பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையுடன் தொடங்கிய தைவான் கடற்கரையில் சீன இராணுவ ஒத்திகையுடன் இந்த நடவடிக்கை
தமது எச்சரிக்கையை மீறி மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, தைவான் அருகே மிகப்பெரிய இராணுவ ஒத்திகையின் ஒரு பகுதியாக சீனா 11 ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இந்நிலையில், இலங்கை வரும் ஆய்வு கப்பல் குறித்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. இந்தியாவின் கவலைக்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.
01 யுவான் வாங் கிளாஸ் கப்பல் ஆகஸ்ட் 11 அல்லது 12ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கப்பல் செயற்கைக்கோள்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கண்காணிக்கும். 400 பணியாளர்களைக் கொண்ட இந்த கப்பலில் பாரிய கண்காணிப்பு ஆண்டெனா மற்றும் பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
02 இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளில் நிறுத்தப்பட்டால், ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை இந்தக் கப்பல் கண்காணிக்க முடியும்.
03 இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை கண்காணிப்பதன் மூலம், ஏவுகணைகளின் செயல்திறன் மற்றும் அவற்றின் துல்லியமான வரம்பு குறித்த தகவல்களை சீனாவால் சேகரிக்க முடியும்.
04 அணுசக்தி அல்லாத தளம் என்பதால் கப்பலை நிறுத்த அனுமதிப்பதாகவும், ஆனால் இந்தியாவின் கவலைகள் குறித்து அறிந்திருப்பதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்காக தமது கப்பலை அனுப்புவதாக சீனா அறிவித்தது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.
05 கப்பலின் முன்னேற்றத்தை கண்காணித்து வருவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. “இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
06 யுவான் வாங் கப்பல் மலாக்காவின் பரபரப்பான நீரிணையைத் தவிர்த்து இந்தோனேசிய ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைய வாய்ப்புள்ளது.
07 இந்த கப்பல் சீன தேசிய விண்வெளி நிர்வாகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
08 1.4 பில்லியன் டொலர் ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை செலுத்த வேண்டிய இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதை இந்தியா சந்தேகிக்கின்றது.
09 கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் பாதைகளில் அமைந்துள்ளஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு இலங்கை 2017 இல் சீனாவிற்கு வழங்கியது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
10 2014ம் ஆண்டில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டது, இது இந்திய கடற்படைக்கு பாதுகாப்புக் கவலையை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இலங்கை துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் பயணம் எதுவும் நடைபெறவில்லை.