இன்று உலக அகதிகள் தினம். 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 20ம் திகதி இந்த தினம் நினைவுக்கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. 2000ஆண்டிற்கு முன்னர் ஆபிரிக்க அகதிகளின் தினம் ஜூன் 20ம் திகதி நினைவுக்கூறப்பட்ட நிலையில், அதனையே உலக அகதிகள் தினமாகவும் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது
அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் (United Nations High Commissioner for Refugees) UNHCR ஆகும்.
United Nations High Commissioner for Refugees (UNHCR ) என்கிற அமைப்பு . 14 டிசம்பர் 1950ல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமை யகம் சுவிட்சர்லாந்தில் ஜெனிவாவில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பான (UNHCR ) ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954லும் 1981லும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.
ஒருவருக்கு தனது நாட்டில் எதாவது காரணத்திற்காக உயிர் ஆபத்து இருக்கின்றது என அவர் நம்பினால் அந்த நாட்டை விட்டு வெளியேறி அந்த நாட்டின் எல்லையை கடந்து வேறு ஒரு நாட்டில் அந்த நாடு தனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் நம்பினால் அந்த நாட்டில் அவர் தஞ்சம் என்று சொல்லப்டுகின்ற அடைக்கலம் அல்லது பாதுகாப்பை அவர் தேடுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது என ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் சாசனம் உறுதி படுத்துகின்றது.
”ஒருவர் தனது நாட்டில் தான் சேர்ந்திருக்கின்ற சமூக இனத்தை சேர்ந்தவர் அல்லது அவர் பேசுகின்ற மொழி அல்லது அவர் சார்ந்திருக்கின்ற சமயம் அல்லது அவரது அரசியல் சித்தாந்தம் காரணமாக அவர் துன்புறுத்தப்பட்டு உயிர்க்கு பாதுகாப்புக்கு உதவத்தான் இல்லை என்று நம்பும் பட்ச்சத்தில் அவர் தஞ்சம் கோருவதற்கு தகுதியானவர் ஆவர் ”
பேரில் தினம் தினம் அறங்கேரும் அவலங்களை அனைவரும் பார்த்த வண்ணமே உள்ளோம். உள்ளாட்டு யுத்தம், போர் சூழல், பாதுகாப்பு , துன்புறுத்தல் அல்லது ஆயுத முரன்பாடு போன்றவற்றிலிருந்து தப்பிக்க, எல்லாவற்றையும் விட்டு விட்டு வாழ்வா சாவா என்ற போராட்டத்துடன் உயிரை மட்டும் சுமந்தவர்களாய் பூர்வீக வாழ்விடங்களைவிட்டு வெளியேறி வேறு பிரதேசங்களில் அல்லது மாவட்டங்கள் வேறு மாகாணங்களில் அல்லது வேறு மாநிலங்களில் வாழ்கின்றார்கள் இன்னும் பலர் நாட்டை விட்டு வெளியேறி புலம்பெர்ந்து தஞ்சம் கோரி வாழ்கின்றார்கள்.
இந்த அடிப்படையில் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான நாடொன்றில் அடைக்கலம் புகுவதற்கு உரித்து உடையவர்கள் என்பதை இந்த சாசனத்தில் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொண்ட எல்லா நாடுகளும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உறுதி செய்துள்ளன. இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் அறிக்கைகள் குறி காட்டுகின்றன
தஞ்சம் கோருபவர்களை ஏற்று கொள்கின்றன. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த சாசனத்தில் கையொப்பம் இட்டு ஏற்றுக்கொள்ளா விடினும் அந்த நாடுகள் அகதிகளை மனிதாபிமான முறையில் தங்கள் நாடுகளில் தங்க வைத்து பராமரிக்கின்றன. அகதிகள் சாசனத்தை ஏற்றுக்கொண்ட நாட்டுகள் தங்கள் நாட்டுக்கு வரும் தஞ்சம் கோருவோரை அரவணைத்து அவர்களுக்கு அவர்களின் தஞ்ச கோரிக்கைகைகளை பரிசீலனை செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.
அகதிகளைக் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றுவது, அகதிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது எனப் பல நாடுகள் எடுக்கும் அதிரடி முடிவுகளைத் தடுக்க, 2016- ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்மட்டக் குழு ஒன்றைக் கூட்டியது ஐக்கிய நாடுகள் சபை. அதில் அகதிகள் விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியது. மேலும், அகதிகளிடையே பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் கல்வி, மருத்துவம், பணியாற்றும் உரிமை ஆகியவற்றை வழங்கவேண்டு என்றும் ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளது. ஆனால் சில நாடுகள் அண்மைய காலமாக அகதிகளின் மீது காட்டி வரும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான வகையிலான அணுகு முறைகளை பல மனித உரிமை நிறுவனங்கள் விமர்ச்சித்துள்ளன.
2016- ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அகதிகள் அணி சேர்க்கப்பட்டது. இதுபோன்று அனைத்து இடங்களிலுமே அகதிகளுக்கென தனி அங்கீகாரம் கிடைக்கப்பெற்று அவர்கள் மன அமைதி பெற ஐக்கிய நாடுகள் சபையின் அறிவுரைப்படி அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளான அவுஸ்திரேலியா அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் உட்பட ஐரோப்பிய நாடுகளை தவிர்ந்த பல ஆபிரிக்க, ஆசிய நாடுகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம், இலங்கைத் தமிழர்கள் என்று ஐக்கிய நாடுகளின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.
வரலாற்றில் தமிழினத்தின் இருப்பை அழிப்பதிலேயே, காலங்காலமாய்க் குறியாயிருந்த சிங்கள தேசத்தின் படைகள், 1916ம் ஆண்டிலிருந்து 1948 வரையும், 1948 தொடக்கம் 1954ம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி இனப்பிரச்சனையை அரசியலாக 1955 களில் துளிர்விட்டது. ‘சிங்களம் மட்டும்’ முழக்கத்துடன் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி பதவியேற்றார். அதன் பின்னர் இலங்கை தேசியம் என்ற கோட்பாடு சிதைவடைந்து இனப்பிரச்சனை படிப்படியாக விஸ்வரூபமெடுத்து .
தமிழர்களின் ஆயுதப்போராட்டங்கள் 1970களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன.1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் பதற்றம், கலக்கம், இடப்பெயர்வுகளும் மனித அவலத்தின் முக்கிய சாட்சியமாகவும் போரின் குறியீடாகவும் அமைகின்றது. அதன் தொடர்ச்சியாக 83இல் இடம்பெற்ற சிங்கள இனவாத அரசின் கொடூரங்கள் பெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு ஆரம்பமான தமிழ் மக்களின் இடப்பெயர்வு 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. 2009 தொடக்கம் இன்று வரை இன அழிப்பு, இனக் குறைப்பு, அழிவுகள் பிரச்சனைகள், ஏமாற்றங்கள் தொடர்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்திய இலங்கை அரசு தமிழ் இனத்திற்கு எதிரான யுத்தத்தை இன்னமும் நிறுத்தவில்லை.
1983இல் நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது பௌத்த சிங்களப் பேரினவாதம் நடத்திய இனப்படுகொலை இன அழிப்பை அடுத்து இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக எந்தவித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில், முதன்முதலில் 1983-ம் ஆண்டு, அகதிகளாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதிவாய்ப்புள்ள சிலர், விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983 – 1987, 1989 – 1991, 1996 – 2003, 2006 – 2010-ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் நோக்கிவந்தனர். தமிழக மறுவாழ்வுத் துறை அலுவலகத்தின் கணக்கின்படி இக்காலப் பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையிலிருந்து அகதிகளாகத் தமிழகம் நோக்கி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் 108 முகாம்களில் தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழக முதலமைர்சர் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி 1983 முதல் இதுவரை 3,04 269 பேர் இலங்கைத் தமிழர்கள் ஏதிலிகளாக தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளார்கள். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சார்ந்த 58,822 பேர் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 108 முகாம்களில் (இரண்டு சிறப்பு முகாம்கள் உள்பட) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், 13,540 குடும்பங்களைச் சார்ந்த 34,087 பேர் காவல் நிலையங்களில் பதிவுசெய்துவிட்டு முகாமுக்கு வெளியில் வாழ்ந்து வருகிறார்கள் எனத் தெரிவித்திருந்தார். 08.06.2022அன்று திருச்சி சிறப்பு முகாம் சிறையில் ஈழத் தமிழர்கள் 115 பேர் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் இரண்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை இப்படி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது.
2007ம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ம் ஆண்டு வரை 3 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
2004ம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3,50,000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது.
2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்து முள்ளிக்குளம் தொடக்கம் 2009 இல் முள்ளிவாய்க்கால் வரை வட கிழக்கு பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் , மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவில் மிகக் கொடூரமான பாதுகாப்பு வலயத்திற்குள் சற்றேறக் குறைய 5 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் வாழ்வை ஒட்டு மொத்தமாக முடித்துவிட ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற ஒரே சொற்றொடரை ‘அர்த்தமுள்ளதாக்கி’ அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவளித்து, அதன் மூலம் தமிழர்களின் நியாயமான, மனிதாபிமான உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு உலக நாடுகளின் பங்களிப்பும் மௌனமாக தமிழ் இனப்படுகொலையைத் திட்டமிட்டு ஈவு இரக்கமின்றி நடத்திய குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டனர்.
இலங்கை அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் நடத்தியது. இனவழிப்பு யுத்தத்தில் இரத்தக் கறைகளும் அழுகைக் குரல்களும் வெளியில் போக முடியாதயளவிற்கு மழைபோல் எறிகணைகளைப் பொழிந்தார்கள். மக்களின் பிணங்கள் வீதியோரங்கள் எங்கும் கிடந்தன. அவர்களை ஒரு புதைகுழிக்குள் போட்டு மூடமுடியாத வகையில் எறிகணைகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கொத்துக் கொத்தாக காயமடைந்து குருதி வெள்ளத்தில் மிதந்தார்கள். யார் யாரை பார்ப்பது என்ற நிலைமை. இன்னும் சிலர் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இனவெறிபிடித்த சிங்களவர்கள் எறிகணைத் தாக்குதல்களை நடாத்தினார்கள்.
அங்கேயும் மக்கள் உடல் சிதறிப் பலியாகினார்கள் எங்கேயும் போகமுடியாத சூழ்நிலையில் எங்கள் மக்கள் திணறித் தவித்தார்கள். யுத்தப் பிரதேசங்களிலிருந்து தப்பி வெளிவந்திருந்த பொதுமக்கள் நான்கு மாவட்டங்களிலும் கிட்டதட்ட 40 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். உயிரைத் தக்க வைத்து இன அழிப்பு அரசிடம் சென்றால் உயிர் தப்பிவிடலாம் அல்லது அந்த ஆபத்தைக் கடந்துவிடலாம் என்ற பயம் 90 முதல் 95 வீதம் நீங்கிவிடும் என்று ஆறுதலுடன் உடுத்த உடையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி வந்த மக்கள் வட்டுவாகல் நந்திக்கடல் ஊடாகச் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். அவர்கள் 2008 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முதல் 2009 மே வரையில் வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மாவட்டங்களில் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
UN OCHA வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வவுனியா மாவட்டத்தில் 2,60,039 பேரும், யாழ். மாவட்டத்தில் 10,956 பேரும், மன்னார் மாவட்டத்தில் 225 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 6,831 பேரும் வைத்தியசாலையில் ,329 பேரும் என ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் சரணடைந்தவர்கள், வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள், விடுதலைப் புலிகளில் இருந்தவர்கள் எனத் தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் உள்ளடங்கவில்லை.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மெனிக் பாம் முகாம்தான் இந்த இடைத்தங்கல் முகாம்களிலேயே மிகப் பெரியது. 2009 ஆம் ஆண்டு தை முதல் மே மாதங்களில் இடம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முகாமுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மெனிக் பாம் முகாம் ஆறு வலயங்கள் அல்லது உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (0 முதல் 5 வரையிலான எண்கள் கொண்டு வரிசைப்படுத்தி அழைக்கப்படுகின்ற இவ்வலயங்களுக்குத் தமிழ் அரசியல் தலைவர்களது பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன). இங்கே கூடுதலாக இரண்டு வலயங்களை ( வலயம் 6A மற்றும் 6B) அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. மேலும் வவுனியா பகுதியில் அவசரகாலத் தங்குமிடங்களாக அமையக்கூடிய குறைந்தபட்சம் 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டது. மெனிக்பாம் முகாம் தொகுதிகளில் மட்டும் ஏறத்தாழ 1,74,498 -க்கும் அதிகமானவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். 1,400 அதிகமான ஏக்கர் நிலப்பரப்பினைப் கொண்ட இந்த முகாம் முட்கம்பி வேலியால் அடைக்கப்பட்டது. இந்த முகாம்களுக்குள் சிலர் தமது உறவினர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், ஏனையோர் தமது உறவினர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என வேறுபடுத்தப்பட்டிருந்தவர்களைத் தேடினார்கள்.
முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை இராணுவத்தினாலும், போலீஸ் படையினராலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் விசாரணை என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் பல வார்த்தைகளால் சொல்ல முடியாத உடல், உள, பாலியல், ரீதியாகப் பல சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவித்த சொந்தாங்கள் மன நோயாளியாகினோர் அதிகம்.
உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத் தன்மைக்கான ஆதாரங்களாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள். இந்த முகாம்களில் பெரும்பான்மையானவை தற்காலிகத் தங்குமிடங்களாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. இடைத்தங்கல் முகாம்கள் என்றும் பெயரில் இங்கே ஒடுக்கமான கூடாரங்களை அமைத்து ஒரு கூடாரத்தினுள் ஆகக் குறைந்தது முப்பது பேர்வரை அடைத்திருந்தார்கள். ஒரு கூடாரத்தினுள் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, மகன், மகள் என நான்கு பேர் இருந்தால் தாய் ஒரு கூடாரத்திலும் தந்தை இன்னொரு கூடாரத்திலும் மகனும் மகளும் வெவ்வேறு கூடாரங்களிலும் அடைக்கப்பட்டிருக்கும் நிலை. ஒரு குடும்ப அங்கத்தவருக்கு மற்றவர்கள் எங்கே அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் தெரியாதநிலை காணப்பட்டது. உண்மையில் இந்த நலன்புரி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கூடங்களுக்கு ஒப்பானவை.
2009ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பிபிசி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது .
தழிழர் பிரதேசங்கள் இராணுவமயப் படுத்தப்பட்டதனாலும், அங்கு இராணுவப் படைகளின் அதிகரித்த நடமாட்டத்தினாலும் பாதுகாப்புக் குறித்து அச்சம் நிலவுகின்றது. சகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டு நீண்ட காலம் இரகசியத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாலும் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
தடுப்பில் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமானது. ஒருநாள் போராளியாக இருந்தவர்கள் கூட வருடக் கணக்கில் தடுப்பில் வாட வேண்டிய கட்டாயம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மாத்திரமல்லாது நலன்புரி நிலையங்களிலும் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டனர். இன்னும் சிலர் சரணடைந்திருந்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலை. வவுனியா மாவட்டமே கேந்திர நிலையமாக இயங்கியது. அங்கு தற்காலிக வாழ்விடங்களாகப் பாடசாலைகள் கூட்டுறவுப் பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பல்கலைக்கழக வளாகம், மெனிக்பாம் முகாம், மற்றும் செட்டிகுளம் பகுதியில் பல வலயங்களாக்கப்பட்டு தற்காலிக கொட்டகைகளில் மக்கள் குடியேற்றப்பட்டு இருந்தனர்.
உள்நாட்டு யுத்த இடர்களை அனுபவித்த மக்களால் அதன் பாதிப்புகளிலிருந்து இலகுவாக மீட்சிபெற முடியாதுள்ளது. இதற்கு அவர்கள் எதிர்கொண்ட வன்முறை பரவியிருந்த அளவும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவும் காரணமாகும். பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இடப்பெயர்வை அனுபவித்த மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது வாழ்க்கையைப் புனரமைப்பதற்காகப் பல்வேறு வளங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் 1989- 1990 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை அரசியல் தஞ்சம் கோரி இந்தியாவில் பல மாநிலங்களும் குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள முகம்களிலும் காவல் நிலையங்களில் பதிவுசெய்துவிட்டு முகாமுக்கு உள்ளும் வெளியும் ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிற நிலையில் 2022 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 264.4 என்ற அளவிற்கு சரிந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றில் கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
நிலவும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் தற்பொழுது இந்த பிரச்சினை எப்போது முடிவடையும் தெரியாத நிலையில் இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த வண்ணம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. வாழ வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது அவர்களுக்கு இங்கே அகதிகளாக வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்தும் கடந்த காலங்களில் வந்த அரசியல் தஞ்சக் கோரிக்கை அகதிகளுக்கும் வரும் காலகட்டங்களில் அகதியாக வருபவர்களுக்கு என்ன செய்ய இருக்கிறோம் என்பதையும் குறித்து நடப்பாண்டின் திராவிட முன்னேற்றக் கழக தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்காமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009 ஆண்டு மே மாதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்பு தமிழ் தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் பொதுவாக எல்லா நாடுகளுமே மாற்றங்களை கொண்டுவந்தன. நிராகரிக்கபட்டவர்கள் நாடு கடத்துகின்ற அணுகு முறையை கையாள ஆரம்பித்தார்கள்.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், மோதல்கள், வன்முறை, துன்புறுத்தல் பயம் மற்றும் மனித உரிமை மீறல்கள் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89.3 மில்லியனாக இருந்தது. இது ஒரு தசாப்தத்திற்கு முன்பும், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்திலும் பலவந்தமாக இடம்பெயர்ந்திருந்த 42.7 மில்லியன் மக்களை விட இருமடங்கு அதிகமாகும். 0-17 வயதுக்கு குறைவானவர்கள் 41 சதவீதம், 18-59 வயதுக்கு உட்பட்டவர்கள் 53 சதவீதம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 சதவீதம் ஆகும்.
இரண்டாவது மகா யுத்தத்தின்போது அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்த அகதிகள் சாசனத்தை உலக நாடுகள் உருவாக்கினாலும் இன்றயை காலக்கடத்தில் உலக நாடுகளில் இருந்து பாதுகாப்பை தேடி ஓடும் மக்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் இந்த நாடுகளே திண்டாடுகின்றன. உலகெங்கும் உள்ள அகதிகளில் 42 சதவீதம் பேர் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் என்பது மேலும் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து கூடுதலாகப் பேசவேண்டிய தேவை உள்ளது. அகதிகளின் பயணம் என்பது தப்பிப்பிழைத்து உயிர்வாழ்வதற்கான பயணம்தான். ஆனால் உயிர்வாழ்வதென்பது தன்மானத்துடன் உயிர்த்திருப்பதாகும். இப்படியான ஒரு வாழ்வை எல்லா அகதிகளுக்கும் உத்தரவாதப்படுத் தி வாழ்வதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்ய வேண்டும்.
United Nations High Commissioner for Refugees (UNHCR ) என்கிற அமைப்பின்16 ஜூன் 2022 புள்ளி விபரங்களின் படி உலக நாகளில் உள்ள இலங்கை அகதிகள் Recognized – 76,282 , Complementary protection- 37,743, Rejected- 204,608, Otherwise closed – 44,050, Total Decisions – 363,139 தமிழ் அகதிகள் அதிகம், தமிழ் அகதிகள் பற்றி, பல நாடுகளில் அகதி தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட நிலையிலும் வாழும் தமிழர்கள் நிலை பற்றியும், சர்வதேச சட்டகங்ளின் படி எவ்வாறு தஞ்சம்கோருவது என்பது பற்றியும், தமிழ் அகதிகள் தற்போது தஞ்சம் கோரி செல்லும் முக்கிய நாடுகள் பற்றியும், நாடுகளில் உள்ள தஞ்சக் கோரிக்கைகள் பற்றியும், இறுதியாக இலங்கை தற்போது உள்ள சுழலில் அரசியல் தஞ்சம் கூறமுடியுமா ? பல்வேறு காராணங்களினால் அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிறநாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்லும் அகதிகள் தொடர்பிலான விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். இதன் முழுமையான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது .
தற்போது பலநாடுகளில் தஞ்சம் கோரி மறுக்கப்பட்ட நிலையிலும் இன்னும் பரிசீலனை செய்யப்படாமல் முடிவுகளுக்கு காத்து இருக்கும் அகதி தஞ்சம் கோரியோர் அந்த நாடுகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் மனித உரிமை அமைப்புக்களுடன் மற்றும் மனித உரிமை செயற் பட்டாளர்களை அணுகி அண்மை காலங்களின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் வெவ்வேறு செயற்பாட்டாளர்கள் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகளை கிடைக்க செய்து தங்கள் நாட்டுக்கு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டால் முகம் கொடுக்க கூடிய அச்சங்களை தொடர்பு படுத்தி அந்த நாடுகளின் தஞ்சம் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு அல்லது நீதி மன்றங்களில் புதிய மனுக்களை செய்வது பொருத்தமாக இருக்கும்.
அகதிகளின் வருகை, குடிவரவு என்பன பல அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அரசியல் பிரச்சினையாக மாறி. தேர்தல் மேடைகளில் ஒரு அரசியல் பேச்சு பொருளாக மாறியுள்ளது மாத்திரமின்றி நாட்டு மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் மோதல்கள் தீர்க்கப்படாமல், புதிய புதிய மோதல்கள் வெடிக்கும் அபாயங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இருபத்தியோராம் நூற்றாண்டை வரையறுக்கும் ஒரு அம்சம், தொடர்ந்து அதிகரித்து வரும் அகதி மக்கள் எண்ணிக்கையும், அகதிகளாய் புலம் பெயர்வோர், அவர்களில் உயிரிழப்போர் என்ற செய்திகளும் தினசரி செய்திகளாக வரும் இந்த அவல நிலை மாறுவதற்கு உலகநாடுகள் ஒருங்கிணைந்து திட்டமிடவேண்டிய தேவை இருப்பதை நாம் மறுக்கவும் மறைக்கவும் முடியாது.