ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.
“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாக தீபம் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!
தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்திஇ உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம் இது திலீபனின் சிந்தனையில் இருந்து
மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற லெப் கேணல் திலீபனின் முழக்கம், இற்றைக்கு 35 ஆண்டுகளுக்கு பின்னரும் மக்கள் எழுச்சியனதும், மக்கள் போராட்டத்தினதும் அவசியத்தினை உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, ஏழாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
1 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2 புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3 இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4 வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5 இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அவர்கள் முன்னெடுத்த அகிம்சை வளிப்பயணம் தொடங்கப்பட்ட ஏழம் நாள் தியாகதீபம் திலீபன் அவர்களின் போராட்டம் உண்மையில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல. ஆனால் இந்திய ஈழத் தமிழருக்கு செய்த துரோகங்களை இலகுவில் மறந்துவிட முடியாது.
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து, திலகமிட்டு, மாலைசூட்டி, ஆரவாரத்துடனும், அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள்.சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக இந்திய அமைதிப்படையை எம்மக்கள் கருதினார்கள்.
இந்தியாமீதும், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதும் எம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,மரியாதையும் இமயம்போல் உயர்ந்து நின்றது. ஆனால் ஒன்றரைமாத காலமாவதற்குள் அந்த நம்பிக்கையும், மரியாதையும் அதளபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை உடைந்து நொருங்கத் தொடங்கிவிட்டது.
1987 செப்டம்பர் பதினைந்தாம் நாளன்று திலீபன் அவர்கள் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலைமையை விளக்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் டிக்ஷித்திற்கு கடிதம் எழுதினார்.அதனைத் டிக்ஷிற் அலட்சியம் செய்தார்.இந்திய அமைதிப்படைத் தளபதி பிரிகேடியர் பெர்னாண்டோ உணவு தவிர்ப்பு போராட்ட பந்தலுக்கு வந்து விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் கூறினார் ‘திலீபன் அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் பினால் ஏற்படும் எந்த விளைவுகளையும் சந்திக்க பாரதம் தயாராக இருப்பதாக ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்’ என்றார் அதேவேளை இத்தகைய உணவு தவிர்ப்பு போராட்டங்களால் இந்தியாவை நிர்பபந்திக்கமுடியாது என்று இந்திய உதவித் தூதுவர் சென் எச்சரித்தார். என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன் .
இந்தப் போராட்டம் இந்திய அரசுக்கு எதிரானது அல்லவென்றும் இந்திய-இலங்கை உடன்படிக்கையை சிங்கள அரசு திட்டமிட்டு மீறுவதற்கு எதிரானதென்றும் எமது இயக்கம் எடுத்துக்கூறியபொழுதும்கூட அவர்கள் அதனை ஏற்கவில்லை.மாறாக நிராகரித்தனர். இந்திய ஈழத்தமிழருக்க செய்துதுவந்த துரோகம் நாடகங்கள் அம்பலத்திறகு வந்தது.
ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கைளை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலையெடுக்கவும் லிடுதலைப் புலிகள் விரும்பவில்லை.இந்த உடன்படிக்கை தேசியத் தலைவருக்கு திருப்தியளிக்கவில்லை என்பது தான் உண்மை.இந்த உடன்படிக்கையை ஏற்காவிடினும் அதனை நிறைவேற்ற இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டு அதன்படி ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்தார்கள் விடுதலைப் புலிகள் .தமிழீழ மக்களின் பாதுகாப்பை இனி இந்தியா பார்த்துக்கொள்ளும் எனும் நம்பிக்கையோடு ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.ஆனால் இந்த அரைகுறை உடன்படிக்கையைக்கூட ஜெயவர்த்தனா தலைமையிலான சிங்கள அரசு முழுமையாகச் செயற்படுத்தவில்லை.
5 வகை கோரிக்கையை முன் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நீர்கூட அருந்தாத உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நியாயப்பாடுகளை அருகில் அமைக்கப்பட்ட மேடையில் வைத்து சர்வதேசத்துக்கு தெளிவு படுத்திட பிரசாத் தலமையிலான போராளிகள். மக்களும் போராளிகளும் சுதந்திரப்பறவை பெண்களும் என மாறி மாறி மேடைகளில் கவிதைகளாகவும் பேச்சுக்களாகவும் திலீபனின் போராட்டத்திற்கு உரமேற்றிக் கொண்டிருந்தார்கள்.
இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி தமிழீழ மக்களிடம் இந்த உடன்படிக்கை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எம்மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இந்திய அதிகாரிகளின் போக்கு அமைந்தது. நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்த எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.
1-அவசரகால சட்டம் நீக்கப்படவில்லை
2-தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
3-அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை.
4-சிங்கள ஊர்காவல்படையியிடமிருந்து ஆயுதங்கள் மீளப்பெறவில்லை.
5-சொந்த இடங்களில் தமிழர்கள் குடியேற்றப்பட இராணுவம் அனுமதிக்காது விரட்டியது.
6-இடைக்கால அரசு அமைவதற்குமுன் தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல் நிலையங்களைத் திறக்க முயற்சிகள் நடைபெற்றது.
7-சமூகவிரோத இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு இந்திய அதிகாரிகள் ஊக்கமளித்தனர்.
8-தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவப்படை முகாம்கள் அகற்றப்படவில்லை.
9-இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டது. இவற்றின் விளைவாக இயக்கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது.
தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க ஜெயவர்த்தனா மறுத்தபொழுது அதிலும் இந்திய அதிகாரிகள் தலையிடவில்லை.மாறாக விடுதலப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதிலும், சமூக விரோத இயக்கங்களை வளர்த்துவிடுவதிலும் இந்திய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினார்கள்.
தாங்கள் சொன்னபடி கேட்கும் இயக்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு பொம்மை இடைக்கால அரசை அமைத்துக்கொண்டு தமிழீழத்தை ஆள்வதையே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்ஷித் விரும்பினார். அவருடைய இந்த ஆணவப்போக்கு நிலைமையை மேலும் சீர்கேடடைய வைத்தது.
உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள ஐந்து அம்சங்களையும் உடனடியாக நிறைவேற்றவேண்டுமென்று வற்புறுத்தியே திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்தக் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜெயவர்த்தனாவை டிக்ஷித் வலியுறுத்தவில்லை. அக்கறைகாட்டவுமில்லை.
அமைதிப் படை என்ற போர்வையில் தமிழர் தாயத்தில் கால்பதித்த இந்தியப் படையினர் சிறிலங்காபடைகளுடன் இணைந்து தமிழ் மக்கள் மீது கொடூரங்களைப் புரிந்தனர். தமிழ்ப் பெண்களைப் பாலியல்வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கினர். தமிழ் இளைஞர் யுவதிகளைச் சுட்டுக்கொன்றனர். சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். குழந்தைகள்மற்றும் இளைஞர்களை கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் தூக்கி வீசிப் படுகொலை செய்தது இந்தியப்படை.
தமிழர் தாயகத்தில் தனது கோர முகத்தைக் காட்டிக்கொண்டிருந்த இந்தியப் படையினர், கடந்த 1987 ஆம்ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து கண்ணில் பட்டவர்களைஎல்லாம் சுட்டுக் படுகொலை செய்தனர். இதில் வைத்தியர்கள், தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் உட்படவைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேரும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 47 நோயாளர்கள், அவர்களின் உறவினர்கள் என 68 பேர் கொல்லப்பட்டனர். இப்டி பல படுகொலைகளை செய்து வந்தது இந்தியப்படைகள். ஈழத்தில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் சர்வதே ரீதியாக பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. அமைதியைத் தோற்றுவிப்பதற்கு என தாயகத்திற்குச் வந்த இந்தியப் படைகளினால் பல படுகொலைகளைச் செய்தார்கள் இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
உலக வரலாற்றில் அகிம்சைக்குப் பெயர் போன நாடாக விளங்கும் இந்திய தேசம் காந்தியடிகள் மூலமாக உலகிற்கு அறிமுகப்படுத்திய அறப்போராட்டத்தின் வாயிலாகவே வெட்கித் தலைகுனியும் நிலைக்குத் தள்ளப்பட்டது என்றால் அது எமது ஈழதேசத்தின் மாபெரும் அறப் புரட்சியாளன் தியாகி திலீபனது தியாகத்தின் உச்சத்தையே சாரும்.
காந்தியடிகள் இந்தியாவின் இந்தக் கோர முகத்தைக் காண உயிரோடு இருக்கவில்லை .அப்பிடி அவர் உயிரோடு இருந்திருந்தால் திலீபனின் தியாகத்தின் முன்னால் திலீபன் மூட்டிய அறம் எனும் அக்கினியின் முன்னால் எரிந்து சாம்பலாகியிருப்பார்
இந்தியாவின் இணையற்ற ஆய்வாளர்களும் ஆலோசகர்களும் என்ன செய்வார்கள்? அகிம்சை நாடுதானே இந்தியா? அகிம்சை நாடுதானே இந்தியா! அகிம்சை நாட்டிலேயே மொழிவாரி மாநிலங்கள் பிர்க்கப்பட்டு கர்நாடகம், பஞ்சாப், வங்காளம் என்று மொழிகளின் பெயரால் மாநிலங்கள் இருந்த போதும்இ தமிழ் நாட்டிற்கு தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்கே உண்ணாவிரதமிருந்து உயிர் விட்ட சங்கரலிங்கனார் கதையை வரலாற்றை கேட்ட பிறகும் அகிம்சை நாட்டிலேயே அகிம்சை வழி போராட்டங்களின் கதி இதுதான் என்றபோதும் அகிம்சை வழியில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு 1987ல் இலங்கை பேரினவாத இனவெறியாகட்டும் இந்தியாவாகட்டும் அகிம்சைக்கும் அகிம்சை போராட்டங்களுக்கும் எதிராகத்தான் நடந்திருக்கின்றன என்பதை தன் உடலால் உயிரால் நிறுபித்து காட்டிய தீயாக செம்மல் ‘திலீபன்’
திலீபன் இயல்பாகவே வறிய மக்களுக்கான மருத்துவ சேவையினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்.. அதனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கொண்டே சுகாதாரத் தொண்டர் குழுவை உருவாக்கி சேவையாற்றினார்.திலீபனது வீரச்சாவின் பின்னர் புலிகளின் மருத்துவ சேவையினர் மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவையினை மட்டுமே முன்னெடுத்து வந்தனர் இந்த சேவையும் வைத்திய சாலைகள் இல்லாத போக்குவரத்து வசதிகள் இல்லாத பிரதேசங்களிலேயே முன்னெடுக்கப்பட்டது.
வன்னியில் பொருளாதார தடை இறுக்கமாக இருந்த போது இயற்கையின் சீற்றம் கோரத் தாண்டவமாடிய போது நாளாந்தம் மக்கள் வைத்திய வசதிகள் இன்றி நாளுக்கு நாள் மரணித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைகள் இருந்தன மருத்துவர்களும் மருந்துகளும் இல்லாமல் இருந்தது.
மருத்துவர்களுக்கு அந்த வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு மின்சார வசதி ac வசதி போன்றன தேவைப்பட்டது.அரசாங்கமோ வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது கடுமையான மருந்துத் தடையினை விதித்திருந்தது.அங்கே அனுப்பப்படுகின்ற மருந்துப் பொருட்கள் விடுதலைப்புலிகள் வசம் செல்வதாக குற்றம் சுமத்தியது.ஆனால் மக்களோ கொலரா மலேரியா நெருப்புக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு இரையாகிக் கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் ஆட்பலத்தையும் இந்நிலை வெகுவாகப் பாதித்தது.உண்மையான விடுதலைப் போராட்டம் என்பது அவ்வமைப்பின் மருத்துவ சுகாரத்துறைகளிலேயே தங்கியுள்ளது.எவ்வளவு தான் ஆக்ரோசமாக தந்திரோபங்களோடு யுத்தம் புரிந்தாலும் அங்கே காயமடைகின்ற அல்லது நோய்வாய்ப்படுகின்ற ஒரு போராளி சிகிச்சையளிக்கப்படாது உயிரிழந்தால் அது கூட இருக்கின்ற போராளிகளையும் மனோரீதியாக பின்னோக்கி நகர்த்தும்.
அதனையும் விட வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் ஒரு இனம் தான் நினைத்த இலக்கை அடையும் போது அங்கே வாழ்கின்ற மக்கள் சூடான் சோமாலியா போன்ற நாடுகளைப் போல வறுமையாலும் கொடிய நோயினாலும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அந்தப் போராட்டத்தின் பலன் தேவையற்றதாகிவிடும் இந்த நோக்கங்களின் அடிப்படையில் தலைவரதும் தியாகி திலீபனதும் தீர்க்க தரிசனம் மிக்க சிந்தனையை நிறைவு செய்யும் வகையில் வன்னியில் போராளி மருத்துவர்களைக் கொண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவ மனை அமைக்கப்படுகிறது.
மருத்துவ மனையே இல்லாத போக்குவரத்து வசதிகளே இல்லாத பகுதியில் அமைக்கப்பட்ட இந்த மருத்துவ மனை மக்களுக்கு இலவசமாக முழுமையான மிக நேர்த்தியான ஒரு மருத்துவ சேவையினை வழங்கியது.மக்கள் திருப்தியடைந்தனர்.
தொற்று நோய்களின் தாக்கத்தை குறைப்பதிலும் சமூகச் சுகாதாரச் சீர்கேடுகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த மருத்துவ மனை ஒரு திறவு கோலாக அமைந்தது.இதனால் விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு தனது மருத்துவப் போராளிகளைத் தரமுயர்த்திச் ‘சிறப்பு மருத்துவப் போராளிகளாக்கியது ‘ இந்த மருத்துவர்களைக் கொண்டு ஈழதேசமெங்கும் தம் திலீபன் மருத்துவ சேவையினை ஆரம்பித்தனர்.
இதற்கமைய வன்னியில் நைனாமடு கற்சிலை மடு அளம்பில் பாலமோட்டை மாங்குளம் ஐயன்கன் குளம் அடம்பன் பிரமந்தனாறு ஆழியவளை பூநகரி நெடுந்தீவு போன்ற இடங்களில் தியாக தீபம் திலீபன் மருத்துவ மனைகள் அமைக்கப்பட சிங்கள அரசின் மருந்தில்லாமல் மக்களைக் கொல்லும் சதித் திட்டம் தகர்ந்தது.2004இல் கிழக்கு மாகாணத்தின் மூதூர் பாட்டாளிபுரம் மட்டக்களப்பின் கதிரவெளி அம்பாறையின் கஞ்சிகுடிச்சாறு போன்ற இடங்களிலும் இந்த சேவை விஸ்தரிக்கப்பட அரச மருத்துவ மனைகள் பல நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது.
ஏனெனில் அனைத்து வசதிகளும் கூடிய மருத்துவ மனையில் பல மருத்துவர்கள் லட்சக்கணக்கில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு பணிபுரிந்தாலும் மக்களுக்கு தேவையான நேரத்தில் அவர்களால் சேவையினை வழங்க முடியாதிருந்தது.
ஆனால் திலீபன் மருத்துவமனைகளில் ஒரேயொரு போராளி மருத்துவர் 24மணி நேர சேவையில் இருந்தார் அத்துடன் ஒரு சில சுகாதார உத்தியோகத்தர்களுடன் நோயாளர் காவு வண்டியும் இருந்தது.
அவசர நிலைமைகளின் போது வைத்தியர் நோயாளியின் வீட்டுக்கே சென்று சிகிச்சையளித்து வைத்தியசாலைக்கு அழைத்து வரும் செயற்பாடு பாமர மக்களை நெகிழ வைத்தாலும் அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஆச்சரியத்தில் உறைய வைத்தது இவ்வாறாகத் தான் நேசித்த மக்களுக்காக அற வழியில் போராடி உயிர் நீத்த திலீபன் தன் ஈடற்ற சிந்தனைகளின் பலனாக தான் நேசித்த மக்களின் நோய்க்கெல்லாம் மருந்தாக மாறி திலீபன் மருத்து சேவைகள் என்கின்ற பெயரில் நேற்றல்ல இன்றல்ல என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் ………
‘ இந்த இனம் – இந்த தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்; அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது; ஆயுதம் இல்லாவிட்டாலும் உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது அது தொடர்ந்து போராடும். தன்னுடைய விடுதலைக்காக நியாயத்திற்க்காக நீதிக்காக அது எந்த சக்தியையும் எதிர்த்து போராடும்.’ இது திலீபனின் சிந்தனையில் இருந்து
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும்இ எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டடின் ஏழாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்…!