காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது என இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 23ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் கூறுகையில்,
நாங்கள் தெருவிலிருக்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா? எங்கள் சொந்த நிலத்திலிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்.
நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் நிம்மதியாக தொழில் செய்து வாழ வேண்டும். பூர்வீகமான இடத்தில் உள்ள வருமானத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள்.
கையளவு தூரத்தில் வருமானம் வரும் வாழ்வாதாரம் எங்கள் ஊரிலுள்ளது. எங்கள் மண்ணை விடுவியுங்கள்.
அந்தக் கடலில் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக நாங்கள் வாழ்ந்த மண்ணை படையினர் தம்வசம் வைத்துள்ளார்கள்.
காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். அங்கு எத்தனை பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. அதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம். அதனை பறித்திருப்பது எங்களை சாகடிப்பதற்கு சமமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.