தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற இத்த ளபதி 25-08-2002 அன்று வீரச்சாவடைந்தார். விடு தலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய இமாலயச் சாதனைகள் பல வற்றின் பின்னால் ராயு அண்ணாவின் வெளிக் கொணராத செயற்பாடுகள் பல உள்ளன.
ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..
அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.
எங்கள் பொரியார் சாதனைகளையெல்லாம் நாங்கள் பேசும்போதும் எழுதும்போதும் வெளித்தெரிந்து விடாதபடி பக்குவமாய் மறைத்து வைத்திருந்த ஈடிணையற்ற போரியலாளனின் பிரிவைச் செரிக்க முடியாது நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் கேணல் ராயு அவர்கள் பதற்றமற்ற, அமைதியான, திடகாத்திரமான இரும்பு மனிதன். புலிகள் இயக்கத்தின் புதிரான பக்கங்களின் பின்னால் வைக்கப்பட்டிருந்த இரகசிய மனிதன். நாளும் பொழுதும் உயிர்தின்னும் களங்களுக்குள்ளேயே அவர் வாழ்ந்தபோதும் தமிழீழ தேசம் விடியும் நாள்வரை வாழ்வாரென்றே நம்பியிருந்தோம். இயக்கத்தின் இரகசியத் தன்மைகருதி வெளித்தெரியாது வைக்கப்பட்டிருந்த எங்கள் தளபதியைப் போர்க்களங்களிலும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தோம். இப்போது அவரை அவர் நேசித்த மக்களுக்கு ஒரே இரவில் அறிமுகம்செய்ய எப்படி முடியும்? ஒய்வு ஒழிச்சலற்ற உழைப்பிற் கழித்த பத்தொன்பது வருடங்களின் நினைவுகளும் காட்டாற்று வெள்ளம்போல் எம்முள் பாய்கின்றன.
பொறியியலாளனாவதற்குத் துடித்த இளைஞனின் கல்வி தரப்படுத்தலால் வீழ்த்தப்பட்டது. இலண்டன் பல்கலைக்கழகம் ஒன்றினூடாக அந்த இலக்கை அடைந்துவிடும் அலாவுடன் 1983ம் ஆண்டு தனது இருபத்து இரண்டாவது வயதிற் சிங்களத்தின் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். அப்போது சிங்களம் பெரும் கொலைவெறிகொண்டு ஆடியது. குழந்தைகள், பெரியோர், பெண், ஆண் என்ற வேறுபாடின்றித் தமிழர் வெட்டிச் சாய்க்கப்பட்டனர். தமிழரின் உடைமைகள் சூறையாடப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தனக்கும் எதுவித பாதுகாப்புமில்லையென உணர்ந்த ராயு எவ்வாறோ தாயகம் வந்து சேர்ந்தார். சிங்களத்தின் கொடுமைகளிலிருந்து தமிழர் மீட்சி பெறவேண்டுமென்றெண்ணிய அவர் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார்.
இந்தியாவில் மூன்றாவது பயிற்சி முகாமிற் பயிற்சி பெறும்போது பொன்னமானால் இனங்காணப்பட்டார். ஐந்தாவது பயிற்சிமுகாமின் பொறுப்பாளர் லெப்.கேணல் ராதா அவர்களின் துணைவனாகச் செயற்பட்டார். அவருடனேயே தமிழிழத்தில் கால்பதித்தார். அன்றிலிருந்து இயக்கம் பெற்ற வெற்றிகள் பலவற்றிலும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
தொலைத் தொடர்பு, இலத்திரனியல், வெடிமருந்து ஆகியவற்றில் ராயு கொண்டிருந்த ஆற்றல், தளபதி விக்ரரின் வழிகாட்டலில் மன்னாரில் நாம் பெற்ற பல பெறுமதியான வெற்றிகளுக்கு வழிகோலியது. களங்களில் நேரடியாகவும் போரிட்டார். திருகோணமலைக்குத் தாக்குதலுக்காகச் சென்ற அணியில் இடம்பெற்ற அவர் தன்மார்பில் விழுப்புண் அடைந்தார். பின்னர் மன்னாரில் நடந்த சண்டை ஒன்றிலும் தன் கால்களிலொன்றில் எதிரியின் குண்டுபட்டுப் பெரிய விழுப்புண்ணைத் தாங்கினார். தளபதி விக்ரர் அடம்பனில் வீரச்சாவடைந்த பின்னர் தளபதி ராதாவின் தலைமையிற் பணியாற்றினார்.
துரோகி ஒருவன் வீசியகுண்டினால் கேணல் கிட்டு அவர்கள் தன் காலை இழந்த பின்னர், ராதாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் ராயுவின் பணி தொடர்ந்தது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட தொலைத் தொடர்புப் பிரிவு ராயுவின் பொறுப்பில் மேலும் வளர்ந்தது. அவரின் வெடிகுண்டு நுட்பங்களுக்குப் போர்க்களங்களில் எதிரி அதிக விலைகொடுத்தான். பலாலி, காங்கேசன்துறை வீதியில் எதிரியின் விநியோக அணிகள் மீது ராயுவால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பலராலும் அறியப்பட்டவை. அப்போதெல்லாம் ஒரு தோட்பை நிறைந்த வெடிப் பொருட்களுடன் எதிரியைத் தேடிப்போகும் தாடிக்கார ராயு மக்களால் நன்கு அறியப்பட்டிருந்தார்.
பல்வேறு துறைகளிலும் ராயு வெளிப்படுத்திய ஆற்றலைத் தலைவர் அவர்களும் அறிந்திருந்தார். எமது விடுதலை இயக்கத்தை வலுவான மரபுப்படையுடன் கூடிய வலிமைமிக்க அமைப்பாகக் கட்டி எழுப்ப வேண்டுமென்ற தன்கனவை நனவாக்கக் கூடியவர்களுள் ஒருவராக ராயுவையும் அடையாளங்கண்டார். அவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தினார். தளபதி லெப்.கேணல் ராதா வீரச்சாவடைந்தபின் ராயுவைத் தன் நேரடிப்பணிகளில் ஈடுபடுத்தினார். அன்றிலிருந்து தன் இறுதி நாள்வரை தலைவரின் தலைவரின் அருகிலிருந்தே ராயு செயற்பட்டார். தலைவரின் அருகிலிருந்து ராயு செயற்பட்ட காலத்தில் போரியலிற் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எமது இனத்திற்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடிய தடைகளை உடைக்கும் போதெல்லாம் அவரின் அறிவும் ஆளுமையும் கடின உழைப்பும் பெரும்பங்கு வகித்தன. எமது படைத்துறையின் ஒவ்வொரு வளர்ச்சிப்படிநிலைக்கும் ராயு வலுச்சேர்த்தார். தலைவரின் மீககவனத்துக்குள்ளாகும் படைத்துறைப் பணிகள் ராயுவிடமே ஒப்படைக்கப்பட்டன. படைத்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதனவான தொலைத் தொடர்பு, வெடிமருந்து, இலத்திரனியல் ஆகிய பகுதிகளைப் பொறுப்பெடுத்து பெரும் வளர்ச்சி நிலைக்கு இட்டுச்சென்று எமது விடுதலை அமைப்புப் பேரியக்கமாக வளர வழிவகுத்தார்.
இந்தியப்படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட “ஜொனி” மிதிவெடியிலிருந்து சிங்களப்படைகளின் “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மிதிவெடி, பொறிவெடி வரை, இரண்டாம் ஈழப்போரில் எதிரிகளைக் கலங்கச் செய்த பசீலன் 2000 முதல் மூன்றாம் ஈழப்போரில் எமது மோட்டார், ஆட்லறிப்படைகளைச் செயற்றிறன் மிக்கனவாய் வளர்தெடுத்ததுவரை, எம்மால் நடத்தப்பட்ட முதலாவது கரும்புலித்தாக்குதலுக்கான வெடிகுண்டுத் தயாரிப்பிலிருந்து கடற்புலிகளின் இன்றைய வளர்ச்சி நிலைவரை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத படைத்துறைப் பணிகள் பலவற்றிலும் தலைவருக்குப் பக்கபலமாய் நின்று செயற்பட்டார்.
இந்திய அமைதிப்படைகளின் வந்கொடுமைக்காலத்தில் விசேட பணிக்காக வெளிநாடொன்றுக்கு ராயு தலைவரினால் அனுப்பப்பட்டார். அவர் திரும்பி வந்தபோது மணலாற்றுக் காட்டுக்குள் தலைவர் இருந்த பகுதியை இந்திய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருன்தனர். இறுதிப்போர் என மார்தட்டியபடி பெரும்போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டனர் தலைவரை அடைந்த ராயு ஆற்றிய பணிகள் அப்போரின் முடிவைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முக்கியமானவையாக அமைந்தன.
இந்தியப்படைகளைப் புறமுதுகிட்டோடவைத்த “ஜொனி” மிதிவெடியைத் தலைவரின் வடிவமைப்புக்கேற்ப ராயு உருவாக்கியமை வரலாற்றில் என்றும் அவரை நிலைநிறுத்தும். ஜொனி மிதிவெடியை உருவாக்கியபோது ராயுவின் அருகிலிருந்த போராளி அந்த நாட்களை நினைவு கூறுகிறான்.
“அப்போது அவரிடம் ஒரு சுவிஸ்நைவ் மட்டும்தான் இருந்தது. அதைவிட வேறு எந்த அடிப்படை வசதியும் இருக்கவில்லை. தலைவர் அவர்கள் திட்டத்தைக் கூறி அதன்மூலம் போரில் எவ்வாறு வெற்றிகளை ஈட்டலாம் என விளக்கியபோது அதன்முக்கியத்துவத்தை ராயு அண்ணை புரிந்துகொண்டார். ஜொனியை உருவாக்குவதற்காகத் தன் நித்திரையை மறந்தார். வாளில்லை, உளியில்லை, கத்தியில்லை எனக் காரணங்களைத் தேடாமல் வெற்றியைத் தேடினார். பலமுறை தோற்ற போதும் விடாமல் முயன்று வெற்றி பெற்றார்.”
இந்தியப்படை வெளியேற்றப்பட்ட பின் இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் ஆயுதத் தொழிற்சாலைகளுக்குப் பொறுப்பாகவிருந்து பல வெற்றிகளுக்குக் காரணமான உற்பத்திகள் பலவற்றை மேற்கொண்டார். பல இராணுவ முகாம்களின் வீழ்ச்சிக்குக் காத்திரமான பங்களித்த “பசீலன் 2000” அவ்வுற்பத்திகளில் ஒன்றாகும். கோட்டை, மாங்குளம், ஆணையிரவு ஆகிய படைத்தளங்களிலிருந்து தப்பிப்பிழைத்த சிப்பாய்களின் மனதில் “பசிலன் 2000” இன் வெடிப்பதிர்வு எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும். கரும்புலித் தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவால் உருவாக்கப்பட்ட தொழினுட்பங்கள் கடலிலும் தரையிலும் இப்போதும் எதிரியை அச்சுறுத்தியபடியே இருக்கின்றன. இவற்றைவிட இயக்கத்தில் அவ்வப்போது அறிமுகமாகும் புதிய வகை ஆயுதங்கள் ராயுவின் கைபட்டுத்தான் வெளியே வரும்.
இயக்கத்தின் படைத்துறை வளர்ச்சியில் செலுத்திய அதே அக்கைறையைத் தன் பொறுப்பின் கிழ் செயற்பட்ட போராளிகளின் நலனிலும் செலுத்தினார். நாள்தோறும் வெடிமருந்துகளுடன் பணியாற்றும் போராளிகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காகப் புத்தகங்களைத் தேசிப்படித்து விடயங்களை நுணிகி ஆராய்ந்து சரியான நடைமுறைகளைச் செயற்படுத்துவதிற் கண்ணாயிருந்தார். எம்மால் உற்பத்தி செய்யப்படும் வெடிமருத்துக் கருவிகள் எமது போராளிகளின் சாதனைக் கானவையாக இருத்தல் வேண்டும். மாறாக எமது அழிவிற்குக் காரணமாக அமையக்கூடாது என்பதில் எப்போதும் அக்கறையாக இருந்தார். குறிப்பாகக் கரும்புலிகளுக்கான வெடிப் பொருட்களைத் தயாரிக்கும் போது, “நாங்கள் ஒவ்வொருவருமே கரும்புலிகள் என்ற உணர்வோடு இருந்துதான் அந்த உற்பத்திகளைச் செய்யவேண்டும். ஒரு கரும்புலியின்ர உயிர் அநியாயமாகப் போகக்கூடாது. அவர்களுக்கான உற்பத்திகள் துல்லியமானவையாக இருக்க வேண்டும்” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி கூறுவார். போரில் எமது இழப்புக்களைக் குறைத்து எதிரிக்குப் பெரும் தேசத்தை ஏற்படுத்துவதில் ராயுவின் உழைப்புப் பெரிதும் உதவியது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தலைவர் தெரிவிக்கும் தீர்வுகளை நிறைவேற்றும் வரை அவர் ஓய்வதில்லை, சில வேளைகளில் ராயு தெரிவிக்கும் தீர்வு எளிதானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்.
1992ம் ஆண்டு ஆயுத வெடிபொருட் பற்றாமையுடன் மற்றும் சில நெருக்கடிகளையும் சந்தித்த காலம். நாம் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலிலும் எமது ஆள், ஆயுத இழப்புகளைக் குறைத்து எதிரிக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தி ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பெருமளவில் கைப்பற்றவேண்டும் என்பதில் தலைவர் கண்ணும் கருத்துமாக இருந்து நடவடிக்களை மேற்கொண்டார். அப்பொழுது பலாலி முன்னரங்க நிலைகள் மீது ஒரு தாக்குதலை நடத்தத் திட்டம் தீட்டப்பட்டது. எதிரியின் முன்னரண்களை எளிதாகத் தாக்கியழிப்பதற்காகக் கடல்வழியால் முகாமிற்குள் இரகசியமாக நுழைவதற்கான திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. ஆனால் கடல்வழியால் ஆயுதங்களை நகர்த்துவதில் எதிர்பார்க்கப்பட்ட சிக்கல்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தன. அத்தடையை நீக்குவதற்கு ராயுவால் முன்மொழியப்பட்ட தீர்வு, திட்டத்தைச் செயற்படுத்த உதவியது. தாக்குதல் இழப்புக்கள் குறைந்த வெற்றியான நடவடிக்கையாக நிறைவடைந்தது. அதற்குப்பின் நடந்த பல தாக்குதல் நடவடிக்கைகளிலும் ராயுவின் கண்டுபிடிப்புப் பயன்பட்டது.
அந்நாட்களில் ராயுவை அவர் நேசித்த மக்களோ பெரும்பாலான போராளிகளோ கூட அறிந்திருக்கவில்லை. குறிப்பிட்டுக் கூறக்கூடிய போராளிகள் சிலருக்கு மட்டுமே அவர் அறிமுகமானவராக இருந்தார். ஆனாலும் செயல்களினூடாக எல்லோருக்குள்ளும் அவர் வாழ்ந்தார். இரண்டாம் ஈழப்போர் வெடித்த சில ஆண்டுகளிற் பலநூற்றுக்கணக்கான போராளிகளை உள்ளடக்கிய புதிய படைப்பிரிவொன்றின் உருவாக்கத்திற்குப் பொறுப்பாக ராயு நியமிக்கப்பட்டார். உயர் செயற்றிறன் மிக்க மரபுவழிப் படையாக அதை உருவாக்க வேண்டுமென்று தலைவர் எண்ணினார். அதற்கான தொடக்கப்பணிகளே பாரிய அளவிலானவையாக இருந்தன. பகல் இரவு என்று பாராமல் ஒய்வு ஒழிவின்றிக் கடுமையாக உழைக்கவேண்டியிருந்தது.
சிறுத்தைப் படைப்பிரிவில் முதலிற் பெண் போராளிகளே இணைக்கப்பட்டனர். பெண் போராளிகளுக்கு அவர்களின் திறமைகளையும் ஆற்றலையும் உணர்த்தி தம்மால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துத் தனிச்சிறப்புமிக்க அதிரடிப்படையை உருவாக்கவேண்டுமெனத் தலைவர் திட்டமிட்டார். அதற்கான பயிற்சித் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுப்பதில் அதிக அக்கறை செலுத்தினார். தலைவரின் என்னத்தை முழுமையாக உணர்ந்த ராயு தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து உழைத்தார். பின்னர் சிறுத்தைப் படையில் ஆண்களுக்கான பிரிவு உருவாக்கப்பட்டபோது ராயுவின் மீதான சுமை இரட்டிப்பானது.
பயிற்சிப் பாசறையில் போராளிகளுடன் ராயு எப்படி வாழ்ந்தார் என்பதை போராளி ஒருவர் நினைவு கூர்ந்தார். “சிறுத்தைப் படையணியிற் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டோம். வெளித்தொடர்பு எதுவுமின்றி ஆண்டுக்கணக்காக எமது பயிற்சி தொடர்ந்தது. தொடக்கத்தில் எல்லாமே எங்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டனவாக வேயிருந்தன. நாங்கள் எல்லாவற்றிலுமே கடுமையாக எங்களை வருத்தினோம். அப்போதெல்லாம் எங்களுக்கு மென்மேலும் உறுதியூட்டியவை ராயு அண்ணையின் செயல்கள்தாம். அவர் எமது அடிப்படைத் தேவைகளை தந்தை ஒருவருக்குரிய அக்கறையோடு கவனித்தார். போராளிகள் அனைவரிலும் அன்பும் அக்கறையும் செலுத்தினார். ராயு அண்ணை பயிற்சி செய்வதைப் பார்த்தாலே எங்களுக்கும் அதில் ஆர்வம் வந்துவிடும்”
ராயுவால் வளர்தெடுக்கப்பட்ட ஆற்றல் நிறைந்த சிறுத்தைப் படையணி மூன்றாம் ஈழப்போரில் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டது. போர்க்களங்களில் நேரடிச் சண்டை அணிகளாக ஈடுபடுத்தப்பட்டதுடன் சிறுத்தைப்படையணிப் போராளிகளாற் படைத்துறை உள்கட்டமைப்புகள் பலவும் ஏற்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியிற்றுறை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. இயக்கத்தின் சுமைகளை மேலும் மேலும் தாங்கியபடியே ஒரு சுமைதாங்கிபோல அவர் வாழ்ந்தார். இன்னுமின்னும் சுமைகளைத் தாங்குவதர்காகத் தன் அறிவையும் ஆளுமையையும் வளர்த்த படியேயிருந்தார். இப்பொழுது நினைத்துப்பார்க்கையில் பிரமிக்கவைக்கும் பணிகளையெல்லாம் அந்த மனிதர் எப்படிச் செய்து முடித்தாரென்பதை அவரோடு நீண்டகாலம் வாழ்ந்த போராளியொருவர் நினைவு கூறுகிறார்.
“ராயு அண்ணையிடம் தனித்துவமான பல திறமைகளும் குணாதிசயங்களும் இருந்தன. அவர் ஞாபகப்படுத்துவதற்காகப் பெரும்பாலும் எதையும் குரித்துவைப்பதில்லை. எப்படியோ எல்லாவற்றையும் அந்த மூளையிற் பதிந்துவைத்துவிடுவார். தேவைப்படும்போது எல்லாவற்றையும் உடன்க்க்குடன் அவரால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். எங்காவது தூரத்துக்குப் புறப்படுவதென்றால் சாரதிக்குப் பக்கத்திற் புத்தகத்துடன் அமர்ந்துவிடுவார். தான் வாகனத்தை ஓட்டும்போது பக்கத்தில் இருப்பவரை வாசிக்கவைத்துக் கேட்டுக்கொண்டிருப்பார். அப்படியுமில்லாவிட்டால் போராளிகளுக்கான விரிவுரைக் கூடமாக அது மாறும். கடினமான காலங்களில் ராயு அண்ணை சிறிது நேரமாவது நித்திரை கொள்வது வாகனத்திற் செல்லும் வேளையிலாகத்தானிருக்கும். வாகனம் சென்றடைந்ததும் தன் மீதிப்பணிகளை ஆரம்பித்துவிடுவார். எப்போதும் அதிகாலைவேளையில் எழுந்துவிடுவதைக் கண்டிப்பான பழக்கமாக வைத்திருந்தார். காலைக்கடன்களின் போதே தன் பொறுப்பாளர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்துவிடுவார். இப்படியான இயல்புகலாற்றான் அவரால் இவ்வளவு சுமைகளையும் சுமக்கமுடிந்தது”
உண்மையில் அவர் அப்படி வாழ்ந்ததாற்றான் போராட்டத்தளம் யாழ்குடாநாட்டிலிருந்து வன்னிக்கு மாறிய பின்னரும் எமது இயக்கத்தின் வேகமான வளர்ச்சிக் காலத்தில் கூடுதலான பணிகளை அவராற் சுமக்கமுடிந்தது.
வன்னிப்போர்க்களத்தில் எமது படைத்துறை பீரங்கி, மோட்டார் உள்ளிட்ட பல நவீன படைக்கலங்கள் புகுத்தப்பட்டு வலுவூட்டப்பட்டது. எமது படைக்கட்டமைப்புகளுக்கும் தந்திரோபாயங்களுக்குமேற்ப பீரங்கிகளையும் மோட்டார்களையும் பயன்படுத்துவதற்கு ராயு வழிவகுத்தார். எதிரிக்கும் உலகுக்கும் புலிகளின் உண்மைப்பலத்தை உணர்த்திய ஓயாத அலைகள் ஒன்றின்போது எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தும் வகையில் எமது மோட்டார்களின் தாக்குதல் அமைவதற்கு ராயுவின் உழைப்பே காரணமாகும்.
முல்லைப் படைத் தளத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகள் எமது பீரங்கிப்படையை உருவாக்க வழிவகுத்தன. ஆனாலும் அவற்றைப் போர்க்களங்களில் நுட்பமாகப் பயன்படுத்தும் தொழில்னுட்பத்தையும் பட்டறிவையும் பெறுவது எளிதானதாக இருக்கவில்லை. எதிரியும் எமக்கு நீண்டகால இடைவெளியைத் தருவானெனத் தென்படவில்லை. எல்லாப் பொறுப்புகளும் ராயுவிடமே விடப்பட்டன. “ராயு எப்படியோ செய்து முடிப்பார்” என்று தலைவர் நம்பினார். அதனாலேயே விரைவில் நடக்கவிருந்த ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரைத் தலைவர் ஒத்திவைத்துக் காத்திருந்தார். ராயுவும் அவரது போராளிகளும் சூறாவளியாகச் சுழன்றுழைத்த அந்த நாட்களைப் பீரங்கிப்படையணியின் தளபதியொருவர் நினைவு கூறுகிறார்.
“எங்களைப் பொருத்தவரை அப்போது எமது கைகளில் இரண்டு இரும்புக்குத்திகள் இருந்தன. ஏனெனில், அப்போது ஆட்லறிபற்றிய அறிவு எமக்கு இருக்கவில்லை. தெரியாத்தனமாக ஏதும் செய்துவிட்டால் அவற்றை நாங்கள் இழந்துவிடக்கூடும். அல்லது அவற்றின் செயற்றிறன் குறைந்துவிடக்கூடும். நாம் இக்கட்டான நிலையில் இருந்தோம். ராயு அண்ணை அந்த இரும்புக் குத்திகள் மீதிருந்த ஒவ்வொரு புதிரையும் விடுவித்துக் கொண்டிருந்தார். சில கட்டங்களில் அப்பால் நகரமுடியாமல் முடங்கிவிடுவோம்.
சிலவேளைகளில் நம்பிக்கையின்மைகூட ஏற்படும். “ராயு அண்ணை எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்” அந்த நம்பிக்கைதான் எல்லோரையும் தூக்கி நிறுத்தும். நம்பிக்கை வீண்போகவில்லை. இரும்புக் குத்திகள் விரைவிலேயே எமது கைகளில் ஆட்லறிகளாக மாறின. எல்லாவற்றையும் கடந்து துல்லியமான சூடுகளை வழங்கக்கூடிய நிலைக்கு ராயு அண்ணை எங்களை முன்னேற்றினார். தலைவரின் எதிர்பார்ப்பின்படியே ஆனையிறவு – பரந்தன் ஊடறுப்புச் சமரின்போது எமது ஆட்லறிகள் துல்லியமான சூடுகளை வழங்கின.”
ஆட்லறிப் பிரிவின் செயற்றிறன் மேலும்மேலும் வளர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. ஒரு வழமையான மரபுவழி இராணுவக் கட்டமைப்பைப் போலல்லாது எமது படைக்கட்டமைப்புத் தனித்துவமான அம்சங்களைக் கொண்டது. எமது வியூகங்களும் தனித்துவமானவை. இவற்றுக்கு அமைவாக எமது ஆட்லறிப் பிரிவைப் பயன்படுத்துவதில் ராயு வெற்றிகண்டார். பாதகமான காலநிலைகளின்போது ஆட்லறி, மோட்டார் போன்ற மரபுவழி ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாமையால் மரபுவழிப் படைகள் அக்காலநிலைகளிற் பாரிய அளவிலான சமர்களைத் தவிர்த்தன. ஆனால் எமது ஆட்லறிப் பிரிவை அத்தகைய கால நிலைகளிலும் பயன்படுத்தக்கூடியதாக ராயு அமைத்திருந்தார். ஐயசிக்குறுவிற்கு எதிரான சமர்க்களத்தில் சில இடங்களில் துல்லியமான ஆட்லறிச் சூடுகள் மூலம் இலகுவான வெற்றிகள் பெறப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின்போது எமது ஆட்லறிப்பிரிவான கேணல் கிட்டு பீரங்கிப் படையணி தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி உழைத்தது. அதனை ராயுவே தலைமைதாங்கி வழிநடத்தினார்.
எல்லா முனைகளிலும் தொடர்ச்சியாக நீண்டு சென்ற அந்த மீட்புச் சமரிற் பல் சோர்வான கட்டங்களிற் போராளிகளுக்கு உற்சாகமூட்டி வேகமான வெற்றிகளுக்கு வழிவகுத்தார். களத்தில் ஏற்படும் நெருக்கடியான கட்டங்களிலெல்லாம் எதிரியின் ஆட்லறிப் பிரிவால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு விரைவான சூட்டு ஆதரவை வழங்கக்கூடிய நிலைக்கு எமது ஆட்லறிப் பிரிவை வளர்த்தெடுத்தார். அதனாற் பல பாதகமான களச்சூழல்களிலும் நாம் வெற்றிபெற முடிந்தது. போராளிகள் பலரும் காப்பாற்றப்பட்டனர். தலைவரின் புதிய திட்டமிடலின் கீழ் பரந்தன் சமரில் கனரக ஆயுதங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு பகல் சண்டையில் நாம் குதித்தபோது தலைவரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆட்லறிகளை ஒருங்கிணைத்துச் சூடுகளை வழங்கி வெற்றிக்கு வழிசமைத்தார். இந்த நம்பிக்கையுடனேயே மேலும் தொடர்ந்த நடவடிக்கைகளில் எம்மால் வெற்றியீட்ட முடிந்தது.
வரலாற்றுப் புகழ்மிக்க இத்தாவிற் சமரின் போது ஈற்றிற் சிங்களம் தொடுத்த பாரிய “அக்கினிக்கேலா” நடவடிக்கையை முறியடித்த சமரின் போதும் களத்தில் நின்ற போராளிகளுக்குப் பீரங்கிகளால் உற்சாகமூட்டி அவர்களின் உயிரைக்காத்து ஓயாது பணியாற்றி வெற்றிகளுக்கு வழிசமைத்தமை ராயுவின் தலைமையில் எமது ஆட்லறிப் பிரிவு ஈட்டிய சாதனைகளில் முக்கியமானதாகும். ராயுவின் பொறுப்பிலிருந்த பொறியியற்றுறையால் “அக்கினிக்கேலா” நடவடிக்கைக்கெதிரான சமரில் அறிமுகம் செய்யப்பட்ட வேடிக்கருவிகள் எதிரி அணிகளைச் சிதறடித்து வெற்றிக்கு வழிகோலின.
போர்க்களங்களில் ஆயுதவலுவைப் பயன்படுத்தி எமது இலகுவான வெற்றிக்கு வழிகோலி, போராளிகளின் உயிர்காகாத்த எமது தளபதியைப் போர்க்களங்களிற் காப்பதில் எல்லோருமே அக்கறை கொண்டிருந்தோம். ராயுவுக்கு ஏதும் நடந்துவிட்டால் அது ஈடுசெய்யப்பட முடியாததென்பதை எல்லோரும் உணர்ந்திருந்தோம். ஆனால் போர் முழக்கங்கள் தணிந்துவிட்ட ஒருநாளிற்றான் எங்களுக்கு இடி காத்திருந்தது. நோயென்று பாயிற் படுத்தரியாத எங்கள் தளபதி ராயு கொடும் நேயினால் வதையுறுவதாகச் செய்தி வந்தது. அவரால் பிள்ளைகள்போல் வளர்க்கப்பட்ட போராளிகளும் அவரை அறிந்தவர்களும் துயரத்தில் வாடினர்.
ராயுவின் நோயின் கடுமை அதிகரித்துக் கொண்டேபோனது. சத்திரசிகிச்சை முடிவுகள் புற்றுநோய் என்பதை உறுதிப்படுத்தின. ஏற்கனவே அவை அவரது உடலில் வலுவாக நிலைபெற்றுவிட்டன. எங்கள் அன்புக்குரிய ராயு மீட்கப்பட முடியாதநிலைக்குச் சென்று கொண்டிருந்தார். படுக்கையில் நாட்கள் கழிவதை செரிக்க முடியாதவராக இருந்தார்.
“வருத்தமென்று சும்மா படுத்துக்கொண்டு வேலையும் செய்யாமல் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்க ஒரு மாதிரிக் கிடக்கு” என்று தன் போராளிகளுக்கு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். படுக்கையில் இருந்தபடியே தனது போராளிகளுக்கு முக்கியமான விடயமொன்றைக் கற்பிப்பதில் ஈடுபட்டார். அதனால் அவர் தேறிவருவதாக எல்லோரும் நினைக்கத் தொடங்கினர். ஆனால் ராயுவின் வயிறு கல்லாகிக்கொண்டே போனது. தாங்கமுடியாத வயிற்றுவலிக்கு உள்ளாகும் அவரை மயக்கநிலைக்குட்படுத்த வேண்டியிருந்தது. ஈற்றில் மருத்துவத்திற்காக வேறிடத்துக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது.
ஆட்கொல்லி நோயென்றாலும் இரும்பு மனிதரென்று நாங்கள் எல்லோரும் அடிக்கடி கூறிக்கொள்ளும் கேணல் ராயு அவர்கள் சில காலத்துக்காவது வாழக்கூடிய நிலையில் திரும்பிவருவாறேன்று எதிர்பார்த்தோம். அடுத்த மாவீரர் நாளில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராயு நட்டுவைத்த பூங்கன்றுகளும் அவ்வாறுதான் எண்ணியிருக்கும். ஆனால் 25.08.2002 ஆம் ஆளன்று எல்லாமே பொய்த்துப்போயின.
விடுதலைப்புலிகள் (புரட்டாதி, ஐப்பசி 2002) இதழிலிருந்து தேசக்காற்று.