ஈழம் ஒரு செழிப்பான பூமி, வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும், நில வளத்தையும், மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது. இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையின் வடிவமாய் தமிழீழத்தின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தி மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் பொருத்தமான துறை, திறன்சார் திட்டமிடுதலின் அடிப்படையில் உரிய இயற்கை வளங்களைக் கொண்டு உள் நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண்மையும், மீன்பிடி, கைத்தொழில் பொருண்மிய கட்டுமானத்திற்கு அடித்தளமானது. என்பதால் இவற்றை வளர்த்தெடுக்க தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டு பொருளாதாரத்தில் தன்னிறைவானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனேயே இயங்கியது.
தமிழீழத் தனியரசுக்குட்பட்ட பிற நகரங்களிலும் அரசின் சார்பில் வணிக நிறுவனங்கள் பல அமைக்கப்பட்டிருந்தன. சேரன் வாணிகம், சோழன் வாணிகம், பாண்டியன் வாணிகம், இளந்தென்றல் வாணிகம் எனத் தூய தமிழ்ப்பெயர்களால் அழைக்கப்பட்ட அந்த வணிக நிறுவனங்களின் சார்பாக உணவகங்கள், மருந்தகங்கள், வேளாண் பொருள் விற்பனையகங்கள், உந்துருளி விற்பனைக் கூடங்கள், வண்ணப்படக் கலையகங்கள், பண்ணைகள், உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலைகள், சுழற்சி முறை மீள் உற்பத்திகள், மரங்களை நடுதல், இயற்கை பாதுகாப்பு என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். இயக்கத்தைச் சேர்ந்த திறமை மிக்க போராளிகளின் பொறுப்பில் அவை சீராகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தன.இதன் பயனாக யுத்தம் மற்றும் அதையொட்டிய பொருளாதரத் பொருளாதாரத் தடைகள் என அக்காலகட்டத்தில் சிங்கள பேரினவாத அரசால் முடுக்கிவிடப்பட்ட அனைத்து விதமான அடக்குமுறைகளையும் மீறி 3 வருட காலத்திற்கு தேவையான கையிருப்பு தமிழீழ நிழல் அரசின் எல்லைக்குள் வாழ்ந்த மக்கள் பட்டினி இன்றி வாழ்ந்திட உலர் உணவுப் பொருட்கள் கலஞ்சியப் படுத்தப்பட்டிருந்தது என்றால் மிகையில்லை.
ஒரு தேசத்தின் மக்கள் மேல் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக் கொத்தாகக் இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வருடமும் மே 12ம் திகதியிலிருந்து எதிர்வரும் மே 18ஆம் திகதி வரையான காலப்பகுதி ‘முள்ளிவாய்க்கால் (தமிழ் இனவழிப்பு) நினைவேந்தல் வாரமாகும்.
தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட போரின் இறுதி நாட்களின் ஏவப்பட்ட எறிகணைகள் – கொத்துக்குண்டுகள் கொத்துக்கொத்தாய் வீழ்ந்து வெடித்திட கொதிக்கும் குருதியில் உடல் சிதறிய பிணங்களும், விழுப்புண்ணடைந்த மரணமும் பசியும் சூழ்ந்திருந்தது. உண்ண உணவின்றி தவித்த மக்களுக்கு போராளிகளும் தொண்டு நிறுவனங்களும் வன்னி பெருநிலப்பரப்பில் பட்டடினிச் சாவுகளை கட்டுப்படுத்தி உயிர் பிழைத்திட வைத்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வாழ்வை மீள்நினைவுபடுத்தும். இன அழிப்பின் உச்சம் நிகழ்ந்து 13 ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் இன அழிப்பு யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது.
எமது உறவுகளின் உயிர்காத்த நீரினுள் சிறிதளவு அரிசியையும் கிடைத்தற்கரிய உப்பையும் இட்டு காய்ச்சி உருவாக்கப்பட்ட கஞ்சியே- முள்ளிவாய்க்கால் கஞ்சியாகும். சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் வெறும் வயிற்றுடன் கஞ்சியினைப்பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த காத்திருப்பின்போதுகூட பல்லாயிரம் உயிர்கள் காவுவாங்கப்பட்டன. காத்திருந்து காத்திருந்து கையில் வாங்கிய கஞ்சியை, ஒரு மிடறு பருகி வயிற்றில் தாங்கிய சிசுவின் பசியாற்றுவதற்கு முன்பே வயிறு கிழிந்து, இரத்தம் பீறிட குடலும் கருவும் வெளிச்சிதறி மாண்டுபோன பேரவலங்கள் முள்ளிவாய்க்காளில் நிகழ்ந்தனா.
சிங்கள அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள், குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள். பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினார்கள். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டார்கள். இதனாலேயே பெரும்பாலான மக்கள் சிங்களப்படைகளின் செல் வீச்சுக்களில் சிக்குண்டு சாவடைந்தார்கள்.
தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு, பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள், ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிவாரணக் கிளைகள் உட்பட எல்லா இடங்களும் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின. மக்களின் வயிற்று பசியினை போக்க முடியாது உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடியது – கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சில மக்கள் தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். கஞ்சி பல மக்களின் உணவுத் தேவையை சொற்ப அளவிலேயே பூர்த்திசெய்தது குண்டுவீச்சில் இறந்தவர் போக மீதிப்பேரை தனித்து நின்று உயிர்காத்த கஞ்சி ஒரு நாள் அல்ல, ஒரு வாரமல்ல, பல வாரங்களாக உணவானது. குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை, ஏன் இரவுபகலாக களமாடிய போராளிகளுக்கு கூட கஞ்சிதான் உணவு . கைவசம் இருந்த அரிசியினைக் கொண்டு மக்களுக்கு தம்மால் முடிந்தளவிலான உணவுத் தேவையைச் பூர்த்தி செய்திட கஞ்சி தயார் செய்த இடங்களையும், கஞ்சி நிலையங்களையங்களும் நடத்தப்பட்டது. உணவுகள் சமைத்த இடங்களையும் குறிவைத்து இராணுவத்தினர் நடாத்திய தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்ற பொருட்களை மக்களுக்கு வழங்கும் செயற்பாடுகள் நடைபெற்ற போதும், அப்பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதலைத் தொடர்ந்து நடாத்தியிருந்தார்கள். 25 ஏப்ரல் 2009 அன்று வலைஞர்மடம் பகுதியில் கஞ்சி பெறுவதற்காகக் கடற்கரைப் பகுதியில் கூடாரத்தினுள் இருந்த காயப்பட்ட மக்கள் மீதும் இலங்கை விமானப்படை கோரமாகக் குண்டுகளை வீசியது. மிக், கிபிர் விமானங்களின் தாக்குதலில் 341 அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 400 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இப் பகுதியில் அன்று காலை தொடக்கம் மாலை வரை முறையே காலை 10.15 மதியம் 2.15 , 2.30, பின்னேரம் 5.15 ஆகிய நேரங்களில் விமானத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 184 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பி.ப 2.15 மணி அளவில் முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதலில் 126 பேர் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை சுமார் 15 நிமிடம் மேற்கொள்ளப்பட்டது. 16 இற்கு மேற்பட்ட 250 இறாத்தல் குண்டுகள் போடப்பட்டது. இதே வேளை மாலை 5.15 இற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டனர். அன்று மாலை புனர்வாழ்வுக்கழகத்தால் கஞ்சி வழங்கப்பட்டதுடன் கூடவே உலர் பருப்பும் குழந்தைகள் உள்ள குடும்பங்களிற்கு பால்மாவும் நிவாரணமாக வழங்கப்பட்டது.
பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்திட கர்பிணித் தாய்மார், சிறார்கள், முதியோர்கள் அனைவருமே மூன்று நான்கு நாட்களாக அசுத்த நீரினை பருகியதால் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக ஆரம்பித்தார்கள். சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்திட. கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று வீழ்ந்தார்கள். கூடுதலான முதியோர் பட்டினி நிலைமையினால் மயக்கமுற்றும், கோமா நிலையினை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். முதியோர்களும் சிறார்களும் வயிற்றோட்டத்திற்கு ஆளாகி இலகுவில் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பலர் இறந்து போனார்கள்.
கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம். துப்பாக்கி இரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. அக் காலகட்டத்தில் போராளிகளுக்காக ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை போராளிகளும் தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
முள்ளிவாய்க்கால் உப்பு கஞ்சி…!! பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தையும், கஞ்சி உணவே எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும் உலகத்தமிழினம் நினைவு கூருவது சாலத் தகுந்தது. இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின போது எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை நாம் மட்டுமல்லாது நினைவுகளின் நீட்சியே தமிழினவழிப்பின் சாட்சி, இச்சாட்சியே எம்மக்களுக்கான மீட்சியின் வழியென உணர்ந்து தமிழின அழிப்பின் சாட்சியாக நினைவிருக்கும்.
இன அழிப்புப் படையெடுப்பினால் – நேரடிப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்கள் ஒரு பக்கம் போக பட்டினியாலும் ஊட்டச்சத்து இன்மையால் தொற்று நோய்கள் தாக்கம் காணப்பட்டதுடன் இயல்பாக நடக்க முடியாதவர்களாய் காணப்பட்டார்கள். பலியாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. உணவுக்காக கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், கஞ்சி வழங்கும் இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். உணவு விநியோகப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. முப்படைகளின் தாக்குதல்களும் அகோரமாக இருந்தது.
சிறிலங்கா அரசின் போர் முனைப்பினால் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட மனிதப் படுகொலைகள் செய்யக்கூடிய அதே நேரத்தில் தொடர்ந்து மக்களைக் கொன்று குவித்து மக்களின் சமூக வாழ்வு சின்னாபின்னமாக்கப் பட உணவு, குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள்,இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்தி சொல்ல முடியும். நோய்களுக்கு மருந்து இல்லாமல் மருத்துவமனைகள் அவலப்பட, உண்ண உணவு இல்லாமல் மக்கள் கண்டதையும் உண்டு நோய் வாய்ப்படும் கோர நிலையும் ஏற்பட்டதுடன் கஞ்சி இருந்தும் உண்ணமுடியாத நிலையில் பட்டனிச் சாவுகளும் தொடங்கினா.
கஞ்சியை உண்ணும்போது எமது தேசத்தின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு விளக்கி, நினைவுகளை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வோம். ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் கஞ்சிக்கொட்டில் அமைத்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியை முடிந்தவரை அனைவருக்கும் வழங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். சிங்கள பேரினவாத அரசு இனவழிப்புக்கு ஆயுதமாக பயன்படுத்திய உணவையே நாம் எம் நினைவேந்தலின் வடிவமாக்குவோம்.
மே 18ம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகப் பரப்பெங்கும் உங்களுக்கு அருகில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கெடுத்து, அஞ்சலி செலுத்திவது மட்டுமல்லாமல் ‘கஞ்சி’ எல்லோர் வீடுகளிலும் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த வலிநிறைந்த நாட்களின் நினைவுகளை மீள் நினைவுகளை நினைவுட்டி அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க, நீதிகேட்டுப் போராடும் எம்மக்களின் அவலக்குரல்களை இந்த உலகம் செவிமடுக்கும் நாள்வரை ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பெருவலியாகவும், அடையாளமாகவும் உணர்த்தப்படவேண்டியது எமது வரலாற்றுக்கடமையாகும். உணர்வுபூர்வமான இப்பெரும் மக்கள் எழுச்சியின் போராட்ட வழிமுறைகளில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’யும் வரலாற்றில் என்றும் நிலைத்தே நிற்கும்.