அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தன்னுடைய முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை சவுதி அரேபியாவிலிருந்து துவக்கியுள்ளார்.
தன்னுடைய முதல் வெளிநாட்டு உரையை, ’அரேபிய-இஸ்லாமிய-அமெரிக்க’ மாநாட்டில் நிகழ்த்தினார். அதில் பேசிய ட்ரம்ப், ‘உலகில் உள்ள எந்தவொரு நாடும், தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடக்கூடாது’ என்றார்.
50 முஸ்லிம் நாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில், தீவிரவாதம்குறித்து உரையாற்றிய ட்ரம்ப், ‘ஒவ்வொரு நாடும் தங்கள் மண்ணில் தீவிரவாதத்தை வளரவிடவில்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தீவிரவாதம் என்பது நன்மைக்கும் தீமைக்குமான போர். இது மேற்குலக நாடுகளுக்கும் இஸ்லாத்துக்கும் இடையேயான சச்சரவு அல்ல. குறிப்பாக, தீவிரவாதம் பலதரப்பட்ட நம்பிக்கைகளுக்கும் பிரிவுகளுக்கும் நாகரிகங்களுக்குமான போர் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாகரிகம் அறியாத மனிதர்கள், மனித உயிரை மதிக்காமல் நிகழ்த்தும் கொடுமைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப், தனது தீவிரவாதத்துக்கு எதிரான உரையில், ‘இந்தியா, தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு’ என்று குறிப்பிட்டார். அடுத்ததாக, நாட்டின் பெயரைக் குறிப்பிடாமல் ‘தீவிரவாதத்தை வளர்க்கத் துணை போகக்கூடாது’ என்று ஒரு நாட்டை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான பயணத்தின்மூலம் பல நாடுகளின் நல்லுறவைப் பெற முடியும்’ எனவும் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.