இன்று, பட்டாம்பூச்சிகள் தினம்!
இவை தென்றல்போல் அணைப்பவை. சில நேரங்களில், புயல்போல் அடிப்பவை. “தொடுவானம்தான் உங்களது இலக்கா?” என்று கேட்டால், “ பறத்தலே எங்கள் இலக்கு. முதலில் எங்களைப் பறக்கவிடுங்கள்! “ எனச் சொல்லிவிட்டுச் சிறகடித்துச் செல்லும் இயற்கையின் குழந்தைகள். இப்பட்டாம்பூச்சிகள் தாங்கள் வாழும் நிலத்திற்கேற்ப, பல வகைகளாக பல வண்ணங்களில் இருக்கின்றன. குங்குமப்பொட்டு வைத்துக் கொண்டை போட்டிருக்கும் பட்டாம்பூச்சிகள், ஜீன்ஸ் காற்சட்டை அணிந்து கண்ணாடி போட்டிருக்கும் பட்டாம்பூச்சிகள், பாம்புச்சடையிட்டுப் பின்னி நடனமாடும் பட்டாம்பூச்சிகள் என ஏராளமான பட்டாம்பூச்சிகள் இவ்வுலகெங்கும் பரவிப் பறந்துகொண்டிருகின்றன. இன்று நாம் பார்க்கப்போகும் பட்டாம்பூச்சிகள் அரேபியப் பட்டாம்பூச்சிகள். வெளிறிய பாலைவனத்திற்கிடையில் கருப்புடை அணிந்து மிதக்கும் வஞ்சமில்லாப் பட்டாம்பூச்சிகள்.
ஒவ்வொரு பட்டாம்பூச்சியினத்திற்கும் பல கதைகள் உண்டு. இந்த அரேபியப் பட்டாம்பூச்சிகளுக்கும் அப்படித்தான். இவற்றின் கதைகளாக நாம் இன்று பார்க்கப்போவது இயக்குநர் ஹைஃபா அல் மன்சூரின் Wadjda மற்றும் இயக்குநர் ஜாபர் பஹானியின் Offside ஆகிய படங்களைத்தான்.
Wadjda திரைப்படத்தில் மிதிவண்டி வாங்கத் துடிக்கும் சிறுமிப் பட்டாம்பூச்சி, Offside திரைப்படத்தில் கால்பந்தாட்ட அரங்கைப் பகிர விரும்பும் இளம்பட்டாம்பூச்சிகள். (இனிவரும் இடங்களில் கட்டுரையின் தெளிவிற்காக சிறுமிப் பட்டாம்பூச்சியை ‘சிறுமி’ என்றும், இளம் பட்டாம்பூச்சிகளை ‘இளம்பெண்கள்’ என்றும் அழைப்போம்). இந்த இரண்டு படங்களும் வெவ்வேறான கதைக்கோணங்களைக் கொண்டிருந்தாலும் இவற்றுள் ஒரு பொதுத்தன்மையைக் காணமுடிகிறது. Wadjda திரைபடத்தில் அந்தச் சிறுமி ஏன் மிதிவண்டி வாங்கத் துடிக்கிறாள்? அங்கே பெண்களுக்கு மிதிவண்டி ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. Offside -லும் இதே கதைதான். இங்கே ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் கால்பந்தாட்ட அரங்கில் பங்கேற்பதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. இங்கே மதம் ஓர் இயற்கை நிகழ்வுக்கான தொடக்கத்தை முடிச்சிடுகிறது.
சிறகுகள் இருக்கும் எல்லாப் பட்டாம்பூச்சிகளும் பறக்கத்தான் செய்கின்றன. பறத்தல் இயற்கையின் நிகழ்வு. இயற்கையின் நிகழ்வில் ஆண்பெண் பேதமில்லை. இங்கே ஒரு சிறுமி மிதிவண்டியில் பறக்க நினைப்பதும் பெண்கள் தங்களின் கட்டுப்பாடுகளை மறந்து, கால்பந்தாட்டதைக் கொண்டாட நினைப்பதும் உணர்ச்சி சம்மந்தப்பட்ட விஷயம்; மதத்திற்கு அப்பாற்பட்டது! அவற்றை மதச் சடங்குகளால் அடக்க முயலும்போதெல்லாம் நம் உணர்வுகள் அனுமதிப்பதில்லை.
இப்போது Offside -ல் ஒரு காட்சியைக் காண்போம். தன் மகளைத் தேட வந்திருக்கும் அப்பாவைப் பார்த்த மகளின் தோழி, ஹிஜாப் ( தலை முக்காடு) அணிந்த பின்பே தன் முகத்தைக் காட்டுவாள். அதுவரை அதைப் பொருட்படுத்திடாத அப்பெண்ணுக்கு இப்போது மட்டும் எப்படி அந்த எண்ணம் வந்தது? தோழியின் அப்பாவிற்கும் கால்பந்தாட்டத்திற்கும் என்ன வேறுபாடு?. பழக்கப்பட்ட மதச் சடங்குகளின் அடையாமாக இருக்கிறார் தோழியின் அப்பா! அதனால் அவரைப் பார்த்ததும் அப்பெண் ஹிஜாப் அணிகிறாள். கால்பந்தாட்டம் – அதுவொரு கொண்டாட்டம்; உணர்ச்சியின் அடையாளம்! ஒரு மனிதனுக்குப் பழக்கவழக்கங்கள் தெரியும் முன்பாக இயற்கையாகவே உணர்ச்சிகள் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. அங்கே அப்பெண் எல்லாக் கட்டுப்பாடுகளையும் மறந்து உற்சாகமாக மட்டும் இருக்க நினைக்கிறாள். அவளுக்கு, தான் செய்வது தவறாகத் தெரியவில்லை!
இதேபோல், Wadjda திரைபடத்தில் ஒரு காட்சியைக் காண்போம். குடும்ப மர (Family Tree) வரைபடத்தில்கூட தன் மகளின் பெயரை ஏற்க மறுக்கும் அப்பா, ஆண் வாரிசுக்காக இரண்டாம் திருமணம் செய்யத் தயாராகிறார். இப்படி, பெண்களை சுமையாக பார்க்கும் சமூகத்திலிருந்து வந்தவள் Wadjda. அவளுக்கிருக்கும் பெரும்பிரச்சனை மிதிவண்டி வாங்குவதுதான். மத[ச் சடங்குகளையும், போதனைகளையும் தன் மூளைக்குள் போட்டுக்கொள்ளாத சிறுமியால் குரானை படிக்க முடிகிறதென்றால் ஆச்சரியமல்லவா? ஆம். மிதிவண்டி வாங்கத்தேவையான பணம் ஈட்டுவதற்காக குரான் வாசிப்புப்போட்டியில் கலந்துகொள்கிறாள். முதல் பரிசை வென்றும் விடுகிறாள். குரான் படித்ததற்கான எந்த மாற்றமும் அவளுக்குள் நிகழவில்லை. அவள் எண்ணம் மிதிவண்டி வாங்குவது மட்டும்தான். காரணம், அவளால் குரானைப் படிக்க மட்டும்தான் முடிகிறது; மிதிவண்டியைத்தான் உணரமுடிகிறது! காலம்காலமாய் மனிதர்கள் மதத்தின் வழி இதைத்தான் செய்கிறார்கள். மதப் பற்றாளர்கள், தாம் வகுக்கும் கட்டுப்பாடுகளைக் கடத்த முயன்று தோற்கும்போதெல்லாம் தமது தோல்வியை அவர்கள் உணர்வதில்லை. இங்கு பெண்களின் சுதந்திரம் மதவிலங்கால் பூட்டப்படுகிறது. மதச்சடங்குகள் தொடரலாம்; கட்டுப்பாடற்றுப் பெருகலாம்; ஆனால், அவை ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை. வரையறுக்கப்பட்ட போலியான உணர்ச்சிகளை இயற்கை அனுமதிப்பதில்லை. அவற்றை எளிதில் கடக்கக்கூடிய வண்ணம் வாய்ப்புகளை, இயற்கை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. அப்படியான வாய்ப்புகளின் எச்சங்கள்தான் இந்த Wadjda சிறுமிப் பட்டாம்பூச்சியும், Offside இளம் பட்டாம்பூச்சிகளும்!