பல்வேறு சிக்கல்களையும் தாண்டி பட்டதாரிகளுக்கான தொழில் நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் கருத்துகளை தெரிவித்தனர்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மத்திய அரசைப் பொறுத்தவரையில் முதற்கட்டமாக 2012ம் ஆண்டு வெளியேறிய பட்டதாரிகளுக்கு அங்கிருக்கின்ற நிலைமைகளுக்கு ஏற்ற விதத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், ஏனைய ஒரு குறித்த தொகுதியினரை தனியார் துறையிலே உள்வாங்கக் கூடிய விதத்தில் தொழில்நுட்பம் சம்மந்தமான பயிற்சிகளை வழங்கி, அந்தப் பயிற்சிகளின் அடிப்படையில் அவர்களை பயிற்சியாளர்களாக சேர்த்துக் கொள்வதற்குமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது மத்திய அரசைப் பொருத்த வரையில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகளினுடைய வெளிப்பாடாகும். மாகாண சபையினைப் பொருத்தவரையில் பல ஒழுங்குகளைச் செய்திருக்கின்றோம்.
அண்மையில் பிரதமரின் ஆலோசகர்களுடனான கலந்துரையாடல் வேலையற்ற பட்டதரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகள் சம்மந்தமாக இடம்பெற்றது.
முதலமைச்சர் 4700 பேர் வரையில் வேலையற்ற பட்டதாரிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் விடயங்களை அங்கு வழங்கியிருக்கின்றார்.
தற்போது குறித்த அளவு எண்ணிக்கையினரான பட்டதாரிகளை உள்ளீர்க்கத்தக்க விதத்தில் நடவடிக்கை எடுக்கும் படி மாகாணசபைக்குச் சில அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன.
இதனடிப்படையில் மாகாண சபை ஊடாக எத்தனை பேரை, எந்த அடிப்படையில் உள்வாங்கலாம் என்கின்ற அடிப்படையில் பட்டதரிகளின் பல கோரிக்கைகளைப் பரிசீலித்து வருகின்றோம்.
பரீட்சைகள் இல்லாமல் உள்ளீர்க்க வேண்டும், கட்டம் கட்டமாக உள்ளீர்க்கப்பட கூடாது என்று பட்டதாரிகளால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்ற விதத்தில் எங்களுடைய மாகாண சபையில் குறிப்பாக கல்வி அமைச்சில் என்னென்ன வெற்றிடங்கள் இருக்கின்றன என்பது தொடர்பாக ஆராய்கின்ற போது ஒன்றுக்கொன்று வித்தியாசமான புள்ளி விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக நாங்கள் கண்ட விடயம் என்னவென்றால் 400 உதவி இயக்குனர்கள் 400 உள்ளார்ந்த சேவை ஆலோசகர்கள் ஆகியோர் ஆசிரியர்கள் என்கின்ற வரையரைக்குள் இருக்கின்றார்கள் எனவே 800 ஆசிரியர்கள் பாடசாலையில் படிப்பிக்காமல் ஆசிரியர்கள் என்கின்ற வரையரைக்குள்ளே கல்வி வலயங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த 800 பேரையும் ஆசிரியர் வரையில் இருந்து எடுத்தால் எமக்கு அங்கு 800 ஆசிரியர்களுக்குரிய இடம் கிடைக்கும். ஆனால் இது வரையில் இந்த இரண்டு விதத்தவருக்கும் தனியான சம்பளம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசாங்கத்தில் இல்லாமல் இருக்கின்றது.
இப்பிரச்சினை நாடு முழுவதும் இருக்கின்றது. எனவே இதனை எவ்வாறு சீர் செய்வது என்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறு சீர் செய்வதற்குப் பிறகு பாடசாலைகளில் ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு தற்போது இருக்கின்ற நியமன சுற்றுநிருபத்தின் அடிப்படையில் பாடசாலைகள், பாடசாலைகளில் இருக்கின்ற பாட வெற்றிடம் என்பவற்றின் அடிப்படையில் தான் நியமனங்களுக்கான கோரிக்ககைள் விடப்பட வேண்டும்.
அதனடிப்படையில் நாங்கள் ஆட்களை நியமிக்கின்ற போது சில இடங்களுக்கு ஆட்கள் செல்லாமல் இருக்கின்ற நிலமையும் இருக்கின்றது. எனவே இதனையும் நாங்கள் சீர் செய்ய வேண்டி இருக்கின்றது.
இந்தவகையில் வருகின்ற 23ம் திகதி மாகாண அமைச்சர்களின் கூட்டம் இருக்கின்றது. இதில் அதிகரிகள் சரியான புள்ளி விபரத்துடன் வரவேண்டும் என அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றோம்.
பரீட்சை இல்லாமல் உங்களைச் சோத்துக் கொள்ளலாமா என்பது தொடர்பாகப் பார்க்கின்ற போது பாடவாரியாக சேர்க்க வேண்டும் என்கின்ற சுற்றுநிருபத்தின் படி, கோரல்கள் விடுக்கப்படுகின்ற போது இருக்கின்ற வெற்றிடங்களை விட கூடுதலானவர்கள் விண்ணப்பிக்கின்ற போது அவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதோவொரு முறை இருக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவு செய்வதற்கு பரீட்சையைத் தவிர வேறொரு வழியும் இல்லை. பரீட்சை வைப்பது என்றால் மிகவும் இலகுவான பரீட்சை ஒன்றை நடத்தலாமா என்று நாங்கள் ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றோம்.
அண்மையில் இடம்பெற்ற பரீட்சையில் வைக்கப்பட்ட விவேகப் பரீட்சை 04ம் வகுப்பு மாணவர்களுக்குரிய பரீட்சை என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அப்படியான பரீட்சையில் அநேகமானவர்கள் சித்தியும் அடைந்திருக்கின்றார்கள்.
முதலாவது பரீட்சை வைக்கப்பட்ட போது பொது அறிவுப் பரீட்சையில் நீங்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தீர்கள். கல்வி சம்மந்தமாகவே பொது அறிவுக் கேள்விகள் வந்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாததன் காரணமாக அதனை நிராகரிப்பதாக சொன்னதன் பேரில் எமது மாகாணசபை உறுப்பினர்களும் இந்தப் பரீட்சையைத் திரும்பவும் வைக்க வேண்டும் என்பது சம்மந்தமாகப் பிரேரணையைக் கொண்டு வந்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் இந்தப் பரீட்சையில் வழங்கப்பட்ட 100 கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடிய ஒருவர்தான் ஆசிரியராக வரத் தகுதியுடையவர் என்ற பதில்களும் எமக்கு வழங்கப்பட்டன.
ஏனெனில் வந்த 100 கேள்விகளும் மிகவும் சிறிய கேள்விகள் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் அதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மீண்டும் அந்தப் பரீட்சை வைக்கப்பட்டது.
உங்களுக்குத் தெரியும் எதிரும் புதிருமாக ஒரு விடயம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் நீங்கள் செய்து பாருங்கள் என்ற விதத்தில் செயற்படுவதுண்டு.
அதன்படி அதிருப்தி கோரிக்கையினால் மீண்டும் வைக்கப்பட்ட பொது அறிவுப் பரீட்சை மிகவும் கடினமாக இருந்தது. அதன் காரணமாகத் தான் கூடுதலான பட்டதாரிகளால் அதில் சித்தியடைய முடியவில்லை.
எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு தற்போது நாங்கள் சில தீர்மானங்கள் எடுத்திருக்கின்றோம். பரீட்சைகள் இல்லாமல் விடுவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
வைக்கின்ற பரீட்சைகளை மிகவும் இலகுவாக வைப்பதற்கும், இரண்டு பரீட்சைப் புள்ளிகளையும் ஒன்றாகச் சேர்த்து எத்தனை வெற்றிடங்கள் இருக்கின்றதோ அத்தனை வெற்றிடங்களுக்கும் ஏற்ற விதத்தில் வெட்டுப் புள்ளிகளைத் தீர்மானிப்பதாக இருக்கின்றோம்.
ஏனெனில் ஏதோவொரு வகையில் பரீட்சை வைத்துத் தான் எடுக்க வேண்டும் என்ற வகையிலேயே சுற்றுநிருபம் இருக்கின்றது. அந்த சுற்றுநிருபத்தைத் தளர்த்தக் கூடிய விதத்தில் எல்லாம் தளர்த்தி இவ்வாறு செய்ய இருக்கின்றோம்.
எதிர்வரும் 23ம் திகதி நடைபெற இருக்கின்ற அமைச்சர் வாரியக் கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கின்றோம்.
அதற்கு முன்னதாக டீநுனு பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்குவதற்கு நேர்முகப் பரீட்சைக்காக கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாது கடந்த பரீட்சையில் சரித்திரப் பாடத்திற்காக விண்ணப்பித்து 107 பேர் வரையில் செயற்பாட்டுப் பரீட்சையிலும் சித்தியெய்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கான நியமனம் வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு ஏற்கனே ஆட்கள் சித்தியடையாததன் காரணமாக அவர்களுடைய புள்ளிகளைக் குறைத்து எடுப்பதற்காகத் தீர்மானித்து அதற்கான நேர்முகப் பரீட்சையும் நடைபெற்று முடிந்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் அவர்களுக்கான நியமனங்களையும் வழங்க இருக்கின்றோம். ஏனையவர்களை மேற்படி குறிப்பிட்ட விதமாக எவ்வளவுக்கு கூடுதலாக எடுக்க முடியுமோ அவ்வளவிற்கு கூடுதலாக நாங்கள் எடுக்க இருக்கின்றோம்.
ஏற்கனவே தொழிலிலே உள்ளவர்களும் இதற்குள்ளே வருகின்றார்கள் அவர்களைத் தவிர்த்து என்ன செய்வது அதற்கான ஏற்பாடுகள் வேறு ஏதாவது செய்யலாமா என்று கூட நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் தகுதியானவர்களை இவ்வாறெல்லாம் மட்டுப்படுத்தி ஒரு கோரலை விடலாமா என்பது தொடர்பில் எங்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கின்றன.
அவ்வாறு வருகின்ற போது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாயின் அதில் எல்லாம் ஸ்தம்பிதம் அடையக் கூடிய சூழ்நிலையும் இருக்கின்றது.
எனவே இதனை நேர்முகப் பரீட்சையில் நாங்கள் கையாளலாம் என்று யோசிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால் இதிலும் நீதிமன்றம் செல்லக் கூடிய சாத்தியக் கூறு இருக்கின்றது.
இந்த சிக்கல்களையெல்லாம் நாங்கள் சிந்தித்தவாறு இவற்றையெல்லாம் தண்டி பட்டதாரிகளுக்கு நாங்கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
இது தான் யதார்த்தமான நிலைமை இதற்கு வேலையில்லாப் பட்டதாரிகள் சற்று ஒத்துழைக்க வேண்டும். இந்த அடிப்படையில் உள்வாங்கக் கூடிய அனைவரையும் உள்வாங்குவதற்கு மாகாணசபையில் நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.