ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தனி நபர்களுக்கு மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்படவில்லை என செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிரிதர் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (22) நடைபெற்ற மண் அகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவில் கடந்த 2015ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தனி நபர்களுக்கு மண் அகழ்வுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்குவதை நாம் நிறுத்தியுள்ளோம்.
கடந்த 2015ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் ஏற்கனவே வழங்கப்பட்ட மண் அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்து கொடுப்பதுடன் அதிலும் வழங்கப்பட்ட மணல் கீயுப்களை அரைவாசியாக குறைத்தே வழங்கியுள்ளோம்.
2015ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னர் தனி நபர்களுக்கான புதிய மண் அனுமதி பத்திரங்களை நாம் வழங்கவில்லை.
நான் கூடுமானரை மண் அகழ்வுகளை குறைப்பதற்கே முயற்சித்து வருகின்றேன்.
ஆனால் நாம் வழங்கும் மண் அனுமதிக்கு அதிகமான மண் பிரதேசத்தில் இருந்து ஏற்றப்படுகின்றது இதன் காரணமாகவே பிரதேசத்தில் மண்வளம் குறைவடைகின்றது.
இதற்கு காரணம் பொலிசாரின் நடவடிக்கைகளே. ஒருவர் ஒரு நாளைக்கு மூன்று லோட் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கினால் அவர் அதற்கு அதிகமாகவே மண்ணை ஏற்றிச் செல்கின்றனர்.
அவர்கள் வானத்தால் மண்ணை ஏற்றி செல்லவில்லை வீதியால்தான் மண்ணை ஏற்றி செல்கின்றனர்.
அந்த வீதிகளில் பல பொலிஸ் பரிசோதணை நிலையங்கள் உண்டு அவர்களை தாண்டித்தான் மண் ஏற்றிச் செல்லும் லொரிகள்
பயணிக்கின்றன ஆனால் பொலிசார் அதனை கண்டுகொல்வதில்லை சட்டம் தனது கடமையை சரியாக செய்தால் பிரதேசத்தில் அனுமதிக்கு அதிகமாக எடுத்துச்செல்லப்படும் மண் லொரிகளை தடுத்து நிறுத்த முடியும் அப்போது பிரதேசத்தின் மண்வளத்தை பாதுகாக்க முடியும்.
ஆனால் பொலிசார் அதனை செய்வதில்லை என்றார். மண் அகழ்வை ஏன் தடுக்க முடியாது? என சம்பந்தப்பட்ட மற்றுமோறு அதிகாரியிடம்
கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மண் அகழ்வை தடுக்க முடியாது மண் குறித்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கு கட்டாயம் தேவையான பொருள் அதனை வழங்குவதற்கே புவிச்சரிதவியல் திணைக்களத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
நாங்கள் மாவட்டத்திற்கும் மாவட்ட அபிவிருத்திற்கும் தேவையான மண்ணை தேவையான அளவுக்கே வழங்குகின்றோம் அளவுக்கு அதிகமான மண்ணை அகழ்வதற்கு நாம் அனுமதி வழங்குவதில்லை.
ஆனால் அளவுக்கு அதிகமாக மண்ணை சட்டவிரோதமாக பலர் பொலிசாரின் உதவியுடன் கடத்துகின்றனர் இதற்கு காரணம் பொலிசாரே இதற்கு பிரதேச செயலாளரும் நாங்களும் என்ன செய்யமுடியும்.
இல்லை நீங்கள் மண் அனுமதியை நிறுத்துவதாக இருந்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் இருந்து போராடத்தேவையில்லை அதற்குத்தான் மாவட்ட பிரதேச அபிவிருத்தி கூட்டங்கள் உண்டு.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி மண் அனுமதியை நிறுத்துங்கள் என்றால் நாங்கள் உடனடியாக நிறுத்துவோம் இல்லை அரசாங்க அதிபர்
மண் அகழ்வை நிறுத்துங்கள் என்று சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பினால் அவர் உடனடியாக மண் அகழ்வை நிறுத்துவாகள்.
ஆனால் தங்களுக்கு மண் அனுமதி பத்திரத்திற்கு கையொப்பம் இடவில்லை என்பதற்காக குறிப்பிட்ட சிலரும் அரசியல்வாதிகளும் இணைந்து மக்களை தூண்டிவிட்டு பிழையாக வழிநடத்துகின்றனர்.
இதனுடாக அவர்கள் மண் அகழ்வை தடுப்பதற்கு பதிலாக தங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு மண் அனுமதி பத்திரம் வழங்கவேண்டும் என்ற அழுத்தத்தையே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்க முற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.