எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்
– தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கத்தின் 25.12.2005 அன்று மட்டு நகரில் அமைந்துள்ள மேரி தேவாலயத்தில் நத்தார் பண்டிகை திருப்பலியின்போது தேச விரோத கும்பலினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகிய மாமனிதரின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.
ஈழத்தமிழர்களின் மனிதவுரிமைக் காவலனாகசர்வதேச அரங்கில் மிகவும் துணிவுடன் ஓங்கி ஒலித்த குரல் மனித வாழ்வின் விடுதலைக்காக யேசுபிரான் பிறந்த நாளில் தமிழ் இன விடுதலைக்காக குரல் கொடுத்த ஒரு தமிழ் பிரதிநிதி, இறை வழிபாட்டுத் தலமொன்றில் இலங்கை அரச படைகளின் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்த தேசத்தில், ஜனநாயகத்திற்கும் மனித உரிமைக்கும் எத்தகைய இடம் உண்டு என எடுத்துரைக்கிறது.
தன் வாழ்வு துறந்து பிறர்க்கென வாழும் பெருந்தகைகளால் வாழும் இவ்வுலகென்பார்கள். எத்தனை அழிவுகளைச் சந்தித்தபோதும் இந்த மண்வாழ்கிறதென்றால் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற மாமனிதர்களது தியாகத்தாலேதான் என்றால் மிகையாகாது. தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது. பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தமக்கென முயலா தோன்தான்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே!
மேற்படி கூற்றுக்கு இப் புறநாநூற்றுப் பாடல் சான்று பகிர்கின்றது.
யாழ்ப்பாணத்தில் 1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம்நாள் இந்த மண்ணில் தோற்றம் பெற்றவர் ஜோசப் பரராஜசிங்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மட்டு மண்ணில் நாடாளுமன்ற உறுப்பினராக வாழ்ந்ததுடன் வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்தார்.
1952 களில் தன்னுடைய 18 ஆவது அகவையில் தந்தைசெல்வாவின் அரசியல் பாசறையில் இணைந்துகொண்டார். கொள்கை கோட்பாடுகள் நிறைந்த இலட்சியம் கொண்டது தமிழ்த் தேசிய அரசியல். இது மலர்ப்படுக்கை அரசியல் அல்ல. மாறாக இது வோர் முட்படுக்கை அரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டே நெருப்பாற்றைக் கடக்கமுன்வந்தவர்.
தனிச் சிங்களமொழிச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு தந்தைசெல்வா தமிழ்த் தேசம் தழுவிய மிகப்பெரிய அறவழிப்போரை ஆரம்பித்தார். அன்றைய நாள் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திருமண தினமாக விருந்தபோதும் அந்த அறப்போரில் களமாடி மகிழ்ந்தாரென்றால் அவர் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது. ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பாரிய சவால்களை இவ்வரசியல் வாழ்வில் எதிர்கொண்டார். 1972 ஆம் ஆண்டு இலங்கையைக் குடியரசாக்கியது ஈழத்தமிழினத்தை அரசியல் அனாதையாக்கியது.
அரச ஊழியர். சினிமாத் துறை வாணிபத்தில் சிறப்புற்று விளங்கியவர். ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமூகப் பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (திருமதி சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.
ஒரு பத்திரிகையாளராக ஜோசப் பரராஜசிங்கம் செயற்பட்டவர். இலங்கை அரசுகளின் கிழக்கு மண்மீதான ஆக்கிரமிப்பு நெருக்கடிகளையும் மட்டக்களப்பின் வாழ்வையும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் ஜோசப் பரராஜசிங்கம் வெளிப்படுத்தினார். எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வுகண்டவர் .
அறப்போர் தீவிரமடைந்தது. அறப்போரின் வெக்கை தாங்கமுடியாது அப்போதிருந்த சிறிமாவோ அவர்களின் அரசாங்கத்தின் மட்டக்களப்பு அரசியல் அதிகாரி ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களோ அரசாங்கப் பதவியை உதறித் தள்ளி முழுநேர அரசியலுக்குள்காலூன்றினார். தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர். இருமுறை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த ஜோசப், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் அங்கம் வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருந்தபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து அவர்கள் கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டார்.
அதனை அடுத்து அவர் ஆற்றிய அளப்பரிய சேவையினால் 1994 ஆம்ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்கு மேல் பெற்றுமட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். தொடந்து தேர்தல்களில் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக 2004 இலங்கை நாடாளுமன்றத் பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே என்பதுடன் பல மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் என்பதில் ஐயமில்லை. மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற ஒரே ஒரு தலைவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.
இது இவரின் சாணக்கிய அரசியலையும், மொழி பாண்டித்தியத்தையும் காட்டுகின்றது குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 ஜூன் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காட்டியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவரே
2004 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களையெல்லாம் விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அணியினர் தங்கள் பகுதிக்கு அழைத்தனர். “வடகிழக்கென்ற தமிழ்த்தேசிய அரசியல் இனி எமக்கு வேண்டாம். மட்டக்களப்பென்ற அளவோடு இனி அரசியல் அமைய வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள்.
“இயக்கங்கள் உருவாகும் முன்பே தந்தை செல்வாவின் தலைமையையேற்று அரசியலுக்குள் வந்தவர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். வடகிழக்கு என்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது” என்று ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் பதிலுரைத்தார். அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளானார். இதற்கெல்லாம் சற்றும் மசியாதவராகத் தேர்தலில் போட்டியிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்த ஜோசப் பரராஜசிங்கத்தை அன்றைய அரசு பலியெடுத்தது. தமிழ் தேசியத்தின் உண்மைக் குரலாக, தமிழ் மக்களின் விடுதலை உணர்வை, தெற்கிற்கும் உலகிற்கும் கூர்மையாக எடுத்துரைத்த பலர் அழிக்கப்பட்டனர். அப்படியான குரல்களில் ஒன்றே மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் குரல்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் 2005 மார்கழி 25 அன்று மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் தமிழ் நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலிப் பூசையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் வந்த இலங்கை அரசின் துணைப்படையை சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர்.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.
அன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.
மக்கள் பிரதிநிதி ஒருவர், மக்களுக்காக ஜனநாயக ரீதியாக குரல் கொடுத்தமைக்காக அநியாயமாக பலிகொள்ளப்பட்டுள்ளார். இந்தக் கொடுஞ்செயலை செய்த குற்றவாளிகளை என்ன செய்வார்கள்? இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகள் நீதியை வழங்கவா? அல்லது சர்வதேச நெருக்கடிகளை தவிர்க்கவா என்பதை காலம் நிரூபிக்கும்.
ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?
ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?
குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?
அந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.
மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.
71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். தமிழ் முஸ்லிம் உறவை கட்டியெழுப்ப செயற்பட்ட அவருடைய ஆழமான பங்களிப்பை எமது மக்களுக்கு கொண்டு சென்று எங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2015ஆம் ஆண்டு 10 வருடங்களின் பின்னர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேகத்தின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவச் சிப்பாய் மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைதுசெய்யப்பட்டார்கள்.
சுமார் 5 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவ்வழக்கில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரே கடந்த 2019 நவம்பர் 24ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு 2021 தை மாதம் 11ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ்வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்ட மாஅதிபர் திணைக்களம் எதிர்பார்க்க வில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் 2021 தை மாதம் 13ஆம் திகதி இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்
இதற்கமைய குறித்த பிரதிவாதிகள் ஐவருக்கும் எதிரான வழக்கு? மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சூசைசதாசனினால் தள்ளுபடி செய்யப்பட்டு, குறித்த ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர். கொலை செய்யச் சொன்னவர்களும், செய்தவர்களும் இன்னும் இலங்கையில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேதனையான ஒரு விடயம்.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை இனப்படுகொலையின் ஒரு வடிவாகத் தான் அமைந்துள்ளது. அந்தவகையில் அவருக்கும், தமிழ்த்தேசத்திற்கும் நாங்கள் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமையாக ஈழத்தில் நடந்த இனப் படுகொலைக்கு நீதி கேட்கின்ற அந்த வரலாற்றுக் கடமையை முன்கொண்டு செல்வோம்
எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
-தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
சுயநலவாழ்வைத் துறந்து, பொதுநல சேவையை இலட்சியமாக வரித்து, அந்த உயர்ந்த இலட்சியத்திற்காக உறுதியோடு உழைத்த ஒரு உத்தம மனிதரை இன்று தமிழர்தேசம் இழந்துவிட்டது.
தமிழீழ மண்ணினதும் தமிழீழ மக்களினதும் விடிவிற்காக ஓயாது ஒலித்த ஒரு உரிமைக்குரல் இன்று ஒடுங்கிவிட்டது. பகைவனின் கோழைத்தனமான கோரமான தாக்குதலுக்கு ஒரு மகத்தான மனிதர் பலியாகிவிட்டார். இது தமிழீழ விடுதலை வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் துயர நிகழ்வு.
திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர், அசாத்தியமான குணவியல்புகள் கொண்டவர். இனிமையான பேச்சும், எளிமையான பண்பும், பெருந்தன்மையான போக்குமே அவரது ஆளுமையின் சிறப்பியல்புகள். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான அரசியல்வாதி. தமிழீழ மக்களால் பெரிதும் போற்றப்பட்ட சிறந்த மனித உரிமைப் போராளி. அனைவரையும் கவர்ந்த ஒரு தமிழினப் பற்றாளர். இவரது சாவு தமிழர் தேசத்திற்கு என்றுமே ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறைக்குள் வாழ அவர் என்றும் விரும்பியதில்லை. இந்த அடக்குமுறைக்குள் தமிழீழ மக்களது வாழ்வு சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார்.
இந்த அடக்குமுறையிலிருந்து தமிழீழ மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலைபெற்று சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரிந்துகொண்டார். இந்த இலட்சியத்தால் உந்தப்பெற்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு என்றும் உறுதுணையாக நின்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் இலட்சியத்தையும் முழுமையாக முழுமனதுடன் ஏற்று தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் பல்வேறு அச்சுறுத்தல் களுக்கும் ஆபத்துக்களுக்கும் மத்தியில் மிகுந்த துணிவுடன் தமிழ்த் தேசியத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் பல்வேறு வழிகளில் கைகொடுத்துதவினார்.
மட்டக்களப்பு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் நிறுவுனர்களில் ஒருவராகவும் தமிழீழ மக்களது உரிமைக்காக இடையறாது தொடர்ந்து உழைத்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் உண்மைகளையும் உலகுக்குப் பரப்புரை செய்தார். அன்னார் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை, என்றுமே பாராட்டுக்குரியவை.
திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப்பணியை கௌரவிக்கும் முகமாக “மாமனிதர்” என்ற அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.
சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகனாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர் என்றும் வாழ்வார்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப்புலிகள்.
- நிலவன்.