கேணல் கோபித்…. நேற்றைய தொடர்ச்சி…
இப்படியாக இருவரும் பயணித்து கொண்டு இருந்த போது பல விடயங்களை பேசிக் கொண்டு சென்றாலும், கோபித் அண்ணாவின் களச் செயற்பாடுகளை பற்றி அவர் கூறும் போது உண்மையில் மனதுக்குள் ஒரு இனம்புரியாத உணர்வை விட்டு சென்றது. ரதன் அண்ண தொடர்ந்தார்.
ஆள் ஒரு பிடிவாதக்காறனடா ஒரு வேலையை பொறுப்புத் தந்திட்டு அத செய்யல்ல என்றா வேலைய பொறுப்பெடுத்தவன சாகாத குறைக்கு கொண்டு வந்திடும். அவன் அடுத்த முறை செய்ய வேண்டிய வேலையை கொடுக்கப்பட்ட காலத்துக்க செய்திட்டு வருவான் அப்பிடி இறுக்கமான கட்டுப்பாடுகளோட இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்ககும் குணமும் மதிக்கும் மனமும் உள்ளவர்.
ஒருக்கா கிளிநொச்சி படைமுகாம் தகர்ப்புக்கு தடையுடைப்பு அணி ஒன்றுக்கு ஆள பொறுப்பா போட்ட போது சார்ள்ஸ் அன்டனி சிறபு படையணி போராளிகளை தடையுடைத்து உள்ளே கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்து கொண்டு தடையுடைக்க முற்பட்டு தோற்றுப்போக மறுபுறம் உள்நுழைந்த அணிகள் தடையுடைத்துவிட்ட செய்தி வந்த போது கடுமையான கோவத்துக்குள்ளாகினாலும் தன்முன்னே நிமிர்ந்து கிடந்த கனரக ஆயுத எதிர்பபுக்களை தவிர்த்து அந்த இடத்தில் இருந்து சற்று விலகி போராளிகளை உள்ளே கொண்டு வந்து சேர்த்தான். முன்னணி நோக்கி நீண்டு கிடந்த கனரக ஆயுதங்களை வேறுபகுதிக்குள்ளால் வந்து பிடரியில் அடித்து தனது வேவு அனுபவத்தை காட்டினார். அன்று கோபித் அந்த முடிவை எடுக்கவில்லை என்றால் வெற்றிச்சண்டையின் போக்கு மாறியிருக்கும்.
இப்பிடி நிறைய இருக்குடா… ரதன் அண்ண தொடர நானும் ஆவலானேன். சர்வதேசமே எம்மை உற்றுநோக்கிய வரலாற்று முக்கியமான குடாரப்பு தரையிறக்கத்தை லீமா பொறுப்பெடுத்த போது அங்கே மதல் இறங்குற அணி கோபித்தினுடையதாக தெரிவு செய்யப்பட்டது அவர் மீதான தளபதி மற்றும் அண்ணையின் நம்பிக்கையை எடுத்துக் கூறும். இறங்கினவங்கள் சும்மாவா நின்றாங்கள் அடிச்சு பிரிச்சு சிங்களத்தை திணறடிச்சுத் தானே விட்டாங்கள். ஆனையிறவை நாங்கள் கைப்பற்றியதுக்கு மூலச்சண்டை என்றா குடாரப்பு தான் அதுக்கே முதுகெலும்பா நின்றவங்களில கோபித் முதன்மையானவர். அவங்கள அன்டைக்கு இத்தாவிலுக்க A9 வீதிய மறிச்சு அடிச்ச BOX தான் உள்ள வர வேண்டிய அணிகளுக்கு இலகுவான உள்நுழைவை கொடுத்தது. அதுவே பெரும் வெற்றியாக எங்கள் மடிக்கு வந்து சேர்ந்தது.
பலாலியில் ஒரு சாதாரண போராளியாக நின்று அணித்தலைவனின் வீரச்சாவையடுத்து அணியை வழிநடாத்தி வெற்றி பெற்றதைப்போல பல நூறு வெற்றிகளை குவித்து அணித்தலைவனாக கொம்பனி கட்டளையதிகாரியாக துணைத்தளபதியாக வளர்ந்து நிக்குது ஆள். இவ்வாறு கோபித் அண்ண பற்றிய உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்க, நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு வந்ததால் அந்த கதைக்கு முற்றுப்புள்ளியிட்டோம்.
அதன் பின்பாக ஓர் நாள் ரதன் அண்ணா லெப் கேணல் ரதனாக விழி மூடி போன போது மனம் வலித்தாலும் சாவுகளைக் கண்டு பழகி விட்ட மனது என்பதால் அதையும் ஏற்றுக் கொண்டேன். இந்நிலையில், வீரமணியண்ண வெடிவிபத்தில் வீரச்சாவடைய கோபித் அண்ண படையணியின் சிறப்புத் தளபதியாக பொறுப்பெடுத்தார். அதன் பின்பான சண்டைக் களங்கள் ஒவ்வொன்றையும் சாதனைக்களங்களாக மாற்றிய தளபதி கோபித் 2009 ஆம் ஆண்டு எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தன் துப்பாக்கியை நிமிர்ததி நின்றார்.
சிங்களமும் சர்வதேசமும் எம்மீது திணித்த பாரிய சண்டைகளை எல்லாம் முறியடித்து கொண்டு வந்த கோபித் இரட்டை வாய்க்கால் பகுதியில் சிங்களத்தின் எறிகணை ஒன்றில் தனது உயிரை விதையாக்குவார் என்று யாருமே எண்ணவில்லை. அவர் விழி மூடி விதையாகிய செய்தியோடு இன்று எட்டாவது ஆண்டை நாம் கடந்து செல்கிறோம்
– கவிமகன்.இ