கிளிநொச்சி நகரில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாடசாலை போதிய வகுப்பறை, மற்றும் ஏனைய வசதிகள் இன்றி இயங்கி வருவதனால் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஒரே ஒரு பெண்கள் படைசாலையான புனித பெண்கள் திரேசா கல்லூரியின் சுமார் 800 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற நிலையில் பாரிய பௌதீக வளநெருக்கடிகளுக்கு குறித்த கல்லூரி முகம் கொடுத்து வருகின்றது.
அதாவது 2010ம் ஆண்டு சிறுவர் பாதுகாப்பு நிதியான அரச சார்பற்ற நிறுவனத்தினால் தற்காலிகமாக அமைத்த தகர கொட்டகை ஒன்றில் ஆறு வகுப்புக்கள் இயங்கி வருகின்றன.
இதனைவிட இரண்டு வகுப்புக்கள் மர நிழல்களில் இயங்கி வருகின்றன.
விஞ்ஞான பிரிவுகளைக் கொண்ட உயர்தரப்பாடசாலையாக காணப்படுகின்ற போதும் ஒரே ஒரு விஞ்ஞான ஆய்வுகூடம் மாத்திரம் காணப்படுகின்றது.
உயிரியல் இராசாயனவியல் ஆய்வு கூடங்கள் நடனம் சங்கீதம் போன்ற பாடங்களுக்கான வகுப்பறைகள் பத்தாயிரம் நூல்கள் கொண்ட ஏ-தர நூலகம் எதுவும் இல்லாத நிலை காணப்படுகின்றது.
யுத்தம் நிறைவடைந்து பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் அதிக தேவை கொண்ட ஒரு பாடசாலையாக இது காணப்படுகின்றது.
எனவே தேவைகளை நிறைவு செய்து மாணவர்களின் கற்றலுக்கு உரிய தரப்புக்கள் உதவ வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.