‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற தலைப்பில், 1986 ஆம் ஆண்டு ‘இனி’ இதழில் ஒரு கட்டுரை வெளியாகியது. அந்தக் கட்டுரையை எழுதியதன் வழியாகத்தான் வெங்கடேஷ் சக்கரவர்த்தி தமிழ் அறிவுலகுக்கு அறிமுகமாகிறார். பாரதிராஜாவின் திரைக்கலை குறித்து வந்திருக்கும் மதிப்பாய்வுகளுள் சிறந்தது என்று அந்தக் கட்டுரையைக் கொள்ளலாம். வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் முதல் நூலாகிய ‘சுவடுகள்’ தொகுப்பின் முதல் கட்டுரையாகவும் இந்தக் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. சுவடுகள் தொகுப்பின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி : ‘என் விரிவுரை, ‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற தலைப்பில் கட்டுரை வடிவத்தைப் பெற்று இனியின் முதல் இதழில் வெளியானது’. ஆனால், இனியின் இரண்டாவது இதழில்தான் அந்த கட்டுரை வெளியாகியதாக நினைவு சொல்கிறது.
இனி, ‘இனி’ இதழ் குறித்துக் கொஞ்சம்…
எஸ்.வி.ராஜதுரையை ஆசிரியராகக் கொண்டு 1986 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வெளியானது முதலாவது இதழ் என்பதாக நினைவு. கருப்பு வெள்ளை ஒளிப்படமொன்று அட்டைப்படமாக அமைந்திருந்தது; மூதாட்டி ஒருவரின் முகம்; மூப்பின் வரிகள் மிகத் துல்லியமாக வளைந்தோடும் தோல்பரப்பு; காற்றலை செதுக்கிச் சென்ற மேடுபள்ளங்களை ஏந்திக் கிடக்கும் பாலை மணற்பரப்பு போல், பரந்த நிலக்காட்சியென விரிந்துகிடந்தது முகப்பரப்பு. கழிவிரக்கமற்ற துன்முறுவல் உறைந்து படர்ந்த முகம். பின்னட்டையின் வெளிப்புறத்தில் ‘மெரினாவில் குளிக்கும் எருமை மாடுகள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த ஒளிப்படம் … அதுவும் சொக்கவைத்தது. இந்த ஒளிப்படங்களை எடுத்திருந்தவர், ஜான் ஐசக் கருணாகரன். ஐக்கிய நாடுகள் அவையில் ஒளிப்படக் கலைஞராக அப்பொழுதைய காலகட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தமிழர். உள்ளே புரட்டினால், ஜான் ஐசக் கருணாகரனைப் பற்றிய நல்ல அறிமுகம். அத்தோடு, திரைக்கலை குறித்து நல்லதொரு அறிமுக் கட்டுரையும் வெளியாகியிருந்தது.
‘எது நல்ல சினிமா?’ என்ற தலைப்பில் எஸ்.தேவபிச்சை (தேவதேவன், புனைப்பெயரில் எழுதிய கட்டுரை என்றார்கள் நண்பர்கள்) எழுதியிருந்த கட்டுரை. காலம், வெளி, பிம்பக் கட்டமைப்பு உள்ளிட்ட கலைக்கூறுகளின் இயக்கவோட்டத்தைப் படத்தொகுப்பின் பொழுது மாற்றியமைப்பதால் பார்வையாளரின் உணர்வோட்டமும், கருத்தோட்டமும் எப்படி மாற்றமுறுகின்றன என்பது குறித்து எளிய அழகுடன் விவரித்துச் சென்ற கட்டுரை. ருஷ்ய படத்தொகுப்பு பாணியான ‘குலசோவ் எஃபெக்ட்’ குறித்து எளிமையாக, அருமையாக அறிமுகப்படுத்தியிருந்தது அந்தக் கட்டுரை.
விலை ஐந்து ரூபாய் என்று நினைப்பு. அடுத்த இதழுக்காக ஏங்கித் தவித்தது மனம். ‘லட்சம் ரூபாய் விழவேண்டும் ஆண்டவா’ என்று லாட்டரி வாங்கியவனுக்குக் கோடி ரூபாய் விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அடுத்த இதழின் ஒரு கட்டுரையைப் படித்து முடித்தபொழுதில். கோயமுத்தூரில் காந்திபுரம் மையப் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்திருந்த விஜயா பதிப்பகத்தின் கடையில் ‘இனி’ இதழை வாங்கி, வாசலிலேயே நின்று அந்தக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டுத்தான் ‘நஞ்சப்பா சாலை’யில் கால் வைக்க முடிந்தது. அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘பாரதிராஜாவின் சினிமா’. எழுதியிருந்தவரின் பெயர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி என்றிருந்தது.
அடுத்தடுத்த இதழ்களிலும் திரைக்கலை மதிப்பாய்வுக்கு என்றே சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. மூன்றாவதோ நான்காவதோ இதழில் ‘புராணிக மரபும் பாக்யராஜின் திரைப்படங்களும்’ என்ற தலைப்பில் எம்.டி.முத்துக்குமாரசாமி எழுதியிருந்த கட்டுரை வெளியானது. எட்டு இதழ்கள் வந்தது ‘இனி’. சிற்றிதழ் மரபுப்படி, பொருள் வற்றிப்போனதால் ‘இனியில்லை இனி’ என்றானது. பத்தாண்டுகள் கழிந்து, மாணவர் நகலகம் அருணாச்சலம் வெளியீட்டாளராக இருக்க, கோயமுத்தூர்க் காரராகிய தமிழோசை விசயக்குமார் ஆசிரியர் பொறுப்பெடுத்து நடத்த, மீண்டு வந்தது இனி. இந்த இனி பழைய இனி அல்ல; இலக்கியச் சிற்றிதழ் அல்ல. தமிழ்த் தேசியக் கோட்பாட்டு அரசியல் பேசிய இனி. சிறிது காலம் கழிந்து, சுப.வீரபாண்டியன் ஆசிரியர் பொறுப்பேற்றுச் சிலகாலம் நடத்தி வந்தார்.
இவ்வாறான இனியின் வரலாறு, நிற்க!
பாரதிராஜாவின் சினிமா என்கிற கட்டுரையில், ‘ஆசிரியர் கோட்பாடு (Auteur’s theory) என்கிற மதிப்பாய்வு முறைமை கொண்டு பாரதிராஜாவை மதிப்பீடு செய்திருந்தார் வெங்கடேஷ் சக்கரவர்த்தி. (ஆசிரியர் கோட்பாடு என்கிற பதத்தை ‘படைப்பாளி கோட்பாடு’ என்று திருத்தம் கொடுத்து பிற்காலத்தில் எழுதலானார். இந்தத் திருத்தத்துக்குக் காரணமானவர் வெ.ஸ்ரீராம்). அந்தக் கட்டுரைதான் ஃப்ரெஞ்சுத் திரைப்பட மதிப்பாய்வு முறைமையைத் தமிழுக்கு அறிமுகம் செய்வித்தது. ஃப்ரெஞ்சு புதிய அலை சினிமாவைத் தோற்றுவித்த கலகக்கார மதிப்பாய்வர்களும் கலைஞர்களுமாகிய
ழான் லுக் கோதார், பிரான்சுவா ட்ரூஃபோ, ழாக் ரிவெட், க்ளாட் சாப்ரால், எரிக் ரோமர் ஆகியோரைக் குறித்தும், இவர்களுக்கெல்லாம் முன்னோடியான கோட்பாட்டாளர் ஆந்த்ரே பாஸன் குறித்தும் அறிமுகம் செய்வித்தது. ‘ஆசிரியர் கோட்பாடு என்றால் என்ன?’ என்று விளக்கம் தரப்பட்டது. பாரதிராஜாவின் திரைப்படங்களை, ‘மரபை மீறிய சினிமா’ என்று பொருள் விளக்கியிருந்தார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி.
ஆசிரியர் கோட்பாடு, ஃப்ரெஞ்சு புதிய அலைக் காரர்களின் கண்டுபிடிப்பு. இலக்கிய மதிப்பாய்வு முறைமைகள் போலல்லாது, புதிய மதிப்பாய்வு முறைமைகளைத் திரைக்கலை வேண்டிநின்ற காலப்பருவத்தில் ஃப்ரெஞ்சுத் திரைப்படக் கலைஞர்கள் கண்டடைந்த புதிய மதிப்பாய்வு முறைமை அது. இலக்கியவாதிகள் போலல்லாது – சந்தையின் கட்டுப்பாடுகளோடும், சந்தையின் சவால்களோடும் முரண்பட்டு உடன்பட்டு இயங்குகிறவர்கள் திரைக்கலைஞர்கள். ஒவ்வொரு திரைப்படத்தை வெளியிடுவதும் பிள்ளைப்பேறொத்த வலிகொண்ட அனுபவமாகும். ‘பெற்றெடுப்பதுதான் முதன்மை இலக்கு’ என்பது போல், ‘திரைப்படத்தை வெளிக்கொணர்வதுதான் முதன்மை இலக்கு’ என்றான பின்னர், விட்டுக்கொடுத்தல்கள் ஏராளமுண்டு. இவற்றுக்கெல்லாம் அப்பால் இருக்கிறது ஒரு திரைப்படத்தின் கலையார்த்த வெற்றி. எனவே, ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தை மதிப்பாய்வு செய்வதைவிடச் சிறந்த அணுகுமுறை என்னவெனில், அந்தத் திரைப்பட இயக்குநரின் மொத்தத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அந்தத் திரைப்படங்களின் வழியே இயக்குநரை மதிப்பாய்வு செய்வது. ஒரு இயக்குநர் பல்வேறு ரகங்களில் திரைப்படங்களை உருவாக்கிச்சென்ற போதிலும், அவரது திரைப்படங்கள் அனைத்திலும் பொதுமைக்கூறுகள் சில நிலவிவருவதைக் காணலாம். இந்தப் பொதுமைக்கூறுகளைத் திரட்டிக் கண்ணுற்றால் இந்தக் கூறுகளுக்குள் ஆசிரியர் அகப்படுவார். இதுவே ஆசிரியர் கோட்பாட்டின் சுருக்கம்
பாரதிராஜாவின் திரைப்படங்கள் அனைத்திலும் (1977 தொடக்கம் 1986 ஈறாக) தொடர்ந்து நிலவிவருகிற பொதுமைக்கூறுகளைத் திரட்டிக் காட்டினார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி. ‘கிராமத்திற்குள் புதியவர் வருகை’ அல்லது ‘வெளியார் வருகை’ என்ற கதைக்கூறானது முதன்மையாகக் கொள்ளப்பட்டது. 16 வயதினிலேயில் விலங்கு மருத்துவர்; கிழக்கே போகும் ரயிலில் ராதிகா, விஜயன் ( ‘மிலிட்டரி’ ) ஆகியோரின் கதாபாத்திரங்கள்; புதிய வார்ப்புகளில் பள்ளிக்கூட ஆசிரியராக பாக்யராஜூம், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மக்களிடம் பரப்புவதற்காக வருகிற அரசுப் பணியாளராக உஷா(டி.ராஜேந்தரின் துணைவியார்)வும்; இவர்களெல்லாம் வெளியிலிருந்து வருபவர்கள். வெளியாட்களின் வருகையினால் கிராமத்தில் ஏற்படுகிற அகச்சலனங்களே பாரதிராஜாவின் அடிப்படைக் கதைச்சலனங்கள் என்று நிறுவினார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி. (பாரதிராஜா திரைக்கதை எழுதி கதாநாயகனாக நடித்து நிவாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘கல்லுக்குள் ஈரம்’ திரைப்படமும் மதிப்பாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. திரைப்பட படப்பிடிப்பு குழுவொன்று, பழைமை பீடித்த கிராமம் ஒன்றுக்குள் நுழைந்து தங்கியிருக்கும்பொழுது அந்த கிராமத்தின் பழைமை எப்படி அசைவியக்கம் கொள்கிறது என்பதைக் கல்லுக்குள் ஈரம் காட்டியது. அயலார் வருகை, கிராமத்து மூடநம்பிக்கைகள், மரபை மீறுகிற நவீனப் பார்வை ஆகியவை அந்தக் கட்டுரையின் வழியாக நிலைநிறுத்தப்பட்டன)
பாரதிராஜாவின் திரைப்பட இறுதிக்காட்சிகள் (Climax) ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இறுதிக் காட்சிகளில் காணப்படுகிற வன்முறை, நிகழ்கிற உயிரிழப்பு போன்ற பொதுமைக்கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அடுத்து, இறுதிக்காட்சிகளில் கதாநாயகிகள் அணிந்துவருகிற சிவப்புநிற ஆடை! சிவப்பு நிறமென்பது சினத்தின் குறியீடு, பழிவாங்குதலின் குறியீடு என்ற அடிப்படைகள் கொண்டு, பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிழல்கள், மண்வாசனை ஆகிய திரைப்படங்களின் இறுதிக்காட்சிகள் விளக்கப்பட்டன. மட்டுமின்றி, ‘கிராமங்களின் நடைமுறைகளும், கட்டுப்பாடுகளும், மூடநம்பிக்கைகளும், பழைமைப் பீடிப்புகளும் தொடர்ந்து மீறப்படுகின்றன பாரதிராஜாவின் திரைப்படங்களில்’ என்று நிறுவினார். பாரதிராஜாவின் திரைமொழியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. குறிப்பாக, 16 வயதினிலேயில் வருகிற பட்டம் விடுகிற காட்சியின் Trally shot ஒன்றைக் குறித்து சற்று விரிவாகவே விளக்கியிருந்தார் வெங்கடேஷ் சக்ரவர்த்தி. இவ்வாறாக ஆசிரியர் கோட்பாட்டின் துணைகொண்டு பாரதிராஜாவின் திரைப்படங்கள் மீது புதுவெளிச்சம் பாய்ச்சிக்காட்டினார்.
இனி இதழ் வழியாக அவர் மீது உண்டாகியிருந்த மதிப்பு மென்மேலும் உயர்ந்தது ‘மரபை மீறிய சினிமா’ என்கிற நூலைப் படித்தபொழுது. ‘ஃபிரெஞ்சு புதிய அலை இயக்கம்’ குறித்து அற்புதமாக அறிமுகப்படுத்திய நூல். தமிழ் வணிக சினிமாவின் நோய்மையைப் போக்கி ஆரோக்கியமான வணிக சினிமாவாக மாற்றவேண்டும் என்று முனைப்பு கொள்கிற எவரும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அது.
கோவையில் இருந்தபோது எழுத்தின் வழியாக இப்படி அறிமுகமாகியிருந்த வெங்கடேஷ் சக்ரவர்த்தியை, சென்னை வந்ததும் நேரடியாகச் சந்திக்க வாய்த்தது.
கல்யாணராமன் முன்னின்று நடத்தி வந்த ‘சென்னை திரைப்படச் சங்கத்தின்’ ( Chennai Film Society) திரையிடல்களுக்கு வெங்கடேஷ் சக்ரவர்த்தி தொடர்ந்து வருவார். அலையன்ஸ் ஃபிரான்சிஸ், மாக்ஸ் முல்லர் பவன், சோவியத் எம்பஸி என்று பல்வேறு திரையரங்குகளிலும் அவரைப் பார்க்க முடிந்தது. உலகத் திரைப்படங்களின் திரையிடல்கள் முடிந்த பின்னர் அரங்குக்கு வெளியே அழுத்தமாக சிகரெட் பிடித்தபடி தீவிரமாக நண்பர்களுடன் உரையாடுவார். அருகில் நின்று அவர்களது உரையாடலை மௌனமாகக் கேட்கிற வாய்ப்பை உண்டுபண்ணிக்கொள்வேன். அவர்களது உரையாடலைத் கெடுத்து விடாமல் தீவிரமாக உற்றுக் கவனிக்கிறவராகப் பங்கெடுக்கிற இளையவர்களை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார். அப்படியாகத்தான் யாரும் அறிமுகப்படுத்தாமலே அவரோடு ஒரு உறவு நிகழ்ந்தது.
90 களின் இறுதியில் நிறப்பிரிகை ஏற்பாடு செய்திருந்த கும்பகோணம் கருத்தரங்கை முடித்துவிட்டுத் திரும்பும்போது அவருடன் நிகழ்ந்த உரையாடல் தீவிரமானது. சென்னை ரயிலுக்காக வெங்கடேஷ் சக்கரவர்த்தி, அவரது துணைவியார் பிரீத்தம், அன்பான மனிதர் தி.சு சதாசிவம் ஆகியோருடன் கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். 1997 ஆம் ஆண்டைய ‘ஃபெப்சி (FEFSI) – படைப்பாளி சிக்கலை’ உள்ளடக்கமாகக் கொண்டு உரையாடல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் உணர்ச்சி பொங்க தனது கால்சட்டைக்குள் கை நுழைத்து வெடுக்கென்று வெளியே எடுத்தார் ஒரு அட்டையை. முகத்துக்கு நேரே நீட்டி “நான் ஃபெப்சில கார்டு எடுத்திருக்கேன். தொழிலாள வர்க்கத்துக்கு ஆதரவாகத்தான் நான் நிற்க முடியும்” என்று உறுதிபடக் கூறினார். உண்மையில் ஃபெப்சி படைப்பாளி மோதல் என்பது தொழிலாளிய முதலாளிய வர்க்கமுரண் அல்ல. ஒற்றை மொழிச் சந்தைக்கும் பன்மொழிச் சந்தைக்கும் இடையிலான முரண்களின் விளைச்சலாகும். முரண்கள், எளிதாகக் கண்டுபிடித்துவிடும்படி மேல்வாரியாகத் தம்மைக் காட்டிக்கொள்ளாமல் உள்ளுறக்கம் கொண்டிருந்தன. ‘இது ஒருமொழிச் சந்தை; அதுவோ பன்மொழிச் சந்தை’ என்று வகைப்படுத்தும் படியாகப் பிசிறற்ற கோட்டுருவத்தை அன்றைய முரண் துருவங்கள் எய்தியிருக்கவில்லை. தமிழில் ஒரு ‘தேசிய இனத் திரைக்கலைக் கோட்பாடு’ உருவாகியே தீரவேண்டும் என்கிற அழுத்தத்தையும், அதன் பின்னர் ஒரு ‘தேசிய இனத் திரைக்கலை’ தோன்றியே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்தையும் தமிழ் வரலாற்றின் மீது இறக்கி வைத்துக் கொண்டிருந்தது காலகட்டம். இது குறித்த கோட்பாட்டுப் புரிதல் தமிழின் திரைப்பட விமர்சகர் எவருக்கும் வாய்த்திருக்கவில்லை. தமிழ் திரைத் துறையில் உள்ளுறக்கம் கொண்டிருந்த முரண்கள் அழுத்தம் தாங்காமல் உள்வெடிப்பு கொண்டதால் புற விளிம்பில் தூர் விட்டிருக்கிறது என்பதை எவரும் புரிந்திருக்கவில்லை. திரைத் துறையில் பணிமுடக்கம் ஏற்பட்டு பல மாதங்களாக நீடித்தது பக்கவாதம்.
பொதுத்தளத்தில், இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் ஃபெப்சி தலைவர் விஜயனுக்கும் இடையிலான ஈகோ மோதலாகச் சித்தரிக்கப்பட்டது. அறிவுத் தளத்திலோ, தொழிலாளிய முதலாளிய வர்க்க முரணாகக் கற்பிதம் கொள்ளப்பட்டது. தற்காலத்தில் தேசிய இனக் கலாச்சாரங்கள் மீது தாக்குதல் நிகழ்த்திக்கொண்டிருக்கிற ‘பேன் இந்தியா’ ஃபாசிசம் உருவாவதற்கான அடித்தளம் அன்றைக்கு இடப்பட்டதுதான். அன்றைக்கு ஃபெப்சியை ஆதரித்தவர்கள் இன்றைய பேன் இந்தியா ஃபாசிசத்துக்குக் காரணமாகிறார்கள். அந்த வகையில், வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பார்வையும் பழுதான பார்வைதான். தமிழில் வெங்கடேஷ் சக்ரவர்த்திக்கு மட்டுமல்ல… திரைப்பட விமர்சகர்களாகவும், திரைப்படக் கலைஞர்களாகவும், அறிவுலகவாதிகளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்குமே இப்படியொரு பழுதான பார்வைதான் வாய்த்திருந்தது. தேசிய இனத்துக்கு எதிராக நிகழ்த்தப்படுகிற கலாச்சாரத் தாக்குதலையோ, அரசியல் தாக்குதலையோ, ஆயுதப்போரையோ விளக்கும்பொழுது அந்த விளக்கத்தைச் செவியுறாமல், ‘இனவாதம்’ என்று குறுக்கி முடக்குகிற ஒரு மரபுப் பார்வை இங்கொரு ஃபாசிசமாக நீடித்து வருகிறது. அந்த மரபுதான் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் கண்களுக்கு முன்னால் திரையிட்டிருந்தது. மரபை மீறிய சினிமாவைக் கனவு கண்ட அவருக்கு, மரபை மீறிய கோட்பாடு வாய்த்திருக்கவில்லை.
தொழில்நுட்பத்தின் உச்சகட்ட வளர்ச்சி, திரைப்பட இயக்கங்களை மண்ணுக்குள் சரித்தது. பிந்தைய காலகட்டத்தில் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், அவரது சிற்றிதழ் கட்டுரைகளை வாசிப்பதாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்துகொண்டே இருந்தது.
இப்போது அவர் இல்லை.
‘இனியில் அறிமுகமான அவர், இனி இல்லை’ என்று நினைக்கையில் ஒரு வெறுமையை, துலக்கமாக உணரமுடிகிறது.
தமிழ்நாட்டில் மூன்று வெறுமைகள் நிலவுவதாக உறுதிபடக் கூறிவந்தார். 1 – கலாச்சார வெறுமை. 2 – அரசியல் வெறுமை. 3 – தத்துவார்த்த வெறுமை.
35 ஆண்டு காலம் தொடர்ந்து தீவிரத்துடன் அறிவுலகிலும், சிற்றிதழ் வெளியிலும், திரைக்கலைப் பரப்பிலும் இயங்கி வந்திருந்த ஒருவர் தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். 35 ஆண்டு காலம் அவர் என்ன செய்தார் தமிழுக்கு? என்பதையும், தமிழில் என்ன நிகழவேண்டும் என்று அவர் விரும்பினார்? என்பதையும் தமிழ் அறிவுலகம் ஒரு கருத்தரங்கில்தான் உரையாடமுடியும். அப்படி உரையாடிப் பார்த்தால் ஒன்று தெரியும் : அவரது விருப்பம், மரபை மீறிய சினிமா!
இந்த அஞ்சலிக் கட்டுரை ஜூலை 29ஆம் தேதி எழுதி முடிக்கப்பட்டது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிலிருந்து தெலுங்கு திரைப்படத்துறையில் பணி முடக்கம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்தப் பணி முடக்கத்திற்கான அடிப்படைக் காரணம் ஒரு மொழிச் சந்தைக்கும் பன்மொழிச் சந்தைக்கும் இடையிலான முரணாகும். இந்த முரண் இனிவரும் காலங்களில் கன்னடத் திரைப்படத் துறையையும் ஒருவழி பண்ணப்போகிறது. ஒரு பெருவெடிப்புக்கான உள்விரிசல்களைக் கொண்டிருக்கிறது கன்னடத் திரைப்படத் துறை. அடுத்த சில ஆண்டுகளில் அங்கும் வெடியொலியைக் கேட்கலாம். தமிழ்த் தேசிய இனமும், தெலுங்கு தேசிய இனமும், கன்னடத் தேசிய இனமும் தத்தமது தேசிய திரைப்படத் துறைகளைக் காப்பாற்றத் தவறினால் மலையாளத் திரைப்படத் துறையிலும் இத்தகைய நெருக்கடிகள் வெடிப்புறக் காணலாம்.
- இயக்குநர் தங்கம்