எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான், திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் போது, இந்தியா எமது நிலைப்பாட்டை ஆதரிக்கவேண்டி ஏற்படும். எமது மண்ணின் விடுதலைக்காக யார் போராடுகிறார்களோ அவர்களே இந்த மண்ணின் மைந்தர்கள்.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, இரண்டாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்
ஈழப்போராட்ட வரலாற்றில் திலீபனின் அமைதிவழியிலான ஈகப் போராட்டம் உலகப் போராட்ட வரலாற்றில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்திச் சென்றுள்ளது.
ஓர் மனிதன் தான் நேசித்த மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக தனது இன்னுயிரை ஈகம் செய்தமை உயிர்க்கொடையின் உயர்ந்த நிலையாகவே பார்க்கப்படுத்தல் வேண்டும். அவ்வகையில் திலீபனின் கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்திற்கு நிகரான போராட்டம் உலக வரலாறில் இதுவரை இல்லை எனலாம் .
பார்த்தீபன் தனது ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பணத்தில் புகழ்மிக்க யாழ் இந்துக்கல்லூரியிலும் பயின்று கல்வியில் சிறந்து விளங்கி யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ கற்கை நெறிக்கு தெரிவானார். ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக விரிவடைந்த காலப்பகுதியில் அப்போராட்டத்திற்கு கணிசமானளவு கல்வியியலாளர்களை தந்த பெருமை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. அவ்வகையில் பார்த்தீபனும் 1980 களில் தனது மருத்துவ கற்கை நெறியினைக் தியாகம் செய்துவிட்டு தமிழ்மக்களின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து பேரினவாத சிங்கள அரசுக்கு எதிராக போராடினார். பார்த்தீபனுக்கு விடுதலைப்புலிகள் இட்ட பெயரே திலீபன்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்டத்திற்கான அரசியல் துறையில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக திலீபன் பணியாற்றிக்கொண்டிருந்த காலப்பகுதியில் ஈழவிடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்தும் கபட நோக்கில் சிங்கள அரசின் வேண்டுதலுக்கு அமைய இந்திய அரசினால் 29 ஆடி 1987ல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்திய ஆயுதப்படையினர் இந்திய அமைதிகாக்கும் படைனர் என்னும் பெயரில் ஈழத்தில் கால்பதித்தனர் .
35 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கிய திருப்பத்தை சந்தித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாக தலையிட்டது. தமிழீழ மக்களின் பிரச்சனை குறித்து இந்தியாவினதும், சிறிலங்காவினதும் அன்றைய அரசுகள் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. இந்த ஒப்பந்தம் சிறிலங்காவின் பாராளுமன்றத்திலும், சிறிலங்காவின் யாப்பிலும் பின்னர் ஏற் றுக் கொள்ளப்பட்டது. இந்தியா தனது இராணுவத்தை தமிழீழப் பகுதிகளில் நிலை கொள்ளச் செய்திருந்தது. இந்திய – சிறிலங்காவின் இந்த ஒப்பந்தம் தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனையை முற்றாக அணுகாமல் தமிழ் மக்களைக் கலந்து கொள்ளாமல் கைச்சாத்திட்டிருந்த போதிலும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த சில அடிப்படை விடயங்கள் அமலாக்கப்படும் என்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.
தமிழீழ மக்கள் இவ்வாறு எதிர்பார்த்திருந்ததற்குக் காரணம் அவர்கள் சிறிலங்கா அரசு மீது கொண்டிருந்த நம்பிக்கை அல்ல! மாறாக வெளிநாடு ஒன்று இம்முறை தமிழ் மக்கள் பிரச்சனையில் நேரடியாகவே தலையிட்டிருக்கின்றது. அத்தோடு இந்த வெளிநாடு வேறு எதுவும் அல்ல! நமது அண்டை நாடான இந்தியா அல்லவா? அதுமட்டுமல்லாது இந்தியா வெறும் அண்டை நாடு மட்டுமல்ல, ஒரு பிராந்திய வல்லரசும் கூட! தமிழ் மக்களின் பிரச்சனையில் அக்கறை கொண்டுள்ள இந்திய வல்லரசு இந்திய-சிறிலங்கா ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள குறைந்த பட்ச சரத்துக்களையாவது அமலாக்கம் செய்ய முற்படும். அதற்குரிய இராஜதந்திர அரசியல் அழுத்தங்களை சிறிலங்கா அரசுமீது இந்திய அரசு மேற்கொள்ளும் என்று எமது மக்கள் மனப்பூர்வமாகவே நம்பியிருந்த காலம் அது.
அப்பொழுதுகூட சிறிலங்கா அரசைத் தமிழீழ மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனென்றால் எந்தச் சிங்கள அரசம் தமிழ் மக்களுக்கு நியாயமான சமாதானத்தீர்வை தரப்போவதில்லை என்பதைத் தமிழீழ மக்கள் தங்களுடைய பட்டறிவு மூலம் தெரிந்தே வைத்திருந்தார்கள் அவர்கள் அன்று நம்பியிருந்தது வெளிநாடும், அண்டைநாடும் பிராந்திய வல்லரசுமான இந்தியாவைத்தான்!.
ஆனால் தமிழீழ மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தது போல் எதுவும் நடைபெறவில்லை. சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தின் குறியீடான சிறிலங்கா அரசு தனது வழமையான அணுகுமுறையிலிருந்து மாறாமல் தொடர்ந்தும் தனது அரச பயங்கரவாத செயல்களைப் பல வழிகளில் மேற்கொண்டு வந்தது. இவற்றைத் தடுக்கும் முகமாக இந்திய அரசு தகுந்த அழுத்தங்களைச் சிறிலங்கா அரசின் மீது மேற்கொள்ளும் என்று அவ்வேளையிலும் தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள்.
‘இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் கிட்டாது’ என்பதைத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் ஏற்கனவே வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் இந்தக் கருத்தை தெட்டத்தெளிவாக கூறியிருந்தார்.
‘இலங்கை – இந்திய ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்படும் என்று நான் நம்பவில்லை சிங்கள இனவாதப்பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை’ என்று தேசியத் தலைவர் அன்றே கூறியிருந்தார். அந்த கூட்ட நிகழ்வுக்குப் பெரும் பங்கினைத் தியாகி திலீபன் ஆற்றியிருந்தான்.
தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனமான பார்வையின்படியே சிங்கள அரசு நடந்து கொண்டது. தமிழ் அகதிகள் தங்களுடைய சொந்தக் கிராமங்களுக்குச் செல்ல முடியாத நிலையை சிங்கள இராணுவம் உருவாக்கியது. வேக வேகமாகச் சிங்கள குடியேற்றங்களை சிங்கள இராணவத்தின் துணையுடன் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வந்தது. தமிழ் மக்களின் பாரம்பரிய மண் மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. கிழக்கு மாகாணத்தில் பெருவாரியாகச் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கள அரசின் பொலிஸ் நிர்வாகம் தமிழ்ப் பகுதிகளில் மேலும் விரிவாக்கப்பட்டது. தமிழ்த் துரோகக் குழுக்கள் இந்திய சிறிலங்கா இராணுவங்களின் துணையுடன் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற கொடுஞ் செயல்களைப் புரிய ஆரம்பித்தன. நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பல சரத்துக்கள் நிறைவேற்றப் படாமல் இழுத்தடிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.
இவற்றை இந்திய அரசும், இந்திய இராணுவமும் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை முறையாக அமல் படுத்த வேண்டிய தம்முடைய கடமையைச் செய்யாமல் இவற்றிற்குத் துணைபோகும் சக்தியாகவே இந்தியா நடந்து கொண்டது.
இவை குறித்துச் சிறிலங்கா அரசிடமே முறையிடுவதையும் விட ஒப்பந்தப் பாதுகாவலனாக வந்த இந்திய அரசிடம் முறையிடுவதுதான் முறையானதாகும் ஏனென்றால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முறையாக அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பும,; கடமையும் இந்தியாவினுடையதாக இருந்தது. இந்தியாதான் தமிழ் மக்களின் உரிமைக்கு உத்திரவாதத்தை அளித்து தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தையும் நிறுத்தி வைத்தது. எமது மக்களினதும், மண்ணினதும் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக தேசியத் தலைவர் தமது சுதுமலை பிரகடனத்தின்போது தெரிவித்திருந்தார்.
ஆகவே இந்திய அரசு தமிழ் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றும்படி கோரி பின்வரும் ஐந்து கோரிக்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன் வைத்தது. ஈழத்தமிழர்களின் விடியலை தனது மூச்சாக்கி போராடிய திலீபன் இந்திய அமைதிப்படை யினரிடம் ( இந்திய அரசிடம்) அமைதிப்படையினர் என்ற வகையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உடனடியாக தீர்க்கவேண்டிய ஐந்து விடையங்களை நிறைவேற்றக் கோரி உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தினார்
- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் மற்றும் சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படுகின்ற சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
- வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி கொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் இந்தியத் தூதுவரின் கைகளில் 13-09-87 அன்று நேரடியாக கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்கப்பட்டு 24 மணிநேர அவகாசமும் கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால் இந்தியத் தூதுவரிடமிருந்து எந்தவிதமான பதிலோ, சமிக்ஞையோ வரவில்லை.
இந்த ஐந்து கோரிக்கைகள் புதிதாக வைக்கப்பட்ட கேரிக்கைகள் அல்ல! ஏற்கனவே ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசாலும் சிறிலங்கா அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப் பட்டவைதாம் இவை!. தவிரவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களில் மிகவும் இலகுவாக அமலாக்கப்படக் கூடிய மிக எளிமையான சரத்துக்கள்தாம் இவை!.
இந்தக் கோரிக்கைகளை இந்தியா ஏற்றுக் கொள்வதற்காக தமிழனினம் தெரிந்து எடுத்துக் கொண்ட போராட்ட வழிமுறை, அகிம்சை போhட்டமாகும்!.இக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தான் உயிர் துறப்பது உறுதி என அறிவித்து நீராகாரரமின்றி வன்முறையற்ற வழியில் திலீபன் முன்னெடுத்த போராட்டத்தின் நோக்கம் நிறைவேற்றப்படாததன் காரணமாக 12ம் நாள் 26 புரட்தாதி மாதம் 1987திலீபனின் உயிர் பிரிந்தது.
திலீபனால் வன்முறையற்ற வழியில் நாடாத்தப்பட்ட போராட்டம் காந்தியின் வழி நடந்த உண்ணாவிரத போராட்டமன்று. தொல்தமிழரின் மரபில் குறிப்பாக சங்ககாலத்தில் வழக்கத்தில் இருந்த வடகிருத்தலின் உன்னத வடிவமே ஆகும்.
காந்தி நீர் அருந்தி மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டங்களுக்கு பிரித்தானிய அரசின் மறைமுக ஆதரவு இருந்தது ஏனெனில் அவர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான ஆயுதம் ஏந்திய விடுதலைப்போரை மழுங்கச் செய்வதற்கு காந்தி உண்ணாவிரத போர்களில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்தது.இதனை நன்கு அறிந்த காந்தி தன்னுடன் பொது மக்களையும் நீரருந்தி உண்ணாநோன்பிருந்து பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மனதை மாற்றிக் கொள்ளும் வலிய கருவியாக பயன்படுத்தி பயனடைந்தார் என்பதே உண்மையாகும்.
திலீபனின் உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு காந்திய தேசத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஏனெனில் இந்திய அரசு திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் சிங்கள அரசை பகைக்க விரும்பவில்லை .
ஆயினும் திலீபன் “நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்”. என குறிப்பிட்ததாக தியாகி திலீபன் அவர்களுடன் உணவு தவிர்ப்புப் போராட்ட மேடையில் உதவியாளராக இருந்த முன்நாள் போராளியான கவிஞர் மு .வே.யோ. வாஞ்சிநாதன் எழுதிய” ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபனுடன் 12 நாட்கள்”என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திலீபன் தனது கொள்கைப்பற்றுதிமிக்க வன்முறையற்ற உயர்க்கொடைப் போராட்டத்தின் மூலம் ஈழத்தமிழருக்கு சொல்லிச் சென்ற செய்தி “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் , சுதந்திர தமிழீழம் மலரட்டும்”. அதாவது விடுதலையை வேண்டிநிற்கும் ஈழத்தமிழினம் தனது விடுதலைக்காக பிறரிடம் சாராது ஒன்றுபட்டு போராடுவதன் மூலம் வெற்றியைப் பெற்று தனது தேசத்தை நிறுவ முடியம்.
நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். விடுதலைப் புலிகள் உயிரினும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தையர்களை நினைக்கிறார்கள். உண்மையான உறுதியான இலட்சியம். அந்த இலட்சியத்தினை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள். எனது இறுதி விருப்பமும் இதுதான்.”
35 ஆண்டுகளுக்கு முன்பு நல்லூர்க் கந்தசாமி கோவில் வீதியில் ஓருயிர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டது. தனது மக்களின் விடிவுக்காக, தனது வாழ்வைத் தியாகம் செய்து, தனது சாவைச் சந்திப்பதற்காக அந்த உயிர் தன்கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் அகிம்சை என்ற அழைக்கப்பட்ட கோட்பாடு ஆகும்!. 35 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லாயிரக் கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்க தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம் நமக்கு சொன்ன, இன்னமும் சொல்லி வருகின்ற செய்தி நிறைந்தவை
உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனிஇடம் பெற்று விட்டான்.
உயிர் துறந்த பின்னும் கூட மக்களுக்கு பயன்பட எண்ணியதால் தான் இறந்த தும் தனது உடலை யாழ் மருத்துவ பீடத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவனது இறுதி விருப்பத்தின் பேரில் வரலாற்று சிறப்பு மிக்க சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திரண்டடிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் செப்ரெம்பர் மாதம் 28ம் திகதி விடுதலைப்புலிகளினால் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட வைத்திய கலாநிதி சிவராஜாவிடம் திலீபனது உடல் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
தமது இறுதி அஞ்சலியை செலுத்தக் கூடியிருந்த மக்களில் பலர் துன்பம் தாழாது மயங்கி விழுந்தனர் சோக ஒலி தமிழீழம் எங்கும் எதிரொலித்தது
நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும். மக்கள் அனைவரும் எழுட்சியடைவார்களாயின் தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்கமுடியாது. இது தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் சிந்தனையில் இருந்து
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
எமக்கு ஒரு நாடு வேண்டும், எமது மக்களுக்கும் விடுதலை வேண்டும், எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும், என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகிறார்கள். எனவே எனது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இவை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’