மேஜர்
தாரணி
மதிவதனி சுப்பிரமணியம் – அத்தாய், பூநகரி, கிளிநொச்சி
20.02.1968 – 23.01.1991
யாழ்ப்பாணம் கட்டுவனில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரின்போது எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு
மேஜர் தரானி
எங்கள் தாரணியை எல்லோரும் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். இவள் சின்ன வயதிலேயே பெரிய பொறுப்பினைச் சுமந்து நின்றாள். எமது தேசம் விடுதலை பெற வேண்டும் என்று துடித்தவள். கூடவே சகல நிலைகளிலும் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும். சகல அடக்குமுறைகளையும் தகர்த்தெறிந்து எமது தேசத்தின் வாழ்வில் அவர்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும், என்பதற்காக அயராது உழைத்தவள்.
இவள் வீரச்சாவு அடைந்து ஒரு வருடத்திற்கு மேற்சென்றும், அவளைத் தெரிந்தவர்களுக்கு, அவளை நேசித்தவர்களுக்கு அவளின் மறைவு இன்றுதான், இந்த நிமிடந்தான் நடந்தது போன்ற ஏக்கம் அந்த உணர்வு, அவர்களுக்கே சொந்தமாகிப்போன ஒன்று.
அவள் எங்களுடன் இல்லை , என்ற அந்த உணர்வு ஒவ்வொரு நிமிடமும் நெஞ்சைத் தாக்க, தாரணி இந்த நேரம் இல்லாமல் போய் விட்டாளே…… என்றும், அவள் இருந்தால் இப்படி, இப் படித்தான் இருந்திருப்பாள் என்றும், எங்களுக்குச் சந்தோசம், கவலை வருகின்ற நேரங்களில் எல்லாம்
சொல்லிக்கொண்டிருக்கத்தான் எங்களால் முடிகின்றது.
அவளது இழப்பை மறக்க நினைத்தும் மறக்க முடியாமல், அவளது நினைவுகளுடன் ஒன்றிப்போய் அவளது கனவைச் சுமந்து கொண்டு அவளது பிள்ளைகள் இன்றும், என்றும்………….
விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமிலே இவள் இணைந்து பயிற்சி பெற்றாள். பயிற்சி முகாமிலே மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்டிருந்த தாரணி, எந்தக் கடினமான பயிற்சியையோ அன்றி வேலையையோ செய்து முடிக்கக் கூடிய அளவுக்கு மனவுறுதி படைத்தவளாகவும் இருந்தாள். இந்திய மண்ணில் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்தபின் மகளிர் படையணியினர் முதல் முதல் பங்கு கொண்ட மன்னார்அடம்பன் நேரடி மோதலில் மிகவும் திறமையாகச் செயற்பட்டாள். இச் சண்டையின்போது இவளது கையில் சிறிய காயமேற்பட்டது.
இதேபோன்று, இந்திய இராணுவம் எம்மண்ணில் காலடி வைக்கும் வரை சிறிலங்கா இராணுவத்துடன் நடைபெற்ற பல சண்டைகளிலே தாரணி பங்கு கொண்டு தன் ஆற்றலை வெளிப்படுத்தினாள்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருக்குலைந்து, இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போது, உலகின் வல்லரசு ஒன்றுடன் மோதி என்ன செய்ய முடியும், என்று பலர் திகைத்து நின்றபோது மிகவும் மனோவலிமையுடன் நின்று போரிட்டவள்.
இந்திய இராணுவத்துடன் குடா நாட்டுக்குள் நடந்த பல மோதல் களிலும், வன்னி, மணலாறு போன்ற இடங்களில் நடந்த பல மோதல்களிலும் இவள்பங்கு கொண்டிருந்தாள்.
மணலாற்றுக்காட்டுக்குள் இருக்கும் எந்த மரங்களுடன் பேசிப் பார்த்தாலும், அவை ஒவ்வொன்றும் தாரணியைப்பற்றிக் கதை கதையாகக் கூறும். ஒவ்வொரு நாளும் காட்டுக்குள் அவள் நடந்த தூரம் மிக அதிகம். இந்திய இராணுவத்தால் சுற்றி முற்றுகையிடப்பட்ட அந்தக்காட்டுக்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வருவதற்கு இவளும் இவளது தோழர்களும் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்த நேரத்தில்தான் பெண்கள் துணிந்து இயங்க வேண்டும், அவர்கள் சுயமாகச் செயற்பட வேண்டும் என்று அனைத்து நிகழ்வுகளிலும் பெண்கள் தனித்துச் செயற்பட விடப்பட்டபொழுது மிகவும் ஆர்வத்துடனும் சுறுசுறுப்புடனும் செயற்பட்டாள்.
இவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் எவ்வளவு கடின மானதாக இருந்த பொழுதிலும் கூட அதைச் சிரித்துக் கொண்டே செய்து முடிப்பாள். அவளுடன் இருந்தவர்களையும் அவ்வாறே செய்யப் பழக்கினாள். இக்கால கட்டத்தில் புதிய பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட் டபோது இவள்தான் கூடுதலாகப் பிள்ளைகளைக்கூட்டிச் சென்று பொருட்களை எடுத்து வருவாள். இப்படித்தான் ஒரு நாள் இவள் பிள்ளைகளுடன் பொருட்கள் எடுத்து வந்து கொண்டிருந்த போது பெரிய யானை ஒன்று வழிமறித்தபடி நின்றது. உடனே அவள் துப்பாக்கியால் சுட்டு யானையைக் கலைத்து விட்டாள். தாரணி இப்படித் தான் என்ன பிரச்சனை என்றாலும் யோசித்துக் கொண்டு நிற்காமல் உடனே துணிந்து முடிவெடுத்துவிடுவாள்.
காட்டுக்குள் இருந்தபோது மிகவும் திறமையாகக் கண்ணிவெடி வைக்கக்கூடிய தாரணி, எந்தக் கடினமான பயிற்சியையும், வேலையையும் செய்யக்கூடிய தாரணி, திறமையாக சண்டை பிடிக்கக் கூடிய தாரணி இப்ப டித்தான் அவளை எல்லோருக்கும் தெரியும்.
மிகவும் அமைதியாக இருந்த தாரணி கலகலப்பானவளாக மாறியது, இந்தக் காட்டுக்குள் தான். அவள் இருக்கும் இடத்தில் எந்த நேரமும் சிரிப்புச் சத்தம் கேட்கும். என்ன கவலையுடன் இருந்தாலும் அவர்களைத் தனது கதையால் சிரிக்கவைப்பாள். இதனால் தாரணியின் தோழிகள் எப்போதும் அவளைச் செல்லமாக ‘மாமி’ என்று கூப்பிட்டார்கள். அவளுடன் அந்தக் காட்டில் இருக்காதவர்களுக்குப் பெரிய ஆச்சரியம், ‘தாரணியா இப்படிக் கதைக்கிறாள், பகிடிவிடுகிறாள்’ என்று
அவளுடன் நெருக்கமாகப் பழகாதவர்கள், அவள் தலையைச் சிலுப்பிக் கொண்டு கதைக்கும் விதத்தைப் பார்த்து ‘சரியான முரடு’ என்று சொல்வார்கள். அவள் கதைப்பதைப் பார்த்தால் முரடு மாதிரித்தான் இருக்கும். அந்த முரட்டுத்தனமான கதைக்குப்பின்னால் இருக்கும் அவளது ஈரமான இதயத்தை , அவளுடன் நெருங்கிப் பழகியவர் களுக்கு மட்டுமே தெரியும்.
எந்த இடத்திலும் சரியானதைச் சரியென்று வாதிடும் துணிவு மிக்கவள். ஏதாவது வேலை என்றால் ‘முடியும்’ அல்லது ‘முடியாது’ என்று மட்டுமே சொல்லுவாள். ‘செய்து பார்ப்போம்’ என்று ஒருபோதும் சொன்னதே கிடையாது. அதனால்தான் அவளால் பல இடங்களில் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உறுதியாக நிற்க முடிந்தது.
இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டுப்போன பின், மீண்டும் இலங்கை இராணுவத்துடனான சண்டை தொடங்கிய போது பல தாக்குதல்களிலும் பங்கு கொண்டாள்.
கோட்டை இராணுவ முகாம் எமது முற்றுகையில் இருந்தபோதும், பின்னர் பலாலியைச் சுற்றியுள்ள மகளிர் படையணியின் காவலரண்களுக்கும் இவள் பொறுப்பாக இருந்தாள். பலாலியைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குச்சொழுங்கைகளுக்கும் இவளைத் தெரியும். இவள் இங்கு இடையில் எழும்பாமல் தூங்கிய இரவுகளை விரல்விட்டு எண்ணலாம். இரவு எந்த நேரத்திலும் பிள்ளைகளின் நிலைகளுக்கு முன்னால் வெடிச்சத்தம் கேட்டால் இவள் அடுத்த நிமிடம் அந்த இடத்தில் நிற்பாள்.
நாங்கள் தனியாக நின்று அடிபட வேண்டும் என்ற கனவைச் சுமந்துகொண்டு பலாலி மண்ணைச் சுற்றிச் சுற்றித் திரிந்தவள். அந்த நினைவுடனேயே, அந்த மண்ணிலேயே விதையாகிப் போனாள்.
தான் உயிருடன் இருக்கும் வரை, பெண் போராளிகள் நிற்கும் பக்கத்தால் இராணுவம் வெளியேறினால்,
ஆண் போராளிகளை அந்த இடத்திற்கு வந்து அடிபட விட மாட்டாள். நாங்கள் தனியாகத்தான் நின்று அடிபட வேண்டும் என்று சொல்லிச் சொல்லியே பெண் போராளிகளை வளர்த்தவள். இன்று அவர்கள் தனித்துநின்று அடிபடும்போது அவர்களுடைய உணர்வுகளுடன் சேர்ந்துநிற்கிறாள்.
அந்த நாள் எமது நினைவுகளில் என்றுமே மறக்க முடியாமல் போய்விட்டது.
1991 ஜனவரி 23 ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்குச் செய்தி வருகின்றது, ‘தாரணி அக்காவுக்குக் காயம், வைத்தியசாலைக்கு அனுப்பியிருக்கின்றோம்’ என்று.
‘தாரணி காய்ச்சல், தலையிடி யென்றால் கூடத் தாங்க மாட்டாள். காயத்தை என்னெண்டு தாங்கப்போறாளோ? இப்படித் தான் எங்களால் நினைக்க முடிந் தது. எங்களின் தாரணி எங்களை விட்டு இவ்வளவு வேக மாகப் போவாள் என்று யாருமே நினைக்கவில்லை.
வைத்தியசாலையில் ஒவ்வொரு பகுதியாகப் போய் “தாரணியை எங்க விட்டிருக்குது. தாரணியை எங்க விட்டிருக்குது”, என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியவில்லை. அப்பொழுதுதான் மெல்ல மெல்ல உண்மை தெரியத் தொடங்கியது. எங்கள் தாரணிக்கு நாங்கள் விரும்பாத, நாங்கள் நினைக்காத ஒன்று நடந்து விட்டது என்று. அவளைப் பற்றி நாங்கள் நிறைய நம்பிக்கைகளை வைத்திருந்தோம். எல்லாமே ஒரு கொஞ்ச நேரத்துக்குள் கனவாகப் போனதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அவள் வீரச்சாவடைந்த செய்தி, முதலில் அவளது பிள்ளைகளுக்குத் தெரியாது. ‘தாரணியக்காவுக்குச் சின்னக் காயமாம்.
அவ எங்களை விட்டுட்டு அங்கை நிக்க மாட்டா. எப்படியும் ரெண்டு மூண்டு நாளுக்குள்ள திரும்பி வந்து விடுவா’, என்று தான் கூறிக்கொண்டு இருந்தார்கள். ‘உங்கடை தாரணியக்கா உங்கடை இடத்துக்கு வரேலாத அளவு தூரத்திற்கு போய் விட்டா’,
என்று பின்னேரம் மெதுமெதுவாகச் சொல்லப் பட்டது. இப்பொழுதும் அவளது பிள்ளைகளது அழுகையொலி, மறக்க முடியாது காதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அவளால் வளர்க்கப்பட்ட அவளது பிள்ளைகள் இன்றும் அவளது பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு சண்டைக்கும் போவதற்கு ஆயத்தப்படுத்தும்போதும், ‘எங்கட தாரணியக்கா இப்ப உயிரோட இருந்திருந்தால்….’ இதற்குப் பிறகு அவர்கள் வாயால் எதுவும் சொல்வதில்லை.
ஏனென்றால் அவர்கள் சொல்ல வருவது அவர்களது முகத்திலும் பெருமூச்சிலும் நிறைந்திருக்கும்.
‘நாங்கள் தனிய நிண்டு அடிபட வேணும்’, என்ற இவளது கனவை எங்கள் செயல்களினூடாக நனவாக்கி வருகின்றோம்.
-களத்தில்