கலாச்சார வாந்தி.
தேசிய இனங்களின் வரலாற்று அடையாளங்கள் அழிப்பு.
தேசிய இனங்களின் இறையாண்மை மறுப்பு.
சென்ற நூற்றாண்டுத் தொடக்க கால சினிமாவின் மிகுமிகை நாடகீய உணர்ச்சிகள்.
வரலாற்று விபத்துகளை உருவாக்கக்கூடிய எம்ஜிஆர் ஃபார்முலாக் கதாநாயகத்துவமானது மேற்கத்திய அறிவியல் கண்டடைந்த நவீன திரைப்படத் தொழில்நுட்பக் கருவிகளையும், உலகத் திரைப்படக் கலைஞர்கள் கண்டடைந்த நவீன சொல்முறையையும் கைப்பற்றி, அருவருக்கத்தக்க கலையார்த்த ஃபாசிசமாக உருவாகியிருக்கிறது.
கதாபாத்திரங்களின் தேசிய இன அடையாளங்களும், கலாச்சார அடையாளங்களும் அழிக்கப்பட்டு, ஆரிய அடையாளங்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன.
ஆதிகால ஆரிய வர்த்தமானத்தின் அல்லது கங்கைச் சமவெளியின் கலாச்சார விரிவாக்கத் தந்திரோபாயமானது ‘அகண்ட பாரதம்’ என்கிற மூலோபாயத்திற்குச் சேவை செய்கிறது.
‘காஷ்மீர் பாகிஸ்தானுக்கு உரியதன்று; இந்தியாவுக்கு உரியது’ என்று இந்தப் படம் நிலைநிறுத்தம்பொழுது, ‘காஷ்மீரிகளுக்கு உரியது’ என்கிற வரலாற்று உண்மை பார்வையாளரின் நினைவுக்குள் எட்டிப் பார்த்திராதபடி அழிக்கப்படுகிறது.
ஹாலிவுட் செவ்வியல் சினிமாக்களில் இருந்து உருவப்பட்டிருக்கும் சொல்முறையானது இந்தியத் துணைக் கண்டத்துப் பழம் புராணிக மிகுமிகை நாடகீயத்துடன் புணர்ந்து போட்ட நச்சுக்குட்டியே சீதா ராமம்.
அன்பு அன்பு அன்பு என்று முழங்குகிற இடங்களில் எல்லாம் அடியாழத்தில் கிடக்கிறது வெறுப்பு வெறுப்பு வெறுப்பு.
தியாகம் தியாகம் தியாகம் என்று முழங்குகிற இடங்களில் எல்லாம் அடியாழத்தில் கிடக்கிறது ஆதிக்க வெறி ஆதிக்க வெறி ஆதிக்க வெறி.
பொம்மலாட்ட மனிதர்கள் மட்டுமா? பொம்மலாட்டக் கதையாடல் முறையும்!!
நன்கு கலைப் பயிற்சி பெற்ற பார்வையாளருக்கு, பொம்மலாட்டம் பார்க்கிற உணர்வைத்தான் தருகிறது; ‘மோசமான பொம்மலாட்டம்’ பார்த்த உணர்வை!!!
காஷ்மீர் தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறை; அதனால் சாராம்சத்தில், துணைக் கண்டத்தின் தேசிய இனங்கள் அனைத்தின் மீதுமான ஒடுக்குமுறை.
படம் முழுவதும் பொய், பொய், பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய் பொய்
ராம் சீதா இராவணன் அனுமன் பீமசேனன் – இப்படியெல்லாம் நடமாடுகின்றன கதாபாத்திரங்கள்.
பாகிஸ்தானியப் படை வீரர்கள் அயோக்கியர்கள்; இந்தியப் படை வீரர்கள் யோக்கியர்களாம். இந்திய அமைதிப்படை 1987 ஆகஸ்ட் தொடங்கி 1990 மார்ச் வரை என்ன செய்தது தமிழ் ஈழத்தில்? என்று அறிந்திராத ஒரு தெலுங்கர் எடுத்த திரைப்படத்தைத் தமிழ்நாட்டில்
பார்த்துப் பாராட்டுகிறவர்களைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது ‘யப்பா… நீங்கள் எல்லாம் யாருப்பா………?’
முஸ்லிம் மக்கள் மீது அன்புணர்வு கொண்டவர்களாகக் கதாபாத்திரங்கள் செயற்கையாக வடிவமைக்கப்பட்டு இருப்பதைக் காணும்போது, ‘என்னவொரு கபடம்!!!’ என்று கண்டுபிடித்துவிட முடிகிறது.
பாகிஸ்தானிலும், காஷ்மீரிலும், லண்டனிலும், ஹைதராபாத்திலும் – ‘மனிதர்கள் தமிழ் பேசுகிறார்கள்’ என்கிறது பேன் இந்தியா.
கறுப்பு நிறத்தவர் எவரையும் காணோம் இந்தத் தமிழ்ப் படத்தில் ஓரிடத்திலும்.
ஒரு தேசிய இனத்தின் கதையை, வேறொரு தேசிய இனத்தவர், மற்றொரு தேசிய இனத்தவரிடம் சொல்லுகிறார்; அதாவது காஷ்மீரின் வரலாற்றை தெலுங்கரொருவர் தமிழரிடமும் இன்ன பிற தேசிய இனத்தவரிடமும் புனைந்து ஒரு கதையாகச் சொல்லி, பொய்யை உண்மையாகுகிறார்; உண்மையைப் பொய்யாக்குகிறார்.
‘இந்தத் திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்று மட்டும் முஸ்லிம்கள் புரிந்துகொள்ளக்கூடாது; ‘தேசிய இனங்களுக்கு எதிரானது’ என்று புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் அவ்வண்ணம் திரிபுகளின்றிப் புரிந்துகொள்வதற்கான வரலாற்றுத் தகைமை தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் வாய்த்திருக்கிறது என்பதை முதலில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டும்; அப்படிப் புரிந்துகொண்டால், தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழின அழிப்பை உணரலாம். இல்லையென்றால் முஸ்லிம் மத வெறியாக அது மாறிவிடும். இரண்டு மதவெறிகளும் மோதிக்கொள்ளும்பொழுது துணைக் கண்டத்தின் அனைத்துத் தேசிய இனங்களும் அழிந்துபடுவது உறுதி.
சென்ற நூற்றாண்டில் பிறப்பெடுத்து, புரட்சிகரம் என்று பெயர் சூட்டிக்கொண்ட கோட்பாடுகளுள் எதுவும் இந்த நூற்றாண்டின் புதிய ஃபாசிசத்தை விளங்கிக்கொள்ள முடியாது; வீழ்த்தவும் முடியாது!
21 ஆம் நூற்றாண்டின் புதிய ஃபாசிசத்தை விளங்கிக் கொள்வதற்கும், வீழ்த்துவதற்கும் தேவையானது என்னவெனில் 21ஆம் நூற்றாண்டுக்கே உரிய புதிய கோட்பாட்டு ஆக்கம்.
அந்தப் புதிய கோட்பாடானது, வெறுங்கண்ணுக்குப் புலப்படாத உறை ஒன்றுக்குள், வெறுங்கைகளுக்குள் அகப்பட்டு விடாத கத்தி போலக் கிடக்கிறது.
பழைமையின் பீடிப்பிலிருந்து விடுதலை பெற்ற அகமே, கண்ணுக்குப் புலப்படாத உறையைக் காணவும், கைகளுக்குள் அகப்படாத கத்தியைக் கைப்பற்றவும் ஏலும்.
தற்பொழுது நடப்பிலிருக்கும் புரட்சிகரங்கள் கோட்பாடுகள் கட்சிகள் இயக்கங்கள் தலைமைகள் தொண்டர்கள் ஆகிய யாவற்றையும் ஒரே ஒரு மூட்டைக்குள் திணித்து முடிபோட்டு இறுக்கி, கனமான பாறாங்கல்லைக் கட்டி ஆழ்கடலுள் முங்கப்போட்டுவிட்டு நிலமடைபவரே புத்தறிவைப் பெறமுடியும். அந்த அறிவே மெய்காண் அறிவு! சீதா ராமம் எப்படிப்பட்ட ஃபாசிசம் என்பதை, பீடிப்புகள் அகன்ற மெய்காண் அறிவே கண்டுணர முடியும்; சென்ற நூற்றாண்டின் செத்துப்போன கோட்பாடுகள் அல்ல!