1983இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலை இன அழிப்பை அடுத்து இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற அரசியல் தஞ்சம் கேட்டதாக தமிழக முதலமைர்சர் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி 1983 முதல் இதுவரை 3,04 269 பேர் இலங்கைத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சார்ந்த 58,822 பேர் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13,540 குடும்பங்களைச் சார்ந்த 34,087 பேர் காவல் நிலையங்களில் பதிவுசெய்துவிட்டு முகாமுக்கு வெளியில் வாழ்ந்து வருகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார்.
சிறப்பு முகாம் ஏன் எப்படி எப்போது உருவாகியது, என்பதை பார்க்கும் போது சிறப்புமுகாம் என்பது 1946ம் ஆண்டு அயல் நாட்டார் சட்டம் 3(2) நூல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் மத்திய அரசு குற்றம் சாட்டியதாக கூறி மத்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சிறப்பு முகாம் 1990ம் ஆண்டு உலகத் தமிழினத் தலைவர் என தன்னை அழைத்துக் கொள்ளும் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களால் வேலூர் கோட்டையில் உள்ள திப்புமகாலில் முதலாவது சிறப்பு முகாம் தமிழீழ விடுதலை புலிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கப்பட்டதாக அப்போது கூறியிருந்தார். ஆனால், உண்மையில் அதில் அடைக்கப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. அகதியாக வந்த அகதி முகாமில் வாழ்ந்து வந்த அப்பாவி ஈழத் தமிழர்களை அடைத்து வைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்பது பின் நாளில் வெளிச்சத்திற்கு வந்தது.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின், ஆட்சிக்காலத்தில் சிறப்பு முகாம்களை மூடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ செங்கல்பட்டு, பூந்தமல்லி, வேலூர், துறையூர், திருவையாறு, பழனி என பல்வேறு இடங்களில் இருந்த கிளைச் சிறைகளில் புதிய சிறப்புமுகாம்களை உருவாக்கினார். தற்போது திருச்சியில், மட்டும் சிறப்புமுகாம் உள்ளது. அதில் பல அப்பாவி தமிழ் அகதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது சிறப்பு முகாமை மூடுவதற்கு தான் நினைத்திருந்ததாக கூறிய அதே கலைஞர் கருணாநிதி அவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்து சிறப்பு முகாமை மூடுவார் என சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த அகதிகள் நம்பி காத்திருந்தார்கள். அதன் பின் இரண்டு முறை ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழக கலைஞர் கருணாநிதி அவர்களால் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடுவதற்கு அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து துன்புறுத்துவதில் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் ஆட்சிக் காலங்களில் நன்கு நிரூபித்தார்கள். சிறப்புமுகாமில் உள்ள தங்களை விடுதலை செய்யுமாறு பல முறை பல அகிம்சைப் நடத்திய போதும் போராட்டங்களை காந்தி தேச ஆட்சியாளர்கள் அந்த அகதிகளின் அகிம்சை போராட்டங்களுக்கு மதிப்பு அளிக்கவில்லை.
இது மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் முகாம் ஆகும். சட்டப்படி மாவட்ட ஆட்சித் தலைவரின் அதிகாரத்தின் கீழ் உள்ள முகாம் எனக் குறிப்பிட்டிருந்தாலும், நடைமுறையில் இந்த முகாம் தொடர்பான அனைத்து அதிகாரமும் சட்டத்திற்கு முரனாக கியூ பிரிவு, பொலிசாரிடமே வழங்கப்பட்டிருக்கிறது. பொலிஸ் நிர்வாகத்தின் கீழ் உள்ள முகாமாகவே இது இயங்கி வருகிறது. அதனுடைய அனைத்து அதிகாரங்களையும் தமிழக அரசே கொண்டுள்ளது. சிறைச்சாலையானது கொடிய சித்திரவதைகள் நிறைந்த இடம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த சிறைகளில் வழங்கப்படும் அற்ப சலுகைகள் கூட சிறப்பு முகாம்களில் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் என கருதப்படுகிறது.
இது, இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் என உருவகப்படுத்தப்பட்ட வதை முகாம்களை மூடக்கோரிப், போராடிவரும் நிலையில் மாறி மாறி ஆளுகிற அரசுகள் அதனைச் செய்ய மறுத்து வருவதன் அரசியலை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. அதே சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாமில் சட்டத்திற்கு முரானாக நாட்டு எல்லைக்குள் உள்நுளைந்தது , பாஸ்போர்ட், விசா காலம் முடிந்தும் அனுமதியின்றி தங்கியது போன்ற சிறு சிறு குற்ற வழக்குகளில் சிக்கி சிறையில் 17-06-2021 அன்று முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தியவர்களில் இலங்கை அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று சாவடைந்தார், என்ற துயரச் செய்தி வெளியாகியது.
தொடர் போராட்டங்களின் விளைவாக 27.06.2021 அன்று தமிழக மறுவாழ்த்துறை ஆணையர் திருமதி. ஜெசிந்தா லாசரன்ஸ் திருச்சி சிறப்பு முகாம் சென்று மூன்று வாரங்களுக்குள் தமிழக அரசால் குறிப்பிட்ட அளவு ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார். 28.06.2021 அன்று திருச்சி கொட்டப்பட்டி அகதிகள் முகாமுக்குச் சென்ற தமிழக மறுவாழ்த்துறையின் கௌரவ அமைச்சர் திரு மஸ்தான் புலம்பெயர் ஈழத்தமிழர் யாரையும் வற்புறுத்தி இலங்கைக்கு அனுப்பமாட்டோம், ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைத்தை மேம்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இலங்கையின் மன்னார் மாவட்டம் தலைமன்னாரில் இருந்து கடந்த ஆண்டு மீன் பிடிக்க வந்த தமிழ் மீனவர்கள் 5 பேர், எதிர்பாரா வகையில் திசைமாறி, தமிழ்நாட்டு எல்லையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாகியும் தங்களை விடுதலை செய்யவில்லை என்றும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இலங்கைத் தமிழர்கள் சிலரின் தண்டனை காலம் முடிந்தவர்களையும் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 15- 07- 2021 ஆம் திகதியன்று, 10 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். மேலும், கடவுச்சீட்டு வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை, தற்போது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 11-08-2021 திகதி முதல், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை உடனே விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 8ஆவது நாள் 08-07-2021 அன்று 2 பேரின் உடல்நிலை மோசமானதால் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முகாம் சிறையில் இருந்து தங்களை உடனடியாக விடுவிக்க கோரி கடந்த 11-08-2021 தேதி முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராடத்தில் ஈடுபட்டிருந்த 25 பேரில், உமா ரமணன் என்பவர் வயிற்றிலும், அமல்ராஜ் என்பவர் கழுத்திலும் கத்தியால் கிழித்துக் கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது சிலர் மரங்களின் மீது ஏறி, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தம்மை அழித்துக் கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
அமல்ராஜ் நிசாந்த், ரீகன், நிமலன், ஸ்டீபன், உட்பட 14 பேர் தூக்க மாத்திரைகளை உண்டு கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனால் முகாம் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த துணை கமிசினர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் 108எண் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 16 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு அவசர அறிக்கை அனுப்பப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு முகாமில் உள்ள இவர்களுக்கு உணவுப்படியாக தினசரி ரூ.175 வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு அவர்களே சமைத்துக் கொண்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு நாள் உணவுப்படி மற்றும் தங்களின் சேமிப்பில் இருந்தும் மொத்தம் ரூபா.18,000 முதலமைச்சரின் நிவாரண நிதியாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் அகதிகளுக்கான துணை ஆட்சியர் ஜெமுனா ராணியிடம் இவர்கள் வழங்கி தமது மனிதநேயப் பங்களிப்பினை செய்திருந்தார்கள்.
திருச்சி சிறப்பு முகாமில் பாகாப்பிற்கு 250-க் மேற்பட ஆயுதந்தாங்கிய காவலர்கள், மின்சா கம்ப வேலி, கண்காணிப்புக் கேமராக்கள், உயர்ந்த கோபுங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தமிழ்நாட்டில், மூன்று தலைமுறைக்கு மேலாக வெளிப்பதிவிலும் முகாம்பதிவிலும் தங்களை அகதிகளாக பதிவு செய்து முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள். சிலர் வழக்களில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணை வழங்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டும் சிறையிலிருந்து வழக்கை நடத்தி நிரபராதி என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு அல்லது குற்றம் நிருவிக்கப்பட்டு நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்காக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் செல்ல முடியாது சிறப்பு முகாமில் அடைக்கப்படுவரும் நிகழ்வு இன்று வரை தொடர்கதையாகிறது. கால வரையறையின்றி இவர்களை அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? இவர்கள் 20 நாட்களாக தொடர்ந்து உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இப் போராட்டத்தில் இறந்து போனால் தங்கள் உடல் உறுப்புக்களை தமிழினத்திற்கு தானமாக வழங்குகிறோம். என்பதனை பெரும் மனத் திருப்தியுடன் தெரிவித்துள்ளார்கள்.
ஈழத்தமிழர்கள் 115 பேர் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இரண்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை இப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் பொய்யான வழக்குகளை தொடர்ச்சியாக புனைகின்றார்கள் எனவும் சிறைக் கைதிகளை சட்டத்தரணிகள் சந்தித்துப் பேசும் வாய்ப்பு தொடர்சியாக மறுக்கப்பட்டு வருவதையும் விடுதலையினை முன்நிறுத்தி செய்துவரும் அகிம்சை கவணயீர்ப்பு போராட்டங்களுக்கு எதிராக புதிய புதிய வழக்குகள் பதிவு செய்வதாகவும் இலங்கை நாட்டுக்கு திரும்பச் செல்ல விரும்பாதவர்களையும் இலங்கைக்கு நாடுகடத்தப் போவதாக கியூ பிரிவு பொலீசார் பயமுறுத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 51, உலகளாவிய சட்டங்களை இந்திய அரசு மதித்து செயலாற்ற வேண்டும் எனச் சொல்கிறது. அதோடு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை இந்திய குடிமக்களைப் போன்று குடிமக்கள் அல்லாத நபர்களும் பெறுவதற்கு பிரிவுகள் 14 மற்றும் பிரிவுகள் 20முதல் 28 வரையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, பல்வேறு உயர்நீதிமன்ற ,உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலும் அகதிகள் உரிமைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்படும் கைதிகள் பராமரிப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக சிறைவிதிகள் உண்டு. ஆனால் இந்த சிறப்புமுகாமில் அடைக்கப்படும் அகதிகள் உரிமைகள் தொடர்பாக எந்த விதியும் இல்லை. இதனால் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் (WP 15044/91) உயர்நீதிமன்ற கௌரவ நீதிபதிகள் அருணாசலம் மற்றும் பிரதாப்சிங் அவர்கள் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவெனில்,
(1) சிறப்பு முகாமில் உணவு வழங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக ஓரு உதவி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.
(2) சிறப்பு முகாமில் வைக்கப்படுபவர்களுக்கு அவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதேயன்றி மற்றும்படி அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
(3) சிறப்பு முகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் குடும்பத் தலைவர்/ தலைவியரை வரவழைத்துத் தங்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இக் குடும்பத்தவர்களின் செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
(4) சிறப்பு முகாமிற்குள் இருப்பவர்களை சிறையில் சிறைவாசிகளை ‘லாக்கப்’ செய்வதுபோல் (செல்களில் வைத்துப் பூட்டுதல்) செய்வது கூடாது. முகாமின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
(5) பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். எவ்வித நேரக் கட்டுப்பாடுமின்றி விரும்பிய நேரம் பேசுவதற்கும், பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதிக்கப்படும்.
(6) பொலீசார் காவலுக்கு மட்டும் அதுவும் சிறப்பு முகாமின் வெளிப்புறத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். மற்றும்படி தாசில்தார் பொறுப்பில் தான் முகாம் நிர்வகிக்கப்படும்.
(7) நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்தச் செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பிவைக்கப்படும்.
தமிழக அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக தமிழக அரச உயர்நீதிமனறம் தெரிவித்தது. ஆனால் உண்மையென்னவெனில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அவ்வுரிமைகளில் ஒன்றைக் கூட தமிழக அரசு இச் சிறப்பு முகாம்களில் வழங்கவில்லை. மாறாக தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் மனிதாபிமானமற்ற முறையில், ஈவிரக்கமின்றி, ஈழத்தமிழ் அகதிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து உடல்,உள, பாலியல் சித்திரவதை செய்து வருகின்றார்கள் என்ற உண்மையினை மறுக்க முடியாது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் மற்றும் கியூ பிரிவினாள் தங்கள்மேல் பொய் வழக்களை புனைந்து கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றரர்கள். அவர்களது உணர்வுகளையும் மதித்திடாது அரசு அலட்சியப்படுத்தி வருவது தொடர் கதையாய் நீள்வது தமிழர்களின் கொடிய துயர நிலையை வெளிக்காட்டுகிறது.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி 20-ஆவது நாளாக உணவு தவிரப்பு அறத்தின் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த காலங்களில் பல முறை அவர்கள் பல அகிம்சைப் போராட்டங்களை முன் னெடுத்து போராடிய போது விரைவில் விடுதலை செய்வதாக தமிழ்நாட்டின் அரச இயந்திரங்களினால் பல வாக்குறுதிகள் அளித்த தமிழக அரசு இன்று வரை அவர்களை விடுதலை செய்யவில்லை விடுதலை செய்வதற்கான முன்னெடுப்புக்கள் எதனையும் ஏற்படுத்தவில்லை.
விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டவர்கள் நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்க்கையை தொடர உதவுமாறு தமிழ்நாடு அரசுக்கு பல கோரிக்கைகளை விடுத்தும், அரசும் ,அரச அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது, அலட்சியம் தாமதிக்கப்படும் நீதி அநீதி என்ற குற்றச்சாட்டினை மறுதலிக்க முடியாது. இவர்களில் பலருக்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன் உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் அகதிகளாக ஏற்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள். இன்னும் சிலர் விடுதலை செய்தால் தாய்நாட்டுக்குச் சென்று சொந்தங்களுடன் வாழவே விரும்புகின்றார்கள். அவர்களை காரணமே இல்லாமல் சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பது மனித உரிமை மீறல் ஆகும்.
செங்கல்பட்டு சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள் ஒரு சட்டதரணி. அவர் இந்த வெளிநாட்டவர் சட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் ‘அந்நியர் சட்டம் என்பது 1946ம் வருடம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. பொதுவாகவே காமன் வெல்த் நாடுகளுக்கு உட்படாத பிற அந்நிய பிரஜைகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவதற்காக இயற்றப்பட்ட சட்டம். இச்சட்டம் இலங்கைப் பிரஜைகளையும் பாதிக்காது. ஆனால் 1958ம் ஆண்டு உள்நாட்டு அமைச்சு வெளியிட்ட அரசாணைப்படி இந்த சட்டத்தை அமுல் செய்யும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்தை மாநிலங்களுக்கு வழங்கிய அரசாணையும் இதை இலங்கை அகதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதும் உள்நாட்டு வெளிநாட்டு சட்டங்களுக்கு எதிரானது என்பதும் சர்வதேச மனித உரிமைக்கும் சர்வதேச அகதிகள் பற்றிய ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதும் சட்ட நிபுணர்களின் முடிவு.
இந்தியா, இலங்கை அகதிகளுக்கு எதிராக அமுல் படுத்த முடியாது என்பது எனது ஆணித்தரமான கருத்து. குறிப்பாக தமிழக அரசு இந்தச் சட்டத்தை அமுல் படுத்தும் முறை, இந்த சட்டத்தை இவ்வாறு தமிழ்நாடு துஸ்பிரயோகம் செய்வதை இன்னும் முறையாக எவரும் உச்ச நீதிமன்றம் கொண்டு சென்று வாதாடவில்லை. அவ்வாறு செய்யின் இன்று சிறப்பு முகாம்களில் அடைக்ககப்பட்டிருக்கும் பலருக்கு விடிவேற்படும் என்பதில் ஜயமில்லை’
தமிழ் வழக்கறிஞர் பேரவை சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களை சந்தித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் சிறப்பு முகாமை மூட வலியுறுத்தி முறையீடு செய்ய மனு அளிக்கப்பட்டது. தமிழ் வழக்கறிஞர் பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜான்சன், தடா.ராசா, அன்புச்செழியன், பிரபாகரன், உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் உடன் கடந்த காலத்தில் ஈடுபட்டார்கள். ஆதன் தொடர் நடவடிக்கைகளும் தேவை. தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் தொடர்பாக அனுதாபம் உள்ள பல சட்டத்தரணிகள் இருக்கின்றனர். அவர்களில் யாராவது ஒருவர் இதனை உச்சநீதிமன்றம் கொண்டு செல்வாரேயானால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு நிச்சயம் விடுதலை கிட்டும் வாய்ப்புள்ளது.
08.06.2022அன்று திருச்சி சிறப்பு முகாம் சிறையில் ஈழத் தமிழர்கள் 115 பேர், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 01 வரும் , பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 01 வரும், சூடான் நாட்டைச் சேர்ந்த 01 வரும், நையிரியா நாட்டைச் சேர்ந்த 01 வரும், சீனா நாட்டைச் சேர்ந்த 01 வரும், ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 01 வரும், ஈரான் நாட்டைச் சேர்ந்த 07 பேரும், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 12 பேரும், உள்ளிட164பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கையர் 03பெண்கள், ஈரான் 03பெண்கள், உட்பட பெண்கள் 06 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டு 02பேரும், பார்வையிளந்து 01வரும், அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இலங்கையர்களில் வழக்கு முடிந்த நிலையில் 10பேர் உள்ளார்கள். கடவுச்சீட்டு வழக்கில் ஆண்கள் 92 பேரும் குழந்தை ஒருவரும், பெண்கள் 03 பேரும், உள்ளார்கள் இவர்களில் தமிழ்நாட்டு அகதி முகாம்களின் பதிவு உள்ளவர்களாக 48பேரும், தமிழ்நாட்டில் வெளிப்பதிவில் உள்ளர்கள் 09பேரும் ஆகும். தங்கள் மீள இலங்கைக்கு (ஈழத்திற்கு) செல்ல 53 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். தழிழ் நாட்டில் வாழ்வதா அல்லது இலங்கைக்கு செல்வதா என முடிவு எடுக்க முடியாத நிலையில் 05 பேரும் உள்ளார்கள்.
தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்கப்படாது ,விசாரணை கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட தங்களை நீதிமன்ற பிணையில் வந்தும் கைது செய்து மீண்டும் சிறப்பு முகாமில் அடைத்துள்ளதாகவும், குடும்பங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொடர முடியாத நிலையில் குறைந்தபட்சம் அவர்கள் வெளியில் தங்கள் குடும்பம் அல்லது உறவினர்களோடு சேர்ந்து வாழ ஆவ னை செய்ய டா நிலையில் கடந்த 20.05.2022 தொடக்கம் 5 கோரிக்கைகளை முன்வைத்து விடுதலை கிடைக்கும் வரை அல்லது சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னிலைப்படுத்தி 20 நாட்கள் கடந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.
அவர்களுடைய கோரிக்கைகள் சட்டபூர்வமானவை….
- இலங்கை பௌத்த சிங்களப் பேரினவாத உள்நாட்டு பிரச்சினை காரணமாக புலம்பெயர்ந்து வந்த தங்களை அகதிகளாகப் பதிவு செய்து திருச்சி சிறப்புகாமிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.
- அகதிப்பதிவு ரத்தானவர்களுக்கு, அகதிப்பதிவு இல்லாதவர்களுக்கும் புதிய பதிவுகள் வழங்கப்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
- சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழர் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு இலங்கை நாட்டுக்கு திரும்ப விரும்பும் ஈழத்தமிழர் உடனயாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். முகாம்வாசிகளின் நேர்காணல் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- சிறப்பு முகாமிலிருந்து விடுவித்திடக் கோரி ஈழத்தமிழர் நடத்திய போராட்டங்களையொட்டி அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். அவர்கள் மீதான நெருக்கடிகள் நிறுத்தப்பட வேண்டும்.
- ஈழத்தமிழர்கள் மீது அண்மைக்காலங்களில் தொடுக்கப்பட்ட கடவுச்சீட்டு வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு அவர்களுக்கு அகதிப்பதிவுகள் வழங்கப்பட உடனடி நடவக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னும் கோரிகைகளை முன்னிறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 20 நாட்களைக் கடந்த நிலையில் போராடி வருகின்றார்கள்.
20.05.2022 தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை 17பேர் ஆரம்பித்து 19 நாளாக நடைபெற்றுவரும் நிலையில் 07.06.2022.முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருந்த 17பேருடன் சேர்த்து புதிதாக 4பேரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்துள்ளனர். எங்களது விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் அத்துடன் சாகும் வரை இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் விடுதலைக்கான, போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ள நிலையில் 13 பேர் வைத்தியசாலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தடுத்து அடைத்து வைத்திருப்பது நீதிமன்றம் வழங்கிய தண்டனையா? அல்லது ஈழத்தமிழராய்ப் பிறந்து தமிழ்நாட்டை நம்பி வந்த குற்றமா? உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இந்திய நாட்டுக்குள் குறிப்பாக தமிழ்நாட்டிற்குள் உள்நுளைந்தது குற்றமா? அல்லது சிறு சிறு குற்றங்களுக்காளை கைது செய்யப்பட்டவர்களுக்கு குற்றப் பத்திரிகை தாக்குதல் செய்யப்பட்டுள்ளதா? நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள் இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களா? சிறப்பு முகாம் அகதிகள் மீது எந்தக் குற்றம் கண்டறியப்பட்டது? அதற்கான தண்டனை வழங்கப்பட்டதா? இல்லை… அவர்கள் மேல் போடப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதா? அல்லது நீதிமன்ற வழக்காணைக்கு உரிய கால நேரத்திற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளார்களா?
சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஈழத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். உலகத் தமிழர்கள் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பி வருகின்றார்கள். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிடக் கோரி கோரிக்கைகளை எழுதிய பதாகைகளையும் கையில் ஏந்தி சிறப்பு முகாமிற்குள்ளாக ஊர்வலமாகச் சென்று தங்களது கவனஈர்ப்பு போராட்டத்தையும் நடத்தி வருகின்றார்கள். தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களை விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசு தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவேண்டும் இப் போராட்டத்தில் அவர்கள் சாவடைந்தால் தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்துள்ளதனையும் உறுதிப்படுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம்.
தமிழக அரசால் கடந்த 06.10.2021அன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள், மற்றும் குழந்தைகளின் கல்வி, தொடர்பான விடயங்கள் என ஈழத்தமிழர் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுக்கப்பட உள்ளதாகக் கூறிய கூற்ரினை வரவேற்கின்றோம் . சிறப்பு முகாம் அகதிகளும் ஈழத்தமிழர்கள் தான். காலவரையின்றி அவர்களை அடைத்து வைப்பது நியாயமல்ல. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் அல்லது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும் இந்த விடயத்தில் சீரிய கவனமெடுத்து, அவர்களின் நல்வாழ்வையும், கௌரவமான வாழ்க்கைச் சூழலையும் உருவாக்க வேண்டியதன் தார்மீகக்கடமையுடன் குடியுரிமை, வழங்க வேண்டுமென ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் உருவகப்படுத்தும் வதைக்கூடங்களை உடனடியாக மூட முன்வரவேண்டும் என்பதை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் உலகத் தழிழர்கள் சார்பில் முன்வைக்கின்றோம்.
- நன்றி – சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் – நூல்- தோழர் பாலன்.