அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரி;யும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு.
இந்திய இராணுவம் எமது தாயக மண்ணில் காலடியெடுத்து வைத்த தினத்தையே எமது போரட்டத்தின் இருண்ட நாளாக நான் கருதுவேண். எமது போரட்டத்தில் இந்திய இராணுவம் தலையீடு செய்தது ஒரு இருண்ட அத்தியாயம் என்றே சொல்லவேண்டும். – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற லெப் கேணல் திலீபனின் முழக்கம், இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, ஆறாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29n 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர்.
இவர் யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் தியாக வேள்வியின் மறைவின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலீபன் எனும் இராணுவநிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்களுக்காக (நமக்காக) நீரும் அருந்தா உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா நிலையில் த தனது உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.உறுதியான முழக்கங்களுடன் 1987-ம் ஆண்டு, இலங்கையில் மையம்கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரிடம், முன்வைத்து உண்ணாவிரதம் இருந்த திலீபனின் 5 அம்ச கோரிக்கைகள் இவைதாம்.
- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
- வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987 செப்டம்பர் 15-ல் உண்ணாவிரதம் தொடங்கி, 12 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். 12 நாள்களும் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட அருந்தாமல் கோரிக்கைகளில் உறுதியாக இருந்தார் திலீபன். அதனால், அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. 1987 செப்டம்பர் 26-ம் நாள் காலை 10.48 மணிக்கு திலீபனின் உடலிலிருந்து உயிர் பிரிந்தது. ‘இனவிடுதலைப் போராட்டம்’ என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.
ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்தி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்திய திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் ‘காந்தியம்’ என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.
அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்..? காரணம் கேட்டால், ராஜீவ்காந்தி படுகொலை… இந்தியத் தேசியம்… பிராந்திய நலன்… என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்..? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்…?
தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் தமிழ்நாட்டில் மாறி மாறி வரும் திராவிட அரசும் இந்திய ஒன்றிய அரசும் எப்போதுமே ஆதரிக்கப் போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது உண்மையென்பதைத்தான் புலம்பெயர் தழிர்கள் சிலரையும் சில தமிழ் அமைப்புக்களையும்தங்கள் நலனுக்காக பயன்படுத்துகின்ற கசப்பான துராக உண்மையினையும் நாம் ஏற்றுக் கொள்ள வேணடும்.
அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம் மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம். இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில்இ தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது.
இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா, கனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம்இ தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.
சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்து நிற்கும் இந்தியா,சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின.
அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது.
ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ, அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும். இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில்இ அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில் அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம். அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். ‘மக்கள் புரட்சி’ என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்… ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம்.
நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவு காலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச் சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம்.
புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.
எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம். இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா..? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்… நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.
ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது. ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். ‘எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை’ என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்ற தியாக தீபம் திலீபன் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாக தீபம் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!
தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம்
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, ஆறாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தியாக தீபம் திலீபன் – தியாக வேள்வியின் ஆறாம் நாள்!
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன். ஆனால் சலம் போகவில்லை. வயிற்றை வலிப்பதாகவும் சலம் போவதற்குக் கஷ்டமாக இருப்பதாகவும் கூறினார்.
சிகிச்சையின் மூலம் கொஞ்சமாவது சிறுநீர் கழிக்க முடியும். ஆனால் அதைப்பற்றி பேசினாலே எரிந்து விழுவார் என்பதற்காக ஒன்றும் பேசாமல் இருந்தேன். நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தான் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். ஆவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம்.
பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார் அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. எனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். ஆவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார். அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஒரு முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம்.
ஆவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்….. என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப் போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா? திலீபனை எண்ணித் துடிதுடித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மனங்களிற்கு அந்த ஆறுதல் செய்தி நிச்சயம் சாந்தியளிக்கத்தான் செய்யும். திலீபா ! நீ ஆரம்பித்து வைத்த அகிம்சைப் போர் எங்களது ஆயுதங்களுக்கு மதிப்பில்லாமல் செய்யப்போகிறது. போலும்? உன் அகிம்சைப் போரினால் அப்படி ஒரு நிலை எமக்கு வருமானால் அதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
எமக்கு மட்டும் ஆயுதங்களை தூக்கி கண்டபடி சுட்டுத்தள்ள வேண்டும் என்று ஆசையா என்ன? முப்பது வருடங்களாக எமது மூத்த அரசியல் தலைவர்கள் தந்தை “செல்வா” தலைமையில் முயன்று முடியாத நிலையில்…… எமது தமிழ்ச் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றத்தானே வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினோம். நாம் அகிம்சைக்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் நம் எதிரி அகிம்சையைப் பற்றி ஒன்றுமே தெரியாதவன்…. அவனுக்கு அது புரியாதது. அவனுக்கு தெரிந்ததெல்லாம் கத்தியும், துப்பாக்கியும்தான்…. ஒருவன் கத்தியையும், துப்பாக்கியையும் தன் பலமாக எண்ணும்போது அவனெதிரில் நிற்பவனால் என்ன செய்ய முடியும்.
நீண்ட கசப்பான அனுபவங்கள் தான் எமது கரங்களில் துப்பாக்கிகளைத் தந்தன. 1948இல் இலங்கை சுதந்திரம் அடைந்ததாகக் கூறப்படும் நாளில் இருந்து, சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் காலத்துக்குக் காலம் அழிக்கப்பட்டு வருகின்ற கொடுமை எப்பொழுது முடியும்? தங்கத் தமிழர்கள் வாழ்வில் பொங்கும் மகிழ்வும், பூரிப்பும் எப்பொழுது மலரும்? அண்ணல் காந்தி அகிம்சைப் போரிலே வெற்றி கண்டார் என்றால் அதற்கு அவர் கையாண்ட அகிம்சைப் போராட்டங்கள் மட்டும் காரணமல்ல. காந்தியின் போராட்டத் தளம் இந்திய மண்ணிலே இருந்தது… காந்தியின் போராட்டத் தளத்திலே மனிதநேயம் மிக்க ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்… ஆகவே அகிம்சையைப் புரிந்து கொள்வதற்கு அந்த வெள்ளைக்காரர்களால் முடிந்தது.
ஆனால் நமது மண்ணில் அப்படியா? எத்தனை சந்தர்ப்பங்களில் நமது தலைவர்கள் குண்டாந்தடிகளால் தாக்கப்பட்டிருப்பார்கள்? எத்தனை இனக்கலவரங்களில் நமது இனத்தவர்களின் தலைகள் வெட்டப்பட்டு தாhப் பீப்பாக்களுக்குள் போடப்பட்டிருக்கும்? எத்தனை பெண்கள் தம் உயிரினும் மேலான கற்பை இழந்திருப்பர்? அப்போதெல்லாம் நாம் ஆயுதங்களையா தூக்கினோம்? அகிம்சை ! அகிம்சை ! அகிம்சை ! இந்த வார்த்தைகள் தான் எங்கள் தாரக மந்திரமாக இருந்தது. இந்தத் தாரக மந்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டு எமது கைகளிலே ஆயுதங்களைத் தந்தவர்கள் யார்? நாமாகப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களாகத்தான் தந்தார்கள்….. மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தான் தந்தன….. தலைவர் பிரபாகரனின் பின்னே ஆயிரமாயிரம் வேங்கைகள் அணிதிரண்டு நிற்பதற்குக் காரணம் யார்? சிங்களப் பேரினவாதம்தான் !
இன்று காலையிலிருந்து நல்லூர்க் கந்தசாமி கோவிலில் திலீபன் பெயரில் நூற்றுக் கணக்கான அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை பொதுமக்கள் மூலம் மேடைக்கு வந்தவண்ணமிருந்தன. பிற்பகல் மூன்று மணியிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியிலிருந்து சனங்கள் பஸ்களில் வந்து குவியத் தொடங்கினர். எங்கே பார்த்தாலும் மக்கள் அலைகள் தான் ! தளபதி கிட்டு அண்ணாவின் தாய், திலீபனை வாரி அணைத்து உச்சி முகர்ந்து அழுத காட்சி என் நெஞ்சைத் தொட்டது. துரோகிகளினால் வீசப்பட்ட வெடிகுண்டினால் தன் மகன் ஒரு காலை இழந்த போது அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. “ஒரு கால் போனால் என்ன? இன்னும் ஒரு கால் இருக்கு…. இரண்டு கையிருக்கு…. அவன் கடைசி வரையும் போராடுவான்…” போர் முனையில் தன் மகனின் மார்பில் வேல் பாய்ந்திருப்பதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்ட வீரத் தமிழ்த்தாயின் கதையை இது எனக்கு நினைவூட்டியது.
உதவி இந்தியத் தூதுவர் திரு.கென் அவர்கள் விமான மூலம் பலாலிக்கு வந்து விட்டாராம்…. அவருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக திரு. அன்ரன் பாலசிங்கமும், மற்றொருவரும் போயிருக்கின்றனர்…. ஏன்ற செய்தியை ‘சிறி’ வந்து சொன்னபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தேன். திலீபனுக்கும் அதைத் தெரிவித்தேன். காலையில் சிறுநீர் கழித்ததால் திலீபன் சற்றுத் தெம்பாக இருந்தார். பேச்சுவார்த்தை முடிந்து அதில் சாதகமாக முடிவு கிடைக்குமானால்…… உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டு திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்… அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குவேண்டிய சிகிச்சைகளை உடனடியாக அளிக்கத் தொடங்கினால்… இரண்டு மூன்று நாள்களில் திலீபன் வழக்கம்போல் எழும்பி நடக்கத் தொடங்கிவிடுவார். இப்படி எனக்குள்ளேயே கணக்குப் போட்டுக்கொண்டேன்.
இயக்க உறுப்பினர்கள் திலீபனுடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரை சந்திக்க வந்த மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், தம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மி விம்மி அழுதமை என் நெஞ்சைத் தொட்டது. தளபதி சூசை, பிரபா, ரகு அப்பா, தளபதி புலேந்திரன், தளபதி ஜொனி போன்றோர் கண்கலங்கி திலீபனின் தலையை வருடி…. பேசி விட்டுச் சென்றனர். அவர்கள் போனதும் திலீபன் என்னை அழைத்தார். “ கிட்டண்ணையைப் பார்க்க வேணும்போல இருக்கு….” என்று மெதுவாகக் கூறும்போது அவர் முகத்திலே ‘ஏக்கம் படர்ந்திருந்தது. ஒரு கணம் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிட்டண்ணா, குட்டிசிறி ஐயர்…. இவர்கள் எல்லாரும் இந்தியாவில் இருக்கின்றனர். திலீபனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமால் தவித்தேன்….. கிட்டு அண்ணர் இந்தியாவில் தெரியும்… ஆனால் இந்த நிலையில், அவர் கிட்டு அண்ணாவைக் காண விரும்பியது நியாயம்தான்.
இரவு வெகுநேரம்வரை போச்சுவார்த்தையின் முடிவு வரும் வருமென்று பார்த்துக்கொண்டிருந்தோம்… ஆனால், அது வரவேயில்லை இன்று மாலை சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் திரு. வாசுதேவ நாணயக்கார, மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து திலீபனைப் பார்த்துவிட்டுச் சென்றனர். இரவு வெகுநேரம் வரை எனக்குத் தூக்கமே வரவில்லை.. ஆனால், திலீபன் தன்னை மறந்து நன்றாக உறங்கினார்.
அவரின் இரத்த அழுத்தம் 85 . 60
நாடித்துடிப்பு- 120
சுவாசம் -22 –
தியாக வேள்வி தொடரும்…
.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”