தமிழர்களை கொன்ற தமிழர்களை கொன்ற இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரியுள்ளார்.
ஈழத்துப் போரில் பலியானவர்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் தினம் மே 18ம் தேதி அன்று பாம்பனில் நாம் தமிழர் கட்சி சார்பில் அனுசரிக்கப்பட்டது.
இன எழுச்சிப் பொதுக் கூட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்வில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:
தமிழ் தேசிய இனத்தின் துயர நாளாக மே 18 திகழ்கிறது. 8 வருடங்களுக்கு முன்னர், இதே நாளில்தான் தன் சொந்த இனம் அழிவதைக் கண் முன்னே காண நேர்ந்த துயரம் நடைபெற்றது.
தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நிகழ்த்த ஆயுதங்களை, போர் ஆலோசனைகளை வாரி வழங்கி, பொருளாதாரப் பலம் அளித்து நமது இனத்தை அழித்த கொடூரம் இதே நாளில் நடந்து முடிந்துள்ளது. நாம் உயிருள்ள வரை மறக்க முடியாத, மறக்கக்கூடாத துயர நினைவுகள் இதுவாகும்.
எங்கெல்லாம் நீதி கிடைக்க வழி உண்டோ, அங்கெல்லாம் நின்று கண்ணீர் விட்டு கதறி பார்த்தும் நம்மினத்திற்கான நீதி இதுநாள் வரை வழங்கப்பட வில்லை.
இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகும் கூட ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ மண்ணில் வாழும் தமிழர்களுக்கு, மற்ற மேலை நாடுகளில் நடப்பது போலச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை.
இவ்வளவு பெரிய அளவில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார். ஏன் இதுவரை சர்வ தேச விசாரணை நடத்தப்படவில்லை.
இதுகுறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதில் இலங்கை அரசை தண்டிக்கப்பட வேண்டும்.
இதே போன்றே தமிழகத்திலும் பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன.
கச்சதீவு மீட்பது என்பது எங்களுக்கு பிரச்சினை, மீனவர் கடலுக்கு செல்வது எங்களுக்கு பிரச்சினை. காவிரி உரிமை என்பது எங்களுக்கு பிரச்சினை. முல்லைப் பெரியாறு என்பது எங்களுக்கு பிரச்சினை. ஹைட்ரோ கார்பன் பிரச்சினை எங்களுக்கு பிரச்சினை. இதனை எல்லாம் எதிர்த்துப் போராட வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்று சீமான் பேசினார்.