‘இளையராஜா’ – என்று பெயரிடப்பட்ட புதிய ஒலிப்பதிவுக் கூடத்தின் திறப்புக்காக சென்ற ஆண்டில் (03.02.2021) எழுதப்பட்டது.
பரவெளிவண்டி போகுதுபா ரங்கே…
– தங்கம்
ஆரோசை யமரோ சையின்
நெளி சுழி வளைவு
இசை யென லாகுமோ?
தொடக்கமும் முடிவும்
விண்டுணர வொண்ணா
பேரண் டத்தின்
பேரொழுங் கன்றோ
உன் னிசை;
ராசாதி ராசாவின்
இன் னிசை.
எல்லை யற்றதாய்
எங்குங் கிடக்கிற,
அண்ட பேரண்டம்
யாவும் அடக்கிய –
பரவெளியில்
எண்ணித் தொலையாத
ஆற்றல் வடிவங்கள்
கோடான கோடிக் கோடி கோடிகள்.
கோடான கோடிக் கோடி கோடிகள்
இயக்க முயக்கம் கொள்ளுதலும்
ஈர்த்து விலக்கித் துள்ளுதலும்
பிணைப்பு உற்றுப் பின்னுதலுமே
பேரின்ப லயமாகும்.
சிறிதென்றும் பெரிதென்றும்
உள்ளதென்றும் இல்லதென்றும்
இருளென்றும் ஒளியென்றும்
கறுப்பென்றும் வெளுப்பென்றும்
தண்ணென்றும் கொதிப்பென்றும்
இங்கென்றும் அங்கென்றும்
குறுக்கென்றும் நெடுக்கென்றும்
நேரென்றும் வளைவென்றும்
துகளென்றும் பருவென்றும்
உருவென்றும் அருவென்றும்
பொருளென்றும் அருளென்றும்
விசையென்றும் அசையென்றும்
திசையென்றும் திக்கென்றும்
இயக்கமென்றும் மயக்கமென்றும்
உள்ளென்றும் வெளியென்றும்
ஒடுக்கென்றும் விரிவென்றும்
வந்துற்றும் போயுற்றும்
தற்சுழற்சியும் அண்டிச்சுற்றுமாய்
முரண்களோ முரண்க ளென்று
எங்கெங்குமாய் .. யிருக்கிற
யாவையுமாய்.. யிருக்கிற
எப்பொழுதுமாய் .. யிருக்கிற
பே.. ரிருப்பின்
சீர்லய மன்றோ
இசைமை
யெனப்படுதல்.
உன்னிசை செவியொழுகு போழ்திலெல்லாம்
ஒலியென்று வுணர்ந்ததில்லை யோர்பொழுதும்;
துய்த்ததெல்லாம் யாதென்னில்…
ஒலியற்ற பேரமைதி,
பிசகில்லாப் பெருலயம்,
பிளவற்ற ஓருணர்வு..
ஓ…
தானற்ற பெருநிலை.
ஒலி
உமக்கொரு
பயணவண்டி.
ஒலி
கொண்டு
பயணவண்டி
செய்து
எமை
ஏற்றி
செல்கிறா……..ய்
முரண்களோ முரண்க ளென்று
யாவையு மாய்தோன்றி மறைகிற
எங்கெங்கு மாய்ததும்பி வழிகிற
எக்காலமு மாய்நிகழ்ந்து நிலைக்கிற
பே ரிருப்பின்
ஈர்த்து விலக்கும் முரண் கூறுகளை
உட்பிணைக்கிற இழைத் தடங்களே
வண்டித் தடங்க ளாகிட
ஓடு கிறதுன்
பயணவண்டி.
பயணத் திசையோ
ஒருதிசை யன்று
வேறு வேறு வெளிகளில்
வேறு வேறு தூரங்களில்
வேறு வேறு திசைகளில்
வேறு வேறு காலங்களில்
நிலைபெற்று
நிலைமாற்ற முற்று
அழிந்து தோன்றுகின்ற
சாகா முரண்களின்
இடைவெளிக ளெங்கனும்
திசையறுத்து எத்திக்கும்
பரவெளியில் ஓடித் திரிகிற
பிணைப்பாற்றல் வண்டியல்லோ
உன்னிசை வண்டி.
பிணைப்பாற்றல் வண்டியின்
பாதையைத் துண்டிக்க
ஏலுமோ !
அண்ட பேரண்டஞ் சிதறிடாது
பிணைத்துப் பின்னுகிற இசைமையே
உனதிசைக் கோர்வைகள்
என்றான பின்னர்,
இடங்கட் டுண்டு –
‘கட்டுயிடம்’ என்றாகும் சிற்றிடம்
பிணைப்பு லயத்தின் பாதையறுத்திடல்
ஆகுமோ!
கட்டிடம் என்கிற
பிளவெளியி லல்ல;
பிளவுக ளில்லா
பரவெளியி லல்லோ
பயணத் தடங்கள்.
உனது வண்டி
பிணைப்புயிழைத் தடங்கள் மீதூர்ந்து
பெருலயத்தி லோடுகின்ற
பரவெளிவண்டி யல்லோ…
- தங்கம்.