“நான் திலீபனின் ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு; அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாக பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன். ஈடு இணையற்ற ஒரு மகத்தான சாதனையை திலீபன் புரிந்தான், திலீபனின் தியாகம் இந்தியமாயையைக் கலைத்தது. தமிழீழதேசிய உணர்வைத் தட்டியெழுப்பியது. இது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து.
விடுதலைப் புலிகள் வாழ வேண்டும் என்றோ, ஆளவேண்டும் என்றோ ஆசைகொள்ளவில்லை. எமது மக்களுக்கு நிரந்தரமான, சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராக உள்ளோம்.இது திலீபனின் சிந்தனையில் இருந்து
தாயகம், தேசிய, அரசியல் இறைமைக்காக தமது உன்னதமான உயிர்களை ஈகம் செய்த எமது தேசப்புதல்வர்களை நெஞ்சினில் ஏந்தி, உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு ஒன்றுகூடுவோம்
தமிழீழ தனியரசைக் கட்டியெழுப்புவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல அகிம்சை வழியிலும் போராடுவோம் என்பதை உலகுக்கு பறைசாற்ற 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து . தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்யாழ்.நல்லூரின் வீதியில் நீராகாரம் அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத்தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற விடுதலைவாசகத்தை உரக்க கூவி, தன் வாழ்வை தமிழரின் விடுதலை வேள்வியில் ஆகுதியாக் 35 ஆவது ஆண்டு, பன்னிரண்டாம் நாள் நாள் வீரவணக்க நினைவேந்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த பெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுடன் இணைந்திருக்கின்றோம்.
ஈழத்தமிழ் தேசிய இனம் காலத்திற்கு காலம் பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ ஒடுக்குமுறைகள், இனப்படுகொலைகள் நில ஆக்கிரமிப்புக்கள் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மட்டுமின்றி எமது வரலாற்று ரீதியான மற்றும் ஆத்மார்த்த ரீதியான அபிலாசைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது. ஈழ தேசத்தில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் தனியான தேசிய இனத்தவர்கள். தாயகப் பிரதேசத்திற்கென்று தனியான வரலாறு, மொழிச்சிறப்பு, தனித்துவமான பண்பாட்டு விழுமிய வழக்காறுகள் என்பவற்றுடன் பொருளாதார வளங்களையும் இயல்பாகக் கொண்டிருப்பவர்கள். முன்னாள் ரஷ்யத் தலைவர் ஜோசப் ஸ்ராலின் தனியான தேசிய இனமொன்றுக்கு வகுத்த வரைவிலக்கணப்படி தேவையான பரிமாணங்கள் முழுமையினையும் தன்னகத்தே கொண்ட இனமாக தனித்துவமாக வாழ்ந்திருக்கின்றோம்.
அந்நிய ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறை அதிகரித்து இராணுவ ரீதியாக நசுக்கப்படும் போது அவற்றிக்கு எதிராக ஈழத்தமிழனத்தின் விடுதலைக்காக இந்த விதிக்குட்பட்டு ஆயுதப் போராட்டத்தை பல அமைப்புக்கள் ஆரம்பித்தாலும். பொது இலட்சியத்தை உறுதியாகத் தீர்க்கமான முறையில் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த சக்தியாக மக்கள் விரும்பிடும் மக்களின் பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளே விளங்கினர்கள் அல்லது இயங்கினார்கள் என்றால் மிகையாகாது. எமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு வழியாக இருந்த ஆயுதப்போரை விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் படிப்படியாக தீவிரப்படுத்தி வந்தனர். தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்களால் புதிது புதிதாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் எதிர்கொண்டு புலிகள் என்றால் மக்கள்… மக்கள் என்றால் புலிகள் என அணிதிரண்டு உலகத் தமிழ் மக்களுக்கு கிடைத்த மாபெரும் தலைவன் தமிழீழத் தேயத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
விடுதலைப்புலிகளின் முதலாம் கட்ட ஈழப்போர் காலத்தில் ஒரு திருப்பு முனையாக 1987 யூலை மாதம் அமைந்தது. வடமராட்சியில் ‘ஒப்ரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டது. அப்போது சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த லலித் அத்துலத்முதலி ‘நாங்கள் தீவிரவாதிகளைப் பேச்சுக்கு அழைத்த காலம் போய்விட்டது. இப்போது போருக்கு வாருங்கள் என அவர்களை அறைகூவி அழைக்கிறோம்’ என தமிழ் மக்களை நோக்கிச் சவால் விட்டார். இந்தச் சவாலை ‘கரும்புலி கப்டன் மில்லர்’ ஏற்றுக்கொண்டார். தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் வகுத்த திட்டத்தை நெறிப்படுத்தி தன்னை அழித்துப் படைமுகாம்களை அழிக்கும் முதல் நடவடிக்கையை நிகழ்த்தினார். இதன் தாக்கம் சிறிலங்கா இராணுவத்திற்கு மரண அடியாக விழுந்த போது ஆட்சிப்பீடம் கதிகலங்கிப் போனது. அதன் பின்பு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனது இராஜதந்திர முயற்சியின் ஒரு காய் நகர்த்தலாக இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இலங்கை – இந்திய ஒப்பந்தமான இது தமிழ் மக்களின் பாதுகாப்பு, தேசியம், இறைமை என்பவற்றை உறுதிப்படுத்தும் என அப்போதைய ராஜீவ் காந்தி அரசினால் உத்தரவாதம் செய்யப்பட்டது.
இந்திய இராணுவம் உலகின், தேற்காசியவின் மிகப் பெரிய இராணுவம். அமைதி காக்கும் நோக்கம் என்ற போர்வையில் ஈழமண்ணில் கால் பதித்திட 1987 ஜூலையில் பெரிய விமானங்கள் மூலம் இந்திய அமைதிகாக்கும் படையைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட 4வது, 36வது, 54வது, 57வது படைப்பிரிவு ராணுவத்தினர் இலங்கைக்கு வந்தார்கள். இலங்கையின் தமிழர் பகுதிகளில் ஊர்வலம் வந்த இந்திய ராணுவத்தை பூமாலையிட்டு வரவேற்றார்கள் தமிழர்கள். 1987 ஆகஸ்ட் 4-ந்தேதி தம் மக்களிடம் இயக்கத்தின் நிலையை விளக்க சுதுமலையில் சொற்பொழிவாற்றினார் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். இந்தியா நமக்கு சாதகமாயிருக்கும் என நம்புகிறோம் என பேசிய மறுநாள் 5-ந்தேதி விடுதலைப்புலிகளின் முதன்மை தளபதி யோகி தலைமையிலான போராளிகள், அமைதிப்படை ஜெனரல் குபேந்தர்சிங்கிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர்.
1985 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் பல முகாம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையான போராளிகளுக்கு மத்தியில் ஆக்கிரமிப்பின் குறியீடுகளாய் இருந்தன. மிகக் குறைந்தளவிலான ஆயுதங்களையும் கொண்டு தளபதி கேணல் கிட்டு முகாம்களைச் சூழ வியூகங்களை அமைத்து குடா நாட்டைப் பூரண கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான போரிடும் திறன் நிலைநாட்டப்பட்ட இக்காலகட்டத்தில் யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக லெப். கேணல் திலீபன் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தினதும் பாதுகாப்பை தாம் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறிய இந்திய சிடம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த போதும் சிறிலங்கா அரசு தாம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. இந்திய இராணுவமும் அதனைச் செயற்படுத்தவில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டு தமிழர்களுக்குரியன வழங்கப்படாத போது புலிகள் தமது போரை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மீண்டும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அஹிம்சை வழியிலான போரை முன்னெடுக்கத் தலைப்பட்டனர். காந்திய வழியிலான விடுதலைப்புலிகளின் முதலாவது சாத்வீகப்போராக விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட அரசியல்த் துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் உணவு தவிர்ப்புப் போரை முன்னெடுத்தார்.
யாழ்ப்பாணம் ஊரெழு எனும் கிராமத்தில் தந்தையான நாகலிங்கம் இராசையா ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர் ஆவார். இராசையா தம்பதியினருக்கு நான்காவது கடைக்குட்டி மகனாக 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி பார்த்தீபன் பிறந்தார். கடைசி மகனான பார்த்திபன் பிறந்து 9 ஆவது மாதம் தனது தாயாரை இழந்தான். பார்த்திபனுக்கு 3 மூத்த சகோதரர்கள் உள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்த திலீபன் 1982 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் திறமைச் சித்தியெய்தி யாழ். பல்கலைக் கழக மருத்துவபீடத்துக்குத் தெரிவானான். தனது பள்ளிப் பருவத்தில் சிறந்த சதுரங்க வீரனாக விளங்கிய திலீபன் மாவட்டத்தில் சிறந்த சதுரங்க வீரனாக 4 தடவைகள் தெரிவு செய்யப்பட்டான். அத்தோடு விளையாட்டுக்குழுவின் தலைவனாகவும் விளங்கினான்.
1983 ஆம் ஆண்டு யூலையில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டு இனக்கலவரத்தால் மிகவும் மனமுடைந்த திலீபன் தமிழ் மக்களின் விடிவுக்கு தமிழீழம் தவிர்ந்த வேறெந்த மாற்றீடும் கிடையாது என்ற முடிவுக்கு வந்தான். யாழ். பல்கலைக்கழத்தில் மருத்துவபீட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைத் தாகம்கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தலைவராக ஏற்று தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திலீபன் என்ற பெயரில் தன்னனையும் இணைத்துக் கொண்டார். யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டவர். அவர் கருத்தியல் ரீதியாக ஆழமான புரிதல் கொண்ட ஒரு போராளியாக இருந்தார்.
07.09.1987 அன்று கோட்டை இராணுவ முகாம் முன்வழிமறிப்புச் செய்ய மக்கள் முன்னிலையில் ஆற்றிய உரை. பொதுக்கூட்டத்தில் திலீபன் அவர்கள் ஆற்றிய உரையில் எழுச்சியுடன் போராடினால் எவரும் இப்பபோராட்டத்துக்கு மதிப்பளித்தேயாகவேண்டும்.. மக்கள் அனைவரும் முழுமையாகப் போராடத் தயாரானால் நிச்சயமாகத் தமிழீழத்தை அமைக்கமுடியும். நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற அனைவரும் எமது உரிமையை மீட்பதற்கான பெரும் புரட்சிக்குத் தயாராகவேண்டும். என உரைத்தான் திலீபன்.
தமிழீழ தேசத்தின் உருவாக்கத்திற்கு உறுதுணையான உட்கட்டுமான திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ மாணவர் அமைப்ப, சுதந்திரப்பறவைகள் ரடோ (RADO) போன்ற அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் ஊடாக பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தார். சுதந்திரப்பறவைகள் மூலம் பெருமளவு மகளிர் விடுதலைப் போராட்டத்தினுள் உள்வாங்க்பட்டனர். மாணவர்கள் தமிழீழ மாணவர் அமைப்பின் மூலம் விடுதலைப் போராட்டத்துக்கு தமது பங்களிப்பை வழங்கத் தலைப்பட்டனர்.
அன்று தனியார் வானொலிகள், தொலைக்காட்சிகள் இல்லை. கைத்தொலைபேசிகள் இல்லை. சமூக ஊடகங்கள் இல்லை. இணையத் தளங்கள் இல்லை. முகநூல்கள் இல்லை. இவை போன்ற எவையுமே இல்லை. இலங்கை அரசினதும், இந்திய நாட்டினதும் அனைத்து ஊடகங்களும் விடுதலைப் புலிகளையும் மக்களையும் பிரித்தாளும் நிலையினை முன்னெடுத்த வேளை போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதில் ஊடகங்கள் என்றுமே பங்களிப்புச் செய்து வருகின்றன. திலீபன் இதை விளங்கிக் கொண்டு ஊடக உருவாக்கங்களை தமிழீழ மண்ணிற்கென்றே மேற்கொண்டார். அச்சு ஊடகங்கள் மட்டுமன்றி இலத்திரனியல் ஊடகங்களும் நிறுவப்பட்டன.
திலீபனின் அரசியல் பணி பல தளங்களிலும் விரிவடைந்திருந்தது. 1987-07-05 அன்று முதல் கரும்புலித் தாக்குதலை நெல்லியடியில் கரும்புலி கப்டன் மில்லர் நிகழ்த்திய போது மில்லரின் கடைசிப் பொழுது வரை திலீபன் கூடவிருந்தார். மில்லரின் தாக்குதல் திலீபனுக்கு புதியதொரு திடசங்கற்பம் கொள்ளக் காரணமானது. மில்லரைப் போலவே தானும் போராட்ட வரலாற்றில் புது சகாப்தம் ஒன்றைப் படைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டார். விரைவிலேயே அப்படி ஒரு காலம் இந்திய இராணுவத் தலையீட்டின் வடிவில் கிடைத்தது. தமிழீழ மண்ணில் புதியதொரு போருக்கான வடிவை அவர் வடிவமிட்டார்;. தேசியத் தலைவருடன் வாதாடி அதற்கான அனுமதியையும் பெற்றார்.
ஆயுதப் போராட்டம் உச்சநிலையை அடைந்திருந்த நிலையில் சமாதானப் படை என்ற போர்வையில் இந்திய இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் நுழைந்தது. பின்னர் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அத்துமீறல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.
இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்களுக்காக நீரும் அருந்தா உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும்வரை நீராகாரமுமற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் செய்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன்- தமிழீழமக்களிற்கும் உலகிற்கும் இந்திய சிறீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டின மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
1 பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை தண்ணீரும் அருந்தப்போவதில்லை’ இந்திய அரசிடம் நீதி கேட்டு சாகும்வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தை அறிவித்த அவர், அந்தக் கோரிக்கைகளை இந்திய கோரிக்கை எதுவும் நிறைவேறாமல் பன்னிரண்டாம் நாள் நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணிக்கு ஈழ மண் பெற்றெடுத்த ஒப்பற்ற போராளி திலீபன் அவர்கள், தன்னுடைய 24ஆவது வயதில் லெப். கேணல் திலீபனாக வீரச்சவடைந்தார். அன்று முதல் இன்று வரை தமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது
இந்தியாமீதும், இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதும் எம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,மரியாதையும் இமயம்போல் உயர்ந்து நின்றது. ஆனால் ஒன்றரைமாத காலமாவதற்குள் அந்த நம்பிக்கையும், மரியாதையும் அதளபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை உடைந்து நொருங்கத் தொடங்கிவிட்டது.
1987 செப்டம்பர் பதினைந்தாம் நாளன்று திலீபன் அவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை தொடங்கினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆதவது 1987-09-13 அன்று நிலைமையை விளக்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் டிக்ஷித்திற்கு கடிதம் எழுதினார்.அதனைத் டிக்ஷிற் அலட்சியம் செய்தார்.இந்திய அமைதிப்படைத் தளபதி பிரிகேடியர் பெர்னாண்டோ உணவு தவிர்ப்பு போராட்ட பந்தலுக்கு வந்து விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் கூறினார் ‘திலீபன் அவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் பினால் ஏற்படும் எந்த விளைவுகளையும் சந்திக்க பாரதம் தயாராக இருப்பதாக ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்’ என்றார் அதேவேளை இத்தகைய உணவு தவிர்ப்பு போராட்டங்களால் இந்தியாவை நிர்பபந்திக்கமுடியாது என்று இந்திய உதவித் தூதுவர் சென் எச்சரித்தார்.
திலீபனின் உண்ணாநிலைப் போராட்டமென்பது தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வு. இப்பிராந்தியத்தின் நாடுகளில் தங்குதடையின்றி தன்னால் இராணுவதலையீடு செய்துவிட முடியுமெனும் பேராசை இந்திய வெளியுறவு, பாதுகாப்பு வட்டங்களால் உருவாக்கப்பட்டதை நம்பிய இராஜீவ்காந்தி அரசின் எதேச்சதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்த பெரும் அரசியல் நிகழ்வே திலீபனின் போராட்டம். இந்திய அரசிற்கு எதிராக பெரும் மக்கள் திரளை இந்தியாவிற்கு வெளியே திரட்டிவிட முடியுமென்பதை இந்தியா எதிர்பார்க்கவில்லை. மேலும் தெற்காசியாவில் விரிந்து கிடந்த ஒரு இனத்தை அரசியலாக பிணைத்த முதல் நிகழ்வு எனவும் இதைச் சொல்ல முடியும்.
முதல் நாள்
ஈழ மக்கள் கூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உணவு தவிர்ப்புப் போராட்ட மேடைக்குச் சென்றார்.மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விட சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார் . உணவு தவிர்ப்புப் போராட்டம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சேகுவேரா , பிடல் காஸ்ட்ரோ,யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப் பட்டது. தொடர்ந்து கவிதைகள் , உணவு தவிர்ப்புப் போராட்ட விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வந்து திலீபனை சந்தித்தார் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.
இரண்டாம் நாள்
அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்ட திலீபன் சிறுநீர் மட்டும் கழித்து விட்டு முகம் கழுவி தலைவாரிக் கொண்டார். அனைத்து செய்தித் தாள்களையும் படித்து முடித்தார். இளைஞர்கள் பலர் கவிதை வாசித்துக் கொண்டிருந்தார்கள். தான் பேச விரும்புவதாக திலீபன் கூற அவரது நண்பர்கள். சக்தி விரையமாகிவிடும் என்று நண்பர்கள் மறுத்தார்கள் . இரண்டே நிமிடம் என்று சொல்லிவிட்டு இரண்டு நிமிட உரையாற்றினார். அன்று இரவும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வந்து திலீபனைப் பார்த்தார். பனிரெண்டு மணிக்கு உறங்கச் சென்றார் திலீபன்.
மூன்றாம் நாள்
காலையில் எழும் போதே திலீபனின் உதடுகள் தண்ணீர் அருந்தாதால் வெடித்து இருந்தது. கண்கள் சற்று உள்ளே போயிருந்தன.மிகவும் சோர்வாக இருந்தார். சிறுநீர் கழிக்கச் சென்ற திலீபன் இருபது நிமிடங்கள் முயன்றும் சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.காலை ஒன்பது மணி முதல் இளைஞர்கள் வெள்ளை உடையில் வந்து குவிய ஆரம்பித்தார்கள். கண்ணீர் கவிதைகளும் வீர உரைகளும் முழங்கிக் கொண்டிருந்தன.அன்று பெருமழை பெய்தது.அன்று இரவு அவரது உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.அனால் திலீபன் மறுத்துவிட்டார் . மிகவும் கஷ்டப்பட்டு திலீபன் உறங்கும் போது நல்லிரவு ஒரு மணி ஆகிவிட்டது.
நான்காம் நாள்
அதிகாலை ஐந்து மணிக்கே திலீபன் எழுந்துவிட்டார் .சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார் . ஆனால் அவரால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்தார்கள்.ஆனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை.பிறகு அவரை மெதுவாக மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்கள்.திலீபன் வயிற்றை பிடித்துக்கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார் . சிறிது சிறுநீர் வெளியேறியது. உதவி இந்தியத் தூதுவர் கென் பேச்சுவார்த்தைக்காக வந்தார் .அவரை ஆண்டன் பாலசிங்கமும் மாத்தையாவும் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார வந்து திலீபனைச் சந்தித்தார்.சோர்வில் விரைவாகவே திலீபன் உறங்கிவிட்டார்.
ஐந்தாம் நாள்
திலீபனால் இன்று எழவே முடியவில்லை .உடல் பயங்கரமாக வேர்த்துக் கொட்டியது .”சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். மக்கள் அவர் மீது கோபமாக இருந்தனர். திலீபனைச் சந்தித்துவிட்டு மேலிடத்தில் பேசுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஆறாவது நாள்
திலீபனால் இன்று பேசமுடியவில்லை. வழக்கம் போல் மக்களும் பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள்.விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் சிலர் ,கடற்படை தளபதி அபயசுந்தர் ஆகியோரிடம் இந்திய அரசு பேசியது ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஏழாவது நாள்
இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள் . தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார் . அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை.அவர்கள் சத்தமாக பேசவேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது.“எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்.” என்றார்.
எட்டாவது நாள்
அதிக மக்கள் வந்ததால் அவர்களின் நிழலுக்காக கொட்டகைகள் போட ஆரம்பித்தார்கள். அந்த நாட்களில் தமிழ் மக்களிடம் அதிக புகழ் பெற்றமட்டக்களப்பைச் சேர்ந்த இளம் போராளி மதன் திலீபனைப் போல் இரண்டு நாட்களில் தானும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள்.தமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை தொடங்கப் போவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் பரவியதை விட அதி வேகமாக அஹிம்சைப் போராட்டம் தீயெனப் பரவியது. திலீபன் எல்லோரின் ஆதர்ச சக்தியாக இருந்தார். அன்று திலீபனால் பேச முடியவில்லை,நடக்க முடியவில்லை,எழ முடியவில்லை ஆனால் வெகு சுலபத்தில் பல்லாயிரம் பேரை அஹிம்சை வழிக்குத் திருப்பி இருந்தார் .அனைத்து யாழ் அரசு அலுவலகங்களையும் மக்கள் முற்றுகையிட்டு மறியல் செய்தனர்.அனைத்துமே அமைதிவழிப் போராட்டம். மேடையில் பேசமுடியாத மக்கள் எல்லாம் எழுத்தின் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். இதற்காக ஒரு பத்து பேர் கை வலிக்க வலிக்க எழுதிக் கொண்டிருந்தார்கள்.எழுதிய கருத்துக்கள் எல்லாம் அப்போதைய பாரத பிரதமர் ராஜீவ் காந்திக்கு அனுப்பப்பட்டது.
ஒன்பதாவது நாள்
திலீபனின் உடலில் மெல்லிய உதறல் வர ஆரம்பித்திருந்தது . உதடுகள் பாளம் பாளமாக வெடித்து இருந்தன.காலையிலேயே 50000 மக்கள் வந்திருந்தார்கள்.ஆனால் திலீபன் கண்ணைத் திறக்கவில்லை.இந்தியப் படை தென் பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் இலங்கை வந்து பிரபாகரனைச் சந்தித்தார் .ஒரு மணி நேர பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. பகல் ஒரு மணிக்கு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.இதில் இந்தியத் தூதுவர் ஜெ.என் .திக்சித், திபேந்தர் சிங் ,இந்திய தூதரகப் பாதுகாப்பு அதிகாரி குப்தா ஆகியோர் இந்தியாவின் சார்பிலும் விடுதலை புலிகளின் சார்பில் தமிழீழத் தேசியத் தலைவர் மற்றும் ,தளபதி மாத்தையா, அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம், வழக்கறிஞர் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பத்தாவது நாள்
திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது. மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 72 . திலீபனின் நாடித் துடிப்பு நிமிடத்திற்கு 52.சாதாரண ரத்த அழுத்த அளவு (120/80) இருக்க வேண்டும். ஆனால் திலீபனின் நாடித் துடிப்பு (80/50). தனது சக்தி முழுவதையும் திரட்டி திலீபன் இரண்டு வரி பேசினார் “நான் இறப்பது நிச்சயம். அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து நமது இலட்சியத்திற்காக உழைப்பேன் ” . மக்களின் போராட்டம் அதிகரித்தது பல்வேறு ஊர்களில் மக்கள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் அமர்ந்தார்கள். 6000 மேற்பட்ட மாணவ மாணவிகள் அழுத கண்களும் சிந்திட ஊர்வலமாக வந்து நல்லுர் மைதானத்தை நிறைத்தனர்.
பதினோராவது நாள்
உயிருடன் இருக்கிறாரா இறந்து விட்டாரா என்றே தெரியாத அளவுக்கு இருந்தார் திலீபன். அனிச்சையாக அவரது உடல் அசைவதன் மூலமே அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று தெரிந்தது.அவர் செமி கோமா நிலையில் இருந்தார். பெரிய கட்டில் ஒன்றை கொண்டுவந்து அதில் அவரை மாற்றினார்கள்.அப்போது தான் அவர் படுக்கையிலேயே சிறுநீர் கழித்திருந்ததை பார்த்தார்கள். திலீபனுக்கு வேறு உடை மாற்றினார்கள். திலீபனுக்கு மிகவும் பிடித்த “ஓ மரணித்த வீரனே! – உன் ஆயுதங்களை எனக்குத் தா. உன் சீருடைகளை எனக்குத் தா ” என்கிற பாடலைப் பாடினார்கள். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே கோமாவில் விழுந்தார். அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது.தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன். சிறுவர், இளையோர், பெண்கள், ஆண்கள், மூத்தோர் என எண்ணுக்கணக்குக்கு முடியாத பெருந்தொகையினரால் நல்லூரின் நான்கு வீதிகளும் நிரம்பி வழிந்தது.
பன்னிரண்டாம் நாள்
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்தி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடாத்திய திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு நிலைகுலைந்து நினைவிழந்துபோய் காலை 10.58 க்கு வீரச்சாவடைந்தார். அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் ‘காந்தியம்’ என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது
பன்னிரு நாட்கள் தன்னை உருக்கி எரிந்தணைந்த எங்கள் திலீபனை அண்ணாவை இழந்து 35ஆண்டுகள் கடந்துபோய்விட்டது. நல்லூர் வீதியில் நாவரண்டு நாவரண்டு எங்களுக்காய் தன்னை இழந்துகொண்டிருந்த திலீபன் அண்ணா ஒரு துளி நீரும் அருந்தாமல் தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னையே வருத்திக் கொண்டிருந்த நாட்கள் அவை. தமிழ்மக்களை நோக்கி ஏவிவிடப்பட்ட அரச அடக்குமுறையிலிருந்;து பாதுகாப்பதற்காக இந்திய அமைதிகாப்பு படையினர் வந்திருக்கின்றார்கள். இனிமேல் எந்த வித பிரச்சனைகளும் இல்லை. சுதந்திரமான விடுதலை கிடைக்கப்போகின்றது என எண்ணிய காலத்தில் திலீபனின் தியாகப்பயணமே மக்கள் மனதில் தமது எதிர்காலம் பற்றிய உண்மையான நிலையை வெளிச்சம்போட்டு காட்டிய கணங்கள் அவை.
இந்த ஆயுதப் போராட்ட வழியில் முக்கிய இடம் வகித்தவர்களில் ஒருவரான திலீபன் ஆயுதப் போராட்டத்தை மட்டுமல்ல, அஹிம்சை வழிப் போராட்டத்தையும் நடத்த முடியும் என உலகுக்கு எடுத்துக் காட்டியவர். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அஹிம்சை வழிப் போராட்ட வழிகள் தோல்வியடைந்த காரணத்தால் ஆயுத வழிப்போராட்டம் மிக வீச்சுக் கொண்டு ஆரம்பமானது. திலீபன் போன்ற போராளிகள் தன்னலமற்ற அரசியலால் ஈழப் போராட்டத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
வீதி வீதியாக தீபம் ஏந்தியும் மலர்கள் தூவியும் மக்கள் தங்கள் இறுதி மரியாதையை கண்ணீருடன் செலுத்தினார்கள். 28-9-1987 மதியம் அளவில் சுதுமலை அம்மன் மைதானத்ததில் மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் பிரசாத் தலைமையில் இறுதி வணக்க உரைகள் நடந்து தீலிபன் விரும்பிய படி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அவரின் புகழுடல் கையளிக்கப்பட்டது.
உண்மையில் அவர்கள் அனைவரும் போராளிகளே. அவர்கள் அனைவரும் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்களே. அவர்கள் அனைவரும் தேசியத்தலைவரின் எண்ணங்களை இறுதிவரை உறுதியாக நிறைவேற்றியவர்கள். எந்த நேரம் என்றாலும் எந்த இடம் என்றாலும் மக்களுக்காகப் பணியாற்றும் தன்மை கொண்டிருந்தவர்கள். அரசியல் தெளிவும் மக்கள் மீதான நேசமும் அவர்களை உயர்ந்த சிந்தனையோடு எமது தமிழீழ தேசியத்தலைவர் எம்மை உருவாக்கிய போது எதை எதிர்பார்த்து உருவாக்கினாரோ அதை இறுதிக் கணம்வரை நான் செய்த வலியோடு தான் இன்றும் வாழ்கிறேன்.
இந்தியாவோ சிங்கள அரசுக்கும் கை கொடுத்தது, தமிழர் போராளி குழுக்களிடமும் கைகுலுக்கியது. நேரத்துக்கு தகுந்தாற்போல் ஆதரவு – எதிர்ப்பு நிலையை எடுத்து பிரச்சனையை தீர்க்காமல் புகைய வைத்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தான் இலங்கை பிரதமராக பிரேமதாசா இருந்த காலத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி முடிவுகள் எடுத்தார். அந்த முடிவுகளின் படி, இரு தரப்புக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த அமைதி காக்கும் படை இந்தியா சார்பில் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அமைதிகாக்கும் படையாக இலங்கைக்கு வந்த இந்திய இராணுவம் அமைதியானதா என்று கேட்டால், இந்தியாவின் அமைதிப்படை ஈழத்தில் எல்.டி.டி.ஈ கொரில்லாக்களை அடையாளம் காணமுடியாமல் கடுமையாக நடத்திய இனப்படுகொலை தாக்குதலில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் பொதுமக்கள் என பலரும் கொல்லப்பட்டனர். பாலியல் வல்லுறவு, சித்ரவதை, கொலை உட்பட பலவித மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை இந்திய அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டார்கள்.
எல்லா விடுதலையும், உரிமையும் கொண்ட சமத்துவத் தமிழீழ மண்ணில் வாழ வேண்டும் என்ற திலீபன் அவர்களின் கனவினை சுமந்த மக்கள் அன்று முதல் திலீபன் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் வீதியில் திலீபனின் நினைவுத்தூபி அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் சனங்களால் அவரது நினைவுநாளைக் பல அடக்குமுறை சவால்களுக்கு மத்தியிலும் நினைவேந்தி வருகின்றார்கள்.
அமைதிப் படையாகக் காலடி எடுத்து வைத்து ஆக்கிரமிப்புப் படையாக மாறி ஈழத் தமிழர்களை வேட்டையாடி, சூறையாடி அழித்தொழித்த இந்திய இராணுவத்துக்கு எதிராக அகிம்சை வழியில் – 12 நாள்கள் ஒரு சொட்டு நீரில் உறைந்த நிராகரிக்கப்பட்ட ஆகுதி வேள்வித் தீயென மூழ்கிறது போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவுநாளை ஒவ்வொரு ஆண்டும் திலீபன் அண்ணா உணவு தவிர்ப்புப் போராட்டம் தொடங்கிய நாள் முதல் அவர் வீரச்சாவடைவதற்கு முதல்நாள்வரை (செப் 15முதல் 25வரை) தேசியத்தலைவர் திலீபன் அண்ணையின் நினைவாக காலை உணவருந்துவதில்லை. திலீபன் அண்ணை வீரச்சாவடைந்த செப் 26 அன்று முழுநாளும் உண்ணா நோண்பு இருப்பார்.
இப்படியொரு தலைவருக்காக அவர்கொண்ட உன்னதமான இலட்சியத்திற்காக உயிரை கொடுத்தல் என்பது அதுவொரு வரம், அதுவொரு அலாதியான சுகம்.பிறவிபயனது இந்த சுகத்தை எல்லோராலும் அனுபவிக்ககேலாது. தன்மானத்தையும், வீரத்தையும், இனப் பெருமையையும், தன்னின மக்களின் விடிவையும் நேசிப்பவர்களால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும்.
நாட்டுக்காக இலட்சியத்திற்காக தமிழ் மக்களின் விடிவிற்க்காக வீரச்சாவடைய வேண்டும் இறந்தாலும், மீண்டும் தமிழனாக பிறக்கவேண்டும், மீண்டும் தேசிய தலைவரின் பிள்ளையாக வாழவேண்டும்.வாழ்வும் சாவும் அந்த மாமனிதனின் வழிநடாத்தலில் அமையவேண்டும்
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!’ என்று முழக்கமிட்டு தாயக மண்ணை முத்தமிட்டு வீரகாவியம் படைத்த ஈழத்தமிழ் மறவன் திலீபனின் நினைவேந்தல் தடைகளைத் தகர்த்தெறிந்து உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நிலத்திலும் புலத்திலும்; தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. எதனாலும் அழிக்க முடியாத திலீபனின் நினைவுகளையும் சிங்களப் பேரினவாத அரசும் அதன் படைகளும் தியாக தீபத்தின் நினைவுத் தூபியையும், அவர் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்ட நினைவுக் கல்லையும் சிதைத்து அழித்தது. ஆனால் அவரது கனவையும் ஒருபோதும் அழித்துவிட முடியவில்லை.
மக்கள் புரட்சி என்றால் என்ன என்பதற்கு நீங்கள் விட்டுச் சென்ற வாசங்கள் மக்களின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது, அந்தப் புரட்சி எப்படி உருவாகப் போகின்றது. அதற்குரிய காலம் தான் எங்களுக்கு எப்பொழுது பிறக்கப் போகின்றது என்பது எல்லோரின் மனங்களிலும் எழுகின்ற ஒரு கேள்வியாகவும் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்று நாம் ஒவ்வொருவரும் சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இல்லை என்பதையும் இன்றைய யதார்த்தம் உணர்த்தி நிற்கின்றது. குறுகிய கால அரசியல் இலக்குகளுக்கு அப்பால் தமிழர் அபிலாஷைகளை மனதிலிருத்தி அனைத்து அரசியல் தரப்புக்களும் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டிய அவசியத்தை நாம் வலியுறுத்தி மக்கள் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் தேவையினை உணர்ந்துள்ளார்கள்.
மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும் ஆயினும் கடந்த காலங்களை நினைத்து ஏங்குவதைவிட எதிர்காலத்தில் எதை செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும். இன்றைய சூழ்நிலையில் தமிழ் தலைமைகள் ஒருங்கிணைந்து திலீபனின் முக்கிய கோரிக்கைகளில் முதல் கோரிக்கைகளையும் நினைவில் கொண்டு வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட வேண்டி உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் முன்னேடுக்கும் நில ஆக்கிரமிப்புக்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்கள குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளை விவகாரம், இலங்கை இராணுவப்படை வலுவில் 75% இற்கு மேலான படையினரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் எங்கும் நிலைப்படுத்தி உள்ளனர். அதனால் இராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் முழுநேரக் கண்காணிப்பில் தமிழர் பிரதேசங்களை வைத்திருக்கின்றனர். இதன் முடிவு இப்போதும் வலிந்து காணாமல் ஆக்கப்படல், மக்களின் திடீர் மரணங்கள், கைதுகள், அரசியல் பழிவாங்கல்கள் என்றும் ஊடக சுதந்திரத்தை பறித்து ஊடகவியலாளர்களை கைது செய்தல் என தொடர்கதையாகவே தொடர்கின்றது. எம் மக்களை எமது மண்ணிலிருந்து களைந்தெறிவதனை நோக்கமாக கொண்டு வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பினை அழிப்பிபையும் வாழும் தமிழ் மக்களின் தேசிய வாழ்வின் அத்திவாரங்களை அழிக்கும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இவை எல்லாம் எமது ஆயுதப் போராட்டவரலாற்றில் நாம் ஈட்டிய வீரச்சாதனைகள். ஆனால் எனது அன்பான தோழன் திலீபனின் தியாகமோ வித்தியாசமானது. வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. சாத்வீகப் போராட்டத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஒரு மகத்தான தியாகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி. பாரத நாட்டைத் தலைகுனிய வைத்த நிகழ்ச்சி. உலகத்தின் மனச்சாட்சியைச் சீண்டிவிட்ட நிகழ்ச்சி. தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக, ஒருவன் எத்தகைய உயர்ந்த – உன்னதமான தியாகத்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான் எனத் தொடங்கும் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் மறைவை யொட்டி அன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ மக்களுக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரி சனமான உரை அன்றும் இன்றும் என்றும் எமது விடுதலைக்கு நாம் தான் ஒன்றிணைந்து போராட வேண்டு மென்பதை வலியுறுத்தி நிற்கிறது.)
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர்
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் அண்ணா என்னும் பெருவிருட்சம் தமிழீழ தேசம் தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 16ம் ஆண்டு வீரவணக்க நாளில் மக்களுடன் இணைந்து நினைவு நிகழ்வில் பங்குபற்றிவிட்டு ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26.09.2001 அன்று காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் /முகிலன் அண்ணா.
கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.
ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் பிரிவு ஆரம்பிக்கப்படமுன்னர் கடல்புறா என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகள் இடம் பெற்றகாலத்தில் கடல்புறாவின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அவர் ஈடுபட்டிருந்தார். பின்னர் இந்திய இராணுவத்துடன் போர் ஏற்பட்டபோது தலைவரோடு இருந்து காட்டுப்போர் முறையின் நுணுக்கங்களை தானும் கற்று போராளிககளுக்கும் கற்பித்து தலைவர் அவர்களுடனே வாழ்ந்துவந்தவர்.
அமைதியான மென்மையாக சிரிக்கும் சங்கர் அண்ணாவையே எல்லோருக்கும் தெரியும். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையினால் வழங்கப்படும் எந்தப்பணியையும் மிகவும் கவனம் எடுத்து சிறப்பாக செய்து முடிக்கும் அவரது ஆளுமையையும் அனைத்துப் போராளிகளுடனும் உடனேயே நல்ல உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய தோழமையையும் கண்டுகொள்ளக்கூடிய சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்திருக்காது.
ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை மூலம் தமிழீழத் தாயகத்தின் பெரும்பகுதிகள் விடுவிக்கப்பட்டபோது பெற்ற அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லவேண்டும் என தலைவர் திட்டமிட்டிருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு நவீன போர்ப்பயிற்சிகள் அத்தியாவசியம் எனக்கருதி சிறப்பு இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவென வெளிநாட்டிலிருந்து பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை தமிழில் மொழிமாற்றி விளங்கப்படுத்துவார் சங்கர் அண்ணா. இயக்கச் செயற்பாடுகளின் இரகசியம் கருதியும் நடைபெற்றுக்கொண்டிருந்த பயிற்சிமுகாமின் முக்கியத்துவம் கருதியுமே தலைவர் அவர்களால் சங்கர் அண்ணாவுக்கு மேலதிகமாக அப்பணி வழங்கப்பட்டிருந்தது.
வான்படையின் தளபதியாக வெளியே உலாவந்த சங்கர் அண்ணா பயிற்சிமுகாமில் எங்களுடனே இருந்தார். ‘இயக்கத்தால் சொல்லப்படும் எந்த வேலையென்றாலும் சிறப்பாகச் செய்துமுடிக்கவேண்டும்’ என்பதேஅவர் எப்போதும் சொல்லும் வார்த்தைகள். எதையுமே தத்துவங்களூடாக விளங்கப்படுத்துவதைக் காட்டிலும் நேரிலே அறிந்துகொள்ளும்போது உள்ளத்தில் ஆழமாக பதிந்துகொள்ளும். அதனையே சங்கர் அண்ணாவும் செய்து காட்டினார்.
முன்னர் இந்திய இராணுவத்தினுடனான போரின்போது தாங்கள் எவ்வாறு மணலாற்று காடுகளுக்குள் செயற்பட்டோம் என்று கூறுவார். அந்தக்காலத்தில் திசைகாட்டியின் உதவியுடன் மட்டுமே காடுகளுக்குள் இடங்களைச் சென்றடையவேண்டும். கொஞ்சம் இடம்மாறி போய்விட்டாலும் இந்திய இராணுவத்தினருடன் முட்டுப்பட வேண்டிவரும். அவ்வாறு இந்திய இராணுவத்தினரோடு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த பெண்போராளியை தாங்கள் எவ்வாறு மீட்டுவந்தோம் எனவும் சொல்லுவார். அக்குறிப்பிட்ட மீட்பு நடவடிக்கைக்கு சங்கர் அண்ணாவின் தனித்திறமைகளே கைகொடுத்திருந்தது என்றே சொல்லவேண்டும். சங்கர் அண்ணாவின் இவ்விசேட திறமைகளைப்பற்றி தலைவர் அவர்கள் வெளிப்படையாக பாராட்டியதுடன் மட்டுமன்றி அதனை ஆவணப்படுத்தியும் இருக்கிறார்.
விடுதலைப்போராட்ட பயணத்தில் போராட்ட அனுபவங்கள் என்பவை முக்கியமானவை. ஒவ்வொரு களத்திலும் ஏற்படும் தோல்வியும் வெற்றியும் அடுத்த களத்திற்கான செயற்பாடுகளைச் செம்மைப்படுத்தும். போராட்டகளத்தில் ஏற்படும் அனுபவங்கள் புதிய போர்வீரர்களுக்குச் சொல்லப்படவேண்டும். தனது போரியல் அனுபவங்கள் மற்றவர்களுக்குப் பாடமாக அமையவேண்டும் என்பதில் சங்கர் அண்ணா எப்போதும் கவனமாக இருப்பார்.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது தலைவருடன் இணைந்து பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தார். தியாகி திலீபனின் நினைவுதினத்தில் தலைவர் உண்ணாநோன்பு இருப்பது வழமை. அன்றைய தினம் தலைவரைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்த சங்கர் அண்ணாவின் வாகனம் சிறிலங்காப் படைகளின் ஆழஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளானது. சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது இன்னொரு முனையில் எமது தளபதிகளையும் தலைவரையும் கொல்வதற்கான சதித்திட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் இறங்கியிருந்தன.
தியாகி திலீபன் அவர்களின் நினைவுதினமான அன்று சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மூத்ததளபதி கேணல் சங்கர் அண்ணா அவர்களை சிறிலங்கா அரசபடைகள் தனது நாசகாரத் திட்டத்தின் மூலம் 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது. தலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர் அண்ணா.
வல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அண்ணா அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர் அண்ணா.
ஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர்.
சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையும் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர்.
இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால்இ தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அண்ணா. மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.
1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக ‘சயனைட்’ அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார்.
2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.
தேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும். ‘இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை, விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை’
இவருடைய இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் செல்வி சாம்பவி அவர்கள் உரையாற்றுகையில். எல்லாவற்றிலுமே பங்கெடுத்து எல்லாவற்றிலுமே பங்குகொண்டு தன்னுடன் கூடிக்கழிக்கும் உற்ற நண்பனை இன்று தலைவர் பிரிந்திருக்கின்றார். ஆனால் எங்களுடைய சங்கர் அண்ணாவைப் பொறுத்தவரையில் இவ்விடுதலை இயக்கத்தில் நாங்கள் அனைவருமே அவருக்கு குழந்தைகள் போன்றவர்கள் தான். அவர் ஒவ்வொரு போராளிகளையும் அணுகுகின்ற விதம் பழகும் விதம் அறிவுரைகள் சொல்லிக்கொடுக்கும் விதம் வித்தியாசமானது. நாங்கள் சங்கர் அண்ணா என்ற பெயரை அவரை அறியும் முன்பே அறிந்திருக்கின்றோம். எப்படியென்றால் இந்திய இராணுவ காலத்தில் மணலாறில் எங்களுடைய தேசியத் தலைவர் இருந்த காலத்தில் அவரது நிழலாக இருந்தவர் சங்கர் அண்ணா.
அக்கால கட்டத்தில்தான் எமது அமைப்பில் பெருமளவான பெண் போராளிகள் இணைந்து தலைவருக்கருகில் பயிற்சிப்பாசறை அமைத்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டம். பெண்களுக்கு காடு புதிது. காட்டிலும் பயிற்சி காவற்கடமை எல்லாமே புதிது. எல்லாவற்றையுமே பயின்று கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில் நாங்கள் போக வேண்டிய திசை எது, இடம் எது எமக்கு முன்னால் இருக்கும் மரம் எது, பக்கத்தில் இருக்கும் மரத்தின் இலை எது, விலங்குகளின் அடியைக்காட்டி அவ்விலங்கு எது என அனைத்தையும் அப்போராளிகளுக்கு அணுவணுவாக கற்றுக்கொடுப்பதுடன், அவர்கள் விடும் குறும்புகள் சிறு தவறுகளை தலைவரிடம் மிகவும் வெளிப்படையாகவே கூறுவார்.
இதனால் எங்களுடைய பெண் போராளிகள் இவரைக் கண்டாலே ஓடி ஒளித்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுடன் மிகவும் பாசமாகவும், கண்டிப்பாகவும் பழகி ஓர் தந்தையைப்போல பல சந்தர்ப்பங்களில் ஓர் தாயைப்போல எங்களுடைய போராளிகளை வளர்த்துவிட்ட பெருவிருட்சம். இன்று பல போராளிகளின் மக்களின் கண்கள் கண்ணீர் வடிக்கின்றன. நெஞ்சு கனத்துக்கொண்டிருக்கின்றது.
‘நாங்கள் தமிழர்கள், நாங்கள் விடுதலைப் புலிகள், எங்கள் கண்களில் இருந்து வழிவது நிச்சயம் வெறும் கண்ணீராக இருக்காது. எங்கள் நெஞ்சங்களில் கனப்பது நிச்சயம் வெறும் சோகமாக மட்டும் இருக்காது. இதற்கான பதிலை எதிரி நிச்சயம் எதிர்கொள்வான். எங்கள் தளபதியின் ஆத்மார்த்தமான அந்த இலக்கினை நாங்கள் விரைவில் அடைவோம்.
அதற்காக இன்னும் எத்தனை எத்தனை இலைகளும் கிளைகளும் முறிந்து விழுந்தாலும், அதனை எதிர்கொள்ள இந்த மண் தயாராகவே இருக்கின்றது. இழப்புகள் என்றும் எம்மைத் துவளச்செய்துவிடாது. தூக்கி நிமிர்த்துவதும் இலக்கை நோக்கி பாயச்செய்வதும் எங்கள் மாவீரர்களின் அந்த ஆன்மாவின் பாடல்தான். இன்று வித்துடலாக உறங்கிக்கொண்டிருக்கும் எங்கள் தளபதியின் வித்துடல் மீது ஆணையாக, நாங்கள் அவர் காட்டித்தந்த பாதையில் உறுதியுடனும், திடமுடனும் விரைந்துசெல்வோம்.
அவர் எந்த இலட்சியத்திற்காக இருபது வருடங்களாக உழைத்தாரோ அந்த இலட்சியத்தை மிக குறுகிய காலத்தில் ஈடேற்றுவோம். இன்று எமது கண்களில் வடிந்துகொண்டிருப்பது வெறும் கண்ணீர் அல்ல நெருப்பு நதி” என்று தெரிவித்தார்
தமிழ்மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் இருண்டதாகிவிடும். விடுதலைப்புலிகள் வாழ வேண்டுமென்றோ ஆளவேண்டுமென்றோ ஆசை கொள்ளவில்லை. எமது மக்களின் நிரந்தரமான சுபீட்சமான எதிர்காலம் கிடைக்குமானால் நாம் அனைவரும் மரணிக்கவும் தயாராகவுள்ளோம். மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காகன பொறிமுறைமை பற்றி தாயகத்திலும் புலம்பெயர் தேசத்தில் உள்ள அறிவார்ந்தோர் உட்பட அனைத்து மக்களும் வயது வேறுபாடின்றி சிந்திக்க வேண்டும். இந்த சிந்தனை செயல் வடிவமாக தாயக பரப்பெங்கும் தீவிரமான வெகுஜன போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். இந்த வெகுஜன போராட்டங்கள் தாயகப் பரப்பையும் தாண்டி சர்வதேச கவனத்தை ஈர்க்க தக்க வகையில் சிங்களத்தின் தலைநகரிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆப்போது தீலிபன் கனவு நிறைவேறும்.
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, தியாக தீபம் லெப் கேணல் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த பெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்‘