அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் பாதெனியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மாலபேயில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்க மருத்துமவனைகளில் சேவைக்காலப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தது.
எனினும் அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான மருத்துவர் பாதெனிய இதற்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்ததுடன், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சேவைக்காலப் பயிற்சி வழங்க அரசாங்க மருத்துவமனைகளில் இடமளிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக அரசாங்க மருத்துவர்கள் இன்று வரை பிரதேச வாரியாக வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாதெனிய உள்ளிட்ட அரசாங்க மருத்துவர்களின் இச்செயற்பாடு நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பானது என்று மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டு தொடர்பான குற்றப்பத்திரிகையை மருத்துவர் பாதெனியவுக்கு கையளித்துள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் வழக்கு முடியும் வரை வழக்குத் தீர்ப்பு தொடர்பான விமர்சனங்கள், பத்திரிகை பிரசுரங்கள், கட்டுரைகளை வெளியிடவும் பாதெனியவுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.