பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம். இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக்கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். அவனது பாடசாலைப் பருவம் அது. சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.
மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது. காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.
காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையே கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்படைந்து, பொருளாதார வலுவற்ற நிலையில் இருந்த மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும், அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள், செயற்றிட்டங்கள் விசேடமானவை.
ஒட்டுமொத்தத்தில் அன்பு, பண்பு, பாசம், அடக்கம், அறிவு, வீரம், விவேகம், விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி சென்றார். தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார். கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன், தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்களை வகுத்து, பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.
திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம், மனித இழப்புக்கள், பாதிப்பு, அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.
மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வாகனம் ஒன்றில் வந்து கொண்டிருந்தபோது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுப்படைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. அதில் லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார். இவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனின் வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் செயலாளர் நாயகம் கோபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர். போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.
இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார். இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 1986ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.
இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார். எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.
சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. அவரது சேவையை பாராட்டி, தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார். இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்