போதை என்பது தன்னிலை மறக்கச் செய்து மனிதனின் சுய நிலையை சீர்குலைத்து, புத்தியை மயங்க வைத்து, நல்வாழ்வுக்கு பங்கம் விளைவிக்கும் விடயங்களுள் போதைப்பொருள் முதன்மை பெறுகின்றது. இது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் அல்ல. இதனால் அவரைச் சுற்றியுள்ள சமுதாயமும் பாதிப்படைகிறது.
சுயாதீனமான உடல், உள ஆரோக்கியமுள்ள மனிதனின் சாதாரண நிலையை மாற்றி அசாதாரண தன்மைகளான தீமைகள், கொடுமைகள், வன்முறைகள் போன்றவற்றை தனக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் விளைவிற்பதற்குத் தூண்டுகோலாக அமைகின்ற ஒரு விஷக்கிருமியே போதையாகும்.
சாதாரண வீட்டு மட்டத்தில் ஆரம்பித்து சர்வதேசம் வரை அதன் தாக்கம் பாரிய அளவில் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சர்வதேச தினமும் உருவாக்கப்பட்டிருப்பதானது அதன் தாக்கத்தின் வியாபகத்தை எடுத்துக்காட்டுகின்றது. போதைப்பொருள் பழக்கமானது இன்று உலகில் சமூக, சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இன்று போதைப்பொருட்கள் பல வகைகளில் உள்ளன. இது நாட்டுக்கு நாடு பல்வேறு மார்க்கங்களால் கடத்தப்படுகிறது. இது எமது எதிர்கால சந்ததியை சீரழிக்கும் சக்திவாய்ந்த ஆபத்தாக விளங்குகிறது. இதனால் உடல், உளம் பாதிக்கப்படுவதுடன் குடும்பமும் சமூகமும் சீரழிகின்றன. இறுதியில் மரணத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 30 ஆண்டு காலம் தனிமனித ஒழுக்கத்திலும் நற்பண்புகளிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழ்ந்த வடக்கு கிழக்கில் புலிகளின் காட்டுப்பாட்டில் இருந்த தேசங்கள் இன்று போதை அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு தனது சுயத்தையும் மாண்புகளையும் இழந்து நிற்கின்றது. போரினால் சிதைவடைந்த தமிழ் மக்களின் மீள் உருவாக்கத்தின் ஆன்மாவாய் கருதப்படும் இளம் சமுதாயம் போதையின்பால் அடிமையுண்டு தானும் அழிந்து தன் நாட்டையும் அழிவிற்குட்படுத்துவது வேதனையின் உச்சம்.
கடத்தல்கள், கொலை, கொள்ளை, தற்கொலை, சிறுவர் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் வெறிக்கொலைகள், வாள்வெட்டு வன்முறை, வாகன விபத்துக்கள், கணினிக் குற்றங்கள், பாதாள உலகக் கோஷ்டியினருக்கிடையிலான மோதல்கள் என அதிகரித்து காணப்படுகின்றது .
குடும்ப, சமூக, பொருளாதார, ஆன்மீக, சூழலியல் சார் பாதிப்புக்களை உருவாக்குகின்ற ஒரு அம்சம் போதைப் பொருட்பாவனையாகும் என பொதுவாகக் கூறப்படுகிறது. இவ்வாறான போதைப்பொருள் பாவனையானது உள்நாட்டு யுத்தத்தித்திற்கு அடுத்தபடியாக இலங்கைச் சமூகத்தை பெரிதும் பாதித்திருப்பதில் முதலிடம் பெறுவது போதைப்பொருள் விற்பனையும், பாவனையுமாகும்.
போதைப்பாவனையின் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. உடல்ரீதியான பாதிப்புக்களுக்கு மேலதிகமாக உளரீதியான மற்றும் சமூக ரீதியான பாதிப்புக்கள் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாய் உணரப்படுகின்றன.
போதைப்பொருட்கள் பண்டைக்காலம் முதல் பாவனையில் இருந்து வந்துள்ளன. அபின், கஞ்சா, கள், சாராயம், கசிப்பு, பீடி, சிகரெட், சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்தன. விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பண்டைக்கால போதைவஸ்துக்கள் நவீன உருவிலும் இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. மிகச் சிறியளவு போதைவஸ்தை பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக போதைவஸ்துக்கள் இலகுவாக கடத்தவும் பரிமாற்றம் செய்யவும் வாய்ப்பாக உள்ளது.
நவீன உலகில் பண்டைக்காலத்து போதைவஸ்துக்கள் மாதிரி அல்லாது மேற்கத்தேய நாடுகளால் ஹெரோயின், கொகேய்ன், கோடீன், மோர்பீன், கனபிஸ், மர்ஜுவானா, ஹஸீஸ், ஐஸ், கஞ்சா கலந்த போதைவஸ்து போன்ற நவீன போதைவஸ்துக்களும் மற்றும் மாத்திரை வடிவில் தயாரிக்கப்படும் மாத்திரைகளும் சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. உலகில் சில நாடுகளின் பொருளாதாரம் போதைவஸ்துக்கள் வர்த்தகத்திலே தங்கியுள்ளது.
போதைப்பொருள் பாவனை சமூகத்திற்கு மட்டுமல்ல தனிநபருக்கு சுகாதார ரீதியாக பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்துகிறது. உடல் பருமன், ஈரல், குடல், சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு; மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு’ என பல விளம்பரங்களை ஆங்காங்கே பல இடங்களில் காண முடியும்.
உலகளாவிய ரீதியில் 15-64 வயதுக்கு இடைப்பட்ட 243 மில்லியன் மக்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இவர்களுள் 80% ஆண்களும் 20% பெண்களும் அடங்குவர். கடந்த மூன்றாண்டு காலமாக 6 லட்சம் பேர் போதைவஸ்து பாவனை காரணமாக உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகப் போதைப்பொருள் பாவனையாளர்கள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிபரப்படி உலகில் 2 கோடி பேர் ஹெரோயின் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் உள்ளனராம்.
மாணவ சமுதாயத்தில் தற்போது போதைப் பொருள் பாவனையின் வீதம் அதிகரித்தவண்ணமே உள்ளது. போதைப் பொருளை தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்படினும் பல்வேறு சட்டங்கள் இருப்பினும் அதனை முற்றாக ஒழித்துவிட முடியாதுள்ளது. இளம் வயதினரில் 13 தொடக்கம் 20 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் பலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
உலக நாடுகள் எல்லாம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வந்து கட்டுப்படுத்தி வருகின்றன. ஆனால் ஹெரோயின், கஞ்சா போன்ற பொருட்களை விற்பதும் பிற நாடுகளுக்கு கடத்துவதும் இன்று வரையிலும் பெரும் இலாபம் தரும் தொழிலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
இலங்கையின் திறந்த பொருளாதார கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை என்பனவற்றால் நவீன போதைவஸ்துக்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையை பொறுத்தவரையில் நவீன போதைவஸ்துக்கள் 1980ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கின. இலங்கையில் முதலாவது ஹெரோயின் விற்பனையாளர் 1981ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி 270 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை மாவட்டத்திலுள்ள ஒரு ஊரில் கைது செய்யப்பட்டார்.
போதைவஸ்து பொருட்கள் பாவிப்பது, கடத்துவது, வைத்திருப்பது போன்றவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அநேகமான நாடுகளில் இவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இலங்கையிலும் போதைவஸ்து கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலமே போதைவஸ்து பாவிப்பதனால் ஏற்படும் தீங்குகளில் இருந்து எமது நாட்டு சமுதாயத்தை பாதுகாக்க முடியும்.
குடும்ப வாழ்வை சீரழிக்கும், நாட்டை குட்டிச் சுவராக்கும் போதைவஸ்து பாவனையை வேரோடு களைய ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணுதல் அவசியம். இதற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் 1984ஆம் ஆண்டு தொடக்கம் அக்கறையுடன் செயற்படுகிறது.
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் 1987ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
மேற்கத்திய நாடுகளில் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்போது சதவிகிதத்தின் அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ள நிலையில் ஆசிய நாடுகளில் போதைப்பொருளுக்கு அடிமையானோரின் வீதம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றமை துரதிஷ்டமானதாகும். இதற்குக் காரணம் மேலைத்தேய நாடுகளில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற விழிப்புணர்வுகள் நம் நாடுகளில் இல்லாமல் போனமையாகும்.
சாதாரணமாக வருடமொன்றிற்கு உலகளவில் 11.8 மில்லியன் மக்கள் போதைப்பாவனை காரணமான நோய்களால் இறந்து போகின்றனர். 3,50,000 இறப்புக்கள் மதுப்பாவனையால் நிகழ்கின்றன. இவ்வாறு பல உயிரிழப்புக்களுக்கும் நோய் நிலைமைகளுக்கும் பல பேருடைய குடும்பங்கள் சீரழிவாகட்டும், இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுதல் ஆகட்டும், இவற்றுக்கெல்லாம் காரணமான போதைப்பொருட்களை தடைசெய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். போதைப்பாவனைக்கு எதிராக பல கோடிகளை செலவழித்து விளம்பரம் போட்டுக் கொண்டிருக்கும் அரசாங்கம் ஏன் மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குகிறது எனும் சாமானிய மக்களின் கேள்விக்கு பதிலென்ன?
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத்திட்டத்தின் தலைவர் ஆலன் கோல் கூறுகையில், “கொவிட்-19 முடக்கங்களுக்கு மத்தியில் போதைப்பொருள் கடத்தலுக்கான நில வழிகள் தடை செய்யப்பட்டுள்ளதால், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு கடல் மார்க்கம் இலகுவானதாக மாறியுள்ளது” என கோல் தெரிவித்துள்ளார் .
தமிழரின் ஜனநாயக போராட்டத்திலும், பண்பாட்டு வளக்காற்றில் மிகவும் உச்ச பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதை எவரும் மறுத்து விட முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
வடக்கு கிழக்கு தாயகத்தில் விடுதலைபுலிகள் காலத்தில் போதை பொருட்கள் அறவே இருந்ததில்லை ஆனால் அதன் தாக்கம் 2009 மே 18ஆம் தித்திக்குப் பின்பே திட்டமிட்டு போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை ஆக்கிரமித்துள்ளது. விடுதலைப்புலிகளால் செய்ய முடிந்ததை இலங்கை அரசாங்கத்தால் செய்ய முடியாது போயுள்ளது.
விடுதலைப்புலிகளின் காலத்தில் ஒழுக்கம் மிகுந்த காலமாக வடக்கு கிழக்கு எங்கும் இருந்தது. இந்த உண்மையை மறுதலிக்க முடியாது.
2020ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 27 கோடியே 50 இலட்சம் (275 million) மக்கள் போதைப்பொருளைப் பயன்படுத்தியதில், சுமார் 3 கோடியே 60,00,000 (36 million) மக்கள் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC) வெளியிட்டுள்ள 2021 ஆண்டறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பில், 2022ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே காலகட்டத்தில் 377 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை, தொடர்பில் 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் 67,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது 2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 77.8 சதவீத அதிகரிப்பாகும். தரவுகளின்படி கைது செய்யப்பட்ட 67,900 பேரில் 35,765 பேர் ஹெரோய்ன் போதைப்பொருட்களுக்காகவும், 25,114 பேர் கஞ்சாவுக்காகவும், 6,728 பேர் ஐஸ் போதைப்பொருள் தொடர்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மொத்த அளவு 1,046 கிலோவாகும்; நாடளாவிய ரீதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் அளவு 10,214 கிலோவாகும். மேலும் 377 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் போதைப்பொருட்களின் சந்தை விலைகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஒரு மாத்திரையின் அளவு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையில் விற்பனையாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி போதைவஸ்து ஒழிப்பு சர்வதேச தினத்தின் தொனிப்பொருளாக ‘ஆரோக்கியம், மனிதாபிமானம் ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் போதைப்பாவனை’ (Addressing drug challenges in health and humanitarian crises) அமைந்திருக்கிறது.
போதைப்பாவனை அதிகரித்து செல்வதனால் விழிப்புணர்வை ஏற்படுத்தி யாழ்.போதனா வைத்தியசாலை சமூகம் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து மாவட்ட செயலகம் வரையில் நடைபவனியாக சென்று மாவட்ட செயலரிடம் ஐந்தம்ச கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்துள்ளனர்.
அதில் குறிப்பிட்டு இருந்தவையாவன:
1. போதைப்பொருள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முப்படைகளையும் உடனடியாக வலியுறுத்துதல்.
2. போதைப்பொருள் விநியோகம் தொடர்பான தகவல்களை வழங்குவோரை பாதுகாப்பதற்கான பொறிமுறையை உருவாக்குதல்.
3. போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை தயக்கமின்றி வழங்க அதிபர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதலும், அவர்களைப் பாதுகாத்தலும்.
4. போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து போலீசாருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு உதவியளித்தலும், ஊக்கப்படுத்துதலும்.
5. போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிப்பதற்கு உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளை உறுதிப்படுத்தலும். என்றுள்ளது.
வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு என்பது, தமிழ்ச்சமூக கட்டமைப்புகளின் வீழ்ச்சி மற்றும் பொறுப்பின்மையின் விழுமியங்கள் சார் அணுகுமுறையை, சமூகக் கட்டமைப்புகள் அல்லது சமூக நிறுவனங்கள் மக்கள் மத்தியில் வளர்த்தெடுக்காமல் காலாவதியாகி விடப்பட்டிருக்கின்றது
அதனால் புறச்சக்திகள் தமிழ் மக்கள் மத்தியில் நுழைவது இனத்தின் இருப்பை அழிப்பதிலும் குறைப்பதிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மாயத்திரை விம்பத்தை முற்றாக விலக்கி வைக்க வேண்டும். வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரச கட்டமைப்பே காரணம் என்று குற்றஞ்சாட்டிவிட்டு விலகி ஓடுவது சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாகும்.
அரச கட்டமைப்புகள் மட்டும் காரணமல்ல. மாறாக அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் தரப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அந்தத் தரப்புகளை அடையாளப்படுத்தி எச்சரிக்கை செய்வதுதான் தமிழ்த்தேசியத்துக்கான அர்ப்பணிப்பும் அறமும் ஆகும். இல்லையென்றால் போதைப்பொருள் பாவனையால் மாத்திரமல்ல, சமூக குற்றங்களாலும் தமிழ் சூழல் இன்னும் மோசமாக தள்ளாடத் தொடங்கிவிடும்.
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் அதிகளவிலான போதைப் பொருள்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும் ஆபத்தான போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரசபையின் (National Dangerous Drugs Control Board) அறிக்கை தெரிவிக்கின்றது.
2015ஆம் ஆண்டின் ஆய்வுகளின்படி தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச்சபையின் சிகிச்சையின் திறனை பொறுத்தவரையில் 64 வீதமான சிகிச்சை பெற்றவர்கள் விடுதலையான பின்பு போதைப்பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்தனர்.
இது அதிகளவானவர்கள் போதைப்பொருள் பாவனையை மீண்டும் ஆரம்பித்ததை சுட்டிக்காட்டுகிறது. 2018இல் வெளியிடப்பட்ட அதே போன்றதொரு அறிக்கையில், நேர்காணல் செய்யப்பட்ட 170 நபர்களில் அரசினால் செய்யப்பட்ட வலுக்கட்டாயமான போதைப்பொருள் தடுப்பு சிகிச்சையின் பின்பு 123 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த அறிக்கைகள் வலுக்கட்டாயமான புனர்வாழ்வளிப்பதானது செயற்திறன் அற்றதாகயிருப்பதை காட்டுகிறது. வலுக்கட்டாயமான போதைப்பொருள் தடுப்பு சிகிச்சை முறையானது செயற்திறனற்றது என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன.
2018ஆம் ஆண்டு போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வருடம் முழுவதும் ஏறத்தாழ 738 கிலோ 560 கிராம் நிறையுள்ள போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டே அதிகூடிய போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக பேசப்பட்டுவந்தது. அவ்வாண்டில் 350 கிலோ 554 கிராம் அளவே அதிகூடிய நிறையாக பதிவாகியிருந்தது.
2019ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தனது விஞ்ஞாபனத்தில் “போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தலுக்கு முன்னுரிமை கொடுப்பேன்” என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்ததற்கு இணங்கவே போதைப்பொருள் கட்டுப்பாட்டில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசாங்கமானது போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் இராணுவமயப்படுத்தப்பட்ட அணுகுமுறையை கையாள்கின்றது.
போதைப்பொருட்கள் மீதான யுத்தத்தில் இராணுவமானது விஷேடமான வகிப்பங்கினை கொண்டுள்ளது. குறித்த வகிபங்கானது போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதில் மாத்திரமல்லாது போதைப்பொருள் அடிமையானவர்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் தடுத்து வைத்தல் போன்றவற்றையும் உள்ளடக்குகிறது.
கடந்தாண்டில் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 40870 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள், 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்தாண்டு அதிகூடிய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட ஆண்டாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2018 டிசம்பர் 31ஆம் திகதி போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் திடீர் சுற்றி வளைப்பின் போதே கொழும்பு, தெஹிவளை இரு மாடி வீடொன்றிலிருந்து பதுக்கிவைக்கப்பட்ட நிலையில் சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான 32 கிலோ எடையுள்ள போதைத்தூள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் 1 டு 3 மில்லியன் ரூபாய் பெறுமதியானது. இதில் 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக் கொள்ள முடியுமாம். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போதைப்பொருளுக்கு நிரந்தரமாக அடிமையாகியுள்ளதாக தேசிய போதைத்தடுப்பு சபை எச்சரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே இப்பாவைனை சடுதியாக அதிகத்திருப்பதை அது சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டில் போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 29,790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 60% ஆனோர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்; 39% ஆனோர் 20 வயதை நெருங்கியவர்களாவர். கடந்த ஒரு சில வருடங்களில் சிறுவர்களிடத்தில் குறைந்திருந்த போதைப்பொருள் பாவனை மீண்டும் நாட்டில் தலை தூக்கிவருவதாகவும் புகைத்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.
போதைவஸ்துக்கு அடிமையானவர்கள் 50% திருமணமாகாத இளைஞர்களாவர். இவர்களுள் பலர் பல்கலைக்கழகம், உயர்தர, சாதாரணதர மாணவர்களாவர். 45% திருமணமானவர்கள். இதில் 50% முதல் 69% ஆனவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது. உலக அளவில் சுமார் 140 மில்லியன் மதுப்பிரியர்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மதுப்பாவனையை பொறுத்தவரையில் உலக அரங்கில் இலங்கைக்கு 4ஆவது இடம் கிடைத்திருக்கிறது. இலங்கையில் தனிமனித மது பாவனை 4 லீற்றராக மதிப்பிடப்பட்டுள்ளது; அதுவே ஆணுக்கு 15.2 லீற்றராக உள்ளது. சமூக வறுமையுடன் கூடிய அவல வாழ்க்கையை மறக்க குடி ஒரு தீர்வாகக் கையாளப்படுகின்றது. குடி சமூகப் பிரச்சனைக்கு வடிகாலாகின்றது. இதன் விளைவாக நகர்புற குடிசைப் பகுதிகளில் 43 சதவீதமானவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர்.
பெருந்தோட்டப் பகுதியில் இது 55 சதவீதமாக உள்ளது. பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இது தவிர இதற்காக அவர்கள் சராசரியாக செலவழிக்கும் பணம் நாளொன்றுக்கு 950-1000 ரூபாய் என்று மதிப்படப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்தக் குற்றச்செயல்களில் 38 சதவீதமானவை மது பாவனையால் ஏற்படுகின்றது. அதாவது போதையினால் ஏற்படுகின்றது. கடந்த ஆண்டில் நடந்த மொத்த வாகன விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 2800 ஆகும். இதில் 90 சதவீதமானவை மதுவினால் நடந்துள்ளது. ஒட்டு மொத்தத்தில் கொலை, பாலியல் வன்முறை, விபச்சாரம் போன்றவை தேசியப்பண்பாகி கொடிகட்டிப் பறக்கின்றது.
போதைப்பொருள் பாவனையில் இலங்கையில் முதலாம் இடமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகின்றது. இது 71% ஆக காணப்படுகின்றது. இரண்டாவதாக கம்பஹா மாவட்டம் உள்ளது. இது 22% ஆக காணப்படுகின்றது. மேல் மாகாணமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 6,00,000 இற்கு மேற்பட்டவர்கள் கஞ்சா பாவிப்பவர்கள். நாட்டில் கடந்த ஆண்டுகளில் ஹெரொயின் எனும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
தென்னிலங்கையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசமெங்கும் போதைப்பொருள் பாவனை காரணமாக சமூகம் பேரழிவைச் சந்திக்கும் நிலையே காணப்படுகிறது.
ஹெரோயின், கொக்கேன் போன்ற சர்வதேச போதைவஸ்துகள் தாராளமாக புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் தமக்கு அவற்றை வாங்குவதற்கு பணம் கிட்டாத போது திருட்டுச் சம்பவங்களிலும், கொள்ளைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். சில சந்தர்ப்பங்ளில் அதற்காக கொலை வெறியர்களாக மாறும் நிலை கூட ஏற்படுகின்றது.
தென்னிலங்கையைப் போன்று வட-கிழக்கிலும் போதைப்பொருள் பாவனை கூடிக்கொண்டே போகின்றது. அதுவும் இளம் பருவத்தினரே அதிகமாக போதைக்கு அடிமையாக வருகின்றனர். கிழக்கில் மறைமுகமாக இடம்பெற்று வந்த போதைப்பொருள் பாவனை இன்று வெளிப்படையாகவே இடம்பெற்றுவருவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் மாவா, கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் சில பாடசாலை மாணவிகளும் ‘மாவா’ என்பதில் சிக்கியுள்ளமையாகும்.
வடக்கிலும் போதைவஸ்துப் பாவனை அதிகரித்து வருகின்றது. வடபுலத்தில் போதைப்பொருட்களை தாராளமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதொரு நிலைமை உருவாகி இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உயிர்கொல்லிப் போதைப்பொருளான ஹெரோய்ன் பயன்படுத்திய 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர் தற்கொலைமுயற்சிகளும் அதிகரித்துக் காணப்படுகிறது .
ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதம் 54 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஜுலையில் 53 பேர், ஆகஸ்ட் மாதம் 93 பேர், செப்டம்பர் 112 பேர் என சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 350 அதிக்கமானவர்கள் பேர் வரையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்கள் .
யாழ்.மாவட்டத்தில் 20 கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஹெரோய்ன் பாவனைக்கு முற்றாக அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது. ஹெரோய்னுக்கு அடிமையானவர்களில் அதிகமானோர் 16-23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், நகரிலுள்ள பிரபல பாடசாலைகளின் மாணவர்களும் இதற்குப் பழக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நூற்றுக்கணக்கான முகவர்கள் ஊடாக அவை வடக்குப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு சகல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன.
அதிகமாக ஹெரோய்னை ஊசி மூலமே அதிகளவானோர் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு 30 மில்லி கிராம் தொடக்கம் 300 மில்லி கிராம் வரையில் நுகர்கின்றனர். 16-23 வயதுக்கும் இடைப்பட்ட பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட் இளைஞர்களே ஹெரோய்னை அதிகளவில் நுகர்கின்றனர்.
இனவழிப்பு போரினால் சிதைவடைந்த வடக்கு கிழக்கு மக்கள் மீள் உருவாக்கத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய இளம் சந்ததியினரும் பாடசாலை மாணவர்களும் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையில் சிக்கவைக்கப்பட்டு வருகின்றார்கள்.
ஹெரோய்ன் நுகரும் பெரும்பாலான இளைஞர்களின் பெற்றோர் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தாமே தமது பிள்ளைகளை பொலிஸில் ஒப்படைக்கின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. சில பெற்றோர் மருத்துவமனைகளிலும் தமது பிள்ளைகளை ஒப்படைத்துள்ளனர்.
“எவ்வளவு காலம் சென்றாலும் பரவாயில்லை. இவனை நீங்கள் வைச்சிருங்கோ. வெளியில விட்டால் பெரிய பிரச்சினை” என்று தெரிவித்து தாய் ஒருவர் அண்மையில் தனது மகனை மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான சுமார் 320 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஹெரோய்னுக்கு அடிமையானமையால் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதானவர்களும் இதற்குள் உள்ளடங்குகின்றனர்.
தொடர்ந்தும் வடக்கில் அதிகரித்துச் செல்வதால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விசேட சிகிச்சைப் பிரிவு இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இதுவரை 135ற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். வடக்கில் உள்ள கிராமங்களிலுள்ள இளைஞர்களில் அநேகர் இதனைப் பயன்படுத்துகின்றமையும் பல்வேறு தரப்புக்கள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழர் பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.
இதனால் சமூகக் குற்றங்களும் இளவயதினரின் தொடர் மரணங்களும் பதிவாகி வருகின்றன. போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் காரணமாக யாழ்.சிறைச்சாலையில் 304 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
தலைநகரிலும் கிராமப்புறங்களிலும் முக்கியமாக பிரசித்தி பெற்ற பாடசாலைகளுக்கு அண்மித்த இடங்களில் மறைமுகமான விதத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்து விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் எந்தப் பகுதியை எடுத்துக்கொண்டாலும் நகரம், கிராமம், வீதிக்கு வீதியென சகல இடங்களிலும் இன்று போதைப்பொருட்கள் கிடைக்கக்கூடிய நிலையையே காண முடிகிறது.
பொதுவாக இலங்கையில் ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜுவானா ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே பாவனையிலுள்ளன. இவற்றை 12 சதவீதமானோர் ஊசி மூலமே ஏற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெவிக்கின்றன. இவர்கள் குடும்பப் பிரச்சினை, கல்வியில் தோல்வியடைதல், வேலையின்மை, காதல் தோல்வி மற்றும் கூடாத சகவாசம் போன்ற பல காரணங்களுக்காக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.
இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க ஆரம்பித்துள்ளன. இந்த போதைப்பொருட்கள் கடந்த ஆண்டுகளில் இலங்கையில் பரவ ஆரம்பித்தாக தெவிக்கப்படுகிறது.
புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சமுதாயத்தை பாதுகாப்பது என்ற நோக்கிலே அரசாங்கங்கள் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. என்ற போதும் இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இப்பாவனையை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. எனவே இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகிறது.
போதைப்பொருள் பாவனை பெண்கள் மத்தியிலும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு 10 பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் தாய் ஒருவர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் போதைப்பொருள் பாவித்தமை, உடைமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
இந்த வருடத்தில் 05 பெண்கள் போதைக்கு அடிமையானவர்கள் என இனம் காணப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதேவேளை தாய் ஒருவரே தனது 11 வயதே நிரம்பிய மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தி வந்தமை கண்டறியப்பட்டு, தற்போது சிறுமி மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தந்தை போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கம் அறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தாயார் சிறுமி மூலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கவல்ல இந்த போதைப்பொருளை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக போதைப்பொருள் கடத்தலுக்காக சில நாடுகள் மரண தண்டனையையும் சட்டமாகப் பிரயோகித்து வருகின்றன.
மது பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலீஸ் திணைக்களம், பொலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, மது வரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களங்கள், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன.
இதேபோல் இலங்கையில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக போதைத் தடுப்பு பணியகம் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த முறைகேடான பழக்கத்தை முற்று முழுதாக ஒழிக்க அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
இந்த போதைப்பொருள் பாவனை சிறுபிராயத்திலியே ஏற்பட்டு விடுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் தனிமையை விரும்பினால், அடிக்கடி பணம் கேட்டால், படிப்பில் நாட்டம் குறைந்தால், நடத்தைகளில் மாற்றம் தெரிந்தால், வழக்கத்திற்கு மாறாக நடவடிக்கை தென்படுமாயின் அவர்களை சற்று கூர்ந்து அவதானிப்பது சிறந்தது.
முக்கியமாக இன்றைய இளம் சதாயத்தினர் இணையதளத்தை தங்கள் உலகமாகக் கருதி வாழ்வதால் அடிக்கடி அவர்கள் பார்க்கும் இணையதளங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும். இவற்றைத் தவிர சிறுவயதிலிருந்தே கற்றலில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தல், பத்திரிகை வாசித்தல், விளையாடுதல், இறைவழிபாடு செய்தல் போன்ற பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுத்தல் சிறந்தது. இதன்மூலம் நமது குழந்தைகளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
மாறாக அவர்கள் யாராயினும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டார்கள் எனின் மருத்துவர்களினதும் உள வளத்துணையாளர்களினதும் ஆலோசனைப்படி செயலாற்றுவது நல்ல பலனைக் கொடுக்கும். இது அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிச் செல்லாமல் இருக்கவும் வழி சமைக்கும்.
புகைத்தல் பாவனைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது போன்று போதைப்பொருள் பாவனையையும் தடுக்கச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இருக்கும் சட்டத்தை கடுமையாக்குவதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.
பொலிஸார், பொது மக்கள் தொடர்பு செயற்பாட்டுத் திட்டத்தின் மூலம் நாடு தழுவிய நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாயச் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தவறினால் எமது தேசத்தினதும், சமுதாயத்தினதும் எதிர்காலம் பேரழிவுக்குள் தள்ளப்பட்டதாகவே அமைந்து விடும்.
ஆறுமணி நேர அற்ப சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்கையை பணையம் வைக்கும் இளைய சதாயத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை மீட்பது நம் அனைவரதும் கடைமையாகும். எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப்பொருள் பாவனையில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் .
அரசாங்கமும் ஊடகங்களும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகவும் பொது மக்களுக்கு அச்சுறுத்தலானவர்கள் என்றும் பிழையாக கருத்தைப் பரப்புகின்றன. அதனால் அனைவரும் அவர்களை குற்றவாளிகளாக்கி ஒதுக்கும் நிலைப்பாடு காணப்படுகின்றது. இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாடுகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்பட வழிவகுக்கின்றன. அவை பொதுவெளியில் குறைந்தளவிலான கவனத்தையே ஈர்த்துள்ளன
இராணுவத்தால் நடாத்தப்படும் நிலையங்களில், ‘சிகிச்சை’ என்ற பெயரிலோ அல்லது ‘தண்டனை’ என்ற பெயரிலோ பரவலாக வன்முறை இழைக்கப்படுகிறது.
இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தங்கியிருக்கும் காலம் முழுவதும் வன்முறை, முறையற்ற நடத்துகை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகின்றனர். வன்முறைகள் மற்றும் தவறான நடத்துகைகள் தண்டனைக்காக அல்லது காரணமேயில்லாமல் அங்கு தடுத்து வைக்கப்படும் நபர்களின் மேல் இழைக்கப்படுகின்றன. ஏதேனும் பிழை செய்தால் அல்லது எவரேனும் விதிமுறைகளுக்கு கீழ்படியாமல் இருந்தால் அந்த நபர்கள் அடிக்கப்படலாம், வயரால் தாக்கப்படலாம், பலாத்காரமாக அதிகமான புஷ் அப்கள் செய்விக்கப்படலாம் அல்லது வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வதற்கும் ஆளாக்கப்படலாம்.
ஒரு சந்தர்ப்பத்தில் சண்டையில் ஈடுபட்ட நபரொருவர் மூன்று நாட்களுக்கு தான் மரத்தோடு இணைத்து விலங்கிடப்பட்டதாக கூறினார். அத்தருணத்தின் போது அவர் மூன்று நாட்களும் நின்றுக் கொண்டிருக்க நேரிட்டது. சாப்பிடுவதற்கும் கழிப்பறையை பயன்படுத்தவுமே அவர் விடுவிக்கப்பட்டார். உணவு மற்றும் நீர் என்பன அவருக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்டதுடன் அவர் உறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
போதைப்பொருள் பாவனையைக் குறைக்கும் முகமாகப் பல விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இருந்தும் இப்பாவனையை முற்றாக ஒழிக்க முடியாதுள்ளது.
போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் செயற்பாடுகளை ஒழிக்க அதிக நாடுகள் முயற்சித்தும் இவை இரண்டும் குறைந்தபாடில்லை. இவைகளின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. போதைப்பொருள் கடத்தல் தரை, கடல், வான் மார்க்கமாக நடைபெறுகின்றது. இதனால் அதிக பணத்தை இதில் ஈடுபடுபவர்களும் பெற்று வருகின்றனர். இலங்கை பொலிஸ் திணைக்களம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, கரையோர பாதுகாப்புப் பிரிவு, முப்படைகள், மதுவரித் திணைக்களம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. போதைத் தடுப்புப் பணியகமும் விசேடமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் அரசுகளும் அரச இயந்திரங்களும், அரசியல் பின்புலமும் அரசுசாரச தனிமனித வல்லாதிக்கங்களின் தொடர்புகள் இல்லை என மறுத்திடவும் முடியாது .
போதைப்பொருள் மாபியாக்கள், உலகம் பூராவும் இளவயதினரையே குறிவைத்து தங்களது வியாபாரத்தை திறக்கின்றன. அதிலும் குறிப்பாக பதின்ம வயதினரை போதைக்கு இரையாக்குகின்றார்கள். அந்த வயதில் போதைக்கு அடிமையாக்கிவிட்டால் போதை மாபியாக்களுக்கு அவர் வாழ்நாள் வாடிக்கையாளர். அப்படித்தான் இலங்கையிலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தே போதைப்பொருள் வர்த்தகம் விஸ்தரிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்துதல் என்பன பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுகின்றன.
குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகள், வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற பெற்றோர்களின் பிள்ளைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள் என்போரை இலக்கு வைத்தே போதைப்பொருள் பழக்கப்படுத்தப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனை முகவர்கள் முன்னதாக போதைப்பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை பழக்கப்படுத்தி அவர்கள் போதைக்கு அடிமையான பின்னர், அவர்களுக்கு போதைப்பொருளுக்கான பணத்திற்காக அவர்களையே போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றுகின்றார்கள். வடக்கு கிழக்கில் பாடசாலைகளில் இருந்து இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதையுடன் தொடர்புடைய குற்றங்களில் நாளாந்தம் அடையாளப்படுத்தப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை நாளைய பிரளயத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
நாளைய தலைவர்களாக, துறைசார் நிபுணர்களாக, சமுதாயத்தை தேசத்தையும் நல்வழிப்படுத்தும் முன்னோடிகளாக மாறவுள்ள மாணவர்கள் போதையின் பிடிக்குள் சிக்குவது, தமிழர் தேசத்தை போதைவஸ்து சீரழிக்க வேண்டும் என்ற பௌத்த வல்லாதிக்கத்தின் சிந்தனையின் செயல் வடிவமே.
இளைய தலைமுறைப் பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பில் ஆர்வம் குறைதல், விளையாட்டுகளில் ஆர்வம் குறைதல், சோம்பல், சற்று ஆர்வம் குறைந்த தோற்றம், பெற்றோரிடம் வாக்குவாதம் செய்வது, ஆசிரியரிடம் அதிக வாக்குவாதம் செய்வது காணப்பட்டால் கூடிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் என்று அடையாளம் காணப்பட்ட பலரும் வெளிப்படையாக உலாவி வருகிறார்கள். எப்போதாவது ஒரு சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டாலும் அவர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான வழிவகைகளை பொலிஸார் செய்வதில்லை இவர்களின் கையூட்டல்களும் சுகபோக வாழ்கையுமே அதை தீர்மானிக்கிறது
போதைப்பொருட்கள் பாதுகாப்புப் படைகள் நிறைந்த தமிழர் பகுதிகளில் அதிம் கைமாற்றலுடன் கடத்தப்படுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்ட பலரும் நீதிமன்றங்களில் நிறுத்தப்படாமலேயே விடுவிக்கப்படுகின்ற காட்சிகள் அடிக்கடி அரங்கேறிய வண்ணம் உள்ளது.
தென்னிலங்கை பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையோடு வடக்கு – கிழக்கின் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பை அணுகுகின்றது. அரச கட்டமைப்புகள் விற்பனை முகவர்களுடன் மிக நெருங்கிய உறவு நிலையினையும் பலப்படுத்தி செயற்பட்டு வருகிறது.
கடத்தல்காரர்களுடன் இணைந்து செயற்படும் மற்றும் உதவி புரியும் சிறைச்சாலை, சட்ட அமலாக்க மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன 2020ஆம் ஆண்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் பிரதிநிதிகளாக தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த்தேசியம் பேசும் அரசியற் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் அதனுடன் தொடர்பாக இருப்பதும் அதன் ஆதரவுகளும், தமிழ்த்தேசியம் பேசும் கட்சிகளில் இருக்கும் சில சட்டத்தரணிகள், கஞ்சா கடத்தல்கார்களுக்கும், மாபியாக்களுக்கும் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிட்டு, விடுவிக்கும் காட்சிகள் தொடர்ச்சியாக அரங்கேறுவதுண்டு.
தமிழர் தேச விடுதலைப் போராட்டம் என்பது, அறத்தில் இருந்து எழுந்தது. அப்படியான அறத்தைப் பேணுவதற்குப் பொருத்தமானவர்கள் என மக்கள் தெரிவாக அதில் இயங்கும் நபர்கள் அறத்தோடு இருக்க வேண்டும். அந்த அறம், கட்சியிலும் அதன் அரசியலிலும் சட்டத்தின் அணுகுமுறையில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்தரணிகளின் தொழில் தர்மத்தை பல நேரங்களில் கேள்விக்குள்ளாக்கியும் விடுகிறது .
அப்படியான நிலையில், குறைந்தபட்சம் அறத்தினை காக்கும் அரசியலுக்காக அவர்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதில் முக்கியமானது போதைக்கு எதிராக நிலை. இல்லையென்றால், கண்முன்னாலேயே தமிழ்ச்சமூகம் மோசமாகச் சீரழிந்து போகும். அப்போது அவர்களை அழிக்க வேறு யாரும் தேவை இருக்காது; தாங்களாகவே அழிந்து போய்விடுவார்கள்.
நாம் இன்றைய நிலையில் விரைந்து செயற்படவேண்டிய தருணம். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பரந்துபட்ட கட்டமைப்பை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது அனைவரினதும் கடமையாகும். அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினரும் முன்வர வேண்டும்.
போதைப்பவனையின் பாதிப்புக்கள் தொடர்பில்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மேடை நாடகங்களை நடத்துதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்கை விபரித்து துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் போன்ற விளம்பரங்களை செய்துகொண்டே அவற்றை ஊக்குவிக்கும் பணியையும் அரசாங்கம் செய்கின்றது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கில்லை.
நாட்டில் ஆட்கொண்டுள்ள போதைப்பொருள் பாவனையால் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட யுவதிகளும் அதிகம் பாதிக்கப்படுவதால் இதுபோன்ற பிரகடனங்கள் இன, மதம் பாராது ஒவ்வொரு மத ஸ்தலங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு, சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் நிச்சயம் இளைய சமுதாயத்தைக் காப்பாற்றலாம் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக அமைந்து தொடர்ந்தும் இந்த நடவடிக்கைகளை பல மத ஸ்தலங்கள் மேற்கொண்டாலும் மேலும் துரித கதியில் விழிப்புணர்வை உருவாக்கவேண்டிய பொறுப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும்
போதைப்பொருளுக்கு எதிரான சட்டதிட்டங்களை கடுமையாக்குவது இன்றை சூழ்நிலையில் அத்தியாவசியமாகிறது. ஒவ்வொரு தன்னையும் தானது நாட்டையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும். அரசாங்கமும், அரச இயந்திரங்களும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு படை வேலியை மேயாமல் கடமையை சரியாக செய்ய வேண்டும். சட்டம் இறுக்கமாக்கப்பட வேண்டும்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளித்தல், சமூகமயப்படுத்தல் மற்றும் தொழில்ரீதியான ஆற்றல்களை மேம்படுத்துதல் என்பவை இப்போது அவசியமாகிறது. ஹெரொயின், கஞ்சா, கேரள கஞ்சா, மதுபானம் மற்றும் போதை குழுசைகளை பயன்படுத்துதல் என்பவற்றின் காரணமாக வாழ்க்கையை இருளாக்கிக்கொண்ட போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு மனநிலை சிகிச்சை, உளவளத்துணை ஆலோசனை மற்றும் மருத்துவவியல் அணுகுமுறை என்பவற்றின் ஊடாக புனர்வாழ்வளிக்கபட வேண்டும்
நாம் ஒவ்வொருவரும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு ஒத்துழைப்பு நல்குதல் அவசியம். ஆனால் அக்கட்டுப்பாட்டுச் சபை ரகசியம் பேணும் நிலையுடன் செயற்பட வேண்டும். போதைபொருட்கள் பாவிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், நாட்டுக்குள் கடத்தி வருபவர்கள் யாராக இருந்தாலும் எமக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபைக்கு தெரிவிப்பது நாம் எமது நாட்டுக்கும் எமது சமுதாயத்துக்கும் செய்யும் பேருதவியாகும். யாராவது போதைவஸ்து பாவனைக்கு அடிமையாகி இருப்பது தெரிந்தால் உடனடியாக மருத்துவமனை, போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தை போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பது முக்கியமானதும் அவசியமானதுமான விடயமாகும்.