இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரச்சிகரமான படைப்புக்களை உருவாக்க வேண்டும்.
ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான், திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 35 ஆவது ஆண்டு வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்
ஈழத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு என்னும் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி நவம்பர் மாதம் இராசையாதம்பதியினருக்கு மூன்றாவது மகனாக திலீபன் பிறந்தார். இவரது இயற்பெயர் இராசையா பார்த்தீபன். சிறுவயதில் தாயாரை இழந்து தகப்பனாரின் வழிநடத்தலிலும் அண்ணன்மாரின் அரவணைப்பிலும் செல்லப்பிள்ளையாகவும் வளர்ந்தார், இவருடைய சகோதரர்கள் கல்வியில் எப்படி திறமையானவர்களோ அதுபோலவேதிலீபனும் கல்வியில் மிகவும் திறமையானவராக திகழ்ந்தார்.
இவருடைய இலட்சியம் தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று மிகவும் ஆர்வத்தோடு கல்வி கற்று வந்தார். அந்த வேளையில் தான் எமது தாயகத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை கண்ணீரால் எழுதப்பட்டது. எமதுதேசத்தில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கை பல மாணவர்களைபாதிப்படைய வைத்தது. 1980 காலப் பகுதியில் சிறீலங்கா படைகள் பல்வேறு அடக்குமுறைகளையும், பெண்கள் மீதான வன்புணர்வுகளையும் அரங்கேற்றினர். எனவே அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்துஎழுந்தாலே எம் ஈழம் எமக்கு கிடைக்கும் என நம் தேசத்திலுள்ள இளைஞர்களின் மனம் எல்லாம் தீயாய்கொதித்து எழுந்தது. திலீபன் அவர்களும் மருத்துவ பீடத்துக்கு தெரிவானார். ஆனால் அவருடைய மனமோஅக்கினி தீயாய் கொதித்தெழுந்து,
மருத்துவராகி கத்தி பிடிக்க வேண்டிய கை மண்ணுக்காக துப்பாக்கி பிடிக்க எண்ணி தமிழின உணர்வோடுபொங்கி எழுந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சிய உறுதியை சரியாக இனங்கண்டு அவ் அணியில்தன்னையும் இணைத்துக் கொண்டார். அவ் வேளையில் திலீபனுடைய வயது 24. அவரது எண்ணமெல்லாம்ஒன்றேதான், தன்னுடைய மக்களுக்கு சுதந்திரமான வாழ்க்கை பெற்றுத்தர வேண்டும் என்பதே.
லெப் கேணல் திலீபன் அவர்கள் அவரது போராட்த்தின் போது. தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்த திலீபன் இராணுவ பயிற்சியில் மிகவும் திறமை உள்ளவராக இருந்தார். எமது தேசியத் தலைவருக்கு மிகவும் பிடித்தவராகவும்இ கொடுக்கப்படும் பொறுப்புகள் அனைத்திலும் அதி உயர்திறன் செயற்பாட்டை உறுதிப்படுத்தியதாலும் நமது தலைவரால் இவருக்கு யாழ் மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பு வழங்கப்பட்டது.
இவருடைய அறிவுக்கூர்மையும் தந்திரோபாயங்களையும் கண்டு நமது தலைவர் வியந்தது உண்டு . எமதுவிடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களையும் வீர காவியங்களையும் செய்திருக்கின்றது. ஆனால் திலீபன் அவர்கள் இந்திய அரசின் போக்கை அறிந்து
ஆயுதப் போராட்டத்தால் சாதிக்க முடியாததைஇ வியக்கத்தக்க விதமான அகிம்சை வழியில் தான் சாதிக்கமுடியும் என்ற எண்ணத்தை தலைவரிடம் தெரிவித்தார்.தலைவரோ இதை ஏற்க மறுத்து எவ்வளவோ புரியவைத்தார். ஆனால் திலீபனோ பிடிவாதமாக இருந்துதன்னுடைய முயற்சியால் பழந்தமிழ் மன்னனான சங்கிலியன் அரசாண்ட நல்லூரில் அதுவும் தமிழ்க் கடவுள்முருகன் சந்நிதியில் 1987 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கைகளைமுன்வைத்து உணவு தவிர்ப்பு மற்றும் நீர் அருந்தாத போராட்டத்தை ஆரம்பித்தார் .
1).மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2).சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5).தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். என்ற ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து
முதல் நாள்
யாழ்ப்பாணம் நல்லூரில் மக்கள் ஒன்றுகூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்குஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார்
தமிழீழம் என்பதை நாம் எதற்காகக் கேட்கிறோம் என்பதை லெப் கேணல் திலீபன் அவர்கள் உறுதியாகச்சொன்னார். ‘எமது நாட்டில் எமது ராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான்மலரும். அதுவரை நாம் ஒருபோதும் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை. ஒன்றை மிகத் தெளிவாகவும் அறுதியாகவும் கூறுகின்றோம். நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். எமது மக்கள்அழிக்கப்படும் நிலை தோன்றுமானால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திக்கூட போராடுவோம்.’ என்றார் .
இந்த இனம்- இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும். புல்லையும் எடுத்து அது போராடும். அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது!. பேரம் பேசாது-விட்டுக்கொடுக்காது. ஆயுதம் இல்லாவிட்டாலும்-உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அதுதொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக-நியாயத்திற்காக- நீதிக்காக-அது எந்த சக்தியையும்எதிர்த்துப் போராடும்.’
தியாக தீபம் திலீபன் போராடினான்! சாவை சந்தித்தான். ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான். அகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணா விரதமிருந்தான்! போராட்டத்திற்கு பசித்தது. அவனே உணவானான். இலங்கை-இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப்படாது மட்டுமல்லஇ எதிர் மறையானவிடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டுபோராடமுடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள்.
ஐந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல. ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையானவிடயங்கள் தாம் அவை. இவற்றை நிறைவேற்றுவதற்கு நீர் மற்று உண தவிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியதியாகி திலீபனின் மனஉறுதியை பற்றி கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும். உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ள வரை உறுதியோடுபோராடுகின்ற உளவலிமையுள்ள இலட்சிய உறுதி!
சாகும்வரை நீர் மற்று உணவைத் தவிர்த்து இருக்க முடிவு செய்த போது ஒரு சொட்டு தண்ணீரையும்உட்கொள்ளாமல் உணவைத் தவிர்த்து மேற்கொள்ள வேண்டும்| என்று தியாக தீபம் திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு தமிழீழ தேசிய தலைவர்சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது.
1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது தமிழ் நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்புசாதனங்களை இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொடர்புச்சாதனங்களை இந்திய அரசு திரும்பத் தரும் வரைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீர் அருந்தாமல் சாகும்வரையிலான நீர் மற்று உணவைத் தவிர்த்த போராட்டத்தை தேசியத்தலைவர் உடனேயே ஆரம்பித்தார். அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணா விரதப்போராட்டத்தை ஒரு நாள்கழித்தாலாவது ஆரம்பிக்கும்படி இயக்க பிரமுகர்களும் போராளிகளும் தலைவரை கெஞ்சினார்கள். அந்த ஒருநாள் அவகாசத்தில் தமிழக மக்களுக்கும், தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகுசன ஊடகங்களுக்கும் இந்தஉணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்து அறிவித்த பின்னர் தலைவர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கலாமே- என்று கூட அவர்கள் வாதிட்டார்கள். அந்த ஆலோசனையைத் திட்டமாக மறுத்துவிட்டதமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் கூறிய பதில் இது தான்.
‘இல்லை நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம். எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம் இந்தவினாடியிலிருந்து ஒரு சொட்டுத்தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தைஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்பு சாதனங்களை திருப்பித் தரும் வரைக்கும்அல்லது எனது உயிர் போகும் வரைக்கும் எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்’. என்றார்…
ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள் தலைவர்தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. அதன் பின்னர் தேசியத் தவைர் தனது உணவு தவிர்ப்புப்போராட்டத்தை முடித்துக்கொண்டார்
இந்த இலட்சிய உறுதிதான் தியாக தீபம் திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்றுவழிகாட்டிப் போராடியதை அவன் அடுத்த ஆண்டில் 1987ல் நடாத்தினான். ‘ஒரு சொட்டு நீரும் அருந்தாமல்தனது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பிக்கப் போகின்றேன் என்று தியாக தீபம் திலீபன்அறிவித்தபோது தேசியத்தலைவர் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்துஉணவு தவிர்ப்புப் போராட்டத்தை தொடரலாம்’ என்று தேசியத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு தியாக தீபம் திலீபன் தலைவனிடம் பதில் கேள்வி கேட்டான். ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச்செய்யவில்லையே நீங்களும் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் தானே சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டீர்கள் என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?’.
உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது! தியாக தீபம் திலீபனின் சாவும் வித்தியாசமான ஒன்றுதான். அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம்உணர்ந்திருந்தது – தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில் திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனல்தான் அவன் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இருந்தபோதே அவன் மீது இரங்கற்பாபாடப்பட்டதுஇ அவன் உயிரோடிருந்த போதே அவன் எதிர் கொள்ளப்போகும் சாவுக்காக மக்கள் கலங்கிநின்றார்கள்.
திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்ன வயதில் அது தேவையா திலீபனின் உயிரை அளிப்பாரா – அவன் செத்தபின் மாற்றார் பிழைப்பாரா’ எனக் குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.
விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன் கண்ணேதிரே இந்த கட்டிலிலே முடிகின்றான்
பத்தோடு ஒன்றா – இவன் பாடையிலே போவதற்கு
சொத்தல்லோ – எங்கள் சுகமல்லோ
தாலாட்டுப்பாட்டில் தமிழ்தந்த தாய்க்குலமே
போராட்டவீரன் போய் முடியப்போகின்றான்-
போய் முடியப்போகின்றான்..
போய் முடியப் போகின்றான்..
என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப் பாடியதை கால வெள்ளம் அழித்திடுமா என்ன?
தியாகச்செம்மல் திலீபன் உயிர்த் தியாகம் செய்து 35 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அன்று அவன் தன் தியாகத்தின் ஊடாகச் சொன்ன செய்தி ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தப் பட்டே வருகின்றது. அன்று இந்திய அரசு தமிழர் விவகாரத்தில் தலையிட்டபோதும் சரி, இன்று உலகநாடுகள் தமிழர் விவகாரத்தில் தலையிட்டுள்ள போதிலும் சரி, சிறிலங்கா அரசு மீது இவை முறையான அழுத்தம் எதையும் கொடுக்க வில்லை. எந்த ஒரு சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான சமாதானத்தீர்வை எப்போதும் தராது என்கின்ற உண்மை மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது.
அன்று பிராந்திய வல்லரசான இந்தியா, தமிழர் பிரச்சனை தொடர்பாக ஒரு மலினமான ஒப்பந்தத்தை சிறலங்கா அரசுடன் மேற்கொண்டிருந்த போதிலும், அதனால் எந்த விதமான பயனும் ஏற்படவில்லை. இந்தியா தனது இராணுவத்தை இல்ஙகைத்தீவில் நிலை கொள்ளச் செய்திருந்த போதும், அது எந்தவிதமான அழுத்தத்தையும் சிறிலங்கா மீது ஏற்படுத்தவில்லை. மாறாக அரசின் அலட்சியப் போக்கையே இந்தியாவும் மேற்கொண்டதனால் மீண்டும் போர் வெடித்தது.
இதே செயற்பாடுகளைத் தான் இ;ப்போது மீண்டும் நாம் காண்கின்றோம். முன்பு இந்தியா இருந்த இடத்தில் இப்போது பல உலக நாடுகள் ஆனால் இந்தியாவிற்கு உள்ள பிராந்தியச் செல்வாக்கு, இந்த உலக நாடுகளுக்கு இல்லை. இந்தியா சிறிலங்கா அரசோடு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவில்லை. இந்தியா தனது படைகளை இலங்கையில் தரையிறக்கியிருந்தது. இந்த உலக நாடுகள் அவ்வாறு செய்யவில்லை.
அதாவது ஒப்பீட்டளவில் இந்த உலக நாடுகளையும் விட அன்று இந்தியா பலம் பொருந்திய செல்வாக்கோடு இருந்தது. எனினும் இந்தியா சிறிலங்கா அரசிற்கு உரிய அழுத்தத்தை கொடுக்கவில்லை. அல்லது கொடுக்க முடியவில்லை. மாறாக தமிழர்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் மீதுதான் தேவையற்ற அழுத்தத்தை இந்தியா பிரயோகித்து. அச்சொட்டா இதே செயல்களைத்தான் இன்று இந்த உலக நாடுகளும் செய்கின்றன. சிறிலங்கா அரசும் தன்னுடைய பாணியில் அச்சொட்டாக அதே செயற்பாடுகளைத்தான் செய்து வருகின்றது.
திலீபன் தனது உயிர் தியாகத்தின் மூலம் ஒரு மிகத்தெளிவான செய்தியை சொல்லியுள்ளான். எந்த ஒரு சிறிலங்கா அரசும் தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான, நியாயமான, நிரந்தரமான, கௌரவமான சமாதானத் தீர்வை தராது என்கின்ற உண்மையைத்தான் அவன் சொல்லிச் சென்ற செய்தியாகும். தமிழீழ மக்களுக்கு எந்தவிதமான உரிமையையும் கொடுக்க கூடாது என்பதில் சிங்கள அரசுகள் மிகத்தெளிவாக உறுதியாக இருக்கின்றன. இந்த விடயத்தில் எந்தவிதமான விட்டுக் கொடுப்புகளுக்கும் சிறிலங்கா அரசு முன்வரப் போவதில்லை.
உலகநாடுகள் தம்மைச் சம்மந்தப்படுத்திக் கொண்ட கடந்த சமாதானப் பேச்சு வார்த்தைகளும் திலீபனின் செய்தியை நிரூபித்து நிற்கின்றன. எனவே தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது அடுத்த கட்ட நகர்வை மேற் கொள்ள வேண்டியதானது காலத்தின் கட்டாயமாக அமையக் கூடும். ஆகவே இவ்வேளையில் தியாகச் செம்மல் திலீபன் சொல்லிச் சென்ற கருத்துக்களை வாசகர்களின் முன் வைக்கின்றோம்.
“ஒரு மாபெரும் சதி வலைக்குள் சிக்கி வரும் எமது மக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும்.”
“என் அன்புத்தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள்! விழிப்பாக இருங்கள்!”
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்”
- இது தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் சிந்தனையில் இருந்து
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.
இவை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’