“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன்.
ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான், திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இந்தத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அன்னை பூபதியின் அறப்போர் அமைந்தது. இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம்
தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக் 35 ஆவது ஆண்டு, பதினோராவது நாள் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
செந்தமிழும் கலையழகும் சேர்ந்து விளங்கும் தமழீழ மண்ணில் 1963 நவம்பர் 29ம் திகதி உரும்பிராய் கிராமத்துக்கு அருகிலுள்ள ஊரெழு என்ற இடத்தில் இராசையா (ஆசிரியர்) தம்பதியினரின் புதல்வனாகப் பிறந்த திலீபனுக்கு (இயற்பெயர் பார்த்திபன்) 1987ம் ஆண்டில் 23 வயது மட்டுமே. அப்போதுதான் இலங்கைத் தமிழருக்காக இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுடன் ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐந்து அம்சங்களுக்கு இந்திய அரசு பொறுப்பானது. அவற்றுள் ஒன்று, இடைக்கால அமைப்பு அமைக்கப்படும்வரை புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறக்கூடாது என்பது. ஆனால், இதற்கு எதிர்மாறாக சிங்களக் குடியேற்றம் திருமலையில் இந்தியா பார்த்திருக்க இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டது. திருமலையில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்கள் திலீபனை வெகுவாகப் பாதித்திருந்தது.
எம் தேசத்தின் விடிவில் தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் வரலாற்றிலே திலீபன் வித்தியாசமான மாவீரன். வரலாற்றுப் பெருமைமிக்க சுதுமலைக் கூட்டத்தில் தேசியத் தலைவர் உரையாற்றுகையில், இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்வதானது தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்திய அரசிடம் ஒப்படைப்பதானது என்று தெரிவித்தது முக்கியமானது. ஆனால், இரண்டு மாதங்களுக்குள்ளேயே அது மீறப்பட்டுள்ளது.
கல்வியிலே சிறந்தவனாய் மருத்துவத் துறைமாணவனாய் இருந்தும் கூட தாயத்தின் சுதந்திரத்தை உயிர் மூச்சாய் நேசித்தவர். மண்ணின் விடிவுக்காய் தன்னை அரப்பணித்த மாபெரும் தியாகி. ஆதிக்க வெறியர்களின் அக்கிரமிப்பை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சியத்தை மூச்சாக்கிக் கொண்டார். இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று சீறியெழுந்தார். இந்தியா தமிழீழம் பெற்றுத்தர வேண்டுமென்று திலீபன் கேட்கவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் இன்னும் தடுப்புக் காவ லில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
இடைக்கால அரசு நிறுவப் படும் வரை ‘புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங் களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க்கிராமங்கள் பாடசாலைகள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
என்ற ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவுதவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார். இதற்காக எழுத்து மூலம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு 24 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான பதில் மௌனமே.
தாய்மண்ணின்மேல் தணியாத தாகத்துடன் களமாடும் போது களப்புண் அடைந்தார் யாழ்ப்பாண அரசியல் தறைப் பொறுப்பளனாய் தலைவரின் சிந்தனையின் செயல் வடிவமாய் தமிழீழ விடுதலையில் பெண்களும் இணைந்து செயற்படும் எழுச்சியைத் தந்தவர் . எங்கள் தமிழ் மண்ணில், இடர்தாங்கி 12 நாட்கள் பகைவனின் முன்னால் நீர்கூட அருந்தாமல் யாகம்புரிந்த மாவீரன்.
வல்லாதிக்க அரசுகளின் மௌனத்தால் பதினொரு நாட்கள் திலீபன் வேட்கை தொடர்ந்தது, பதினோராவது நாள் உயிருடன் இருக்கிறாரா இறந்து விட் டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் திலீபன் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது. இந்த இடைக்காலத்தில் இந்தியா எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக்கூடாதென்ற ஐந்து அம்ச கோரிக்கையை மட்டுமே திலீபன் முன்வைத்தார்.
ஆயுதங்களால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் முகாமைத் தாக்கச் சொல்லும் ஓர் படையணியின் தலைவனுக்குரிய நெஞ்சுரத்துக்கு நிகராக திலீபன் தமது சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தார். இது, விடுதலைப் போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்பதை தெரிந்து கொண்ட தமிழீழ மக்கள், ஆயிரம் ஆயிரமாக நல்லூர் வீதியை மொய்க்கத் தொடங்கினர். பாடசாலைச் சீருடையிலான மாணவிகளே இவர்களில் அநேகர். மேடையேறி கவிமழை பொழிந்தனர் பலர். அதில் திலீபனும் கரைந்ததை அவரது கண்களில் திரண்ட நீரலைகள் காட்டின.
குடாநாட்டின் எண்திசைகளிலிருந்தும் வந்த ஈருருளிகள், மகிழுந்துகள், பேருந்துகள் அனைத்தும் நல்லூரை நோக்கியே பயணித்தன. நடந்தும், கிடந்தும், ஓடியும் திரண்டவர் கூட்டம் இன்னொரு புறம். அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே இல்லை. இலங்கை அரசினதும், இந்திய நாட்டினதும் அனைத்து ஊடகங்களும் திலீபனின் தியாகப் பயணத்தை இருட்டடிப்பு செய்தன.
ஆனாலும் சிறுவர், இளையோர், பெண்கள், ஆண்கள், மூத்தோர் என எண்ணுக்கணக்குக்கு முடியாத பெருந்தொகையினரால் நல்லூரின் நான்கு வீதிகளும் நிரம்பி வழிந்தது. முரசொலி பத்திரிகை அன்று பிற்பகல் சிறப்புப் பதிப்பொன்றை வெளியிட்டது. நான்கு மணி நேரத்துக்கு ஒருவராக எமது செய்தியாளர்கள் களத்;தில் கடமையாற்றினர். அவர்கள் நேரலையில் கூறுவதுபோல செய்திகளை எழுதினர்.
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்தி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்திய திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் ‘காந்தியம்’ என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது.
வடக்கு – கிழக்கில் ஒற்றையாட்சி மையத்தை வலுப்படுத்தி, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை சிங்கள – பௌத்த அரசு முன்னெடுத்து வருகிறது இராணுவ மயமாக்கலை செறிவுபடுத்தி, பயங்கரவாதம் என்ற போர்வையில் வடக்கு – கிழக்கில், மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி அச்ச மனநிலைக்கூடாக மக்களை ஆள, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றது. அதையே மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான உத்தியாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றது.
தமிழர்களின் பூர்விக தாயக நாட்டை சிங்கள பௌத்த நாடாக்குவதற்கு 1919ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் போட்ட திட்டம் இன்றும் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்கள் கண்கள் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் திட்டச் செயற்பாட்டை தடுத்து நிறுத்த திராணி அற்றவர்களாக நாங்கள் இன்றுள்ளோம். அரசியல்வாதிகளும் அவிவேகிகள் ஆகிவிட்டார்கள். கிடைத்ததைச் சுருட்டும் கிறுக்கர்கள் ஆகி வருகின்றார்கள். சுற்றி நடப்பவற்றில் அக்கறை அற்று வாழத் தலைப்பட்டு விட்டவர்களாக தமிழர்களை அடகு வைக்கின்றார்கள்
யுத்தமின்றி இரத்தமின்றி ஆயுதமற்ற போரை சிங்கள – பௌத்த அரசு வடக்கு – கிழக்கில் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அப்போரின் பரிமாணங்கள், நில அபகரிப்பாகவும், சிங்கள – பௌத்த காலணித்துவமயமாக்காலாகவும், ஈழத்தமிழ் குடிசனப் பரம்பலை மாற்றியமைத்து பிரதிநிதித்துவத்தை சிக்கலுக்குட்படுத்துவதாகவும், சிறிலங்காவின் பெரும்பான்மை ஒற்றைப் பண்பாட்டை அங்கீகரிப்பதாகவும், சிங்கள – பௌத்த ஏகாதிபத்தியத்தை தக்க வைத்துக் கொண்டு மாகவம்ச – வாக்களிக்கப்பட்ட தேசத்தை அடையும் இலக்கை கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன.
வடக்கு – கிழக்கில் தமிழர் நிலம் தொடர்ந்தும் சூறையாடப்படுகின்றது. வன இலாகா,தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன சபை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, என சிங்கள – பௌத்த அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் நில அபகரிப்புச் செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிங்கள– பௌத்த தொல்லியல் எச்சங்களை மட்டுமே கண்டெடுக்கின்ற தொல்லியல் திணைக்களம் சிறிலங்காவின் வரலாற்றியலை சிங்கள – பௌத்தத்திற்கு மட்டுமானதாக கட்டமைக்க முயலுகின்றது. கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்களில் சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டு குடிசனப் பரம்பலை மாற்றியமைப்பதில் சிங்கள – பௌத்த அரசு கங்கணம் கட்டி வருகின்றது.
பௌத்த விகாரைகளுக்காக காணிகளை ஒதுக்குவதன் மூலம் சிங்கள பௌத்தத்தை வடக்கு – கிழக்கெங்கும் விகாரைகளை அமைத்து வடக்கு – கிழக்கின் பெரும்பான்மை அடையாளத்தை சிதைத்து வருகின்றது.
ஆக்கிரமிப்புக்கு எதிராக, இனஅழிப்புக்கு எதிராக மண்ணையும் மக்களையும் பாதுகாக்கப் போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால் இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாக அரசு, தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு சவால்விடுத்து வருகின்றது.
காலாகாலமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர்பறிப்பிற்கும் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களாகிய நாம், அதனை திட்டமிட்டு அழித்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எந்த அரசிடமோ அதன் தலைமையிடமோ எப்போதும் நீதிகிடைக்காது என்ற முடிந்த முடிவினால் சர்வதேசத்திடம் நீதி கேட்டு ஐ.நா அமைப்பின் மனிதவுரிமைகள் அமைப்புகளதும், தமிழர்கள் வாழும் நாடுகளின் அரசுகளின் கதவுளை கடந்த நான்கு தசாப்பதங்களுக்கு மேலாக தட்டியே வருகின்றோம்.
இதேவேளை ரணில் மூலம் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கும் என்று சில தமிழ் தலைவர்கள் தற்போது கூறுவது ‘எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவு படுத்துகிறது. இவரது கடந்த 5 பிரதமர் பதவிக் காலங்களில் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டும் தமிழினம் தொடர்ந்து அழிவுகளையும் சந்தித்து வந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற தமிழருக்கு எதிரான இனக்கலவரங்கள், தமிழ் பொதுமக்கள் மீது ஆயுதப்படையினரை ஏவி மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இன்று வரை நீதியோ நட்டஈடோ வழங்குவதற்கு ரணில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பன்னாட்டு சதிவலை மற்றும் பொருளாதாரப் பொறியை ஈழ தமிழ் தலைமைகள் உணர்ந்து செயற்படுகின்றார்களா என்ற கேள்வி எழுகிறது
தமிழின அழிப்பிற்கு தமது சுயநலத்திற்க்காக வல்லரசுகளும், இலங்கை தீவிவை கையகப்படுத்த நினைக்கும் நாடுகளும் துணைபோயிருந்தன. இலங்கை தீவின் பிரச்சனைகளுக்கு ஆளும் பேரினவாத இனவாத அரசுகளும் ஆட்சியாளர்களுமே பொறுப்பேற்க வேண்டிய நிலையில் அதற்கு மாறாக சர்வதேச நாடுகள் ஐ.நாவின் மனிதநேய மனிதவுரிமைகள் அமைப்பும் ஐரோப்பிய நாடுகளும் விடுக்கும் ஆலோசனை களையும், அறிவுரைகளையும் புறந்தள்ளி உதாசீனம் செய்யும் வகையில் தமிழ்மக்களின் உயிர்களைப் இலங்கை அரசுடன் இணைந்து பறித்தது மட்டுமன்றி, பறிப்பதற்கு உத்தரவிட்ட இந்திய தனது நன்றி, விசுவாசத்தையும் இலங்கை அரசிற்கு தொடர்ந்து வளங்கி வருகிறது வழங்கியிருக்கின்றது.
சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இனப்படுகொலைக் குற்றவாளிகளை ஐ.நா.பாதுகாப்புப் பேரவைக்கு பாரப்படுத்தி சர்வதேச குற்றியல் நீதிமன்றினூடாக மட்டும் நீதியைப் பெற முடியும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும். சர்வதேச சமூகம் தங்களுடைய புவி சார் அரசியல் நலன்களுக்காக மட்டும் செயற்படுவதைத் தவிர்த்து அடக்கு முறைக்குட்படும் மக்களின் சார்பாக செயற்பட வேண்டும்
ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அணையாத தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் தியாகதீபம் லெப் கேணல் தீலிபனின் மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். ‘எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை’ என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்ற தியாக தீபம் திலீபன் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்’ என்ற தியாக தீபம் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை. தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக்கி 35 ஆவது ஆண்டு, பதினோராவது நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம். இவை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் இருந்து
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்…!
ஒ! மரணித்த வீரனே!
உன்ஆயுதங்களை எனக்குத் தாஉன்சீருடைகளை எனக்குத் தாஉன்பாதணிகளை எனக்குத் தா
(ஓ?. மரணித்த)