தமிழீழக் கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டு யாழ். மாவட்டம் பலாலி படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க குப்பி – “சயனைட்” உட்கொண்டு 05.10.1987 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘யாழ். மாவட்டத் தளபதி’ லெப். கேணல் குமரப்பா, ‘திருமலை மாவட்டத் தளபதி’ லெப். கேணல் புலேந்திரன், மேஜர் அப்துல்லா, கப்டன் நளன், கப்டன் மிரேஸ், கப்டன் பழனி, கப்டன் கரன், கப்டன் ரகு, லெப்டின்னட் அன்பழகன், லெப்டின்னட் தவக்குமார், 2ம் லெப்டின்னட் ஆனந்தகுமார், 2ம் லெப்டின்னட் ரெஜினோல்ட் ஆகிய வேங்கைகளின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
உலகம் எங்கும் மக்களாட்சி என்ற பெயரால் தன் மக்களைத் தானே கொன்று அழிக்கும் அரசுகள்தான் இயங்குகின்றன. இதில் இயங்கு சக்தியாக ஆளுவோர் யார் மீதும் எதற்காகவேனும் பயங்கரவாதி என்ற முத்திரை குத்திவிட முடிகிறது. இது இலங்கை அரசைப் பொறுத்த வரை தமிழரின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு ஆப்பு வைக்கச் சிறந்த ஆயுதமாக உள்ளது. இலங்கை அரசியலைக் கூர்ந்து கவனிப்பவருக்கு ஒன்று புரியும். சிங்கள ஆட்சிபிடத்தில் எவர் பதவிக்கு வந்தாலும் இதே வழியைத்தான் பின்பற்றி வருகின்றார்கள். ஏனென்றால் இது பண்டாரநாயக்க ஜே.ஆர். 1940களில் தொடக்கி வைத்த அரசியலின் பரினாம இன அடக்குமுறை இனப்படுகொலை என்பன இன அழிப்ப உச்சம் .
1977 முதல் தமிழ் மக்கள் சுதந்திரமான வாக்களிப்பு மூலம் இனிமேலும் சிங்களத்துடன் ஒற்றையாட்சியில் இருக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிவித்து விட்டனர். ஆனாலும் தமது ஜனநாயக உரிமைகளைப் பயன் படுத்தும் நோக்கமாகவே தேர்தல்களில் பங்களித்து வந்தனர்.
ஈழத்தமிழர்களுக்கு இந்திரா காந்தி அணுகுமுறையின் படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை ஓரளவு தமிழர்கள் பிரச்சினைகளுக்கு நியாயத்தை வழங்கும். இப்படித்தான் இந்திரா காந்தி அணுகுமுறையைப் பார்த்து அச்சம் கொண்டார் ஜெயவர்த்தன. பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் அமைதிபடையாக இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய இராணுவம் இலங்கை சென்றது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள்.
1972 லும் 1980 லும் செய்யப் பட்ட அரசியலமைப்பு மாற்றங்களில் தமிழ் மக்களின் வாக்களிப்பு மூலம் தொரிவான சம்மதம் இல்லாமலே சிங்களத்தாலும் அதன் நியமனத் தமிழ் பிரதிநிதிகளாலுமே ஏற்கப் பட்டவை. சிங்களத்தின் அணுகுமுறை மாறும் என நினைத்து ஏமாந்த நிலையில் பதவிக்கு வந்தவர்கள் தமிழர் மீது அடக்குமுறை ஆட்சியில் எதுவித ஜனநாயக போக்கும் காணப்படவில்லை.
இப்படியான சூழலில் இரத்தம் சிந்தும் கோரச் செயல்கள் சொத்தழிவு உயிர்க் கொலை என்பன முரண்பாடுகளின் பொதுமையான பின் விளைவுகள் என்ற உண்மைகள் மறைக்கப் படுகின்றன. அரச இயந்திரங்களிலிருந்து பாயும் துப்பாக்கி ரவைகள், விமானக் குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள் எத்தகைய அழிவுகளைத் தந்தாலும் அவை மக்களாட்சி என்ற பெயரால் நியாயப் படுத்தும் கொடுமை நடக்கத் தொடங்கின.
ஈழவிடுதலை வரலாற்றில் 1983 இல் கூர்மையடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இந்தியாவில் தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட ஆயதப் பயிற்சியும் புதிய பரிமாணத்துக்கு விடுதலைப் போரை எடுத்துச் சென்றன. இந்தியாவின் வங்கதேச விடுதலையும் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைபெற்ற இந்திரா காந்தியின் துணிச்சலும் தமிழீழம் விடுதலை காணும் என்ற கனவில் தமிழினம் மிதந்திருந்தது. ஆனால் இந்திரா காந்தியின் மனதில் வேறு சிந்தனைகள் இருந்ததைச் வரலாற்றுப் பதிவுகள் குறிகாட்டுகின்றன அவற்றை இந்தியப் பிராந்திய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உண்மை என்றே கருத வேண்டியுள்ளது.
அக்காலத்தில் அங்கு பயிற்சி பெற்ற சில தமிழ் உறவுகளின் கூற்றுப்படி தமிழ் இளைஞர்களுக்கான பயிற்சி இலங்கை அரசின் இராணுவ நடமாட்டங்களைக் கண்காணிப்பதும் வெளி நாட்டு ஊடுருவல் இடம்பெறாமல் தவிர்ப்பதுமாகவே இருந்தது. மேலும் உறுதியான தீர்வு கேட்டு அன்றைய வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதியிடம் மூன்று இலங்கையர் பேசிக் கொண்டிருந்த ஒக்டோபர் 31 ஆந் திகதியில் இந்திரா அவரது 3 இந்திய (சீக்கியக்) காவலாளிகளால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
இந்திரா காந்தியின் இடத்துக்கு வந்த அவரது மகன் ராஜீவ் காந்தியோ அல்லது ஏனைய இந்தியத் தலைவர்களோ இந்திரா காந்தியின் கொலை பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை. அதனை அவரது குறையாகவும் கருத முடியாது. பரம்பரை அரசியல் நாகரிகத்துக்கு இந்திய ஜனநாயக முறை அடிமைப்பட்டுப் போன அவலமே காரணம் எனலாம்.
இப்படியான சூழலில் ராஜீவ் காந்தி இலங்கையின் இனப் பிரச்சனையிலும் அரசியலும் அக்கறையின்மையாலும் அவர் அருகில் உள்ளவர் நினைத்தபடி நினைத்த பாட்டுக்கு ஆடும் பொம்மை ஆனார். அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் தமிழர் என்ற காரணத்தால் ஜே.ஆரின் விருப்பப்படி இந்திராவுடன் செயலாற்றிய பார்த்த சாரதியையும் பின்னர் கோபாலசாமியையும் ஒருவர் பின் ஒருவராக நீக்கி விட்டு வடநாட்டவரான ரொமேஷ் பண்டாரியை நியமித்தார்.
ஒரு புதிய சிங்கள இனமேலாதிக்கச் சிந்தனைக்குள் முழுச் சிங்கள இனமும் சிக்கிக் கொண்டது அரசியல் பொருளாதார அறிவியல் என்பவற்றில் தொடர்ந்தும் மேல் நிலையைத் தக்க வைக்கும் தமிழினத்தை மதிக்கவோ சம உரிமை வழங்கவோ தயாராக இல்லை. இராணுவ ரீதியாக மட்டுமல்ல வாழ்வியல் ரீதியாகப் பார்த்தாலும் ஜே.ஆரின் காலத்தில் தொடங்கி அதிகரித்தது என்றே சொல்ல வேண்டும்.
ராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. இதில் அனைத்து தமிழ் ஆயுதக் குழுக்களும் கலந்து கொண்டன.
திம்புவிலும் பெங்களூரிலும் நேருக்கு நேராகப் பொது மேடையில் எமது அரசியல் தோன்றலே தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் ஆயுதக் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது.
இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்திய தாக்குதலில் தமிழினப் படுகொலையில் 200-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
நியாயமான அரசியல் கோரிக்கைகளை அமைதியான வகையில் அணுகித் தீர்வு காணாது இந்திய அரசு இலங்கை இராணுவ இயந்திரங்களைக் கொண்டு வன்முறையால் தூண்டி அதை அடக்குவது எப்படி மக்களாட்சி ஆக கொண்டுவர முடியும் எனப் போராடியது . மக்களால் மக்களுக்காக மக்களை ஆழும் முறை மக்களாட்சி என்றால் எப்படி ஒரு அரசு தான் ஆளும் மக்களையே அரசியல் காரணங்களுக்காகக் கொல்ல முடியும்? என்பதை இந்திய இலங்கை அரசுகள் தமிழரை இன அழிப்பு செய்வதில் குறியாக இருந்தார்கள்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பது சாதாரண சூழ்நிலையில் ஏற்படவில்லை. தேசிய இனப் பிரச்சனையில் மூன்றாவது நாட்டின் நேரடித் தலையீடு முதன் முதலாக ஏற்பட்டிருந்தது. தமிழ் மக்களை இன ரீதியாக பலவீனப்படுத்துவதன் மூலம் தேசிய இனப் பிரச்சனையை ஒழித்துவிடலாம் என நம்பிய இனவாத அரசியல் இறுதியில் பல்வேறு நாடுகளின் போட்டிக் களமாக மாற்றப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
இந்திய பிராந்திய ஆதிக்கம் சமாதானம் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் ஈழத்தமிழினத்தைக் கூறுபோட சிங்கள பெளத்த பேரினவாத அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே இலங்கை இந்திய ஒப்பந்தம் இவ்வொப்பந்தம் யார் யாருக்கிடையில் செய்யப்பட்டுள்ளதென்பதனையும், எவரது அபிலாஷைகள் இவ் ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட கூறுகள் பூர்த்திசெய்யபட்ட.
இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றிற்கான தேவை இருந்ததா அதனால் ஈழத் தமிழர்கர்களுக்கு கிடைக்கும் பலன் என்ன தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமா என்பது ஒருபுறம் ஆனால், இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள், தமிழர்களை ஒடுக்கி, ஆக்கிரமித்து, படுகொலைகளைப் புரிந்துவந்த பௌத்த சிங்கள அரசும்,இந்திய வல்லாதிக்க அரசும் தமிழர்களின் உண்மையான அவலங்களைப் புரிந்துகொள்ளாமல், தனது சொந்த நலன்களை மட்டுமே முன்னிறுத்தி ஒப்பந்தத்தின்மூலம் லாபமீட்ட முயன்ற ராஜீவ் தலைமையிலான இந்திய அரசும் தான்.
காங்கிரஸ் மற்றும் தி மு க ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், பெரும்பாலான தமிழகத்தினருக்கும், 100% ஆன ஏனைய இந்தியர்களுக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழர்களின் சுதந்திரத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்றும், இந்திய இராணுவம் சண்டையிடும் நோக்கில் அங்கே செல்லவில்லையென்றும், தமிழர்களைக் காத்துநின்ற இந்திய இராணுவத்தைப் புலிகள் வேண்டுமென்றே தாக்கிக் கொன்றார்கள் என்றும் ஒரு பார்வை இருக்கிறது.
ஆனால் இந்திய இராணுவத்தின் இலங்கை வருகையோ தமிழர்களுக்கான சுதந்திரத்திற்காக இடம்பெறவில்லை. மாறாக இந்திய – இலங்கை அரசுகளின் நலனுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை. இவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தமிழர் தொடர்பான ஒரேயொரு முக்கிய விடயம் யாதெனில், தமிழர்களின் தாயக மண் பூர்வீக தாயகம் என்று ஒத்துக்கொள்ளப்படாமல், அவர்கள் வரலாற்று ரீதியாக செறிந்துவாழும், மற்றைய இங்களையும் உள்ளடக்கிய பகுதி என்று சூட்சுமமான பிரகடனம் ஒன்றை இவ் ஒப்பந்தம் மூலம் செய்த இலங்கை இந்தியாவையும் அதற்கு இணங்கவைத்து, தமிழர்களின் தாயகக் கனவை விட்டெறியுங்கள் என்று உணர்த்திய நிகழ்வ இலங்கை இந்திய ஒப்பந்தம்.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்படும் என்றும், ஆனால் இந்த தற்காலிக இணைப்புக் கூட கிழக்கு மாகாண மக்கள் விரும்பும் பட்சத்தில், கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலம் நிரந்தரமாகப் பிரித்துவிட முடியுமென்றும் தமிழர்களின் நிலையினை மேலும் பலவீனமாக்கிய தமிழர் தாயக நிலத்தை ஆக்கிரமித்திட கொண்டுவரப்பட்ட சரத்தும் இதைத்தவிரவும், போராளிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்றும், இராணுவம் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும் என்ற பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் மட்டும்தான் நிறுத்தப்படும், ஆனால் இராணுவம் தமிழர் பகுதிகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்படமாட்டாது என்பது அதன் நிலையினையும் எதுத்துக் காட்டியது அனைத்து அரசியல்க் கைதிகளுக்குமான பொதுமன்னிப்பு என்பது கூட முழுமையான பொய்யென்பது. தமிழரின் முக்கிய கோரிக்கைகளான நிரந்தர அரசியல்த் தீர்வு, அகதிகளின் மீள்குடியேற்றம், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களிலிருந்து சிங்களவர்களின் வெளியேற்றம் ஆகிய மிக முக்கிய விடயங்கள் எதையுமே இவ்வொப்பந்தம் கொண்டிருக்கவில்லையென்பதும், இந்திய – இலங்கை அரசுகள் இதைத் தெரிந்தே செய்தனவென்பதும் உண்மை.
ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்ட இன்னொரு முக்கிய விடயம் இலங்கை நாட்டின் தேசிய ஒருமைப்பாடு, ஒற்றையாட்சியின் பாதுகாப்பு, பிரதேச நலன் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்கள். இவற்றை மிகவும் தெளிவான முறையில் சிங்கள அரசு வலியுறுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், தனது நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய அரசிடமே உள்ளதென்றும் வலியுறுத்தியிருக்கிறது.
இங்கே குறிப்பிடப்படவேண்டிய முக்கியமான அம்சம், இந்தியா போராளிகளுக்கு தார்மீக உதவிகளை வழங்குவதை முற்றாக நிறுத்திக்கொள்வது, இந்தியாவின் நிலப்பரப்பையோ, கடற்பரப்பையோ போராளிகள் இலங்கைக்கெதிராகப் பாவிப்பதை இந்தியா முற்றாகத் தடுப்பது, இலங்கையின் கடற்படையுடன் சேர்ந்து போராளிகளின் கடல்வழிப் போக்குவரத்தைத் தடுக்க கண்காணிப்பு ரோந்தில் கூட்டாக ஈடுபடுவது, இலங்கையின் பாதுகாப்பிற்கு போராளிகளால் அச்சுருத்தல் ஏற்படுமிடத்து, இந்திய இராணுவம் தனது அனைத்து உதவிகளையும் இலங்கை அரசுக்கு வழங்குவது ஆகிய இலங்கையின் பாதுகாப்பிற்கான விடயங்களுக்கு இவ்வொப்பந்தம் அளித்த முக்கியத்துவம், தமிழர் நலன்களைக் காட்டிலும் அதிகமானது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்த இரண்டு அரசுக்களின் நலன்களையும் நிறைவேற்றும் ஒரு வஞ்சக உடன்பாடாகும்.இந்திய அரசின் பிராந்திய நலனைப் பாதுகாக்க இலங்கை அரசு உடன்பட வேண்டுமாயின், இலங்கை அரசின் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க இந்திய அரசு உதவவேண்டும். இதுதான், ராஜீவுக்கும்-ஜே.ஆருக்கும் இடையில் நடந்த எழுதப்படாத உடன்பாடு.
1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை.
அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு – கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார்.
இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தமிழர்களுக்காக நீரும் அருந்தா உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்தின் அரசியல் முகமூடியைக் கிழித்தெறிந்து சாகும்வரை நீராகாரமுமற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் செய்து பன்னிரண்டாவது நாள் தனது உயிரை தற்கொடை செய்தவன் திலீபன்- தமிழீழமக்களிற்கும் உலகிற்கும் இந்திய சிறீலங்கா அரசின் நயவஞ்சக செயலை வெளிக்காட்டின மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் லெப் கேணல் திலீபனின் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
1)பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும்வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல செயற்பாடுகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவற்படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும் என வைத்த கோரிக்கை எதையும் இந்திய நிறைவேற்றவில்லை.
1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. லெப் கேணல் திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.
இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே இலங்கை அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.
இந்திய இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடல் படைகளால். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணிய இலங்கை பௌத்த பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.
தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.
அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை தியாகம் செய்து தமிழீழ விடுதலை வேள்வியில் தங்களையும் மாவீரர்களாக இணைத்துக் கொண்டனர்.
காந்தி தேசத்துக்குக் காந்தியின் காந்தீயம் புரியும் என நினைத்தது திலீபன் மட்டுமல்ல. ஈழத் தமிழினமே நம்பிக்கையோடு திலீபனின் தவம் பலித்துத் தமிழீழ வரம் கிடைக்கும் என இலவு காத்த களியாகக் காத்திருந்தது. வந்து பார்த்துப் போன இந்தியத் தூதுவர் டிக்ஸிற்றும் இந்தியத் தூதுவராக நடக்காது ஜே.ஆரின் சிங்களத் தூதுவராகவே நடந்து கொண்டார். திம்புவில் பேசியதும் தமிழர் தரப்பை இந்தியா தண்டிக்க முயன்றதும் தமிழரது நியாயமான கோரிக்கைகள் சேரும் இடம் குப்பைக் கூடைதான் என்பதை உணரத் தவறிய இனமாகத் தமிழினம் மாறிவிட்டது.
மீண்டும் மீண்டும் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்கும் எரியும் அடுப்புக்குமாக மாறி மாறித் தவிப்பதே தமிழினத்தின் தலைவிதியாக இன்றும் தொடருகிறது. பன்னிரண்டு நாட்கள் அனல் மேல் புழுவாய்த் துடித்தபின் வரம் தரும் சாமி தரிசனம் கிடைக்காமலே திலீபனின் தவம் தீயிலே கருகியது. கருகியது திலீபனின் உடல் அல்ல தமிழினத்தின் உள்ளங்கள். இன்றும் நினைத்தாலும் தமிழினத்தின் உள்ளங்களைத் தீ தானாகவே பற்றிக் கொண்டு விடும். ஆனால் அவன் மறைந்த கொடூர நினைவுகள் அடங்கும் முன்னரே அடுத்த பேரிடி ஈழத் தமிழினத்தின் தலைகள் மீது விழுந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் அமுலாகி ஓரிரு மாதங்களே ஆகியிருந்த நிலையில் அந்த ஒப்பந்த விதிகளுக்கு அமைய ஒரு சில தற்காப்பு ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலை சிறந்த தளபதிகள் குமரப்பா, புலேந்திரன் உட்படப் 17 பேர் சென்ற படகை இலங்கைக் கடற்படை தடுக்கிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என ஒன்று இல்லாதிருந்தால் இடைமறித்த கடற்படை உயிர் தப்பியிருக்க முடியாது. கடற்படை தப்பியிருந்தால் 17 பேரும் சமராடி வீரச் சாவைத் தழுவியிருப்பர். ஆனால் திலீபனின் உயிரைக் குடித்த அதே இலங்கை இந்திய ஒப்பந்தமும் இந்தியாவின் மீதுள்ள மதிப்பும் மீண்டும் கரங்களைக் கட்டிய காரணத்தால் இந்தப் 17 பேரும் சிங்களத்தின் சிறைக் கைதிகளாயினர். அவர்களைச் கொழும்புக்குக் கொணடு போய் விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்ய முற்பட்ட சிங்களத்தை இந்திய பேரரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை, அல்லது விரும்பவில்லை.
இந்திய அரசுடன் செப்டெம்பர் 28 ஆம் திகதி செய்து கொண்டஒப்பந்த விதிகளின் படி தமிழீழ விடுதலைப் புலிகள் தற்காப்புக்காக ஆயதங்கள் வைத்திருப்பதை அனுமதிக்கிறது எனச் சுட்டிக் காட்டியும் பயனற்றதால் 17 பேரும் அக்டோபர் 5 ஆம் திகதி குப்பி கடித்தனர். அதில் 12 பேர் மாண்டனர். யாழ் தளபதியான குமரப்பா மணமாகிச் சில நாட்களே ஆன நிலை. புலேந்திரன் திருமலைத் தளபதி. ஏனைய 15 பேரும் அதிமுக்கியமும் அனுபவமும் வாய்ந்தவர்கள்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர்.இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்:
கனம் தலைவர் அவர்களுக்கு,
குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.
மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.
”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்” தனது கடித்த்தில் குறிப்படிட்டுள்ளார் .
அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்தார்கள் திலீபன் மறைவால் பொங்கிய கண்ணீர் வெள்ளம் முடிவு காணும் முன்னரே 12 மாவீர மணிகளின் வித்துடல்களுக்கு விழியாலும் விம்மும் அழுகையாலும் மலர் தூவி வழி அனுப்பி வைத்தோம்.
யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் குமரப்பா
(பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
திருமலை மாவட்ட தளபதி
லெப்.கேணல் புலேந்திரன
(குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)
மேஜர் அப்துல்லா
(கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)
கப்டன் பழனி
(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் கரன்
(வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)
கப்டன் மிரேஸ்
(தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
கப்டன் நளன்
(கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் அன்பழகன்
(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)
லெப்டினன்ட் தவக்குமார்
(சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
(கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)
2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)
இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று
கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)
வீரச்சாவடைந்த பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.
லெப்.கேணல் குமரப்பா யாழ். மாவட்ட தளபதி
குமரப்பாவிற்கு, அமைப்புக்கு வந்தபோது அவரின் சொந்தப் பெயரான இரத்தினபாலன் (பாபு) என்பதற்கு பதிலான இயக்கப் பெயராக தலைவரால் ‘குமரன்’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இயல்பாகவே கலகலப்பானவர் குமரப்பா. பழகும் யாருடனும் அன்னியோன்னியமாகவும், எதிரே அமர்ந்திருப்பவரின் மனதுக்கு நெருக்கமாகவும் பழகும் திறன்மிகுந்தவர். திடகாத்திரமான உடற்கட்டு இவருக்கு இயற்கையாகவே இருந்திருந்தது.1970களின் இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இருபதுக்கும் குறைவான உறுப்பினர்களே இருந்தஆரம்ப காலத்திலேயே அமைப்பில் தன்னை இணைத்தவர்.
தேடல் நிறைந்த ஒரு ஆன்மா குமரப்பா. எந்த நேரமும் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தபடியே இருப்பார். உலக நடப்புகளை அறிவதிலும், அதனை பற்றி நண்பர்களுடன் ஆராய்வதிலும் இவருக்கு சளைப்பில்லாத ஈடுபாடு எப்போதும் இருந்துவந்திருக்கிறது.
அமைப்பில் இணைந்த பொழுதினில் அமைப்பின் பண்ணை முறைக்குள் இவரும் உள்எடுக்கப்பட்டு அந்தநேரம் இயங்கிவந்த அமைப்பின் பண்ணைகளில் ‘நம்பர் திறீ’ என்று அழைக்கப்பட்ட புளியங்குளம் பகுதியில் அமைந்திருந்த விவசாயபண்ணைக்கு அனுப்பப்பட்டார். அந்த 79ம் ஆண்டுப் பகுதியில் அமைப்பின் பண்ணை முறை என்பது ஒருவிதமான பரீட்சைக்களமாக ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறது. இது குமரப்பாவுக்கு விதிவிலக்கு இல்லை.
சாதாரண விவசாயப் பண்ணைகள் போன்ற தோற்றத்திலேயே இவையும் இருக்கும். ஒவ்வொரு பண்ணையிலும். ஏழு, எட்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். அவற்றின் தினசரி நேர அட்டவணை மிகவும் கடினமானது.
அதிகாலை துயில் எழுப்பல். அதன்பிறகு சிறிது உடற்பயிற்சி. அதன் பின்னர் விவசாய நிலத்தில் வேலைகள். களை பிடுங்குவது. டிஸ் அடிப்பது. மத்து வெட்டுவது, தண்ணி பாய்ச்சுவது என்று ஏராளம். மாலையில் புத்தகம் படிக்கவேணும். இப்படி ஏராளம் கட்டுப்பாடுகளுக்குள்ளாக தேறுபவர்களே அடுத்த அடுத்த பண்ணைகளுக்கு உள் எடுக்கப்படுவார்கள்.
குமரப்பாவுக்கு இயல்பாகவே இருந்த அன்னியோன்னியமாக பழகும் தன்மையும் நட்புடன் இணையும் பழக்கமும் அவர் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பானதாக ஆக்கியபடியே இருந்தன. எல்லா வேலையையும் அழகாகவும் அதேநேரம் வேகமாகவும் செய்யும் திறனும் அவரிடத்தில் இருந்திருந்தது.
அந்த ஆரம்பகாலப் பொழுதிலேயே செய்திகளையும்,பிற போராட்ட வரலாறுகளையும் ஆவணப்படுத்துவதில் தன்னார்வத்துடன் செயற்பட்டவர் குமரப்பா. அவர் இருந்த முகாமுக்கு (பண்ணை) 1979,80களில் வந்த ஈழநாடு, தினகரன் பத்திரிகைகளில் விடுதலை சம்பந்தமான ஆக்கங்களை அழகாக கத்திரித்து ஒட்டிவைத்திருந்தவர் அவர். எந்த வரலாற்று நிகழ்வானாலும் அதனை ஆண்டு திகதி என்று மிகத்துல்லியமாக தெரிவிக்கக்கூடிய நினைவாற்றல் குமரப்பாவின் ஆளுமைகளில் முக்கியமானது.
79,80களில் பண்ணையில் இருக்கும்போது அவர் அதிகமாக படித்தது ‘தான்பிரின்’,மைக்கல் கொலின்ஸ்’ என்ற இரண்டு அயர்லாந்து விடுதலைப்போராட்ட வீரர்களின் வரலாறாகும். ஆரம்ப காலங்களில் குமரப்பாவின் ஆதர்ச போராளிகளாக அவர்களே விளங்கினர்.
காலம் மிகவும் வேடிக்கையானதும்கூட. 80களின் ஆரம்பத்தில் அமைப்புக்குள் குழப்பவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட உடைவால் மனம் உடைந்து குமரப்பா அயர்லாந்துக்கே தொலைத்தொடர்பு படிக்க போக நேர்ந்தது. அயர்லாந்து சென்றதும் அவர் எழுதிய கடிதத்தில் எதை எதை அவர் தான்பிரின்,’மைக்கல் கொலின்ஸ் வரலாற்றில் படித்தாரோ அந்த இடங்களையே நேரடியாக தான்போய் பார்த்ததாக பரவசத்துடன் தெரிவித்திருந்தார்.
அயர்லாந்து போயும் அவர் ஓயவில்லை. அங்கும் தமிழ் மாணவர் அமைப்பை உருவாக்கி விடுதலையின் தேவையை சொல்லியபடியே இருந்தார். எந்தநேரமும் அவருக்குள் ஒரு விடுதலைத்தீ கனன்று கொண்டே இருந்திருக்கிறது.
1983 யூலையில் தென்னிலைங்கையில் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசு கட்டவிழத்துவிட்ட படுகொலைகளின்போது அயர்லாந்தில் எமது போராட்டம் பற்றியும் சிங்கள அரச பயங்கரவாதம் பற்றியும் ஒரு புகைப்படக் கண்காட்சியை குமரப்பா ஏற்படுத்தி இருந்தார். அதன் பின்னர் பாலா அண்ணையுடன் தமிழகத்துக்கு வந்த அணியில் குமரப்பாவும் இணைந்திருந்தார். மீண்டும் அமைப்புக்குள் இணைந்த குமரப்பா அனைத்து தளங்களிலும் தனது ஈடுபாட்டையும் ஓய்வின்றிய வேலைகளையும் செய்தவராவார்.
தலைவரின் பாதுகாப்பு, பயிற்சி முகாம்கள், தமிழக அரசியல் தொடர்புகள், ஊடகவியலாளர் சந்திப்புகள் என்று எந்த நேரமும் ஓய்வின்றியே அவர் 83லும் 84 ஆரம்பத்திலும் தமிழகத்தில் இயங்கினார்.
அதன் பின்னர் தமிழீழ களத்தில் சென்று இறங்கி குமரப்பா தனது இறுதிநாள் வரைக்கும் எதிரிக்கும், எதிரிக்கு துணைபோகும் சக்திகளுக்கும் எதிரான சமர்கள் அனைத்திலும் பெரும் தீயாக, புயலாக நின்று களமாடி இருக்கிறார்.
லெப் கேணல் புலேந்திரன்
விடுதலைப்புலிகளின் மத்தியகுழு உறுப்பினரான லெப் கேணல் புலேந்திரன் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
புலேந்திரன், 80களின் ஆரம்பத்தில் திருமலையில் இருந்து சீலனுடன் வந்து அமைப்பில் இணைந்த புலேந்திரன் வீரத்துக்கு இன்னுமொரு பெயர் என்று குறிப்பிடும் அளவுக்கு அச்சம் ஏதுமில்லாத ஒரு போராளியாக போராடி இருக்கிறார். புலேந்திரன் அமைப்புக்கு வந்தபோதில்தான் அமைப்பு குழப்பவாதிகளால் உடைந்து போயிருந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரையும் அதன் கட்டமைப்புகளையும் தமது கைக்குள் எடுக்க முயன்று தோற்றுப்போன குழப்பவாதிகள் அமைப்பைவிட்டு ஓடிய பின்னர் தேசியத்தலைவருக்கு உறுதுணையாக அவரின் வலது கரம்போல நின்று செயற்பட்டவர்களில் புலேந்திரன் மிகமுக்கியமானவர்.
விடுதலைப்புலிகள் அமைப்பு இதோ அழிந்துவிட்டது. சீர்குலைந்து விட்டது என்று சிங்கள பேரினவாதமும், குழப்பவாதிகளும் செய்த பிரசாரங்களை முறியடித்து எமது விடுதலைஅமைப்பை திரும்ப ஒருங்கமைத்ததில் புலேந்திரனின் பங்கு எழுத்தில் வடிக்க முடியாதது.
இவர் பங்கேற்ற முக்கிய தாக்குதல்கள் :
* 15.10.1981 அன்று முதன்முதலாக சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதலான யாழ். காங்கேசன்துறை வீதித் தாக்குதல்.
* 27.10.1983 அன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல்.
* 18.02.1983 அன்று பருத்தித்துறையில் பொலிஸ் ‘ஜீப்’ மீதான தாக்குதல்.
* 29.04.1983 அன்று சாவகச்சேரி ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல்.
* 18.05.1983 அன்று கந்தர்மடம் தேர்தல் சாவடியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
* 23.07.1983 அன்று திருநெல்வேலித் தாக்குதல்.
* 18.12.1984 அன்று பதவியா – புல்மோட்டை வீதி சிரீபுரச் சந்தியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
* 09.01.1985 அன்று அச்சுவேலி சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
* 14.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முற்றுகைக்கு எதிராக நிகழ்ந்த தாக்குதல்.
* திருமலை – கிண்ணியா வீதியில் இராணுவத்தின் கவசவாகனம் மீதான தாக்குதல்.
* திருமலை – கிண்ணியா வீதியில் விமானப்படையினர் மீதான தாக்குதல்.
* முள்ளிப்பொத்தானை சிறீலங்கா இராணுவ முகாம் மீதான தாக்குதல்.
* பன்மதவாச்சி சிறீலங்கா இராணுவத்தினர் மீதான தாக்குதல்.
மிகக்கடினமான அந்த பொழுதுகளில் எல்லாம் மிகமிக உறுதியுடன் நின்றவர். அதன் பின்னரும் ,81,82,83களில் சிங்கள அரச இயந்திரத்துக்கெதிரான அனைத்து தாக்குதல்களிலும் முன்னணியில் நின்றவன் புலேந்திரன்.இதனால் அவனுக்கு சாவகச்சேரி காவல்நிலைய தாக்குதலில் காயமும் ஏற்பட்டது.
இன்றைக்கும் யப்பானிய சாமுராய் வீரர்களை பற்றிய படமோ புத்தகமோ எது படித்தாலும் புலேந்திரனின் முகம் மனதுக்குள் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அப்படியான ஒரு உண்மைவீரன் அவர். அவரின் கண்களின் ஒளி என்பது விடுதலை வேள்வியை முழுக்க உள்வாங்கியதாக இருக்கும்.
விடுதலையின் பேரில் உறுதி, தலைமைக்கு என்றும் உண்மை, போராளிகளுடன் பழகும்போது சகோதரன், மக்களுடன் பழகும்போது சேவகன்,போராடும் பொழுதில் பெரும் ஊழித்தீ. இவற்றின் மொத்தமான வடிவம்தான் புலேந்திரன் என்ற பெயர்.
என்றாவது விடுதலையின் மீது குழப்பமும், அவநம்பிக்கையும் தோன்றும் பொழுதில் எல்லாம் இவர்களின் தியாகமும், ஈகமும், உறுதியும்தான் உண்மை ஒளியாக பாதை எங்கும் நிறைந்திருக்கும்.
விடுதலைப் போராட்டம் என்பது வரையறுக்கப்பட்ட நேர்ப்பாதை அல்ல. அது சந்துகளும், மேடுகளும், குறுகலான பள்ளங்களும், அதளபாதாளங்களும் நிறைந்தது. அதன்மீதான பயணத்தில் இவர்கள் அனைவரும் எந்த கணத்திலும் அச்சம், குழப்பம், தயக்கம் எதுவும் இன்றி உறுதியாக பயணித்தார்கள்.அந்த மகத்தான உறுதியே இன்றைய பொழுதிலும் எமக்கான தெளிவை அளிக்கட்டும்.
போர் விஸ்வரூபம் எடுத்தது. இந்திய படைகளால் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இந்தப் போரை தடுத்து நிறுத்தி, சமாதான வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவதற்காக, ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டுவருமாறு, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கடிதங்கள் மூலமாகத் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். தலைவரின் கடிதங்களை ராஜீவ்காந்தி பொருட்படுத்தவேயில்லை.
தமிழ் நாட்டில் அப்போது தங்கியிருந்த எமது மூத்த உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த முரசொலிமாறனை ராஜீவ் காந்தியிடம் தூது அனுப்பி போரை நிறுத்தும்படி வேண்டினார்.பிரதமர் அலுவலகத்தில் வைத்து தன்னைச் சந்தித்த முரசொலிமாறனிடம் ராஜீவ் சொன்னார். “பிரபாகரன் என்னுடைய காலடியில் வந்து வீழும்வரை போரை நிறுத்த மாட்டேன்” ராஜீவ்காந்தியின் எச்சரிக்கையைக் கேட்டுவிட்டு தி.மு.க தலைவர் திரு கருணாநிதி அவர்கள் கூறினார் “ஏன் இந்திய படையுடன் சண்டை இடுகின்றீர்கள்? பூண்டோடு அழிந்துவிடப் போகின்றீர்கள். உடனேயே ஆயுதங்களுடன் சரணடைந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறினார்.
இந்திய இராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971இல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987இல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000இற்கும் மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800க்கும் அதிகமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
தேசியத் தலைவர் வே.பிரபாகரனைக் கொன்று போரை வென்றுவிட்ட ஒரு வெற்றிச் செய்திக்காக, நேருவின் பேரன் டில்லியில் தவங்கிடந்தார்; ஆனால் அவர் விரும்பிய செய்தி அவரைச் சென்றடையவேயில்லை!
மிரட்டல் இராசதந்திரத்தைக் கையாண்டுபார்த்த டிக்சிற் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களை தனது வலைக்குள் வீழ்த்த முயன்று தோற்றார். அதனால் கோபமடைந்த டிக்சிற், வார்த்தைக் குண்டுகளை அள்ளி வீசினார்; அது எந்த நன்மையையும் டிக்சிற்றுக்குப் பெற்றுக்கொடுக்கவில்லை. அரவணைக்கும் இராசதந்திரத்தைக் கையாண்டு பார்த்து, தேசியத் தலைவரை தனது வலைக்குள் வீழ்த்த முயன்று ராஜீவ்காந்தியும் தோற்றார்.
ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் நயவஞ்சமாக இரண்டு முறை இந்தியா போரில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத்தமிழர்களின் மீது எந்தெந்த வகையிலெல்லாம் இனப்படுகொலை நடைபெற்றாலும் இந்தியாவிற்கு எதிரான எந்த ஒரு நாட்டுடனும் இலங்கை கூட்டு வைத்திருப்பினும் அதை கண்டுகொள்ளாமல் கொழும்பில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் ஏதோ ஒரு சாத்தானைப் தான் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும் என்பதை இந்தியா பலமுறை நிரூபித்திருக்கின்றது.
இவற்றை எல்லாம் கண்டு அனுபவித்த பின்னரும் இந்தியா நமக்கு வரம் தரும் எனச் சாமியாடும் தொண்டர் படையை நினைக்கும் போது அப்பாவித்தனம் என்பதா இனத் துரோகம் என்பதா? நாங்கள் இன்னமும் எமது சிந்தனையைச் சீர்செய்யாது இருப்போமானால் எப்படி எமது முன்னைய தமிழர் தலைவர்களைக் குறை சொல்லமுடியும்?
இலங்கை அரசோ, சர்வதேசமோ கடந்த கால சமாதான காலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி தமிழ் மக்களின் மீதும் நிராயுதபாணிகளாக உள்ள போராளிகள் மீதும் தமது நடவடிக்கைளை மேற்கொண்டு தமிழினத்தை அழிக்கும் நடவடிக்கையிலேயே முனைப்புடன் செயற்படுகின்றன. தற்போதைய நில ஆக்கிரமிப்பு, மக்களின் மீதான வான், எறிகணைத் தாக்குதல்கள் இதனையே சுட்டிக் காட்டி நிற்கின்றன.
சிங்களப் பேரினவாத அரசியலும் காட்டிக் கொடுக்கும் தமிழ் அரசியல் துரோகிகளின் தன்னலமும் தமிழ் மக்களிடமிருந்து அபகரித்து முடிவில்லாத போருக்கு இன்று வரை பலியாக்கி வருவது எமது இனத்தின் சாபக் கேடாக உள்ளது. இதற்கு முடிவு காணும் வாய்ப்பும் வசதியும் புகலிடத் தமிழரிடமே உள்ளன. இன்று உள்ள நிலையில் இது வன்னி மக்களதோ தமிழீழ மக்களதோ பிரச்சனை மட்டுமல்ல இது அனைத்துலகத் தமிழரதும் மனித இனத்தினதும் பிரச்சனையாகப் பார்க்கப்பட வேண்டும்
இன்று அவரை தமிழீழ மண் வடகிழக்கில் நடப்பது மனித வதை, இன அழிப்பு, மற்றும் மனித இனத்துக்கு எதிரான போரக் குற்றங்களாகும். அனைத்துலக அரசுகளும் அமைதிப் பேச்சின் அனுசரணையாளர்களும் நடவடிக்கை எடுப்பர் என நம்பி நாம் ஏமாந்து விட்டோம். இடம்பெறும் குற்றச் செயல்களின் பொறுப்பாளிகளாக, முக்கிய குற்றவாளிகளாக இலங்கை இந்திய அரசுகள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். 2009பதில் கிளிநொச்சியில் இலங்கைப் படைத் தளத்தில் காயம் பட்டவர்களில் இரு இந்தியர்கள் இருப்பது இந்திய அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் போதுமானதாக உள்ளது. எமது அடுத்த நடவடிக்கை இது பற்றியதாக இருக்க வேண்டியது நியாயமான தேவையாக உள்ளது. காலத்தின் கட்டாயம்.
இன்றைக்கு இலங்கை அம்பன்தோட்டாவில் சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல், பாகிஸ்தான் பிஎன்எஸ் 5 போர்கப்பல் நிற்கும் நிலையில் இலங்கையால் எதுவும் செய்ய இயலவில்லை. ஏற்கெனவே இந்து மகாக் கடலில் ஜப்பான் எண்ணெய் ஆய்வுகளை நடத்துகின்றது.
பிரான்ஸ் இந்த பிராந்தியத்தில் தலைகாட்டுகிறது.
சீனா இலங்கையின் கொழும்புத் துறைமுகம் தொடங்கி, தமிழகத்தின் அருகில் உள்ள கச்சத்தீவின் பக்கத்தில் வந்துவிட்டது.இலங்கை அரசுடன் இணைந்து செய்த படுகொலைகளை இன அரிப்பு போருக்கும் மற்றும் இலங்கை பொருளாதார சிக்கலுக்கும் இந்தியாஉதவியதை மறக்க முடியாது.
இன்றைக்கு இந்தியாவுடன் பாகிஸ்தான், சீனா, மியான்மர் உறவுகள் சீராக இல்லை. நேபாளமும் சீனா பக்கம் சாய்ந்து விட்டது. வங்கதேசமும் பட்டும் படாமல் உள்ளது. இலங்கையை சீனா மிரட்டிக் கொண்டிருக்கிறது. மாலத்தீவு நம்மிடம் உதவிகள் வாங்குவதற்காக சீனாவுக்கும் நமக்கும் மதில்மேல் பூனையாக உள்ளது. இந்த சதுரங்க ஆடுகளத்தில் மிக முக்கிய பங்கு கொண்டுள்ள ஈழத்தமிழர்கள் மேல் இந்திய காட்டும் நலன் என்ன?
ஈழத்தமிழர்களின் தேவையான அரசியல் தீர்வு பற்றி பல கட்டங்களாக பேசிக் கொண்டிருக்கும் போதே, தமிழர் தாயகப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியும், இராணுவமயப்படுத்தியும் அந்த அந்த அரசியல் தீர்வை மழுங்கடித்து பயனற்ற நிலைக்கு கொண்டு செல்லும் தங்களது கொள்கைக்கு தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணித்த 13ஆவது சட்ட திருத்தஇன் தினிப்பினை நிறுத்தி . ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணரவேண்டும். அதிகாரப் பூர்வமான பயணங்கள், பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்டப் பிரச்சினையில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 முள்ளிவாய்க்கால் போர் முடிந்து 13 ஆண்டுகள் மேல் ஆகியும், சிங்கள ராணுவம் தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குத் தமிழர்களை மிரட்டக் கூடிய வகையில் இருப்பதை இராணுவத்தினர் உடனே திரும்ப வேண்டும். மேலே குறிப்பிட்ட இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தமிழர்களுக்கு சிங்களர்கள் விவசாய காணி நிலங்கள், வீடுகளை திரும்பவும் தமிழர்களின் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும், இதுகுறித்தான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டத் தமிழர்களை உடனே விடுதலை செய்யவெண்டும். கடந்த 2009ஆம் ஆண்டு போரின் போது இந்தியாவின் வாக்குறுதிகளை நம்பி வெள்ளைக் கொடியுடன் சரண்டைந்தவர்களை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் அறிந்து அதுகுறித்தான வெள்ளை அறிக்கையும், அவர்களை கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
ஜெனிவா, ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள ஈழத்தமிழர்கள் இன அழிப்பு குறித்தான நியாயம் தமிழர்களுக்கு தீர்ப்பாணை மூலம் கிடைக்கவேண்டும். இன அழிப்புக்கான நியாயங்கள் கிடைக்க சர்வதேச சுதந்திரமான நம்பிக்கையான புலனாய்வும், நீதிவிசாரணையும் சர்வதேச விசாரணையினையும் நடத்துமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற இன அழிப்பு குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காது காத்துவரும் மௌனத்தை கலைத்து . இலங்கையில் இன அழிப்பின் இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இன்று அங்கு அந்தப் பன்னிருவேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட இலங்கை அரசின் சதி நடந்தேறி 35 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில்ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.
தமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.
எமது தேசிய இனத்தின் இன்றைய சந்ததியையும், எதிர்கால வழித்தோன்றல்களையும் காக்கும் புனிதப் பணியில் எம்மை இணைத்துக்கொள்வோம். எமது மக்களையும் எமது மண்ணையும் பாதுகாப்பதற்கான எமது தேசிய விடுதலைப் போராட்டம் இறுதி இலட்சியம் வரை முன்னேறியே தீரும். ஒற்றுமையுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன், எங்கள் தாயக மக்களுக்களின் விடுதலை வாழ்விற்காக பணியாற்றுவதென்ற உள்ளார்ந்த உறுதிமொழிகளை, குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நாள் நினைவுகளுடன் மனங்களில் ஏற்றுக்கொள்வோம்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்‘