“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன்.
ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான், திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக் 35 ஆவது ஆண்டு, பத்தாம் நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
1983 இனவழிப்பில் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்த மக்களுக்குச் சேவையாற்ற வந்த திலீபன் அப்படியே விடுதலைப் போராளியானார். இனப்பற்றும், தேசிய உணர்வும், செறிவான அரசியற் சிந்தனையும் குறுகிய காலத்தில் இவரை அரசியற் பொறுப்பாளராக்கியது. ‘அவன் எதனைச் செய்தாலும் சரியாகவே செய்வான்’ என்ற மூத்த சகோதரர்களின் நம்பிக்கை பொய்யாகவில்லை.
இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும்வரை நீராகாரமுமற்ற உண்ணாவிரதம் இருந்து பன்னிரண்டாவதுநாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன்- தமிழீழமக்களிற்கும் உலகிற்கும் இந்திய சிறீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டின மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
மீளக்குடியமர்தல் என்ற பெயரில் தமிழர்கள் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
சிறையிலும், இராணுவ போலீஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
தமிழர் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முழுவதும் நிறுத்தப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தண்ணீரும்கூட அருந்த மாட்டேன் என்று உணவுதவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டார்.
உணவுதவிர்ப்பு போராட்ட ஒன்பதாவது நாள் இந்தியத் தூதுவர் டிக்சிற் யாழ். வந்து தேசியத் தலைவருடன் பேச்சுகளில் ஈடுபட்டார். ஆனால் உருப்படியான உறுதிமொழிகள் எதுவும் வழங்கப்படதா நிலையில் திலீபனின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. வாய் மொழிமூலம் தன்னும் திலீபனின் கோரிக்கைள் நிறைவேற்றப்படும் என உண்ணாவிரத மேடையில் வந்து கூற இந்தியத்தூதுவர் மறுத்தார்.
பத்தாவது நாள் திலீபனின் உடல் நிலை மோசமாக பாதிப்டைந்தது. பூரண மயக்க நிலையை திலீபன் அடைந்தான். மக்கள் இரவுபகலாய் கண்ணீருடன் அவனை சூழ்ந்திருந்தனர். இந்திய அரசிடமிருந்து கோரிக்கைகளை நிறைவு செய்வதாக கூறி எந்தவொரு உறுதி மொழியும் வாராதுபோனது. இந்திய அரசின் கபடமுகம் திலீபனின் உயிர் அனுபவித்த வேதனைகளில் ஒவ்வொரு கணங்களிலும் மக்களின் முன்னர் கிழிக்கப்பட்டது.
திலீபனின் தியாகம் இந்தியர்களால் உதாசீனம் செய்யப்பட்டது. இப்போது, இலங்கையரசின் அடாவடித்தனத்தை இந்திய வல்லமையினால் கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்களால் எமது மக்களின் உரிமைகளை எப்படி வழங்கிட முடியும் என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துவந்தது.
இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடிய திலீபனை இந்திய இராணுவமே மதித்தது ஆனால் பல தமிழர்களும் இலங்கை இராணுவமும் ஏன் வெறுக்கின்றது என்று தெரியவில்லை என்பதற்காகத்தான்.
விடுதலையை நேசித்த போராளிகள் மாவீரர் ஆகியபின் அவர்கள் ஒரு தனித்த இயக்கத்தின் சொந்தக்காரர்கள் அல்ல. அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராடினார்களோ அந்த மக்களின் சொத்து என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தையில் கொள்ளவேண்டும். அதிலும் போராட்ட தளத்திலிருந்து வெளியே வந்து அமைதி வழியில் மக்களின் முன்னே பகிரங்கமாக உணவொறுப்பில் ஈடுபட்ட போதே திலீபன் விடுதலைப்புலி என்ற கட்டுக்கு வெளியே வந்து தமிழ் மக்களின் சொத்து என்று ஆகிவிட்டான். எனவே தமிழர்கள் எல்லோரும் நினைக்க வேண்டிய ஒருவராகவும் எங்கள் சந்ததிக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய ஒருவராகவும் திலீபன் இருக்கின்றார்.
தமிழில் ஓர் பழமொழி “ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பது. எனவே இந்த உலகினை பொறுத்தவரை வெற்றிகரமான நகர்விற்கு மக்கள் கூட்டம் பிரிந்து இருக்கவேண்டும். அது அரசியல் வியாபாரம் என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். எனவே தியாகிகளின் நினைவுகளால் வருகின்ற நிகழ்வில் ஒரு கூடி இனி உயிர்களை தொலைக்காமல் ஒன்றுபட்டு விடுதலைக்கு உழைக்க மக்கள் முடிவெடுக்கவேண்டும். தியாகிகள் ஆசியுடன் விடுதலை பெறவேண்டும் என்று உறுதி கொள்ளவேண்டும்.
இலங்கை இந்தியாவிடம் தொடர்ந்து உதவிகள் பெற்றுக்கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் புனர் வாழ்வுக்கு இந்தியாநிதி வழங்கியும் அது சரியாக அங்குள்ள தமிழர்களுக்கு சேரவில்லை.
சமீபத்தில் ஓராண்டுக்குள்ளே இந்தியாவிடமிருந்து இருமுறை நிதி உதவி இலங்கை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் உதவிகளை பெறுகிறது. இந்தியாவிடம் ஒப்புக்கு உறவு வைத்துக்கொண்டு இலங்கை தன்னுடைய முழுமையான ஆதரவை சீனாவிற்கு கொடுத்து வருகிறது இந்த நிலையில் அங்குள்ள தமிழர்களை இந்தியா தொடந்து இலங்கை அரசுடன் இணைந்து இனக்குறைப்பு செய்து வருகிறது.
இலங்கை இந்தியா மீது பயமில்லாமல் போனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவுதான் பிரச்சினை செய்தாலும். இந்தியா நம்மை கண்டிக்காது, ஒப்புக்கு அதிகாரம் வழங்கு என்று சொல்லும், அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளும் மனபாங்கில் இலங்கை அரசு இருக்கின்றது இதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும்.
பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் அமைதிபடையாக இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய இராணுவம் இலங்கை சென்றது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.
அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.
அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு – கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்லஇ இந்திய இராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது.
1971இல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987இல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000இற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டடுள்ளார்கள் இதில் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணராது. அதிகாரப் பூர்வமான பயணங்கள், பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்டப் பிரச்சினையில் இந்திய அரசு கவனம் செலுத்தாமல் இருப்பது ஏன் ? தொடந்து இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரசுடன் இணைந்து தமிழர்களை இனவழிப்பு செய்து வருவது ஏன்?
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 முள்ளிவாய்க்கால் போர் முடிந்து 13 ஆண்டுகள் மேல் ஆகியும், சிங்கள இராணுவம் தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குள்ள தமிழர்களை திட்டமிட்டு அப்பிரதேசத்தினை விட்டு அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தமிழர்களின் விவசாய காணி நிலங்கள், வீடுகளை திரும்பவும் தமிழர்களின் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கோரி இதுகுறித்தான வழக்குகள் நிதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சிங்கள – பௌத்தப் பேரினவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு ஒரு போதும் சமாதானத் தீர்வைத் தரப்போவதில்லை என்ற யதார்த்தத்தை -உண்மையை –நாமும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளோம். திலீபனின் தியாகம் எமக்கு அந்தத் தெளிவைத் தந்தது.
என் அன்புத் தமிழ் மக்களே!
விழிப்பாக இருங்கள்!
விழிப்பாக இருங்கள்!! என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தன் விழி மூடி வீரச் சாவடைந்தான். தியாக தீபம் திலீபன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தக் காலகட்டத்தில் நாமும் விழிப்பாக இருந்து, எமது மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எமது கடமையைச் செய்வோமாக! அதுவே நாம் திலீபனுக்கு இந்த 35 ஆண்டு நினைவின் போது செய்யக் கூடிய உண்மை 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் உறைநிலை கண்டதாயினும், தமிழரின் நீண்டகால அபிலாசைகளுக்கான அரசியல் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதுபோல், உலகளாவிய ரீதியில் மாவீரர் நாள் நினைவெழுச்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக் கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, பத்தாம் நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்…!
பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால், இவர்களின் ஒருவர் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருபதைப் பார்க்கும்போது………. துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப் போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.