இன்று ‘சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்’ ஆகும் (30.08.2022). போர், அரசியல், வன்முறை என பிற காரணங்களால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்ட பல லட்சக்கணக்காணோர் பற்றிய தகவல்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 30.08.2011 அன்று பிரகடனப்படுத்தியது.
வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவினரால் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். 2009 யுத்தத்தின் போது சர்வதேசத்தையும் அதன் சட்டவிதிகளையும் நம்பி கையளித்த உறவுகள் ‘தம்மால் கையளித்த உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன ஆனது?’ என்ற பொறுப்புக்கூறலினை சர்வதேசத்திடம் கோரி இரவு, பகலாக வீதியோரத்தில் முன்னெடுத்து வரும் அறவழி சாத்வீகப் போராட்டமானது 12.08.2022ஆம் நாள் 2018 நாட்களைத் தொட்டுள்ள நிலையில் நீதிகோரி தொடர்ச்சியாக தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசத்தின் கவனத்தை ஏற்படுத்தும் முகமாக நீதிக்கான கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் பேரணிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது .
காணமல் ஆக்கப்பட்டுறவுகளின் ஒவ்வொரு போராட்டங்களையும் தடுப்பதுவும் அவர்களை தேசத்துரோகம் செய்தவரகளைப்பார்ப்பதுபோல் நோக்குவதும் வேதனைக்குரிய விடயமாக தென்படுகின்றது.இந்தமக்கள் ஜன நாயகத்திற்கு எதிராக என்னதான் செய்துவிட்டார்கள் என்பதை இந்தரசு அல்லது அரசுசார்ந்த அதிகாரிகள் பகிரங்கப்படுத்துவார்களா?உண்மையில் தமிழர்களைப் பொறத்தவரை இலங்கை தேசத்தின் ஜனநாயகம் எனபது தமிழ் மக்கள், சிங்களப்பெரும்பாண்மைகளுக்கும் அதன் ஆட்சி அதிகார பீடத்திற்கும் முன்னால் வாய் பொத்தி நிற்பது என்பதுபோன்றே தென்படுகின்றது. ஏனெனில் பெரும்பான்மையான சிங்களத்தலைமைகள் தமிழ்மக்களை தோற்கடிக்கப்பட்டவரகளாகவே உணர்கின்றனர்.இந்த மனநிலையில் இருந்து கொண்டு எந்த தீர்வினையும் நோக்கி அவர்களால் நகர முடியாது என்பதே உண்மை நிலை.
உலக அரங்கில் ஈராக்குக்கு அடுத்ததாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் இலங்கைதான் முன்னிலை வகிக்கின்றது. இலங்கைத் தீவு நீண்டகாலமாக ஒரு அடக்குமுறை தேசமாக இருந்து வருகிறது, தமிழர் படுகொலைகள், சித்திரவதைகள், மனித புதைகுழிகள் என கொடூரங்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றது. போர்க் காலங்களில் மிகவும் அச்சம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள் பலர் பலவந்தமாக பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வாறு இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை 2009இல் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்கின்றது. மறைந்த முன்னாள் மன்னாரின் ஆயரான ஜோசப் ராஜப்பு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், 1,46,679 பேருக்கு மேல் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் என்றும் 30,000 பேருக்கு மேல் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் என்றும் சாட்சியமளித்திருந்தார். போரின் முடிவில் வடக்குக் கிழக்கில் 90,000 விதவைகள் அல்லது பெண் தலைமைக் குடும்பங்கள் காணப்படுவதாகவும் மற்றும் 50,000 மேல் ஆதரவற்றோர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் சாட்சியம் வழங்கியுள்ளார்.
காணாமல் போவது என்பது இல்லாது போவது அல்லது தொலைந்து விடுவது என்று அர்த்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் காணாமல் போவது என்பது வெறுமனே இல்லாமல் போவதல்ல; வேறுபட்டது இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது. அதற்கு யாரோ ஒருவர் பொறுப்பாக இருக்கின்றார். காணாமல் போனவர்களாக கூறப்படுபவர்களுக்கு எங்கு? என்ன நடந்தது? என்று யாரோ ஒருவருக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் அது சட்டத்துக்கு புறம்பாக மனித விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இடம் பெறுவதால் வெளித் தெரியாத விடயமாகவே இருந்து விடுகிறது.
இலங்கையில் பெறுமதிமிக்க எமது உயிர்களை 1983ஆம் ஆண்டு முதல் 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும்(1,40,000) மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையத்திடம் முறையிடப்பட்டுள்ளது. நிலையில் நாம் வீதிவீதியாக போராடிக் கொண்டு துன்பங்களையும், அவலங்களையும் அனுபவித்து வருகின்றோம். வருடங்கள் கடந்து செல்கின்றதே தவிர எமது மக்களுக்கான நீதி மட்டும் கிடைக்கப்பெறவில்லை.
அரச படைகளினால் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களில் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவத்தால் வீடுகளில் புகுந்து கடத்தப்பட்டவர்கள், இறுதிப் போரில் இராணுவ சோதனைச் சாவடியில் சரணடைந்தவர்கள், மற்றும் உறவினர்களால் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டவர்கள் என சாட்சியங்களுடன் உள்ள விடையத்தை இலங்கை அரசாங்கம் தற்போது மூடிமறைக்க முனைப்புக் காட்டி வருகின்றது. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற இன அழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக் குற்றங்களுக்கு பொறுப்பாகவிருந்தவர்கள் மாறி மாறி இன்று நாட்டின் ஆட்சிப் பீடத்தில் ஏறிவருகின்றார்கள்.
வெள்ளைவான் கடத்தல்காரர்களால் கடத்தல், காணாமல் ஆக்குதல் என்பது போர்க்காலங்களில் ஒரு மாயத்தோற்றத்தில் விடுதலைப் புலிகளிக்கு உதவி செய்கின்றார்கள் என்ற சந்தேகத்தில் கடத்தப்பட்டார்கள். போராளிகளையும், தமிழர்களையும் மட்டுமின்றி மனித உரிமை மீறல் நடவடிக்கைகளைக் சுட்டிக் காட்டும் இளைஞர்கள், யுவதிகள், குடும்பத்தார்கள், பெண்கள், மதகுருமார்கள், ஊடகவியளார்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இது யுத்த முடிவுக்கு பின்னரும் இன்னொரு போராட்டத்தை உருவாக்க எத்தனிக்கின்றார்கள் அல்லது நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கின்றார்கள் என்ற போர்வையில் கடத்தப்படுக்கொண்டுதான் இருக்கின்றார்கள் .
குறிப்பாக 1956முதல் இலங்கையில் 1970களில் காணாமல் போன தென்னிலங்கைச் சேர்ந்த இளைஞர்களும், 1971இல் இருந்தே மனிதர்கள் காணாமல் போவது என்பது ஒரு வகையில் சாதாரண விடயமாகி விட்டது. அக்காலப் பகுதியில் ஜே.வி.பியுடன் தொடர்புடைய சுமார் 10000 பேர் கடத்தப்பட்டு காணாமல் போய் பின்னர் கொலை செய்யப்பட்டனர். 1980களின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் பல்வேறு அரசியல் புறச் சூழல்களின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எவரும் மீளத் திரும்பவில்லை. 1980களிருந்து 2009 ஆண்டு இறுதிப் போர் வரை விடுதலைப் புலிகளாய் இருந்தவர்களும் இல்லாதவர்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் தந்தையை, தாயை, கணவனை, மனைவியை, மகனை, மகளை, சகோதரனை, நண்பர்களை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருடன்தான் போராட்டங்களும் மிச்சமாகின்றது .
காலத்துக்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசுகள் தமிழர் தாயகமாகிய வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இது ஒரு சாதாரண விடயமாகவே பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களால் கருதப்பட்டு வருகின்றது. நல்லாட்சி அரசாங்கம் என்றப் போர்வையில் வந்த கடந்த அரசாங்கத்தில் கூட சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் கண் துடைப்புக்காக விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் காணாமல் ஆக்கப்பட்டதில் தொடர்புடைய சில பொறுப்பு வாய்ந்தவர்கள் கூட நியாமிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் எந்தவிதமான நன்மைத்தனங்களும் அல்லது நீதியான விசாரணைகளுக்கான எந்த முன்னெடுப்புகளும் இதுவரை எட்டப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில் 40,000க்கும் அதிகமானோர் இலங்கை இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டனர். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் பலர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட காணொளிகள் நிழல்படங்களையும் ஊடகங்கள் வாயிலாக காண முடிகின்றது. இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பலர் இராணுவம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான நிழல்படங்களையும் காணமுடிகிறது. உறவுகளை தேடி அலைந்து இன்றுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில் தங்களுக்கான நீதியை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்கள்.
2009 மே 18ஆம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், இலங்கை அரச படையினரிடம் சரணடைந்த 800க்கும் அதிகமானவர்கள் பேருந்துகளில் இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்கே? இராணுவத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டவர்கள், வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தவர்கள் மற்றும் நிராயுதபாணிகளாய் இராணுவத்திடம் சரண்டைந்து பேருந்துகளில் ஏற்றும் போதும் அவர்களை கொண்டு செல்லும் போதும் பார்த்த முதலாம் இரண்டாம் சாட்சிகள் வாழும் சாட்சிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை. அவர்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக தொடந்து 13 ஆண்டுகளாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களில் பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களும் தலைநகர் கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடத்திச் செல்லப்பட்டவர்கள் பலர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் காட்டுப்பகுதிகளிலும், நீர் நிலைகளிலும், தெருவோரங்களிலும் கருகிய பிணங்களாகவோ, அழுகிய பிணங்களாகவோ, தலைகள் துண்டிக்கப்பட்ட மூண்டங்களாகவோ, காணக் கிடப்பார்கள். அல்லது காணாமல் போனவராகவோ காற்றில் கரைந்தவராகவோ மட்டும் நினைவில் இருப்பார்கள். இப்படி நடந்த நடுக்கமூட்டும் கொடூரங்கள் நாட்டில் நடைப்பெற்றுள்ளது. இன்னொரு இனம் மிகக்கொடிய அழிப்பின் தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் மறை முகமான அச்சத்தை ஏற்படுத்தி மற்றைய இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது.
உறவுகளின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேச மனித உரிமைகள் அவை கூட இதுவரை நியாயமான முறையில் ஒரு பொறிமுறையினை முன்வைக்கவில்லை. மக்களின் நியாயமான போராட்டத்திற்கு உள்ளார்ந்த எந்தவித அக்கறையும் காட்டவில்லை. இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையை நோக்கியதாகவே அமைந்திருக்கின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் பலர் காணாமல் ஆக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றார்கள். நாட்டில் கடத்தல்கள் இல்லை; யாரும் காணாமல் போகவில்லை என்று சொல்வதிற்கில்லை. அது தொடர்ந்து ஒரு நிழல் போல நடந்து கொண்டுதான் இருக்கின்றது. கடத்தல்காரர்களின் நாடகம் பல கோணங்களில் பல வடிவங்களில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது .
இடம்பெற்று வரும் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?’, ‘ஆணைக்குழுக்களும் வேண்டாம், விசாரணையும் வேண்டாம்’, ‘பொய்யான அறிக்கையை வழங்கி சர்வதேசத்தையும், தமிழர்களையும் ஏமாற்றாதே’, ‘இனப்படு கொலையாளியை காப்பாற்ற நினைப்பவர்கள் தமிழினத் துரோகிகள்’ போன்ற பல 100 கணக்கான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி, கோசங்களையும் எழுப்பி போராடி வருகின்றார்கள். “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்களா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் முழுமையான பட்டியலை இலங்கை அரசு வெளியிட வேண்டும், எங்கள் உறவினர்களுடன் நாங்கள் வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதிசெய்ய வேண்டும்” என்று தொடர்ச்சியான போராட்டத்தின் குரல்கள் நசுக்கப்படுகிறது.
2009 சர்வதேச அரசு மற்றும் இந்திய அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். கடந்த 2015 செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் உள்ளக விசாரணையே வலியுறுத்தப்பட்டது, அதனால் ஒருபோதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதனையும், காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) என்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என்பதனையும் பாதிக்கப்பட்ட உறவுகள் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டி, உள்ளக விசாரணைப் பொறிமுறை மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பவற்றை அடியோடு நிராகரித்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் தொடர்பாக முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற குற்றவியல் நீதி விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்ற கோரிக்கையானது கடந்த 13 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்களால் வலியுறுத்தப்பட்டு வந்தது. எனினும் அவர்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது மட்டுமன்றி தொடர்ச்சியான கால நீடிப்புக்களும் வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுக்கும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. அரசாங்கம் இன்னும் உரிய பதிலளிக்காமல் பொறுப்பு கூறலில் இருந்து தவிர்த்து வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்து சகல வழிகளிலும் தமிழ் இனவழிப்பு யுத்தத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்து முன்னின்று வழிநடத்தினார். இவருக்கு துணையாக இவரது நம்பிக்கைக்குரிய படைத் தளபதிகளும், சிங்கள அதிகாரிகளும் தமிழரை சித்திரவதை செய்து, படுகொலை செய்து, ஆண்கள் பெண்கள் என பாலியல் வன்முறைகள் செய்து பல்லாயிரக்கணக்கானோர் அவயங்களை பறித்து தமிழரின் சொத்துக்களை கொள்ளையடித்து எம் இனத்தை இனவழிப்பு செய்தனர்.
எமது உறவுகளில் பெருந்தொகையானோர் 2009 இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தும், கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், உயிரோடு கையளித்த சரணடைந்த உறவுகளை இறந்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய இரக்கமின்றி அறிவித்தார். இதில் 29ற்கும் மேற்பட்ட கைக்குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதில் பாதுகாப்புச் செயலராக இருந்து, கட்டளைகளை வழங்கி திட்டமிட்டு இனவழிப்பை மேற்கொண்டதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. தானே பாதுகாப்பு செயலராக இருந்து மனிதகுலத்திற்கு எதிரான யுத்தம் மூலம் தமிழின அழிப்பை மேற்கொண்ட ராஜபக்ஷ குடும்பத்தை சாந்தவர்தானே.
2009 சரணடைந்த விடுதலைப் புலிகள் பலரது நிலை இன்னமும் அறியப்படாதுள்ள நிலையில், அவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய இராசபக்சே அளித்துள்ள புள்ளிவிபரங்களே அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளன.
ஊடகவியலாளர் மேரி கொல்வின் பா.நடேசனும் புலித்தேவனும் தன்னோடு செய்மதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய விரும்புவதாகவும் அதற்கான ஒழுங்குகளை செய்யுமாறு தன்னைக் கேட்டதாகவும் அதன் பின்னர் அது தொடர்பாகத் தான் எடுத்த முயற்சிகளை Sunday Times (UK) ஏட்டுக்கு எழுதிய கட்டுரையில் விபரித்திருந்தார்.
இறுதி யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களிலும் பின்னரான காலங்களிலும் வெள்ளை வேன் கடத்தல், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், அரசாங்க படைகளால் கடத்தப்பட்டவர்கள், வயது வித்தியாசம் இன்றி இலங்கை அரசாங்க தரப்பு படைகளால் கைது செய்யப்பட்டவர்கள் என இப் பட்டியல் நீண்டு செல்கின்றது. போராட்டக்காரர்களைக் குறிவைத்து, கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PAY) பாய்கின்ற நிலையிலும் இந்த போராட்டத்தின் மூலம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
இலங்கையின் போர்ச்சூழல் ஆரம்பித்த கால பகுதியில் இருந்து மனித கடத்தல் அல்லது வலிந்து காணாமல் போகச்செய்தல் எனும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. என்பதற்கு சான்றாக இன்றும் உறவுகளை தொலைத்துவிட்டு வீதிகளிலும் வீதியோரங்களிலும் கொட்டகைகள் அமைத்து போராடும் வயோதிப தாய்மார்களே சாட்சியம் தங்கள் பிள்ளைகளுக்காகவும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும் கண்ணீரோடு தெருத்தெருவாகவும்,பல தூதரகங்களுக்கு முன்பாகவும் தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிவதற்காக மழையிலும் வெயிலும் சமூகத்தின் ஏளனப் பார்வைக்கு மத்தியிலும் உன்னதமானதும் உயிரோட்டமானதொரு போராட்டம் வடக்கு கிழக்கு தமிழர்வாழுகின்ற பகுதிகளில் மக்கள் மயப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது தாய்மார்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கம் இதுவரை நியாயமான தீர்வையோ அல்லது அந்த தீர்வை நோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு பொறிமுறையினையோ இதுவரை முன்வைக்கவில்லை இதன் காரணமாகவே இங்கே பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த கோசமும் நியாயமான சர்வதேச விசாரணையினை நோக்கிதாக காணப்படுகின்றது.
- எமது வாழ்நாள் முடிவதற்கு முன் நீதியின் தீர்ப்பை காண விரும்புகின்றோம். ஆகவே மஹிந்த, கோத்தபாய உட்பட எம் மீதான இனவழிப்பிற்கு காரணமான அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டும்.
- தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை காரணமாக சிறிலங்காவை விட்டு தப்பியோடிய கோத்தபாய ராஜபக்ஸ, எந்த நாட்டில் ஒளித்திருந்தாலும் சர்வதேச நீதிபொறிமுறையினூடாக கைது செய்து எம்மீது மேற்கொண்ட மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனவழிப்பிற்காக நீதியின் முன் நிறுத்த சர்வதேசம் முன்வர வேண்டும்.
- இன்றும் கூட எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான சிங்கள இராணுவமே எமது நிலங்களை ஆக்கிரமித்து நிற்கின்றது. இந்தச் சிங்கள இராணுவமே எம்மை தொடர்ச்சியாக அச்சுறுத்துவதுடன், தொடர்ந்தும் எம்மை பீதி நிலையிலேயே வைத்துள்ளது. இந்த இராணுவம் உடனடியாக எமது நிலங்களிருந்து அகற்றப்பட வேண்டும்.
- எம் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடர்ந்து சிங்கள பெளத்த அரசானது எமது நிலங்களையும் ஆலயங்களையும் அடாவடியாக அபகரித்து சிங்கள பெளத்த மயமாக்கலை வெகு வேகமாக செய்து வருகின்றது. இந்நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு காணிகள் உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- சிறையில் தமிழ் அரசியல் கைதிகளாக வாடும் எமது சொந்தங்கள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
- சுயநிர்ணயத்திற்கு உரித்துடைய தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது அரசியல் தலைவிதியை நாமே தீமானிக்கும் சந்தர்ப்பம் வழக்கப்பட வேண்டும். 1948 பெப் 4ஆம் திகதிக்கு முன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்களிடமும் அவர்களின் வழித்தோன்றல்களிடையேயும் சர்வதேசத்தினால் நடத்தி கண்காணிக்கப்படும் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நிரந்திர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
– என்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எமது உறவுகள் செய்யும் அறவழி போராட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் உதவியுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். இவர்களுக்கான நீதி பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சாட்சியங்கள் சில…
எனது மகன் தேவராஜசர்மா கடந்த 1990ஆம் ஆண்டு ஆனி மாதம் 23ஆம் திகதி திருகோணமலை அன்புவழிபுரத்தில் நடைபெற்ற இராணுவ சுற்றிவளைப்பு தேடுதலின்போது இராணுவத்தைச் சேர்ந்த முதியன் சலாகே சரத்ஜயசிங்க பெரேரா என்ற பெயருடைய கோபரல் பிடித்துச் சென்றார். இதனை குற்றப்புலனாய்வு பொலிஸ்க்கு அறிவித்த போது அவர்களால் வழக்கு தொடரப்பட்டபோது நீதிமன்றத்தில் அவர் பிடித்து சென்றதை ஏற்றுக்கொண்டார். அதனால் அவருக்கு உயர்நீதிமன்றத்தினால் 7 வருட சிறைதண்டணை விதிக்கப்பட்டு தற்போது 7வருடம் முடிவடைந்து வெளியில் வந்திருப்பார்
உயர்நீதிமன்ற தீர்ப்பில் எனது மகன் தேவராஜசர்மா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதற்குரிய பதிலை அவரை பிடித்து சென்ற முதியன் சலாகே சரத்ஜயசிங்க பெரேரா கூறவேண்டும் என தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. இதனை நான் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு அறிவித்து எனது மகனை அவரிடமிருந்து மீட்டுத்தாருங்கள் என எழுதி கேட்டபோது எதிரிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவரிடம் ஒன்றும் கேட்க முடியாது என்றும் நீங்கள் அரசிடம் நட்டஈட்டை கேட்கும்படி பதில் எழுதியிருந்தனர்
இலங்கை மனித உரிமைக் குழுவினால் நட்டஈடு கொடுக்கும்படி அரசுக்கு சிபார்சு செய்தும் நட்ட ஈட்டை அரசு வழங்காததால் அரசு மீது வழக்கு தொடரப்பட்டபோது உயர்நீதிமன்றமும் நட்டஈடு வழங்க முடியாது என தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மகனை பிடித்துச் சென்று 27 வருடங்கள் முடிவடைகின்றது; நீதி கிடைக்கவில்லை எனக் கூறினார் சர்மா ஜேசி அவர்கள்
திருமதி க.தர்மநாதன் என்பவர் அளித்த வாக்கு மூலத்தில் தனது கணவர் தர்மநாதன் 2006-08-08ஆம் திகதி தனது வாகனத்துடன் கடத்தப்பட்டார் என்றும் அவருடய வாகனம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஈ.பி.டி.பியினர் தங்கி இருந்த மணற்காடு படைமுகாம் பகுதியில் கடத்தப்பட்ட அன்று காணப்பட்டதாகவும் பின்னர் தனது கணவருடைய வாகனம் மண்டான் படைமுகாமில் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் சொல்லி இருந்தார்
ஒரு தாயார் கூறுகையில், ‘பருத்தித்துறையைச் சேர்ந்த தங்கவேல் கிருபாகரன் எனும் எனது மகன் 2007-11-20ஆம் திகதி கடைக்குச் சென்ற வேளை காணாமல் போயுள்ளார். மகன் காணாமல் போக முதல் 2007-10-01ஆம் திகதி இராணுவத்தினர் மகனின் அடையாள அட்டையினை பறித்திருந்தனர். மறுநாள் அதனை திரும்ப மகனிடம் கையளித்தனர். பின்னர் 14ஆம் திகதி வல்வெட்டித்துறை இராணுவத்தினர் எனது மகன் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற அனுமதி பத்திரம் கொடுத்து இருந்தார்கள். இதன் பின்னரே மகன் காணாமல் போனார். மகன் காணாமல் போன பின்னர். மகனை பற்றிய தகவல் இல்லை’ என்றார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற பத்திரிகையாளர் யாழ்ப்பாணத்தில் 2007-02-17ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டார். இராணுவ சோதனைச் சாவடியிலும் முகாமிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்த பலர் உள்ளனர், எனினும் இன்று வரை அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் அவரது வயதான பெற்றோர் அவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது ஊடகத்துறை சகாக்களும் குடும்பத்தினரும் இராமச்சந்திரன் எந்த விவகாரம் என்றாலும் அச்சமின்றி அது குறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளன் என நினைவு கூருகின்றனர்.
இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களும் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து துணிச்சலுடன் செய்திகளை வழங்கி வந்த யாழ். ஊடகவியலாளன் இராமச்சந்திரன். இவர் காணமற்போய் 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறாதது போன்று இவர் குறித்த விசாரணைகளும் இடம்பெறாத நிலை காணப்படுகின்றது
இவர் காணமற்போய் 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணமற்போன கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறாதது போன்று இவர் குறித்த விசாரணைகளும் இடம்பெறாதநிலை காணப்படுகின்றது. சர்வதேச ஊடக கண்காணிப்புக்குழுக்கள் தமது மகனை கைவிட்டு விட்டதாகவும், தன்னுடைய மகன் குறித்து உள்நாட்டு விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் ராமசந்திரனின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
கடத்தப்படுகையில் 19 வயதான ஒரு இளைஞனின் தாயார் கூறுகையில், ஈச்சமோட்டையில் உள்ள எமது வீட்டுக்கு 2007-03-17ஆம் திகதி சிவில் உடையில் இரவு 10:30 மணியளவில் வந்த 7 பேர் கொண்ட குழுவினால் இரண்டு மணித்தியாலமாக எனது மகனான முத்துலிங்கம் மலரவன் விசாரணை செய்யப்பட்டார். அடுத்த நாள் எனது மகனை விசாரணைக்காக எங்கு வேண்டுமாலும் அழைத்து வர தயார் என்று கெஞ்சியபோதும் அவர்கள் ‘மகன் கத்த கத்த தம்முடன் இழுத்து சென்றனர்’.
‘மகனை கொண்டு சென்ற மறுநாள் காலையில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டில் இருந்த எமது தொலைபேசியை பறித்து சென்றனர். அதில் ஒருவர் ஈ.பி.டி.பி உறுப்பினர். அவரை அடையாளம் கண்டு கொண்டு அன்றைய தினமே யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்திற்கு சென்றபோது முதல் நாள் எமது வீட்டுக்கு வந்த குழுவை சேர்ந்த மூவரைக் கண்டேன். அவர்களிடம் எனது மகன் எங்கே என கேட்டபோது தமக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டு முகாமினுள் சென்று விட்டனர்’ என அளித்த வாக்குமூலத்தில் சொல்லியிருந்தார்.
வெள்ளை வானில் வந்த இராணுவம் எனது மகனைக் கடத்திச் சென்றது
வெள்ளை வானில் வந்த இரணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட எனது மகனை தேடி யாழ். ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றபோது அம்மா அம்மா என்று எனது மகன் உரக்கக் கத்திக்கொண்டிருந்தான். எனினும் அங்கிருந்த இராணுவத்தினர் என்னை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டனர் என திருமதி. இராசேந்திரம் துளசிமலர் சாட்சியமளித்தார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாம் நாள் அமர்வு 15-12-2015 செவ்வாய்க்கிழமை சங்கானைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அராலி செட்டியார் மடத்தைச் சேர்ந்த திருமதி. இராசேந்திரம் துளசிமலர் என்ற தாயார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது சாட்சியத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்.மாவட்டத்தின் நிலை மிகமோசமாக இருந்தது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக பலரும் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் எனது மகன் இராசேந்திரம் நேசராஜ் வெ ளிநாடு செல்வதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார். அதற்காக கடவுச் சீட்டை எடுக்கும் நேக்குடன் 2007 ஆம் ஆண்டு மேமாதம் 12ஆம் திகதி அன்று தகப்பனாருடன் பிரதேச செயலகத்திற்குச் சென்று வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோது வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம் முன்பாக வெள்ளை வாகனம் (வாகன இலக்கம் 252- – 3286) மோட்டார் சைக்கில்களில் வந்தவர்கள் இடைமறித்தனர்.
இதன்போது திடீரென எனது மகனைத் தாக்கியவர்கள் அவரை வாகனத்துக்குள் இழுத்துச் செல்ல முயன்றனர். அதனைத் தடுக்க முயற்சித்த என்னுடைய கணவரையும் தாக்கினர். வாகனத்தில் கொச்சைத் தமிழில் பேசிக்கொண்டு வந்தவர்களும் மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி. யின் உறுப்பினர்களும் எனது மகனை இழுத்துக் கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.
எனது கணவர் வீடு திரும்பி நடந்த விடயத்தை கூறினார். நாம் மானிப்பாயிலுள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றோம். அவர்களிடம் எனது மகன் எங்கே எனக்கேட்டோம். தாங்கள் அவ்வாறு எவரையும் பிடிக்கவில்லை என்றனர்.
இதனைத் தொடர்ந்து யாழ்.நகரிலுள்ள ஈ.பி.டி.பி.யின் அலுவலகத்திற்குச் சென்றோம். அதன் போது எனது மகன் நான் வந்திருப்பதனை எவ்வாறோ அறிந்து உரத்த சத்தத்துடன் அம்மா அம்மா என கத்தினான். நானும் அந்த சத்தம் வந்த திசை நோக்கி கத்திக்கொண்டு சென்ற போது அங்கு நின்ற இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி மிரட்டி அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச் சம்பவத்தை ஈ.பி.டி.பி.யின் பொறுப்பாளரான சில்வேஸ்திரி அலென்ரினிடம் கூறினோம். நீங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள் உங்கள் மகன் தொடர்பாக பார்ப்போம் என்றார். அந்த வார்த்தையை நம்பி நாங்கள் பல மாதங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் அங்கு சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருவோம்.
இதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என கருதிய நாம் கொழும்புக்குச் சென்று கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்தித்து விடயத்தை தெரிவித்தோம். அதன் போது அவர் உங்கள் மகன் பொலிஸாரூடாக விடுவிக்கப்பட்டுவிட்டார் என்று எமக்குப் பதிலளித்தார். எனினும் அவர் கூறியதன் பிரகாரம் எமது மகன் வீட்டிற்கு வரவில்லை. என்னுடைய மகனை நான் தேடாத இடம் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னதாக என்னுடைய மகனை கண்டியிலுள்ள வைத்தியசாலையொன்றில் நிற்பதனை ஒருவர் கண்டுள்ளார். எனினும் எனது மகன் இராணுவத்தினருடன் நிற்பதாகவும் அவருக்குக் அருகில் செல்ல முடியாது போனதாகவும் கூறினார்.
ஆகவே, எனது மகன் எங்கோ இருக்கின்றார் என்பது மட்டும் தெளிவாகின்றது. அவர் எங்கிருந்தாலும் என்னிடம் ஒப்படையுங்கள். இதனைத் தான் நான் உங்களிடம் வேண்டுகின்றேன். நான் குறிப்பிட்ட அந்த வாகன இலக்கத்தை வைத்து முதலில் விசாரியுங்கள் அதன்போது பல உண்மைகள் வெளிவரும். 2007 ஆம் ஆண்டு காலத்தில் ஒருவரின் வாகனத்தை பிறிதொரு நபர் கொண்டு செல்ல முடியாது. எனது மகனை கடத்துவதற்கு வந்த வாகனம் யாருடையது. அதற்கு ஈ.பி.டி.பி.யினர் ஏன் வந்தனர். முதலில் அதனை விசாரணை செய்யுங்கள். எனது மகனை மீட்டுத்தாருங்கள் என மன்றாட்டமாகக் கோரினார்.
திருமதி. வனிதாஸ் ரதிதேவி என்பவர் சாட்சியமளிக்கையில் 2007ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு வீட்டிலிருந்த என் கணவன் வனிதாஸ் அவர்களை ஈ.பி.டி.பியுடன் வந்த படையினர் விசாரணைக்கென பிடித்துச் சென்றார்கள். இந்தக் கடத்தல் குழுவில் இருந்த மகேஸ் தீபன் இருவரையும் எங்கள் பகுதிகளில் இடம்பெற்ற சுற்றி வளைப்புக்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம் எனச் சொல்லி இருந்தார்.
கணவனையும் தனது மூன்று மகன்களுள் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு பரிதவிக்கும் லலிதா எனும் பெண்ணின் வாழ்க்கை சோகமயமானது. திருகோணமலை மாவட்டம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரத்தில் சாதாரண வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார் லலிதா என்பவர்.
கணவனும் மகன்மார்களும் இல்லாத ஏக்கத்தில் தன்னுடைய வயிற்றுப்பிழைப்புக்காக இடியப்பம், இட்லி அவித்து விற்பதும், கூலி வேலை செய்வதையும் அன்றாடத் தொழிலாகக் கொண்டு தனது 51ஆவது வயதிலும், பிறருடைய உதவியை எதிர்பாராமல் நாட்களை கழிக்கின்றார். 2008.02.04ஆம் திகதி பிற்பகல் 4.30 மணியளவில் லலிதாவின் வீட்டு வாசலுக்கு முன்னால் நிறுத்தப்பட்ட வெள்ளை வானிலிருந்து இறங்கிவந்த 17 பேர், விசாரணை ஒன்று இருப்பதாகக் கூறி, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லலிதாவின் இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணை முடிந்து விட்டு விடுவார்கள் என்று காத்திருந்த லலிதாவுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. அழைத்துசெல்லப்பட்ட மகன்கள் இதுவரை திரும்பி வரவே இல்லை. மூன்று மகன்களுள் மூத்தவர் மட்டும் உயிருடன் இருக்கிறார்.
வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஏனைய இரு மகன்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. கடத்தப்பட்ட, இரண்டாம் மகன் ராம கிருஷ்ணன் பிரதாபன், கடத்தப்பட்ட போது வயது 24. இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றார்கள். இவருடைய மனைவி தற்பொழுது அவருடைய அம்மாவின் வீட்டில் மட்டக்களப்பில் இருக்கிறார். மூன்றாவது மகன் ராமகிருஷ்ணன் ஜெயரூபன், கடத்தப்பட்ட போது வயது 21. இவ்விருவரையும் மீட்டுக் கொள்வதற்காக லலிதா, மனித உரிமைகள் ஆணைக்குழு, பூஸா முகாம், வெலிக்கடை சிறைச்சாலை, ஜனாதிபதி ஆணைக்குழு, பொலிஸ் நிலையம் என ஏறி இறங்கி அழுத கண்களுடனும் கண்ணிருடனும் பரிதவிக்கின்றார்.
தனது கணவன் 1986ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு வந்து கொண்டிருந்த வேளையில், கன்னியா என்ற இடத்தில் வைத்து கடத்தப்பட்டார். அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்கிறார் லலிதா. இவ்வாறு ஏக்கத்துடனும் மகன்கள் திரும்பி வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தனது எஞ்சியுள்ள வாழ்நாளை லலிதா கழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு
வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி.
இவர் போராட்டக் களத்தில் காணாமல் போன மகன்களின் புகைப்படத்தை தன் கையில் வைத்திருந்தவாறு ஏக்கத்துடன் எப்போதும் அமர்ந்திருப்பார். சுருங்கிய நெற்றி அதில் ஒரு திருநீற்று பூச்சும் இருக்கும். முதுமையில் உடல் பலமிழந்தாலும், காணாமல்போன தன் மகன்களை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும். யாரிடமாவது முறையிட்டால் தன் மகன்கள் வந்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இரவு பகலாக மன வைராக்கியத்தோடு அந்த போராட்ட களத்தில் காத்திருக்கின்றார்.
இந்த தாய் தன் பிள்ளைக்காகவும், காணாமல் போன மகனின் பிள்ளையின் எதிர்கால வாழ்வுக்காகவும் நேரகாலம் பார்க்காமல் தன் பேரபிள்ளையினை தனியாக வீட்டில் விட்டு, காணாமல் போன மகன்களை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நடாத்தப்படும் எல்லா போராட்டங்களுக்கும் இன்று வரை சென்று கொண்டு இருக்கிறார்.
போராட்டக் களங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வரும் அதிகாரம் மிக்கவர்களிடமும், இவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வருபர்களிடமும் தன் பிள்ளையை மீட்டு தரச்சொல்லி கெஞ்சுவார். அன்றில் இருந்து இன்றுவரை தன் தூக்கத்தை தொலைத்து தன் மகன்களுக்காக கலங்கிய விழிகளுடன் காத்திருக்கின்றார். இந்த தாயின் நிலையை யாருமே புரிந்து கொள்ளப்போவதில்லை.
“என்ர இரு பிள்ளைகளில் ஒருவர் மூத்த மகன் ஜீவரட்ணம் 1990.09.02 ஆம் திகதி காட்டிற்கு தடிவெட்ட போன நிலையில் ஓமந்தையில் காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அந்த கவலை ஆற முன்பே என்ர இளைய மகன் கோபிநாத் வேலைக்காக வெளியில் போனவன் இரவு வேளை வீரபுரத்திலுள்ள அவனது வீட்டுக்கு சாப்பிட திரும்பிய வேளை 2008.06.25 அன்று வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி வலுக் கட்டாயமாக தூக்கி சென்றுள்ளார்கள். இதனை அறிந்த நான் என் மகன் கடத்தி செல்லப்பட்ட அடுத்த நாள் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு (2008.06.26) UNHER ICRC CARE நிறுவனம், ஈ.பி.டி.பி அலுவலகத்திடம் முறைப்பாடு செய்து விட்டு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அலுவலகத்தில் போய் மகனைக் காணவில்லை என்றும் கூறினேன்.
என் மகனை தேடி ஓவ்வொரு வருடமும், ஒவ்வொரு மாதமும் புலனாய்வுத் துறை மற்றும் காவல்துறையிடம் போய்க் கேட்பேன். என் மகனை விடச் சொல்லி. அவர்கள் வீட்டுக்கும் வருவார்கள் காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் என் மகன்களை கண்டுபிடித்து தருவதாக கூறி விளக்கமெடுக்க வருவார்கள். ஆனாலும் இதுவரை எனக்கான நீதி கிடைக்கவே இல்லை.
என் மகன் இல்லாமல் என்னாலும் என் பேரப்பிள்ளையாலும் தனித்திருக்க முடியாது. எமக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்ர மகனின் பிள்ளைக்கு தற்போது தாயும் இல்லை. வசதிகள் இல்லாமல் என்ர பேரபிள்ளையால் பாடசாலை கல்வியை கூட தொடரமுடியவில்லை. என் பேரபிள்ளையை படிக்க வைக்கும் அளவிற்கு பொருளாதாரம் என்னிடம் இல்லை. ஏனெனில் என் கணவரும் தற்போது உயிருடன் இல்லை. 2017.06.26ஆம் திகதி காணாமல் போன பிள்ளைகளை தேடியதனால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு நோய்வாய்பட்டு உடல் பலவீனமடைந்து இறந்துவிட்டார்.
என் இரண்டு மகன்களையும் இந்த அரசு கடத்தி விட்டது. இரண்டு பிள்ளைகளில் ஒருவரையாவது விடச்சொல்லி இந்த அரசிடம் கேட்டிருக்கின்றேன். ஒரு முறையாவது என் பிள்ளைகளை காண்பிக்குமாறும் கேட்டிருக்கின்றேன். என் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். இனியாவது சிறையில் இருக்கும் என் பிள்ளைகளையும், ஏனையவர்களின் பிள்ளைகளையும் நான் இறந்து போவதற்குள் விடுவிக்கவேண்டும்.
எம் காணாமல் போன உறவுகளை மீட்பதற்கு கடவுளுடனும், இந்த அரசுடனும் நாம் போராடி கொண்டிருக்கின்றோம். எம் நிலையறிந்து வெளிநாட்டு அரசுகளே எமக்கு நீதியினை பெற்று தரவேண்டும். அவர்கள் எம் பிள்ளைகளை மீட்டு தருவார்கள் என்ற நம்பிக்கையிலையே இன்றுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.”
என தன் இரு மகன்களை தொலைத்த அந்த தாயிடம் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் வலி நிறைந்ததாகவும், ஏக்கத்துடன் கலந்த ஒரு எதிர்பார்ப்பும் நிரம்பியிருந்தது.
இன்றைய ஆட்சியாளர்களே உங்கள் வீட்டில் இப்படி ஒரு இழப்பு வரும் வரை இதன் வலி உங்களுக்கு புரியப்போவதில்லை. நீங்கள் இனவாதம் பேசுவதற்கும், பணத்தாசை பிடித்து அலையவும் எம் உறவுகளின் உணர்வுகளை இரையாக்காதீர்கள். காணாமல் போன எம் உறவுகளுக்கு நீதியை பெற்று கொடுங்கள். இன்று தம் பிள்ளைகளை தொலைத்துவிட்டு துடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் கண்ணீரும், ஒருநாள் உங்களுக்கு கூரிய ஆயுதமாய் மாறும்.
தந்தை மரணம் : கந்தையா அரியரத்தினம்
மரணம் : 2017.06.26
மூத்தமகன் : அரியரத்தினம் ஜீவரத்தினம்
காணாமல் போன திகதி : 1990.09.02
இளையமகன் : அரியரத்தினம் கோபிநாத்
காணாமல் போன திகதி : 2008.06.25
மனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தின் திட்ட முகாமையாளராக பணியாற்றிய எனது மகன் சின்னவன் ஸ்ரீபன் சுந்தரராஜ் கடத்தப்படவில்லைஇ அவர் கைது செய்யப்பட்டு அரச கட்டுப்பாட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்இ என்று 2009 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய உறுப்பினர்கள் மற்றும் ஜரோப்பிய ஒன்றிய அலுவலர்களிடம் உறுதிப்படுத்தி தெரிவித்திருந்த நிலையில் இன்று வரை மகனை காணவில்லை என தாய் சின்னவன் திரோசா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறலில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களில் ஒருவரான திரோசாஇ பத்திரிகையில் வெளிவந்த தனது மகனின் நேர்காணல் படத்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்.
2009-05-07 அன்று மகன் இராணுவ உடை தரித்து வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். அன்றைய தினம் நீதிவான் நீதிமன்ற வழக்கு இலக்கம் எம்சிபி 330ஃ9 கட்டளைப்படி விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அன்றைய தினமே மாலை நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட குழுவினரால் பலவந்தமாக காரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்டார். இதுவரை எவ்வித தகவலும் இல்லை. நாங்களும் செல்லாத இடமும் இல்லை முறையிடாத அமைப்புக்களும் இல்லை என சின்னவன் ஸ்ரீபன் சுந்தரராஜின் தாய் தெரிவித்தார்.
அரசாங்க வெளிவிவகார அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக சர்வதேச பிரதிநிதிகளிடம் எனது மகன் கடத்தப்படவில்லை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்இ அரச கட்டுப்பாட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அறிவித்த நிலையில் ஏன் இதுவரை அவரை வெளிக்கொணரவில்லை. தனது கணவனை காணாது மருமகளும்இ அப்பாவை காணாது பிள்ளைகளும் நாளும் ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசாவது பதில் சொல்லக்கூடாதா? எனவும் கேள்வி எழுப்பிய திரேசாஇ காணாமல் போனவர்கள் தொடர்பில் எங்களுக்கு ஏதாவது உறுதியான தீர்வு கிடைக்க வேண்டும். அதுவரைக்கும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்தார்
திருமதி. குருநாதன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், குருநாதன் கேசவன் எனும் பெயருடைய தனது மகன் நெல்லியடியில் உள்ள கடை ஒன்றிற்கு சென்று வீடு திரும்பும் வழியில், 2008-12-20 அன்று இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டார் எனவும் பணம் தந்தால் கடத்தப்பட்ட மகனை மீட்டுத் தருவதாக சொன்ன ஈ.பி.டி.பியின் நெல்லியடி பொறுப்பாளராக இருந்த சுதன் மற்றும் அவரோடு இருந்த வாணி அவர்கள் சொல்வதனை நம்பி ஒரு இலட்சத்து அறுபத்தி ஐயாயியம் ரூபா பணத்தை கொடுத்து ஏமாந்ததாகவும் சொல்லி இருந்தார்.
எனது மகனான சதாசிவம் லோகேஸ்வரன் (காணாமல் போகும் போது வயது 36) தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஆவார். தீவகத்தில் கூட்டமைப்புக்கு அலுவலகம் ஒன்றினை திறக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அதனால் ஈ.பி.டி.பி.யை சேர்ந்த ராம் தோழர் என்பவர் மகனை கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என மிரட்டி இருந்தார். அந்த மிரட்டலையும் மீறி மகன் கூட்டமைப்புக்கு ஆதரவாக தொடர்ந்து செயற்பட்டு வந்தார். ஒரு நாள் வீட்டுக்கு வந்த ராம் தோழர் எனப்படுபவர் மகனை கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட வேண்டாம் என கூறுங்கள் என என்னை மிரட்டி சென்று இருந்தார். அதனை எனது மகனுக்கு கூறினேன்.
மகன் அதனையும் பொருட்படுத்தாது தீவகத்தில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று திறக்க வேண்டும் என தீவிரமாக செயற்பட்டு வந்தார். அந்நிலையில் 2012-11-21ஆம் திகதி நள்ளிரவு வீட்டுக்கு வந்த ஒருவர் மகனுடன் கதைக்க வேண்டும் எனக் கூறி மகனை அழைத்தார். அவ்வேளை நானும் கூட செல்ல முற்பட்ட வேளை மகனுடன் வீட்டு கேற்றடியில் வைத்து கதைத்து விட்டு அனுப்புகின்றோம் நீங்கள் உள்ளே போங்கள் எனக் கூறினார். மகனும் தான் கதைத்து விட்டு வருகின்றேன் என்னை உள்ளே போக கூறினார். அதனை நம்பி நான் வீட்டுக்கு உள்ளே போய் விட்டேன் நீண்ட நேரமாகியும் மகனை காணாததால் வீட்டு வெளியில் வந்து பார்த்த போது மகனை காணவில்லை. மகன் காணாமல் போனது தொடர்பில் எம்மை வீட்டுக்கு வந்த ராம் தோழர் என்பவரை கேட்ட போது தனக்கு எதுவுமே தெரியாது எனக் கூறி விட்டார்.
எனது பெயர் கிருஷ்ணபிள்ளை கணேசமூர்த்தி. என் மனைவி கணேசமூர்த்தி யோகராணி. நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியிலே வசித்து வருகின்றோம். எங்களுக்கு இரண்டு பிள்ளைகள்தான். அதிலேயும் பல ஆசைகளுடன் பெற்றெடுத்த கடைசி மகன்தான் கணேசமூர்த்தி கிஷாந்தன். இவர்தான் 2009.04.21 அன்று போர் தீவிரம் அடைந்த வேளையில் எல்லோரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி வரும் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் வந்தபின்னர் எங்கு தேடியும் எங்கள் மகனைக் காணவில்லை.
பின்னர் இராணுவத்தினர் பேருந்தில் எம்மை ஏற்றி வவுனியா செட்டிகுளம், வலயம் – 4 (zoon – 4) முகாமில் கொண்டுவந்து விட்டார்கள். ஒருவருடம் முகாமில் இருந்துவிட்டு 2010ஆம் ஆண்டு வவுனியா நெளுக்குளம் உறவினர் வீட்டில் இருந்தனாங்கள். அப்போது பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா காரியாலயத்திலும், ரெட் குறோஸ் நிறுவனம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP), ஜனாதிபதி ஆணைக்குழு என எல்லா இடத்திற்கும் நேரடியாகப் போயும் கடிதம் எழுதியும், எங்கள் மகனைக் காணவில்லை என முறைப்பாடு செய்தனாங்கள். ஆனாலும் இதுவரை ஒரு தீர்வுமே கிடைக்கவில்லை.
2011ஆம் ஆண்டு எமது சொந்த இடமான புதுக்குடியிருப்பு, கோம்பாவிலுக்கு மீள்குடியேற்றத்தின் போது வந்தோம். என் மகன் காணாமல் போய் 12 வருடங்கள் ஆகிட்டுது. என்ரை பிள்ளை காணாமல் போகேக்க 27 வயது இப்போ எங்க எப்படி இருக்கிறான் எண்டு கூடத் தெரியல. எங்கள் இரண்டு பேருக்கும் வயது இப்போ 67. எங்கட இந்த வயது முதிர்ந்த காலத்திலாவது எங்கடை பிள்ளையோட இருக்கணும் எண்டு ஆசை. ஆனால் என்ரை பிள்ளை இப்போ எங்க கஸ்ரபட்டுக்கொண்டு இருக்கிறானோ தெரியல. எப்பிடியாவது எங்கட பிள்ளைய மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையிலதான் இரண்டு பேரும் இப்பவரை காத்துக்கொண்டிருக்கிறம்’
வயது முதிர்ந்து தள்ளாடினாலும், முதுமையிலும் தம் பிள்ளையை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் சற்றும் அவர்களுக்கு குறையவில்லை. தாம் ஆசையாகப் பெற்ற ஒரே மகனைத் தொலைத்துவிட்டு நாள்தோறும் தம் மகன் வந்துவிட மாட்டானா? என்ற நப்பாசையுடன் தனியாகக் காத்திருக்கும் அந்தப் பெற்றோரின் வலி, அவர்கள் படுகின்ற துன்பங்களைக் கூற வார்த்தைகளால் முடியாது. இவர்கள் போன்று நூற்றுக்கணக்காண பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகக் காத்திருக்கின்றார்கள்.
இனவாத இன அழிப்பு யுத்தம் 2009 மே மாதம் குறிப்பாக 16,17,18ஆம் திகதி விடுதலைப் புலிகளிள் சரணடைந்த நூற்றுக்கணக்கான தளபதிகள், பொறுப்பாளர்கள், இந்தியா மற்றும் சரவதேச நாடுகளிடம் சரண்டைவதை உறுதிப்படுத்தி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினால் சரண்டைந்தவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமையினை சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவர்களில் பெரும்பாலோனோர் புலிகளின் ஆதரவாளரும் வன்னிப்பகுதியில் நன்கு தெரிந்தவருமான கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் என்பவர் தலைமையில் சரணடைந்தனர்.
விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது பலர் சாட்சியமளித்தார்கள்.-
2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளை இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் கேட்டிருந்தது. உயிர் தப்பிய விடுதலைப்புலி உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதுடன் அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது.
அரசாங்கம் அறிவித்த உத்தரவாதத்தையும் உறுதிமொழி யையும் நம்பி விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தாங்களாகவே இராணுவத்திடம் சரணடைந்தனர். பல குடும்பங்கள் விடுதலைப்புலி போராளிகளாகிய தங்களுடைய பிள்ளைகளையும் கணவன்மாரையும் சகோதர சகோதரிகளையும் அரசாங்கத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் இராணுவத்திடம் கையளித்தனர். இவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
ஆயுத மோதல்களுடன் சம்பந்தப்பட்டிராத அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் போராளிகளான விடுதலைப்புலி உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைந்ததை அவர்களுடைய உறவினர்களும் ஏனைய மக்களும் நேரடியாகக் கண்டிருந்தார்கள். சரணடைந்தவர்களை இராணுவத்தினர் பேரூந்துகளில்ஏற்றி ‘எங்கோ கொண்டு சென்றதையும்’ அவர்கள் கண்ணாரக் கண்டுள்ளார்கள்.
சரணடைந்தவர்களை விசாரித்துவிட்டு உடனடியாக விடுதலை செய்யுமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது. சரணடைந்தவர்களை விட்டுப் பிரிய மறுத்தபோது அவர்களின் குடும்பதினர் சிலரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
பேரூந்துகளில் ஏற்றிச் சென்ற உறவுகளை எங்கு கொண்டு செல்கின்றார்கள் என்பதை இராணுவத்தினர் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிய பின்னரும்கூட சரணடைந்தவர்கள் அனைவரும் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், எங்கே வைக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்கள் என்ன நிலையில் இருக்கின்றார்கள், ஏன் அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன? என்பதை இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய எந்த ஒரு தகவலும் இராணுவத்திடமிருந்து வெளிப்படவில்லை.
தன்னிச்சையான முறையில் அரசாங்கத்திடமிருந்தும் எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் காட்ட வேண்டும். அவர்களைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டும். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் விடுத்திருந்த கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவே இல்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை 2009-05-18ஆம் திகதி இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். கணவருடன் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளான பாப்பா, இளம்பருதி, எழிலன், பாபு, ரூபன் வேலவன், தங்கன், லோரன்ஸ் உட்பட 50 தொடக்கம் 60 பேர் வரையில் இராணுவத்தினர் மூன்று பஸ்களின் ஏற்றிச் சென்றனர். அவ்விடத்தில் நின்ற எங்களைச் செல்லுமாறு இரானுவத்தினர் அனுப்பினர். அதன் பின்னர் நாங்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டோம். என மனைவி வரதராஜான் சாந்தினி சாட்சியம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் நிதித்துறையில் இருந்த செம்மலை எனப்படும் மகேந்திரன் முருகதாஸ் ஆகிய எனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வட்டுவால்பகுதியால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வேளை எனது கணவருக்கு ஒரு கை இல்லை. அதனை அவதானித்த இராணுவம் கணவரை விசாரணை செய்த பின்னர் விடுதலை செய்கின்றோம் எனக் கூறி கொண்டு சென்றனர். நான் நின்ற இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் அழைத்து சென்று அங்கிருந்த பேரூந்தில் ஏற்றி நான் நின்ற வீதியால் என்னை கடந்து கொண்டு சென்றனர். அவ்வேளை எனது கணவர் அந்த பேரூந்தில் பின் சீட்டில் இருந்து ஜன்னலால் எட்டிப்பார்த்து ஓமந்தைக்கு வா எனக் கூறிவிட்டு கை அசைத்து விட்டு சென்றவர். அதன் பின்னர் எந்தத் தகவலும் இல்லை என அவரது மனைவி சாட்சியம் அளித்தார்.
எனது மகளான திருச்செல்வம் சர்மிளா மருமகனான திருச்செல்வம் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான லக்சாயினி காநிலா ஆகியோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாக அமரசிங்கம் என்பவர் சாட்சியம் அளித்துள்ளார். தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில், எனது மகள் எழில்விழி எனும் பெயருடனும் மகளின் கணவனும் காலித்மாஸ்ரர் எனும் பெயரிலும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையில் இருந்தவர்கள். 2009-05-18ஆம் திகதி அவர்கள் தமது இரு பிள்ளைகளுடனும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளனர். அதன் பின்னர் மகள் குடும்பம் பற்றிய எந்தவிதமான தகவல்களும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் நவம் அறிவு கூடத்தில் இருந்த கேமில்டன் அல்லது பவன் என்று அழைக்கப்படும் அழகையா தேவராஜ் எனும் தனது கணவர் வெலிக்கடை சிறைச்சாலை பொங்கல் விழாவில் நின்றதாக மனைவி சாட்சியம் அளித்துள்ளார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன எனது கணவரை தொலைக்காட்சி செய்தியில் கண்டேன். கடந்த 2015ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக விழாவில் நின்றவர்களின் கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் சில படங்கள் தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பாகியது. அதில் எனது கணவரும் நின்றார் என மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் உள்ளக பாதுகாப்பு பிரிவில் இருந்த வண்ணக்கிளி எனப்படும் மூத்ததம்பி விஜயகுமார் ஆகிய எனது கணவருடன் இராணுவ கட்டுப்பட்டு பகுதிக்குள் வரும் வேளை 19-05-2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் விடுதலைப்புலிகளின் காவல் துறையில் இருந்த சபேசன் என்பவரே எனது கணவரை இராணுவத்தினருக்கு காட்டிக்கொடுத்தார். அன்றைய தினம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எனது கணவர் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
2009-05-18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரமறுத்த போதிலும் தாயார் அவரை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கிறார். அவ்வாறு அழைத்துவந்த மகனை விசாரணையின் பின்னர் விடுவிப்பதாகக் கூறி தன் கண்முன்னே அழைத்துச் சென்ற இராணுவத்தினர் 13வருடங்களாகியும் விடுதலை செய்யவில்லை.
மகனைத் தேடி நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று களைத்து விட்டார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியரும் கூற, படுக்கையில் இருக்கும் தன்னுடைய தாய்க்கு பணிவிடை செய்வதே முழுநேர வேலையாக மாறிவிட்டது அவருக்கு. இருந்தாலும் எங்கு போராட்டம் நடந்தாலும் அந்த இடத்திற்கு வந்துவிடத் தவறுயதில்லை. உக்கிரமாக போர் இடம்பெற்றபோது மகனை கண்ட இடத்திலிருந்து இராணுவத்திடம் கையளித்த இடம்வரை பயணம் செய்து அன்று நடந்த சம்பவத்தை மீள் நினைவூடியிருந்தார்.
இவ்வாறு நடந்து முடிந்த இந்த விசாரணைகளில் பல்லாயிரக்கணக்காணவர்கள் இராணுத்தின் கரங்களில் ஒப்படைத் பின் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்றும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விசாரணை என்று அழைத்துச் சென்றவர்கள் யார் என்றும் இன்னும் சிலர் இராணுவத்தின் துணைப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி உட்பட இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கூலிப்படைகளாக செயற்பட்ட தமிழ் இனத்துரோகிகள் தமது உறவினர்களை கடத்தினார்கள் எனத் தெளிவாக ஆணைக்குழுவுக்கு முன்னால் பாதிக்கபட்டவர்கள் தமது சாட்சியங்களைப் பதிவு செய்த போதிலும், உறவினர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனைகள் வழங்கப்படும் என்பதில் அவர்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை. எப்போதும் ஆட்சிபீடத்திற்கு வரும் அரசு இவர்களை பாதுகாப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார்கள் .
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள், இராணுவ புலனாய்வர்களின் கட்டுப்பாட்டிலேயே நடாத்தப்பட்டது. ஆணைக்குழுக்களின் விசாரணை இடம்பெறும் மண்டபங்களுக்கு வெளியே விசாரணைக்கு செல்பவர்களை அவதானித்த அவர்கள் மண்டபத்தின் உள்ளே செல்வதற்கு முன்னர் புகைப்படங்கள் புலனாய்வு அதிகாரிகளினால் எடுக்கபட்டார்கள். ஆணைக்குழுவிடம் சாட்சியங்கள் வழங்கும்போது புகைப்படம் எடுப்பதற்கும், ஒளிப்பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் சாட்சியம் வழங்கியவர்கள் பலர் இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளனார்கள். இதுசாட்சியம் வழங்கியவர்கள் மீது தொடர்ச்சியான இராணுவ கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியாகும்.
அப்பா எப்ப வருவார்?, அவர் வருவரா? ஏன் என்ர அப்பாவை இன்னும் விடவில்லை? அப்பா இருக்கிறார்தானே? அப்பா இருக்கிறதாலதானே அம்மா இப்பவும் பொட்டு வைக்கிறா? எனக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றால் கனியிசை. 2006ஆம் ஆண்டு பிறந்த கனியிசை தற்போது 11 தரத்தில் கல்வி கற்கின்றாள். இவளது தந்தையும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் பட்டியலில்.
2009.05.16 அன்று உறவினர்களுடன் முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இலட்சக்கணக்கான பொதுமக்களுடன் வரிசையில் வந்து பேரூந்தில் ஏற முற்பட்ட போது இசையாளன் (கனியிசையின் 4 அப்பாவின் இயக்கப் பெயர்) என பெயர் குறிப்பிட்டு அழைத்துச் செல்லப்பட்டவர்தான் கந்தசாமி திவிச்சந்திரன் (1976). இதுவரை எந்தத் தொடர்பும் இல்லை. இவருடன் சேர்த்து அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கும் இதே நிலைமைதான். 2009 இறுதி நாட்களில் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என அனைவரும் தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.
2009 ஏப்ரல் வருடப் பிறப்பு அன்றுதான் தனது தந்தையை இறுதியாக பார்க்கின்றாள் கனியிசை, அப்போது அவளுக்கு இரண்டரை வயது. தந்தை மாத்தளனின் அவளது தறப்பால் கொட்டிலுக்குள் வரும் போது கனியிசை அம்மன் நோயாள் பாதிக்கப்பட்டிருந்தாள். கடும் வெப்பான நிலைமைக்குள் அம்மன் நோயால் பீடிக்கப்பட்டிருந்த தனது மகள் தறப்பால் கொட்டிலுக்குள் இருப்பதனைக் கண்ட அவரது மனம் பட்டபாட்டை அவரது முகம் காட்டிக்கொடுத்தது என்றார் கனியிசையின் தாய் கவிதா. அன்றுதான் இறுதியாக தந்தையும் மகளும் சில மணித்தியாலங்கள் சந்தித்து உரையாடியது. அப்பா வழமையாக வீட்டுக்கு வரும் போது இருக்கின்ற மாதிரி அன்று இல்லை அவரது முகம் வாடியிருந்தது. மிகவும் கவலையாக இருந்தார். தந்தையின் இந்த நினைவுகள் மாத்திரமே கனியிசையிடம் இறுதியாக எஞ்சியிருக்கிறது. தந்தையின் புகைப்படம் ஒன்றை மிக கவனமாக வைத்திருக்கும் கனியிசை அதனை அவ்வப்போது பார்த்து தடவி முத்தம் கொடுத்து தந்தையின் நினைவுகளை மீட்டிக்கொள்கின்றாள். மீள் குடியேற்றத்தின் ஆரம்ப நாட்களில் தாயிடம் தந்தையின் தொலைபேசி இலக்கத்தை தருமாறும் அவருடன் பேச வேண்டும் என்றும் அடம்பிடித்திருக்கின்றாள்.
2006-04-25 அன்று காணாமல் ஆக்கப்பட்ட தனது தந்தை பற்றி பஶ்ரீபவன் தனீஸ் குறுகையில் அப்பா இலங்கை அரச படைகளால் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டு இன்றுடன் ’16’ ஆண்டுகள்.
2006ஆம் ஆண்டு சித்திரை மாதம் இருபத்தி நான்காம் திகதி வழமை போல் விடிந்த காலை எங்கள் குடும்பத்தை நிலை குலைய வைக்கும் என்று காலை 11.30 மணி வரை நினைக்கவில்லை. காலையில் வழமை போல் சாவகச்சேரியில் உள்ள தனது அலுவலகத்திற்கு அச்சுவேலியில் உள்ள எமது வீட்டிலிருந்து சென்ற அப்பா ஏன் அலுவலகத்திற்கு 11.30 மணியாகியும் வரவில்லை என்று கேட்டு அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் விசாரிக்கும் போது கூட நான் எண்ணவில்லை அப்பா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு இருப்பார் என்று அழத்தொடங்கிய அம்மாவை மோட்டார் சைக்கிள் ஏதாவது பிழைத்து இருக்கும் காராஜ்ல ஏதாவது நிற்பார் பேசாமல் இருங்கோ என்று சொல்லி விட்டு ஓரு மணித்தியாலம் கடந்த பின்பு அலுவலகத்திற்கு அழைப்பு எடுத்து அப்பா வந்துவிட்டாரா? என்று கேட்கும் போது அவர்கள் இன்னும் வரவில்லை என்று சொன்ன போது எதுவும் விபரிதம் நடந்து இருக்கக் கூடாது என்று ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் மனது பிரார்த்தித்தது.
அப்பாவின் தம்பியின் வாகனத்தில் அப்பாவைத் தேடி அப்பா வழமையாக செல்லும் பாதையான புத்தூர் வாதரவத்தை வண்ணாத்திப் பாலம் ஊடாக சென்ற போது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு அப்பா வழமையாக அவ்வழியில் சென்று வருபவராகையால் அடையாளங்களை சொல்லிக் கேட்ட போது தெரிந்து இருந்த படியால் புத்தூர் தாண்டி அப்பா சென்றது தெரியவந்தது. பின்னர் வண்ணாத்திப் பாலத்தில் உள்ள இராணுவ முகாமில் விசாரிக்கும் போது அங்கிருந்த இராணுவத்தினர் அப்பா வண்ணாத்திப் பாலம் தாண்டி மோட்டார் சைக்கிள்களில் சென்றதை உறுதிப்படுத்தினர்.
பின்னர் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோயில் தாண்டி சிறிது தூரம் சென்று விசாரித்த போது காலையில் ஃபில்ட் பைக் குறூப் வந்து அந்த பகுதியில் நின்றதாகவும், ஆகையால் பயத்தினால் யாரும் வெளியே செல்லவில்லை என்றும் சொன்னார்கள். பின்னர் ஒரு வயதானவர் அப்பாவை அந்த இராணுவத்தினர் மறித்து விசாரித்து கொண்டு இருந்ததை கண்டதாகச் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு கனகம்புளியடி இராணுவ முகாமில் சென்று அழுது குழறி விசாரித்த போது அவர்கள் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை நாவற்குழி இராணுவ முகாமில் சென்று விசாரியுங்கள் என்று சொன்னார்கள்.
நாவற்குழி இராணுவ முகாமில் சென்று விசாரித்த போதும் அவர்கள் அதே பதிலையே கூறினார்கள். பின்னர் ரோந்து முடித்து அவ் முகாமிற்கு திரும்பி வந்த இராணுவ அணி ஒன்றை இச்சம்பவம் குறித்து கேட்ட போது அவர்கள் காலையில் அப்பாவின் பெயரில் உள்ள ஒருவரை இராணுவம் தேடியதாகவும் அப்பா பெயரும் தேடப்பட்டவரின் பெயரும் ஒன்றாக இருந்தபடியால் ஆள் மாறி கைது செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவித்தனர்.
அன்றிலிருந்து இன்றுவரை போகாத இராணுவ முகாமும் இல்லை, போகாத ஆணைக்குழுக்களும் இல்லை. ஏன் போகாத கோயில்களும் இல்லை. 2006 இதே சித்திரை 24ஆம் திகதி காலையில் பார்த்த அப்பாவை இன்று வரை பார்க்கவும் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் படுக்கைக்குச் செல்லும் போது அடுத்த நாள் விடியும் போது அப்பா வந்து நிற்கனும் என்றுதான் மனது பிரார்த்திக்கும். ஆனால் காலைதான் விடிகிறதே தவிர அப்பா இன்னும் வரவில்லை. இங்கே நான் கூற விரும்புவது என்னவென்றால் ஒரு இளைஞனாக எனக்கும், யுவதிகளான எனது சகோதரிகளுக்கும் இன்றுவரை உள்ள ஒரே நம்பிக்கை அப்பா என்றோ ஒரு நாள் வந்து சேருவார் என்பதே, அந்த அப்பா வருவார் என்ற நம்பிக்கை எங்களை வாழ வைத்துக் கொண்டுள்ளது, நல்வழிப்படுத்தி உள்ளது.
இதேபோல்தான் இங்கே பல இளம் பிஞ்சுகள் அதில் பல தந்தையின் முகத்தைக் கூட பார்த்து அறியாதவர்கள் அப்பா எங்கே? என்று கேட்கும் பிள்ளைகளிடம் அப்பா நாளை வருவார் என்று அம்மாக்களால் கதை சொல்லப்பட்டு அப்பாவின் அன்பிற்காகவும் அரவணைப்பிற்காவும் அனுதினமும் ஏங்கி தவிக்கும் பிள்ளைகள். அவர்கள் முன்னால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்று கதை கூறாதீர்கள்.
உங்களின் வெறும் வார்த்தைகள் அவர்களுக்கு பெரும் மனச்சோர்வை கொடுக்கும். இன்றுவரை எம்மால் கூட அந்த வார்த்தைகளை இலகுவாக கடக்க முடியவில்லை, தினமும் அடுத்த பிள்ளையின் தந்தையை பார்த்து அப்பா கனவுகளுடன் வாழும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இளம் சிறார்களின் நிலையை பாதிக்கப்பட்டவனாக சொல்கிறேன், அவர்கள் புரிந்து கொள்ளும் பருவத்தில் புரிந்து கொள்ளட்டும். அதுவரை அவர்களை அவர்களின் அப்பா கனவுகளுடனாவது வாழ விடுங்கள் என ஶ்ரீபவன் தனீஸ் குறிப்பிட்டிருந்தார்.
2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இருந்து தற்போதுவரை 215க்கும் மேற்பட்ட தாய்மார் தங்களுடைய பிள்ளைகளை தேடிய நியாயயமான தேடலில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு சாவடைந்டுள்ளார்கள் இவர்களது சாவு சாதாரணமான ஒன்றல்ல வலிகளை சுமந்த சாட்சியங்கள் இந்த இறப்புக்களின் மூலம் அழிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியது அரசாங்கமும் உட்பட ஆயுதம் ஏந்திய எல்லாத் தரப்புக்களும்தான். 30/1 ஜெனீவாத் தீர்மானத்தின்படி அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் பின்வரும் முக்கிய பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
1. காணாமல் போன்றவர்களுக்கான அலுவலகத்தைத் திறப்பது.
2.சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில் நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல்
3. உண்மை வெளிப்படையாக பேசப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்கி அதற்கு வேண்டிய ஆணைக்குழுவை உருவாக்குவது.
4. நீதி விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவது.
5.இழப்பீட்டிற்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பது.
6.பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்பு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதோடு சாட்சிகள், பாதிக்கப்பட்டோர்,புலன்விசாரணையாளர்கள், வழக்கறி;ஞர்கள்;, நீதிபதிகளைப் பாதுகாத்தல்.
7.பாரதூரமான மனித உரிமை மீறல்களை வழக்கு விசாரணை செய்தலும்,தண்டனை வழங்குவதற்கேற்ப உள்நாட்டுச்சட்டங்களை சீர்திருத்துவதும்.
8.பொதுசனப் பாதுகாப்புச் சட்டத்தை மீளாய்விற்குட்படுத்தி பலப்படுத்துவது.
9. மோதல் காலங்களில் அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களுக்கு பொறுப்புக் கூறும் செயல்முறையை செயல்படுத்தல.;
10.பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்படுதலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைகளில் கையொப்பமிடல் மற்றும் உறுதிப்படுத்தல்.
11பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டிருத்தலை சட்டவறையறைக்குட்பட்ட குற்றவியல் குற்றச் செயல்களாக கணித்தல்.
12.காணமல் போனோர் இல்லை என்பதை உறுதி செய்யுமுகமாக அவர்களது குடும்பங்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கல் (Certificates of Absence)
மேற்கண்ட பன்னிரண்டு பொறுப்புக்களும் இலங்கைத் தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமானவை.அதாவது நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கும் அவசியமானவை. ஆனால் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் போன்ற பலநூற்றுக்கணக்கான கொடூரன்களுடன் தொடர்புடைய சாட்சிகள் தெளிவான ஆதாரங்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நியமித்த காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களால் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இன்றுவரை விசாரணைக்கு உட்படவில்லை. இவர்களைப் போல் இன்று எத்தனையோ ,உறவுகள் நாள்தோறும் காணாமல் போன தம் உறவுகளின் வருகைக்காய் கண்ணீருடன் காத்திருக்கின்றார்கள். இவர்களுக்கான தீர்வுகளும் எட்டப்படுவதாய் தெரியவில்லை. யுத்தத்திற்குப் பின்னர் தமிழ் மக்கள் இந்த வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக மாற்ற நினைத்து, போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி சரணடைந்தவர்களையும், கடத்தப்பட்டவர்களையும், கையளிக்கப்பட்டவர்களையும் இன்று காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் நிலைக்கு, கையறு நிலைக்கு தள்ளியிருக்கின்றது இந்த அரசு.
2009ஆம் ஆண்டு .ஆயிரக்கணக்கானோர் வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இராணுவச் சோதனைச் சாவடிகளில் வைத்து குடும்ப உறவுகளால் இராணுவத்தின் கரங்களில் கொடுத்தவர்கள். முட்கம்பி வேலிக்குள் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மெனிக்பாம் முகாமில் வைத்து புனர்வாழ்வு என அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
குறித்த காலத்தில் இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கின்றார். அதேபோல யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி அவர்கள் விமான சேவைகள் நிறுவன தலைவராக இருக்கின்றார். சமகாலத்தில் இலங்கை இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா திரு. ரணில் விக்ரமசிங்கே அவர்களுக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
ஜெனரல். சவேந்திர சில்வா முப்படைகளின் தளபதியாக இருக்கின்றார். அதேபோல் தமிழ் ஒட்டுக்குழுக்களை இயக்கிய இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி தேசிய புலனாய்வு நிறுவன பணிப்பாளராக நீடிக்கின்றார். அதேபோல் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த சேர்ந்த மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண அவர்கள் அரச சலுகைகளுடன் ஓய்வு பெற்று இருக்கின்றார் .
2015ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அப்போதைய பிரதமரும் இப்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.’292 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் வேறு எவரையும் அரசாங்கம் தடுத்து வைக்கவில்லை’ என பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்திற்கு கடந்த 2016-01-27ஆம் திகதி வழங்கிய செவ்வியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த அவர், அவர்கள் தொடர்பில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
காணாமல் போனவர்கள் உயிருடனில்லை என்றால் அவர்களைக் கொன்றது யார்? முன்னைய அரசாங்கமா? என்ற தொனிப்பட அவர் கேட்டிருக்கிறார். அதற்கு ரணில் தலையை ஒருவிதமாக அசைத்து ஒரு சிரிப்பு சிரித்திருக்கிறார். “உங்களுக்குத் தெரியும்தானே எது உண்மையென்று” என்று சொல்வது போல இருந்ததாம் ரணிலுடைய சிரிப்பு. அரசாங்கம் இது தொடர்பான உண்மைகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு தயாரில்லை.காணாமல் போனவர்களை யார் கொன்றது? அல்லது கொல்லுமாறு உத்தரவிட்டது? என்ற உண்மையை வெளிக் கொணர்ந்தால் அது இப்பொழுது தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரை குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் நிறுத்தி விடும். அப்படி ஒரு நிலமை வந்தால் மகிந்த சும்மா இருப்பாரா? அது ரணில் மைத்திரி அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டங்காணச் செய்து விடும். அப்படி ஒரு நிலை வருவதை மேற்கு நாடுகள் விரும்புமா? தமது தத்துப் பிள்ளையான ஓர் அரசாங்கம் பலவீனமடைவதை அவர்கள் விரும்புவார்களா? ஆயின் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லையா? நிலைமாறுகால நீதி எனப்படுவது ஒரு கவர்ச்சியான பொய்யா?
இறப்புப் பதிவாக வழங்கப்படுகின்ற மரணச்சான்றிதழ்.
காணாமற்போனவர்கள் தொடர்பாக எதனையும் மறைப்பதற்கில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம் என்றும் இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்ப்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே இறுதியான பதிலாகும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் 2021-09-22 (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பபியமையும் குறிப்பிடத் தக்கது.
காணாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பதிவுகளை நிரல்படுத்தி இயல்பான முறையில் நிர்வாக ரீதியில் பதிவேற்றம் செய்வதற்காகவே மரணச்சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என கருத இடமுண்டு. ஏனெனில் பிறப்புப் பதிவின் மூலம் ஒருவரின் பிறப்பு பதிவு செய்யப்படுகின்றது. அதேபோன்று அவர் இறக்கும்போது இறப்புப் பதிவாக வழங்கப்படுகின்ற மரணச்சான்றிதழ் அவர் மறைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இந்த இரண்டு ஆவணங்களுமே ஒரு மனிதனுடைய காணிகள், சொத்துக்கள், வங்கிகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளை அவனுக்குப் பின்னரான காலப்பகுதியில் அவனுடைய வாரிசுகள் ஆதாரபூர்வமாகவும் அதிகாரத்துடனும் மேற்கொள்வதற்கு வழி செய்கின்றன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அதிகாரபூர்வ பதிவுகள் எதுவும் இல்லை. வெறுமனே அவரைக் காணவில்லை என்ற தகவல் அல்லது நிலைப்பாடு அவரது வாரிசுகளின் சமூக மட்டத்திலான தேவைகளின்போது ஆதாரத்துக்குரிய ஒன்றாக நிர்வாக நடைமுறைகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதற்கும் அப்பால் ஒருவர் பிறந்து வாழ்ந்ததற்கும் பின்னர் இறப்பின் ஊடாக மறைந்ததற்கும் இடையில் சமூக, அரசியல் நிலைமைகளில் இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஒருவர் தனது வாழ்க்கைப் பயணத்தில் இடையில் காணாமல் போய்விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்று அதிகாரத்தில் உள்ளவர்களோ அல்லது ஆட்சியாளர்களோ வெறுமனே கைவிரிக்க முடியாது. அது இயற்கை நீதிக்கு மாறானது. அரச நீதிக்கு விரோதமானது. பிறப்புரிமை, வாழ்வுரிமை என்ற அடிப்படை உரிமைக்கு எதிரானது. இயற்கை நீதி, அரச நீதி மற்றும் அடிப்படை உரிமை என்பவற்றை அப்பட்டமாக மீறிய பாரதூரமான நடவடிக்கையாகவே கருதப்படும்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள் என்று சாதாரணமாகக் கூறி அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டதாகவோ அல்லது அந்தப் பிரச்சினைக்கு முடிவு கண்டுவிட்டதாகவோ கருத முடியாது. அவ்வாறு கருதிச் செயற்படவும் முடியாது என்பதை மனித உரிமை அமைப்புக்களும் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான அமைப்புக்களும் சுட்டிக்காட்டி அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அரசியல் கட்சிகளும் தங்கள் சார்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையை அரசாங்கம் கையாள்கின்ற முறைமை குறித்து கரிசனையுடன் கூடிய கவலையையும் வெளிப்படுத்தியுள்ளன. துரதிஷ்டம் என்னவென்றால், அரசாங்கத்தின் மீது பயனுள்ள வகையில் அழுத்தத்தைப் பிரயோகிக்க முடியாத சக்திகளாக அரசியல் கட்சிகள் அறிக்கைகளை வெளியிடுவதிலும் கருத்துக்களைக் கூறுவதிலும் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியவையாக இருப்பதுதான்.
30-08-2018 அன்று இலங்கை வடமாகாண சபையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 129ஆவது அமர்வில் உள்நாட்டுப் போரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு கால நீடிப்பு 2021 மார்ச் வரை தொடர அனுமதிப்பது காலத்தைக் கடத்தும் நடவடிக்கை மட்டுமே.
எனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பை உடனடியாக இரத்துச் செய்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி தொடர்பில் சர்வதேச பக்கச் சார்பற்ற குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படல் வேண்டுமென வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் வடக்குக் கிழக்கில் போராட்டங்களை முன்னொடுத்தும் எந்த மாற்றங்களும் நிகழவில்லை.
இதேபோன்ற கருத்தை 2020-01-18ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் எனவும், அவர்கள் இறந்துவிட்டதாகவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, 2020-01-18ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ‘இதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கருடன் நடைபெற்ற சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
போர் முடிவடைந்த 12 வருடங்கள் கடந்துள்ள நிலையில், காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் இல்லாமையினாலேயே, அரசாங்கம் மரண சான்றிதழை வழங்க எண்ணியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார். 2021 ஆம் ஆண்டு பிபிசி தமிழ் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். யுத்தத்தின் போது பலருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்களவர்களும் இவ்வாறு காணாமல் போனவர்களில் அடங்குவதாக அவர் தெரிவித்தார். நீண்ட காலமாக இதற்கு தீர்வு இல்லாமையினால், உறவினர்களின் உரிமைகள் இல்லாது போவதாகவே அரசாங்கம் கருதுகின்றது எனவும் அவர் கூறுகின்றார். இதன்படி, காணாமல் போனோருக்கான சாட்சியங்கள் இல்லாதவர்களுக்கு, மரண சான்றிதழை வழங்குவதே சரியானது என காணாமல் போனோர் அலுவலகமும் பரிந்துரை செய்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலத்தில் காணாமல் போனோரையே தாம் தேடி வருவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவிக்கின்றது. அந்த சங்கத்தின் செயலாளர் லீலா தேவி ஆனந்தன் நடராஜன் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் பக்கத்தில் உயிரிழந்த அனைவருக்கும் மாவீரர்கள் என்ற கௌரவத்தை வழங்கி, உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு அது குறித்து அவர்கள் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
”யுத்தம் நடந்த காலக் கட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் மூலம் இராணுவத்தினரின் உடல்களை கொடுக்கும் போது, அவர்கள் அதனை பாரமெடுக்க மறுத்து, சந்திரன் பூங்காவில் 800 சடலங்கள் காணப்பட்டன. இதை எங்கடை ஆட்கள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) அவர்களுக்குரிய மரியாதையோடு சடலங்களை அழித்து அவர்களை அடக்கம் செய்தவர். அதேபோன்று, வவுனியாவிலும் அப்படியாக சம்பவங்கள் நடந்தது. அது தான் அவர் சொன்ன அந்த காணாமல் போன ஆட்கள். விடுதலைப் புலிகளில் உயிரிழந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டு, அவர்கள் மாவீரர் பட்டியலுக்குள் சேர்க்கப்பட்டார்கள். இராணுவத்தினர் காணாமல் போகயில்ல. அவர்கள் இறந்து விட்டார்கள். யுத்தத்தில இறந்த ஆட்களை நாங்கள் கேட்கயில்ல. யுத்தம் முடிவடைந்த பிற்பாடு, இவர்கள் தந்த வாக்குறுதியை நம்பி கொண்டு போய் கையளித்த ஆட்களை தான் நாங்கள் கேட்கின்றோம்” என அவர் குறிப்பிடுகின்றார்.
இழப்பீடு வழங்கல்
2021 புரட்டாதி மாதம் – நீதியமைச்சர் அலிசப்ரி வீரகேசரிப் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் கணாமல்போன எல்லோரையும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் சகலருக்கும் இழப்பீடு வழங்க அரசாங்கம் தயார் – கூறியிருந்தார். (நேர்கண்டவர் -ரொபட் அன்டனி) மேலும் அவர் கூறுகையில் யார் காணாமல் போனவர்கள் என்று பார்ப்பதைவிட அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று பார்க்கப்பட வேண்டும். சிலர் புலி உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதியை அப்படிப் பார்க்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
யாராவது காணாமல் போயிருந்தால் அவர்கள் பற்றி தகவல்களை பெற்று அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தேடி பார்க்கவேண்டும். மரண சான்றிதழ் வழங்குவதா? காணாமல் போனவருக்கான சான்றிதழ் வழங்குவதா இழப்பீடு வழங்குவதா எவ்வாறு அவர்களது குடும்பத்தினருக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்? என்பது தொடர்பான நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கிறோம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் எங்களது கவலையையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறோம். இது நடந்திருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் தன்னுடைய உறவினர் காணாமல் போனால் அவருக்கு அதனை தாங்கிக் கொள்ள முடியாது. அதனை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. காணாமல்போனோரின் உறவினர்கள் தம்மிடம் இருக்கின்ற தகவல்களை வழங்குங்கள். அதனூடாக ஒரு முடிவைக் காண்பதற்கு முயற்சிக்கலாம். அதன்பின்னர் இந்த அத்தியாயத்தை நாம் முடிவுக்குக் கொண்டு வரலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை எமக்கு தெரியப்படுத்துங்கள். அரசாங்கம் இழப்பீடு வழங்க தயாராக இருக்கின்றது என்றும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இழப்பீடுகள் தொடர்பாக அமைச்சரவைத் தீர்மானம் குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.ஸ்ரீநேசன், கூறுகையில்அந்தத் தீர்மானமானது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உயிர்களை இழிவுபடுத்தும் ஈனச் செயலாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக நீதியமைச்சர் அலிசப்ரி அவர்கள் தனது அமைச்சின் பெறுமானத்தை விடுத்து யுத்தக்குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சட்டவாளர் போல் செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தமிழர்களும், மனித உரிமைகளை மதிப்பவர்களும் சிந்திக்கின்றனர்.
பதவிகளுக்காக சோரம்போன தமிழ் அரசியல்வாதிகள் இதுபற்றி வாயும் திறக்க வில்லை. தமிழர் உரிமைகளை விட பதவி சுகமும், பண வருவாய் தான் இவர்களது இலக்காகும். ஐக்கிய நாடுகள் சபைக்குக் கணக்கு காட்டும் இலங்கை அரசாங்கத்தின் அவமதிப்பான செயலாக இந்த ஒரு இலட்சம் ரூபாய் விடயம் காணப்படுகிறது. அந்த வகையில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள், இறுதி யுத்தத்தின் போது நம்பிக்கை அடிப்படையில் சரணடைந்தவர்கள், உறவினர்களின் சாட்சியமாக ஒப்படைக்கப்பட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக பொறுப்புள்ள அரசாங்கம் மிகவும் வெறுப்பான செய்தியை வெளிப்படுத்தியுள்ளது.
ஓர் உயிருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒரு முறை மாத்திரமான கொடுப்பனவு என்பது இலங்கையில் மதிப்பிட முடியாத மனித உயிரின் பெறுமதி எவ்வளவு தூரம் இழிவான நிலைக்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது. இதனைச் சொல்வதற்கு ஆட்சியாளர்க்கு சிறிதளவும் வெட்கம் இல்லாமல் இருப்பது அவர்களது மனப்பாங்குகளின் விகாரத்தை உரித்துக்காட்டுகின்றது.
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சிங்களச் சகோதரருக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட பல கோடி ரூபாய்களோடு ஒப்பிடும் போது தமிழரின் உயிர்ப் பெறுமானம் எமது நாட்டில் எப்படியுள்ளது என்பதை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல கடத்தியவர்கள், ஒப்படைக்கப்பட்ட தமிழர்கள் சரணடைந்த தமிழர்களை அரசின் சார்பாக ஏற்றுக் கொண்ட பொறுப்புள்ள படையதிகாரிகள், படையினர் போன்றவர்களுக்கு எதிராக எந்த நீதி விசாரணையும் இல்லை அவர்களுக்குத் தண்டனைகளும் இல்லை. அவர்களில் பலர் பதவியுயர்வுகள் பெற்று கெளரவமானவர்களாகவும், தேசத்தின் கதாநாயகர்களாகவும் பவனி வருகின்றார்கள்.
ஒரு உண்மை வெளியாகிறது இப்படியான காணாமல் ஆக்கப்பட்டமை அதாவது கொலை செய்யப்பட்டமை என்பதற்குக் காரணமாக இருந்த முக்கியஸ்தர் ஒருவர் அதிகார சக்தியுள்ளவராக இருந்து குற்றவாளிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்கின்றார் என்பதே அதுவாகும். மிரிசுவில் இராணுவக் கொலையாளி ஐந்து வயதுக் குழந்தை உட்பட எட்டு அப்பாவித் தமிழர்களின் கழுத்துகளை அறுத்து கொலை செய்தமைக்காக நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. அந்தப் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்டடுள்ளார் என்பது நோக்கத்தக்கது. முறையான நீதி விசாரணை நடைபெறுமானால் ஒவ்வொருவரது பாரதூரமான கோரமுகத்தினையும் சர்வதேசம் கண்டு கொள்ள முடியும்.
எய்தவன் அம்புகளை அன்பு கொண்டு பாதுகாத்துப் பராமரித்து வருகின்றான். அம்புகளை குற்றவாளிகளாக்க எய்தவர்கள் எப்படி விரும்புவார்கள்? அப்படி நடவடிக்கை எடுத்தால் அம்புகள் எய்தவனைக் காட்டிகொடுக்கும் நிலைமை ஏற்பட்டுவிடும். இப்படியான நிலைமையில் தான் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்கின்ற இன அழிப்பின் பழிவாங்கல் பரிமாணம் ஒன்று அடிப்படைவாதிகளால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகளாக ஒளித்து மறைத்து பேணப்படுகிறது. ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல தமிழர்கள் இந்தக் குற்றவாளிகளை நன்கறிவார்கள், அவர்கள் தான் இதற்கான முக்கியமான சாட்சியங்கள் ஆவர்.
ஒரு லட்சம் ரூபாவினை வாங்கிக் கொண்டு தமது உறவுகள், உரிமைகளை மறந்து விடுவதற்கு தமிழர்கள் அடிமைகளாகவோ, அடிவருடிகளாகவோ இருக்க மாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேட்பது நீதியும் நியாயமுமே தவிர வெறும் கண்துடைப்பான ஒரு லட்சம் ரூபாய் பணமல்ல. இந்த அரசாங்கமோ எந்த அரசாங்கமே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கோ தமிழர்களுக்கோ நீதி நியாயத்தை வழங்க மாட்டர்கள் என்பதில் தமிழர்கள் உறுதியாக உள்ளனர். அதாவது சிங்களத் தலைவர்கள் ஓரினத்தவரின் தலைவர்களாக தம்மைக்காட்டுவதன் மூலம் அடுத்த தேர்தலில் அடுத்த ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களாக வருவதற்கு விரும்புகின்றார்களே தவிர ஏனைய தமிழ் பேசும் இனத்தவர்களின் தலைவர்களாக இருக்க விரும்பவில்லை.
அதில் இருந்து 74 ஆண்டுகளாக அவர்கள் விரும்பாத சொல்லாத செய்தி என்னவென்றால், தமிழ் பேசும் மக்கள் தம்மைத்தாமே ஆள்வதற்கான சுயநிர்ணய உரிமையினைப்பெற உரித்துடையவர்கள் என்பதாகும். 1948 சுதந்திரத்தின் பின்னர் சமத்துவமாக சமவுரிமை சமவாய்ப்புடன் வாழ நினைத்த தமிழ் பேசும் மக்களை சிங்கள பெளத்த மேலாதிக்கமுடைய சட்டதிட்டங்கள் ஒடுக்கு முறைகளால் சமஷ்டி என்றும், தனிநாடு என்றும், சுயநிர்ணயம் என்றும், சுயாட்சி என்றும் போராட வைத்தமை ஜனநாயகம் அல்லாத இன ஜனநாயக ஒரு பக்கச் சிந்தனையுள்ள சிங்களத் தலைவர்களே ஆவர்.
சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட சேர்.பொன் இராமநாதன், சேர்.பொன் அருணாசலம், ஆறுமுகநாவலர், அறிஞர் சித்திலெப்பை, டாக்டர் டிபி ஜாயா போன்றவர்கள் தேசத்தின் விடுதலையை அந்நியரிடம் இருந்து பெறவே போராடினர். அந்நியன் பூட்டிய கைவிலங்குகளைக் கழற்றி விட்டு சொந்த நாட்டவனின் விலங்குகளைக் கொண்டு பூட்டிக் கொள்வதற்காகப் போராடவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் தமிழ்பேசும் மக்களுக்கான சமஷ்டியாட்சி முறையினை அந்நியரிடம் இருந்து பெற்றிருக்கலாம்.
ஒற்றையாட்சி முறையின் கீழ் ஒற்றுமையாக வாழத் தமிழ் பேசும் தலைவர்கள் நினைத்தார்கள். அந்த ஒற்றுமையை சிங்களத் தலைவர்கள் ஏற்படுத்தவில்லை. அரசியல் இலாபத்திற்காக இனமத அடிப்படைவாதத்தினை விதைத்து நாட்டைக் குட்டிச்சுவராக்கி உள்ளனர். 74சதவீத சிங்களவரின் வாக்குகளைக் குறிவைத்து 26 சதவீதமான தமிழ் பேசும் மக்களை இனமத ரீதியாக வாழவும் விடாமல் சுயநிர்ணய அடிப்படையில் ஆளவும் விடாமல் சிங்கள அதிகாரிகள் ஓடுக்கி வருகிறார்கள். சுதந்திர இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை இரண்டாந்தர, மூன்றாந்தரப் பிரஜைகளாக்கி ஆள முற்பட்டதே சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி அரசியலாகும். அதற்கு எடுபிடியாகக் கூடாது என்பதாகவே தமிழர்களின் அகிம்சை, ஆயுதப் போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தை எந்த வழியிலாவது வெல்வதற்காகப் புறப்பட்ட சிங்கள ஆட்சியாளர்கள் வளங்களை விற்று இறைமையினைப் பலவீனமாக்கி கடன் பொறிக்குள் நாட்டை வீழ்த்தி இப்போது கடன்களுக்காக கெஞ்சி திரிகின்றார்கள்.
யுத்தத்திற்காக ஆயுத வியாபாரத்திற்காக நாட்டின் வளங்களைப் பெறுவதற்காக நவகாலனித்துவக் கால்களை ஊன்றுவதற்காக உதவிய நாடுகள் இலங்கையைத் தமது கிடுக்குப் பிடிக்குள் இறுக்கியுள்ளன. தந்த கடன்களைத் தா அல்லது நாட்டின் வளங்களைத் தா என்ற நிலையில் கடன் வழங்கிய நாடுகள் தமது பிடியை இறுக்கி வருகின்றன. மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றைச் சமாளிக்கின்ற வழிகளில் ஒன்றுதான் இந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாகும். இந்த ஆட்சியாளர்கள் இன மதவாத பிற்போக்கு மாயையால் தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் தான் ஏமாற்றுகின்றார்கள். சிங்கள அதிகாரவர்க்கம் எக்காலத்திலும் திருந்தக்கூடிய நிலையில் இல்லை. இந்த நாட்டில் நிலையான சமாதானத்திற்கும் நிலையான அபிவிருத்திக்கும் ஒரே வழி முறை அதிகாரப்பகிர்வுள்ள சமஷ்டி முறையேயாகும். எனத் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், ஜி.ஸ்ரீநேசன், தெரிவித்தார்.
இந்த நிலையில், காணாமல் போனோர் விவகாரத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பித்து உரை நிகழ்த்திய போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச கூறியிருந்தார். எனினும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதை தவிர, நிதி தேவையில்லை என்ற விடயத்தை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தாம் தெளிவாக கூறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள் குறிப்பிட்டிருந்தனர்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும் முடிந்த முயற்சிகளை எடுத்தேன். ஆனால் அதை தன்னால் செயற்படுத்த முடியவில்லை என்று அப்போது கூறிய ரணில் விக்ரமசிங்க இன்று முடிவெடுக்கும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஆட்சி பீடத்தில் இருக்கிறார். ஆனால், தமிழர்களை அடகு வைக்கும் தமிழ்க் கட்சிகளையும், ராஜபக்சக்களின் கட்சியை நம்பியிருக்கும் அவரால் எந்தப் பதிலை அளிக்க முடியும். சிங்கள – பௌத்த பேரினவாத சித்தாங்களில் மூழ்கி மங்கப் போகிறாரா என்பதை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மக்களின் பிரச்சினைகளை, அதன் பல்பரிமாணங்களை நேரடியாக அறிதலும், அதனூடாக மக்களிணைப்பும் உருவாகினால், எதிர்காலத்தில் கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி ஏற்படும். இல்லையென்றால் இன்றைக்கு வந்திருந்து தங்களுக்குள் குசலம் கதைச்சுப்போட்டு, அரசியற் பகிடிகளை விட்டுவிட்டு, சடங்குக்கு வந்திருந்து சென்ற மற்றைய பிரதிநிதிகள் போல் நீங்களும் ஆகிவிடுவீர்கள். நீங்கள் அப்படியில்லையென்பதை மக்களிடம் நிரூபிக்க வேண்டும். நம்பிக்கையை விதையுங்கள், அதை வளர்த்தெடுங்கள், காப்பாற்றுங்கள். இந்நிலையில் கொடூர குற்றாவளிகளை தனது அதிகார வலயத்தில் வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று கொடுப்பேன் என திரு ரணில் விக்ரமசிங்கே உறுதி அளிப்பதை எப்படி நம்ப முடியும்?
இந்நிலையில் காணாமல் போன தம் உறவுகளைத் தேடித் தரச் சொல்லி மக்கள் போராட்டம் செய்து வரும் நிலையில், அதற்கு எவ்வித தீர்வினையும் கூறாது தற்போது உருவாக்கி வெளியிடப்பட்ட பாதீட்டில் காணாமல் போனவர்களுக்காக 300 மில்லியன் நிதியினை இழப்பீடாக அரசாங்கம் அறிவித்து வெளியிட்டிருக்கின்றது. இதுதான் எம் மக்களுக்கான நீதியா?
காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர்களின் உறவினர்களான தமக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்தும் கேள்வி கேட்பார் எவரும் இல்லையா என அவர்கள் அழுது கொண்டு உறவுகளின் புகைப்படங்களுடன் தெருக்களில் மனநோயாளிகள் போல் அலைந்து திரிகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணப் பத்திரம் வழங்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகிறது. ஆனாலும் இன்னும் அவர்களின் உறவுகளைத் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். நாட்டில் அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் மனிதப் புதை குழிகளில் சொந்தங்களின் ஒரு எலும்புத் துண்டாவது கிடைக்கும் என்ற ஆவாவில் அந்த மனிதப் புதை குழி நகரங்களை தேடி பயணிக்க தொடங்கியுள்ளார்கள். அதில் ஒன்றுமில்லை என்பதால் வெறுமையுடனும், ஏக்கத்துடன் திரும்புகின்றார்கள். நாட்டில் மனிதப் புதை குழிகள் தங்கப் புதையல்களை விட அதிகமாக தோற்றம் பெறுகின்றது.
மேற்படி கொடூரங்களைப் புரிந்த சிங்கள அரசுக்கு ஐ.நாவின் தீர்மானம் 30/1இன் படி பொறுப்புக் கூறலுக்கான கால அவகாசத்தை நீடித்ததன் மூலம் காலம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் சிறிலங்கா அரசானது தன்னிச்சையாகவே அனுசரணையிலிருந்து விலகிக் கொண்டது. கடந்த காலங்களிலும் இதையே சிறிலங்கா அரசாங்கம் (சர்வதேச மத்தியத்துடன் நடைபெற இனப்பிரச்சனைகான அரசியல் தீர்வு பேச்சுவார்த்தையில் இருந்து சிறிலங்கா அரசு ஒருதலை பட்சமாக விலகியது) தன் யுக்தியாகச் செய்தது.
இலங்கை அரசு பொறுப்புக்கூறும் என்று வீணாக எதிர்பார்த்து காலத்தை மேலும் கடத்தாது தமிழருக்கு இழைத்த அனைத்து குற்றங்களுக்காகவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) நிறுத்தி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுவே ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட சர்வதேசமும் இறந்த பெற்றோர்களுக்கும், வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் வயோதிப பெற்றோராகிய உறவுகளுக்கு செய்யக் கூடிய சர்வதேச நீதியாகும்.
தமிழ் பரராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கி வரும் வாக்குறுதிகளுக்கு மாறாக, சுய இலாபமே நோக்காகக் கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் விடயத்திலும், தமிழர் உரிமை (அரசியல் தீர்வு) விடயத்திலும் அரசின் கைகூலிகளாகவே செயற்படுகிறார்கள். அவர்களின் கருத்து மக்கள் கருத்தாகக் கணக்கிலெடுக்கப்படாமல் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றெடுக்க குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் “மீள் நிகழாமையை” உறுதிப்படுத்த முடியுமே அன்றி காலங்களை கடத்துவதன் மூலம் தீர்வு காண முடியாது.
இலங்கை அரசு தமிழ் மக்களையும், தமிழ் அமைப்புகளைப் பிரித்து ஆளும் சதிவலைக்குள்ளும் சிக்கவைத்து எமது மக்களின் நீதிக்கான போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதன் ஊடக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு உறவுகளும் சாவடைந்து கொண்டு இருக்கின்றார்கள். “அவர்களிடம் உள்ள சாட்சிகளும் அவர்களோடு சேர்ந்து அழிந்து போகின்றன” இவ்வாறு தொடர்ந்து போராடும் உறவுகள் சாவடைந்து போனால் சாட்சிகளே இல்லாமல் போய் விடும். அதைத்தான் இலங்கை அரசாங்கமும், சர்வதேசமும் விரும்புகிறு? என்பதை தமிழர்களை வைத்தே பிரித்து கையாலுகின்றது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் வடக்குக் கிழக்கில் எரிகின்ற ஒருதீப்பந்தம். தமது உறவுகளைத் தேடி வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகள், அரசிடம் விடுதலை கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது. தமிழர் தரப்பு ஒற்றுமையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுப்பதே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுக் கொடுக்கும். நீண்டு செல்லும் இந்தப் போராட்டம், சரியான வகையிலான இளைஞர் பங்கேற்பின் மூலம்தான் அடுத்தக் கட்டத்திற்கு நகர முடியும்.
தமிழ் மக்களின் விடுதலை போராட்ட ஆயுங்கள் 2009 முள்ளிவாய்க்களால் யுத்த களத்தில் மௌனிக்கப்பட்டது. ஆயுதப் போருக்குப் பிறகு இன அழிப்புக்கான நீதிக்கான போராட்டத்தின் சாட்சிகளில் ஒன்றாக இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவுகளிடம் கையளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு அதனைப் பொறுப்பெடுக்க வேண்டியவர்கள், அடுத்த தலைமுறைதான். அதனை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட மக்களும் தங்களுக்குள் பிரிவினைகளை களைந்து வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது உறுதியாக பயணிப்பதே நீதிக்கான கதவுகளை திறக்க வைக்கும்.
இலங்கை அரசு உள்நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நிறைவேற்றியிருந்த 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய சட்டம். இது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணையம் அதனது அறிக்கையின் பிரவு1.1இல் பின்வருமாறு விபரிக்கின்றது: இதன் பிரதான நோக்கம் காணாமல் போனவர்களை தேடுதல் மற்றும் கண்டறிதல்,இத்தகைய சம்பவங்கள் மேலும் நிகழாதவாறு பரிந்துரைகளை முன்வைத்தல்,காணமல் போனவர்களின் உறவினர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளித்தல்,நிவாரணங்களை வழங்குவதற்கு உசிதமான நடவடிக்கைகளை எடுத்தல்.
மேலும் அதன் பிரிவு2.உட்பிரிவு-1இல் காணாமல் போனோரின் நிலை பேறான நீதி பற்றிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வரலாற்று ரீதியான இயலாமை மற்றும் அரசாங்கத்தின் மிக குறைந்த அர்ப்பணிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கடினமான சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர்களது அறிக்கை தொடர்கின்றது.மேலும் விசாரணைகளில் பங்குபெறும் பெண்களுக்கு அச்சுறுத்தல்களும் பாலியல் ரீதியான தொல்லைகளும் ஏற்படுவதாகவும் ,சாட்சியமளிக்க முன்வரும் அரச அதிகாரிகளுக்கே அச்சுறுத்தல் ,பணிநீக்கம்கூட இடம்பெறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விடத்தில் ஒன்றை எமது மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்து கொள்ளவேண்டும். எமக்கான நீதி ஒருபோதும் இலங்கை அரசிடம் இல்லை என்பதே அதுவாகும்.அதே நேரத்தில் குற்றம் இளைத்தவர்களை நீதியின் முன்நிறுத்த இந்த சட்டம் கூடுதலாக வாய்ப்பளிக்கவில்லை எமது மக்களின் தேவை எனபது நீதி,பரிகாரம், பாதுகாப்பு.இது இலங்கை அரசிடம் இருந்து ஒருபோதும் எமது மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. எனவே எமது மக்களின் அனைத்து போராட்டங்களையும் சர்வதேசம் நோக்கி நகர்த்தி; அதனூடாக எமது உறவுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க அல்லது இலங்கை அரசை பன்னாட்டுப்பொறிக்குள் சிக்கவைக்க எமக்கான தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி முன்வரவேண்டும்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை போரவை (கவுன்சிலின்) 49ஆவது கூட்டத்தின் ஒரு பகுதியாக 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் இலங்கை குறித்து பங்கேற்பு உரையில் பேசிய மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால், சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நீதி மறுக்கப்பட்ட போதும் நாம் சர்வதேசத்தை நோக்கித்தான் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதக் கூட்டத் தொடருக்காக சகல அரசியல் கட்சிகளினதும், மனித உரிமைகளில் அக்கறை கொண்ட அமைப்புகளினதும் ஒத்துழைப்புடன் ஒருமித்து கோரிக்கைகள் அடங்கிய மகஜராகர் ஒன்று ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டது. அதேபோல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த 51ஆவது கூட்டத் தொடருக்கு முன்பாக நாம் அனைவரும் இணைந்து எமது கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன் வைப்பது அவசியமாகிறது.
தமிழர் தாயகப் பிரதேசத்தில், சிங்களவர்களையும், பௌத்த தேசியவாதக் கொள்கையையும் கொண்ட அரசாங்கத்தின் அடக்குமுறைகள் பாதுகாப்புத் தரப்பின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இந்த அடக்குமுறைகளுக்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்ட இந்த மண்ணில் நீதியைப் பெற்றுக் கொள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கூட பரிமாற முடியவில்லை. தமிழர்கள் மிகவும் வேனைக்குரியதாக நடத்துகின்றார்கள். அரச புலனாய்வாளர்களினால் தொடரந்து அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலையிலும் வடகிழக்கு மக்கள் எமது உறவுகள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை.
காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களில் உணர்வுரீதியாக ஈடுபடவேண்டும். அதன் மூலமாக சர்வதேச முன்றலில் இப்பிரச்சனைகளை முன் நிறுத்தி அதனூடாக எமக்கான தீர்வை பெறக்கூடிய ஒரேஒரு சாத்தியப்பாட்டை நோக்கி நகரக்கூடியவிதத்தில் கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாட்டிற்குள் ஓரணியில் நின்று மக்களிடம் இழந்து விட்ட நம்பிக்கைகளை மீளக்கட்டயெழுப்பி மக்களை ஒணறு திரட்டி போராடும் நிலைக்கு அரசியல் தலைமைகள்மாறவேண்டும்.இல்லையெனில் எமக்கான எந்தத்தீரவும் எந்த ஆண்டிலும் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
10வருடங்களுக்கு மேல் கொடும் வெயிலும் கடும் மழையிலும் வீதியில் போராடும் உறவுகளின் கண்ணீர் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வரும் நிலையில் அனைத்து தமிழ் உறவுகளும், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், தமிழ்த்தேசியம் பேசக்கூடிய அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி போர் குற்றவாளிகளை சர்வதேச கூண்டில் நிறுத்துவதற்காக அனைவரும் கடந்த கால அனுபவங்களைக் கவனத்தில் கொண்டு தமிழர் நாம் ஒரு தேசிய இனம் என்பதை வெளி உலகிற்கு பறைசாற்றி செயற்பட வேண்டும்.
தொகுப்பு