இந்திய…. எழுத்தாளர் திரு . ஜெயமோகன் தொடர்ச்சியாக ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக அவருடைய நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விக்கு தொடர்ச்சியாக கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார்
ஜெயமோகன் பதில்
முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே தவிர, சிவில் சொசைட்டியின் எதிர்ப்பாகப் பார்க்காது.”)
திருஜெயமோகனுக்கு சில விடயங்கள்…
இனப்படுகொலை குறித்து எந்தவொரு அடிப்படை அறிவும் இல்லாத ஒருவரால்தான் இவ்வாறு பேச இயலும். இனப்படுகொலை என்றால் என்ன என்பதை வரையறுப்பதற்குக் காரணமான ஆர்மீனிய இனப்படுகொலை பற்றிக் கூட இவர் அறிந்திருக்க மாட்டார் போல. இதற்குப் பிறகும் ஜெயமோகனைத் தூக்கிப் பிடிக்கும் இலக்கியவாதிகளது மனச்சாட்சியை எவ்வாறு சொல்வேன் .
தமிழ் நாட்டில் வாழும் ஒரு சில ஈழத்தில் பிறந்து தன்னுடைய இளம் வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து போர் போர்க்கள மக்களின் வாழ்வு படுகொலைகள் இனப்படுகொலை இனவழிப்பு பற்றி தெரியாத கற்பனைக் கதைபுனையும் எழுத்தாளர்கள் சிலர் தங்களை பிரபலமாக்க முனைகிறார்கள்
நீங்கள் இலக்கியம் இலக்கணம் பேசுங்கள் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையைப் பற்றி பேசும் போது சற்று சிந்தித்து தேடி அறிந்து வாசித்த பின் பேசுங்கள் உங்களுக்கு அவைகள் விளம்பரம் எங்களுக்கு அவைகள் வலிநிறைந்த வாழ்க்கை என்பதை நினைவில் வைத்திருங்கள்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா இல்லையா ?
இன அழித்தொழிப்புக்கான ஐக்கியநாடுகளின் வரையறையைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். ‘ஒர் இனப்பிரிவை அல்லது நம்பிக்கைப்பிரிவை முழுமையாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியாகத் திட்டமிட்டுச் செய்யப்படும் கொலை மற்றும் அழிவுச்செயல்பாடுகள்’.
என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஆனால் இன அழித்தொழிப்புக்கான ஐய்க்கிய நாடுகள் அவையின் வரையறை வேறு சிலவற்றையும் சொல்கிறது.
ஓர் இனக்குழுவை திட்டமிட்ட முறையில் பகுதியாக அல்லது குழுவாக அழித்தொழிப்பது, கூட்டுப் படுகொலைகளைச் செய்வது, அவர்கள்மீது உளவியல் யுத்தம் நடத்துவது, அவர்களது நிலத்திலிருந்து துரத்தியடிப்பது போன்றவையும் இனப்படுகொலையென்றே ஐ.நா. வரையறை சொல்கிறது.
இவ்வளவற்றையும் இலங்கை அரசு தமிழர்கள் எம்மீது நிகழ்த்தியிருக்கிற. இன அழிப்பு குறித்து ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் உள்ளது. இவைகள் நூல்களில் புனையப்பட்ட கதைகள் இல்லை !
போராட்டத்தில் எனது சாட்சியம், இலங்கைக்கான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – 2011 ஏப்ரல், வெளிவந்த அறிக்கையை படியுங்கள் எழுத்தாளரே…
ஈழத்திருநாட்டில் தமிழினப் படுகொலைகள்
1956 – 2009 வரையும் அதனைத் தொடர்ந்தும் இன்றும் நிகழ்கிறது குறிப்பிடத் தக்கது .
ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்களை பகுதியாகவோ, முழுமையாகவோ திட்டமிட்டு கொலை செய்தால், அது இனப்படுகொலை என்று ஏற்கிறது ஐக்கிய நாடுகளின் சபை.
கூறிஉள்ளது இனப்பாகுபாடு மற்றும் இன ஒடுக்குமுறை இன அழிப்பு இனக்குறைப்பு பற்றி ஏதேனும் தெரிந்து தான் நீங்கள் பேசுகின்றீர்களா ??
இலங்கை அரசு தமிழருக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி வருகிறது என்பதை நிலைநிறுத்தியும், சுதந்திரமான அனைத்துலக விசாரணையையும் நீதியையும் வேண்டியும் பெப்ரவரி- 10-2015 அன்று வட மாகாண சபையின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒர் அதிகாரப்பூர்வ தீர்மானம் ஆகும். இந்தத் தீர்மானம் சட்டத்துறை வல்லுனர்கள், பேராசிரியர்கள், அரசியல் வல்லுனர்களின் உள்ளீடு பெறப்பட்டு, போதிய தரவுகள் திரப்பட்டு நிறைவேற்றியதாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து வட மாகாண சபை முதல்வர் cv. விக்னேஸ்வரன் நிறைவேற்றிய உரையில் குறிப்பிட்டார்.இவற்றை நீங்கள் படித்துள்ளீர்களா ? படிக்கவில்லையா …. எழுத்தாளரே படியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .
உலகை உலுக்கிய ஹோலோகாஸ்ட் யூதர் இனப்படுகொலை, உக்ரேனிய இனப்படுகொலை, கம்போடிய இனப்படுகொலை, கஜகஸ்தான் இனப்படுகொலை, ருவாண்டா இனப்படுகொலை பற்றியாவது உங்களுக்கு தெரியுமா அல்ல அவற்றைப் பற்றியாவது அறிந்துள்ளீர்களா??
அங்கெல்லாம் நடைபெற்ற அனைத்தையும் விட கொடூரமான முறையில் ஈழத்தமிழர்கள் நாங்கள் படுகொலை செய்யப்பட்டோம் .
30 ஆண்டுகளாக நடந்த இலங்கை இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டில் உச்சத்தை அடைந்தது. 2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பதிவேடுகளின் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வன்னியில் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்த பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் 2 இலட்சத்து 70 ஆயிரம் பேர். ஆக, மொத்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் காணவில்லை. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு அதாவது 30% தமிழ்மக்கள் ஓராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 60ஆயிரத்திற்கு மேல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதனை அறிந்துள்ளீர்களா…?
போர் விதிமுறைகளுக்கு அப்பால் உணவும், குடிநீரும் கூட வழங்காமல் 2லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்களை குறுகிய முள்ளிவாய்க்கால் நிலப்பரப்புக்குள் ஒதுக்கித் தள்ளி, எங்கள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை வீசியும், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்களை கொடூரமாகப் படுகொலை செய்ப்பட்ட சம்பவங்களின் ஈரம் ஆறுவதற்கு முன் நடந்து தெரியாத நீங்கள் எமக்கு நடந்தது இனப்படுகொலை இல்லை என்று சொல்வது சரியா ? அது தானே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் தானே …அவர்கள் யாரும் படுகொலை செய்யப்படவில்லைத் தானே….!
வியட்நாமில் மொத்தம் 15 இலட்சம் பேர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது பத்தாண்டு காலத்தில் நடந்தது. வியட்நாம் மக்கள் தொகையில் 6% பேர் படுகொலையானார்கள். பத்தாண்டு காலத்தில் 6% பேர் படுகொலை செய்யப்பட்டதையும் ஒராண்டு காலத்தில் 30% பேர் படுகொலை செய்யட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்தில் தமிழ் மக்கள் சந்தித்துள்ள மனித உயிரிழப்புக்களின் கொடூர இனப்படுகொலையினை உங்களால் உணர முடியும்.
இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலைதான் என்பதை டிசம்பர் 1997, இல் லண்டனில் இயங்கும் தமிழர்; தகவல் மையம் ; (TIC) பிரகடனம் செய்திருந்தது.Dr Lutz Oette என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த,தற்போது SOAS University of London இல் விரிவுரையாற்றும்,பிரபல சட்ட வல்லுனர் மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையிலேயே தமிழர்; தகவல் மையம் “The International Crime of Genocide: The case of the Tamil People in Sri Lanka”என்ற இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமின்றி 2009க்கு பின்னர்Professor Francis A Boyle, Professor Ramu Manivannan, Professor M Sornaraja, Bruce Fein, Lee Rhiannon, Deirdre McConnell போன்ற உலகின் தலைசிறந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் கிடைத்த ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து,தமது ஆய்வறிக்கைகள் மூலம் இது இனப்படுnகொலை தான் என உறுதியா தெரிவித்துள்ளார்கள்.
இது மட்டுமன்றி, ஜேர்மனியில் நடைபெற்ற இலங்கையின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Permanent People’s Tribunal) பெரும் புகழ்வாயந்த பன்னிரு நீதிபதிகள் கொண்ட குழு, ஆதாரங்களையும் சாட்சிகளையும் பலநாட்களாக கேட்டு ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்று ஐயம் தெளிவுற தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்த தீர்ப்பாயம் சர்வதேச உரிமைகள் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு உதவியுடன் நடத்தபடுகிறது. இவ் அமைப்பு 1979 இல் இத்தாலியில் உருவாக்கபட்டது. இதில் ஐந்து நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் உட்பட 31 நாட்டு சமூக தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பு வியட்னாம் மீதான தீர்ப்பாயம்(1966-67) மற்றும் இலத்தீன் அமெரிக்கா சர்வாதிகாரம் (1974-1976) போன்றவிடயங்களை கையாண்டுள்ளது.
இவை தொடர்பாக எழுத்தாளர் திரு ஜெயமோகன் அறியவில்லை போலும் தாங்கள் எல்லாம் தெரிந்தவர் என்ற மகத்தையை விட்டு ஈழத்தமிழர்கள் ஆகிய எங்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளுங்கள். எமக்கு நடந்த இனப்படுகொலை, நடந்துகொண்டிருக்கும் இனக்குறைப்பு பற்றியாவது சில விடயல்களைத் தேடிப் படிக்க வேண்டி இருக்கும். அவை உங்களைப் போன்றவர்களின் மனச் சாட்சிக்கு வித்திடும் .
இனம் விடுதலை மொழி விடுதலை சமூக விடுதலை பற்றிய இலக்கு நோக்கம் சிந்தனை உங்களுக்கு உள்ளதா? ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி போசுவதற்கு முன் ஈழ இனப்படுகொலைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
நன்றி
மீள்பதிவு