக்கு ஏற்றக்கூடாது.
தமிழீழ மாவீரம் தொடர்பான சொல்லாடல்கள்:-
வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள். பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.
முகையவிழ்த்தல் – துயிலுமில்லம் ஒன்றை வித்திட்டு புதிதாய் தோற்றுவித்தல் (கல்லறைகள் மற்றும் நினைவுக்கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்ப வடிவத்தாலும் தோற்றத்தாலும் நிறத்தாலும் மாறுபட்டன. இவையெல்லாம் அந்தந்த கோட்ட மாவீரர் பணிமனைப் பொறுப்பாளரால் மேற்பார்வையிடப்பட்டன. அவரின் உத்தரவின் பேரில்தான் இவையாவும் வடிவமைக்கப் படுவதுண்டு. இதுவே வழக்கம். இப்படி ஒரு மாவீரர் துயிலுமில்லம் தோன்றுவதை புலிகள் ‘முகையவிழ்த்தல்’ என்று குறிப்பிடுவார்கள்)
துயிலுமில்லம் – மாவீரர்களது வித்துடல் விதைக்கப்பட்டு செப்பனிட்டு பேணிக் காக்கப்பட்ட மயானம் இச்சொல்லானது ‘துயிலும் இல்லம்’ என்று பிரித்தும் எழுதப்படுவதுண்டு. ஆனால் துயிலுமில்ல முகப்பில் ‘துயிலுமில்லம்’ என்று சேர்த்தே எழுதப்பட்டிருக்கும்!
ஒலிமுகம் – மாவீரர் துயிலுமில்ல முகப்பு
போரிலக்கிய மேற்கோள்: ” ஒலிமுகந் தோறும் புலிமுகம் பார்த்து’ (மாவீரர் நீங்களே )
நினைவொலி – நவம்பர் 27 அன்று சரியாக மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்காக எழுப்பப்படும் ஆலய மணியோசை
மாவீரர் நினைவு மண்டபம் – மாவீரர்களின் வித்துடலிற்கான பொது மக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்
வீரவணக்க கூட்டம் – அங்கு நடைபெறும் கூட்டத்தை குறித்த சொல். இன்று இச்சொல் தமிழ்நாட்டில் பரவலாக கையாளப்படுகிறது.
அகவணக்கம் – வீரச்சாவடைந்த வீரனிற்கு தலை கவிழ்ந்து செலுத்தப்படும் வணக்கம்.
சுடர் வணக்கம் – மாவீரரிற்காக சுடரேற்றி செலுத்தப்படும் வணக்கம்
மலர் வணக்கம் – மாவீரருக்கு மலர்தூவி செலுத்தப்படும் வணக்கம்
வீரவணக்கம் – வீரச்சாவடைந்த வீரனிற்கான இறுதி அஞ்சலியில் செலுத்தப்படும்
வளைவுகள் – மாவீரர் படங்கள்/களமுனை படங்கள் தாங்கிய அலங்கார வளைவுகள்
புலிவீரன் – விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்
மாவீரர் – சமரில் மரணித்த புலிவீரன்
நினைவுக்கல் – முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் அ ல்லா கிடைக்கா இடத்து உரியவர் குறிப்புகளோடு நினைவாய் எழுப்பப்படும் கல்.
அதே சமயத்தில் வித்துடல் ஒரு துயிலுமில்லத்திலும் அவருக்கான நினைவுக்கல் இன்னுமோர் துயிலுமில்லத்திலும், வைப்பது புலிகளின் இன்னுமொரு வழமையாகும். தென்தமிழீழ மாவீரர் பலரின் வித்துடல்கள் விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்திலும், முள்ளியவளை துயிலுமில்லத்திலும், விதைக்கப்பட்டிருந்தன.
கல்லறை – 6 அடி நீளத்தில் இருக்கும் முகவரி அறிந்த மாவீரனது வித்துடல் கொண்ட கல்லால் கட்டப்பட்டு அழகுற வடிவமைக்கப்பட்டு உரியவர் குறிப்புகள் தாங்கிய உடையவர் உறைவிடம்.
மாவீரர் பீடம் – நினைவுக்கற்கள் மற்றும் கல்லறைகளை ஒருங்கே குறிக்கும் சொல்
ஈகைச்சுடர் – பொதுமக்களால் ஏற்றப்படுவது
பொதுச்சுடர் – கட்டளைத் தளபதி தளபதி பொறுப்புநிலைத் தலைவராலும் ஏற்றப்படுவது
நினைவுச்சுடர் – இறந்தோரை நினைத்து ஏற்றப்படும் சுடர். (கடலிலே வீரச்சாவடைந்தோருக்கு கடலில் ஏற்றப்படும் சுடரினை நினைவுச் சுடர் என்று கடற்கரை ஓர மக்கள் அழைப்பதுண்டு.)
விதைகுழி – துயிலுமில்லத்தில் வித்துடல் விதைக்கப்படும் 6 அடி நீள குழி
வித்துடல் – மாவீரனது பூதவுடல்/ சடலம்
வித்து – விதைக்கப்படும் /விதைக்கப்பட்ட வித்துடல்
விதைத்தல் – வித்துடலை விதைத்தல்
தியாக சீலம் : தியாகசீலம்” என்ற சொல்லாடல் விடுதலைப் போராட்டத்தில் தினமும் பயன்பாட்டில் இருந்ததை அனைவரும் அறிவர். மாவீரர்களோடு பின்னி பிணைந்து விட்ட இச்சொல்லாடலை மூன்று சந்தர்ப்பங்களில் நாம் பயன் படுத்தி வந்தோம். வீரச்சாவடைந்த போராளிகன் உடலங் களை தூய்மைப்படுத்தி அவர்களின் உடலங்கள் கெட்டுப் போகாத அளவுக்கு தயார்படுத்தி ( அதாவது இன்போம் பண்ணுவது என்று மக்கள் கூறுவது) இராணுவ உடை அணிந்து சந்தனப் பேழையில் அவர்களை கிடத்தி உறவினர்களிடம் கையளிக்கும் வரை அத்தனையையும் செய்யும் இடமான “தூண்டி” என்று ஆரம்ப நாட்களில் அழைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் பாசறையை பின்னாட்களில் புனிதத்துவம் மிக்க பெயரான ” தியாகசீலம் ” என்று உணர்வுகளில் அணைத்துக் கொண்டோம்.
முகம் மறைக்கப்பட்ட மறைமுக போராளிகளின் வித்துடல்களை விதைத்த போது அல்லது நடுகற்களை நட்ட போது அவற்றை தியாக சீலம் என்றே அணைத்துக் கொண்டோம். (பல இரகசிய காரணங்களுக்காகவே அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், முகமறியா மறைமுகங்களாய் அவர்கள் தூங்கியதும் வெளிப்படையான உண்மை. தமிழீழ விடுதலைக்கு பின்பான காலம் அவர்களின் முகம் யார் என அடையாளப் படுத்தப் பட்டிருக்கலாம்.)
தவிர்க்கவேண்டியவை
அஞ்சலி, மௌன வணக்கம், மலரஞ்சலி, மங்கள விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம், (அகவணக்கம் ஒருநிமிடம் இருநிமிடம் எனக்குறித்துக் கூறுதல்.)
சேர்க்கப்படவேண்டியவை
வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைச்சுடர், வீரவணக்கவுரை, வீரச்சாவு வீரவணக்கக்கூட்டம்.
முக்கியவிடயம்.
மாலை 6.00 மணிக்குப் பின்னர் எந்த நிகழ்விற்கும் தேசியக்கொடி ஏற்றுதல் தவிர்க்கப்படவேண்டும் இரவில் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு முடிய இறக்குதல்வேண்டும். இரவில் தேசியக்கொடிக்கு வெளிச்சம் இருத்தல்வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தேசியக்கொடியைக் கம்பத்துடன் மடித்துக்கட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும். தேசியக்கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு இருக்கையில் (ஸ்ரூலில்) வைக்கவேண்டும்.
எதிரியானவன் களத்தில் அரக்கத்தனமான வேலைகளை செய்யும் அதேவேளையில் புலத்திலும் பல நாசகார வேலைகளைச் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளான். சில ஈனத் தமிழர்களும் அவனுக்கு விலைபோய் விட்டார்கள். எட்டப்பனை அடையாளம் கண்டு அவனுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடத்தை அளித்து இந்தியா, சிங்கள அரசின் முகத்திரையை கிழிக்கும் முகமாக வேலைத்திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஈழ விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் தமிழரின் வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள் காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். தமது மண்ணிலே ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். தமது இனத்தின் சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள் அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக தமிழரின் இதயக் கோயிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்பவன். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய விடிவுக்காகவும் விமோசனத்திற்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன் வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று பிரபாகரன் பெருமிதத்துடன் கூறினார். இவரின் கூற்று பொய்யாகிவிடக் கூடாது.
மறுபுறத்தில் எமது மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியற்கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு என பலதரப்பட்ட தளங்களில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக புதிய அரசியல் யாப்பு என்ற வடிவத்தை நோக்கி பேரினவாத அரசு நகர்ந்து வந்திருக்கின்றது. தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் வேட்கையை நிறைவு செய்யாத, பேரினவாத சக்திகளிடமிருந்து எவ்வித பாதுகாப்பையும் தமிழருக்கு வழங்காத இந்த அரசியல் யாப்பைத் தமிழ்மக்களின் ஆதரவோடு நிறைவேற்றிவிட மிகப்பெரிய சதித்திட்டம் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தமிழ்மக்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சிங்களப் பேரினவாத அரசின் இந்த நிகழ்ச்சி நிரலிற்கு தமிழ்த் தலைவர்கள் என்று கூறுபவர்கள் பலியாகிவிட்டனர். நெருக்கடி நிறைந்த இந்தச் சூழலில் சுயலாப அரசியல் சக்திகளையும் அரசியல் சந்தர்ப்பவாதங்களையும் இனங்காணத்தவறினால் மாபெரும் வரலாற்றுத் தவறை இழைத்து வருகின்றார்கள்
சிறீலங்கா இனவாத அரசினால் எமது வரலாற்று நினைவிடங்களையும், இணையங்களில் வெளிவரும் வரலாற்று ஆவணங்களையும் இல்லாது அழிப்பதில் முனைப்புடன் செயற்பட்டுவந்தாலும் விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது. தமிழன் மலையாக எழுந்து நிமிர்ந்து தேசிய எழுச்சிக்கு மூச்சாகி நின்ற மாவீரச்செல்வங்களின் ஈகம் ஈழவிடுதலைக் காவியத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு மாவீரர் சுவடுகளும் நெருப்புவரிகளால் எழுதப்பட வேண்டியவை. மாவீரர்களின் அளப்பரிய ஈகத்தின் ஆத்மசக்தியே இன்றளவும் உலகம் வாழ் தமிழர்களை இயக்கிக்கொண்டிருக்கிறது. அச்சக்தியே தமிழின அழிப்பின் மீதான உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது. எமது மாவீரர்களின் சுதந்திர தாகம் சாவுடன் தணிந்து போக வில்லை.
விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்ததேசங்களிலும் வீச்சுப்பெற்றுள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகம், மாவீரர்களின் உயிர்த்தடங்களில் தமிழீழத் தேசித்தலைவர் அவர்களின் சிந்தனை வழியில் மாவீரர்களின் இலட்சியக் கனவுகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உள்ளது.எமது தாயக விடுதலையை நாம் பெறுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
எத்தனையோ தியாகங்கள்!
எத்தனையோ அர்ப்பணிப்புகள்!
இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!
தம்மை ஆகுதியாக்கியவர்கள்!
இவர்களின்வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே
இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.
எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.
-தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தணை
உறுதிமொழி
தமிழீழத்தாய் நாட்டிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நினைவு கூரும் இப் புனித நாளில் ஈழத் தமிழனாகிய நான் உலகின் எத்திசையில் வாழ்ந்தாலும் தமிழீழமே எனது இலட்சிளம் என்றும் இந்த இலட்சியத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனியரசான எனது வரலாற்று மண்ணின் மீட்சிக்காக அயராது உழைப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றேன்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
“தமிழரின் தாகம் தமிழ்ழீழ தாயகம்”