எமது தேசிய இனத்தின் பண்பாட்டிற்கு அமையவும் மாறி வரும் உலகின் நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் எமது சட்டமுறை உருவாக்கப்பட வேண்டும். எமது தேசத்தை அடிமைப்படுத்திய அந்நியர்கள், எமது வாழ்க்கைமுறையில் மாற்றத்தை கொண்டு வர முயன்றார்கள். அவர்கள் கையில் பலம் இருந்தாலும் நாம் அடிமையாக வாழ்ந்தாலும் அவர்கள் தமது சட்டங்களையும் எம்மீது திணித்த வேளைகளில் நான் ஏற்றுக்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டோம்.
இப்பொழுது நாம் சொந்த பலத்தின் மூலம் எமது மண்ணை மீட்டு வருகின்றோம். ஆகையால் அமது தேசத்தில் எமக்கேற்ற சட்ட நிர்வாக ஒழுங்கை கட்டியமைத்து வருகின்ற வேளையில், தமிழீழ நீதி நிர்வாகத்துறை திறம்படச் செயற்பட்டு வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனினும் நீதி நிர்வாகத்துறை மேலும் விரிவாக்கம் செய்யப்படவேண்டும். போராளிகளாகிய நீங்கள் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் அடிமைப்படாது, சமூக நீதிகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும்.
எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான ஒடுக்குமுறைகள், அநீதிகள் தொடர்ந்து ஆணாதிக்கக் கொடுமைகள் வளர்கின்றன. இந்தச் சமூக அநீதிகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்படுவதோடு, சீதனம் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகின்ற முறைகளும் சட்டத்தினால் நீக்கப்பட வேண்டும். இது 20.05.1995 அன்று தமிழீழ நீதிமன்றுகளின் நீதியாளர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றி நீதியாளர்கள், சட்டவாளர்கள் உறுதிப்பிரமாண நிகழ்வின்போது தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து…)
புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை இ -22-08-1993 அன்றிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. இது தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரனின் அவர்களின் நேரடிக் கடிக்கன்காணிப்பின் கீழ் இந்த நீதி – நிர்வாக அமைப்பு செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலில் சுன்னாகத்தில் அமைக்கப்பட்ட நீதிமன்றுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நீதி பரிபாலனம் பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் என விரிவாக்கப்பட்டு பின்னர் வன்னி, மன்னார், உட்பட வடகிழக்கு மாவட்டங்கள் எங்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ நீதி நிர்வாகத்துறை தேவையான எல்லா வரைச் சட்டங்களையும் தயாரிப்பதற்கு பொறுப்பாயிருக்கும். அவ் வரைச் சட்டங்கள் தேசியத் தலைவரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அவை தேசியத் தலைவரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொது அறிவிப்புச் செய்யப்பட்டதும் தமிழீழத்திலுள்ள எல்லா மக்களும் அச் சட்டங்களை ஏற்று நடக்கும் கடப்பாட்டுக்குட்பட்டவர்களாவர்.
சட்டங்களுக்கு அமைவாக கீழ்க்காணும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு தற்பொழுது இயங்கி வருகின்றன.
- உச்ச நீதிமன்றம்.
- மேன்முறையீட்டு நீதிமன்றம்.
- விசேட நீதிமன்றங்கள்.(தேவையேற்பட்டால் மாத்திரம் அமர்வுகள் இடம்பெறும்.)
- மேன் நீதிமன்றம்.
- மாவட்ட நீதிமன்றம். (குடியியல்)
- மாவட்ட நீதிமன்றம் (குற்றிவியல்)
உச்ச நீதிமன்ற நீதிபதிகளதும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளதும் எல்லா நியமனங்களும், பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தேசியத் தலைவரினால் மேற்கொள்ளப்படும். மேன் நீதிமன்றங்களின், மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளது மற்றும் நீதிமன்ற ஆளணியினரது எல்லா நியமனங்களும், பதவியுயர்வுகளும், பணிநீக்கங்களும், ஒழுக்காற்று நடவடிக்கைகளும் நீதிநிர்வாகத் துறைத்; தலைவரினது ஆலோசனையுடன் பிரதம நீதியரசர் மேற்கொள்ளுவார்.
உச்ச நீதிமன்றம்.
உச்சநீதிமன்றமானது தேசியத் தலைவரினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியாளரையும் மற்றும் நான்கு உச்சநீதிமன்றத் துணை நடுவர்களையும் கொண்டுள்ளது. தமிழீழம் முழுவதற்கும் பரந்த நியாயாதிக்கத்தை இந் நீதிமன்றம் கொண்டதாகும்.
சிறப்பு நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் மேன்முறையீட்டு வழக்குகளில் மெய்யாகவே ஏற்பட்ட நிகழ்வுப் பிழைகளையும் அல்லது சட்டத்தில் ஏற்பட்ட பிழைகளையும் திருத்தம் செய்யும் அதிகாரங்களைக் கொண்டு இறுதி மேன்முறையீட்டு வழக்குகளை ஏற்று நடாத்தும் நீதிமன்றமாகும். எல்லா மேன்முறையீட்டு வழக்குகளையும் உச்ச நீதிமன்ற நீதியாளர்கள் ஐவரும் ஒன்றாகக்கூடி விசாரணை செய்து தீர்மானம் எடுப்பர். தீர்மானம் எடுக்கும் வேளையில் நீதியரசர்களுக்கிடையில் அபிப்பிராய பேதமேற்படுமிடத்து பெரும்பான்மைத் தீர்மானம் மேலோங்கி நிற்கும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
மேன்முறையிட்டு நீதிமன்றம் தேசியத்தலைவரினால் நியமிக்கப்பட்ட மூன்று நீதியாளர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் ஒருவர் தலைவராக பதவியிலமர்த்தப்படுவர். தமிழீழம் முழுவதற்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளதாக இந் நீதிமன்றம் விளங்கும்.
எல்லா மேல்நீதிமன்றங்களிலிருந்தும் மாவட்ட நீதிமன்றங்களிலிருந்தும் பெறப்படுகின்ற தீர்ப்புகளுக்கு எதிரான மேன்முறையீடுகள், மெய்யாகவே ஏற்பட்ட நிகழ்வுப் பிழைகள் அல்லதுசட்டத்தில் ஏற்பட்ட பிழைகளைத் திருத்தம் செய்தல் உட்பட, மேன்முறையீட்டு நியாயாதிக்க உரிமை அறுதியுறப் பெற்றதாக இந் நீதிமன்றம் விளங்கும்.
எல்லா மேன்முறையீட்டு வழக்குகளையும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியாளர்கள் மூவர்களும் ஒருங்கமர்ந்து விசாரணை செய்வர். தீர்;மானமெடுப்பதில் நீதியாளர்களுக்கிடையே அபிப்பிராய வேறுபாடு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பெரும்பான்மைத் தீர்மானம் மேலோங்கி நிற்கும்.
விசேட நீதிமன்றங்கள்
இந் நீதிமன்றமானது பிரதம நீதியாளரால் நீதி அமைச்சரின் ஆலோசனையுடனும் ஒத்திசைவுடனும் நியமிக்கப்படும் மூன்று நீதிபதிகளைக் கொண்டிருக்கும். எதிர்பாராத சம்பவங்களிலும் சூழ்நிலைகளிலும் ஆயத்தமாயிராத சம்பவங்களிலும் சூழ்நிலைகளிலும் இருந்து எழுகின்ற குற்றவியல்ஃ குடியியல் வழக்குகளை மூன்று நீதிபதிகளும் ஒருங்கமர்ந்து விசாரணை செய்வர். ஒரே பணிக்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்கள் ஒரே பணி நோக்கத்துக்காக அமைக்கப்பட்டு ஒவ்வொரு வழக்கும் முடிவுற்றபின் செயலிழக்கும்.
மேன் நீதிமன்றம்
மேன்நீதிமன்றமானது விதிமுறை ஏற்பாடுகளுக்கிணங்க தேசத்துரோகம், கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் தீவைத்தல், பெருங்கொள்ளை போன்ற குறிப்பிட்ட குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நியாயாதிக்கத்தைக் கொண்டுள்ளது. இந் நீதிமன்றமானது பிரதம நீதியாளரால் நீதிநிர்வாகத் தலைவரின் ஆலோசனையுடன் நியமிக்கப்படும் தனி நீதிபதியால் தலைமைதாங்கப்படும்.
மாவட்ட நீதிமன்றம். (குடியியல்)
எல்லாக் குடியியல் வழக்குகள் சம்பந்தமான நியாயாதிக்கத்தைக் கொண்ட தொடக்க நீதிமன்றமாக இந் நீதிமன்றம் விளங்கும். மாவட்ட நீதிபதியானவர் நீதிநிர்வாகத் துறைத் தலைவரின் ஆலோசனையுடன் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்படுவர்.
மாவட்ட நீதிமன்றம் (குற்றிவியல்)
மேல்நீதிமன்றத்துக்கு விசேடமாக குறித்தொதுக்கப்படாத குற்றவியல் வழக்குகள் சம்பந்தமான நியாயாதிக்கத்தைக் கொண்ட தொடக்க நீதிமன்றமாக இந் நீதிமன்றம் விளங்கும். இந் நீதிமன்ற ஆணைகள் மற்றும் தீர்ப்புக்கள் சம்பந்தமான மேன்முறையீடுகள் மேல்நீதிமன்றத்துக்கு ஏற்புடையதானதாகும். இந் நீதிமன்ற நீதிபதிகள் நீதிநிர்வாகத் துறைத் தலைவரின் ஆலோசனையுடன் பிரதம நீதியரசரினால் நியமிக்கப்படுவர்.
சட்டக்கல்லூரி:
தமிழீழ சட்டக்கல்லூரி 1992ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவருகின்றது. தமிழீழ மக்களுக்கு பொருந்தக் கூடியதான தனிமனிதச் சட்டம் மற்றும் சொத்துச் சட்டங்கள் ஆகியனவற்றிற்கு அப்பால் சட்டத்துறைக் கோட்பாடு மற்றும் சர்வதேச சட்டம் ஆகிய பாடநெறிகளைக் கொண்டுள்ளதுடன் குடியியல் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுடன் ஆதாரச் சட்டங்களையும் கொண்டுள்ளது. கற்கை நெறிகள் உள்ளகப் பயிற்ச்சி என்றும், வெளிவாரி என்றும் பிரிக்கப்பட்ட பாடவிதானத்தைக் கொண்டவையாகும்.
- உள்ளகப் பாடநெறியானது மூன்று ஆண்டுகளைக் கொண்டு நான்கு வருடங்கள் நீடித்திருக்கும்.
- வெளிவாரிக் கற்கை நெறியானது 3 வருடங்களுக்கு நீடித்திருக்கும். மேலே குறிப்பிட்டவாறு ஒரேமாதிரியான பரீட்சைக்கு எல்லா மாணவரும் தோற்றுவர். அவ்வாறு தோற்றி பாடநெறியில் பூரண வெற்றி பெறுபவர்கள் சட்டவாளர்களாக (வழக்கறிஞர்களாக) பதிவுசெய்ய உரித்துடையவராவர்.
நீதிமன்றங்களின் நடைமுறைகள் மற்றும் நீதி நிர்வாகத்தை பரிபாலனம் செய்யும் சட்டவிதிகளுக்குள்ப்பட்ட ஒரு நீதிமன்றச் சட்டக்கோவை தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ளதைப் போன்றே தமிழீழத்தின் நீதிபரிபாலனத்துக்குரிய சட்டவாக்கமும் அமைந்துள்ளது. ஆயினும் சமூக முன்னேற்றத்தையும் மனித சமத்துவத்தையும் நிராகரிக்கும் சாதியம் – பெண்ணொடுக்குமுறை சம்மந்தப்பட்ட பிற்போக்குத் தனமான சமூக மரபைக் களைந்து , பாரபட்சமற்ற உன்னத சமூக அமைப்பொன்றைக் கட்டி எழுப்பும் இலட்சியத்தில் இச்சடடவாக்கம் அதிக சிரத்தை காட்டியுள்ளது. அதேபோல ஊழல் , ஏமாற்று , மோசடி , போதைவஸ்து போன்ற சமூக விரோதச் செயல்களையும் கடுமையாகக் கையாளும் வகையில் இச்சட்டவாக்கம் அமைந்துள்ளது.
” பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி விரைவாகவும் இலகுவாகவும். அதேவேளை அதைக் பொருட்செலவுக்களுமின்றிக் கிடைப்பதை உறுதி செய்வதால்தான் ” தமிழீழ நீதிமன்ற அமைப்பின் பிரதான நோக்கம் ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரும்கூட சிங்கள இனவாத அரசின் நீதிபரிபாலனமானது அராஜகம் வாய்ந்ததும் , சமூக அநீதிகள் மலிந்தது , தமிழ் இன விரோதம் நிறைந்ததுமான ஒரு அமைப்பாகவே இருந்தது. விடுதலைப் போராட்டம் ஆரம்பமாகியதும் தமிழ் இனப் படுகொலையை அங்கீகரித்து – நியாயப்படுத்தும் ஒரு நிறுவனமாகவே சிறீலங்காவின் நிதிபரிபாலனம் மாறியது.
அதேவேளை ஆயுதப்போராட்டம் தீவிரமடையத் தொடங்கியபின் விடுதலைக்கெனப் புறப்பட்ட பல ஆயுதக் குழுக்களின் அராஜகங்களையும் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்ப்பட்டது.
இந்த அராஜகக்கும்பல்களை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து , இவர்களால் தமிழ் மக்கள் சந்தித்துவந்த துன்பதுயரங்களுக்கு ஒரு முடிவுகண்டு , தமிழீழ விடுதலைப் போராடத்தில் ஒரு சாதாகமான சூழலை புலிகள் இயக்கம் உருவாக்கிக்கொண்டிருந்தபோதே , இந்திய ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது.
இந்திய ஆக்கிரமிப்புக் காலகட்டத்தில் தமிழீழத்தில் ஒரு காட்டுத் தர்பாரே நடந்தது. இந்தியப் படைகளின் அட்டூழியங்கள் ஒருபுறம் ; அதன் கூலிப்படைகளாகச் செயற்ப்பட்ட தமில்க்குழுக்களின் அடாவடித் தனம் இன்னொருபுறம் ; சிங்களப்படைகளின் இனவெறி மருபுரமாக் தமிழீழ மக்கள் பெரும் இன்னல்களையும் – நெருக்கடிகளையும் சந்தித்தனர்.
ஆனால் இந்தியப் படை வெளியேற்றப்பட்டது வடதமிழீழத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட்டது. விடுவிக்கப்பட்ட இப்பகுதிகளில் சிவில் நிருவாகத்தை ஏற்படுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முயன்றது.
பாராபட்சமற்ற – சமூக அநீதிகள் களையப்பட்ட – ஒரு நீதி நிருவாகம் மெதுவாகச் செயற்படத் தொடங்கியது.
ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் மக்களின் பிரசினைகளைக் கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிசெய்தனர்.
பின்னர் , தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்ப்பெரியவர்களின் சபையிடம் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கபட்டது.
அதன் பின் இணக்கமன்றுகள் உருவாக்கப்பட்டு பிரசினைகள் சமூகமான முறையில் தீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் இந்த மக்கள் மன்றங்களினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த அதிகாரம் வாய்ந்த ஒரு அமைப்பு இல்லாததால் , வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் கூட கணிசமான அளவில் செயற்படாமல் கிடந்தன.
ஆனால் தமிழீழ காவற்துறையின் தோற்றத்தை அடுத்து , அது சட்டம் ஒழுங்கைப் பேணத்தொடங்கியவுடன் , நீதிநிருவாகமும் நடைமுறை வசதிகருதி தர்காலகமாக காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது தமிழீழத்தில் நீதிபரிபாலனத்திற்கென ஒரு சட்டக் கோவை வரையப்பட்டு , அதன் அடிப்படையில் தமிழீழ நீதிமன்றங்களும் செயற்பட இருக்கின்றன. தமிழீழ நீதிமன்றங்களின் உருவாக்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி ஆகும்.
இந்த வரலாற்றுச் சம்பவத்துடன் தமிழீழத்தின் நீதிபரிபாலனமானது ஒரு செம்மையான வடிவத்தைப் பெற்றுவிட்டது எனலாம். இனி இது வளர்ந்து ஒரு முழுமையான வடிவத்தில் நீதிபரிபாலனம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
இனிமேல் நீதிமன்ற சட்டக்கோவையின் அடிப்படையில் , எந்தவித பாரபட்சமும் இல்லாமல் , கூடிய விரைவில் பாதிக்கபட்டவர்கள் நீதியைப் பெற இந்த நீதிமன்ற நடைமுறை வழிகோலியுள்ளது.
குற்றவியல் சம்மந்தப்பட்ட வழக்குகளை காவற்துறையிடம் முறையிட வேண்டும். காவற்துறை உரியமுறையில் அந்த வழக்கை நீதிமன்றில் தாக்கல் செய்யும். மற்றைய சாதாரண சிவில் வழக்குகளை நேரடியாகவே நீதிமன்றில் தொடர முடியும். அதேவேளை ஒரு குற்றச் செயல் தொடர்பாக ஒருவரை காவற்துறை கைதுசெய்தால் , அந்த சந்தேகநபர் 48 மணித்தியாலயத்திக்குள் நீதிமன்றில்ஆஜர்செய்யப்படுவார். மேல் விசாரணைக்காக அவரைத் தடுத்துவைக்கவேண்டும் எனக் காவற்துறை விரும்பினால் , அதற்குரிய அனுமதியை நீதிமன்றில் பெற வேண்டும்.
மனுகாரரோ அல்லது எதிர் மனுதாரரோ தனக்காகத் தானே ஆஜராகி வாதாட முடியும். அப்படி வாதாடமுடியாத ஒருவர் , தனக்காக ஒரு சட்டத்தரணியை அமர்த்திக்கொள்ளலாம் , அதேவேளை , சிறீலங்கா நீதிமன்ற நடைமுறைகளைப் போல சட்டத்தரணியை அமர்த்தும் ஒருவர் தனிப்பட்டமுரையிலோ , இரகசியமாகவோ பணக்கொடுப்பனவுகளைச் செய்ய முடியாது நீதிமன்ற நிருவாகத்தின் மூலமே சட்டத்தரணிக்குரிய பணத்தைச் செலுத்தமுடியும். பணத்தின் தொகை எவ்வளவு என்பதை நீதிமன்ற நிருவாகமே நிர்ணயிக்கும்.
இதேவேளை , தனது கட்சிக்காரர் உண்மையிலேயே குற்றவாளிதான் என உறுதியாகத் தெரிந்த பின்பும் அவருக்காக நீதிமன்றில் ஆஜராகி குற்றவாளியைப் பாதுகாக்க ஒரு சட்டத்தரணி முயல்வது குற்றமாகும். அத்தகைய சட்டத்தரணி மீது ஒழுந்து நடவத்க்கை எடுக்க சட்டம் அனுமதித்துள்ளது.
வெறுமனே ஒரு சட்டத்தரணியின் விவாதத்திறமையால் ஒரு குற்றவாளி தப்பிக்கவோ அல்லது ஒரு நிரபராது தண்டிக்கப்படவோ கூடாது என்பதற்காகவே , மேற்குறித்த கட்டுப்பாட்டை சட்டம் போட்டுள்ளது.
ஒரு வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு 6 மாதத்திற்க்குள் அதற்குரிய தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும் தீர்ப்பில் அதிருப்தி உறும் மனுதாரர் மேன்முறையீடு செய்ய முடியும். அந்த மேன்முறையீடு நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் , ஒரு மேல் விசாரணைக்குழு அந்த வழக்கை ஆராய்ந்து மூன்று மாதத்திற்குள் தரப்பை வழங்கும்.
தமிழீழ நீது மன்றங்களுக்குரிய நீதிபதிகள் புலிகள் இயக்கத்தின் நீதி நிருவாகப் பிரிவினரால் நடாத்தப்படும் தமிழீழ சட்டக் கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த நீதிபதிகள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருப்பார்.
நீதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேசியத்தலைவரின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொள்வர்.
தமிழீழ நீதிமன்றில் நீதிபதிகள் முநிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்த சட்டத்தரணிகள் மட்டுமே , நீதிமன்ற வழக்குகளை மற்றும் சட்டவியல்களில் பங்குபெற சட்டம் அனுமதிக்கும். இந்த சட்டத்தரநிகளில் விரும்பியவர்கள் அரச சட்டத்தரணியாக பதிவுசெய்து கொள்ளலாம். இவர்களுக்கு மாதாந்தம் வேதனம் வழங்கப்படும். பணவசதி அற்றவர்களும் ஆதரவற்றவர்களும் இந்த அரச சட்டத்தரணிகளின் மூலம் தமக்குரிய நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நீதிமன்ற விசாரண நடைமுறைகளைப் பொறுத்தவரை குடும்ப வழக்குகள் – பாலியல் சம்மந்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகள் சம்மந்தப்பட்ட வழக்கின் விசாரணைகள் – பகிரங்கமாக நடைபெறமாட்டாது. மற்ற வழக்குகள் பகிரங்கமாக நடைபெறும். நீதிமன்ற கட்டுப்பாடுகள் – சட்டதிட்டங்களுக்கு அமைய , பார்வையாளர்களாக பொதுமக்கள் அனுமதிக்கபடுவர்.
எந்த ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாகவும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தண்டம் அல்லது ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை பெற்றவர்கள் , தவறுக்கு மன்னிப்புக்கோரி , தண்டனையைக் குறைக்கும்படி தேசியத்தலைவருக்கு கருணைமனு அனுப்பவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஒவ்வொரு மாவீரர் தினத்தையொட்டி , தேசியத்தலைவரின் ஆணையின் பேரில் , சிறிய குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்படுவர்.
குற்றங்களுக்குரிய தண்டனையாக அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும். கடுங்காவல் கைதிகளைத் தவிர ஏனையோர் சமூகநலத் திட்டங்களுக்கும் தேச புனர்நிர்மாண வேலைகளுக்கும் கட்டாய உடல் உழைப்பு நல்கும்படி பணிக்க்கப்படுவர்.
தமிழீழ நீதிமன்றங்கள் வெறுமனே மக்கள் மத்தியில் நீதி பரிபாலனம் செய்வதோடு மட்டுமல்லாது , ஒரு ஜனநாயக அரசின் மிகமுக்கிய தூணாகவும் அரசின் சக்திமிக்க ஒரு அழகாகவும் செயற்பட இருக்கின்றன.தமிழீழ நீதித்துறையின் நீதியாளர்,சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம்.
1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார்.
தமிழீழத்தில் நீதிநிர்வாகத்துறைக்கான எல்லா சட்டங்களும் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் காலத்துக்குக் காலம் ஆக்கப்பட்டு பொது அறிவிப்பு மூலம் அறிவிக்கப்படும்.
இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்வ் கென்றிக்சன் தமிழீழ நீதிநிர்வாகத்துறைப் பொறுப்பாளரைத் தமிழீழச் சட்டக்கல்லூரியில் 30.05.2006 அன்று சந்தித்தார்
தமிழீழ நீதித்துறைச் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ளும் முகமாக போர்நிறுத்தக் கண் காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் கென்றிக்சன் தலைமையிலான குழுவினருக்கும், நீதித்துறைப் பொறுப்பாளர் திரு.இ.பரராஜசிங்கம் அவர்கட்கும் இடையேயான கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது. நீதித்துறைச் செயற்பாட்டினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்கின்றீர்கள் என்ற வினாவிற்கு இங்கு நீதவான் நீதிமன்று, மாவட்டநீதிமன்று, மேல்நீதிமன்று, மேன்முறையீட்டுநீதிமன்று, சிறப்பமர்வு நீதிமன்று என வகுக்கப்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்ப்பளிக்கப்படுகின்றது என்றும், எமது சட்டவாக்கச்செயலகத்தால் இருபதிற்கும் (20) மேற்பட்ட சட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஏழை மக்கள் வழக்குகளைத் தொடர்வதற்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகின்றது. இற்றைவரை நாற்பதாயிரம் (40,000) வழக்குகள் மாவட்ட மன்றுகளில் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டவை நீங்கலாக ஆயிரத்து ஐந்நூறுக்கும் (1500) உட்பட்ட வழக்குகள் மேன்முறையீடு செய்யப்பட்டும், ஆயிரத்து இருநூறுக்கும் (1200) மேற்பட்ட வழக்குகள் அம்மன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டும் உள்ளன. சட்டவாளர் கட்டணங்கள் மன்றில் செலுத்தப்பட்டு மன்று மூலமே உரிய சட்டவாளர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். லஞ்சம், ஊழல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்;கள் இங்கு இல்லை. தமிழீழ சட்டக்கல்லூரியின் வளர்ச்சிப் போக்கில் ஆறாவது அணிக்கான வகுப்புக்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. 130 சட்டவாளர்கள் தற்போது கடமையாற்றுகின்றார்கள் என்றும் தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உங்கள் செயற்பா டுகள் எவ்வாறு அமைகின்றன. என்பதற்கு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான மட்டு அம்பாறை, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவ்வப்பிரதேசத்திலும் நீதிமன்றுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வரும் மக்களின் பெருந்தொகையான வழக்குகளை ஏற்புடைய மன்றுகளால் முடிவுகாணப்படுகின்றன.
அடுத்து சிறிலங்கா நாட்டுச் சட்டங்களுக்கும் தமிழீழச் சட்டங்களுக்கும் இடையில் மாற்றமுண்டா என வினாவிய போது,
எல்லா நாட்டு குற்றவியல் சட்ட கோட்பாடுகளும், அடிப்படையில் ஒன்றாகவே காணப்படுகின்றன் எனினும் எமது கலாச்சாரத்திற்கு ஏற்ப சில புதிய குற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக திருமணவாக்குறுதி மீறல், சோரம் என்பவற்றைக் குறிப்பிடலாம். குடியியல் சட்டத்தில் எமது காலாச்சாரத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா நீதிமன்றுகளில் பழைய தேசவழமைச் சட்டமே நடைமுறையில் உள்ளது. நாம் தமிழீழ தேசவழமைச் சட்டத்தின் பிரகாரம் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக சிறிலங்காவின் தேசவழமைச் சட்டத்தின்;படி ஒரு மனைவி கணவனின் அனுமதியுடனேயே ஒரு வழக்கைத் தொடரலாம் எனக் கூறப்படுகின்றது. ஆனால், எமது தேசவழமைச்சட்டத்தி;ன் பிரகாரம் மனைவி தனித்து வழக்குத் தாக்கல் செய்வதற்கும், செய்யப்படுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
இந்த நீதித்துறைசார் செயற்பாட்டினை முன்னெடுத்துச்செல்வதற்கு தேசத்தில் வாழ்கின்ற சட்டறிஞர்களுடைய ஆலோசனைகளையும், புலம்பெயர்ந்து பிறநாடுகளில் வசித்து வருகின்ற சட்டத்துறைசார்ந்த வல்லுனர்களின் ஆலோசனைகளையும், ஏனைய நாடுகளில் செயற்படுத்தப்படுகின்ற நீதித்துறைசார்ந்த சட்டங்களையும், அந்நாடுகளின் சட்டறிஞர்களது கருத்துக்களையும் உள்வாங்கி எமது வழமை, வழக்காறு போன்ற பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாகவும், எமது தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் தூரநோக்கிலமைந்த சிந்தனைக் கருத்துக்களின் வழிக்காட்டலோடும் எமது செயற்பாட்டை முன்னெடுக்க முடிகின்றது.
விடுதலைக்காகப் போராடும் நாடுகளில் விடுதலையின் பின்பே நீதித்துறைக் கட்டமைப்பு செயற்படத் தொடங்குகின்றது. ஆனால், தமிழீழத்தில் முன்னுதாரணமாக விடுதலைக்காகப் போராடுகின்ற காலத்திலேயே ஒர் இறைமையுள்ள அரசிற்கான அனைத்துக் கட்டமைப்புக்களையும் நேர்த்தியான வகையில் செயற்படுத்தும் வல்லமை எமது தலைவருக்கே தனித்துவமானது என்றார்.
தமிழீழ நீதிநிர்வாகத்துறையினராகிய நாங்கள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழீழ நலன் விரும்பிகளிடமிருந்து பணமாகவோ பொருளாகவோ உதவிகளைப் பெற்று நீதித்துறையை வளப்படுத்தி தமிழீழ மக்களின் நல்வாழ்வுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆவளாக நிற்கின்றோம்.
உலக வல்லாதிக்க நாடுகள் தமிழீழத்தின் மீது தடை விதித்தபோதும் எம் நிலத்திலேயேதனக்கான நிர்வகித்த நிழல் அரச கட்டமைப்பு வரலாறுதான் வல்லாதிக்கசக்திகளையும், அதிகார வர்க்கங்களையும் எதிர்த்திட நினைக்கும் ஓர் புரட்சிகர இயக்கத்திற்கு படிப்பினையாக அமைய முடியும். மன உறுதி கொண்ட போராளிகளின் தியாகங்கள் மாவீரர்களின் பக்கத்தில் அழியா புகழ்கொண்டுள்ளது.
தமிழீழம் என்கிற எங்களது தாய் நிலத்திற்கான விடுதலைப் போரை உலக வல்லாதிக்கங்கள் அனைத்தும் இணைந்து எம் தாய்
நிலத்தை அழித்தொழிக்க சிங்கள இனவாத அரசோடு இணைந்து வரிசைக்கட்டிநின்றபோது இ எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. அடிமை விலங்குடைத்து தாய் மண் காக்க தன்மானம் போற்றஇ தன்னுயிர் தருவதற்கு வரிசைகட்டி நின்றார்கள்எங்கள் போராளிகள் . ஈழம் மலரும் காலம் வரை நமது விடுதலைப் போராட்டமும் ஓயக்கூடாது என தமிழ்மொழி காக்க, தமிழ் இனம் காக்க, தமிழ் மண் காக்க, தமிழர் மானம் காக்க, தன்னுயிர் தந்த மாவீரர்கள் உட்பட தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம்.