தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, 5தாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்
மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற லெப் கேணல் திலீபனின் முழக்கம், இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது.
1987 செப்ரம்பர் 15 தனது தியாகப் பயணத்திற்கு புறப்படுவதற்காக திலீபனின் தன் தோழர்கள், தோழியருடன் நல்லூரின் வீதியில் அமைந்த விசேட உணவு தவிர்ப்புப் போராட்டம் மேடைக்கு வ ந்திட ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் மூதாட்டி ஒருத்தி நெற்றியில் திலகமிட்டு ஆசிர்வதிக்க லெப். கேணல் திலீபன் காலை நேரம் 9.55 மணிக்கு நீராகாரம் இன்றிய சாகுவரையான தன் உணவு தவிர்ப்புப் போராட்ட த்தை ஆரம்பத்தான். அந்த நாட்கள் தமிழீழத்தின் எல்லாத் திசைகளும் சோகத்தில் மூழ்கிய நாட்கள்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்ற போர்வையில் எம்மண்ணில் கால்வைத்திறங்கிய இந்தியப்படைகள், தமிழ் மக்களின் உரிமைகளைக் காப்பதற்கு பதிலாக பாராமுகமாக இருந்தது. ஆயுதங்களற்ற புலிகளின் பாதுகாப்பை மீறி சிங்களக் குடியேற்றங்கள் எல்லைப் புறங்களில் வேகமாக உருவாக்கப்பட்டன. இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் சாத்தியமற்றுப் போனது. சமூக விரோதக் குழுக்களின் அடாவடிகள் பெருகின. மொத்தத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய எழுச்சி போராட்டமும் விடுதலைத் தடமும் இலங்கை – இந்திய ஒப்பந்த சூழ்நிலையில் சீர் குலைக்கப்பட்டன. மக்களின் அடிப்படையுரிமைகள் பறிக்கப்பட்டன.
இந்நிலையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் அம்சங்களாக இருக்கின்ற
1) பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் சிறைகளில் அல்லது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் மேற்ககொள்ளப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் யாவும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
3) இடைக்கால அரசு அமைக்கப்படும்வரை புனர்வாழ்வு எனும் பெயரில் நடாதத்தப்படும்; சகல வேலைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படல் உனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5) ஊர்காவல் படைகளின் ஆயுதங்கள் மீளப் பெறப்படல் வேண்டும். பாடசாலை கட்டடடங்களில் உள்ள இராணுவம் வாபஸ் பெறவேண்டும்.
என்ற ஜந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபனின் உணவு தவிர்ப்புப் போராட்டம் போராட்டம் ஆரம்பமாகியது.
தேசம் தழுவிய ரீதியில் அகிம்சை போராட்டங்கள் பரவலடைந்தன. இரண்டாம் நாள் மறியல் போராட்டங்களும் மகளிர் அமைப்புக்களின் பாத யாத்திரிகைகளும் இடம்பெற்றன.
உண்ணாவிரத மேடையை சூழவிருந்த பல்லாயிரம் மக்கள் கண்ணீருடன் தேம்பியழ தன் மக்களின் முன் திலீபன் எழுந்து நிற்க வலுவற்று நா தளுதளுக்க “மக்கள் விடுதலை நிச்சயம்; அதை வானிலிருந்து பார்த்து மகிழ்வேன்.” என்ற வரலாற்றுச் சிறப்பான உரையை திலீபன் ஆற்றனான்.
அந்த உணர்வின் வரிகள்……
“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்று கொண்டு பேச முடியாத நிலையில் இருப்பதால் இருந்து பேசுகிறேன். நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனோ தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும். என்று விரும்பினேன்.
நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். அறுநூற்று ஜம்பது பேர் இன்றுவரை மரணித்துள்ளோம்.
மில்லர் இறுதியாக போகும் போது என்னிடம் ஒருவரி கூறினான். இறுதிவரை நான் அவனுடன் இருந்தேன். “நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும் போது மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதலை அடையும் காட்சியை என் கண்ணால் காணமுடியாது என்பதே ஒரே ஏக்கம்” என்று கூறிவிட்டு வெடி மருந்து நிரப்பிய லொறியை எடுத்துச்சென்றான்.
இறந்த அறுநூற்று ஜம்பது பேரும் அனேகமாக எனக்கத் தெரிந்துதான் மரணித்தார்கள். அதனை நான் மறக்க மாட்டேன்.
உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் தலைவரின் அனுமதியினைக் கேட்டேன். அப்போது தலைவர் கூறிய வரிகள் எனது நினைவில் உள்ளன. “திலிபன் நீ முன்னால் போ நான் பின்னால் வருகிறேன்” என்று அவர் கூறினார்.
இத்தகைய ஒரு தெளிவான தலைவனை தனது உயிரைச் சிறிது கூட மதிக்காத தலைவனை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.
அந்த மாபெரும் வீரனின் தமையில் ஒரு மக்கள் புரட்சி வெடிக்கட்டும் அது நிச்சயமாக தமிழீழத்தை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தரும்.
இதனை வானத்தில் இருந்து இறந்த அறுநூற்று ஜம்பது போராளிகளுடன் சேர்ந்து நானும் பார்த்து மகிழ்வேன்.
நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.
விடுதலைப்புலிக்ள தமது உயிரிலும் மேலாக சிறுவர்களை, சகோதரிகளை, தாய்மார்களை, தந்தைமார்களை நினைக்கின்றார்கள்.
உண்மையான உறுதியான இலட்சியத்தை எமது தலைவருடன் சேர்ந்து நீங்கள் அடையுங்கள் எனது இறுதி விருப்பமும் இதுதான்”
மூன்றாம் நாள் திலிபனின் உடல்நிலை மேலும் மோசமடைகின்றது. மேடையில் தனது தோழர்களின் அணைப்பில் எழுந்திருந்தவாறு சிரம்பட்டு கதைத்துக் கொண்டிருந்தான். பகல் மணி இரண்டு, படுக்கையிலிருந்தவாறே தனது கைகளை மெல்ல அசைத்து மக்களிற்கு உற்றசாகமூட்டினான். அன்றே திலீபன் தனது இறுதி உரையை நிகழ்த்தினான்.
“என்னால பேச முடியவில்லை ஆயினும் என்மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது.
நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்ப்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். இன்று பேச முடியாத நிலை இருக்குமென நினைத்தேன். ஆனால் நீங்கள் தந்த உற்சாகம் தான் என்னை இப்போதும் வாழவைத்துக்கொண்டுள்ளது.
நேற்றும் இன்றும் மறியல் போராட்டங்கள் வெற்றிகரமாக நடந்ததென அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பூரண திருப்தி அடைகிறேன்.
நாம் நேசித்த தமிழ் ஈழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொர் மக்களும் இந்த பெரும் புரட்சிக்கு தயாராக வேண்டும். நான் நேற்றும் கூறிவிட்டேன் எனது இறுதி ஆசை இதுதான்.
நான் மீட்கப்பட முடியாத நிலைக்கு சென்றுவிட்டதை உணர்கிறேன். ஆனால் வெகு பெரும் பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள்; என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார்.
நீங்கள் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். அப்புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் மக்களுக்குக்கு கிடைக்கட்டும்.
எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டாலும் நாளை எங்களைப்போலதான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும். வருத்தப்படும்.
எனவே இறுதியாக நான் உயிராக நேசித்த என் தோழர்க்ள; என் இயக்கம்; என் சகோதரிகள்; நான் உயிருக்கு மேலாக நேசித்த மக்கள் அனைவருக்கும் நான் பேசியவை தொகுப்படவில்லை. என் மூளை அதை நன்றாக கிரகிக்கவில்லை. என்பது விளங்குகின்றது. இதில் பிழைகள் இருக்கலாம். இதை நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள் நன்றி.”
மாலை தமிழீழத் தேசியத் தலைவர் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேடைக்கு வந்து திலிபனை பார்த்திருந்தார். உணர்வுகள் மாத்திரமே அவர்களிடம் அதிகம் பேசிக்கொண்டன. சோர்வடைந்த நிலையில் படுத்திருந்தவாறே தலையை உணர்த்தி கைகளில் தாங்கியவாறு திலிபன் தன் தேசத்தலைவனுடன் உரையாடினான். அந்த உன்னத தியாகியின் தலையை கோதிய தலைவர் சோகம் தழும்ப திலினிடமிருந்து விடைபெற்றார்.
நான்காம் நாள் திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மூன்றாம் நாளே தனது முகத்தை யாரும் நீர்கொண்டு கழுவ வேண்டாம். என திலீபனின் கேட்டிருந்தான். முகம் கழுவும் போது கூட தன் உதடுகள் ஈரலிப்பை உணர்ந்துவிடக்கூடாது என்பதில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான்.
திலீபன் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டு மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தேசமெங்கும் தீவிரமடைந்தன். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிழக்கு என அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் போரட்டங்கள் பரவலடைந்தன. நாட்கள் ஒவ்வொன்றாய் நகர்ந்தன. ஜந்தாம் நாள் திலீபன் பேசும் கதியை இழந்தான்.
தியாகி திலீபன் உண்ணாவிரத மேடையில் இருந்து ‘நான் மனரீதியாக, ஆத்மார்த்தமாக எமது மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடன் உங்களிடம் இருந்து இறுதி விடைபெறுகின்றேன்.’ என்றான். ஆனால் 35வருடமாகியும் அவனது கனவு மெய்ப்படவில்லலை.
தமிழ் மக்கள் மேலும் மேலும் வலுவிழந்து தாங்கள் அரசியல் பலம் அரசியல் தலைமை அற்றவர்களாக சென்றுள்ளோம் தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உரிமைகள் பற்றிச் சிந்திக்கும் நேரங்களைவிட தங்களின் அடுத்த அரசியல் இருப்பும் அரசியல் எதிர்காலமும் பற்றியே சிந்திக்கின்றனர். இதனால் வெறுப்பும் கொதிப்பும் அடைந்துள்ள தமிழ் இளையோர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கலாம் எனமுன்வந்துள்ளனர் என்றே திலீபனின் நினைவுநாள் நிகழ்ச்சி நிரல்கள் உணர்த்துகின்றது.
மனித வரலாற்றின் வாழ்வியல் போக்கில் பல நிகழ்வுகள் திரும்பத் திரும்ப நிகழும் சில நிகழ்வுகளின் நினைவுகளும் அதன் வலிகளும் சமூக வாழ்வியலில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும். துரோத்தனங்களும் காட்டிக் கொடுப்புக்களும் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் தான் இதற்கு காரணம்.
தியாகி திலீபன் ‘களத்தில்’ எனும் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார். சம வேளை அவர் ஆசிரியர் தலையங்கத்தில் . ‘சுதந்திர தமிழீழம் தவிர்ந்த வேறெந்த தீர்வும் இனி எங்கள் அரசியல் அகராதியில் கிடையாது.’ என எழுதியிருந்தார். அதுவே எம் இனத்தின் ஆத்ம தாகம் . இதன் வலிஇ வலிமை உயிர் கொடைகளை தமிழ் அரசியல் வாதிகளுக்கு புரியாது. புரிய வைக்கவும் முடியாத நிலை மனவேதனையினைத் தருகிறது.
இன்றைய அரசியல் சூழலில் தமிழ் தலைமைகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை இ பரஸ்பரம் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விட்டது இவையெல்லாம் கால தாமதத்தின் பின் நிகழ்ந்தாலும் இத்தகைய விடயங்களை சரிவர கையாள வேண்டும். இத்தகைய மனநிலை தேர்தல் காலங்களில் கூட ஏற்படவில்லை சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு துணை போகின்ற தழிழ் தலைமைகள் கட்சிகளைப் வெற்றி பெற்று நாட்டு மக்களின் விடுதலையினை மறந்து இனவழிப்பு அரசினை காப்பதில் ஆவர்வம் காட்டி வருகின்றார்கள் என்ற உண்மையினை நாம் சொல்ல மறுக்கின்றோம்
ஆயினும் கடந்த காலங்களை நினைத்து ஏங்குவதைவிட எதிர்காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் ஒருங்கிணைந்து கு குறைந்தது திலீபனின் முதல் இரண்டு முக்கிய கோரிக்கைகளான
1)திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்தல்
2)தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்தல்.
என்ற இரண்டு கோரிக்கைகளை முன்னிறுத்தி தாயக பரப்பெங்கும் தீவிரமான வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வெகுஜன போராட்டங்கள் தாயகப் பரப்பையும் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்க்க தக்க வகையில் சிங்களத்தின் தலைநகரிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்தகைய போராட்டங்கள் மூலம்தான் இன்று ஏற்பட்டிருக்கும் தமிழர் தாயகத்தின் சிதைவையும் சீரழிவையும் தடுக்க முடியும் இதனை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களிலாவது தமிழ் தலைமைகள் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் இதயசுத்தியுடன் செயற்படுவதே தியாக தீபம் திலீபனுக்குச் செலுத்தும் உயர்ந்தபட்ச அஞ்சலியாக அமையும்.
நான் என்னுயிரினும் மேலாக நேசிக்கும் மக்களே! உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். இங்கு ஒரு மாபெரும் புரட்சி வெடிக்கட்டும்.
எம் எதிர்கால சந்ததி வாழ நிச்சயமாக எமக்கோர் நாடு அவசியம். இல்லாவிட்டால் எங்களைப்போலதான் நாளை எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும், கருதப்படும். இது திலீபனின் சிந்தனையில் இருந்து
விடுதலைப் புலிகள் மக்களிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் தான் புலிகள்.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு 5 தாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
-தீயாக தீபத்தின் தியாக வேள்வி பயணம் 5தாம் நாள்
தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாக பயணத்தை வெறுமெனே ஒரு அத்தியாயம்திற்குள் அடக்கிவிட முடியாது மாறாக திலீபனின் தியாகத்தை வரலாற்றை வடிப்பதற்கு தமிழ் எழுத்துக்கள் போதாது என்பதே நிதர்சனம். எனவே திலீபன் அவர்களின் தியாக வரலாற்றை சற்று ஆழமாக பார்ப்பதே எக்காலத்திற்கும் சிறந்ததாக இருக்கும். நேற்றைய பதிவில் திலீபனின் தியாக வேள்வியில் துரோகிகள் மற்றும் இந்தியாவின் முகங்கள் வெளுத்துபோனதை பற்றி விரிவாக பார்த்திருந்தோம் அதன் தொடர்ச்சியா இன்றைய பதிவில் திலீபன் அவர்களின் தியாக வேள்வியின் பயணம் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் இது இரண்டாவது சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டம். முதலாவது உண்ணாவிரதப் போராட்டம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால், 1986 நவம்பர் நடுப்பகுதியில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டது. 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி, விடிதலை புலிகளிடம் இருந்து ஆயுதங்கள், தொலைத்தொடர்பு கருவிகளை இந்திய அரசு நயவஞ்சக நோக்கோடு வலுகட்டாயமாக பறித்ததை தொடர்ந்து, அவற்றை மீள ஒப்படைக்கவேண்டும் என்று கோரி தலைவர் பிரபாகரன், நீர் கூட அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரத்தை மேற்கொண்டார். ஈழத்தமிழர்களின் காவலர்கள் புலிகளின், குறிப்பாக தலைவர் பிரபாகரன் அவர்களின் தீவிர அனுதாபியாக இருந்த முன்னால் தமிழக முதலமைச்சர் ஏம்.ஜீ.ஆர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால், இந்திய அரசு புலிகளிடம் இருந்து கைப்பற்றிய பொருட்களை மீள ஒப்படைக்க முன்வந்தது. அதனைத் தொடர்ந்து தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபன் மேற்கொண்ட உண்ணாவிரதம், ஈழத்தமிழர் வரலாற்றில் இரண்டாவது உண்ணாவிரதம். திலீபனும் தனது தலைவன் வழியில், நீர் கூட அருந்தாமலேயே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். ஈழத்தமிழரின் வரலாற்றில் இடம்பெற்ற இரண்டு உண்ணா விரதங்களுமே, இந்தியாவிற்கு எதிராக, இந்தியாவின் செயலைக் கண்டித்தே நடைபெற்றிருந்தன. இந்தியாவைப் பொறுத்தவரையில், உண்ணாவிரதம் என்ற அகிம்சை வழிப் போராட்டம் ஒரு பாரிய உணர்வினை வெளிக்காண்பிக்கும் ஒரு விடயமாகவே இருந்து வந்தது. இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தி முதல், இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனைவருமே உண்ணாவிரப் போராட்டங்கள் மூலமே பல விடயங்களைச் சாதித்திருந்த வரலாறு இந்தியாவின் சரித்திரத்தில் நிறைவே காணப்படுகின்றன. சாதாரணமாகவே இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு, அது நியாயமாக இருக்கும் பட்சத்தில், செவிசாய்க்கும் வழக்கம் எந்தவொரு இந்திய அரசாங்கத்திற்கும் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தனது தமிழ் இனத்தின் நியாயமான கோரிக்கைக்கு இந்தியா நிச்சயம் செவிசாய்த்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் திலீபனும் இந்தியாவின் போக்கிற்கு எதிரான தனது போராட்டத்திற்கு ஆயுதமாக உண்ணா விரதத்தை தேர்ந்தெடுத்திருந்தான்.
15.09.1987 காலை 9.45 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள கந்தன் கருணை என்னும் இல்லத்தில் இருந்து ‘வோக்கி டோக்கி’ சகிதமாக திலீபன் புறப்பட்டார். வேனில் ஏறுவதற்கு முன்னதாக, வோக்கி மூலம் தலைவர் பிரபாகரனுடன் சிறிது நேரம் பேசி விட்டே, தனது வரலாற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். அது வரலாற்றில் என்றுமே மறைந்துவிடாத ஒரு பயணமாக அமையப்போகின்றது என்பதை திலீபன் அப்பொழுது அறிந்திருந்தாரோ தெரியவில்லை.
பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடி நின்று திலீபனை வழியனுப்பி வைத்தார்கள்.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த உண்ணா விரத மேடையில், ஏற்கனவே சோகம் குடிகொண்டிருந்தது. தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்பட்ட ஒரு இளைஞன், இந்த மேடையில் தன்னை மாய்த்துக்கொள்ள முன்வரும் செய்தி ஏற்கனவே அங்கு திரண்டிருந்த மக்களின் நெஞ்சங்களை கனக்க வைத்திருந்தது. வானில் வந்திறங்கிய திலீபனை, தமிழ் மக்கள் கண்ணீருடன் வரவேற்றனர் கண்ணீருடன் ஒரு தாய் திலீபனின் நெற்றியில் வீரத் திலகமிட்டார்.
காலை 9.55 இற்கு உண்ணா விரத மேடையில் வந்தமர்ந்த திலீபன், விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் என்றுமே மறையாத ஒரு உன்னத பயணத்தை ஆரம்பித்தார். திலீபனின் உண்ணாவிரத மேடைக்கு அருகில் மற்றொரு மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. திலீபனின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக, இரண்டாவது மேடையில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கவிஞர் காசி ஆனந்தன், நடேசன் போன்ற முக்கியஸ்தர்கள், எதற்காக திலீபன் உண்ணா விரதம் இருக்கின்றார் என்றும், புலிகளின் நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார்கள். திலீபனின் உண்ணா விரதத்திற்கு துணையாக பலர் அடையாள உண்ணா விரதம் மேற்கொள்ள முன்வத்தார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என்று பலர், சுழற்சி முறையில் உண்ணா விரதத்தை மேற்கொண்டார்கள்.
திலீபனின் உண்ணாவிரத மேடையைச் சூழ பெரும் திரளான மக்கள்கூட்டம் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தார்கள். யாழ்பாணத்தின் குக்கிராமங்கள், மூலை முடுக்குக்களில் இருந்தெல்லாம், இந்த வீர இளைஞனின் தியாகத்தை தரிசிக்க மக்கள் வெள்ளமெனத் திரண்டு வந்தபடி இருந்தார்கள். பாடைசாலை மாணவர்கள் அணிஅணியாக அங்கு திரண்டு வந்தார்கள். உணர்ச்சிகரமான ஒரு சூழ்நிலை அங்கு உருவாக ஆரம்பித்திருந்தது.
இந்த இளைஞனின் முடிவிற்கு இந்தியாதான் காரணம் என்ற உண்மை அங்கு திரண்டிருந்த மக்களின் மனங்களில் படிப்படியாக உதிக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான உணர்வலை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களில் ஏற்பட ஆரம்பித்தது. அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களது உணர்வுகளின் வெளிப்பாடுகள்,
இந்தியாவிற்கு எதிரான முணுமுணுப்புக்களாகவும், பின்னர் இந்தியப்படைகளுக்கு எதிரான கோஷங்களாகவும், மாற்றமடைய ஆரம்பித்தன. இந்தியப் படைகளுக்கு எதிரானதும், இந்தியாவின் போக்கிற்கு எதிரானதுமான ஒரு இறுக்கமான நிலை படிப்படியாக ஈழ மக்களின் மனங்களில் உருவெடுக்க ஆரம்பித்தன.
உண்ணாவிரதம் ஆரம்பமான தினம் இரவு 11 மணியளவில் தலைவர் பிரபாகரன் அவர்கள் திலீபனை பார்வையிட வந்திருந்தார். திலீபனுடன் பல விடயங்கள் பற்றி உரையாடிய தலைவர் பிரபாகரன், திலீபனின் தலையை வருடிவிட்டுச் சென்றார்.
உண்ணாவிரதம் ஆரம்பமாகி இரண்டாவது நாள், திலீபன் உரை நிகழ்த்தினார்.
ஒரு துளி நீர் கூட அருந்தாமல் அவர் உண்ணாவிரதம் இருந்தால், சிறுநீர் கழிக்க முடியாமல் அவர் பெரும் சிரமப்பட்டார். அதிக உடல் உபாதை காரணமாக மிகவும் கஷ்டங்களை அனுபவித்த அவரால் நின்று கொண்டு உரை நிகழ்த்த முடியவில்லை. அதனால் இருந்த நிலையிலேயே அவர் உரையாற்றினார்.
“எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம். நின்றுகொண்டு பேச முடியாத நிலையில் நான் இருப்பதால், இருந்துகொண்டே பேசுகின்றேன்.
நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேசவேண்டும் என்று விரும்புகின்றேன். நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக இருக்கின்றோம். எமது இலட்சியப் போராட்டத்தில் இன்று வரையில் 650 போராளிகளை நாங்கள் இழந்துள்ளோம்.
மில்லர் இறுதியாகப் போகும் போது அவருடன் நான் கூட இருந்தேன். அவர் என்னிடம் ஒரு வரி கூறினார்: நான் எனது தாய் நாட்டிற்காக உயிர் துறப்பதை எண்ணும்போது, மகிழ்ச்சியும், பெருமையும் அடைகின்றேன். எமது மக்கள் விடுதலை அடைவதை எனது கண்களால் காணமுடியாது என்பதே எனது ஒரே ஏக்கம் என்று கூறிவிட்டு, மில்லர் வெடிமருந்து நிறப்பிய லொறியை எடுத்துச் சென்றிருந்தார்.
எமது விடுதலைப் போரில் மரணித்த 650 போராளிகளும், அனேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்தார்கள். அவர்களை நான் மறக்கமாட்டேன். உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க தலைவரின் அனுமதியைக் கேட்டேன். அப்பொழுது தலைவர் கூறிய வார்த்தைகள் எனது நினைவில் உள்ளன. திலீபா, நீ முன்னால் போ. நான் பின்னால் வருகின்றேன் என்று அவர் கூறினார்.
இத்தகைய ஒரு தெளிவான தலைவனை, தனது உயிரை சிறிது கூட மதிக்காத ஒரு தலைவனை நீங்கள் பெற்றிருக்கின்றீகள்.
அந்த மாபெரும் வீரனின் தலைமையில் ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும். அது நிச்சயமாக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை, தமிழீழத்தைப் பெற்றுத் தரும். அந்த அற்புதக் காட்சியை வானத்தில் இருந்து, அந்த 650 போராளிகளுடன் நானும் பார்த்து மகிழ்வேன்.”
என்று திலீபன் உரையாற்றினார்.
திலீபனின் உரை முடிவடைந்ததும், அங்கு திரண்டிருந்த மக்கள் கண்ணீர் விட்டார்கள். ஓவெனக் கதறி அழுதார்கள்.
– தியாக வேள்வி தொடரும்….
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”