இலங்கையில் இந்திய தலையீடு
அத்தியாயம் : 2
ஈழத் தேசிய விடுதலை முன்னணி
இந்திய புலனாய்வுத்துறைகளின் தலைவர்கள் மற்றும் திரு.பார்த்தசாரதி ஆகியோர் ராஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக அளித்த விளக்கங்களிலிருந்து எமக்கு ஒரு உண்மை புலனாகியது. புதிய இந்திய நிர்வாகம் வெகுவிரைவில் ஒரு போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் ஒழுங்குகளைச் செய்யப்போகின்றது என்பது தெளிவாகியது. ஜெயவர்த்தனா நிச்சயமாகப் போர் நிறுத்தத்திற்கு இணங்குவார் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது. முதலாவதாகப் போர்நிறுத்தம் செய்து கொள்வது ஜெயவர்த்தனா அரசுக்குச் சாதகமானதாகவே அமையும். ஏனென்றால் தீவிரம் பெற்றுவந்த தமிழ்ப்போராளி அமைப்புகளின் கெரில்லாத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் அரச ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தம் நீக்கப்படும். இரண்டாவதாகப் பேச்சுவார்த்தையின்போது சிங்கள அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துத் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுக்கலாம். ஆகவே, ராஜீவ் காந்தியின் புதிய இராஜதந்திர அணுகுமுறை ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிகரத் திட்டத்திற்குச் சாதகமாகவும் தமிழர்களின் அரசியல் நலன்களுக்குப் பாதகமாகவும் அமையப்பெறுமென நாம் கருதினோம். ராஜீவ் ஆட்சிப்பீடத்தின் புதிய இலங்கைக் கொள்கையானது, எதிர்காலத்தில் இந்திய அரசின் நலனுக்கும் ஈழத் தமிழரது சுதந்திர இயக்கத்தின் அபிலாசைக்கும் மத்தியில் ஒரு பகை முரண்பாட்டை ஏற்படுத்தலாமென நாம் அஞ்சினோம்.
இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றத்தால் எழுந்த புதிய அரசியல் வளர்ச்சிப் போக்கு எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. இந்தச் சவாலையும் அதிலிருந்து எழக்கூடிய அரசியல் ஆபத்துக்களையும் நாம் தனி அமைப்பாக, தனித்து நின்று எதிர்கொள்வது சாத்தியமற்றது என எனக்குத் தோன்றியது. தமிழ்ப் போராளி அமைப்புகள் ஒன்றிணைந்து, ஒன்றுபட்ட கூட்டுச் சக்தியாக இப்புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய காலம் கனிந்துவிட்டதாகவே நான் கருதினேன். தமிழ் விடுதலை அமைப்புகள் இணைந்த கூட்டு முன்னணி அமைக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை அப்பொழுது எழுந்தது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஈழத் தேசிய | விடுதலை முன்னணி என்ற கட்டமைப்பில் ஏற்கனவே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற இயக்கங்கள ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தன. இந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து இயங்க வேண்டுமென நான் கருதினேன். இதற்குத் தலைவர் பிரபாகரனை இணங்க வைப்பது என்பது எனக்குப் பெரிய சவாலாக அமைந்தது.
ஜெயவர்த்தனா அரசின் சூழ்ச்சிகரமான கபட நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்ற ரீதியில் ராஜீவ் காந்தியின் புதிய ஆட்சிப்பீடம் அவரசப்பட்டு மேற்கொள்ளவிருக்கும் புதிய இராஜதந்திர அணுகுமுறை எமது விடுதலை அமைப்புக்குப் பல சிக்கல்களை உருவாக்கலாமெனப் பிரபாகரனுக்கு எடுத்து விளக்கினேன். தனி இயக்கமாகத் தனித்து நின்று செயற்பட்டால், புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாது ஓரம் கட்டப்படும் ஆபத்து எமது இயக்கத்திற்கு ஏற்படலாம் என்பதையும் அவருக்குச் சுட்டிக்காட்டினேன். ஒரு பொதுவான அரசியல்-இராணுவ இலட்சியத்தின் அடிப்படையில் தமிழ் விடுதலை அமைப்புகள ஒன்று சேர்ந்து நின்றால் இந்தியக்கொள்கை மாற்றத்தால் எழக்கூடிய புதிய சவால்களைச் சமாளிப்பது இலகுவாக இருக்கும் என்பதையும் விளங்கப்படுத்தினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் நாம் கூட்டுச்சேர்ந்தால் தமிழரின் சுதந்திர இயக்கம் பலப்பட்டு, பாரிய சக்தியாக உருவகம்பெற்று, இந்திய இராஜதந்திர நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்கவல்ல கூட்டரணாக இயங்கமுடியும் என்றும் விளக்கினேன். பல கலந்துரையாடல்களின் பின்னர் இறுதியாகப் பிரபாகரன் எனது யோசனைக்கு இணக்கம் தெரிவித்தார். பிரபாகரனின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதும் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களைத் தனித்தனியே சந்தித்து எமது இயக்கத்தின் விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களான திரு.பாலகுமார்(ஈரோஸ்), திரு.சிறீ சபாரெத்தினம் (ரெலோ), திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எப்) ஆகியோரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். அவர்களைத் தனித்தனியே சந்தித்து ராஜீவ் அரசின் புதிய சமரச அணுகுமுறை பற்றியும், இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டிணைந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாயின் ஒரு பொதுப்படையான கொள்கைத் திட்டத்தின் கீழ் தமிழ்ப்போராளி அமைப்புகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயலாற்ற விடுதலைப் புலிகளின் தலைமை இணங்கியிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியதுடன் சந்திரகாசனின் ஆதிக்கத்திலிருந்து அவர்கள் முற்றாக விடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிட்டியதை அறிந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை வகுப்பது குறித்து விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கும் ஒற்றுமைப் பிரகடனத்தில் கைச்சாத் திடுவதற்குமாகப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துக் கலந்துரையாட அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.
– 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் சென்னை நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் மத்தியிலான சந்திப்பு நிகழ்ந்தது. இச்சந்திப்பில் நான் பிரபாகரனுடன் கலந்து கொண்டேன். மாணவர் பேரவைப் போராட்டக் காலத்திலிருந்தே ரெலோ தலைவர் சிறீ சபாரெத்தினத்தைப் பிரபாகரன் நன்கறிவார். ஈரோஸ் தலைவர் பாலகுமாரையும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். சென்னை இந்திரா நகரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்திற்குப் பல தடவைகள் வருகை தந்த பாலகுமார், பிரபாகரனையும் என்னையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் பத்மநாபாவை அன்றுதான் முதற்தடவையாகப் பிரபாகரன் சந்தித்தார்.
கூட்டத்தில் பரஸ்பர நல்லுறவும் நல்லெண்ணமும் நிலவியது. கூட்டான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுப்பதன் அவசியம் குறித்து நான்கு தலைவர்கள் மத்தியிலும் கருத்தொற்றுமை நிலவியது. தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற பொது அரசியல் இலட்சியத்தை நான்கு அமைப்புகளும் வரித்துக்கொண்டன. கூட்டு இராணுவத் திட்டமானது, கூட்டுறவான நடவடிக்கையின் அடிப்படையில் படிப்படியாகக் காலப் போக்கில் பரிணாமம் பெற வேண்டும் எனப் பிரபாகரன் விளக்கிக் கூறினார். அதுவரை காலமும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அமைப்பும் சிங்கள ஆயுதப்படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் எனவும் முடிவாகியது. சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியை நோக்கி இந்திய இராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், நான்கு அமைப்புகளின் தலைவர்களும் அடிக்கடி சந்தித்து அரசியல் சூழ்நிலை வளர்ச்சிப் போக்குக் குறித்து கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக, தமிழ் தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து போராடுவதென உறுதிப் பிரமாணம் செய்து கூட்டு மகஜர் ஒன்றில் நான்கு தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு எடுத்த அதே நாளிலிருந்து தமிழீழ தேசத்தில், வன்முறைத் தாக்குதல்கள் காட்டுத்தீ போலப் பரவின. 1985, ஏப்ரல் 10 ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிற்குச் சமீபமாக அமைந்திருந்த காவல்துறைத் தலைமைச் செயலகம் விடுதலைப் புலிக் கெரில்லா வீரர்களின் பாரிய தாக்குதலுக்கு இலக்காகியது. அவ்வேளை யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்த கேணல் கிட்டு, இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். காவல்நிலையம் முன்பாக கேந்திர முனைகளில் வியூகம் அமைத்து, நிலையெடுத்த புலி வீரர்கள் மோட்டார்கள் ரொக்கட் ஏவுகணைகளால் காவல்துறைக் கட்டிடம் மீது உக்கிரமான தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். புலிகளின் குண்டு மழைக்கு நின்று பிடிக்க முடியாத காவல்துறையினர், இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு அருகாமையிலுள்ள கோட்டை இராணுவ முகாமுக்கு ஓடிச்சென்று அங்குத் தஞ்சம் புகுந்தனர். கோட்டை முகாமிலிருந்து சண்டை நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவப் படையணி மீது புலி வீரர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். புலிகளின் உக்கிர தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினரும் சிதறியோடிக் கோட்டைக்குள் பதுங்கினர். காவல்துறைத் தலைமைச் செயலகம், உதவிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயம் உட்பட பல்கூட்டுக் காவல்துறைக் கட்டிடங்கள் முற்றாகத் தகர்த்தப்பட்டன. பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றிய பின்பு மறுநாட் காலை விடிவதற்குள் புலி வீரர்கள் அங்கிருந்து மறைந்தனர்.
யாழ்ப்பாணக் காவல்துறைத் தலைமைச் செயலகம் தாக்கி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏனைய அமைப்புகளும் தனித்தனியாக இராணுவ நிலையங்கள், காவல் நிலையங்கள், இராணுவ தொடர் வண்டிகள் போன்றனமீது கெரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி, சிங்கள ஆயுதப் படைகள் மீது பாரிய உயிர்ச்சேதத்தை விளைவித்தன. 1985 ஏப்ரல், மே காலப்பகுதியில் தமிழ்ப்போராளி அமைப்புகளின் வன்முறைத் தாக்குதல்கள் உச்ச கட்டத்தை அடைந்தன எனலாம். இக்கால கட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைத் தாக்குதல்களை ஒரு இந்திய எழுத்தாளர் கீழ்க் கண்டவாறு விபரித்திருக்கிறார்:
“தமிழ்ப் பகுதிகளில் சுழற்சியாக மாறி மாறிக் கட்டவிழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் திகலூட்டுவதாக இருந்தது. காற்றில் நடுங்கும் காட்டரசம் இலைபோல இலங்கை அதிர்ந்தது. ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொண்டதை அடுத்து, கூட்டணிக்கு வெளியே நின்ற புளொட் உட்பட சகல தீவிரவாதப் போராளி அமைப்புகளும் புதிய உத்வேகம் பெற்றுச் செயற்படத் தொடங்கின. கொழும்பு அரசைப் பணியவைக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்துவது போன்று வடகிழக்கின் மூலைமுடுக்குகள் எங்கும் இவ்வமைப்புகள் சிறீலங்கா படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின”.
தமிழ் விடுதலை அமைப்புகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வந்த அந்தவேளை, இந்திய வெளியுறவுச் செயலர் திரு. ரொமேஸ் பண்டாரி கொழும்புக்கு அடிக்கடி வருகைதந்து போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றி ஜெயவர்த்தனா அரசுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். தமிழர் தரப்பிலிருந்து அதிகரித்து வந்த இராணுவ நெருக்கத்திற்கு முகம் கொடுக்க முடியாது அங்கலாய்த்த ஜெயவர்த்தனா இந்தியாவின் யோசனைக்கு இணங்கினார். தமிழ்ப் போராளி அமைப்புகளுடன் பேசுவதற்கு இணங்கிய ஜெயவர்த்தனா அதற்கு ஒரு நிபந்தனையும் விதித்தார்.
அதாவது, தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும் இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்தவிடவேண்டும் என்றும், தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவு செய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்துப் போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இயங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப் பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 ஜுன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற்படுத்துவது என்றும் இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் ஜுலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயவர்த்தனாவின் கபட நோக்கம் குறித்து ஆழமான சந்தேகம் கொண்டிருந்த பிரபாகரனுக்கும் ஏனைய போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கும் திடீரெனப் போர்நிறுத்தம் செய்து கொள்வது சரியான அணுகுமுறையாகத் தென்படவில்லை. சிங்கள ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தத்தைத் திடீரென நிறுத்திக் கொள்வது அரச படைகளுக்கே அனுகூலமானதாக அமையுமெனப் பிரபாகரன் கருதினார். படிப்படியாகத் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வந்த கெரில்லாப்போரை, அதன் கேந்திர நோக்கை அடைவதற்கு முன்பாக, அதாவது சிங்கள இராணுவ இயந்திரத்தை வலுவிழக்கச் செய்வதற்கு முன்பாக, போருக்கு ஓய்வு கொடுப்பது என்பது போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்கள அரசுக்கே சாதகமானதாக முடியுமெனப் பிரபாகரன் எண்ணினார். தமிழ்ப் போராளி அமைப்புகளின், குறிப்பாகப் பிரமாதமான போரியல் சாதனைகளைப் படைத்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட இலட்சியத்திற்கு இது பங்கம் விளைவிப்பதாக அமையுமெனவும் அவர் கருதினார்.
ஜுன் மாதம் ஆரம்பத்தில், றோ புலனாய்வுத்துறை உயர் அதிகாரியான திரு. சந்திரசேகரனைப் பிரபாகரனும் ஏனைய ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும் சந்தித்தபோது அவர்கள் தமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் மனம் திறந்து வெளிப்படையாகத் தெரிவித்தனர். திடீரெனப் போருக்கு ஓய்வு கொடுத்தல், சிங்கள ஆயுதப் படைகள் தம்மைப் பலப்படுத்தி, தமது போரியல் சக்தியை வலுப்படுத்த வழிசமைத்துக் கொடுப்பதாக அமையுமெனவும், அதேவேளை தமிழ் கெரில்லாப் படையணிகள் செயற்பாடின்றி ஊக்கமிழந்து மனத்தளர்வுக்கு ஆளாவார்கள் எனவும் சந்திரசேகரனுக்குப் பிரபாகரன் எடுத்து விளக்கினார்.
பிரபாகரனதும் ஏனைய போராளித் தலைவர்களதும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் சந்திரசேகரன் இருக்கவில்லை. சிங்கள ஆயுதப் படைகளுக்குப் போதுமான உயிர்ச்சேதமும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என வாதித்த சந்திரசேகரன், மேற்கொண்டும் போர் அழிவுகள் ஏற்பட்டால் அரசு ஆட்டம் கண்டு தகர்ந்துவிடும் என்றும் அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் விளக்கினார். போர் நிறுத்தத்திற்கும் பேச்சுக்கும் ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ராஜீவ் காந்தியும், ரொமேஸ் பண்டாரியும் மிகச் சிரமமான இராஜதந்திர முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும் சொன்னார். தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்த ஜெயவர்த்தனா இணங்கியமையானது தமிழ்ப் புரட்சி வாதிகளுக்குக் கிட்டிய சட்டரீதியான அங்கீகாரம் என விளக்கிய சந்திரசேகரன், ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களைத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டே சிங்கள அரசு பேச வருகிறது எனக் குறிப்பிட்டார். பேச்சுக்கள் இடை நடுவே முறிந்து போனாலும் தமிழ் போராளி அமைப்புக்களை | இந்திய அரசு கைவிடாது என உறுதியளித்த அவர், இந்தியாவின் வழிநடத்தலுக்கு அமையப் போர்நிறுத்தம் செய்து, பேச்சுக்களில் பங்குபற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக, மிகத் தயக்கத்துடன் பிரபாகரனும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் போர்நிறுத்தத்திற்கு இணங்கினர். சிறீலங்கா அரசாங்கத்திற்குத் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியிலான அதிகாரப்பூர்வமான போர்நிறுத்தம் 1985 ஜுன் மாதம் 18ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட கால அட்டவணையைக் கொண்ட நான்கு கட்டங்களாகப் போர்நிறுத்தம் அமையப் பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் சில நடைமுறைகளை இரு தரப்பினரும் பேண வேண்டும். இறுதிக் கட்டத்தில் போர் நெருக்கடி தணிந்து முழுமையான போர்நிறுத்தம் செயலுக்கு வரும். இந்த நான்கு கட்டப் போர்நிறுத்த உடன்பாட்டு விதிகள் குறித்துப் பிரபாகரன் திருப்தி கொள்ளவில்லை. சிங்கள ஆயுதப் படைகளினதும், ஆயுதம் தரித்த சிங்களக் குடியேற்றவாசிகளதும் வன்முறையிலிருந்து தமிழ்ப் பொதுமக்களுக்குப் போர்நிறுத்த உடன்பாட்டில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படவில்லை. இது பிரபாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழரின் இனப்பிரச்சினை குறித்து, ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை அரசை எமது இயக்கம் வற்புறுத்தவேண்டுமெனப் பிரபாகரன் விரும்பினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் கூட்டுத்தலைமை வாயிலாக எமது கருத்துக்களை வெளியிடுவதே சாலச்சிறந்தது என நான் பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி, போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அன்றைய நாள் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அவசர கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். இக்கூட்டத்தில் போர் நிறுத்தம், தீர்வுத் திட்டம் பற்றி எமது இயக்கத்தின் கருத்துக்களை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். போர் நிறுத்த உடன்பாட்டில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டனர்.
பேச்சுகளுக்கு அடிப்படையாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டுமென இந்தியா மூலம் கோருவது என்ற பிரபாகரனின் யோசனையை முன்னணித் தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசுக்குக் கையளிக்கும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் மகஜரைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மகஜர் எழுதி முடிந்ததும் பிரபாகரனும் ஏனைய முன்னணித் தலைவர்களும் அதில் கைச்சாத்திட்டனர். பின்னர் அந்தக் கூட்டறிக்கை றோ புலனாய்வு அதிகாரிகள் மூலமாகப் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கூட்டறிக்கையில் சில முக்கிய பத்திகள் வருமாறு :
“எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும் சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும் நல்லெண்ண சமரச முயற்சிகளையும் மனமார வரவேற்று எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும் உத்தரவாதங்களையும் ஏற்றுக்கொண்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போர் நிறுத்தம் செய்வதென இம்மகஜரில் கைச்சாத்திட்ட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும் இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கு மென எதிர்பார்க்கின்றோம். இத்தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்துப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்”.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் போர் நிறுத்தம் செய்ய நாம் இணங்கியபோதும், போர் நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கடப்பாடுகளும் நிபந்தனைகளும் எமக்கு அனுகூல மற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும், மாற்று யோசனைகளையும் இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தைச் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக்கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து, காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள், தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்து கொண்ட உடன்பாடுகள் ஒப்பந்தங்களை நிறைவு செய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமின்றி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைக் தட்டிக் கழித்து இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும் சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும் நாம் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே, இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான், பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தைச் சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை . டில்லியிலிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட திரு.சந்திரசேகரன் எமது நிலைப்பாட்டில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குச் சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாக அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன்.
இப்பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும் என பிரபாகரனும் ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர். முன்னணித் தலைவர்களின் முடிவை திரு.சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப் படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த சந்திரசேகரன், பிரபாகரனையும் ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார். ராஜீவ் அரசுக்கும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும் மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத் தென்பட்டது.
1985 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3 ஆம் நாள், பிரபாகரனும் நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும் அவர்களது அரசியல் உதவியாளர்களும் இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம். நாம் அங்குச் சென்றதும் றோ புலனாய்வு அதிகாரிகளும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகளும் மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப்புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறினார்கள். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பதே இந்த விளக்கவுரையின் அடிநாதமான வேண்டு கோளாக அமைந்தது.
இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுரைகளும் அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி, பணிந்து இணங்கிப் போகவில்லை. எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப்பிரச்சினை இறுதியாக றோ புலனாய்வுத்துறை அதிபர் திரு. சக்சேனாவிடம் கையளிக்கப்பட்டது.
புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு.சக்சேனா. பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம். கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த கரும்பூனை அதிரடிப் படைவீரர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டு, உயர்மாடியிலுள்ள சக்சேனாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். கடுமையான முகத்துடன் முறைப்பான பார்வையுடன் எமக்காகக் காத்திருந்தார் றோ அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும் நானும் மற்றும் ரெலோ தலைவர் சிறீசபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில் தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார். தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக்கூறிய திரு. சக்சேனா ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
உங்களது விட்டுக்கொடாத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக்கொள்ளாது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது என மிரட்டினார் சக்சேனா. பூட்டான் தலைநகரமான திம்புவில், இன்னும் இரு வாரங்களில் பேச்சக்கள் ஆரம்பமாக உள்ளன. இப்பேச்சுக்குள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும். பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால், இந்திய மண்ணிலும் இந்திய கடற்பரப்பிலும் நீங்கள் செயற்பட முடியாது போகும் என்று கண்டிப்பான குரலில் கத்தினார். நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் சக்சேனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா. ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்து போயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாரகன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா, நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும் என்றார், அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.
நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்துரையாடலை நிகழ்த்தினோம். தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி என்றார் பிரபாகரன். அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர். நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கபற்றுவது என்ற ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
அன்ரன் பாலசிங்கம்
அடுத்து வரும் பதிவு : திம்புப் பேச்சுக்கள்
பூட்டான் தலைநகரான திம்புவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் இரண்டு சுற்றுகளாக அமைந்தன. முதலாவது சுற்றுப் பேச்சு 1985 ஜுலை 8ஆம் நாள் தொடங்கி ஆறு நாட்களாக நடைபெற்று ஜுலை 13இல்முடிவுற்றது. சிறீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு அரச அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரரும்வழக்கறிஞருமான திரு. எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா தலைமை வகித்தார். ஏனைய பிரதிநிதிகள்சட்டத்தரணிகளாகவும் அரச நிர்வாகிகளாகவும் அமையப் பெற்றனர்.
சிறீலங்கா அரசின் பேச்சுக் குழுவில் அமைச்சர் மட்டத்திலான அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கவில்லைஎன்பதால், விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய அமைப்புகளும் தமதுமூத்த உறுப்பினர்களை மட்டும் திம்புப் பேச்சுக்களுக்கு அனுப்பி வைத்தனர். இதன்படி முதலாவது சுற்றுப்பேச்சில் விடுதலைப் புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகரும், சிவகுமாரனும் (அன்ரன்), பின்னர் நிகழ்ந்தஇரண்டாவது சுற்றுப் பேச்சில் யோகரெத்தினம் யோகியும் அவர்களுடன் கலந்து கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ்அமைப்பின் சார்பில் வரதராஜப் பெருமாளும், கேதீஸ்வரன் லோகநாதனும் கலந்து கொண்டனர். ரெலோஅமைப்பின் சார்பில் முதற் சுற்றுப்பேச்சில் சார்ள்சும், பொபியும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றுப்பேச்சில் இவர்களுடன் நடேசன் சத்தியேந்திரா பங்குபற்றினார். ஈரோஸ் அமைப்பின் சார்பில் மூத்த நிறுவனஉறுப்பினர்களான இளையதம்பி இரத்தினசபாபதியும், சங்கர் ராஜியும் பங்குபற்றினார்கள். சித்தார்த்தனும், வாசுதேவாவும் புளொட் அமைப்பைப் பிரதிநிதப்படுத்தினர். எல்லோரிலிருந்தும் மாறுபட்டதாக தமிழர் ஐக்கியவிடுதலைக் கூட்டணியை அதன் மூத்த தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர்பிரதிநிதப்படுத்தினர்.
திம்பு பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், விவாதத்தை முன்னெடுத்தல், தீர்மானங்களை எடுத்தல்போன்ற விடயங்களில் தமிழ் விடுதலை அமைப்புகளின் முக்கிய கூட்டணியாக ஈழத் தேசிய விடுதலை முன்னணிமுக்கிய பாத்திரத்தை வகித்தது. ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும், பேச்சுக்களில்கலந்துகொள்ளும் அவர்களது பிரதிநிதிகளும் தொடர்புகொண்டு கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கும்வகையில் திம்புக்கும் சென்னைக்குமான ஒரு நேரடி தொலைத் தொடர்பு வசதியை (Hot Line) சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின்பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு விவகாரத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களைவழிநடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டு, சேலத்திலுள்ள எமது இராணுவப் பயிற்சி முகாமிற்குச்சென்றுவிட்டார் பிரபாகரன். ஜெயவர்த்தனா ஆட்சிபீடத்தின் இனவாதப் போக்கை செம்மையாகஎடைபோட்டிருந்த பிரபாகரனுக்கு பேச்சுமூலம் உருப்படியான பலாபலன் ஏதும் கிட்டுமென நம்பிக்கைஇருக்கவில்லை. இந்திய அரசைப் பகைக்காமல், இந்தியா அரங்கேற்றும் அரசியல் நாடகத்தில் நடித்தால்போதும் என்று அவர் கருதினார். ஆயினும் என்மீது சுமத்தப்பட்ட பொறுப்பைச் சரியான முறையில் செயற்படுத்தவேண்டும் என்ற நோக்கில், பேச்சுக்கள் ஆரம்பமாகி முடிவுபெறும் காலம்வரை, நாள் தோறும்கோடம்பாக்கத்திலுள்ள தொலைபேசி மையத்திற்கு நான் சென்று வந்தேன். ஏனைய ஈழத் தேசிய விடுதலைமுன்னணித் தலைவர்களும் தினம்தோறும் அங்கு வருவார்கள். திம்புவில் நடைபெற்ற அரசியல் நாடகத்தின்சகல அம்சங்களையும் எமது பிரதிநிதிகள் மூலமாக அறிந்து அவர்களை வழிநடத்தினோம்.
பூட்டான் அரசாங்கத்தின் ஆதரவில் பேச்சுக்கள் நடைபெற்றன. பூட்டான் வெளியுறவு அமைச்சர் லியன்போசேரிங் அதிகாரபூர்வமாகப் பேச்சுக்களை ஆரம்பித்து வைத்தார். இந்தியா மத்தியஸ்துவம் வகித்தது. திரு. சந்திரசேகரன் உட்பட இந்திய உயர் அதிகாரிகள் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். ஆனால் அவர்கள்பேச்சுக்களில் பங்குபற்றவில்லை. சமாதானப் பேச்சு ஆரம்பமாகிய சொற்ப நேரத்திற்குள் அது ஒரு சொற்போராக வடிவம் எடுத்தது. தமிழ்ப் போராளி அமைப்புகளின் சட்டரீதியான தகைமையை கேள்விக் குறிக்குஆளாக்கினார்கள் அரச பிரதிநிதிகள். இந்த அமைப்புகளின் உறுப்பினர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகஏற்றுக் கொள்ள முடியாது என வாதிட்டார்கள். இதனையடுத்து விவாதம் சூடு பிடித்தது. இரு தரப்பிலிருந்தும்கசப்பான, காரசாரமாக வார்த்தைகள் பரிமாறப்பட்டன. அரச தரப்பின் பண்பற்ற அநாகரீகப் போக்கினால்ஆத்திரமடைந்த தமிழ்ப் பிரதிநிதிகள் ஒரு முடிவு எடுத்தனர். அதாவது, தமிழர் தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்படும்ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் ‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள்’ என்றே சகல தமிழ் அமைப்புகளும்கைச்சாத்திடுவதெனக் கூட்டாக தீர்மானம் எடுத்தனர். அரச பிரதிநிதிகள் வெளிப்படுத்திய பகையுணர்வு தமிழ்ப்பிரதிநிதிகள் மத்தியில் நல்லுறவையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியது. திம்பு பேச்சுக்கள் மூலம் ஏற்பட்டஒரு ஆக்கபூர்வமான விளைவு என்றால் அது தமிழர் தரப்பு ஒருமைப்பாடுதான்.
சிங்கள அரச பேச்சுக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா ஒரு தீர்வுத் திட்ட யோசனையைமுன்வைத்தார். சகல கட்சி மாநாட்டின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் ஏற்கனவேநிராகரிக்கப்பட்ட பழைய, செயலிழந்து செத்துப் போன மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை அவர்சமர்ப்பித்தார். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகியது. சமாதானப் பேச்சு மூலம் தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வுகாணும் நோக்கம் எதுவும் ஜெயவர்த்தனா அரசுக்கு இருக்கவில்லை என்பதுதெட்டத் தெளிவாகியது. தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்த எடுப்பில் அரச தரப்பு யோசனையை நிராகரித்ததுமட்டுமல்லாது அதுபற்றி விவாதிக்கவும் மறுத்துவிட்டனர். முந்திய உடன்பாடுகளையும் ஒப்பந்தங்களையும்முறித்துக் கொண்ட நம்பிக்கைத் துரோக வரலாற்றை எடுத்துக் காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இம் முறையாவதுதமிழர்கள் கருத்தில் எடுக்கக்கூடிய, உருப்படியான, நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பது சிங்களஅரசின் தட்டிக் கழிக்க முடியாத கடப்பாடு என வாதிட்டனர். தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின்அடிப்படையான மூலக் கோட்பாடுகளை மட்டும் விதந்துரைப்பதாகச் சுட்டிக் காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இக்கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து அரசாங்கம் ஒரு விரிவான உருப்படியான தீர்வுத் திட்டத்தை வகுத்துத்தரவேண்டும் என வாதாடினார்கள். தமிழர் தரப்பால் ஏகமனதாக முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படைக்கோட்பாடுகள் வருமாறு.
1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக்கட்டமைப்பைக் கொண்டவர்கள்.
2) தமிழ் மக்களுக்கு இனம் காணக்கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
3) தமிழர் தேசத்திற்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுதல்.
4) சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமையும் மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டுஎன்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
முதற் சுற்றுப் பேச்சு முடிவடைந்த நாள் அன்று (ஜுலை 13) தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக விடுத்த திம்புப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“இந்த மூலக் கோட்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக வெவ்வேறு நாடுகள் வெவ்வேறான அரசாட்சிமுறைமைகளை வடிவமைத்துள்ளன. எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால் நாம்சுதந்திரமான தமிழரசுக் கோரிக்கையை முன்வைத்து, அதற்காகப் போராடி வந்துள்ளோம். தமிழரின்பிரச்சினைக்கு தீர்வாக சிறீலங்கா அரச பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆதலால் நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்… எனினும் சமாதானத்தில் நாம் பற்றுறுதிகொண்டவர்கள் என்பதால் நாம் முன்மொழிந்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தைசிறீலங்கா அரசாங்கம் முன்வைக்குமானால் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நாம் தயாராகஇருக்கிறோம்.”
1985 ஆகஸ்ட் 12ஆம் நாள் இரண்டாவது சுற்றுப் பேச்சு திம்புவில் ஆரம்பமானது. அரச பேச்சுக் குழுவின்தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா தான் ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்த அறிக்கையை வாசித்தார். குடியுரிமைக் கோரிக்கையை தவிர்ந்த முதல் மூன்று திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவை எனநிராகரித்தார். குடியுரிமை சம்பந்தப்பட்ட கோட்பாட்டை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுக்கும் என்றார். தமிழர்தாயகக் கோட்பாட்டை நிராகரித்த அவர், தமிழ் மக்கள் சிறீலங்கா அடங்கிலும் வாழ்ந்து வருவதால்சிறீலங்காவே தமிழர், சிங்களவர் மற்றும் ஏனைய சமூகத்தவர்களதும் தாயகம் என வற்புறுத்தினார். தமிழ்த்தேசியக் கோட்பாட்டையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ளமுடியாது என்றும் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனக் குழுமம் என்றும் வாதிட்டார். அந்நிய குடியேற்ற ஆட்சியின்கீழுள்ள தேசங்களுக்கு மட்டுமே சுயநிர்ணய உரிமை உரித்தாகும் என விளக்கம் அளித்த அவர், ஒருசுதந்திரமான இறையாண்மையுடைய அரச ஆட்சியின் கீழுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சுயநிர்ணய உரிமைகோரமுடியாது என வலியுறுத்தினார். தனது விளக்க உரையின் முடிவில் ஹெக்டர் ஜெயவர்த்தனாகுறிப்பிட்டதாவது:
“திம்பு பிரகடனத்தின் முதல் மூன்று கோட்பாடுகளையும், அவற்றிற்கு வழங்கப்பட்ட சட்டரீதியான அர்த்தத்துடன்மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், அரசாங்கத்தால் அவற்றை முற்றாக ஏற்றுக் கொள்ளமுடியாது. சிறீலங்காவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் தீமை விளைவிக்கும் என்பதாலும், ஒன்றுபட்ட சிறீலங்காவுக்குப் பங்கம் ஏற்படுத்துவதுடன் இந் நாட்டில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகத்தவர்களின்நலன்களுக்கும் விரோதமாக அமையும் என்ற காரணத்தினால் இக் கோட்பாடுகள் நிராகரிக்கப்படவேண்டியவையாகும்.”
அரசாங்கப் பேச்சுக் குழுவின் விட்டுக்கொடாத கடும்போக்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள் வலுவாகக் கண்டித்தனர். திம்புக் கோட்பாடுகளை ஆதரித்து, தர்க்கரீதியான வாதங்களை முன்வைத்துப் பேசிய அவர்கள், தமிழ் மக்கள்தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள் என்பதையும், அவர்களுக்கு இனம் காணக்கூடிய, வரலாற்றுரீதியான தாயகப் பிரதேசம் உண்டு என்பதையும், எல்லாவற்றிலும் முக்கியமாக, தமிழ் மக்கள் சுயநிர்ணயஉரிமைக்கு உரித்தானவர்கள் என்பதையும் வலியுறுத்தினார்கள். அவர்களது விளக்கவுரையிலிருந்து சிலபகுதிகளை இங்கு தருகிறேன்:
“எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்றுவடிவம் எடுத்ததுதான் எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத் தமிழர்கள் அல்லதுதமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். அத்தோடு, அவர்கள்அடிமைப்பட்ட மக்கள் என்பதால், அந்நிய ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் உரிமைஅவர்களுக்கு உண்டு. இதன் அடிப்படையில்தான் சர்வதேசச் சட்டத்தின் முக்கிய நியமமாக சுயநிர்ணய உரிமைஇன்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த சுயநிர்ணய உரிமையை ஆதாரமாகக் கொண்டுதான் எமது அரசியற்தகமையை நாமே நிர்ணயிக்கும் உரிமை எமக்குண்டு. அதாவது சிறீலங்கா அரசுடன் ஒன்று சேர்ந்து இணைந்துவாழ்வதா அல்லது பிரிந்து சென்று சுதந்திரமான தனியரசை நிறுவிக் கொள்வதா என்ற உரிமை எமக்குண்டு. இந்த நான்கு கோட்பாடுகளையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்ததிலிருந்து, இக் கோட்பாடுகளின்அடிப்படையில் நாம் பேச்சுக்களை நடத்த விரும்பவில்லை எனக் கருதிவிடக் கூடாது…
நாம் பிரகடனம் செய்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் எம்முடன் பேச்சுக்களை நடத்துவதற்குசிறீலங்கா அரச பிரதிநிதிகள் தவறிவிட்டனர். பரஸ்பரம் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம் என சிறீலங்கா அரச பிரதிநிதிகள் ஆகஸ்ட் 12இல் விடுத்த அறிக்கையில் உறுதியளித்தபோதும்அவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக 1985 ஆகஸ்ட் 16ஆம் நாள் அரச பிரதிநிதிகள்‘புதிய யோசனைகள்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தைச் சமர்ப்பித்தனர். மாவட்ட சபைகளுக்கு முன்புவழங்கப்பட்ட செயற்பாட்டு உரிமைகளை மாகாண சபைகளுக்கு மாற்றிப் பழைய யோசனைகளுக்கு புதியமுலாம் பூசப்பட்டதாக இப் ‘புதிய திட்டம்’ அமைந்தது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம்என்பதை இப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்கள் தமது தாயக நிலத்திற்குஉரிமையானவர்கள் என்பதை இப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சுயநிர்ணயஉரிமை உடையவர்கள் என்பதையும் இந்தப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக இந்தப்‘புதிய யோசனைகள்’ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் உத்தரவாதம் தரவில்லை… ஒட்டுமொத்தத்தில் இந்தப் ‘புதிய யோசனைகள்’ தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப்பூர்த்தி செய்யத் தவறிவிட்டன….
சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அடிப்படையாக நாம் திம்புவில் முன்வைத்த நான்கு மூலக்கோட்பாடுகளும் வெறும் அறிவியற் கருத்தாக்கம் அல்ல. அடிப்படையான மூல உரிமைகள் கோரி, தமிழ் மக்கள்நிகழ்த்திய போராட்டத்தினது யதார்த்த மெய்யுண்மையின் வெளிப்பாடாகவே அவை அமைந்தன. ஆரம்பத்தில், 1950களில் சமஷ்டி ஆட்சிமுறை கோரி நடைபெற்ற போராட்டமானது காலப் போக்கில் அரச ஒடுக்குமுறைதீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுதந்திரத் தமிழீழ தனியரசு கோரும் போராட்டமாக வடிவம் எடுத்தது… இப்பேச்சுக்களில் நாம் பிரகடனம் செய்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் நியாயபூர்வமான பேச்சுக்களைநடத்துவதற்கு தயாரா என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுமாறு நாம் சிறீலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.”12
இரு தரப்புப் பேச்சுக் குழுக்களும் தங்களது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்காத கடும்போக்கைக்கடைப்பிடித்ததன் காரணமாக பேச்சுக்கள் முன்னேற்றம் காணாது முடங்கிப் போயின. அத்தோடு போர்நிறுத்தமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக இரு தரப்பும் பரஸ்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் நிலைமையை மேலும்மோசமாக்கின. பேச்சுக்கள் முறிந்து விடும் கட்டத்தை எட்டியபோது இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஸ்பண்டாரி, நிலைமையை சமாளிக்கும் நோக்குடன் தலையிட்டார். இன நெருக்கடியின் வரலாறு பற்றியோ அதன்சிக்கலான பரிமாணங்கள் பற்றியோ தெளிந்த பார்வை எதுவுமற்ற திரு. பண்டாரி, பேச்சுகள் முடங்கியமைக்குதமிழர் தரப்பின் விட்டுக்கொடா கடும்போக்கே காரணமெனக் குற்றம் சுமத்தினார். மத்தியஸ்துவராஜதந்திரத்தின் சாணக்கியம் எதுவுமற்ற அவர் தமிழர் தரப்பு மீதே முழுப் பழியையும் சுமத்தினார். தமிழ்ப்பிரதிநிதிகள் முன்வைத்த கோட்பாடுகளை ‘பூடகமான கருத்துருவங்கள்’ என வர்ணித்த பண்டாரி, தமிழர் தரப்புமாற்று யோசனைகளை முன்வைக்க வேண்டும் என வற்புறுத்தினார். நியாயமற்ற, ஒருதலைப்பட்சமானபண்டாரியின் தலையீடு தமிழர் தரப்பில் கொதிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழர் தரப்பு பிரதிநிதிகளில்ஒருவரான நடேசன் சத்தியேந்திரா சினத்துடன் பண்டாரி மீது சீறினார். மிகக் காரசாரமான வார்த்தைகளைபிரயோகித்து பண்டாரியை அவமானப்படுத்தி அடக்கி வைத்தார்.
திம்புவில் சமாதானப் பேச்சுக்கள் கொந்தளிப்பான நிலையை எட்டிக் கொண்டிருந்த வேளையில், சென்னையிலிருந்த எமக்கு, கள நிலைமை சம்பந்தமாக பாரதூரமான தகவல்கள் கிடைத்தன. தமிழர்தாயகத்தில் சிங்கள ஆயுதக் படைகள் போர்நிறுத்தத்தை மீறி, தமிழ்ப் பொதுமக்களை பெருமளவில் கொன்றுகுவித்திருப்பதாக அறிந்தோம். அதிர்ச்சியூட்டும் பாரதூரமான சம்பவங்கள் வவுனியாவிலும்திருகோணமலையிலும் நிகழ்ந்தன. 1985 ஆகஸ்ட் 16இல் வவுனியா நகரில் சிங்கள ஆயுதப் படைகள்நிகழ்த்திய வெறியாட்டத்தில் பெருந்தொகையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் தமிழரின்கடைகள், சொத்துக்கள் தீ மூட்டி அழிக்கப்பட்டன. மறுநாள் ஆகஸ்ட் 17இல் திருகோணமலைமாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்க் கிராமம் மீது இராணுவத்தினரும் ஆயுதம் தரித்த சிங்களக் காடையரும் சேர்ந்துதாக்குதலை நிகழ்த்தி, கிராமியவாசிகளைப் பெருந்தொகையில் கொன்று குவித்தனர்.
இந்தக் கொடூரமான படுகொலைச் சம்பவங்கள் பிரபாகரனைக் கொதிப்புறச் செய்தன. பிரபாகரன்எதிர்பார்த்தது போலவே சிங்கள ஆயுதப் படைகள் அப்பட்டமாகப் போர்நிறுத்தத்தை மீறி தமிழருக்கு எதிராகப்படுபாதகச் செயல்களில் ஈடுபட்டன. ஈழத் தேசிய விடுதலை முன்னணி அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. திம்பு சமாதானப் பேச்சு என்ற ஒரு போலித் திரைக்குப் பின்னால் தமிழினப் படுகொலையை ஜெயவர்த்தனாஅரசு நடத்திக்கொண்டிருப்பதாக அக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார் பிரபாகரன். சிங்கள ஆயுதப் படைகளின்வெறியாட்டத்திற்கு எமது ஆழமான அதிருப்தியைத் தெரிவிக்கும் முகமாகத் திம்புப் பேச்சுக்களைஉடனடியாகப் பகிஸ்கரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவரதுயோசனையை ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். ஈழத் தேசிய விடுதலைமுன்னணி தலைமைப்பீடத்தின் முடிவை திம்புப் பேச்சுக்களில் பங்குகொள்ளும் பிரதிநிதிகளுக்கு அறிவித்து, அவர்களைப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யுமாறு என்னிடம் பணிக்கப்பட்டது. நான் உடனடியாகவேகோடம்பாக்கத்திலுள்ள தொலைபேசி மையத்திற்கு சென்று திம்புவிலுள்ள எமது பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் தீர்மானத்தை அறிவித்தேன். எல்லாத் தமிழ்அமைப்புகளும் கூட்டாகச் சேர்ந்து பேச்சு மேசையிலிருந்து வெளிநடப்புச் செய்வதே சாலச் சிறந்ததெனவும்ஆலோசனை வழங்கினேன். திம்புவில் எமது பிரதிநிதிகளுடன் பேசி முடித்த சில நிமிடங்களுக்குள் றோஅதிகாரியான திரு. உன்னிக் கிருஷ்ணன் தொலைபேசி மையக் கட்டிடத்திற்குள் பிரவேசித்து என்மீது சீறிவிழுந்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்து, திம்பு சமாதானப் பேச்சுமுறிவடைந்தால் அதற்கு நான்தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அதனால் இந்திய அரசின் சீற்றத்திற்கும்ஆளாக வேண்டும் என்றும் மிரட்டினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் ஏகோபித்தமுடிவையே நான் திம்புவில் எமது பிரதிநிதிகளுக்கு அறிவித்தேன் என நான் விளக்கம் கொடுத்தும் அவர்அதனை ஏற்க மறுத்து, என்னைத் திட்டித் தீர்த்தார். இதிலிருந்து ஒரு உண்மை புலனாகியது. அதாவது, சென்னை கோடம்பாக்கத்திலிருந்து திம்புவில் எமது பிரதிநிதிகளுடன் பேசியவற்றை எல்லாம் றோ புலனாய்வுத்துறையினர் ஒட்டுக் கேட்டு வந்தனர் என்பது தெளிவாகியது.
நான் கொடுத்த தகவலை அடுத்து, திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும்கீழ்க் கண்ட அறிக்கையை வெளியிட்ட பின்பு கூட்டாக வெளிநடப்புச் செய்தனர்:
“நாம் இங்கு பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், எமது தாயக மண்ணில் அப்பாவித் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர். இது சிறீலங்கா அரசின் இனக்கொலைத் திட்டத்தினது ஒருவெளிப்பாடு என்றே நாம் கருதுகிறோம். கடந்த சில நாட்களாக, வவுனியாவிலும் ஏனைய தமிழ்ப் பகுதிகளிலும்சிங்கள ஆயுதப் படைகளின் வெறியாட்டத்திற்கு ஏதுமறியாத சிறார்கள் உட்பட இருநூறுக்கும் அதிகமானஅப்பாவிக் குடிமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்குஅமைதியும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் திம்புவில் நாம் சமாதானப் பேச்சுக்களை தொடர்ந்துநடத்துவது கேலிக்கூத்தானது. திம்புப் பேச்சுக்களை முறித்துக் கொள்வது எமது நோக்கமல்ல. ஆயினும்திம்புப் பேச்சுகளுக்கு ஆதாரமாக அமைந்துள்ள போர்நிறுத்த உடன்பாட்டினை மீறுவதாகச் சிறீலங்கா அரசின்நடவடிக்கைகள் இருப்பதால் இப் பேச்சுக்களில் நாம் பங்குகொள்வது முற்றிலும் பொருத்தமற்ற முடியாதகாரியமாகிவிட்டது.”13
திம்பு பேச்சுக்கள் முறிவடைந்துபோனது இந்திய மத்தியஸ்துவ இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட பாரியபின்னடைவாகும். இந்தத் தோல்விக்குப் பல காரணங்களை சுட்டிக் காட்டலாம். மிகவும் நுட்பமாகக் கையாளவேண்டிய ஒரு சிக்கலான இராஜதந்திர முயற்சியை முன்னெடுக்கும் சாதுரியமும் சாணக்கியமும் இந்தியாவின்மத்தியஸ்துவராகச் செயற்பட்ட ரொமேஸ் பண்டாரியிடம் இருக்கவில்லை. இவரது முன்னோடியான திரு. பார்த்தசாரதியிடம் காணப்பட்ட மதிநுட்பமும் அரசியல் ஞானமும் பண்டாரியிடம் சிறிதளவேனும்இருக்கவில்லை. தமிழரது தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக் கூட இவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை. தமிழ் சிங்கள தேசிய இனங்கள் மத்தியில் நிலவிய முரண்பாடுகளையும், மாறுபட்டபார்வைகளையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் இருக்கவில்லை. மிகவும் சிக்கலான, கடினமானபிரச்சினைகளுக்கு உடனடியான, இலகுவான தீர்வுகாண அவர் எதிர்பார்த்தமை அவரது அவசர புத்தியைவெளிக்காட்டியது. பண்டாரியின் மனப்பாங்கு பற்றி விளக்கிய ஒரு இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டதாவது: “தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மத்தியில் நிலவிய அபிப்பிராய பேதங்களின் சிக்கலான பரிமாணங்கள்பற்றி அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமது அபிலாசைகளையும் கோரிக்கைகளையும்வலியுறுத்தியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை… இந்தப் பொறுமையீனம் காரணமாகவே, திம்புவில் தமிழ்ப் பேச்சுக் குழு தலைவர்களுடன் கசப்பான சொற்போரில் ஈடுபட்டார்.”14 துரதிர்ஷ்டவசமாக, டில்லி ஆட்சியாளர்கள் பண்டாரியின் தவறான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே தமதுகொள்கைகளை வகுத்தார்கள். தமிழ்ப் பிரதிநிதிகள் ஆணவம் பிடித்தவர்கள் என்றும் விட்டுக்கொடாக்கடும்போக்காளர்கள் என்றும் ஒரு தவறான மதிப்பீட்டையே அவர் இந்திய அரசுக்கு வழங்கியிருந்தார்.
இந்திய மத்தியஸ்துவ இராஜதந்திரத்தின் தோல்விக்கு இரண்டாவது காரணம் ஒரு கசப்பான விவகாரமே. உலகபுலனாய்வுத் துறையினரின் தந்திரோபாய அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இதுவொரு புதுமையானவிவகாரம் அல்ல. போராளி அமைப்புகளின் அரசியல் உணர்வுகளுக்கு சற்றேனும் மதிப்பளிக்காத றோபுலனாய்வு அதிகாரிகளின் நெருக்குவார மிரட்டல் அணுகுமுறையும் திம்புப் பேச்சுக்களின் முறிவுக்குக்காரணமாக அமைந்தது. எஜமான்–அடிமை என்ற மனப்பான்மையுடனேயே றோ அதிகாரிகள் தமிழ் விடுதலைஅமைப்புகளைக் கையாள முயன்றனர். தமிழ் அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சியும், ஆயுத உதவியும், இருப்பிடத் தஞ்சமும் வழங்கியதால் அவர்களைப் பொம்மைகளைப் போலக் கட்டுப்படுத்தி தாம் நினைத்ததுபோல வழி நடத்தலாம் என இந்திய புலனாய்வுத் துறையினர் கருதினர். தமிழ்ப் போராளி அமைப்புகள்தமக்கென்ற அரசியற் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தனர் என்பதும் இந்தியஅழுத்தங்களுக்கு அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதும் திம்புப் பேச்சுக்களிலிருந்துதெளிவாகியது. சிங்கள இனவாத அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடுவதற்கும், தமிழ் மக்களின்நியாயமான உரிமைகளை வென்றெடுக்கவும் இந்தியாவின் அரசியல், இராணுவ, இராஜதந்திர ஆதரவுஅவசியமென்பதை போராளி அமைப்புகள் முழுமையாக உணர்ந்திருந்தன. அதற்கு மேலாக, இந்தியாவைப்பகைத்துக் கொள்ளவோ இந்திய நலன்களுக்கு விரோதமாகச் செயற்படவோ அவர்கள் விரும்பவில்லை. தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்தையும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய அமைப்புகளையும்பொறுத்தவரை, அவை அனைத்துமே ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் நலனையும் அரசியல் அபிலாசையையும்முதன்மைப்படுத்தி நின்றதால் அவர்கள் தமது இலட்சிய உறுதிப்பாட்டிலிருந்து தளர்ந்து கொடுக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொள்வதற்கு முன்பாக ஈழத் தேசிய விடுதலை முன்னணிசந்திரகாசனின் செல்வாக்கின் கீழ் செயற்பட்டது. அவ்வேளை முன்னணியின் தலைமை மீது இந்திய அரசின்ஆதிக்கம் இருந்தது. ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரெத்தினம் இந்தியாவின் விருப்பத்திற்குரியவராகஇருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புகள் மார்க்சீய தரிசனத்தை தமது கருத்தியலாக தழுவிநின்றன. எந்தவொரு கருத்தியல் சார்புமற்று நின்றதால் ரெலோ அமைப்பு மீது இந்திய அரசு கூடுதலான ஆதரவுகாட்டியது. தமிழ்த் தேசிய பற்றுறுதிமிக்க விடுதலைப் புலிகள், ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன்இணைந்து கொண்டதை அடுத்து, முன்னணித் தலைமையானது இந்தியாவின் ஆதிக்கத்திற்கு அடிபணியாது, சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்படும் மாபெரும் அரசியல்–இராணுவ சக்தியாக வளர்ந்துள்ளது என றோபுலனாய்வுத் துறையினர் கணிப்பிட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மத்தியிலான நெருங்கியஉறவு, தமிழ் நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் புலிகளுக்கிருந்த பேராதரவு ஆகியன முன்னணியின் தனித்துவத்திற்குவலுச் சேர்த்தன. இந்தியாவின் ஆதரவிலும் அனுதாபத்திலும் பெருமளவு தங்கியிருந்த போதும், தமிழ்அமைப்புகள், தம்மை விடுதலைப் போராளிகளாகக் கருதிப் பெருமைப்பட்டார்களே தவிர, இந்தியாவின்சதுரங்க ஆட்டத்திற்கு அசைந்து கொடுக்கும் பகடைக் காய்களாகச் செயற்பட விரும்பவில்லை.
சிறீலங்கா அரசின் பேச்சுக் குழுத் தலைவராகப் பணிபுரிந்த ஹெக்டர் ஜெயவர்த்தனாவின் நெகிழ்வற்ற, கடும்போக்கும் பேச்சுக்களின் முறிவுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல்அபிலாசைக்கு மதிப்பளித்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு சமரச வழியில் ஒரு நியாயபூர்வமான தீர்வைவழங்கும் நேர்மையான நோக்கம் எதுவுமற்ற ஒரு இனவாத அரசையே ஹெக்டர் பிரதிபலித்தார். அரசியலமைப்புச் சட்டநிபுணர் என்ற ரீதியில், அவர் சிறீலங்காவின் அரசியல் யாப்பு எல்லைக்குள் நின்றேவிவாதங்களை நடத்தினார். இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையை வலியுறுத்திய அவர், வறண்டஇறுக்கமான கடும்போக்கைக் கடைப்பிடித்தாரே தவிர, தமிழரின் நியாயமான கோரிக்கைகள் மீது எவ்விதஅனுதாபமும் காட்டவில்லை. புதிதாகப் புதுமையாகச் சிந்தித்து பிரச்சினைகளை அணுகும் ஆற்றல் அவரிடம்இருக்கவில்லை. அவரது அணுகுமுறை பற்றி திரு.டிக்சிட் குறிப்பிடுகையில், “எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனாவின்பேச்சுக்கான அணுகுமுறையானது உயிரோட்டமற்றது. இயந்திரமாகச் சட்ட நியமங்களுக்குள் மட்டும்இயங்கியது. தமிழரின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் போதெல்லாம் அவை சிறீலங்காவின் யாப்பையும்ஒற்றையாட்சி முறைமையையும் மீறுவதாக அமைந்திருப்பதாகத் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தினார். இதனால் திம்புப் பேச்சுகள் செவிடர்களின் கருத்தாடலாக மாறியது.”15 என்றார்.
தமிழ் அமைப்புகளின் வெளிநடப்பை அடுத்து திம்புப் பேச்சுகள் முறிவடைந்து போனதினால் இந்திய அரசுசினம்கொண்டது. ஏதோ ஒரு வடிவில் இந்திய அரசு தண்டிக்கும் நடவடிக்கை எடுக்குமென நாம் சரியாகவேஎடைபோட்டோம். சென்னைக்கும் திம்புவுக்கும் மத்தியில் எமது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டறோ அதிகாரிகள், எனது அறிவுறுத்தலின் பேரிலேயே தமிழ்ப் பிரதிநிதிகள் பேச்சு மேசையிலிருந்துவெளிநடப்புச் செய்தார்கள் எனக் கருதி, திம்புப் பேச்சுக்களின் தோல்விக்கு நானே சூத்திரதாரி எனத் தவறாகஎடைபோட்டிருந்தனர். இது குறித்து இந்திய அரசு என்மீது அதிருப்தி அடைந்திருப்பதாக றோ அதிகாரியானஉன்னிக்கிருஷ்ணன் எனக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். எதிர்பார்த்தது போல, இந்திய அரசின் தண்டனைநாடு கடத்தல் உத்தரவாக என்மீது பிறப்பிக்கப்பட்டது.
1985 ஆகஸ்ட் 23ஆம் நாள், சென்னை பெசன்ட் நகரிலிருந்த எனது இல்லத்தைச் சுற்றிவளைத்த தமிழ்நாடுகாவல்துறையினர் என்னைக் கைதுசெய்து, ஒரு இரகசிய இடத்தில் தடுத்து வைத்தனர். மறுநாள், ‘ஏயர்இந்தியா’ விமானம் மூலம் நான் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.16 நான் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட சம்பவத்தின் முழு விபரங்களும் திருமதி. அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ என்றநூலில் விபரமாகத் தரப்படுகிறது. நடேசன் சத்தியேந்திராவுக்கும் சந்திரகாசனுக்கும் நாடுகடத்தல் உத்தரவுபிறப்பிக்கப்பட்டது. நாடுகடத்தல் உத்தரவு கிடைப்பதற்கு முன்னராகவே சத்தியேந்திரா லண்டன்பயணமாகிவிட்டார். சத்தியேந்திரா மீது நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ரொமேஸ் பண்டாரியின்திருவிளையாடல் என்பது பின்பு தெரியவந்தது. சந்திரகாசனுக்கும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கும்தொடர்புண்டு என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் நாடு கடத்தப்பட்டாரென பின்பு ஒரு தடவை றோ உயர்அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். இந்திய அரசின் இந்த நாடு கடத்தல் நடவடிக்கை தமிழ் விடுதலைஅமைப்புகளுக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது. அதாவது, இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாகச்செயற்பட்டால், இந்திய நல்லாதரவு தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
தமிழர் தரப்புக்கு எதிராக இந்திய அரசின் ஒருதலைப்பட்சமான ஒழுங்கு நடவடிக்கையை இந்திய ஊடகங்கள்வன்மையாகக் கண்டித்தன. ‘அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முட்டாள்தனமான நடவடிக்கை’ என ஒரு இந்தியஆங்கில நாளிதழ் கண்டித்தது. தமிழ்ப் பிரதிநிதிகள் நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக தமிழ்நாடு அரசியற்தலைவர்களும் ஆவேசமாகக் குரலெழுப்பினர். ‘இந்திய அரசு தமிழர்களின் உணர்வை மதிக்கத் தவறிவிட்டது’ எனக் கண்டித்து தமிழகத் தலைவர்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நிகழ்த்தி தமது எதிர்ப்பைத்தெரிவித்தனர். என்மீது பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவு மீளப் பெறப்பட்டு, நான் மீண்டும்இந்தியாவுக்கு அழைக்கப்பட வேண்டுமென்றும், நான் திரும்பும்வரை சமாதானப் பேச்சுக்களில் பங்குகொள்ளப்போவதில்லை என்றும் பிரபாகரனும் ஏனைய ஈழத் தேசிய முன்னணித் தலைவர்களும் உறுதியானநிலைப்பாட்டை எடுத்தனர். இப்படியான நிலைமைகளை எதிர்கொண்ட ரஜீவ் அரசாங்கம் என்மீதுபிறப்பிக்கப்பட்ட நாடுகடத்தல் உத்தரவை மீளப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்குப் பின்னர்நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினேன்.
ராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. இதில் அனைத்து தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன.
தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது.
இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்திய தாக்குதலில் தமிழினப் படுகொலையில் 200-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது.