சுகந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
ஓரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான், அது மக்கள் போரட்டமாக் தேசியப் போரட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது. – இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
ஒரு மாபெரும் சதிவலைக்குள் சிக்கி வரும் எம் மக்களை எப்படியாவது விடுவிக்கவேண்டும். என் போராட்ட வரலாற்றுச் சாதனைகளையிட்டு நான் மாபெரும் மகிழ்ச்சியும் பூரண திருப்தியும் அடைகிறேன். இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, ஒன்பதாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், லெப் கேணல் திலீபனின் இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற இந்த ஐந்து கோரிக்கைகளும் புதிதானவை அல்ல. ஏற்கனவே இலங்கை அரசுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விஷயங்கள்தான். திலீபன் அங்கு அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரத மேடையில் ஏறி சிரித்த முகத்துடன் அமரும் போது எவரும் அவர் உயிர் தம் கண் முன்பாகவே பிரியும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் வலியுறுத்திய ஐந்து அம்சக் கோரிக்கைகள் இன்றும் ஈழ நிலத்தின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக இருகின்றன. அதேபோல, உண்ணாவிரத மேடை ஏறுவதற்கு முன்பு தன்னுடைய நண்பர்களிடம்,
1 கோரிக்கை நிறைவேறும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டம் இருப்பேன்.
2 ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்க மாட்டேன்
3 எனக்கு மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யக்கூடாது.
4 நான் உணர்வு இழந்த பிறகும் என் வாயில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஊற்றக்கூடாது
5 இறக்கும் வரை எந்தவிதமான சிகிச்சையும் அளிக்கக்கூடாது என இந்த 5 உறுதிமொழிகளையும் வாங்கிக்கொண்டுதான் மேடை ஏறினார். அதே நேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் திலீபனின் கோரிக்கைகளை முன் வைத்து அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அகிம்சைப் போராட்டங்களை, இந்தியா மதிக்கும்… இந்தியாவின் அடிப்படைத்தத்துவம், ஆன்மீகத் தத்துவம், உயர்வான தத்துவம் அனைத்துமே அகிம்சைக் கோட்பாடுதான் என தமிழர்கள் நம்பினர். அகிம்சைக்கு இந்தியா தலைவணங்கும் என மக்கள் நம்பியதற்கு மற்றொரு காரணம். திலீபன் தன் உறுதியான போராட்டம் தமிழர் வாழ்வில் மக்கள் புரட்சியூடான ஓர் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பினார். நாட்கள் நகர்ந்தன…ஆனால் இந்திய அரசு தரப்பில் திலீபனின் கோரிக்கைகள் தொடர்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அநியாயமாகப் இந்திய உங்களை கொண்றுவிட்டதே என்று வெதும்பியது மனங்கள் . போராளிகள், பொதுமக்கள் என்று வேறுபாடு இருக்கவில்லை. எனது குடும்பத்தில் ஒருவர் இறந்தால் எப்படியோ, அப்படியே அன்று திலீபனின் இறப்பும் தெரிந்தது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்பார்கள், ஏதாவது செய்வார்கள், காப்பற்றி விடலாம் என்று மக்கள் கொண்டிருந்த எல்லா நம்பிக்கைகளையும் இந்தியா உதறித்தள்ளியது.
அன்று நாம் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தோம். ஏன், நாம் கேட்டது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவொன்றா? எமக்குரியதைத்தானே கேட்கிறோம், அதையே செய்யமுடியாதவர்கள், எமக்குச் சுதந்திரத்தை எப்படித் தரப்போகிறார்கள் . நியாயமான கோரிக்கைகளைக் கூட பார்க்கமறுத்து, சாத்வீகப் போராட்டத்தினைக் கொச்சைப்படுத்திய இந்திய நிர்வாகம் மீதும், அதன் கருவியான இந்தியப்படைகள் மீதும் சிறிது சிறிதாக அதிருப்தி ஏற்படத் தொடங்கிட தமிழீழத் தேசமே அதிர்ந்தது.
1980 இலிருந்து 2009 இல் இந்தியாவே நடத்தி முடித்த இனவழிப்பு வரை இந்தியா ஒன்றில் தனது பிரதேச நலன்கள், தனது ஒருமைப்பாடு ஆகியவற்றை மட்டுமே கருத்திற்கொண்டோ அல்லது ஒரு அரசியல்வாதியின் சொந்த விருப்பு வெறுப்புகளை மட்டுமே முன்னிறுத்தியோதான் ஈழத்தமிழர் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையினை நடைமுறைப்படுத்தி வந்தது , இன்னமும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
சவுத் ப்ளொக் எனப்படும் இந்திய வெளியுறவுத்துறையில் செயற்படும் குறிப்பிட்ட இனத்தினைச் சார்ந்த ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இன்றுவரை இருந்துவரும் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்றானதொரு மாற்றத்தினை செய்யாவிடில், ஈழத்தமிழர்கள் இனிவரும் காலங்களில் நேரடியாக இந்தியாவினாலோ அல்லது இந்தியாவின் ஆலோசனையின்பேரிலோ இன்னும் பல இனக்கொலைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஆகவேதான், இந்த மலையாளி மாபியாவின் கட்டுப்பாடில் இருக்கும் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை நிச்சயமாக வேறு அதிகாரிகளிடம், முடிந்தால் தமிழர்களிடம் கொடுக்கப்படவேண்டும்.
தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி இதுவரை ஈழத்தமிழரைப் பாவித்த இந்தியா, இனிமேல் ஈழத்தமிழர் விடயத்தில் தலையிடும்பொழுது, தனது சொந்த நலன்களுக்கப்பால் சென்று ஈழத்தமிழருக்கு தேவையான அரசியல் உரிமைகளை, தாயகத்தை வழங்குவதன் மூலமே நிலையான அமைதியினையும், சீனாவின் ஆதிக்கத்தின் முடிவையும் இலங்கையில் ஏற்படுத்த முடியும்.
காங்கிரஸ் அரசின் மிகக் கேவலமான , கடைந்தெடுத்த முட்டாள்த்தனமான, பழிவாங்கலினை மட்டுமே முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர் தொடர்பான வெளியுறவுக்கொள்கை இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது இரு தடவைகள் இனக்கொலையினையும், பாரிய அழிவுகளையும் ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
காங்கிரஸ் அரசின் மலையாளி மாபியாக்கள் வெளியுறவுக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை எடுப்பதிலிருந்து முற்றாக அகற்றப்படுதல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று சீனா இலங்கையில் மிக வலுவாக காலூன்றி, பலவிடங்களிலும் தனது நிலைகளை நிறுவிவர இடம்கொடுத்தது இந்த மலையாளிகளின் கசாப்புக்கடை வெளியுறவுக்கொள்கைதான் என்றால் அது மிகையில்லை.
, இலங்கையின் வடக்குக் கிழக்கில் தமிழருக்கான தாயகம் ஒன்றினை இந்தியா நேரடியாக நிறுவ வேண்டும், அல்லது அதனைச் செய்ய இலங்கையின் ஆட்சியாளர்களை வற்புறுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே இலங்கையின் வடக்குக் கிழக்கில் தனக்குச் சார்பான நேச அரசொன்றினை இந்தியா உருவாக்கிட முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் சீனாவின் பிரசன்னத்தினை இப்பகுதிகளில் இருந்து முற்றாக அகற்றிவிட முடிவதோடு, இப்பிரதேசத்தில் தேவையென்றால், இம்மக்களின் விருப்போடு கண்காணிப்பு நிலைகளையும் இந்தியா நிறுவுவது சாத்தியம். இந்தியாவின் பிரசன்னம் இலங்கையின் வடக்குக் கிழக்கில் அமையும்போது, எல்லைக்கு அப்பாலிருக்கும் சிங்களவர்களின் கொட்டமும் வெகுவாக அடக்கப்பட்டு விடும்.
2009 க்கு முன்பு இன அழிப்புப் போருக்கு துணைநின்றது இந்திய அரசு. விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கு அடுத்தபடியாக விரும்பிய முதல் அரசு இந்திய அரசே
2009 இல் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிய சுவிட்சர்லாந்து முன்மொழிவை முடக்கியதில் முதன்மைப் பங்கு வகித்தது இந்தியா. இலங்கையைப் பாராட்டி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து அகமகிழ்ந்தது.
2012 இல் கற்றப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பில் வேண்டுகோள்விடப்பட்ட போது இலங்கை அரசின் அனுமதியுடன் மட்டுமே ஐ.நா. அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டுமென அதில் இலங்கைக்கு ஆதரவாக மாற்றம் கொண்டு வந்தது இந்தியா.
2013 இல் பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசே தற்சார்புள்ள நம்பகமான புலனாய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு செல்ல கட்டுப்பாடற்ற அனுமதி, இலங்கை அரசின் மீதான அதிருப்தி வாசகங்கள் உள்ளிட்டவைகளை தீர்மானத்தில் இருந்து நீக்க வைத்தது இந்தியா. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பு செப்டம்பர் 2013 இல் இலங்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மார்ச் 2014 என மாற்றியது இந்தியா.
2014 இல் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மீது ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணைய அலுவலகத் தலைமையில் ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதை மாற்றி உள்நாட்டு விசாரணை என திருத்தம் கொண்டுவர முனைந்தது இந்தியா. இறுதியில் பன்னாட்டுப் புலனாய்வு கோரிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
2015 அக்டோபரில் 30/1 தீர்மானத்தையும் 2017 மார்ச் 34/1 தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களித்தது.
2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மாணவர் போராட்டத்தின் எழுச்சியின் பயனாய் பன்னாட்டுப் புலனாய்வுக் கோரியும் அரசியல் தீர்வுக்கு ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரியும் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய அரசு எள்முனையளவும் மதிக்கவில்லை. இதில் தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதித்து வருகிறது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியின்றி அது சாத்தியமில்லை. அத்தகைய எழுச்சிதான் பதவி அரசியல் கட்சிகளை நீதிக்கான நிலையெடுப்பில் நேர்க்கோட்டில் கொண்டு வரும். போராட்ட நெருப்பு மட்டுமே இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க முடியும் என்பதைக் கடந்தகால பட்டறிவும் சமகால கையறு நிலையும் நமக்கு காட்டி நிற்கிறது.
இப்போது கனடா, ஜெர்மனி, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகளடங்கிய சிறிலங்கா தொடர்பான முதன்மைக் குழு சிறிலங்காவுக்கு மீண்டுமொருமுறை கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று 2019 பிப்ரவரி 13ஆம் நாள் நிலையெடுத்து அறிவித்துள்ளது. மார்ச் 1 அன்று மேலும் ஈராண்டு காலம் நீட்டிப்புக் கொடுக்கும் பிரித்தானியாவின் தீர்மான வரைவு வெளிவந்துள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்ற ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையும் கால அவகாசம் தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. இத்தகைய கால நீட்டிப்பை உலகெங்கும் வாழும் தமிழர்கள் ஏற்கவில்லை.
1947ல் தந்தை செல்வா தலைமையில் அத்திரவாரமிடப்பட்ட வீட்டை, மீளக் கட்டியெழுப்பியவர்கள் விடுதலைப்புலிகள். எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சரியோ பிழையோ அதற்கு வாக்களிப்பு என்பது தமது கடமையென கணிசமானோர் கருதுகின்றனர். ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. புலிகள் வன்முறையாளர்கள், புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு’ என்று தமது எசமானர்களின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஓயாமல் கூச்சலிட்டு அரசியல் செய்யது வருகின்றார்கள் தமிழர் தரப்பு அரசியற் கட்சிகள்.
ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.என்ற உன்மையினை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் எந்தளவுக்கு சரணாகதி அரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகை அரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் செயற்பட்டிருக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்பு மற்றும் இனப்படுகொலைகள் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் செயற்பட்டிருக்கின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
திட்டமிட்டு எமது மக்களை இனஅழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள அரசாங்கம் தழிழர் தரப்பு காடந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் காலத்தில் வாய் தவறி கூட எமது மக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்தது என்று எங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா மனித உரிமைகள் சபையில் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுந் தான் அதனைப் பயன்படுத்தினார்கள்.
நாம் எமது காணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்து சிறையில் உள்ளார்கள். இராணுவத்தொகை இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெருகிவருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
தமிழர்களின் நில மீட்புக்கான போராட்டம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் நீதி தேடலுக்கான போராட்டம் என்பன தனித் தனி குழுக்களின் போராட்டமாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பற்ற அமைப்புக்களும் தனி நபரகளும் இப்போராட்டங்களை விலைக்குவாங்கி போராட்டங்களை கொச்சைப்படுத்தியுள்ளமை முள்ளிவாய்க்கால் அவலத்தைவிட பேரவலமாகும்.
தமிழர்களோடு பொங்கல் உண்ட மைத்திரி, “யுத்த குற்றங்கள் ஒன்றும் நடக்கவில்லை. இது விடயமாக எந்த ஒரு இராணுவத்தையும் நீதிமன்றில் நிறுத்த இடம்கொடுக்க மாட்டேன். அரசியல்கைதிகள் என எவரும் இலங்கையில் இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்ளே சிறைகளில் உள்ளனர். இராணுவத்தை விலக்கிக்கொள்ள மாட்டேன்” என்று குறிப்பிடுகிறார்.
அதற்குத் துணையாக ரணில் அமைதி காக்கின்றார். இவையெல்லாம் அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு முண்டுகொடுத்துக் கொண்டிருப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் அவலமாகும்.
இவை எல்லாவற்றையும் விட தொடர் வறுமை மற்றும் பிரச்சினைகள் தீர்க்கப்படாததன் காரணமாக மக்கள் அரசியலில் இருந்தும், பொது தொடர் போராட்டங்களில் இருந்தும் விலகி நிற்கின்றனர். தேர்தல் அரசியலோடு தம்மை கட்டுப்படுத்திக் கொண்டு மக்கள் சக்தியுடனான அரசியல் மற்றும் அரசியல் உரிமை போராட்டங்களிலிருந்து தூர விலக உள்ளனர் அல்லது தூரமாக்கப்பட்டுள்ளனர். இது முள்ளிவாய்க்கால் அவலத்தின் உச்சம்.
மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான மக்களின் வெறுப்பு, கோபம் என்பவற்றோடு 2009ஆம் ஆண்டைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சக்தியின் வெற்றிடத்தை தமிழ் மக்கள் பேரவை நிரப்பும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். வடக்கிலும், கிழக்கிலும் பேரவை நிகழ்த்திய இரு பெரும் பேரணிகளில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தினர்.
பேரவையின் தலைமைக் குழுவில் இருந்த முன்னாள் முதலமைச்சர் வட மாகாண சபை பதவி கலைந்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் கூட்டணி எனும் தனி கட்சி ஆரம்பித்ததைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பேரவை பெயர் பலகையில் மாத்திரமே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலைமைக்கு முள்ளிவாய்க்கால் அவலத்திற்கு காரணமான அயலக சக்திகளும் காரணமென கூறப்படுகின்றது.
பேரினவாத ஆட்சியாளர்கள் அரச பயங்கரவாதத்தை தமிழர்கள் மீது ஏவிவிட்டு ஆயுத கலாச்சாரத்தை பலவந்தமாக சுமத்தி பயங்கரவாத முத்திரை குத்தியதும், பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தி ஆயிரக்கணக்கானோரை சித்திரவதைக்குள்ளாக்கி சிறைக்குள் தள்ளியதும், பாதுகாப்பென்றும் இராணுவப் படை முகாம் விஸ்தரிப்பென்றும் அரச மற்றும் தனியார் காணிகளைப் கையகப்படுத்தியதும், அதிகளவு படையினரை தமிழர் தாயகத்தில் நிலை நிறுத்தியதும், இனப்படுகொலை புரிந்து அகதியாக்கி அகதி முகாம்களில் தள்ளியதும், உறவுகளை வலிந்து காணாமலாக்கியதும், தமிர்களை அழித்து அவர்களின் அரசியல் எழுச்சியை அடக்கி ஒடுக்கும் நோக்கில் மட்டுமல்ல அரசியல் அனாதைகளாக வாழ வைக்கும் நோக்கிலாகும்.
படையினரைத் தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் நிலைகொள்ளச் செய்திருக்கும் அரசு, அவர்களின் பாதுகாப்பில் நேரடியாகவும், பெளத்த அமைப்புக்கள் ஊடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பெளத்த மயமாக்கலை தொடர்கிறது. படையினர் வசமிருக்கும் காணிகளை கடந்த டிசம்பருக்கு முன்னர் விடுவிப்பதாக கூறியும் முற்றுமுழுதாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளாதிருப்பதோடு மகாவலி அபிவிருத்தி வலயம், வன வள திணைக்களம், தொல் பொருளியல் திணைக்களம் என்பவற்றிற்கு ஊடாகவும் காணிகளை கையகப்படுத்த முனைவதையும் தொடர் செய்திகளாகப் பார்க்கிறோம்.
யுத்தத்தின் ஊடாக உடல் ஊனமுற்றவர்கள், விதவைகளாக்கப்பட்டோர், காணாமலாக்கப்டோரின் குடும்பங்கள், காணிகளை இழந்தோர், வறுமை, தொழிலின்மை என்பவற்றில் மூழ்கிய நிலையில் அவர்கள் மத்தியில் மீட்பர்களாக தம்மை அடையாளப்படுத்திய நுண்கடன் வழங்கும் கம்பனிகளின் சதியால் வறுமையும் விரக்தியும் தற்கொலையுமே அதிகரித்தது. இதுவும் இன அழிப்பின் மாற்று வடிவம்.
“யாழ். தீபகட்பத்தில் ஆவா குழுவினரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இராணுவ பிரிகேடியர் தலைமையில் உருவாக்கினார்” என 2019 சுகாதார அமைச்சர் பகிரங்கமாக கூறியபோதும் அது தொடர்பான விசாரணையை நடாத்த அரசு துணியவில்லை.
யுத்த வடுக்களோடு அவலங்களை சுமந்து வலிகளோடு வாழ்விற்காகப் போராடும் மக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட போராட்டங்கள், மக்களுக்கு தூரமாகி நிற்கும் அரசியல் காட்சிகள், நுண்கடன் கொலையாளிகள், நில ஆக்கிரமிப்பு, கலாச்சார சீரழிவு, பெளத்தமயமாக்கல் என முள்ளிவாய்க்கால அவலம் தொடர்கிறது.
2009 முள்ளிவாய்க்காலில் நடந்தது மாத்திரமல்ல, இலங்கையில் வரலாறு முழுவதும் நடந்தது இனப்புடுகொலை என்றும் அதற்கான நீதியை கோரும் சர்வதேச விசாரணை வேண்டும் என்று வடக்கு மாகாண சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு. இலங்கையில் புரையோடிப்போன இனச் சிக்கலுக்கான நீதியையும் இனப்படுகொலைக்கான தீர்வே வழங்க முடியும். வல்லரசுகளும் அவர்களின் போட்டி அரசியலும் ஜ.நாவின் பாராமுகமும், சர்வதேசத்தின் மனித உரிமை பார்வையும் தமிழர்களின் அவலத்துக்குப் பொறுப்பு கூறவேண்டும்
இதுவரை காலமும் தனது நலன்களுக்காக பல லட்சம் அப்பாவித் தமிழர்களைப் பலியிட முன்வந்த இந்தியா, இனிமேலாவது அவர்களின் நலனையும் முன்னிறுத்தி செயற்பட்டால் தனது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். செய்யுமா இந்தியா?
நிலத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழர் எவராவது, இந்தியா தனது நண்பன், தனக்கு நன்மை செய்யும் நாடு என்று நினைத்தால், அவனைப் போல் வரலாறு கற்பித்த பாடத்தை விளங்காத ஒரு முட்டாள் உலகில் இருக்க முடியாது! அப்படி ஒருவேளை இந்தியா இலங்கையை இரண்டாகப் பிரித்து தமிழர் பகுதியில் நிலை கொண்டு சீனருக்கு எதிரான நிலைக்குத் தமிழர்களைப் பாவிக்க எத்தனித்து அதற்குத் தமிழரும் உடந்தையானால், வரலாறு ஒரு போதும் எங்கள் முட்டாள்தனத்தை மறக்காது.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக் கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, ஒன்பதாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்…!
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக் கேட்ட நான், திலீபனை ஏக்கத்துடன் பார்க்கின்றேன். அந்தக் குயில் எதை இழந்து இப்படிக் கூவுகிறதோ தெரியவில்லை.
ஆனால் இந்தக் குயில்…?
எம்மை – எம் இனத்தைக் காக்க தன்னையே இழந்து கொண்டிருக்கிறதே…. இந்த சிறு குயிலின் சோக கீதம் உலகத்தின் காதுகளில் இன்னுமா விழவில்லை…..?
திலீபனை நன்றாக உற்றுப் பார்க்கிறேன்.
அவரின் உடலிலுள்ள சகல உறுப்புகளும் இன்று செயலற்றுக் கொண்டிருக்கின்றன.
உதடுகள் அசைகின்றன. ஆனால் சத்தம் வெளிவரவில்லை.
உதடுகள் பாளம், பாளமாக வெடித்து வெளிறிவிட்டிருந்தன.
கண்கள் இருந்த இடங்களில் இரு பெரிய குழிகள் தெரிகின்றன.
இன்று காலை எட்டரை மணியில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பதினேழு பாடசாலைகளிலிருந்து சுமார் 5000 மாணவ மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்துக் கண்கலங்கியவாறு மைதானத்தை நிறைத்துக் கொண்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், ஊழியர்களும் ஏராளமாக வந்து பார்த்தனர். காலை ஒன்பது மணியளவில் யாழ். கோட்டை இந்திய இராணுவ முகாம் முன்பாக ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பிரதான வாசலில் அமர்ந்து, இந்தியப் படையினர் வெளியே வராதவாறு மறியல் செய்யத் தொடங்கினர்.
பொதுவாக திலீபனின் உடல் நிலை மோசமடைந்து வந்த அதே வேளை பொது மக்களின் குமுறலும் அதிகரிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. திலீபன் தங்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற எண்ணமே ஒவ்வொருவர் மனதிலும் நிறைந்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
இன்று காலையில் இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங் அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் யாழ் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகனைச் சந்தித்தார். பின்னர் இருவரும் தனித்தனியான வாகனங்களில் புறப்பட்டு யாழ் கோட்டை இராணுவ முகாமுக்குள் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருவரும் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டனர்…… ஆனால் கிடைத்தது ஏமாற்றம்தான் !
கோட்டை வாசலில் மறியல் செய்த ஆயிரக் கணக்கான பொது மக்களின் எழுச்சியைக் கண்ட பின்னர் தான் தளபதியவர்கள் தலைவர் பிரபாகனைக் காணப் பறந்து வந்திருக்க வேண்டும்.
இன்று காலை 10 மணியளவில் திலீபனின் மேடைக்கு அருகேயுள்ள மேடையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.
இந்திய வம்சாவழியினர் சார்பில் பேசிய திரு.கணேசராசா என்பவர் ‘பாரத அரசு விடுதலைப் புலிகளின் ஐந்து அம்சக் கோரிக்கையை ஏற்று திலீபனின் உண்ணாவிரதத்தை முடித்து வைக்க வேண்டுமென்றும் இல்லையேல் இதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப் பேற்க வேண்டும்’ என்றும் பேசினார்.
திலீபனை பார்வையிட வருவோர் தங்கள் கருத்துக்களை சில நாட்களாக எழுத்து மூலம் வழங்கி வருகின்றனர். இதற்காக நான்கு போராளிகள் கை ஓயாமல் ஓர் மூலையில் அமர்ந்திருந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 1500 இற்கும் மேற்பட்டோர் தமது கருத்துக்களை மிக உருக்கமாக எழுதியிருந்தனர்.
யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சகல அரச அலுவலகங்களிலும் வேலைகள் நடைபெறாத வண்ணம் பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர்.
சங்கானை உதவி அரச அதிபர் பிரிவிலும் புங்குடுதீவு அரசாங்க அதிபர் பிரிவிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திலீபனுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதமும் மறியலும் இருந்தனர். இதைப் போல் பல கிராமங்களில் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து மக்கள் உண்ணா நோன்பு அனுஷ்டித்தன்.
எங்கும் – எதிலும் திலீபன் என்ற கோபுரம் மக்கள் சக்தியினால் உயர்ந்து விட்டதைக் காண முடிந்தது. ஆம் ! மக்கள் புரட்சி வெடிக்கத் தொடங்கிவிட்டது.
திலீபனின் ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பல தொண்டர் ஸ்தாபனங்கள், இந்தியப் பிரதமர் திரு. ராஜீவ் காந்திக்கு மகஐர்களை இன்று அனுப்பி வைத்திருப்பதாகச் சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
1. யாழ் பிரஐகள் குழுக்களின் இணைப்புக்குழு. (இந்தியத் தூதுவர் ஊடாக அனுப்பப்பட்டது)
2. வட பிராந்திய மினி பஸ் சேவைச் சங்கம். (பிரதி தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டது)
3. வட மாகாணம் பனம்பொருள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஐம்
4. தொண்டைமானாறு கிராம மட்ட கடற் தொழில் சமூக அபிவிருத்திச் சங்கம்
5. வட பிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன அவற்றில் சிலவாகும்.
இன்று மன்னாரிலுள்ள இந்திய அமைதிப்படை முகாமுக்கு முன், திலீபனுக்கு ஆதரவாக மகஐர் ஒன்றைக் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சென்ற போது ஆத்திரமடைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது ஒருவர் அதில் இறந்து விட்டதாகவும், 18 பேர் படுகாயமடைந்ததாகவும் எமது தகவல் தொடர்புச் சாதனச் செய்திகள் கூறுகின்றன.
இன்று மாலை என் காதில் ஓர் இனிய செய்தி வந்து விழுந்தது. இந்தியத் தூதுவர் டிக்ஷிற்-தலைவர் பிரபாவைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார் என்பது தான் அது! ஆம் பிற்பகல் 1-30 மணியிலிருந்து பிற்பகல் 6-30 மணிவரை, இரு குழுக்களும் அமைதியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தின. இந்தியத் தரப்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்கள்:-
தூதுவர் திரு. ஜெ. ஏன். டிக்ஷிற்
இந்தியப் படையின் தென் பிராந்தியத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்
அமைதி காக்கும் படைத் தளபதி மேஐர் ஜெனரல் ஹர்கீத் சிங்
பிரிகேடியர் பெர்னான்டஸ்
இந்தியத் தூதரகப் பாதுகாப்பு அதிகாரி, கப்டன் குப்தா ஆகியோர்
விடுதலைப் புலிகளின் தரப்பில்:-
தலைவர். திரு. வே. பிரபாகரன்
பிரதித் தலைவர். திரு. கோ. மகேந்திரராசா (மாத்தயா).
திரு. அன்ரன் பாலசிங்கம் (அரசியல் ஆலோசகர்)
திரு. செ. கோடீஸ்வரன் (வழக்கறிஞர்)
திரு. சிவானந்தசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் செய்தி வந்ததும், என்னை அறியாமலே என் மனம் துள்ளிக் குதித்தது. ஒன்பதாம் நாளான இன்று ஒரு நல்ல முடிவு எப்படியும் ஏற்படும்……. அந்த நல்ல முடிவு ஏற்பட்டதும் உடனடியாக திலீபனை யாழ். பெரியாஸ்பத்திரியில் அனுமதித்து அவசர சிகிச்சைப் பிரிவில் விசேட சிகிச்சைகள் அளித்தால் 24 மணித்தியாலங்களில் அவர் ஓரளவு பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்…..
எமக்காக இத்தனை நாட்களாகத் துன்பப்பட்டு அணு, அணுவாகத் தன்னை வருத்திக் கொண்டிருக்கும் அந்த நல்ல இதயம், நிச்சயம் பூத்துக் குலுங்கத்தான் போகிறது…….. என்ற கற்பனைக் கடலில் இரவு 7-30 மணிவரை நானும், என் நண்பர்களும், மிதந்து கொண்டிருந்தோம்.
இரவு 7-30 மணிக்கு அந்தச் செய்தி என் காதில் விழந்தபோது இந்த உலகமே தலை கீழாக சுற்றத் தொடங்கியது….. அந்தக் கற்பனைக் கோட்டை ஒரே நொடியில் தகர்த்து தவிடு பொடியாகியது.
ஆம் ! பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தூதுவரால் வெறும் உறுதி மொழிகளைத்தான் தர முடிந்தது…. திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் ஒரு தொடர் கதையாகவே ஆகிவிட்டது. எழுத்தில் எந்தவித ஊறுதி மொழிகளையும் தர இந்தியத் தரப்பு விரும்பவில்லை என்பதை அவர்களின் நடத்தை உறுதி செய்தது. திலீபனின் மரணப் பயணம் இறுதியானது என்பதையும் அது உணர்த்தியது.
– தியாக வேள்வி தொடரும்….!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”