பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் மருத்துவர் உட்பட 473 பொதுமக்கள் பலி; 722 பேர் படுகாயம் 21-04-2009 அடைந்த நாள்
பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய இன்றைய பாரிய படை நகர்வுத் தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வலைஞர்மடத்தில் அன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலிலேயே உளநல மருத்துவர் சிவா மனோகரன் படுகொலை செய்யப்பட்டார்.
மாத்தளன் பகுதியில் படையினர் 20-042009 நடத்திய தாக்குதலில் சிக்கிய மக்களை முன்னிறுத்தி அன்று பாரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலின் போது படையினர் அகோர எறிகணை மற்றும் நச்சுப் புகைத்தாக்குதலையும், கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல்களையும் நடத்தினார்கள்.
இதனால் மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதலை நடத்த முடியாத நிலையேற்பட்டது.
இதேவேளையில் படையினரின் அன்றைய தாக்குதலினால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையேற்பட்டது.
மாத்தளன், பொக்கணை, இடைக்காடு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகள் மீதும் சிறிலங்கா படையினர் அன்று தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தினார்கள்.
சிறிலங்கா படையினரின் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கினார்கள்.பதுங்குகுழிகளில் இருந்த மக்கள் வெளியேற முடியாது அவதிப்பட்டர்கள். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் அந்த அந்த இடங்களில் படுத்திருந்தவாறு அவலக்குரல்களை எழுப்பினார்கள்.
இதற்கிடையே, மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலையேற்பட்டது. படையினரின் அகோரத் தாக்குதல்களினால் மக்கள் அச்சமடைந்து உணவுப்பொருட்களும் இல்லாத நிலையில் மிகவும் களைப்படைந்து காணப்பபட்டது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழீழ நிதித்துறை, ‘மருதம்’ நிறுவனம் ஆகியவற்றின் பணியாளர்கள் சீனி, தேயிலை ஆகியவற்றை இலவசமாக வழங்கினார்கள்.