அப்பா இலங்கை அரச படைகளால் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு இன்றுடன் “16” ஆண்டுகள்.
2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இருபத்தி நான்காம் திகதி வழமை போல் விடிந்த காலை எங்கள் குடும்பத்தை நிலை குலைய வைக்கும் என்று காலை 11.30மணி வரை நினைக்கவில்லை.
காலையில் வழமை போல் சாவகச்சேரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அச்சுவேலியில் உள்ள எமது வீட்டிலிருந்து சென்ற அப்பா ஏன் அலுவலகத்திற்கு 11.30 மணியாகியும் வரவில்லை என்று கேட்டு அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் விசாரிக்கும் போது கூட நான் எண்ணவில்லை அப்பா இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு இருப்பார் என்று, அழத்தொடங்கிய அம்மாவை மோட்டார் சைக்கிள் ஏதாவது பிழைத்து இருக்கும் காராஜ்ல ஏதாவது நிற்பார் பேசாமல் இருங்கோ என்று சொல்லி விட்டு ஓரு மணித்தியாலம் கடந்த பின்பு அலுவலகத்திற்கு அழைப்பு எடுத்து அப்பா வந்துவிட்டாரா? என்று கேட்கும் போது அவர்கள் இன்னும் வரவில்லை என்று சொன்ன போது எதுவும் விபரிதம் நடந்து இருக்கக் கூடாது என்று ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் மனது பிரார்த்தித்தது.
அப்பாவின் தம்பியின் வாகனத்தில் அப்பாவை தேடி அப்பா வழமையாக செல்லும் பாதையான புத்தூர் வாதரவத்தை வண்ணாத்திப் பாலம் ஊடாக சென்ற போது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அப்பா வழமையாக அவ் வழியில் சென்று வருபவராகையால் அடையாளங்களை சொல்லி கேட்ட போது தெரிந்து இருந்த படியால் புத்தூர் தாண்டி அப்பா சென்றது தெரியவந்தது.
பின்னர் வண்ணாத்திப் பாலத்தில் உள்ள இராணுவ முகாமில் விசாரிக்கும் போது அங்கிருந்த இராணுவத்தினர் அப்பா வண்ணாத்திப் பாலம் தாண்டி மோட்டார் சைக்கிள்களில் சென்றதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோயில் தாண்டி சிறிது தூரம் சென்று விசாரித்த போது காலையில் ஃபில்ட் பைக் குறூப் வந்து அந்த பகுதியில் நின்றதாகவும் ஆகையால் பயத்தினால் யாரும் வெளியே செல்லவில்லை என்றும் சொன்னார்கள்.
பின்னர் ஒரு வயதானவர் அப்பாவை அந்த இராணுவத்தினர் மறித்து விசாரித்து கொண்டு இருந்ததை கண்டதாக சொன்னார்.
அவர் சொன்னதைக் கேட்டு கனகம்புளியடி இராணுவ முகாமில் சென்று அழுது குழறி விசாரித்த போது அவர்கள் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை நாவற்குழி இராணுவ முகாமில் சென்று விசாரியுங்கள் என்று சொன்னார்கள்.
நாவற்குழி இராணுவ முகாமில் சென்று விசாரித்த போதும் அவர்கள் அதே பதிலையே கூறினார்கள்.பின்னர் ரோந்து முடித்து அவ் முகாமிற்கு திரும்பி வந்த இராணுவ அணி ஒன்றை இச் சம்பவம் குறித்து கேட்ட போது அவர்கள் காலையில் அப்பாவின் பெயரில் உள்ள ஒருவரை இராணுவம் தேடியதாகவும் அப்பா பெயரும் தேடப்பட்டவரின் பெயரும் ஒன்றாக இருந்தபடியால் ஆள் மாறி கைது செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை போகாத இராணுவ முகாமும் இல்லை,போகாத ஆணைக்குழுகளும் இல்லை.ஏன் போகாத கோயில்களும் இல்லை.
2006 இதே சித்திரை 24 ஆம் திகதி காலையில் பார்த்த அப்பாவை இன்று வரை பார்க்கவும் இல்லை.அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் போது அடுத்த நாள் விடியும் போது அப்பா வந்து நிற்கனும் என்று தான் மனது பிரார்த்திக்கும்.ஆனால் காலை தான் விடிகிறதே தவிர அப்பா இன்னும் வரவில்லை.
இங்கே நான் கூற விரும்புவது என்னவென்றால் ஒரு இளைஞனாக எனக்கும், யுவதிகளான எனது சகோதரிகளுக்கும் இன்றுவரை உள்ள ஒரே நம்பிக்கை அப்பா என்றோ ஒரு நாள் வந்து சேருவார் என்பதே, அந்த அப்பா வருவார் என்ற நம்பிக்கை எங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது, நல்வழிப்படுத்தி உள்ளது.
இதேபோல் தான் இங்கே பல இளம் பிஞ்சுகள் அதில் பல தந்தையின் முகத்தை கூட பார்த்து அறியாதவர்கள் அப்பா எங்கே?என்று கேட்கும் பிள்ளைகளிடம் அப்பா நாளை வருவார் என்று அம்மாக்களால் கதை சொல்லப்பட்டு அப்பாவின் அன்பிற்காகவும் அரவணைப்பிற்காவும் அனு தினமும் ஏங்கி தவிக்கும் பிள்ளைகள்.அவர்கள் முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்று கதை கூறாதீர்கள்.
உங்களின் வெறும் வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் மனச்சோர்வை கொடுக்கும்.இன்றுவரை எம்மால் கூட அந்த வார்த்தைகளை இலகுவாக கடக்க முடியவில்லை, தினமும் அடுத்த பிள்ளையின் தந்தையை பார்த்து அப்பா கனவுகளுடன் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இளம் சிறார்களின் நிலையை பாதிக்கப்பட்டவனாக சொல்கிறேன், அவர்கள் புரிந்து கொள்ளும் பருவத்தில் புரிந்து கொள்ளட்டும்.அதுவரை அவர்களை அவர்களின் அப்பா கனவுகளுடனாவது வாழ விடுங்கள்.
- மகன்