இலங்கையின் ஆகாய வெளியை அத்துமீறிய இந்தியாவின் கண்டிப்பான போக்கும், நெல்லியடியில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய கோரமான தாக்குதலும் ஜெயவர்த்தனாவையும் அவரது இனவெறிகொண்ட அமைச்சர்களையும் பணிய வைத்தது. இந்திய மத்தியஸ்துவ முயற்சிக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் சுறுசுறுப்பான இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்றன. தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு அதிகாரப் பரவலாக்கத் திட்டம் உட்பட இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை வரையவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பின்னணி நிகழ்வுகளைத் திரு. டிக்சிட், ‘கொழும்பில் எனது பணி’ என்ற தனது நூலில் நாற்பது பக்கங்களைக் கொண்ட ஒரு அத்தியாயத்தில் விபரமாக விளக்கினார்.
ஒப்பந்தம் உருப்பெற்றதன் மூலக் கதையை விபரித்துச் சொல்லும் டிக்சிட் விடுதலைப் புலிகள் சம்பந்தமான ஒரு விசித்திர நிகழ்வையும் சொல்கிறார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட புலிகளின் பிரதிநிதி ஒருவர், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை ‘இந்து’ பத்திரிகை ஆசிரியரான ராம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினாராம். இத் தீர்வுத் திட்டம் ஆறு அம்சங்களைக் கொண்டதாக டிக்சிட் எழுதுகிறார். (1) சிறீலங்கா இராணுவம் தனது படை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். (2) தமிழ்த் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். (3) 1983-86 கால இடைவெளிக்குள் பேசப்பட்ட தீர்வு யோசனைகளின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வெண்டும். (4) தமிழ் மொழி தேசிய மொழியாகவும், உத்தியோக மொழியாகவும் ஏற்கப்பட வேண்டும். (5) இறுதித் தீர்வுக்கு முன்னராக ஒரு இடைக்காலத் தீர்வு செயற்படுத்தப்பட வேண்டும். (6) இன விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சிறீலங்கா இராணுவக் கட்டமைப்பில் தமிழர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். இந்த ஆறம்ச யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போருக்கு நிரந்தர ஓய்வுகொடுத்துத் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையையும் கைவிடும் என திரு.ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இந்த யோசனைகள் உள்ளடங்கியதாகத் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக இந்திய இலங்கை அரசுகள் கைச்சாத்திட வேண்டும் எனவும் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி ராமுக்குத் தெரிவித்தாராம்.20 சீனாவுக்கு விஜயம் செய்த பின்பு சிங்கப்பூரில் தங்கி நிற்கும் பொழுது, தொலைபேசி மூலமாக ராமுக்கு இத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக டிக்சிட் எழுதுகிறார். புலிகளின் பிரதிநிதி மூலம் தனக்குக் கிடைத்த செய்தியை, காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் தனது நண்பருமான திரு.காமினி திசநாயக்கா வாயிலாகச் சிறீலங்கா அரசுக்கு தெரியப்படுத்தினாராம் இந்துப் பத்திரிகையாசிரியர். இப்படியான ஒரு விசித்திரமான கட்டுக்கதை டிக்சிட்டின் நூலில் தரப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதியால் திரு. ராமுக்கு தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக எழுதுகிறார் டிக்சிட். இதில் சர்ச்சைக்குரிய கேள்வி என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படியான யோசனைகளை அல்லது கோரிக்கைகளை இந்துப் பத்திரிகை ஆசிரியர் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததா என்பதுதான். அதுவும் பெயர் குறிப்பிடப்படாத மர்மமான நபர் ஒருவர், புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி என உரிமைகோரி, அரசியல் தீர்வு யோசனைகளைத் தொலைபேசியில் தெரிவித்தார் என்ற இந்தக் கட்டுக்கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் இலட்சியத்தையும், ஒட்டுமொத்தத்தில் தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் இந்தப் புனைகதையை யார் புனைந்தார்களோ தெரியவில்லை. எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகளையும் சம்பந்தப்படுத்தி, நியாயப்படுத்தும் நோக்குடன் இந்த விபரீதமான சம்பவம் சோடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதையும், இத் தகவல் பரிமாற்றத்திற்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நான் உறுதிபடக் கூறுவேன். ‘இந்து’ ஆசிரியர் திரு. ராம், இந்திய தூதுவர் திரு. டிக்சிட், சிங்கள அமைச்சர் திரு. காமினி ஆகியோரும் ‘றோ’ புலனாய்வுத் துறையினரும் சேர்ந்து திரித்த கட்டுக் கதை என்றே இதை நான் கருதுகிறேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகளின் இந்த யோசனைகளே அடிப்படையாக அமைந்திருந்ததால் பிரபாகரனும் நானும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியைச் சந்தித்தபொழுது இவ்விடயம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லையே? திரு. ராமும் திரு. டிக்சிட்டும் அனுபவ முதிர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் என்பதால், விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி என உரிமைகோரி யாரோ இனம்தெரியாத நபர் இனப் பிரச்சினைக்கு ஒரு யோசனைத் திட்டத்தை தொலைபேசியில் தெரிவித்தபோது, அதன் நம்பகத்தன்மை பற்றி புலிகளின் தலைவர்களுடன் அவர்கள் கலந்தாலோசிக்க தவறியது ஏன்? அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கும் கொள்கைக்கும் மாறுபட்டதாக இந்த யோசனைகள் அமையப் பெற்று இருப்பதை எவரும் இலகுவில் கண்டு கொள்ளலாம். குறிப்பாக, புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் எதுவுமே இந்த யோசனைத் திட்டத்தில் அடங்கவில்லை. இவற்றிலிருந்து ஒரு உண்மை புலனாகும். அதாவது, இந்த சிங்கப்பூர் நாடகம் ஒரு கட்டுக்கதையன்றி வேறொன்றும் அல்ல என்பதுதான்.21
இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு முயற்சியாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ரஜீவ் அரசினதும் ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடத்தினதும் பிரதிநிதிகள் கூடிக் கலந்தாலோசித்து இவ்வொப்பந்தத்தைத் தயாரித்தனர். இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கத்தில் தமிழ் மக்களோ அன்றிச் சிங்கள மக்களோ சம்பந்தப்படவில்லை. இந்தியப் பாராளுமன்றத்திலோ அன்றி இலங்கை பாராளுமன்றத்திலோ இவ்விடயம் விவாதிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியைப் பாதித்த இவ்வொப்பந்தம் எவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது ஒரு விசித்திரமான கதை.
1987 ஜுலை 19ஆம் நாள், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் முதற் செயலராகப் (அரசியல்) பணி ஆற்றிய திரு. ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிகளின் தலைவரை அவசரமாக சந்திக்கவேண்டுமென வற்புறுத்தினார். தனக்கு உதவியாக யோகரெத்தினம் யோகியை அழைத்துச் சென்ற பிரபாகரன் இந்தியத் தூதரக அதிகாரியைச் சந்தித்தார். இந்திய இலங்கை அரசுகள் இணைந்து, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்துள்ளதாகத் தெரிவித்த திரு. பூரி, இத் திட்டத்தைத் தெளிவாக விளக்குவதற்காக இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி புதுடில்லியில் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். இத் தீர்வுத் திட்டம் பற்றி விரிவாகக் கூறுமாறு பிரபாகரனும் யோகியும் கேட்டுக் கொண்டபோது, அதுபற்றி விரிவாகக் கூற மறுத்த இந்திய இராஜதந்திரி, புது டில்லியில் அதன் உள்ளடக்கம் விரிவாக விளக்கப்படும் என்றார். தமிழீழ மக்களின் அரசியல் வாழ்வைப் பாதிக்கும் ஒரு முக்கியமான தீர்வுத் திட்டத்தை இரு அரசுகளும் இணைந்து தயாரித்துள்ளதால் அதனை உதாசீனம் செய்ய முடியாது என பிரபாகரன் கருதினார். அத்துடன் இந்தியாவின் பிரதம மந்திரி அதிகாரபூர்வமாக அழைப்பு விடும்பொழுது அதனை தட்டிக் கழிக்கவும் அவரால் முடியவில்லை. ஆகவே, புதுடில்லி செல்வதற்குப் பிரபாகரன் இணங்கினார். அவ்வேளை சென்னையில் தங்கியிருந்த என்னையும் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் பிரபாகரன் வலியுறுத்தினார்.
1987 ஜுலை 23ஆம் நாள், யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் தரையிறங்கிய இரு இந்திய விமானப் படையின் உலங்குவானூர்திகள், பிரபாகரன், யோகரெத்தினம் யோகி, திலீபன் ஆகியோர் அடங்கிய விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவை ஏற்றிக் கொண்டு சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டன. அவ்வேளை சென்னையில் என்னைச் சந்தித்த தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் பிரபாகரனது வருகையையும் அவரது வேண்டுகோளையும் எனக்குத் தெரிவித்தனர். நான் உடனடியாகவே மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு பிரபாகரனைச் சந்தித்தபொழுது, இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்வதாகச் சொன்னார். இந்திய இலங்கை அரசுகள் கூட்டாகச் சேர்ந்து தமிழர் பிரச்சினை குறித்து ஒரு தீர்வுத் திட்டம் வரைந்திருப்பதாகவும் அதன் விபரங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார். விமான நிலையத்தில் வைத்து பூரியைச் சந்தித்த நான் அவரிடம் அத் தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றி விசாரித்தேன். அதுபற்றி எதுவுமே கூற அவர் மறுத்துவிட்டார். புதுடில்லியில் இந்தியத் தூதுவர் திரு. டிக்சிட் எம்மை சந்தித்து விபரமாக எல்லாவற்றையும் எமக்கு விளக்குவார் என அவர் உறுதியளித்தார். பூரியின் முகபாவத்திலிருந்தும், மனம் திறந்து கதைப்பதற்கு அவர் தயங்குவதிலிருந்தும் எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம். எதையோ ஒளித்து மறைத்து எம்மை ஏமாற்றி புதுடில்லிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது மட்டும் புலனாகியது. சிறிது நேரத்தில் இந்திய வான்படையின் விமானம் மூலம் புதுடில்லி வந்தடைந்தோம்.
புதுடில்லி விமான நிலையத்திலிருந்து தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் அசோக் விடுதிக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். புதுடில்லியில் பிரபல்யமான இந்த விடுதியின் வளாகத்தினுள் எமது வாகனங்கள் நுழைந்தபோது, பெருந்தொகையான ‘கரும்பூனைகள்’ என்றழைக்கப்படும் இந்திய அதிரடிப் படையினர் விடுதியைச் சூழ நிலையெடுத்து நிற்பதை நாம் அவதானித்தோம். எமது முகங்களில் வியப்பும் சந்தேகமும் எழுவதைக் கண்ணுற்ற பூரி, எமக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவே விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரபாகரனின் ஏளனப் புன்னகையிலிருந்து அவர் பூரியின் கூற்றை நம்பவில்லை என்பது எனக்குப் புலனாகியது. பல மாடிக் கட்டிடங்களைக் கொண்ட அந்த விடுதியின் உயர்மாடியும் விசாலமான சந்திப்பு அறையும் எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாக ‘கரும்பூனைகள்’ ஆயுதபாணிகளாக நிலையெடுத்து நின்றனர். நாம் உயர்மாடிக்கு அழித்துச் செல்லப்பட்ட பொழுது அங்கு ஒரு றோ புலனாய்வு அதிகாரி எம்மைச் சந்தித்தார். நாம் பாதுகாப்பான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்றும், விடுதி மாடியிலிருந்து நாம் வெளியே செல்ல முடியாது என்றும், வெளியிலிருந்தும் எம்மைச் சந்திக்க எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சொன்னார். எமது மாடியிலுள்ள தொலைபேசிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ‘பாதுகாப்பான தடுப்புக் காவல்’ என்ற பெயரில், வெளியுலகத்துடன் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் நாம் அந்த விடுதி மாடியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற கசப்பான உண்மை எமக்குப் புலனாகியது. “பாலா அண்ணா, நான் மீண்டும் பொறியில் மாட்டிக் கொண்டேன்,” என ஆதங்கத்துடன் சொன்னார் பிரபாகரன்.
நாம் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் திரு. டிக்சிட் அங்கு வருகை தந்தார். ஏதோ பாரதூரமான விடயத்தைச் சொல்லப் போவது போன்று அவரது முகபாவம் கடுகடுப்பாகத் தோற்றமளித்தது. அந்த விசாலமான சந்திப்பு அறையில், ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு, தனது சுங்கானை எடுத்துப் பற்ற வைத்து இரு தடவைகள் புகையை உள்வாங்கி ஊதினார். அவருக்கு முன்பாக அமைதியுடன் ஆழ்ந்த கவனத்துடன் நாம் அமர்ந்திருந்தோம். எம்மை உன்னிப்பாகப் பார்த்தபடியே தனது மௌனத்தை முறித்தார் டிக்சிட். “இந்திய இலங்கை அரசுகளுக்கு மத்தியில் இருதலைப்பட்சமான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் திரு. ரஜீவ் காந்தி விரைவில் கொழும்புக்கு விஜயம் செய்து அந்த உடன்பாட்டில் கைச்சாத்திடுவார். தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நீதியான, தீர்வும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் டிக்சிட். தனது அங்கிக்குள் கைவிட்டு, ஒரு ஆவணத்தை வெளியே எடுத்து என்னிடம் கையளித்தார். “தயவு செய்து இதனை மொழிபெயர்த்து, இதன் உள்ளடக்கத்தைத் திரு. பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துங்கள், இரண்டு மணிநேரம் கழித்த பின் நான் திரும்பி வருவேன். அப்பொழுது நீங்கள் நல்லதொரு முடிவுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென எழுந்து அந்த அறையிலிருந்து வெளியேறினார் திரு. டிக்சிட்.
நான் அந்த ஆவணத்தை மொழிபெயர்த்துக் கூறியதுடன் அந்தத் தீர்வு யோசனைகளிலுள்ள சிக்கலான பரிமாணங்களையும் பிரபாகரனுக்கு விளக்கினேன். ஒப்பந்தத்தில் அடங்கியிருந்த தீர்வுத் திட்டம் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட இந்த யோசனைகள் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை. ‘சிறீலங்கா மக்கள் சமூகம் பல்லினக் கட்டமைப்பைக்’ கொண்டதாகச் சித்தரிக்கும் இத் திட்டம், இந் நாட்டில் மொழி, பண்பாட்டு ரீதியான பல இனக் குழுமங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறது. இப்படியான சமூகப் பார்வை தேசம், தேசிய இனம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்துள்ளது. இலங்கைத் தீவின் இறையாண்மை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்திய இந்த உடன்பாடு, நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் தமிழரின் இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ‘வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வதிவிடம்’ என ஒரு பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமையை மட்டும் ஒரு ஆக்கபூர்வமான அம்சமாகச் சொல்லலாம். ஒரு தனித்துவமான நிர்வாக அலகாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது இத் தீர்வுத் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் வதியும் எல்லா இன மக்களதும் கருத்து வாக்களிப்பு அங்கீகாரத்துடனேயே கிழக்கு மாகாணம் வடக்குடன் நிரந்தரமாக இணைக்கப்படலாம் என்ற ஒரு விதியும் இந்த ஒப்பந்தத்தில் உண்டு. ஒரு தற்காலிக வடகிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கிறது. ஒரு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை ஆகியோரடங்க நிர்வாக அமைப்பையும் இது சிபாரிசு செய்கிறது. ஆயினும் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகாரங்கள், செயற்பாடுகள் பற்றி தெளிவாக வரையறுக்கப்படவில்லை. 1986 மே 4ஆம் நாளிலிருந்து 1986 டிசம்பர் 19ஆம் நாள் வரை இந்திய இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கும் மத்தியில் கலந்துரையாடப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இறுதித் தீர்வு வகுக்கப்படலாமெனவும் இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கப் போனால், தமிழீழ மக்களது தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகள் எதற்குமே தீர்வாக இத் திட்ட யோசனைகள் அமையவில்லை. இத் திட்டத்தில் ஆயுதக் களைவு பற்றி வலியுறுத்தப்பட்டமையே எமக்குப் பாரதூரமான விடயமாகத் தோன்றியது. இந்த உடன்பாடு கைச்சாத்தாகி 72 மணி நேரத்திற்குள் தமிழ் விடுதலை அமைப்புகள் அனைத்தும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனக் கண்டிப்பாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த விதியை நான் மொழிபெயர்த்துக் கூறியபொழுது பிரபாகரனின் முகம் கோபத்தால் சிவந்தது. இந்த உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் பரிசீலனை செய்வதற்கு எமக்கு வழங்கப்பட்ட இரு மணி நேர கால அவகாசத்தினுள் பிரபாகரன் ஒரு தீர்க்கமான உறுதியான முடிவை எடுத்தார். எப்படியான சூழ்நிலையிலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் உறுதிபடத் தீர்மானித்தார்.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் திரு. டிக்சிட் எம்மைச் சந்தித்தார். இந்திய – இலங்கை உடன்பாடு சம்பந்தமாக எமது முடிவு என்னவென விசாரித்தார். இந்த உடன்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாம் திட்டவட்டமாக எடுத்துக் கூறினோம். எமது தீர்மானத்திற்கு விளக்கம் கேட்டார் டிக்சிட். உடன்பாட்டில் அடங்கியுள்ள தீர்வுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை விளக்கிக் கூறிய நான், இத் தீர்வு யோசனைகள் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் எதனையுமே நிறைவுசெய்யவில்லை என்றேன். ஆகவே, இத் தீர்வு யோசனைகளை எமது விடுதலை இயக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னராக, தமிழரின் சுதந்திர இயக்கத்தை நிராயுதபாணியாக்க இந்திய அரசு வற்புறுத்துவது அநீதியானது, நியாயமற்றது என வாதாடினார் பிரபாகரன். “கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, இரத்தம் சிந்திப் போராடி, எதிரிப் படைகளிடமிருந்து பறித்தெடுத்த ஆயுதங்களை எழுபத்திரெண்டு மணிநேரத்தில் சரணடையச் செய்யுமாறு இந்திய அரசு எவ்வாறு கோரலாம்” என்று கேள்வி எழுப்பினார் பிரபாகரன். அவரது கனத்த தொனியில் ஆத்திரம் நிறைந்திருந்தது. எமது கண்டன விமர்சனங்களை செல்லுபடியாகாதவை என தூக்கியெறிந்து விவாதித்த டிக்சிட், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதைவிடக் கூடுதலான அதிகாரங்கள் மாகாண சபைத் திட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு நிரந்தரமான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வர இருப்பதாலும், இந்திய அமைதி காக்கும் படைகள் சமாதானத்தைப் பேண இருப்பதாலும் தமிழர்களுக்கு ஆயுதங்கள் அவசியமில்லை எனக் கூறினார் டிக்சிட். இந்திய அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு எம்மைக் கேட்டுக் கொண்ட அவர், எமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டினார். நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். ஜெயவர்த்தனா அரசுமீதும், அரச ஆயுதப் படைகள் மீதும் எமக்கு அறவே நம்பிக்கையில்லை என்பதை இடித்துச் சொன்னோம்.
எமது நிலைப்பாட்டிலிருந்து சற்றேனும் விட்டுக் கொடுக்காது நாம் உறுதிகொண்டு நின்றதால் டிக்சிட் பொறுமையிழந்து ஆத்திரமடைந்தார். கனிவாகப் பணிவாக மன்றாடியவர் குரலை உயர்த்திக் கடுமையாக்கி மிரட்டத் தொடங்கினார். “நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தம் நிச்சயமாகக் கைச்சாத்திடப்படும். இது இறையாண்மையுடைய இரு நாடுகளுக்கு மத்தியிலான உடன்பாடு. இதனை நீங்கள் எதிர்த்தால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என மிரட்டினார் டிக்சிட். யோகரெத்தினம் யோகிக்கு இந்த மிரட்டல் இராஜதந்திரம் பிடிக்கவில்லை. “எவ்வகையான பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்?” என்று நக்கலாகக் கேட்டார் யோகி.
“இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை உங்களை இங்கு தடுப்புக் காவலில் நாம் வைத்திருப்போம்” என்றார் டிக்சிட்.
“நீங்கள் எங்களை வருடக்கணக்காகத் தடுப்புக் காவலில் வைத்தாலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. ஆயுதங்களைக் கையளிக்கப் போவதுமில்லை.” என்று சீறினார் பிரபாகரன்.
ஆவேசமடைந்த டிக்சிட் பிரபாகரனை வெறித்துப் பார்த்தபடி குரலை உயர்த்திக் கத்தினார். “நீங்கள் ஆயுதங்களைக் கையளிக்க மறுத்தால் இந்திய இராணுவத்தின் உதவியுடன் நாம் வலுவந்தமாக அவற்றைப் பறித்தெடுப்போம். சக்தி வாய்ந்த இந்திய இராணுவத்தின் முன்பாக உங்களது போராளிகள் வெறும் தூசு”, என்றார் டிக்சிட். பின்பு தனது சுங்கானை எடுத்து பிரபாகரனுக்கு காண்பித்தவாறு “இந்தச் சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகளை துவம்சம் செய்து விடும்” என்று குமுறினார்.
பிரபாகரன் ஆத்திரப்படவில்லை. ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தார். “உங்களால் எதைச் செய்யமுடியுமோ அதைச் செய்து பாருங்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என்று உறுதியாகச் சொன்னார் பிரபாகரன்.
கொதிப்படைந்தார் டிக்சிட். ஆத்திரத்தில் அவரது உதடுகள் நடுங்கின. “மிஸ்டர் பிரபாகரன், இத்துடன் நான்காவது தடவையாக நீங்கள் இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள்.” என்றார் அவர்.
“அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து நான் எனது மக்களைக் காப்பாற்றி இருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றார் பிரபாகரன்.
இயல்பாகவே உணர்ச்சிவயப்படும் டிக்சிட் ஆத்திரத்தின் சிகரத்தை அடைந்தார். அந்நிலையில் அவரால் பேச முடியவில்லை. திடீரென எழுந்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
மிரட்டி அழுத்தம் கொடுக்கும் இராஜதந்திர அணுகுமுறை மூலம், பிரபாகரனின் உறுதியான நிலைப்பாட்டை தளர்த்த முடியாது என உணர்ந்து கொண்ட இந்திய அதிகாரிகள், மென்மையான முறையைக் கையாண்டு அவரை இணங்க வைக்க முயன்றனர். இந்திய உள்ளகப் புலனாய்வுத் துறையின் அதிபர் திரு. எம்.கே.நாராயணன், வெளிவிவகார அமைச்சின் கூட்டுச் செயலர் திரு. சகாதேவ், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு. நிகில் சேத், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த திரு. ஹர்தீப் பூரி ஆகியோர் மாறி, மாறி ஒவ்வொருவராக எம்மைச் சந்தித்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்து விளக்கினார்கள். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறி, அவை மூலம் தமிழ் மக்களின் நலன்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் என நாம் அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் தமது முயற்சியை கைவிடுவதாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றி பின்னர் பேச்சுக்களை நடத்தி, தீர்வுத் திட்டத்தை திருத்தியமைத்து, தமிழர்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமைப்படுத்தலாம் என வாதாடிய அவர்கள், ரஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் இணக்கப்பாடு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். மென்மையான இராஜதந்திர அழுத்தத்திற்கும் பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உருக்குப் போன்ற உறுதியுடன் நின்றார் அவர். எப்படியாவது ஒப்பந்தத்தை எம் மீது திணித்துவிட வேண்டும் என்ற முயற்சியும் சளைக்காது தொடர்ந்தது. புதுடில்லி அசோக் விடுதியில் இந்தத் திரைமறைவு இராஜதந்திர நாடகம் சில நாட்களாகத் தொடர்ந்தது. மணிக்கணக்கில், நாட்கணக்கில், தொடர்ந்து உரையாடி சலிப்படையச் செய்து, உறுதியைத் தளர்த்தும் இராஜதந்திர நுட்பம் பிரபாகரனிடம் பலிக்கவில்லை. இறுதியாக, தமது முயற்சியைக் கைவிட்ட இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என ரஜீவ் காந்தியிடம் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளை இணங்கச் செய்வதற்கு ஒரு வழிமுறையாக தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை பயன்படுத்தலாம் என இந்தியப் பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ரஜீவ் காந்திக்கு அதுவொரு நல்ல யோசனையாகத் தெரிந்தது. ஜுலை 26ஆம் நாள், இந்தியப் பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்றிரவே புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரனும், நானும், யோகரெத்தினம் யோகியும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதல்வருடன் தமிழக உணவு மந்திரி திரு. பண்டுருட்டி இராமச்சந்திரனும், திரு. டிக்சிட்டும் இருந்தனர். சிரித்த முகத்துடன் எம்.ஜி.ஆர் எம்மை வரவேற்றார். நாங்கள் அங்கு சென்று அமர்ந்து கொண்டதையும் அலட்சியம் செய்தவாறு இந்தியத் தூதுவர் எம்.ஜி.ஆர். உடன் உரையாடிக் கொண்டிருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் அடங்கியுள்ள மாகாண சபைத் திட்டம் பற்றியும், இத் தீர்வு யோசனைகள் ஈழத் தமிழரின் நலன்களையும் அரசியல் அபிலாசைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும் விளக்கிக் கொண்டிருந்தார் டிக்சிட். உள்ளங்கையில் நாடியை ஊன்றியவாறு பொறுமையுடன் செவிமடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஒன்றுபட்ட தாயகமாக, தமிழ்மொழி வாரியான மாநிலமாக, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருக்கும் இத் தீர்வுத் திட்டத்தை சிங்களத் தீவிரவாத அரசியல்வாதிகள் மீது அழுத்தம் போட்டு இணங்க வைத்து ஒரு இராஜதந்திர சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளதாகப் புகழ் பாடிக் கொண்டிருந்தார் டிக்சிட். இப்படியான பிரமாதமான தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஈழத் தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவருமே இந்தியாவுக்கு என்றும் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பெருமிதப்பட்டார்.
“தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய அரசியற் கட்சிகளும் போராளி அமைப்புகளும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றன” என்று கூறிய டிக்சிட், எம்மைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிரமுகர்கள் மட்டும் இந்த உடன்பாட்டை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்கமாட்டார்கள். ஆனால் இந்திய அரசு தனியரசு அமைக்கப்படுவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இந்தியாவை பகைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை இவர்கள் சந்திக்க நேரிடும்.” என்று மிரட்டினார் டிக்சிட்
யோகரெத்தினம் யோகிக்கு இனியும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியான அதிகாரப் பகிர்வு எதுவுமே இல்லை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையுமே இத் தீர்வுத் திட்டம் நிறைவு செய்யத் தவறிவிட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் தற்காலிகமானது. கிழக்கு மாகாணத்தின் பொதுசன வாக்களிப்பு என்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்படியான வாக்களிப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான சிங்களவர்களும் முஸ்லிம்களும் இணைப்புக்கு எதிராக வாக்களித்தால் தமிழ்த் தாயகம் நிரந்தரமாகவே பிளவுபட்டுப் போகும். இப்படியான குறைபாடுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் யோகரெத்தினம் யோகி. இதனைத் தொடர்ந்து யோகிக்கும் டிக்சிட்டுக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் மூண்டது.
“சென்ற வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு. பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் அதிலுள்ள மாகாண சபைத் திட்டம் பற்றியும் உமக்கு விபரமாக விளக்கினாராம். அப்பொழுது ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்பொழுது எதிர்ப்புப் தெரிவிக்கிறீர்கள். என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஒரு குண்டைப் போட்டார் டிக்சிட். யோகியும் விட்டுக் கொடுக்கவில்லை. “யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என மறுத்துரைத்தார் யோகி.
“அப்பொழுது என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று ஆத்திரத்துடன் சிறீனார் டிக்சிட். “நீங்கள் உண்மையைப் பேசவில்லை” என்றார் யோகி. பொறி பறந்து வாக்குவாதம் சூடுபிடித்தது. கோபாவேசத்தில் கண்கள் பிதுங்க, முதலமைச்சரைப் பார்த்து, “பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்று கதறினார் டிக்சிட்.
ஒரு ஏளனப் புன்னகையுடன் மௌனம் சாதித்தார் பிரபாகரன். இந்த சுவாரஸ்யமான விவாதத்தில் குறுக்கிட்டுக் குழப்ப நான் விரும்பவில்லை. எம்.ஜி.ஆருக்கு நிலைமை சங்கடமாகியது. விவாதம் காழ்ப்புணர்வைச் சீண்டி வருவதையும், இந்திய தூதுவர் நிதானமிழந்து உணர்ச்சிவசப்படுகிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார் முதல்வர்.
“நான் அவர்களுடன் தனியே பேச விரும்புகிறேன். தயவு செய்து, நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா?” எனப் பண்பாக டிக்சிட்டை வேண்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர். தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் காரணத்தை வினவினார் எம்.ஜி.ஆர். ஒப்பந்தத்திலுள்ள அடிப்படையான குறைபாடுகளை தமிழகத் தலைவர்களுக்கு நாம் விரிவாக எடுத்து விளக்கினோம். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைத் திட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதனையும் நிறைவு செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம். பொதுசனக் கருத்து வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் மாநிலத்தை தற்காலிகமாக இணைப்பதிலுள்ள ஆபத்தையும் தெளிவுபடுத்தினோம். ஈழத்து அரசியற் கட்சிகளும், ஏனைய விடுதலை அமைப்புகளும் இந்திய அரசின் அழுத்தத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார்கள் என்றும், எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்பதையும் உறுதிபடக் கூறினோம். தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், தமிழரின் தாயக மண்ணை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில் எமது ஆயுதங்கள் அனைத்தையும் கையளித்து, எமது போராளிகளை சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது. அநீதியானது என்பதையும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக் கூறினோம்.
மிகவும் பொறுமையுடன் எமது விளக்கத்தை கேட்டறிந்து கொண்டார் முதலமைச்சர். எமது நிலைப்பாட்டிலுள்ள நியாயப்பாட்டை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணும் நோக்கத்திற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டாத சூழ்நிலையில் ஆயுதங்கள் கையளிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அத்துடன் விடுதலைப் புலிகள் வசமிருந்து ஆயுதங்களில் கணிசமான தொகை தனது அன்பளிப்பு நிதியில் பெறப்பட்டது என்பதும் அவருக்குத் தெரியும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு நீங்காத சூழ்நிலையில் தமிழரின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கைவிடுவது ஆபத்தானது என்பதை அவர் ஏற்றுக் கொண்டார். பிரபாகரனின் உறுதி தளரா நிலைப்பாட்டைப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஒப்பந்த விவகாரத்தில் புலிகளின் தலைமை எத்தகைய முடிவை எடுக்கின்றதோ அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார். முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்.
முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே ஒரு இந்திய அதிகாரியுடன் கதைத்துக் கொண்டிருந்த திரு.டிக்சிட் எம்மை வழிமறித்தார். “ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் சொல்வதறியாது தடுமாறி மௌனமாக நின்றோம். “முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார் டிக்சிட். “அப்படியே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நாம் உற்சாகத்துடன் அளித்த பதிலுக்குப் பின்னணியிலுள்ள புதிரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரபாகரனின் அங்கீகாரத்தைப் பெறுவதில் தமிழக முதல்வரின் முயற்சி வெற்றிபெறவில்லை என இந்தியப் பிரதமருக்குத் தெரிய வந்தது. இதனால் ரஜீவ் காந்தி பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். எனினும் தனது முயற்சியைக் கைவிட அவர் தயாராக இல்லை. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடுவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் தலைவரது அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் ரஜீவ் காந்தி உறுதிபூண்டிருந்தார். எம்முடன் பேசி, எமது கருத்துக்களை கேட்டறிந்து, எமது இணக்கத்தைப் பெறுவதற்கு முயன்று பார்க்க அவர் முடிவெடுத்தார்.
1987 ஜுலை 28ஆம் நாள் நள்ளிரவு. அசோக் விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிரபாகரனையும் என்னையும் அவசர அவசரமாக எழுப்பிய இந்தியப் புலனாய்வு அதிகாரிகள், பிரதமர் ரஜீவ் காந்தி எம்மை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள். உடனடியாகப் புறப்படுமாறு பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும்பூனை அதிரடிப் படையினரின் வாகன அணி பின்தொடர பிரதம மந்திரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வீட்டு வாசலில், வெள்ளை நிறத் தேசிய அங்கி அணிந்தவாறு எமக்காகக் காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் இந்திய உள்ளகப் புலனாய்வுத் துறை அதிபர் திரு. நாராயணனும் தமிழக மந்திரி திரு. பண்டுருட்டி இராமச்சந்திரனும் நின்று கொண்டிருந்தனர். கவர்ச்சியூட்டும் புன்முறுவல் பூத்தபடி எம்மை அன்புடன் வரவேற்றார் பிரதமர். பிரபாகரனின் கரத்தைப் பற்றிக் குலுக்கியவாறு, “உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் ரஜீவ் காந்தி. “இவர்களை நான் அறிமுகம் செய்து வைப்பது அவசியமில்லை. இவர்கள் உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள்” என்று திரு. இராமச்சந்திரனையும், திரு. நாராயணனையும் சுட்டியபடி சொன்னார் ரஜீவ் காந்தி. பிரதமரின் சந்திப்பு அறையில் கலந்துரையாடல் உடனே ஆரம்பித்தது. “இந்திய – இலங்கை உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றி விபரமாகக் கூறுவீர்களா?” என்று கேட்டார் ரஜீவ். எமது நிலைப்பாட்டை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை நான் ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.
முதலில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமான, நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் யாப்பின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப் பகிர்வு செய்வது இயலாத காரியம் என விளக்கினேன்.
பரந்த நிறைவேற்று அதிகாரங்களையுமுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்கம் செய்துள்ளது. இந்த ஆட்சியமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒற்றையாட்சி யாப்பை இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிபந்தனையின்றி முழுமையாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, நியாயபூர்வமாக அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக் காட்டினேன்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளில் பல குறைபாடுகள் உள்ளதெனச் சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.
தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கை தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான பெருநிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம், அவர்களது பாரம்பரிய தாயக நிலம். இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் ரஜீவ் காந்தியிடம் எடுத்துரைத்தேன். வடகிழக்கு மாகாணங்கள் தனித்தவொரு நிர்வாகப் பிரதேசமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருப்பது ஒரு ஆக்கபூர்வமான சாதனை. ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசனக் கருத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், வாக்கெடுப்பில் சிங்கள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வடகிழக்கு நிரந்தரமாகப் பிளவுபடுவதுடன், தமிழ்த் தாயகம் காலப் போக்கில் சிதைந்து விடும் என விளக்கினேன். பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், அவ்வப்போது குறிப்புகளை எடுத்தார்.
மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் விளக்கினேன். “வடகிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை” என்று கூறினார் பிரபாகரன்.
இறுதியாக, விடுதலைப் புலிப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் விவகாரத்தை எடுத்துக் கொண்டோம். “இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்கவேண்டுமென விதிப்பது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடி, உயிர்களைத் தியாகம் செய்து பெறப்பட்ட ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள் சரணடையுமாறு ஒப்பந்தம் வற்புறுத்துகிறது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்பாக, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னராக, எமது மக்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ் வகையிலும் நியாயமாகாது.” என்றார் பிரபாகரன்.
நாம் உரையாடி முடிக்கும்வரை, குறுக்கிட்டுப் பேசாது, பொறுமையுடன் எமது கருத்துகளை மிகக் கவனத்துடன் கேட்டறிந்தார் இந்தியப் பிரதமர். சர்ச்சைக்குரிய விடயங்களை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டார். நாம் முடித்ததும், “உங்களது பிரச்சினைகளை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது,” என்றார் ரஜீவ் காந்தி.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாண சபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்குதான் எனக் கூறிய அவர், அதிலுள்ள குறைபாடுகளை பின்னராக ஜெயவர்த்தனா அரசுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக உறுதியளித்தார். “கட்டம் கட்டமாகவே தமிழரின் பிரச்சினையை அணுகித் தீர்வுகாண முடியும். ஒரே தடவையில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. கடுமையான முயற்சியின் பின்பு இணைக்கப்பட்ட மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு பிரதேச சுயாட்சியைப் பெற்றுள்ளோம். இதுவொரு பெரிய முன்னேற்றம்” என்றார் ரஜீவ்.
இந்த ஒப்பந்தத்தில், நாம் சுட்டிக் காட்டியது போல நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர், வடகிழக்கின் நிரந்தர இணைப்பை கருத்து வாக்கெடுப்புக்கு விடுவதிலுள்ள சிக்கலைப் புரிந்துள்ளதாகக் கூறினார். “இது பற்றி நான் ஜெயவர்த்தனாவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்வேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்ப வேண்டும். தமிழ் மக்களின் நலனை மேம்பாடு செய்வதில்தான் நாம் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம். எனவே, உங்களது அமைப்பின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவை. தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் அது எமது கைகளைப் பலப்படுத்துவது மட்டுமன்றி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் ஏதுவாக அமையும்” என விளக்கினார் ரஜீவ் காந்தி. இந்தக் கட்டத்தில் குறுக்கிட்டார் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரன். ரஜீவ் காந்தி கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார் அவர். ரஜீவின் கூற்றுகளும், பண்டுருட்டி அளித்த விளக்கங்களும் பிரபாகரனுக்கு திருப்தி அளிக்கவில்லை.
“இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தமிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பிரபாகரன். புலிகளின் தலைவரது கூற்றை, சொல்லுக்குச் சொல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் அமைச்சர் இராமச்சந்திரன். தனது நிலைப்பாட்டில் பிரபாகரன் உறுதியாக, இறுக்கமாக நிற்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் ரஜீவ். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு, தனது முயற்சியை முறித்துக் கொள்ள விரும்பாத பிரதமர், திடீரென தனது அணுகுமறையை மாற்றிக் கொண்டார்.
“உங்களது நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச் சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்.” என்றார் ரஜீவ் காந்தி. அவ்வேளை தலையிட்டுப் பேசிய பண்டுருட்டி இராமச்சந்திரன் ரஜீவ் காந்தியின் கூற்றுக்கு மெருகூட்டி ஒரு விளக்கம் கொடுத்தார். “இது ஒரு அற்புதமான திருப்பம் அல்லவா? பிரதம மந்திரியே உங்களது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இந்தச் சிறிய சலுகையையாவது இந்திய அரசுக்கு நீங்கள் செய்யக் கூடாதா?” என்று கேட்டார் தமிழக அமைச்சர்.
ரஜீவின் கூற்றும் அதற்கு திரு. இராமச்சந்திரன் அளித்த விளக்கமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தி அளிக்கவில்லை. “ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதை நாம் எதிர்க்கிறோம் என்பதுதானே அர்த்தம். ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதேவேளை எதிர்க்காமலும் இருப்பது எப்படி? இதுவொரு விந்தையான வாதம்” என்று எனது காதுக்குள் குசுகுசுத்தார் பிரபாகரன். தனது கூற்றிலுள்ள புதிரை நாம் புரிந்து கொண்டோம் என்பதை உணர்ந்த பிரதமர், பிரச்சினையை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றார்.
“உங்களது இயக்கத்திற்கும், உங்களது மக்களுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா மீது நம்பிக்கையில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். எனக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடுமையான அழுத்தம் பிரயோகித்து, முக்கியமான சலுகைகளைப் பெற்று இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். மாகாண சபைத் திட்டத்தில் குறைகள் இருக்கலாம். எனினும் நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி, பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். இந்த மாகாண சபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஆதலால் அந்தக் கால இடைவெளியில், வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவ முடியும். அந்த இடைக்கால அரசில் உங்களது அமைப்பு பிரதான பங்கை வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஒரு இடைக்கால அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார் ரஜீவ் காந்தி.
பாரதப் பிரதமரின் யோசனை பண்டுருட்டி இராமச்சந்திரனை பரவசத்தில் ஆழ்த்தியது. உற்சாகம் மேலிட உணர்ச்சிவசப்பட்ட அவர், “இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். தமிழ்த் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் – பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம்.” என்று கூறினார்.
ஆழமான சிந்தனையில் ஆழ்ந்துபோயிருந்தார் பிரபாகரன். இந்த இரகசிய ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உறுதிமொழிகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. எதிலுமே ஆர்வம் காட்டாது தனக்குள்ளே தியானத்தில் ஒடுங்கிப் போயிருந்தார் அவர். ஆனால் பண்டுருட்டி இராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ் – பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு பிரமாதமான வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.
மாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர், வடகிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. சகல தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கும் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென ரஜீவ் காந்தி கேட்டுக் கொண்டார். அதற்குப் பிரபாகரன் இணங்கவில்லை. இறுதியில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. வடகிழக்கு இடைக்கால ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு போன்ற விடயங்களை அரச அதிபர், ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு எடுப்பதாக ரஜீவ் காந்தி உறுதியளித்தார்.
தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசாங்கம் காவல்துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு வரி வசூலித்து வருவதாகச் சிறீலங்கா அரசு குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்த பிரதமர், இந்த வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா என வினவினார். மக்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணம் எமது அமைப்பின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுவதாகக் கூறிய பிரபாகரன், அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தர இணங்கினால் வரி அறவிடுவதை கைவிடலாம் என்றார். விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செலவுக்காக மாதாந்தம் ஐம்பது லட்சம் ரூபா (இந்திய நாணயமாக) வழங்குவதற்கு இணங்கினார் ரஜீவ். வரி வசூலிப்பை நிறுத்துவதாக வாக்களித்தார் பிரபாகரன்.
அடுத்ததாக, விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றிப் பேசப்பட்டது. “உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லாப் படையணிகளையும் கலைத்துவிடுமாறும் நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாகச் சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். இந்திய – இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என சிறீலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்பவைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது முக்கியம். தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும். அத்துடன் சிங்கள ஆயுதப் படைகள் போர்நிறுத்தம் பேணியவாறு முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்று கூறினார் ரஜீவ் காந்தி.
பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார் பண்டுருட்டி. “எதற்காகக் கடுமையாக யோசிக்க வேண்டும்? இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த, பாவிக்கமுடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றைக் கையளித்தால் போச்சு” என்றார் இராமச்சந்திரன்.
“இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவை எல்லாமே பழுதடைந்த, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள்தான்” என்று கிண்டலாகப் பதிலளித்தார் பிரபாகரன்.
“பரவாயில்லையே, அந்தப் பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம்.” என்றார் அமைச்சர்.
தமிழ் மொழியில் நிகழ்ந்த இந்த சுவையான உரையாடலின் அர்த்தத்தை அறிய விரும்பினார் ரஜீவ். அதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் பண்டுருட்டி. அதை ஆமோதித்தபடி புன்முறுவலுடன் தலையசைத்தார் பிரதம மந்திரி.
அப்பொழுது அதிகாலை இரண்டு மணி இருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஏதோவொரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார் ரஜீவ் காந்தி. அன்று காலை ஒன்பது மணியளவில் அவர் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட ஏற்பாடாகியிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட வேண்டும். இந்தியப் பிரதமரிடம் எந்தவிதமான சோர்வோ, களைப்போ தென்படவில்லை. ஏதோவொரு சாதனை ஈட்டியது போல தெம்பாகக் காணப்பட்டார். பண்டுருட்டி இராமச்சந்திரனுக்குப் பரம திருப்தி. ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார் பிரபாகரன். அவரது கண்களில் ஏமாற்றமும் சோகமும் தெரிந்தது. சந்திப்பு முடிவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன். “ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் எனப் பல முக்கிய விடயங்கள் இங்கு பேசப்பட்டன. பிரதம மந்திரி அவர்களும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இவற்றை எல்லாம் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கைச்சாத்துப் பெற்றால் என்ன? அது இந்த இரகசிய உடன்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் அல்லவா?” என்றேன்.
எனது யோசனை பண்டுருட்டி இராமச்சந்திரனை ஆட்டம் காண வைத்தது. ஒரு கணத்தில் அவரது முகத்திலிருந்த மகிழ்ச்சி எல்லாம் மறைந்து போனது. சிறிது நேரம் யோசித்தார். “மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் நாம் இணக்கப்பாடு கண்டோம். கறுப்புப் பணமாக மாதாந்தம் உங்களுக்கு கப்பம் வழங்குவதிலிருந்து ஆயுதக் கையளிப்பிலும் ஒளிவு மறைவாக உடன்பாடு செய்திருக்கிறோம். இந்த விடயங்கள் அம்பலமானால் அது இந்தியாவிலும் இலங்கையிலும் பெரியதொரு அரசியற் சூறாவளியை உண்டுபண்ணும் அல்லவா? எமது பிரதமரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இது ஒரு Gentlemen Agreement. இரு உத்தமமான மனிதர்களின் எழுத்தப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?” என்றார் அமைச்சர் பண்டுருட்டி. தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரஜீவ் காந்திக்கும் விளக்கினார்.
“நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத Gentlemen Agreement ஆக இருக்கட்டும்” என்றார் ரஜீவ் காந்தி. இந்த விடயத்தில் நாம் பிரதம மந்திரியுடன் முரண்பட விரும்பவில்லை. அத்தோடு இந்த இரகசிய ஒப்பந்தத்தில் பிரபாகரனும் எவ்வித அக்கறை காட்டுவது போலவும் தெரியவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல்பற்றி பிரதமரிடம் முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரை யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதியளித்தார் ரஜீவ்.
ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோக் விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. “அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை” என்று விரக்தியுடன் கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றார் பிரபாகரன்.
சோர்ந்து களைத்து எனது அறைக்குள் சென்றபோது விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. இந்தியப் பிரதமருடன் நடந்த கலந்துரையாடல் பற்றியும், ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் பற்றியும், திலீபனிடம் விபரமாகக் கூறினேன். எல்லாவற்றையும் மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவன், “அண்ணா என்ன சொல்கிறார்” எனக் கேட்டான். “பிரபாகரனுக்கு திருப்தியில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை” என்றேன். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “அண்ணன் நினைப்பதுதான் நடக்கும்” என்றான் திலீபன். உண்மையில் அப்படித்தான் நடந்தது. ரஜீவ் – பிரபா ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் நிறுவப்படவில்லை.
மறுநாள் காலை இந்தியப் பிரதமர் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார். பிற்பகல் நடைபெற்ற ஆடம்பர வைபவத்தின் போது ரஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். எம் மீதான தடுப்புக் காவல் அகற்றப்பட்டதால் நாம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றோம். 1987 ஆகஸ்ட் 2ஆம் நாள், பிரபாகரனும், யோகரெத்தினம் யோகியும், திலீபனும் இந்திய இராணுவ விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர்.
அத்தியாயம் II: இலங்கையில் இந்தியத் தலையீடு
கறுப்பு ஜுலை கலவரமானது, இலங்கையில் இந்திய அரசு தலையீடு செய்வதற்குத் தேவையான இடைவெளியையும் பொருத்தமான புறநிலையையும், தகுந்த நியாயப்பாட்டையும் உருவாக்கிக் கொடுத்தது எனலாம். 1983 ஜுலை இனக் கலவரத்தோடு ஆரம்பமாகிய இந்தியத் தலையீடு, 1990 மார்ச் மாத இறுதியில், இந்திய அமைதி காக்கும் படையின் விலகலுடன் முடிவுக்கு வந்தது. இத் தலையீடு, இந்திய-இலங்கை உறவில் மிகவும் நெருக்கடியான சர்ச்சைக்குரிய காலகட்டமாக அமைகிறது. ஏழு ஆண்டு கால நீட்சியைக் கொண்ட இந்தியத் தலையீடானது, வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுத்து, அரசியல், இராணுவ, கேந்திரப் பரிமாணங்களைக் கொண்ட மிகவும் சிக்கலான விவகாரமாக மாறியது.
அரசியல் மட்டத்தில் பார்க்கப் போனால், பாதுகாப்பற்ற அப்பாவித் தமிழ் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு வன்முறையைத் தடைசெய்யும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானத் தலையீடாக இது அமைந்தது. இந்த அரசியல்-இராஜதந்திர முயற்சியானது, நான்கு ஆண்டு காலமாக நீடித்த ஒரு மத்தியஸ்த விவகாரமாக மாறி, ஈற்றில் இந்திய-இலங்கை உடன்படிக்கையாக முடிவுற்றது. தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரவலாக்கத் திட்டம் ஒன்றையும் இந்த உடன்படிக்கை கொண்டிருந்தது.
இராணுவ மட்டத்தில் நோக்குமிடத்து, சிங்கள அரசுக்கு எதிரான தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைக் கட்டி எழுப்புவதற்கு இரகசியமாக உதவி புரிந்தமையும் இந்தியத் தலையீட்டின் ஒரு அம்சமாக அமைந்தது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்குச் சமாதானப் பேச்சுக்கள் வாயிலாக தீர்வுகாண வழிவகை செய்யுமாறு ஜெயவர்த்தனா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் வழங்கியது. பின்னைய காலகட்டத்தில், விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையவும், இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளை நிறைவு செய்யவும் இந்திய அமைதிப் படைகள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தியத் தலையீடு நேரடியான இராணுவ மோதலாக வடிவம் எடுத்தது.
புவியியல்-கேந்திர மட்டத்தில் பார்த்தால், இந்தியத் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அந்நிய நாசகாரச் சக்திகள், அவ்வேளை இலங்கையில் ஊடுருவி நின்றதாக இந்திய அரசு அஞ்சியது. இந்தியாவின் புவியியல்-கேந்திர உறுதிநிலைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடிய இந்த அந்நியச் சக்திகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதும் இந்தியத் தலையீட்டின் ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. இந்திய-இலங்கை உடன்பாட்டுடன் இணைந்ததான கடிதப் பரிமாற்றத்தில் இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் விதிகளை உள்ளடக்கியதன் மூலமாக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.
பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக பெரிய எடுப்பில் மேற்கொள்ளப்பட்ட இத் தலையீடானது இறுதியில் இந்திய வெளிவிவகாரக் கொள்கைக்கும், இராஜதந்திர முயற்சிக்கும் ஏற்பட்ட பெரியதொரு தோல்வியாகவே முடிந்தது. இந்திய-இலங்கை உடன்பாடும் சரி, இந்திய அமைதிப் படைகளின் செயற்பாடும் சரி, தமிழரின் இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவில்லை. வெவ்வேறு காரணங்களின் நிமித்தம், இந்திய-இலங்கை உடன்பாட்டையும், தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகளின் இருத்தலையும் தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பவில்லை. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவதற்கு எடுத்த முயற்சி ஒரு கெரில்லாப் போராக வெடித்தது. இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்கள் காரணமாக பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தமிழரின் சொத்துக்கள் பெருமளவு அழிக்கப்பட்டன. இந்திய அமைதிப் படைகள் ஆக்கிரமிப்பு இராணுவமாக மாறி, கொடிய போர்க் குற்றங்களைத் தமிழர் மீது இழைத்தது. இந்தியாவைத் தமது இரட்சகராகவும் பாதுகாவலராகவும் பூசித்து வந்த தமிழீழ மக்களுக்கு இந்திய இராணுவம் இழைத்த கொடுமைகள் ஆழ்ந்த அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் கொடுத்தது.
இந்திய-இலங்கை உடன்பாடு செய்யப்பட்டதையும் தமிழர் தாயகத்தில் இந்தியப் படைகள் தரித்து நின்றதையும் எதிர்த்துத் தென்னிலங்கையில் ஒரு கொந்தளிப்பான நிலைமை உருவானது. இலங்கை மண்ணில் இந்தியப் படைகள் ஆக்கிரமித்து நின்றதை எதிர்த்துத் தீவிரவாதக் கம்யூனிஸ்ட் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் குதித்தது. 1988இல் ஜனாதிபதி பிரேமதாசா ஆட்சிப்பீடம் ஏறியதை அடுத்து, அவர் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து இந்தியப் படைகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டினார். இதனால் இந்திய-இலங்கை உறவில் பகைமையும் முறிவும் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. இறுதியில், திரு. வி.பி.சிங் அவர்கள் இந்தியப் பிரதமராகிய வேளையில் இந்தியப் படைகளை திருப்பி அழைக்க இந்திய அரசு முடிவெடுத்தது. 1990 மார்ச் மாதம் இந்திய இராணுவத்தின் கடைசிப் படையணிகள் இலங்கை மண்ணைவிட்டு வெளியேறின. அத்துடன் மிகவும் சர்ச்சைக்கு ஆளாகியிருந்த இந்தியத் தலையீட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்தது. இந்தக் கசப்பான, அவமானத்திற்குரிய வரலாற்று அனுபவம் காரணமாக இலங்கையின் இனப் பிரச்சினையில் நீண்ட காலமாகவே ஒரு தலையிடாக் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.
இலங்கையில் இந்தியத் தலையீடு குறித்து, பல்வேறு வட்டாரங்களிலிருந்து பல்வேறு வகையான கண்டன ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவில் இருந்தே மிகவும் மோசமான கண்டனக் குரல்கள் எழுந்தன. அயல்நாட்டினது உள்நாட்டு விவகாரத்தில் அவசியமின்றித் தலையிட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயரை பெற்றுக் கொடுத்ததாகவும், இதனால் பாரத நாட்டின் அணிசேராக் கொள்கைக்கு பாரதூரமான பங்கம் ஏற்பட்டதாகவும் பல இந்திய அரசியல் ஆய்வாளர்களும், கல்விமான்களும் ஊடகவியலாளரும் கண்டன விமர்சனங்களை முன்வைத்தனர். இன அழிப்பை நோக்காகக் கொண்ட கலவரத்தை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதால் இந்தியத் தலையீடு தவிர்க்க முடியாதது எனச் சிலர் வாதிட்டனர். எனினும் இத் தலையீடு அரசியல், இராஜதந்திர மட்டத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. அமைதி காக்கும் பணி என்ற சாக்கில் இந்திய இராணுவம் இலங்கைக்கு அனுப்பப்பட்டதை இவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். இந்திய மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடிந்தமைக்கு விடுதலைப் புலிகளின் விட்டுக்கொடாத கடும்போக்கையும் பிரேமதாசா அரசின் நன்றிகெட்ட துரோகத்தையும் மூலகாரணமாகச் சுட்டிக் காட்டின இந்தியப் பத்திரிகைகள். நட்புறவுடைய ஒரு மக்கள் சமூகத்துடன் நல்லுறவு பேணி, அமைதி காக்க வேண்டிய இந்தியப் படைகள் எதற்காக ஒரு போரை நடத்தி தமது தரப்பில் பெரும் உயிரிழப்பைத் தேடிக் கொண்டார்கள் எனத் தமது ஆய்வுகளில் சுயவிசாரணை செய்தார்கள் இந்தியத் தளபதிகள். சிங்கள தேசத்திலிருந்தும் பல கண்டன விமர்சனங்கள் வெளிவந்தன. பெரும்பாலும் சிங்களப் பத்திரிகையாளர்களால் எழுதப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவையாக அமைந்ததுடன் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டத் தவறியதற்காக இந்திய இராணுவத்தைக் கடிந்து கொண்டன. ‘இலங்கையில் இந்தியத் தலையீடு’ என்ற தலைப்பில் றோகன் குணரத்தினா எழுதிய புத்தகத்தை ஒரு கனமான வரலாற்று ஆய்வு நூலாகக் கொள்ள முடியாது. இந்தியப் புலனாய்வுத் துறையினர் இலங்கை அரசுக்கு எதிராக நிகழ்த்திய நிழல் யுத்தம் பற்றியே அவரது நூல் விபரிக்கிறது.1
தமிழர் தரப்பில் வெளியாகிய விடுதலைப் புலிகளின் விமர்சன எழுத்துக்கள் இரு அம்சங்களைக் கண்டித்தன. இவை இரண்டும் தமிழீழ மக்களின் வாழ்வையும் அவர்களது அரசியல் எதிர்காலத்தையும் வெகுவாகப் பாதித்த விடயங்களாகும். ஒன்று, தமிழ் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவம் புரிந்த கொடுமைகளைக் கண்டித்தது. இரண்டாவது, தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் தீர்வாக இந்திய-இலங்கை உடன்பாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைத் திட்டம். இந்த இரண்டு விவகாரங்கள் குறித்தும் விடுதலைப் புலிகள் இயக்கம் பல ரகமான விமர்சன எழுத்துக்களை வெளியிட்டது. ‘சாத்தானின் படைகள்’ என்ற தலைப்பில், தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவம் புரிந்த அட்டூழியங்களை விபரித்து எமது அமைப்பு நூல் ஒன்றை வெளியிட்டது. ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களையுடைய இப் பெரிய நூலில், இந்தியத் தலையீட்டை கண்டிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், இந்தியப் படைகள் புரிந்த கொடுமைகள், அந்தக் கொடுமைகளை நேரில் கண்டவர்களின் சாட்சி விபரணைகள், பாலியல் வன்முறைக்கும் சித்திரவதைகளுக்கும் ஆளானோரின் வாக்குமூலங்கள், பாதிக்கப்பட்டோரின் உறுதி ஆணைப் பத்திரங்கள், கொடுமைகளைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் ஆகியன அடங்கிய இந்த நூலுக்கு நான் நீண்டதொரு முன்னுரை எழுதினேன். இந்திய அமைதிப் படையினரின் கொடிய போர்க் குற்றங்களையும், பாரதூரமான மனித உரிமை மீறல்களையும் இந்தத் தகவல் களஞ்சிய நூல் அம்பலப்படுத்தியது. இந்திய-இலங்கை உடன்பாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தையும் திறனாய்வு செய்து, அத் திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டுரைகளையும் பிரசுரங்களையும் வெளியிட்டது. இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியங்களை தகுந்த சான்றுகளுடன் எமது இயக்கம் அம்பலப்படுத்தியபோதும், இந்தியத் தரப்பு அதனை நிராகரித்தது. ‘சாத்தானின் படைகள்’ என்ற நூலை விமர்சித்த ஒரு இந்திய இராஜதந்திரி, அதனை இந்திய இராணுவத்திற்கு எதிரான விடுதலைப் புலிகளின் ‘விசமப் பிரச்சாரம்’ என்று வர்ணித்திருக்கிறார்.2
புதிர்கள் நிறைந்த சிக்கலான வரலாற்றைக் கொண்ட இந்திய தலையீட்டில் விடுதலைப் புலிகளின் பங்கு முக்கியமானதாகும். திருநெல்வேலியில் சிங்களப் படையினர் மீது கெரில்லாத் தாக்குதல் நடத்தியதன் விளைவாகவே இனக் கலவரம் வெடித்ததென்றும் அக் கலவரத்தைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையில் தலையிட்டது என்றும் கூறி முழுப் பழியையும் விடுதலைப் புலிகள் மீது சுமத்த சிறீலங்கா அரசு முனைந்தது. இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். பேரழிவாக வெளிப்பாடு கண்ட ஒரு இனப் படுகொலைக் கலவரத்தை விடுதலைப் புலிகளின் ஒரு கெரில்லாத் தாக்குதலுக்குள் மூடிமறைத்துவிட முனைவது தவறான மதிப்பீடாகும்.
இந்தியாவின் தலையீடு சம்பந்தப்பட்ட விவகாரத்தில் விடுதலைப் புலிகள் எத்தகைய பங்கு வகித்தார்கள் என்பதைப் பார்ப்போம். கறுப்பு ஜுலை இனக்கலவரத்தை அடுத்து இந்திய அரசு ஏற்பாடு செய்த இரகசிய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் பங்குபற்றியது. இதைத் தொடர்ந்து இந்தியா அரங்கேற்றிய அரசியல் – இராஜதந்திர சதுர ஆட்டத்தில் எமது விடுதலை அமைப்பும் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டது. ஈழத் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் இந்திய அரசு மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகள் அமைப்பு பங்குகொண்டது. இந்தியத் தலையீட்டின் இறுதிக் கட்டத்தில் இந்தியா எமது விடுதலை அமைப்பு மீது யுத்தப் பிரகடனம் செய்து ஆயுதங்களைக் களைய முற்பட்டபோது இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் போர் வெடித்தது. இந்தப் போர் தீவிரமடைந்து நீடித்துச் சென்றவேளை எமது அமைப்பு சிறீலங்கா அரசுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தி இந்தியப் படைகளை தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற வழி சமைத்தது. இப்படியாக எமது விடுதலை இயக்கம், இந்தியத் தலையீடு நிகழ்ந்த கால விரிப்பில், பல்வேறு சிக்கலான பங்குகளை வகித்தது. எனினும், எமது இயக்கம் எத்தனையோ சவால்களுக்கும் ஆபத்துக்களுக்கும் முகம்கொடுத்து வெற்றிப் பாதையில் முன்னேறியது. அரசியல், இராஜதந்திர, இராணுவப் பரிமாணங்களைக் கொண்ட இந்தியத் தலையீடு இறுதியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டாலும், இதில் விடுதலைப் புலிகள் இயக்கம் மையமான பங்கு வகித்திருப்பதாலும், இத் தலையீடு பற்றிய இந்திய தரப்பு ஆய்வுகள் எமது அமைப்பு மீது கண்டன விமர்சனங்களை முன்வைத்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இக் கண்டன ஆய்வுகளில் பெரும்பாலானவை நேர்மையற்றவை; பக்க சார்புடையவை. எமது விடுதலை அமைப்பின் அரசியற் குறிக்கோளையும் இலட்சிய உறுதியையும் சரிவரப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட விமர்சனங்கள் இவை. நெருக்கடிகள் மிகுந்த அந்த வரலாற்றுச் சூழலில், எமது இயக்கம் உறுதி தளராது எமது மக்களின் நலன்களுக்கும் அரசியல் அபிலாசைகளுக்குமே முக்கியத்துவம் கொடுத்தது. பல சந்தர்ப்பங்களில் பேரழிவை எதிர்கொண்டபோதும் எமது இயக்கம் தனது இலட்சியப் பாதையிலிருந்து விலகவில்லை.
இலங்கையில் இந்தியத் தலையீடு நிகழ்ந்த மிகக் கொந்தளிப்பான வரலாற்றுக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் எதிர்கொண்ட சம்பவங்களையும், முகம்கொடுத்த சவால்களையும், மேற்கொண்ட தீர்மானங்களையும் இப் பகுதியில் விபரித்துக் கூற விரும்புகிறேன். எமது இயக்கத்தின் பிரதிநிதியாகவும், ஆலோசகராகவும் முக்கிய நிகழ்வுகளில் நேரடியாகப் பங்குகொண்ட அனுபவத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகளை மறுத்துரைத்து, உண்மை நிலையை எடுத்து விளக்குவதே எனது குறிக்கோள். இந்திய-புலிகள் உறவு பற்றிய உண்மைச் சம்பவங்களை கால வரிசையில் தொகுத்து, செம்மையான முறையில் வரலாற்றுப் பதிவு செய்வது அவசியமெனக் கருதுகிறேன்.
இலங்கையில் அந்நிய ஊடுருவல்
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் ஆரம்ப காலம். பழைய உலக ஒழுங்கில் நிலவிய பனிப்போர் முடிவுக்கு வரும் இறுதிக் கட்டம். இரு உலக வல்லரசுகள் மத்தியில் பகைமை கூர்மையடைந்திருந்த கொந்தளிப்பான கால கட்டம். ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதால் அமெரிக்காவில் றேகனின் நிர்வாக ஆட்சி ஆத்திரமும் அச்சமும் அடைந்திருந்தது. மத்திய ஆசிய பிராந்தியத்தில் சோவியத் யூனியனின் வல்லாதிக்க ஊடுருவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க வல்லரசு பாகிஸ்தானுடன் இராணுவக் கூட்டுறவு உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. அமெரிக்காவின் நல்லுறவும் இராணுவ பக்க பலமும் பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், தனது வரலாற்று எதிரியான இந்தியாவை எதிர்கொள்ளும் வகையில் தனது இராணுவ கேந்திர வலுவைக் கட்டி எழுப்பியது. இதே சமயம், சோவியத் யூனியனின் வல்லாதிக்க விரிவாக்கத்திற்கு அஞ்சிய சீனா, பாகிஸ்தானுக்கு இராணுவ, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, ஆப்கானிஸ்தானில் ரஷ்யர்களுக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் நிகழ்த்தி வந்த இரகசிய நிழல் யுத்தத்திற்கு உதவியது. இந்த வளர்ச்சிப் போக்குகள் இந்தியாவுக்கு கலக்கத்தைக் கொடுத்தன. சீனப் படையெடுப்பைத் தொடர்ந்து சோவியத் யூனியனுடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்ட இந்தியா தன்னை ஒரு அணிசேரா வல்லரசு என உரிமைகோர முடியவில்லை. அத்தோடு, ஆப்கானிஸ்தான் பிரச்சினை வல்லரசுகள் மத்தியிலான போட்டியை கூர்மைப்படுத்தி, அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் மத்தியில் நெருங்கிய இராணுவ உறவை உருவாக்கியமை இந்தியாவுக்கு மேலும் அச்சத்தைக் கொடுத்தது. இப்படியான வரலாற்றுப் புறநிலையில்தான், சிறீலங்கா அரசானது, இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளை இலங்கையில் ஊடுருவி நிலைகொள்ள அனுமதித்தது. இந்திய அரசின் வல்லாதிக்க உள்நோக்குகளுக்கு அஞ்சிய ஜெயவர்த்தனாவின் ஆட்சிப்பீடம், அந்நியச் சக்திகளின் உதவியை நாடியது. தமிழரின் ஆயுதக் கிளர்ச்சியை நசுக்கிவிடுவதற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து ஆயுத உதவியையும் இராணுவப் பயிற்சியையும் வேண்டியது.
இஸ்ரேல் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, யூத நாட்டின் வாயிலாகவே அமெரிக்க வல்லரசு சிறீலங்காவுக்கு, இராணுவத் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘இஸ்ரேலிய நலன்புரிப் பிரிவு’ ஒன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் இஸ்ரேலியர்களின் படைத்துறைச் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டன. இஸ்ரேலின் உதவியுடன் சிறீலங்காவின் கடற்படை நவீனமயமாக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்டது. இஸ்ரேலின் உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவு (சின்பெற்) நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து எதிர்ப்புரட்சி போரியல் நுட்பங்கள் பற்றிச் சிங்கள ஆயுதப் படையினருக்கு, குறிப்பாக விசேட அதிரடிப் படையினருக்கு, பயிற்சிகளை அளித்தார்கள். இது இவ்வாறிருக்க, அமெரிக்கா கொழும்புக்கு வடக்கேயுள்ள சிலாபத்தில், மின்னியக்கத் தகவல் பரிமாற்ற வசதிகளுடன் ‘அமெரிக்காவின் குரல்’ வானொலிச் சேவையை விரிவாக்கம் செய்தது. அத்துடன் சிங்கப்பூரிலுள்ள தனது வர்த்தக நிறுவனம் ஒன்றினூடாக, திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முயற்சித்தது. இதற்கிடையில், 1983 அக்டோபரில் அமெரிக்கப் பாதுகாப்பு, புலனாய்வுத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரியான ஜெனரல் வேர்னன் வால்டரும், அவரைத் தொடர்ந்து அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரான காஸ்பர் வின்பேகரும் கொழும்புக்கு விஜயம் செய்து, சிங்கள ஆட்சியாளர்களுடன் மந்திராலோசனை நடத்தினார்கள். இரு உயர்தர அமெரிக்க அதிகாரிகளின் கொழும்பு விஜயம் இந்திய அரசுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்து வருவதாகக் கருதிய டெல்லி ஆட்சியாளர், அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும் மத்தியில் ஒரு இரகசிய இராணுவ ஒப்பந்தம் ஏற்படும் சாத்தியம் பற்றியும் அச்சம் கொண்டனர்.
ஜுலை கலவரத்தை அடுத்து, பிரித்தானியாவிலுள்ள சனல் தீவிலிருந்து இயங்கிய ‘கினி மினி சேவை’ என்ற அமைப்பின் கூலிப் படை நிபுணர்களை இலங்கைக்கு அழைத்தார் ஜெயவர்த்தனா. ஆயுதப் புரட்சிக்கு எதிரான போரியல் தந்திரங்களில் நிபுணத்துவம் பெற்ற இந்த ஆங்கிலக் கூலிப் படையினர் இலங்கையில் தங்கியிருந்து சிங்களக் காவல்துறையின் அதிரடிப் படையினருக்கு விசேட பயிற்சிகளை அளித்தனர். இதேவேளை, சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடமிருந்து இராணுவப் பயிற்சிக்கான உதவிகளை நாடியது. ஜுலை கலவரத்தின் பின்னர் பாகிஸ்தானிய இராணுவப் பயிற்சி நிபுணர்களைக் கொண்ட விசேட பிரிவு ஒன்று இலங்கைக்கு வருகை தந்து, சிங்களப் படையினருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இவர்களது பயிற்சியில் உருவாக்கப்பட்டதே, ‘கரும் சிறுத்தைகள்’ எனப்படும் அதிரடிப் படைப் பிரிவு. கறுப்புச் சீருடை அணிந்த இப் படையினரை ‘கரும் பிசாசுகள்’ என்று தமிழ் மக்கள் அழைப்பதுண்டு. கிழக்கில், குறிப்பாகத் திருகோணமலைப் பிரதேசத்தில் தமிழர்களைக் கொன்றொழிக்கும் கொடும் செயல்களில் இக் ‘கரும் பிசாசுகள்’ ஈடுபட்டனர்.
இலங்கையில் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலையீடு அதிகரித்து வந்ததுடன் அந்நியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் எதிர்ப் புரட்சிப் போரியல் நிபுணர்களும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அயல் நாடான இலங்கையில் நிலைகொண்டு சிங்கள ஆயுதப் படைகளுக்குப் பயிற்சியளித்தமை இந்தியாவுக்கு ஒரு புறம் சினத்தையும், மறுபுறம் அச்சத்தையும் ஏற்படுத்தியது. அத்தோடு சீனாவும் சிறீலங்கா அரசுக்குப் பெருந்தொகையில் நவீன ஆயுதங்களை வழங்கியது. இப்படியாக, இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளின் ஊடுருவல் இலங்கையில் அதிகரித்து வருவது தனது தேசியப் பாதுகாப்புக்கும், புவியியல்-கேந்திர சூழலுக்கும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக இந்தியா கருதியது. இந்தியாவை ஒரேயடியாக ஓரம் கட்டிவிட்டு, இராணுவப் பயிற்சிக்கும் ஆயுத உதவிக்கும் சிறீலங்கா அரசு அந்நிய நாடுகளை நாடி நிற்பது, அவ்வேளை இந்தியாவின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு உணர்வுகளை உதாசீனம் செய்து, இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நிய சக்திகளை இலங்கைக்குள் ஊடுருவ அனுமதித்தது குறித்து ஜெயவர்த்தனா மீது டில்லி அரசு சினமுற்றது.
ஈழத் தமிழர்கள் மீது இந்திரா காந்தி அம்மையாருக்கு இரக்கமும் அனுதாபமும் இருந்தது. தமிழர்களது பரிதாப நிலை குறித்து ஆழமான புரிந்துணர்வும் இருந்தது. ஈழத் தமிழ் மக்கள் எத்தகைய கொடூரமான அரச ஒடுக்குமுறைக்கு முகம்கொடுத்து நிற்கின்றார்கள் என்பது பற்றி எண்பதுகளின் ஆரம்ப காலம் தொட்டே இந்திரா காந்தி அம்மையாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்திய இராஜதந்திர, புலனாய்வுத்துறை வட்டாரங்களில் இருந்து மட்டுமன்றி, தமிழீழ, தமிழக அரசியல் தலைவர்கள் ஊடாகவும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவல நிலைபற்றி அவர் அறிந்திருந்தார். இந்திரா காந்தி அம்மையார் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற பழுத்த அரசியல்வாதி என்பதால் ஜெயவர்த்தனாவின் சூத்திரதார குணவியல்பு பற்றியும், அவரது இனவாதக் கொள்கை பற்றியும் நன்கு அறிந்திருந்தார். தமிழரின் இனப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளது தலைவர்களின் உறவில் வெறுப்பும் பகைமையும் நிலவியது. ஈழத் தமிழரின் அவல நிலை குறித்துத் தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் எத்தகைய ஆழமான உணர்வலைகளைக் கொண்டிருந்தனர் என்பதையும் இந்திரா காந்தி அம்மையார் நன்கறிவார். இன உணர்வாலும், பண்பாட்டு உறவாலும், வரலாற்று வேர்களாலும் பின்னப்பட்டிருந்த தமிழீழ மக்கள் மீது தமிழ் நாட்டுத் தமிழர்களும் அவர்களது தலைவர்களும் ஆழமான அனுதாபம் கொண்டிருந்ததுடன் ஈழத் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் முழு மனதோடு ஆதரித்தார்கள்.
தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட ஜுலை இனக் கலவரப் பேரழிவானது தமிழ் நாட்டில் தேசிய எழுச்சியைக் கிளறிவிட்டு தமிழகத் தமிழர்களை உணர்வு பொங்கச் செய்தது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பல ஆயிரம் மக்களை அணிதிரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்துவதில் திராவிட அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இந்திரா காந்தி அம்மையாரின் அரசுடன் அணிசேர்ந்து நின்ற தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அவசரமாகத் தலையிடவேண்டும் என வற்புறுத்தினார். ஈழத் தமிழரின் இனப் படுகொலையைத் தவிர்ப்பதற்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறு இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியம் எழுச்சிப் பிரவாகமெடுத்து பிரிவினைவாதமாகப் பரிணாமம் பெற்றுவிடுமோ என டில்லி ஆட்சிப்பீடம் அச்சம் கொண்டது. ஜுலை இனக் கலவரத்தின் விளைவாக, பெருந்தொகையில் ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். இந்திரா காந்தி அம்மையாரை இலங்கை விவகாரத்தில் தலையிடத் தூண்டியதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இனக் கலவரத்தின் விளைவாகப் புலம் பெயர்ந்த ஐந்து லட்சம் மக்களில் இரண்டு லட்சம் பேர் இந்தியாவிலும் மிகுதியானோர் மேற்கு ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். ஆகவே, இனக் கலவரத்தால் எழுந்த பாரதூரமான விளைவுகளின் நிமித்தம் தமிழ் நாட்டில் உருவாகிய கொந்தளிப்பான நிலைமை காரணமாகவே ஈழத் தமிழர் பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியா நிர்ப்பந்திக்கப்பட்டது. உள்நாட்டு அரசியல் நிர்ப்பந்தங்கள் ஒருபுறமிருக்க, தனது தென்பிராந்திய அயல்நாடான இலங்கைத் தீவில் அந்நியப் பகைமை சக்திகள் காலூன்றி வருவதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இந்தியா கருதியது. இத்தகைய சூழ்நிலையானது, இலங்கையில் இந்தியா தலையிடுவதைத் தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாக மாற்றியது.
இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவர் திரு.ஜே.என்.டிக்சிட், ‘கொழும்பில் ஆற்றிய பணி’ என்ற தனது நூலில், இந்தியத் தலையீடு சம்பந்தமாகக் கீழ்க் கண்ட கருத்தை வெளியிட்டார்.
“தனது தமிழ்க் குடிமக்களுக்கு எதிராகக் கொழும்பு அரசு கடைப்பிடித்த பாரபட்சமான ஒடுக்குமுறைக் கொள்கைகளால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் ஒருபுறமும், அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த உறவுகளால் ஏற்பட்ட தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மறுபுறமுமாக, சிறீலங்காவில் இந்தியா, தலையிடுவது தவிர்க்க முடியாத விடயமாகச் செய்தது.”3
அந்தக் கால கட்டத்தில், இந்திய வெளிவிவகாரக் கொள்கையை நெறிப்படுத்தும் பொறுப்பிலிருந்த இந்திரா காந்தி அம்மையார் இலங்கையில் தலையிடுவதென்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்மானத்தை எடுத்தார். இரண்டு குறிக்கோள்களை அடையும் நோக்கில் இருமுனைச் செயற்திட்டத்தை அவரது ஆலோசகர்கள் வகுத்துக் கொடுத்தனர். ஒன்று வெளிப்படையானது; மற்றது மறைமுகமானது. வெளிப்படையாக, சிறீலங்கா அரசுடன் இராஜதந்திர மத்தியஸ்துவ முயற்சிகளை மேற்கொள்வது. மறைமுகமாக, தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவிசெய்து அதனைக் கட்டி எழுப்புவது. ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டதாக இத் திட்டம் அமையப் பெற்றபோதும், வஞ்சகக் குணமுடைய கிழட்டு நரி ஜெயவர்த்தனாவை வழிக்கு கொண்டு வருவதற்கு இதுவே சிறந்த வழியென இந்திய அரசு கருதியது. இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நியச் சக்திகளை வெளியேற்றி, இலங்கையை இந்தியாவின் ஆதிக்க வியூகத்திற்குள் கொண்டுவருவது முதலாவது குறிக்கோள். சிறீலங்கா மீது தமிழ்ப் புரட்சி இயக்கங்களின் இராணுவ அழுத்தத்தை அதிகரித்து அதன் வாயிலாக தமிழரின் இனப் பிரச்சினைக்குப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணுமாறு ஜெயவர்த்தனா அரசை நெருக்குவது இரண்டாவது குறிக்கோள்.
1983 ஜுலை 24ஆம் நாள், தமிழருக்கு எதிரான இனக் கலவரம் தலைதூக்கிய அன்றே திருமதி. காந்தியின் அரசியல்-இராஜதந்திர முயற்சிகள் ஆரம்பமாகின. தமிழர்களுக்கு எதிராக ஏவிவிடப்பட்ட வன்முறையின் கோரத் தாண்டவம் இந்திரா அம்மையாரை ஆழமாகப் பாதித்தது. நிலைமையை அறிந்ததும் உடனடியாகவே ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது. ‘தனது கொல்லைப் புறத்தில் இத்தகைய கொடுமைகள் நீடித்தால் இந்தியாவால் சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என அந்த அறிக்கையில் ஒரு எச்சரிக்கையும் விடப்பட்டது. ஜுலை 26 அன்று இனக் கலவரம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்த போது, இந்திரா அம்மையார் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு. நரசிம்மராவ் அவர்களை தனது விசேட தூதுவராகக் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இந்திய அமைச்சரை வெகு மரியாதையுடன் வரவேற்ற ஜெயவர்த்தனா, தனது இனவாதப் பார்வையில் நிலைமையை திரிவுபடுத்தி விளங்கப்படுத்தினார். இந்த இனக் கலவரத்தை எவ்வாறு சிங்கள அரசு முன்னின்று நடத்தியது என்ற உண்மையை அவர் மூடி மறைத்தார். எனினும் இந்திய அரசின் அதிருப்தியையும் அங்கலாய்ப்பையும் திரு. நரசிம்மராவ் தெரிவிக்கத் தவறவில்லை. தமிழரின் இனப் பிரச்சினை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய இந்திய அமைச்சர், இவ் விவகாரத்தில் இந்தியா மத்தியஸ்துவம் வகிப்பதைத் திருமதி. காந்தி விரும்புவதாகவும் கூறினார். இந்திய அரசுடன் பகைத்துக் கொள்வதை விரும்பாத ஜெயவர்த்தனா இந்திய மத்தியஸ்துவத்திற்கு இணங்கினார். திரு. நரசிம்மராவின் விஜயத்தை அடுத்து, இந்தியாவின் மத்தியஸ்துவராக திரு. கோபாலசாமி பார்த்தசாரதி அவர்கள் திருமதி. காந்தியால் நியமிக்கப்பட்டார்.
திரு.ஜி.பார்த்தசாரதி ஒரு தமிழ்ப் பிராமணர். நேரு குடும்பத்துடன் நெருக்கமானவர். இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் திருமதி. காந்திக்கு மூத்த ஆலோசகராக விளங்கியவர். சாணக்கியம் மிக்க தலைசிறந்த இராஜதந்திரி. இந்தியக் கொள்கைத் திட்டமிடும் கவுன்சிலின் அதிபராகப் பணிபுரிந்த திரு. பார்த்தசாரதி அமைச்சரவை அந்தஸ்தையும் பெற்றவர். புதுடெல்லி, தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்களில் பிரபல்யம் பெற்றவர். திரு. பார்த்தசாரதியிடம் பரந்த உலகப் பார்வையும், தெளிந்த அரசியல் ஞானமும் இருந்தது. ஈழத் தமிழரின் நலனிலும் அரசியல் அபிலாசையிலும் அவர் அக்கறை கொண்டவர். இப்படியான சிறந்த பண்புகளுடைய ஒரு மனிதரை இந்தியாவின் மத்தியஸ்தராக நியமித்ததன் மூலம் தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் குமுறிக் கொண்டிருந்த தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் திருப்திப்படுத்தலாம் என இந்திரா காந்தி அம்மையார் எண்ணினார். 1983 ஆகஸ்ட் மாதம் 25 அன்று இலங்கைக்கு விஜயம் செய்த திரு. பார்த்தசாரதி, தனது கடினமான மத்தியஸ்துவ முயற்சியை ஆரம்பித்தார். எனினும், ஒரு தமிழ்ப் பிராமணர் இந்தியாவின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டதைச் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் விரும்பவில்லை. சினம்கொண்ட பௌத்த பிக்குகள் பார்த்தசாரதியின் சமரச முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட முனைந்தனர். இருப்பினும் தனது மத்தியஸ்த முயற்சியில் சளைக்காத பார்த்தசாரதி சிங்கள – தமிழ் அரசியல்வாதிகளைச் சந்தித்து, நீண்ட கலந்துரையாடல்களை நிகழ்த்தி, அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்தார். அத்தோடு, தமிழரின் இனப் பிரச்சினையின் அடிப்படைகளை ஆழமாகப் படித்தறிந்தார். இறுதியாக, மாகாண அடிப்படையில் பிரதேச வாரியான நிர்வாக கட்டமைப்புகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்கும் ‘Annexure C’ என்ற தீர்வுத் திட்டத்தை உருவாக்கினார்.
அரச அதிபர் ஜெயவர்த்தனாவும் அவரது மூத்த அமைச்சர்களும் பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தனர். ஆயினும் இந்திய அரசின் அழுத்தம் காரணமாக சகல கட்சி மாநாட்டைக் கூட்டுவித்து தீர்வு யோசனைகளை விவாதிப்பதற்கு இணங்கினார்கள். இது ஒரு அர்த்தமற்ற அரசியல் நாடகமாகவே முடியும் எனத் தெரிந்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் சகல கட்சி மாநாட்டில் பங்குபற்றத் தயக்கத்துடன் இணங்கினர். 1984 ஜனவரி 10 அன்று ஆரம்பமாகிய அனைத்துக் கட்சிகளின் மகாநாடு, 37 அமர்வுகளை நடத்தி, கிட்டத்தட்ட ஒரு ஆண்டுவரை நீடித்தது. இக் கூட்டத் தொடர்களின்போது, கட்சியோடு கட்சி மோதவிட்டு, தீவிரவாத புத்த பிக்குகளைத் தூண்டிவிட்டு இம் மாநாட்டை குழப்பிவிட ஜெயவர்த்தனா சதி முயற்சிகளில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தமிழருக்கு அதிகாரப் பரவலாக்கம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தது. இதைச் சாக்காக வைத்து, அரசியற் கட்சிகளிடையே இணக்கப்பாடு தோன்றவில்லை எனக் கூறி சமரச முயற்சியிலிருந்து சறுக்க முனைந்தார் ஜெயவர்த்தனா. 1984 டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தைக் கைவிடுவதென அமைச்சரவை முடிவெடுத்தது. அத்துடன் தமிழரின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திரா காந்தி அம்மையார் எடுத்த இராஜதந்திர மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடிந்தது.
மத்தியஸ்த முயற்சி மூலமாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது சாத்தியமா என்பதில் ஆரம்பத்திலிருந்தே திருமதி. காந்திக்கு சந்தேகம் இருந்தது. ஜெயவர்த்தனா ஒரு கடும்போக்காளர் என்பதும், தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு அவர் அனுதாபம் காட்டவில்லை என்பதும் திருமதி. காந்திக்குத் தெரியும். தமிழரின் இனப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைத்தான் ஜெயவர்த்தனா விரும்புகிறார் என்பதும் அவருக்கு நன்கு புரியும்.
ஜெயவர்த்தனாவில் தமக்குள்ள நம்பிக்கையீனம் பற்றி இந்திரா காந்தி அம்மையார் திரு. பார்த்தசாரதிக்கு ஏற்கனவே விளக்கமாகக் கூறியிருந்தார். ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்றும் ஆகவே, சமாதான மத்தியஸ்துவ முயற்சி தோல்வியில் முடியலாமென்றும் அவர் ஆரம்பத்திலிருந்தே பார்த்தசாரதிக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.4 இப்படியான தூர நோக்குடனேயே இரு முனைச் செயற்திட்டத்தை வகுத்துத் தமிழ் விடுதலை அமைப்புகளின் ஆயுதப் போராட்ட பலத்தை வலுப்படுத்த தீர்மானித்தார். ஜெயவர்த்தனாவின் இராணுவ அணுகுமுறைப் போக்கை உடைத்தெறியவே தமிழரின் ஆயுதப் போராட்டத்திற்கு உதவ எண்ணினார்.
தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இராணுவ உதவி வழங்கும் இரகசியத் திட்டத்திற்கு மூவர் அடங்கிய குழு ஒன்றே பொறுப்பாகச் செயற்பட்டது. இவர்கள் மூவரும் திருமதி. காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். இந்திய பாதுகாப்பு, புலனாய்வு நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்பவர்கள். இந்த இரகசியத் திட்டத்தின் மூல பிதாவாகக் கருதப்படுபவர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான திரு. ஆர்.என்.ராவ். இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு திரு. கிரிஷ் சக்சேனாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் இந்திய வெளியகப் புலனாய்வுத் துறையின் (றோவின்) தலைவராகப் பணிபுரிந்தவர். மூன்றாவது முக்கிய நபர் திரு. சங்கரன் நாயர் ஆவார். இவர் பிரதம மந்திரியின் செயலகத்தின் ஆணையாளராகப் பணி புரிந்தவர். திருமதி காந்தியின் கீழ் செயற்பட்ட இம் மூவர் அடங்கிய குழுவை ‘மூன்றாவது ஏஜென்சி’ எனவும் அழைப்பதுண்டு. இந்தியத் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் இந்தக் குழுவே முக்கிய முடிவுகளை எடுத்தது.
ஒருபுறம் திரு. பார்த்தசாரதியை பகிரங்கமான மத்தியஸ்துவ இராஜதந்திரப் பணியில் இறக்கிவிட்ட அதே சமயம், மூன்றாவது ஏஜென்சி மூலமாக இரகசியமான இராணுவப் பயிற்சித் திட்டத்தையும் முடுக்கிவிட்டார் இந்திரா அம்மையார். தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கும் மிகவும் சர்ச்சைக்குரிய பணியில் இந்தியப் புலனாய்வுத் துறையான ‘றோ’ இறங்கியது.
விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி
1983 ஆகஸ்ட் மாதம் நடுப் பகுதி. வன்னிக் கெரில்லாப் பயிற்சிப் பாசறையிலிருந்து தலைவர் பிரபாகரன் லண்டனில் அவ்வேளை விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். என்னையும் எனது மனைவி அடேலையும், உடனடியாகச் சென்னைக்கு வருமாறு பணித்திருந்தார். தமிழ்ப் போராளிகளுக்கென இராணுவப் பயிற்சித் திட்டம் ஒன்றை இந்திய மத்திய அரசு செயற்படுத்தப் போவதாகத் தமிழீழத்தில் வதந்திகள் அடிபடுவதாகவும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஏராளமான இளைஞர்களை அணிசேர்த்துக் கடல் மார்க்கமாகத் தமிழ் நாட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாகவும், உடனடியாகத் தமிழ் நாடு சென்று நிலைமையை அறிந்து தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தமிழரின் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு பெரும் எடுப்பில் தலையிட முடிவு செய்திருப்பதால் விடுதலைப் போராட்டம் புதிய வரலாற்றுத் திருப்பத்தை அடையப் போவதாகக் குறிப்பிட்ட பிரபாகரன், இம்முறை தமிழ் நாட்டில் நாம் நிரந்தரமாக நீண்ட காலம் தங்கியிருந்து பணிபுரிய நேரிடும் என்றும் சூசகமாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
நானும் எனது மனைவி அடேலும் 1979இலும் பின்பு 1981இலும் தமிழ்நாடு வந்து தலைவர் பிரபாகரனுடனும் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் போராளிகளுடனும் இரு தடவைகளும் பல மாதங்கள் வரை தங்கியிருந்து பணிபுரிந்தோம். போராளிகளுடன் சேர்ந்து சமைப்பது தொடங்கி அவர்களுக்கு அரசியல் வகுப்புகள் நடத்துவது வரை இக் காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை ‘சுதந்திர வேட்கை’ என்ற தனது சுயசரித நூலில் எனது மனைவி விபரமாக எழுதியிருக்கிறார். 1983 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களும் அவரது நூலில் தரப்படுகிறது. எனவே, ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் சொல்வதைத் தவிர்த்து, இந்தியத் தலையீட்டால் எழுந்த பிரச்சினைகளையும், குறிப்பாக இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மத்தியிலான உறவுகள் பற்றியுமே இப் பகுதியில் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன்.
1983 ஆகஸ்ட் நடுப் பகுதியில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் வந்திறங்கியபோது விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்) எம்மை வரவேற்றார். சென்னை நகரில் ‘வூட்லண்ட்ஸ்’ எனப்படும் நடுத்தரமான சைவ விடுதியில் நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நேசன் (ரவி பரமநாதன்) மற்றும் சில மூத்த உறுப்பினர்கள் அந்த விடுதியில் எம்மைச் சந்தித்தனர். அவ்வேளையில் சென்னையில் எமது இயக்கத்திற்கென செயலகமோ அல்லது இரகசிய வீடுகளோ இருக்கவில்லை. எமது அறைக்குப் பக்கமாக இன்னொரு அறையும் எடுத்து அவ்விரு அறைகளையும் அரசியற் செயலகமாக மாற்றிச் சிறிது காலமாக அவ்விடுதியிலிருந்தே செயற்பட்டோம். பேபி சுப்ரமணியத்தின் நண்பரும் அ.தி.மு.க ஆட்சியில் மூத்த அமைச்சருமான திரு. காளிமுத்து, நாம் ஒரு செயலகம் அமைக்கும்வரை விடுதியின் செலவினங்கள் அனைத்தையும் பொறுப்பெடுத்தார். அந்த விடுதியில் இருந்தபடியே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டம் பற்றித் தகவல் அறிய முனைந்தோம். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு விபரம் எதுவும் தெரியவில்லை. அவ்வேளை எனக்கு முன்பு அறிமுகமான தமிழ் நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தபோது அவரிடம் இந்தியப் பயிற்சித் திட்டம் பற்றிக் கேட்டேன். இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இப் பயிற்சித் திட்டத்தை பொறுப்பேற்று நடத்துவதாகக் கூறிய அந்தப் பத்திரிகையாளர், என்னை றோ அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை கூறினார். அவ்வேளை, சென்னையில் றோ அதிகாரிகளின் செயற்பாடுகள் மிகவும் இரகசியமானதாக இருந்ததால் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் எனக்கு முன்பு அறிமுகமான கலாநிதி ராஜேந்திரனைச் சந்தித்தேன். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜேந்திரன் எமது இயக்கத்தின் ஆதரவாளர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தின் முழு விபரங்களுடனும் வூட்லண்ட்ஸ் விடுதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), ஈழப் புரட்சி இயக்கம் (ஈரோஸ்) ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் அனுமதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்த ராஜேந்திரன், இந்த அமைப்புகளைச் சேர்ந்த போராளிகள் ஏற்கனவே வட இந்தியாவிலுள்ள இராணுவப் பயிற்சி முகாமுக்கு சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார். இந்தியப் புலனாய்வுத் துறையினரே (றோ) இந்தப் பயிற்சித் திட்டத்திற்குப் பொறுப்பானவர்கள் என்றும் கூறினார். காலம் சென்ற திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களின் மகனான திரு.சி.சந்திரகாசனே இப் பயிற்சித் திட்டத்திற்கு இணைப்பாளராக முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் அவர் கூறினார். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் திரு. சந்திரகாசனுக்கு முக்கிய தலைமைப்பீடப் பொறுப்பை பெற்றுக் கொடுப்பதே இந்திய புலனாய்வுத் துறையினரது இரகசியத் திட்டம் என்பதையும் திரு. ராஜேந்திரன் வெளியிட்டார். இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சிபாரிசு செய்யச் சந்திரகாசன் தயாராக இருக்கிறார் எனக் கூறிய ராஜேந்திரன், அதற்கு ஒரு முக்கிய நிபந்தனை உண்டு என்றார். அந்த நிபந்தனை என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் எனக்கு ஒருபுறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதாவது, தமிழீழத் தேசிய விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவராகச் சந்திரகாசனை திரு. பிரபாகரன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்திய இராணுவப் பயிற்சி முடிவு பெற்றதும் எல்லாத் தமிழ்ப் போராளி அமைப்புகளும் ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ ஆக மாற்றப்படுமென்றும், அந்தத் தமிழ் இராணுவம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும்வேளை, தமிழர் தேசத்தின் அரசியல் போராட்டத்தை சந்திரகாசன் தலைமை தாங்கி நடத்துவார் என்றும் ராஜேந்திரன் விளக்கினார்.
எமது கலந்துரையாடலை மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த எனது மனைவி அடேல், சந்திரகாசனின் நிபந்தனையை அறிந்ததும் பொறுமையிழந்து ராஜேந்திரன் மீது சீறி விழுந்தார்.
“எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பிரபாகரனோ அல்லது எமது போராளிகளோ சந்திரகாசனைத் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் நிபந்தனை என்றால் எமது இயக்கத்திற்கு இந்திய இராணுவப் பயிற்சி அவசியமில்லை” என்று கடிந்து கொண்டார் அடேல். இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனுக்கும் எமக்கும் மத்தியில் சூடான விவாதம் எழுந்தது. அடேலின் கருத்தை ஆதரித்து நான் வாதிட்டேன். சந்திரகாசனின் ஆசியைப் பெறாமல் ‘றோ’ அதிகாரிகளை நெருங்க முடியாது என்றும் ‘றோ’ அதிகாரிகளின் சிபார்சு இன்றி விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி கிடைக்கப் போவதில்லை என்றும் இந்தப் பயிற்சி கிடையாது போனால் புலிகள் இயக்கம் பின்னடைவை எதிர்நோக்க ஏனைய அமைப்புகள் வளர்ந்து முன்னேற்றம் அடையும் என்றும் ராஜேந்திரன் பூச்சாண்டி காட்டினார். சந்திரகாசனின் உதவியின்றி இந்தியப் பயிற்சியை நாம் எப்படியோ பெற்றே தீருவோம் என நான் எதிர்த்து வாதாட, தனது முயற்சி பலிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட ராஜேந்திரன் ஆத்திரத்துடன் எமது அறையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அதற்கப்புறம் நான் அவரைக் கண்டதேயில்லை.
ராஜேந்திரனுடன் நிகழ்ந்த சந்திப்புப் பற்றியும் இந்திய இராணுவப் பயிற்சியை ஒழுங்கு செய்வதில் சந்திரகாசன் வகிக்கும் பங்கு பற்றியும், பயிற்சித் திட்டத்தில் இடம்பெற அவர் விதிக்கும் நிபந்தனை பற்றியும் சகல விபரங்களையும் நான் உடனடியாகப் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திரகாசனின் உதவியை நாடவேண்டாம் எனத் தெரிவித்த பிரபாகரன், எப்படியாவது முயன்று இந்தியப் புலனாய்வுத் துறையினருடன் என்னை நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இது எனக்கு ஒரு சிக்கலான சவாலாக அமைந்தது. சந்திரகாசனை வெட்டியோடி, தலைமறைவாக இயங்கும் றோ அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவது எங்ஙனம்? இப்படியாக நான் இடர்பட்டுக் கொண்டிருந்த வேளையில்தான் எனக்குத் தமிழக உள்நாட்டுப் புலனாய்வுத் துறையினரது தொடர்பு கிடைத்தது. அப்பொழுது நாம் சென்னை நகரப் புறத்திலுள்ள சன்தோம் என்னுமிடத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தோம். நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் என அறிந்ததும் தமிழகப் புலனாய்வுத் துறை (கியூ பிரிவு) உதவிப் பொலிஸ் மா அதிபர் திரு. அலெக்ஸ்சாந்தர் என்னைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து ஈழத் தமிழர் பிரச்சினை பற்றியும் விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றியும் விசாரித்தார். மாறி மாறி நிகழ்ந்த சந்திப்புகள் நட்புறவாகப் பரிணமித்தன. அன்பும் பண்பும் ஆழமான அரசியற் தெளிவும் கொண்டவராக விளங்கினார் திரு. அலெக்ஸ்சாந்தர். இலங்கை அரசியல் பற்றியும் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தார். இந்திய இராணுவ பயிற்சித் திட்டம் பற்றியும் றோ அதிகாரிகளுக்கும் சந்திரகாசனுக்கும் இடையிலான இரகசிய உறவு பற்றியும் எந்தெந்த அமைப்புகளுக்கு எங்கெல்லாம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது பற்றியும் சகல விபரங்களையும் நான் அலெக்ஸ்சாந்தர் வாயிலாக அறிந்து கொண்டேன்.
சென்னை மாநகரில், பிரபல்யமான Blue Diamond விடுதியில், ஒரு மாடிக் கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தி, அதனைத் தனது தலைமைச் செயலகமாகக் கொண்டு, றோ அதிகாரிகளுடன் இணைந்து சந்திரகாசன் செயற்பட்டு வருகிறார் என்ற தகவலையும் அலெக்ஸ்சாந்தர் எனக்குத் தெரிவித்தார். அந்த விடுதியில், சந்திரகாசனின் மாடியில் தனது புலனாய்வு உளவாளி ஒருவர் உணவு பரிமாறுபவராகப் பணிபுரிகிறார் என்றும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் பொருத்தி அங்கு நடைபெறும் திருவிளையாடல்களை எல்லாம் தான் நன்கு அறிந்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரகாசனுடன் இணைந்து செயற்படும் றோ அதிகாரிகளில் சிலர் ஊழல் பேர்வழிகள் என்றும் அவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்ப்பதே நன்று என்றும் அலெக்ஸ்சாந்தர் அறிவுரை சொன்னார். அலெக்ஸ்சாந்தர் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் சந்திரகாசன் அப்பொழுது நெருங்கிய தொடர்பு வைத்திருந்த உன்னிக்கிருஷ்ணன் எனப்படும் றோ அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டு, இந்திய இராணுவ பயிற்சி சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்களை அமெரிக்க புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏக்கு கையளித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு நீண்ட காலக் கடூழியச் சிறையில் தள்ளப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கமும் இந்திய இராணுவப் பயிற்சியையும் ஆயுத தளபாடங்களையும் பெற்றுக் கொள்வதன் அவசியத்தை அலெக்ஸ்சாந்தருக்கு எடுத்து விளக்கிய நான், அதற்கான வழிமுறை பற்றியும் கேட்டேன். தமிழீழ மக்களின் நல்லாதரவு பெற்ற விடுதலை அமைப்பாக நீண்ட கால ஆயுதப் போராட்ட அனுபவத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கமே களத்தில் நின்று இயங்கி வருகிறது என்ற உண்மையை திருமதி. இந்திரா காந்தி அம்மையாருக்கு விபரமாக எழுதி, இந்தியாவின் இராணுவப் பயிற்சித் திட்டத்தில் புலிகளுக்கும் இடமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும்படியும் அலெக்ஸ்சாந்தர் ஆலோசனை வழங்கினார். திருமதி. காந்திக்கு எழுதிய கடிதத்தின் பிரதி ஒன்றை றோ புலனாய்வு அமைப்பின் அதிபர் திரு. சக்சேனாவுக்கும் அனுப்பி வைக்குமாறும் அவர் சொன்னார்.
அவர் கூறியபடியே திருமதி காந்திக்கு நான் ஒரு விபரமான கடிதம் எழுதினேன். அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொள்கை, கருத்தியல், போராட்ட வரலாறு என்ற ரீதியில் விளக்கத்தைக் கொடுத்து, இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தில் எமது இயக்கத்தை இணைத்துக் கொள்ளும் அவசியத்தையும் வலியுறுத்தினேன். அத்தோடு அக் கடிதத்தின் பிரதி ஒன்றை றோ அதிபர் திரு. சக்சேனாவுக்கும் அனுப்பி வைத்தேன். புது டில்லியிலிருந்து பதில்வர நீண்ட காலம் பிடிக்கவில்லை.
பாரதப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து இரண்டு வாரத்திற்குள் புது டில்லியிலுள்ள றோ புலனாய்வுத்துறைத் தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி என்னைச் சந்திப்பதற்காக சென்னை வந்தார். எஸ். சந்திரசேகரன் என்ற பெயருடைய அவர் மதுரையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழர். சென்னை நகரப் புறத்திலுள்ள விடுதி ஒன்றில் மிகவும் இரகசியமான முறையில் சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் சகல தொடர்புகளுக்கும் பொறுப்பதிகாரியாக தான் நியமிக்கப்பட்டு இருப்பதாகச் சொன்னார் அவர். முதற் சந்திப்பின்போதே விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றி துருவி ஆராய்ந்து என்னைக் குடைந்து எடுத்தார். புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பு, ஒழுக்க விதிகள், தலைமைப்பீடம், அரசியல் கொள்கை, ஆயுதப் போராட்ட வரலாறு போன்ற பல்வேறு விடயங்களைப் பற்றி அவர் விடுத்த கேள்விக் கணைகளின் நுட்பத்திலிருந்து திரு. சந்திரசேகரன் ஒரு ஆழமான ஆளுமையுடைய மனிதர் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆயுதப் போரியல் வடிவங்கள் பற்றியும் நிறைய அறிந்து வைத்திருந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி மிகவும் ஆர்வமாக விசாரித்தார். பிரபாகரனின் ஆளுமை, அரசியல் நோக்கு, போராட்ட அனுபவமும் என அவர் எழுப்பிய கேள்விகளுக்கு விபரமான பதில் அளித்தேன். விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக பிரபாகரனை தான் நேரில் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி நான் கேட்டபோது, அதற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகச் சொன்னார். திருமதி. காந்தியின் விசேட பணிப்பின் பேரில் இப் பயிற்சி திட்டம் ஒழுங்கு செய்யப்படுவதால் பிரபாகரனின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். இறுதியாக, நாயர் என்ற பெயருடைய அதிகாரி ஒருவரை அறிமுகம் செய்து அவர்மூலம் தன்னுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சந்திரகாசனுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் தெரியாதவாறு எமது போராளிகளுக்குப் பயிற்சி வழங்கப்படுமெனக் கூறிய சந்திரசேகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஓரம் கட்டியது குறித்து சந்திரகாசன் மீது புதுடில்லி அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பின் விபரங்களை உடனடியாகவே பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தியதுடன் எமது போராளிகளுக்கு இந்தியாவில் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்வதற்காக உடனடியாக தமிழ் நாட்டுக்கு வருகை தருமாறும் அவரைக் கேட்டுக் கொண்டேன். இந்தியா வருவதில் எழக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு மூத்த உறுப்பினர்களான மாத்தையாவையும் ரகுவையும் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் பிரபாகரன். மதுரையில் ஒரு விடுதியில் மாத்தையாவும் ரகுவும் என்னைச் சந்தித்தனர். பிரபாகரன் தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்பது மாத்தையாவின் கருத்து. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நிபந்தனைப் பிணையிலிருந்து தமிழீழத்திற்கு தப்பிச் சென்றவர் என்பதால் இந்தியச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக பிரபாகரனை இந்திய காவல்துறையினர் கைது செய்து சிறையில் தள்ளலாம் என்பது அவரது வாதம்.5 திருமதி. இந்திரா காந்தியின் ஆசியுடன் இந்திய அரசுதான் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று கூறியும் அவர்களை நம்பச்செய்ய முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி என்ற பொறிவைத்து புலிகளின் தலைவரை மடக்கிப் பிடிப்பதுதான் இந்திய புலனாய்வுத் துறையினரின் கபட நோக்கம் என்பது அவர்களது வாதம். இவர்களுடன் வாதிடுவதில் அர்த்தமில்லை என உணர்ந்த நான், இந்திய நிலைமையை விரிவாக விளக்கி, இந்தியப் பயிற்சி பெறுவதாயின் கட்டாயமாக இந்தியாவுக்கு வந்தாக வேண்டுமென்றும், பாதுகாப்புப் பிரச்சினை எதுவும் எழப்போவதில்லை என்றும் உறுதிகூறிப் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி அவர்களிடம் கொடுத்தேன். இந்தியாவில் பிரபாகரனுக்கு ஏதாவது பிரச்சினை எழுந்தால் அதற்கான பொறுப்பையும் ‘இயக்க நடவடிக்கையையும்’ நான்தான் ஏற்கவேண்டிவரும் என மிரட்டிவிட்டுச் சென்றார் மாத்தையா. மறுநாள், எனது கடிதம் பிரபாகரன் கையில் கிடைத்ததும் தான் விரைவில் இந்தியாவுக்கு வரவிருப்பதாகப் பதில் அனுப்பியிருந்தார். எனது விளக்கத்திலும் உறுதிமொழியிலும் பிரபாகரன் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை அறிந்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
1983 அக்டோபர் மாதம் பிரபாகரனும் அவரோடு சில மூத்த தளபதிகளும் இந்தியா வந்தனர். பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி அங்கு தங்கியிருந்தனர். திரு. சந்திரசேகரனும் மற்றும் சில றோ புலனாய்வுத் துறை உயர் அதிகாரிகளும் பிரபாகரனைப் பாண்டிச்சேரியில் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தேன். சந்திப்பு நிகழும் நாளன்று நானும், அடேலும், இரு போராளிகளுமாக சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்குப் பயணமாகினோம். பாண்டிச்சேரியில் பிரபாகரனைச் சந்தித்து சென்னையில் நாம் வந்திறங்கியதிலிருந்து நடைபெற்ற சம்பவங்களை அவரிடம் விபரமாகக் கூறினேன். அன்று நள்ளிரவு திரு. சந்திரசேகரனும் மற்றும் சில இந்தியப் புலனாய்வு அதிகாரிகளும் பாண்டிச்சேரியிலுள்ள எமது வீட்டுக்கு வந்தார்கள். பிரபாகரனும் நானும் சந்திரசேகரனும் தனி அறை ஒன்றில் மந்திராலோசனை நடத்தினோம். முதற் சந்திப்பின்போதே சந்திரசேகரனுக்கு பிரபாகரனை நன்கு பிடித்துக் கொண்டது.
இருநூறு விடுதலைப் புலிப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகளைச் செய்வதாக சந்திரசேகரன் உறுதியளித்தார். நூறு பேர் கொண்ட இரு அணிகளாகப் பயிற்சி நடைபெறும் என்றும், முதல் அணியின் பயிற்சி நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பமாகும் என்றும் சொன்னார். புலிப் போராளிகள் சென்னையிலிருந்து டில்லி வரை புகையிரத வண்டியில் பயணம் செய்து, பின்பு டில்லியிலிருந்து இராணுவ டிரக் வண்டிகளில் உத்திரப் பிரதேச மலைப் பிராந்தியத்திலுள்ள டெக்ரா டன் என்னுமிடத்தில் அமைந்திருக்கும் இந்திய இராணுவப் பயிற்சிப் பாசறைக்கு கொண்டு செல்லப்படுவர் என்றும் சந்திரசேகரன் விளக்கினார். முதல் அணியில் பயிற்சி பெறுவோரின் பெயர் விபரப் பட்டியலை தமக்குச் சீக்கிரமாக அனுப்பி வைக்கும்படியும் அவர் பிரபாகரனிடம் கேட்டுக் கொண்டார். தமது போராளிகளுக்கு எத்தகைய போரியற் பயிற்சி வழங்கப்படுமென்றும் எத்தகைய ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சி கொடுபடும் என்றும் பிரபாகரன் வினவினார். சகலவிதமான நவீன போரியல் உத்திகள், தந்திரோபாயங்கள் பற்றிய தேர்ச்சியும் அனுபவமும் பெற்ற இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி வழங்குவார்கள் என்றும், சிறுரக ஆயுதங்களிலிருந்து கனரக ஆயுதங்கள் வரை பலவிதமான ஆயுதங்களைக் கையாளுவது பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுமென்றும் சந்திரசேகரன் விளக்கினார். நிலப் படங்கள் வரைதல், கண்ணி வெடிகளைப் புதைத்தல், வெடிபொருட்களைப் பாவித்தல், டாங்கி எதிர்ப்பு, விமான எதிர்ப்பு ஆயுதங்களைக் கையாளுதல் போன்றவற்றிலும் பயிற்சி வழங்கப்படும் என்றார். ஆயுத உதவி சம்பந்தமாக சந்திரசேகரன் எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை. இவ் விவகாரம் குறித்துப் பின்பு பேசலாம் என்று மட்டும் சொன்னார். உத்திரப் பிரதேசத்திலுள்ள டெக்ரா டன் இராணுவப் பயிற்சித் தளத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிப் போராளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை நேரடியாக மேற்பார்வை செய்யுமாறு அவர் பிரபாகரனுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம்
திரு. சந்திரசேகரனுடன் நிகழ்ந்த சந்திப்பு பிரபாகரனுக்குத் திருப்தியைக் கொடுத்தது. எத்தகைய குறிக்கோளுடன் இராணுவப் பயிற்சித் திட்டத்தை இந்தியா வழங்குகிறது என்ற சர்ச்சைக்குரிய கேள்வியை நாம் சந்திரசேகரனிடம் எழுப்பவில்லை. றோ புலனாய்வு அதிகார பீடத்துடன் நல்லுறவு பேணுவதையே நாம் விரும்பினோம். தமிழீழத் தாயகக் களத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்பதை உணர்ந்து கொண்ட சந்திரசேகரன், பிரபாகரன் ஊடாகக் கள யதார்த்த நிலைமையை கேட்டறிந்து கொண்டார். சீக்கிரமே தமது போராளிகள் பயிற்சிக்குத் தயாராகி விடுவார்கள் என உறுதியளித்த பிரபாகரன், டெக்ரா டன் பயிற்சிப் பாசறைக்குத் தானும் வர விரும்புவதாகவும் கூறினார். நவம்பர் தொடக்கத்தில் முதலாவது பயிற்சி அணிப் போராளிகள் டெக்ரா டன்னுக்குப் பயணமாயினர். 1984ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்களின் பயிற்சி முடியும்போது பிரபாகரன் டெக்ரா டன்னுக்குச் சென்றார்.
இப்படியாக இந்தியாவின் இராஜதந்திர சதுரங்க ஆட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஒரு பங்காளியாக மாறியது. இது நாமாகவே சிந்தித்து எடுத்த முடிவு. எவராலுமே தவிர்த்துவிட முடியாத வரலாற்று நீரோட்டத்தில் நாமும் இறங்கி நீந்துவதைத் தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை. இலங்கையில் இந்தியத் தலையீடானது தவிர்க்க முடியாததொன்று. ஈவிரக்கமற்ற சிங்கள இனவாத அரசு நாசகார நோக்குடைய அந்நியச் சக்திகளுடன் கைகோர்த்து நின்று சிறுபான்மைத் தேசிய இனமான தமிழ் மக்களை பூண்டோடு அழிக்க முனைந்த வேளையில் அதைத் தடுத்து நிறுத்துவது இந்தியாவின் தார்மீக அறநெறிக் கடப்பாடாகியது. இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம் என்னவென்பது எமக்கு ஆரம்பத்திலிருந்தே தெரிந்த விடயம். இராஜதந்திர-இராணுவ பரிமாணங்களைக் கொண்ட இந்திய தலையீட்டுத் திட்டத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பங்கு மிகவும் குறுகியது, மட்டுப்படுத்தப்பட்டது, போரியல் ரீதியானது. ஜெயவர்த்தனா அரசுக்கு இராணுவ அழுத்தம் கொடுத்து, அதனை ஆட்டம் காணச் செய்து, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழர் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காண வைப்பதே இந்தியத் தலையீட்டின் உள்நோக்கமாகும். வங்காள தேசத்தில் தலையிட்டது போன்று இலங்கையிலும் தலையிட்டு, தமிழர்களுக்கு ஒரு தனியரசை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கம் இந்திரா காந்தி அம்மையாருக்கு இருக்கவில்லை என்பதை இந்தியத் தலையீடு தொடங்கிய காலத்திலிருந்தே விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் அறிந்திருந்தது. இந்தியப் படையெடுப்புக்கான புறநிலையை உருவாக்கிக் கொடுத்த கிழக்கு வங்காளப் புரட்சிவாதிகளான ‘முக்தி பகானிகள்’ வகித்த பங்கு தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்படவில்லை.6 ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனது இராணுவ அணுகுமுறைக் கடும்போக்கைக் கைவிட்டு சமரச வழியை நாடும் வரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு சிங்கள ஆயுதப் படைகளுக்கு அழுத்தம் கொடுப்பதே தமிழ்க் கெரில்லா வீரர்களுக்கு வகுக்கப்பட்ட பணியாகும். தீவின் இறையாட்சிக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் பங்கம் ஏற்படாதவாறு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதே திருமதி. இந்திரா காந்தியின் தந்திரோபாயமாக இருந்தது. இந்தியப் பிரதமரின் இந்தத் தந்திரோபாயத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய தமிழ்நாட்டு, தமிழீழ அரசியல் தலைவர்கள் சிலர் இந்திய அரசு இலங்கை மீது படையெடுப்பை நடத்த ஆயத்தமாகிறது எனக் கருதினார்கள். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இத்தகைய கற்பனாவாதத்தைக் கொண்டிருக்கவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் குறிக்கோளை அடைவதற்குத் தமிழ்ப் போராளிகளைக் கூலிப் படைகளாகப் பாவிப்பதே இந்திய இராணுவப் பயிற்சித் திட்டத்தின் நோக்கம் என்பதைப் பிரபாகரன் நன்கு அறிவார். ஆயினும் எதற்கும் விட்டுக்கொடுக்காத கடும் போக்கை ஜெயவர்த்தனா ஆட்சிப்பீடம் கடைப்பிடிக்கும் என்பதால், இந்தியாவின் தந்திரோபாயம் இறுதியில் தோல்வி காணும் என்பதையும் பிரபாகரன் உணர்ந்திருந்தார். இந்தியத் தலையீட்டு முயற்சி ஈற்றில் தோல்வியைத் தழுவும் என்பதையும் அதில் எமது பங்கு மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும், நாம் உணர்ந்து கொண்ட போதும், எமது படை வலுவைக் கட்டி எழுப்பும் நோக்குடன் நாம் அந்த முயற்சியில் தீவிர பங்காளி ஆனோம். இந்தியாவின் திட்டத்தில் நாம் பங்குபற்றாது போனால் அரசியல், இராணுவ ரீதியாக எமது இயக்கம் ஓரம் கட்டப்படுவதுடன் ஏனைய அமைப்புகளின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் நாம் வழி சமைத்துக் கொடுப்பதாக முடியும்.
இந்தியத் தலையீட்டின் ஆக்கபூர்வமான அம்சம் என்னவென்றால், அது தமிழரின் தேசியப் போராட்டத்திற்கு ஒரு தார்மீக வலுவைக் கொடுத்ததேயாகும். கொழும்பு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியில் தலையிட்டமை தமிழரின் இனப்பிரச்சினையைச் சர்வதேசமயப்படுத்தியது. அத்துடன் தமிழ்ப் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்க இந்திய அரசு முன்வந்தமை பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தில் கவர்ந்து இழுத்ததுடன் தமிழீழத் தாயகத்தில் தேசிய எழுச்சியையும் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையையும் பிறக்கச் செய்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கமும் கட்டுப்பாடுமுடைய அமைப்பு என்பதாலும் பல போராட்டச் சாதனைகளைப் புரிந்து தமிழ் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்ததாலும் எமது இயக்கத்தில் இணைந்து கொள்ளவே பெரும்பாலான இளைஞர்கள் விரும்பினார்கள். இணைந்து கொள்ள விரும்பிய எல்லா இளைஞர்களையும் அரவணைத்து, அளவிற்கு மீறியதாக இயக்கத்தை வீங்கச்செய்ய பிரபாகரன் விரும்பவில்லை. 1983 ஜுலை கலவரத்தை அடுத்து பல நூற்றுக்கணக்கில் இளைஞர்களை எமது அமைப்பு உள்வாங்கியிருந்தது. பிரபாகரன் ஒரு யதார்த்தவாதி. நுட்பமாகச் சிந்தித்து செயல்படுபவர். ஒரு விடுதலை அமைப்புக்கு விரிவாக்கத்தை விட ஒழுக்கமும் கட்டுப்பாடும்தான் முக்கியம் என அவர் கருதினார். ஒரு அமைப்பின் கட்டுக்கோப்பு, முக்கியமாக படைத்துறைக் கட்டுக்கோப்புப் படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி காணவேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஒரு அமைப்பானது அசாதாரணமான முறையில் பெருவளர்ச்சி கண்டால் ஒழுக்க நெறி குலைந்து அது சீரழிந்து போகலாம் என அவர் கருதினார். பிரபாகரன் கருதியது போலவே சில போராளி அமைப்புகள் திடீரென வீங்கி விரிவாக்கம் கண்டு, காலப் போக்கில் கட்டுப்பாடு குலைந்து சீரழிந்து சிதைந்து போயின. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு இறுக்கமான ஒழுக்க நெறிகளைப் பிரபாகரன் விதித்திருந்தார். இதன் காரணமாகவும் பெரும் தொகையான இளைஞர்கள் ஏனைய அமைப்புகளில் இணைந்து கொண்டனர். இப்படியாக இந்தியத் தலையீடும், இந்திய இராணுவப் பயிற்சித் திட்டமும் உருவாக்கிய புதிய சூழ்நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் செயலிழந்து செத்துக் கிடந்த பல அமைப்புகள் மீண்டும் உயிர்பெற்று எழுந்தன. இதனால் தமிழீழ தாயகக் களத்தில் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து, ஒரு கட்டுப்பாடான கெரில்லா இயக்கமாகப் பரிணமித்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பங்கம் ஏற்படும் வகையில் இராணுவச் சமவலு பாதிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கானோரைக் கொண்ட ஆட்பலத்துடன் திடீரென சில தமிழ் அமைப்புகள் விரிவாக்கம் கண்டன. இந்த வளர்ச்சிப் போக்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஒரு சவாலாக அமைந்தபோதும் பிரபாகரன் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. தனது விடுதலை இயக்கத்தைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிப் பலப்படுத்தும் திட்டம் ஒன்று அவரிடம் இருந்தது. இத் திட்டத்தை செயற்படுத்தும் வாய்ப்பு 1984ஆம் ஆண்டு அவருக்குக் கிட்டியது. இக் கால கட்டத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தலைமறைவுக் கெரில்லா அமைப்பிலிருந்து அடிப்படை மாற்றம்பெற்று செம்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தேசிய விடுதலை இராணுவமாக உருவாக்கம் பெற்றது.
இந்தியாவின் இராணுவப் பயிற்சியானது ஏற்கனவே போர் அனுபவம்பெற்ற புலி வீரர்களுக்கு மேலும் திறனாற்றலைக் கொடுத்து அவர்களது போர்த் திறனை மேம்படுத்தியது. நவீன போரியல் கலையில் அதுவரை பெற்றிராத புதிய நுட்பங்களை இந்திய இராணுவப் பயிற்சியாளரிடமிருந்து புலிப் போராளிகள் பெற்றுக் கொண்டனர். ஆயினும் இருநூறு போராளிகளுக்கு மட்டுமாக இந்திய இராணுவப் பயிற்சி வரையறுக்கப்பட்டிருந்தது. அத்தோடு, இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் தொகையும் மிகச் சொற்பமானதாக இருந்தது. அவையும் மிகத் தரம் குறைந்தவையாகவே இருந்தன. வழங்கப்பட்ட ஆயுதத் தளபாடங்களும் அவற்றின் தரம்குறைந்த தன்மையும் பிரபாகரனுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. பெரும்பாலான தானியங்கித் துப்பாக்கிகளும், யந்திரத் துப்பாக்கிகளும், மோட்டார்களும் (60 எம்.எம்) பழமை வாய்ந்தவையாகவும் பாவிக்க முடியாதவையாகவும் இருந்தன என்று பிரபாகரன் என்னிடம் சொன்னார். நவீன, நுட்பமான ஆயுதங்களை எமக்கு வழங்க இந்திய அரசு விரும்பவில்லை என்பதை நாம் பின்பு அறிந்து கொண்டோம். ஒரு குறிப்பிட்ட அளவான வளர்ச்சிக்கு மேல் தமிழ்ப் போராளி அமைப்புகளை வளர்த்துவிடக் கூடாது என்ற ஒரு திட்டமிட்ட கொள்கையின் அடிப்படையில்தான் இந்திய இராணுவ உதவி அமையப் பெற்றிருந்தது. நவீன ரக ஆயுதத் தளபாடங்களுடன் சிறப்புப் படையமைப்பாக ஒரு தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமெனக் கனவுகண்ட பிரபாகரனுக்கு இந்திய ஆயுத உதவி பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. எனினும் இந்திய இராணுவப் பயிற்சி பயனுள்ளது என்றே அவர் கருதினார். தனது இராணுவக் கட்டமைப்பை நவீனமயப்படுத்தி விரிவாக்குவதற்குப் பிரபாகரனுக்கு இடையூறாக இருந்தது நிதிப் பற்றாக்குறையாகும். அக் காலகட்டத்தில் பணப் பற்றாக்குறை எமது இயக்கத்திற்குப் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய அரசிடமிருந்து எமக்கு எந்தவிதமான நிதி உதவியும் கிடைக்கவில்லை. டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புகளுக்கு றோ புலனாய்வுத் துறையினரிடமிருந்து பெற்ற நிதி மூலமாகச் சந்திரகாசன் பண உதவி புரிந்து வந்தார். புதிதாகப் போராளிகளை நாம் எமது அமைப்பில் இணைத்துக் கொண்டபொழுது எமது நிதி நெருக்கடி மேலும் மோசமாகியது. அவர்களைப் பராமரிப்பதே பெரும் சிரமமாக இருந்தது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த நண்பர்கள் ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற சிறிய தொகைப் பணத்துடன் இயக்கத்தை இயக்குவதென்பது அவ்வேளை பெரும் போராட்டமாக அமைந்தது. அக் காலகட்டத்தில், எமது விடுதலைப் போராட்டத்திற்குப் பின்பலமாகப் புலம்பெயர்ந்த அனைத்துலக தமிழர்களை நாம் அணிதிரட்டி, ஒழுங்கமைக்க முடியவில்லை. உலகத் தமிழரை அணிதிரட்டுவதில் ஏனைய அமைப்புகளும் எமது இயக்கத்திற்கு எதிராகப் பரப்புரை செய்து ஆதிக்கப் போட்டியில் குதித்து இருந்ததால், அது எமக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எமது விடுதலை அமைப்பை வளர்த்து, பலப்படுத்தி, விரிவாக்கம் செய்ய நிதிவளம் அத்தியாவசியத் தேவையாக எழுந்தது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில்தான் நாம் சற்றும் எதிர்பாராத அதிசயம் நிகழ்ந்தது. அவ்வேளைதான் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்கள் அதிர்ஷ்ட தேவதையாக எமக்குக் கைகொடுத்து உதவினார்.
1984 ஏப்ரல் மாதத்தில் எம்.ஜி.ஆர் அவர்களை நான் முதன் முதலாக சந்தித்த வரலாற்றுப் பின்னணி, வெற்றிகரமாக முடிந்த முதற் சந்திப்பின்போதே இரண்டு கோடி ரூபாவை ஆயுதப் போராட்டத்திற்கு தானம் செய்ய அவர் முன்வந்தமை, அவரது பாதாளப் பண அறை இரகசியங்கள், தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் மத்தியில் ஏற்பட்ட நெருக்கமான நட்புறவு, அதன் பின்னர் எமது விடுதலைப் போராட்டத்திற்கு எந்தெந்த வழிகளில் எப்படியாக உதவிகளைச் செய்தார், ஆபத்தான எதிர்விளைவுகளையும் பொருட்படுத்தாது எப்படியெல்லாம் துணிந்து செயற்பட்டார், சிக்கலான அரசியற் சூழ்நிலைகளில் எமது அமைப்பு சிக்குப்பட்ட போதெல்லாம் எவ்வாறு எமக்கு கைகொடுத்து உதவினார் என்ற பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் சம்பவங்களையும் ‘விடுதலை’ என்ற எனது நூலில், ‘எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும்’ என்ற அத்தியாயத்தில் நான் விபரமாக விளக்கியிருக்கிறேன். இங்கு சுருக்கமாகச் சொல்வதானால் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்கள் காட்டிய உறுதியான ஆதரவும், கோடிக் கணக்கில், அவர் வழங்கிய நிதியுதவியுமே எமது விடுதலை அமைப்பின் அபார வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அத்திவாரமாக அமைந்தது எனலாம்.
விடுதலைப் போரின் விரிவாக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உறுதியான ஆதரவு தெரிவித்து ஈழத் தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் எம்.ஜி.ஆர் அவர்கள் பிரவேசித்தமை ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்தது. தமிழக முதல்வரின் ஆசியுடனும் நிதி உதவியுடனும் பிரபாகரனது இலட்சியக் கனவுகள் நிஜமாக மாறின. 1984இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் துரிதமான வளர்ச்சியும் விரிவாக்கமும் கண்டு செம்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விடுதலை சக்தியாக உருவாக்கம் பெற்றது. தமிழ் நாட்டிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளில் புதிதாகப் பயிற்சிப் பாசறைகள் நிறுவப்பட்டன. பெரும் தொகையில் புதிய போராளிகள் இயக்கத்தில் இணைக்கப்பட்டு தமிழகத்திற்குப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர். இந்தியப் பயிற்சிபெற்ற மூத்த தளபதிகள் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுச் செயற்பட்டனர். இந்த மூத்த தளபதிகளில் முக்கியமானவர் பொன்னம்மான் என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்ட லெப்.கேணல் அற்புதன். இவரது இயற்பெயர் யோகரெத்தினம் குகன். இவர் யோகரெத்தினம் யோகியின் சகோதரர். தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருங்கிய தோழர். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் பல களங்களைக் கண்ட வீரர். தமிழக இராணுவப் பயிற்சி முகாம்களுக்கு பிரதம பயிற்சியாளராகப் பணிபுரிந்த பொன்னம்மான் புலிப் போராளிகளின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள நாவற்குழியில் சிங்கள இராணுவ முகாம் ஒன்றைத் தாக்கி அழிக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பொன்னம்மான் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இராணுவக் கட்டமைப்பைக் கட்டிவளர்த்து விரிவாக்கம் செய்த அதேவேளை, பெரும் தொகையில் நிதி ஒதுக்கி அரசியல் பிரிவையும் விரிவுபடுத்தினார் பிரபாகரன். சென்னை அடையாறில் அரசியல் தலைமைச் செயலகம் நிறுவப்பட்டது. அரசியல் பிரிவுக்கெனத் தெரிவு செய்யப்பட்ட போராளிகளுக்கு அரசியல், சித்தாந்த வகுப்புகளை நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இயக்கத்தின் அதிகாரபூர்வ கொள்கை பரப்பு ஏடாக ‘விடுதலைப் புலிகள்’ மாதாந்த பத்திரிகையையும் ‘Voice of Tigers’ என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டோம். Liberation Tigers and Tamil Eelam Freedom Struggle, Towards Liberation, Diary of Combat என்ற ஆங்கிலப் பிரசுரங்களையும் அக் காலப் பகுதியில் எழுதி வெளியிட்டேன்.
தமிழகத்தில் எமது பயிற்சிப் பாசறைகளில் பயிற்சியை முடித்துக் கொண்டு புலிப் படை வீரர்கள் தமிழீழத் தாயகம் திரும்பியதைத் தொடர்ந்து சிங்கள ஆயுதப் படையினருக்கு எதிரான கெரில்லாப் போர் தீவிரமடைந்தது. 1984ஆம் ஆண்டு ஆரம்ப காலத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னி மாநிலத்திலும், எமது போராளிகள் நன்கு திட்டமிடப்பட்ட கெரில்லாத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். அவ் வரலாற்றுக் கால கட்டத்தில், யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் துணிகரத் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவர் எமது முதுபெரும் தளபதி கேணல் கிருஷ்ணகுமார் கிட்டுவாகும். இந்திய இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழீழம் திரும்பிய கேணல் கிட்டு சிங்கள இராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் திகைப்பூட்டும் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தினார். 1984 பெப்ரவரி 24ஆம் திகதி, கேணல் கிட்டுவின் தலைமையில் சென்ற புலிகளின் கெரில்லா அணி, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கோட்டையாக விளங்கிய குருநகர் இராணுவ முகாமிற்குள் ஊடுருவி, வெடிகுண்டுகள் வைத்து முகாமைத் தகர்த்தது. இக் குண்டுவெடிப்பால் இராணுவக் கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. புதிய கட்டிடங்களை நிறுவி இம் முகாமை மேலும் பலப்படுத்தி விஸ்தரிக்க சிங்கள இராணுவத் தலைமை திட்டமிட்டிருந்த வேளையில் இப் படை முகாமின் கட்டுமாணம் நாசமாக்கப்பட்டது சிங்கள அரசுக்குத் திகிலை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவ்வாண்டு காலத்தில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் பங்குகொண்ட கிட்டு தனது அபாரமான திறமையினாலும் துணிவாலும் சிங்கள இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான். 1984 ஏப்ரல் மாதம் 9ஆம் நாள், பிற்பகல் 2 மணி அளவில், யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வைத்து சிங்கள இராணுவ அணிமீது விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதலை நிகழ்த்தினர். இத் தாக்குதலில் ஒரு இராணுவ ட்ரக் வண்டி முற்றாக சிதைக்கப்பட்டு பதினைந்து அரச படையினர் தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் இருபது பேர் வரை படுகாயமடைந்தனர். வீதியோரம், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் வான் ஒன்றை நிறுத்தி வைத்து இராணுவ வாகனங்கள் அதனைக் கடந்து செல்லும் போது வெடிக்க வைத்து இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 1984 ஆகஸ்ட், செப்டெம்பர் மாத காலத்தில் ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்து நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் சிங்களக் காவற்துறையினரும் கொல்லப்பட்டனர். கவச வண்டிகள் உட்பட பல இராணுவ வாகனங்கள் நாசமாக்கப்பட்டன. இக் காலப் பகுதியில், நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த காவல் நிலையங்கள் புலிப் போராளிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின. தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த புலிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் காரணமாக சிங்கள ஆயுதப் படைகள் மத்தியில் திகிலும் குழப்பமும் மனமுறிவும் ஏற்படத் தொடங்கியது. 1984ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டெம்பர் மாதக் காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்கள் சிலவற்றை காலவரிசையின்படி இங்கு பதிவு செய்கிறேன்.7
1984 ஆகஸ்ட் 4ஆம் நாள், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பருத்தித்துறைக்கு அண்மையிலுள்ள பொலிகண்டி எனப்படும் கரையோரக் கிராமத்தில் சுற்றுக்காவலில் சென்ற கடற்படை அணிக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் மத்தியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சமரில் ஆறு கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாயம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 5ஆம் நாள், வல்வெட்டித்துறைக்கு அண்மையிலுள்ள நெடியகாடு என்னும் கிராமத்தில் சிங்களக் காவல்துறை அதிரடிப் படையினரின் தொடர் வாகன அணி விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு இலக்கானது. மூன்று கவச வாகனங்கள், ஒரு டிரக், ஒரு ஜீப் ஆகிய வாகன அணி விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிக்குள் சிக்கின. கண்ணிவெடியின் முழுத் தாக்கத்திற்கும் இலக்கான ஜீப் வண்டி சுக்கு நூறாகச் சிதறியது. இந்தத் தாக்குதலில் காவல்துறை உயர் அதிகாரி (ஏ.எஸ்.பி) ஜெயரத்தினா உட்பட ஒன்பது அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 5ஆம் நாள், வன்னியில், ஒட்டுசுட்டான் எனப்படும் சிறு பட்டினத்தில் அமையப்பெற்றிருந்த காவல் நிலையம் விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலுக்கு இலக்காகியது. இத் தாக்குதலில் எட்டு சிங்களக் காவல்துறையினர் கொல்லப்பட ஏனையோர் சிதறியோடித் தப்பித்துக் கொண்டனர்.
ஆகஸ்ட் 11ஆம் நாள், மன்னார் மாவட்டத்தில் வெள்ளாம் குளத்திற்கு அண்மையில், மன்னார் – பூநகரி வீதியில் இராணுவ சுற்று அணி ஒன்று விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு ஆளானது. இத் தாக்குதலில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 14ஆம் நாள், வல்வெட்டித்துறை காவல் நிலையம் மீது விடுதலைப் புலிக் கெரில்லாப் போராளிகள் துணிச்சலான திடீர் தாக்குதலை நிகழ்த்தினர். ஒரு மணி நேரம் வரை நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் பல காவல்துறையினரும் இராணுவத்தினரும் படுகாயமடைந்தனர்.
ஆகஸ்ட் 24ஆம் நாள், வடமராட்சியில் கரவெட்டி என்னுமிடத்தில், விடுதலைப் புலிப் போராளிகள் பதுங்கியிருந்து நிகழ்த்திய தாக்குதலில் இராணுவ வாகனம் ஒன்று சிதறி எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதே நாளன்று அச்சுவேலியில் புலிகள் மேற்கொண்ட கண்ணி வெடித் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் பலியாகினர்.
செப்டெம்பர் 1ஆம் நாள், வடமராட்சிக் கரையோரக் கிராமமாகிய திக்கத்தில், காவல்துறை சுற்றுக் காவல் அணிமீது விடுதலைப் புலிக் கெரில்லா வீரர்கள் பதுங்கியிருந்து நிகழ்த்திய தாக்குதலில் இருபது அதிரடிப் படையினர் தலத்திலேயே கொல்லப்பட்டனர்.
செப்டெம்பர் 10ஆம் நாள், முல்லைத்தீவுப் பட்டினத்திற்கு சமீபமாகவுள்ள செம்மலை என்னுமிடத்தில் ஒரு வாகனத் தொடர் அணிமீது புலி வீரர்கள் மேற்கொண்ட துணிகர கெரில்லாத் தாக்குதலில் பதினைந்து இராணுவத்தினர் உயிரிழந்தனர்.
ஒருபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி சிங்கள ஆயுதப் படைகள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த அதேவேளை, மறுபுறம் ஏனைய தமிழ் அமைப்புகளும் 1984 இறுதிப் பகுதியில் தாக்குதல்களை முடுக்கிவிட்டதால் தமிழரின் புரட்சிப் போர் உக்கிரமும் விரிவாக்கமும் கண்டது. 1984 அக்டோபர் 21ஆம் நாள் கொழும்பில் தொடர்ச்சியாகப் பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் தலைநகர் அல்லோல கல்லோலப்பட்டது. தலைநகரில், முக்கிய அரச நிறுவனங்களுக்கு அருகாமையில், பத்துக் குண்டுவெடிப்புகள் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்தன. இதனால் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பெருந்தொகையானோர் படுகாயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு ஈரோஸ் இயக்கம் உரிமை கோரியது. இதற்கிடையில், 1984 நவம்பர் 19ஆம் நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தெல்லிப்பளையில் விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லா அதிரடித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் வட பிராந்தியத் தளபதி பிரிகேடியர் ஏ.ஆரியப்பெருமாவும், எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். கட்டுவன்-தெல்லிப்பளை வீதியில் கண்ணிவெடிகளைப் புதைத்து எமது வீரர்கள் தயாரெடுத்துக் காத்து நின்ற வேளையில், ஒரு ஜீப் வண்டி, இரண்டு கவச வண்டிகள் சகிதம் இராணுவ வாகன அணி அங்கு வந்தபோது நிலக் கண்ணிவெடிகள் வெடிக்க வைக்கப்பட்டன. அக் குண்டுவெடிப்பில் பிரிகேடியர் ஆரியப்பெருமா பயணித்த ஜீப் வண்டி சிதறி நொருங்கியதால் அவர் தலத்திலேயே கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இது இவ்வாறிருக்க, 1984 நவம்பர் 20ஆம் நாள், சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பைச் சார்ந்த போராளிகள் துணிகரத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தினர். இதில் இருபத்து நான்கு காவல்துறையினர் பலியாகினர். காவல்நிலையக் கட்டிடம் குண்டுவைத்துத் தகர்த்து அழிக்கப்பட்டது. தமிழ்ப் போராளி அமைப்புகளின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தாலும், தலைநகர் வரையும் தாக்குதல்கள் விரிவாக்கம் பெற்றதாலும் சிங்கள அரசு பீதியும் பதட்டமும் அடைந்தது.
இந்திய அரசின் தீவிர ஆதரவுடன் தமிழ்ப் போராளி அமைப்புகள் தமது கெரில்லாப் போராட்டத்தை விரிவுபடுத்தி வருவதைக் கண்ட ஜெயவர்த்தனா அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார். எனினும் அவர் தனது விட்டுக்கொடாத கடும்போக்கிலிருந்து தளரவில்லை. இராணுவ நெருக்குவாரம் தீவிரமடைந்தபோதும் அவர் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்க அவர் தயாராக இல்லை. சிங்கள அரசியற் தலைமையின் கடும்போக்குக் காரணமாக பார்த்தசாரதியின் தீர்வுத் திட்டத்தை விவாதித்து வந்த சர்வகட்சி மாநாடு மாதக் கணக்கில் இழுபட்டு, முடிவெதுவுமின்றி முடங்கிப் போனது. சிங்கள இனவாத ஆட்சியாளரைச் சமாதான வழியில் சமரசத் தீர்வு காண நிர்ப்பந்திக்கும் நோக்கத்துடன் இந்திரா காந்தி அம்மையாரால் முன்னெடுக்கப்பட்ட இருமுனைத் தந்திரோபாயமும், ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிகர அரசியலால் தோல்வியைத் தழுவியது. இந்தச் சிக்கலான சூழ்நிலையின்தான் எவருமே எதிர்பாராத அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சோக நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வானது இந்திய-இலங்கை உறவிலும், தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்தியது. 1984 அக்டோபர் 31ஆம் நாள் திருமதி. இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
திருமதி. காந்தியின் திடீர் மரணம் ஈழத் தமிழினத்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது. தமிழரின் அரசியல் அபிலாசையும் நம்பிக்கையும் இடிந்து நொறுங்கின. கடைகள், பாடசாலைகளை மூடி, வீடுகள் எங்கும் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு தமிழீழ மக்கள் துக்கம் கடைப்பிடித்தபோது, தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படையினர் வீதிகளில் நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமதி காந்தியின் திடீர் மறைவானது ஈடுசெய்ய முடியாத பெரியதொரு இழப்பாகியது. ஒரு மாபெரும் தார்மீக சக்தியைத் தமிழரின் சுதந்திர இயக்கம் இழந்து தவித்தது. இந்திரா காந்தி அம்மையார் ஆழமான ஆளுமையும் மதிநுட்பமும் மிகுந்தவர். இலங்கை அரசியலின் சிக்கலான பரிமாணங்களை நன்கு அறிந்தவர். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையில் ஆழமான அக்கறையும் அனுதாபமும் கொண்டவர். தமிழரின் உரிமைகளையும் அரசியல் அபிலாசைகளையும் வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்தவர். சிங்கள அரசியல் தலைவர்களின் மனவியல்புகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கும் தந்திரங்களையும் கையாண்டு வந்தார். வங்காளதேசம் தனியரசாக உருப்பெற்றமைக்கு இந்திரா காந்தியின் பங்களிப்புக் காரணமாக இருந்த வரலாற்றை ஜெயவர்த்தனா நன்கு அறிந்திருந்தார். தமிழரின் இனப் பிரச்சினையிலும் திருமதி. காந்தி தலையிட்டுத் தமிழருக்குத் தனியரசை உருவாக்கிக் கொடுக்கலாமென ஜெயவர்த்தனாவுக்கு அச்சம் இருந்து வந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி திரு. டிக்சிட் குறிப்பிடுகையில், “திருமதி காந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985ஆம் ஆண்டிலேயே இலங்கையை இரு நாடுகளாகப் பிளவுபடுத்தியிருப்பார் என்று ஜெயவர்த்தனா என்னிடம் அச்சம் தெரிவித்தார்.”8 எனத் தெரிவித்திருக்கிறார்.
திருமதி. காந்தியின் திடீர் மரணத்தை அடுத்து டில்லியில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாகவே அமைந்தது. திருமதி. காந்தி வகித்த உயர் பதவியில் அவரது புத்திரரான திரு. ரஜீவ் காந்தி அமர்த்தப்பட்டார். ஆழமான தரிசனமும் அரசியல் முதிர்ச்சியுமற்ற இளைஞரான ரஜீவ் காந்தி புதிய இந்தியப் பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து இந்திய-இலங்கை உறவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த மாற்றங்கள் தமிழீழ மக்களின் நலன்களை ஆழமாகப் பாதித்தன.
டில்லியில் புதிய நிர்வாக ஆட்சி
உலகத்தின் மிகப் பெரிய சனநாயக நாடும் தென்னாசியாவின் வல்லரசுமாகிய இந்தியாவின் அதியுயர் அதிகார பீடத்தில் அமர்த்தப்பட்ட ரஜீவ் காந்தி, தனது புதிய ஆலோசகர்கள், நண்பர்களின் கருத்துகளுக்கு வசப்பட்டு இந்திய வெளியுறவுக் கொள்கையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினார். தனது தாயாரான இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் அயல்நாடுகளுடன் மேலாண்மைவாதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தார் என்பது ரஜீவின் கருத்து. இந்திரா காந்தியுடன் நெருங்கிய உறவை வைத்திருந்து அவரது வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொடுத்த மூத்த அரசியல்வாதிகள், இராஜதந்திரிகளையும், ரஜீவ் வெறுத்தார். மிகவும் நிதானமாக, மதிநுட்பமாகக் காய்நகர்த்தும் பார்த்தசாரதியின் இராஜதந்திர அணுகுமுறையும் ரஜீவுக்கு பிடிக்கவில்லை. இளைஞர் என்பதால் பொறுமையிழந்து அவசரப்படும் குணவியல்பு அவரிடமிருந்தது. உடனடியான பெறுபேறுகள் கிட்டும் அவசர முடிவுகள் எடுக்கும் உணர்ச்சிப் பாங்கு உள்ளவராகவும் அவர் விளங்கினார். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஆளுமையும் அணுகுமுறையும் கொண்டு விளங்கியதால் பார்த்தசாரதிக்கும் ரஜீவ் காந்திக்கும் மத்தியிலான உறவில் முறிவு ஏற்பட்டது. 1985ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை, தனக்கு மிகவும் நெருங்கியவரான ரொமேஸ் பண்டாரியிடம் பிரதமர் ரஜீவ் கையளித்தார். இலங்கை விவகாரத்தில் ஒரு அடிப்படையான கொள்கை மாற்றத்தையே ரஜீவ் விரும்பினார்.
இந்திரா காந்தியின் ஈமச் சடங்கின்போது இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடும் வாய்ப்பு ரஜீவுக்கு கிட்டியது. அந்த முதற் சந்திப்பின்போது பரிமாறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ஜெயவர்த்தனா மீது ரஜீவுக்கு மதிப்பும் கவர்ச்சியும் ஏற்பட்டது. முதற் சந்திப்பின்போது தனது சாதுரியமான சாணக்கியத்தைப் பயன்படுத்திய ஜெயவர்த்தனா அன்பும், பண்பும் ஆழமான அரசியல் ஞானமும் கொண்ட ஒரு உண்மையான பௌத்தராகத் தன்னை இனம்காட்டிக் கொண்டார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே ரஜீவின் தந்தையான திரு. நேருவுடனும் மகாத்மா காந்தியுடனும் நட்புறவு வைத்திருந்ததாகத் தன்னை ரஜீவுக்கு அறிமுகம் செய்துகொண்ட இலங்கை அதிபர், இந்தியாவுடன் ஒத்திசைவான நட்புறவை வளர்த்துக் கொள்வதே தனது அரசியல் இலட்சியம் என எடுத்துரைத்தார். ஒரு முதிர்ந்த அரசியல் மெய்ஞ்ஞானி என்ற பாத்திரத்தில் தன்னை நிறுத்தி, ரஜீவுக்கு ஆலோசனை வழங்கவும் அவர் தயங்கவில்லை. ஒரு பழம்பெரும் நாட்டின் இளம் பெரும் தலைவராக விளங்கும் ரஜீவ் காந்தி, தனது அயல்நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, தென்னாசியப் பிராந்தியத்தில் அமைதியையும் உறுதி நிலையையும் நிலைநாட்டும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்பதாகவும் சுட்டிக் காட்டினார். ஜெயவர்த்தனாவின் புத்திசாலித்தனமான கருத்தாடலால் கவரப்பட்ட ரஜீவ் காந்தி, இலங்கையுடனான தனது ஆட்சிப்பீடத்தின் அணுகுமுறையானது தனது தாயாரது ஒருதலைப்பட்சமான கொள்கையைவிட வேறுபட்டதாக அமையுமென உறுதியளித்தார். தனது ஆட்சிப்பீடத்தினது மத்தியஸ்துவ முயற்சி நேர்மையானதாகவும் பாரபட்சமற்றதாவும் அமையப் பெறும் என்றும் ரஜீவ் எடுத்துரைத்தார். இலங்கையின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு, ஐக்கியம் ஆகியனவற்றிற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தனது மத்தியஸ்துவ அணுகுமுறை அமையுமென ரஜீவ் உறுதியளித்ததை அடுத்து, இதுவரை காலமும் இந்திய வல்லாதிக்கம் குறித்து ஜெயவர்த்தனா கொண்டிருந்த அச்சம் முழுமையாக நீங்கியது. இப்படியாக இந்த முதற் சந்திப்பின்போது, இந்திய இலங்கை உறவில் ஒரு புதிய அணுகுமுறைக்கான அத்திவாரம் இடப்பட்டது. அத்தோடு தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திரா காந்தி அம்மையார் கடைப்பிடித்து வந்த நட்புறவுக் கொள்கைக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
1985 ஜனவரி முதற்பகுதியில் நான் திரு. பார்த்தசாரதியைப் புதுடில்லியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவர் விரக்தியுடன் இடிந்துபோய்க் காணப்பட்டார். திருமதி. காந்தியின் திடீர் மறைவும், ரஜீவ் காந்தியின் புறக்கணிப்பும் அவரை ஆழமாகப் பாதித்திருந்தன. ரஜீவ் காந்தியின் ஆட்சிப்பீடம் எத்தகைய புதிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகின்றது என்பது குறித்து அவர் எனக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். அழுத்தம் கொடுக்கும் கடும்போக்கை விடுத்து மென்மையான, நட்புறவான இராஜதந்திர அணுகுமுறையையே புதிய ரஜீவ் அரசு கடைப்பிடிக்கும் என்றார் பார்த்தசாரதி. ஜெயவர்த்தனா நல்லெண்ணம் கொண்டவர் எனத் தவறாகப் புரிந்திருக்கும் ரஜீவ் காந்தி, ஈழத் தமிழரின் பிரச்சினையைச் சமாதானப் பேச்சுக்கள் மூலமாகத் தீர்த்து வைக்கலாம் என நம்புகிறார் என்றார். தமிழ் விடுதலை அமைப்புகள் பங்குபற்றும் சமாதானப் பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகலாம் எனத் தெரிவித்த அவர் இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பிற்குள் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் விளக்கினார். திருமதி. இந்திரா காந்தியின் இரகசிய இராணுவ உதவித் திட்டம் கைவிடப்படலாம் எனச் சூசகமாகத் தெரிவித்த அவர் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னராக போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொள்ளப்படலாம் எனவும் கூறினார். ஜெயவர்த்தனாவின் ஏமாற்றுகிற, சூழ்ச்சி மிக்க வஞ்சகக் குணவியல்பு பற்றி எவ்வளவோ சொல்லியும் ரஜீவ் காந்தியை தம்மால் நம்ப வைக்க முடியவில்லை என்றார் பார்த்தசாரதி. ஒரு பொதுவான கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்ப் போராளி அமைப்புகள் அனைத்தும் ஓரணியில் இணையவேண்டும் என்றும் சிறீலங்கா அரசுடன் மிகவும் கடினமான சிக்கலான பேச்சுக்களில் பங்குகொள்ள தமிழர் தரப்பு தயாராக வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். ரஜீவ் காந்தியின் புதிய நிர்வாகம் கடைப்பிடிக்கவிருக்கும் கொள்கை பற்றியும், அணுகுமுறை பற்றியும் இந்தியப் புலனாய்வுத் துறையினர் விரைவில் எமக்கு எடுத்து விளக்குவார்கள் என்றும் திரு. பார்த்தசாரதி சொன்னார்.
சென்னை திரும்பியதும் திரு. பார்த்தசாரதி கூறிய விடயங்களை பிரபாகரனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தேன். திருமதி காந்தியின் மறைவை அடுத்து ஆட்சிப்பீடம் ஏறிய ரஜீவ் காந்தி புதிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாம் என எதிர்பார்த்திருந்த பிரபாகரனுக்குப் பார்த்தசாரதி தெரிவித்த விடயங்கள் ஆச்சரியத்தையோ ஏமாற்றத்தையோ கொடுக்கவில்லை. ஆயினும் கெரில்லாப் போராட்டத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, சிங்கள ஆயுதப் படைகளைப் பலவீனப்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்த பிரபாகரனுக்கு, அச் சூழ்நிலையில் போர்நிறுத்தம் செய்வது உகந்த தந்திரோபாயமாகத் தெரியவில்லை.
1985 ஆண்டு தொடக்கத்திலிருந்தே தமிழீழத்தில் வன்முறைச் சூறாவளி தீவிரம் பெறத் தொடங்கியது. அவ்வாண்டு ஜனவரி 9ஆம் நாள், யாழ்ப்பாணம் அச்சுவேலியில் நிகழ்ந்த சுற்றிவளைப்புச் சண்டையில் எமது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
ஒரு உளவாளி கொடுத்த தகவலின் பேரில் ஐநூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அச்சுவேலியில் அமையப் பெற்றிருந்த எமது கெரில்லாப் படைத் தளம் ஒன்றைத் திடீரெனச் சுற்றிவளைத்தனர். முற்றுகைக்கு ஆளான தளத்திலிருந்த 15 புலிப் படை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில் உக்கிரமான சண்டை மூண்டது. பெருந்தொகையான இராணுவத்தினரை எதிர்த்து எமது போராளிகள் வீரமுடன் களமாடினர். இச் சண்டையில் கப்டன் ரவீந்திரனும் நான்கு இளம்புலி வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பத்துப் புலி வீரர்கள் வீரமுடன் போராடி சிங்கள இராணுவத்தின் முற்றுகை அரணை உடைத்தெறிந்து தப்பிச் சென்றனர். பெரியதொரு இராணுவ முற்றுகையைச் சிறிய குழுவாக முகம்கொடுத்து, பல மணிநேரம் போராடி ஈற்றில் பெரும்பாலானோர் முற்றுகையை உடைத்துத் தப்பியதே பெரும் இராணுவச் சாதனை எனலாம்.
அக் கால கட்டத்தில் கப்டன் ரவீந்திரனின் சாவு எமது இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. பண்டிதர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ரவீந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினராவார். அத்துடன் புலிகள் இயக்கத்தின் நிதிக்கும் ஆயுதப் பராமரிப்புக்கும் பொறுப்பாக இருந்தவர். அரசியற் பரப்புரைப் பணிகளிலும் தீவிரமாகச் செயற்பட்டு வந்தவர். வல்வெட்டித்துறைக்கு அருகாமையிலுள்ள கம்பர் மலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதர், எமது இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். ஆஸ்மா நோயினால் அவலப்பட்ட போதும் கடமை உணர்வுடன், இலட்சியப் பற்றுடன், கடுமையாக உழைத்து சக போராளிகளின் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாக விளங்கினார். பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளைச் சுமந்தபோதும் களத்தில் இறங்கிப் போராடவும் அவர் தயங்கவில்லை. தலைவர் பிரபாகரனால் பெரிதும் மதிக்கப்பட்டவர். மிகவும் நெருங்கிய தோழனாகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் செயற்பட்டவர். அவரது சாவு எல்லோரது இதயங்களையும் கலக்கிய ஒரு சோக நிகழ்வு.
1985ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் சிங்கள ஆயுதப் படைகளுக்கு எதிராக ரெலோ அமைப்பும் விடுதலைப் புலிகள் இயக்கமும் இரு பெரும் தாக்குதல்களை நடத்தின. 1985 ஜனவரி 19ஆம் நாள், வன்னியிலுள்ள முறிகண்டியில் கொழும்பு சென்றுகொண்டிருந்த யாழ்தேவிப் புகையிரதத்தை ரெலோ அமைப்பைச் சேர்ந்த போராளிகள் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். அந்தப் புகையிரத்தில் சிங்கள இராணுவப் படையணி ஒன்று பயணம் செய்து கொண்டிருந்தது. வெடிகுண்டில் சிக்கி பல வண்டிகள் சிதறின. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 இராணுவத்தினரும் 10 பொதுமக்களும் கொல்லப்பட்டதுடன் ஏராளமான படையினர் படுகாயமடைந்தனர். சம்பவத்தை அடுத்து உதவிக்கு சென்ற இராணுவத்தினருடனும் ரெலோ போராளிகள் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர்.
1985 பெப்ரவரி 13ஆம் நாள், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கரையோரப் பட்டினமாகிய கொக்கிளாயில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிப் போராளிகள் துணிகரத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தினர். இந்தத் தாக்குதல் ஐந்து மணிநேரம் வரை நீடித்தது. மிகவும் உக்கிரமாக நிகழ்ந்த இச் சண்டையில் நூற்று ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அக்கால கட்டத்தில் சிங்கள இராணுவம் சந்தித்த மிகப் பெரிய உயிரிழப்பு இதுவாகும். எமது தரப்பில் பதினாறு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். சிங்களப் படைத்துறைக்கு மிகவும் அவமானமான பின்னடைவாக இத் தாக்குதல் அமைந்தது. இதனால் ஆவேசமடைந்த படையினர் முல்லைத்தீவுப் பட்டினத்திற்கு அண்மையிலிருந்த அகதிமுகாம் மீது மிருகத்தனமான தாக்குதலை நிகழ்த்தி ஐம்பத்து இரண்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தனர். இந்தியா தலையிட்டு இந்த இனக்கொலையைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் குரல் எழுப்பினர். ஆயினும் இந் நிகழ்வு குறித்து இந்திய அரசு மௌனம் கடைப்பிடித்தது. இந்திய அரசின் இப் பாராமுகப் போக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது. ரஜீவ் காந்தியின் புதிய நிர்வாகம் இலங்கை சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு மென்மையான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கிறது என்ற உண்மையை இது எடுத்துக் காட்டியது. 1985 மார்ச் மாதம், இந்தியாவின் வெளிவிவகார, உள்விவகாரப் புலனாய்வுத் துறைகளின் அதிபர்கள் விடுதலைப் புலிகளையும் ஏனைய தமிழ்ப் போராளி அமைப்புகளையும் தனித்தனியே சந்தித்து, இலங்கை விவகாரத்தில் ரஜீவ் அரசு கடைப்பிடிக்கவிருக்கும் புதிய நடுநிலையான அணுகுமுறை பற்றி விரிவான விளக்கம் கொடுத்தனர்.
‘றோ’ புலனாய்வுத் துறையின் அதிபர் திரு.கிரிஷ் சக்சேனா9 தலைவர் பிரபாகரனையும் என்னையும் சென்னையில் ஒரு இரகசியமான இடத்தில் சந்தித்தார். ‘றோ’ அதிகாரிகள் இந்த இரகசியச் சந்திப்பை ஒழுங்கு செய்தனர். உயர்ந்த கம்பீரமான தோற்றம்; கனத்த குரல்; ஒளிர்விடும் கண்கள். ஆங்கிலத்தில் ஆணித்தரமாகப் பேசினார் சக்சேனா. கலந்துரையாடல் நிகழவில்லை. அன்றும் இன்றுமான இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி எமக்கு ஒரு விரிவுரை நிகழ்த்தினார் அவர். அவரது சொற்பொழிவின் சுருக்கம் இதுதான்:
அன்று, திருமதி. இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டி இருந்தது. தமிழரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கிவிடும் நோக்கத்துடன் இந்திய நலன்களுக்கு விரோதமான அந்நிய சக்திகளை இலங்கையில் ஊடுருவ அனுமதித்தார் ஜெயவர்த்தனா. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததென இந்திரா காந்தி கருதினார். இவ் வேளை 1983 ஜுலை இனக் கலவரம் தமிழினப் படுகொலையாகக் கோரம் எடுத்தது. இதன் விளைவாகப் பல ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தமிழர்களுக்கு எதிராக இனக்கொலைப் பரிமாணத்தில் தலைவிரித்தாடிய கலவரம் தமிழ்நாட்டில் தேசியவாத உணர்வுத் தீயைப் பற்றியெரியச் செய்தது. இத்தகைய சூழ்நிலை இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எதிர்மறையான இந்தப் போக்குகள் காரணமாகவே இலங்கையில் இந்தியாவைத் தலையிட நிர்ப்பந்தித்தன. இலங்கையில் தமிழ்க் குடிமக்களுக்கு எதிரான அரச வன்முறைக்கு முற்றுப் புள்ளிவைத்து, இனநெருக்கடிக்கு சமாதான வழியில் தீர்வுகண்டு, இலங்கையிலும் தென்னாசியப் பிராந்தியத்திலும் அமைதியையும் உறுதி நிலையையும் ஏற்படுத்துவதே இந்தியத் தலையீட்டின் பிரதான நோக்கமாக இருந்தது. சிங்கள இராணுவ அட்டூழியங்களுக்கு முடிவுகட்டி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய போராளி அமைப்புகளுக்கும் ஆயுத உதவி வழங்கப்பட்டது.
இவ்விதமாக ஒரு விளக்கத்தை அளித்த திரு. சக்சேனா, இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் பங்கம் ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் திருமதி. காந்திக்கு இருக்கவில்லை என்றார். இராணுவ அணுகுமுறையை ஜெயவர்த்தனா கைவிட வேண்டும் என்பதும், ஒன்றுபட்ட இலங்கையின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படவேண்டும் என்பதுமே திருமதி. காந்தியின் குறிக்கோளாக இருந்தது என்றார். தமிழீழத் தனியரசு என்ற தமிழர்களின் அபிலாசைக்கு இந்தியா ஒருபொழுதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்று உறுதிபடக் கூறிய அவர், பிரிவினைவாதக் கோரிக்கையை முன்வைத்துப் போராடும் இயக்கங்களை உள்நாட்டில் சமாளிக்க வேண்டியிருப்பதால் பிரிவினைக்கு இந்தியா ஆதரவு அளிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என விளக்கினார். ‘இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் சரிவரப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்’ என்று கனத்த தொனியில் கூறிக் கொண்டே பிரபாகரனை உறுத்துப் பார்த்தார் சக்சேனா.
இன்று, ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் ரஜீவ் காந்தி சிறீலங்கா அரசுடன் நட்புறவில் கட்டப்பட்ட நல்லுறவைப் பேண விரும்புகிறார் எனக் கூறிய சக்சேனா, தமிழ்ப் போராட்ட அமைப்புகளை உள்ளடக்கிய சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் நோக்குடன் ஒரு புதிய, முற்போக்கான மத்தியஸ்துவ முயற்சியை ஆரம்பிக்கவுள்ளார் எனத் தெரிவித்தார். தமிழ்ப் போராளி அமைப்புகள் தமது ஆயுதப் போராட்டத்திற்கு ஓய்வு கொடுத்து, அமைதிபேணி சமாதானப் பேச்சுக்குத் தங்களைத் தயார்படுத்தும் காலம் அண்மித்து வருகிறது என்று கூறித் தனது உரையை முடித்தார். தனது உரையை முடித்ததும், எமது அபிப்பிராயம், கருத்துகள் எதையுமே கேட்காது அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். ஏனைய தமிழ் அமைப்புகளுடன் இன்னொரு கூட்டம் இருப்பதால் அவர் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்ததாக றோ அதிகாரிகள் எமக்கு விளக்கம் தந்தார்கள்.
இலங்கை விவகாரத்தில், இந்தியாவின் அன்றைய வெளியுறவுக் கொள்கை பற்றி திரு. சக்சேனா அளித்த விளக்கம் பிரபாகரனுக்கும் எனக்கும் ஆச்சரியத்தையோ அல்லது ஏமாற்றத்தையோ தரவில்லை. விரைவில் ஒரு போர்நிறுத்தம் செய்யப்படும் என சக்சேனா தெரிவித்த கருத்தை பிரபாகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆயுதப் போராட்டம் அப்பொழுதுதான் சூடுபிடித்து வந்தது. சிங்களப் படைத்துறைக்கு மேலும் பின்னடைவுகளை ஏற்படுத்தி, அதனைப் பலவீனப்படுத்துவதற்கு முன்னராக போர்நிறுத்தம் செய்தால் ஜெயவர்த்தனா அரசை வழிக்குக் கொண்டு வருவது சிரமம் என்பது பிரபாகரன் கருத்து. ஆகவே, ரஜீவ் காந்தியின் புதிய இராஜதந்திர மத்தியஸ்துவ அணுமுறை மூலமாக தமிழரின் இனப் பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான திர்வு கிட்டப் போவதில்லை என எண்ணினார் பிரபாகரன். அத்துடன் ஜெயவர்த்தனாவின் வஞ்சகமான உள்நோக்கத்தை ரஜீவ் காந்தி சரியாக எடைபோடத் தவறிவிட்டார் என்பதும் பிரபாகரனின் கருத்து.
திரு. சக்சேனாவைச் சந்தித்ததை அடுத்து ஒரு சில நாட்களில், இந்தியாவின் உள்நாட்டுப் புலனாய்வுத் துறையின் அதிபரான திரு. எம்.கே.நாராயணனை பிரபாகரனும் நானும் சந்தித்தோம். இந்தச் சந்திப்பு சென்னைக்கு வெளியே திருப்பதியிலுள்ள ஒரு இரகசிய இடத்தில் நிகழ்ந்தது. சக்சேனாவுக்கு முற்றிலும் முரணான வித்தியாசமான ஆளுமையைக் கொண்டவர் நாராயணன். அன்பும், பண்பும், மனம் திறந்து பழகும் நல்லியல்பும் கொண்ட உத்தமமான மனிதர். எமது கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுமாறும் எம்மை வேண்டினார். முதலில் அவரது கருத்துக்களைக் கேட்டறிய நாம் விரும்பினோம். அயல் நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் ரஜீவ் காந்தியின் நிர்வாக பீடம் புதிய உபாயங்களையும் வித்தியாசமான அணுகுமுறைகளையும் கையாள விரும்புகிறது என்றார் நாராயணன். தேசிய இன முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் தீர்த்து வைப்பதிலும் புதிய நடைமுறைகளை ரஜீவ் அரசு செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றார். தென்னாசியாவை அரசியல் உறுதிவாய்ந்த, ஒரு சமாதானப் பிரதேசமாக உருவாக்குவதே புதிய இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிரதான நோக்கம் எனக் கூறிய அவர், இப் பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு விரோதமான அந்நிய நாசகாரச் சக்திகள் அகற்றப்படுதல் அவசியம் என்றார். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் அயல்நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து, உறுதி நிலையும் அமைதியும் நிலவும் ஒரு புதிய அரசியல் ஒழுங்கைக் கட்டி எழுப்புவது இந்தியாவின் பெரும் பொறுப்பாகியுள்ளது. எனவே, இந்தத் தரிசனத்தின் அடிப்படையில், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்குடன் ஒரு சமாதான வழிமுறையைத் தொடங்கி வைக்க ரஜீவ் அரசு விரும்புகிறது. தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யும் ஒரு தீர்வை எட்டும் நோக்கில் இந்திய அரசு முன்னெடுக்கவிருக்கும் மத்தியஸ்த்துவ முயற்சிகளுக்கு தமிழ் அரசியல் சக்திகள், குறிப்பாக தமிழ் விடுதலை அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் திரு. நாராயணன். இதனையடுத்து, இந்திய அரசின் புதிய அணுகுமுறை குறித்து எமது கருத்துக்களை அறிய விரும்பினார் அவர்.
தமிழீழ மக்கள் எதிர்கொண்ட அரச ஒடுக்குமுறையின் வரலாறு பற்றியும் அதன் நேரடி விளைவாகத் தோற்றமெடுத்த ஆயுதப் போராட்டத்தின் பின்னணி பற்றியும் பிரபாகரனும் நானும் திரு. நாராயணனுக்கு விரிவாக எடுத்துரைத்தோம். மகாத்மா காந்தியின் அகிம்சை வழிதழுவி, பல தசாப்தங்களாக மென்முறைப் போராட்டங்களை நிகழ்த்திய பின்னரே தமிழ் மக்கள், இன அழிவிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அரச வன்முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர் என்ற போராட்ட வரலாற்றையும் நாம் எடுத்து விளக்கினோம். வன்முறைப் போராட்டத்தை தமிழ்ப் புலிகள் வழிபடவில்லை எனக் கூறிய பிரபாகரன், தமிழ் இனத்தையும் தமிழ் இனத்தின் அடையாளத்தையும் பேணிப் பாதுகாக்கும் இறுதி நடவடிக்கையாகவே ஆயுதப் போராட்ட வடிவத்தை நாம் தழுவிக் கொள்ள நேர்ந்தது என்றார். சமாதான வழிமூலமாக இந்திய அரசு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுத்தால் தமிழ் மக்கள் என்றும் இந்தியாவுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று கூறிய பிரபாகரன், மேலாண்மைவாதக் கருத்தியலில் மூழ்கிப் போய் கிடக்கும் சிங்கள அரசியற் தலைமை தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்றார். ஜெயவர்த்தனாவின் கபட நோக்கத்தை பிரதமர் ரஜீவ் சரியாக எடைபோடத் தவறிவிட்டார் என்பதை நாம் எடுத்துக் கூறினோம். முதிர்ச்சியற்ற இளைஞரான ரஜீவ் காந்தியை நரிக்குணம் படைத்த ஜெயவர்த்தனா ஏமாற்றிவிடுவார் என்றும் இதனால் தமிழ் மக்களே பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் நாம் எச்சரித்தோம்.
நாம் கூறிய கருத்துக்களை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் திரு. நாராயணன். எமது சந்தேகங்களையும் அச்சங்களையும் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனக் கூறிய அவர், இறுதியில் சமாதானப் பேச்சுக்கு வழிகோலும் இந்தியாவின் சமரச முயற்சிக்கு எம்மை ஒத்துழைக்குமாறு வேண்டிக்கொண்டார்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணி
இந்திய புலனாய்வுத் துறைகளின் தலைவர்கள், மற்றும் திரு. பார்த்தசாரதி ஆகியோர் ரஜீவ் அரசின் புதிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமாக அளித்த விளக்கங்களிலிருந்து எமக்கு ஒரு உண்மை புலனாகியது. புதிய இந்திய நிர்வாகம் வெகு விரைவில் ஒரு போர் நிறுத்தத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் ஒழுங்குகளைச் செய்யப் போகின்றது என்பது தெளிவாகியது. ஜெயவர்த்தனா நிச்சயமாகப் போர்நிறுத்தத்திற்கு இணங்குவார் என்பது எமக்குத் தெளிவாகத் தெரிந்தது. முதலாவதாக போர்நிறுத்தம் செய்து கொள்வது ஜெயவர்த்தனா அரசுக்குச் சாதகமானதாகவே அமையும். ஏனென்றால் தீவிரம் பெற்றுவந்த தமிழ்ப் போராளி அமைப்புகளின் கெரில்லாத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் அரச ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தம் நீக்கப்படும். இரண்டாவதாக பேச்சுவார்த்தையின்போது சிங்கள அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்து தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுக்கலாம். ஆகவே, ரஜீவ் காந்தியின் புதிய இராஜதந்திர அணுகுமுறை ஜெயவர்த்தனாவின் சூழ்ச்சிகரத் திட்டத்திற்குச் சாதகமாகவும் தமிழர்களின் அரசியல் நலன்களுக்குப் பாதகமாகவும் அமையப்பெறுமென நாம் கருதினோம். ரஜீவ் ஆட்சிப்பீடத்தின் புதிய இலங்கைக் கொள்கையானது, எதிர்காலத்தில், இந்திய அரசின் நலனுக்கும் ஈழத் தமிழரது சுதந்திர இயக்கத்தின் அபிலாசைக்கும் மத்தியில் ஒரு பகை முரண்பாட்டை ஏற்படுத்தலாமென நாம் அஞ்சினோம்.
இந்திய வெளியுறவுக் கொள்கை மாற்றத்தால் எழுந்த புதிய அரசியல் வளர்ச்சிப் போக்கு எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு புதிய சவாலாக அமைந்தது. இந்தச் சவாலையும் அதிலிருந்து எழக்கூடிய அரசியல் ஆபத்துக்களையும் நாம் தனி அமைப்பாக, தனித்து நின்று எதிர்கொள்வது சாத்தியமற்றது என எனக்குத் தோன்றியது. தமிழ்ப் போராளி அமைப்புகள் ஒன்றிணைந்து, ஒன்றுபட்ட கூட்டுச் சக்தியாக இப் புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய காலம் கனிந்து விட்டதாகவே நான் கருதினேன். தமிழ் விடுதலை அமைப்புகள் இணைந்த கூட்டு முன்னணி அமைக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவை அப்பொழுது எழுந்தது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற கட்டமைப்பில் ஏற்கனவே ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் போன்ற இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து இயங்கி வந்தன. இந்த ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் விடுதலைப் புலிகள் ஒன்றிணைந்து இயங்க வேண்டுமென நான் கருதினேன். இதற்குத் தலைவர் பிரபாகரனை இணங்க வைப்பது என்பது எனக்குப் பெரிய சவாலாக அமைந்தது.
ஜெயவர்த்தனா அரசின் சூழ்ச்சிகரமான கபட நோக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்ற ரீதியில் ரஜீவ் காந்தியின் புதிய ஆட்சிப்பீடம் அவசரப்பட்டு மேற்கொள்ளவிருக்கும் புதிய இராஜதந்திர அணுகுமுறை எமது விடுதலை அமைப்புக்குப் பல சிக்கல்களை உருவாக்கலாமெனப் பிரபாகரனுக்கு எடுத்து விளக்கினேன். தனி இயக்கமாகத் தனித்து நின்று செயற்பட்டால், புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாது ஓரம்கட்டப்படும் ஆபத்து எமது இயக்கத்திற்கு ஏற்படலாம் என்பதையும் அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஒரு பொதுவான அரசியல்-இராணுவ இலட்சியத்தின் அடிப்படையில் தமிழ் விடுதலை அமைப்புகள் ஒன்று சேர்ந்து நின்றால் இந்தியக் கொள்கை மாற்றத்தால் எழக்கூடிய புதிய சவால்களைச் சமாளிப்பது இலகுவாக இருக்கும் என்பதையும் விளங்கப்படுத்தினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் நாம் கூட்டுச் சேர்ந்தால் தமிழரின் சுதந்திர இயக்கம் பலப்பட்டு, பாரிய சக்தியாக உருவகம்பெற்று, இந்திய இராஜதந்திர நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுக்க வல்ல கூட்டரணாக இயங்க முடியும் என்றும் விளக்கினேன். பல கலந்துரையாடல்களின் பின்னர் இறுதியாகப் பிரபாகரன் எனது யோசனைக்கு இணக்கம் தெரிவித்தார். பிரபாகரனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதும் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களைத் தனித் தனியே சந்தித்து எமது இயக்கத்தின் விருப்பத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களான திரு. பாலகுமார் (ஈரோஸ்), திரு. சிறீ சபாரெத்தினம் (ரெலோ), திரு.பத்மநாபா (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகியோரை எனக்கு ஏற்கனவே நன்கு தெரியும். அவர்களைத் தனித் தனியே சந்தித்து, ரஜீவ் அரசின் புதிய சமரச அணுகுமுறை பற்றியும், இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டிணைந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதாயின் ஒரு பொதுப்படையான கொள்கைத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் போராளி அமைப்புகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் அவர்களுக்கு எடுத்து விளக்கினேன். ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயலாற்ற விடுதலைப் புலிகளின் தலைமை இணங்கியிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியதுடன் சந்திரகாசனின் ஆதிக்கத்திலிருந்து அவர்கள் முற்றாக விடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினேன். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படும் வாய்ப்புக் கிட்டியதை அறிந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு பொதுவான கொள்கைத் திட்டத்தை வகுப்பது குறித்து விரிவான பேச்சுக்களை நடத்துவதற்கும் ‘ஒற்றுமைப் பிரகடனத்தில்’ கைச்சாத்திடுவதற்குமாகப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துக் கலந்துரையாட அவர்கள் விருப்பம் தெரிவித்தார்கள்.
1985ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் சென்னை நகரிலுள்ள விடுதி ஒன்றில் ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் பிரபாகரனுக்கும் மத்தியிலான சந்திப்பு நிகழ்ந்தது. இச் சந்திப்பில் நான் பிரபாகரனுடன் கலந்து கொண்டேன். மாணவர் பேரவைப் போராட்ட காலத்திலிருந்தே ரெலோ தலைவர் சிறீ சபாரெத்தினத்தை பிரபாகரன் நன்கறிவார். ஈரோஸ் தலைவர் பாலகுமாரையும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். சென்னை இந்திரா நகரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைச் செயலகத்திற்கு பல தடவைகள் வருகை தந்த பாலகுமார், பிரபாகரனையும் என்னையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபாவை அன்றுதான் முதற்தடவையாகப் பிரபாகரன் சந்தித்தார்.
கூட்டத்தில் பரஸ்பர நல்லுறவும் நல்லெண்ணமும் நிலவியது. கூட்டான செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை வகுப்பதன் அவசியம் குறித்து நான்கு தலைவர்கள் மத்தியிலும் கருத்தொற்றுமை நிலவியது. தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழர் தாயகத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுவது என்ற பொது அரசியல் இலட்சியத்தை நான்கு அமைப்புகளும் வரித்துக் கொண்டன. கூட்டு இராணுவத் திட்டமானது, கூட்டுறவான நடவடிக்கையின் அடிப்படையில் படிப்படியாகக் காலப் போக்கில் பரிணாமம் பெறவேண்டும் எனப் பிரபாகரன் விளக்கிக் கூறினார். அதுவரை காலமும் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு அமைப்பும் சிங்கள ஆயுதப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நிகழ்த்த வேண்டும் எனவும் முடிவாகியது. சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சியை நோக்கி இந்திய இராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருப்பதால், நான்கு அமைப்புகளின் தலைவர்களும் அடிக்கடி சந்தித்து அரசியல் சூழ்நிலை வளர்ச்சிப் போக்குக் குறித்து கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக, தமிழர் தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்காக ஒன்றிணைந்து போராடுவதென உறுதிப் பிரமாணம் செய்து கூட்டு மகஜர் ஒன்றில் நான்கு தலைவர்களும் கைச்சாத்திட்டனர்.
ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு எடுத்த அதே நாளிலிருந்து தமிழீழ தேசத்தில் வன்முறைத் தாக்குதல்கள் காட்டுத் தீ போலப் பரவின. 1985, ஏப்ரல் 10ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிற்குச் சமீபமாக அமைந்திருந்த காவல்துறைத் தலைமைச் செயலகம் விடுதலைப் புலிக் கெரில்லா வீரர்களின் பாரிய தாக்குதலுக்கு இலக்காகியது. அவ்வேளை யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகப் பொறுப்பேற்றிருந்த கேணல் கிட்டு, இத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார். காவல்நிலையம் முன்பாக கேந்திர முனைகளில் வியூகம் அமைத்து, நிலையெடுத்த புலி வீரர்கள் மோட்டார்கள் ரொக்கட் ஏவுகணைகளால் காவல்துறைக் கட்டிடம் மீது உக்கிரமான தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். புலிகளின் குண்டு மழைக்கு நின்றுபிடிக்க முடியாத காவல்துறையினர், இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் விட்டுவிட்டு அருகாமையிலுள்ள கோட்டை இராணுவ முகாமுக்கு ஓடிச் சென்று அங்கு தஞ்சம் புகுந்தனர். கோட்டை முகாமிலிருந்து சண்டை நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து வந்த இராணுவப் படையணி மீது புலி வீரர்கள் தாக்குதலைத் தொடுத்தனர். புலிகளின் உக்கிர தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினரும் சிதறியோடிக் கோட்டைக்குள் பதுங்கினர். காவல்துறைத் தலைமைச் செயலகம், உதவிப் பொலிஸ் மாஅதிபரின் காரியாலயம் உட்பட பல்கூட்டுக் காவல்துறைக் கட்டிடங்கள் முற்றாகத் தகர்க்கப்பட்டன. பெருந்தொகையான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றிய பின்பு மறுநாட் காலை விடிவதற்குள் புலி வீரர்கள் அங்கிருந்து மறைந்தனர்.
யாழ்ப்பாணக் காவல்துறைத் தலைமைச் செயலகம் தாக்கி அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏனைய அமைப்புகளும் தனித் தனியாக இராணுவ நிலைகள், காவல் நிலையங்கள், இராணுவ தொடர் வண்டிகள் போன்றன மீது கெரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி, சிங்கள ஆயுதப் படைகள் மீது பாரிய உயிர்ச்சேதத்தை விளைவித்தன. 1985 ஏப்ரல், மே காலப் பகுதியில் தமிழ்ப் போராளி அமைப்புகளின் வன்முறைத் தாக்குதல்கள் உச்ச கட்டத்தை அடைந்தன எனலாம். இக் கால கட்டத்தில் தலைவிரித்தாடிய வன்முறைத் தாக்குதல்களை ஒரு இந்திய எழுத்தாளர் கீழ்க் கண்டவாறு விபரித்திருக்கிறார்:
“தமிழ்ப் பகுதிகளில் சுழற்சியாக, மாறி மாறிக் கட்டவிழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் திகலூட்டுவதாக இருந்தது. காற்றில் நடுங்கும் காட்டரசம் இலைபோல இலங்கை அதிர்ந்தது. ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொண்டதை அடுத்து, கூட்டணிக்கு வெளியே நின்ற புளொட் உட்பட சகல தீவிரவாதப் போராளி அமைப்புகளும் புதிய உத்வேகம் பெற்றுச் செயற்படத் தொடங்கின. கொழும்பு அரசைப் பணியவைக்கும் செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது போன்று வடகிழக்கின் மூலைமுடுக்குகள் எங்கும் இவ்வமைப்புகள் சிறீலங்கா படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின.”10
தமிழ் விடுதலை அமைப்புகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுத படைகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி வந்த அதேவேளை, இந்திய வெளியுறவுச் செயலர் திரு. ரொமேஸ் பண்டாரி கொழும்புக்கு அடிக்கடி வருகை தந்து போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றி ஜெயவர்த்தனா அரசுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்தினார். தமிழர் தரப்பிலிருந்து அதிகரித்து வந்த இராணுவ நெருக்கத்திற்கு முகம் கொடுக்க முடியாது அங்கலாய்த்த ஜெயவர்த்தனா இந்தியாவின் யோசனைக்கு இணங்கினார். தமிழ்ப் போராளி அமைப்புகளுடன் பேசுவதற்கு இணங்கிய ஜெயவர்த்தனா அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்தார். அதாவது, தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும் இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்திவிட வேண்டும் என்றும், தமிழீழத் தனியரசுக் கோரிக்கையை கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவுசெய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்து போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இணங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும் சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 ஜுன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற்படுத்துவது என்றும் இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் ஜுலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
ஜெயவர்த்தனாவின் கபட நோக்கம் குறித்து ஆழமான சந்தேகம் கொண்டிருந்த பிரபாகரனுக்கும் ஏனைய போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கும் திடீரெனப் போர்நிறுத்தம் செய்து கொள்வது சரியான அணுகுமுறையாகத் தென்படவில்லை. சிங்கள ஆயுதப் படைகள் மீதான இராணுவ அழுத்தத்தைத் திடீரென நிறுத்திக் கொள்வது அரச படைகளுக்கே அனுகூலமானதாக அமையுமெனப் பிரபாகரன் கருதினார். படிப்படியாகத் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டுவந்த கெரில்லாப் போரை, அதன் கேந்திர நோக்கை அடைவதற்கு முன்பாக, அதாவது சிங்கள இராணுவ இயந்திரத்தை வலுவிழக்கச் செய்வதற்கு முன்னராக, போருக்கு ஓய்வு கொடுப்பது என்பது போரியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்கள அரசுக்கே சாதகமானதாக முடியுமெனப் பிரபாகரன் எண்ணினார். தமிழ்ப் போராளி அமைப்புகளின், குறிப்பாகப் பிரமாதமான போரியல் சாதனைகளைப் படைத்து வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட இலட்சியத்திற்கு இது பங்கம் விளைவிப்பதாக அமையுமெனவும் அவர் கருதினார். ஜுன் மாதம் ஆரம்பத்தில், றோ புலனாய்வுத்துறை உயர் அதிகாரியான திரு. சந்திரசேகரனை பிரபாகரனும் ஏனைய ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும் சந்தித்தபோது அவர்கள் தமது அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் மனம் திறந்து வெளிப்படையாகத் தெரிவித்தனர். திடீரெனப் போருக்கு ஓய்வு கொடுத்தால், சிங்கள ஆயுதப் படைகள் தம்மைப் பலப்படுத்தி, தமது போரியல் சக்தியை வலுப்படுத்த வழிசமைத்துக் கொடுப்பதாக அமையுமெனவும், அதேவேளை, தமிழ் கெரில்லாப் படையணிகள் செயற்பாடின்றி ஊக்கமிழந்து மனத் தளர்வுக்கு ஆளாவார்கள் எனவும் சந்திரசேகரனுக்கு பிரபாகரன் எடுத்து விளக்கினார்.
பிரபாகரனதும் ஏனைய போராளித் தலைவர்களதும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் சந்திரசேகரன் இருக்கவில்லை. சிங்கள ஆயுதப் படைகளுக்கு போதுமான உயிர்ச்சேதமும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என வாதித்த சந்திரசேகரன், மேற்கொண்டும் போர் அழிவுகள் ஏற்பட்டால் அரசு ஆட்டம் கண்டு தகர்ந்து விடும் என்றும் அத்தகைய நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்க இந்திய அரசு விரும்பவில்லை என்றும் விளக்கினார். போர்நிறுத்தத்திற்கும் பேச்சுக்கும் ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ரஜீவ் காந்தியும், ரொமேஸ் பண்டாரியும் மிகச் சிரமமான இராஜதந்திர முயற்சிகளை எடுக்க வேண்டியிருந்தது என்றும் சொன்னார். தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடாத்த ஜெயவர்த்தனா இணங்கியமையானது தமிழ்ப் புரட்சிவாதிகளுக்கு கிட்டிய சட்டரீதியான அங்கீகாரம் என விளக்கிய சந்திரசேகரன், ஆயுதம் தரித்த விடுதலை இயக்கங்களைத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டே சிங்கள அரசு பேச வருகிறது எனக் குறிப்பிட்டார். பேச்சுக்கள் இடைநடுவே முறிந்து போனாலும் தமிழ் போராளி அமைப்புக்களை இந்திய அரசு கைவிடாது என உறுதியளித்த அவர், இந்தியாவின் வழிநடத்தலுக்கு அமையப் போர்நிறுத்தம் செய்து, பேச்சுக்களில் பங்குபற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக, மிகத் தயக்கத்துடன் பிரபாகரனும் ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் போர்நிறுத்தத்திற்கு இணங்கினர். சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியிலான அதிகாரபூர்வமான போர்நிறுத்தம் 1985 ஜுன் மாதம் 18ஆம் நாள் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட கால அட்டவணையைக் கொண்ட நான்கு கட்டங்களாகப் போர்நிறுத்தம் அமையப் பெற்றது. ஒவ்வொரு கட்டத்திலும் சில நடைமுறைகளை இரு தரப்பினரும் பேண வேண்டும். இறுதிக் கட்டத்தில், போர் நெருக்கடி தணிந்து முழுமையான போர்நிறுத்தம் செயலுக்கு வரும். இந்த நான்கு கட்டப் போர்நிறுத்த உடன்பாட்டு விதிகள் குறித்துப் பிரபாகரன் திருப்தி கொள்ளவில்லை. சிங்கள ஆயுதப் படைகளினதும், ஆயுதம் தரித்த சிங்களக் குடியேற்றவாசிகளதும் வன்முறையிலிருந்து தமிழ்ப் பொதுமக்களுக்குப் போர்நிறுத்த உடன்பாட்டில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படவில்லை. இது பிரபாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழரின் இனப் பிரச்சினை குறித்து, ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை அரசை எமது இயக்கம் வற்புறுத்தவேண்டுமெனப் பிரபாகரன் விரும்பினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் கூட்டுத் தலைமைவாயிலாக எமது கருத்துக்களை வெளியிடுவதே சாலச் சிறந்தது என நான் பிரபாகரனுக்கு ஆலோசனை வழங்கினேன். இதன்படி, போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த அன்றைய நாள் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் அவசர கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். இக் கூட்டத்தில், போர் நிறுத்தம், தீர்வுத் திட்டம் பற்றிய எமது இயக்கத்தின் கருத்துக்களை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். போர் நிறுத்த உடன்பாட்டில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். பேச்சுக்களுக்கு அடிப்படையாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டுமென இந்தியா மூலம் கோருவது என்ற பிரபாகரனின் யோசனையை முன்னணித் தலைவர்கள் கருத்தொற்றுமையுடன் ஏற்றுக் கொண்டனர். இந்திய அரசுக்குக் கையளிக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் மகஜரைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த மகஜர் எழுதி முடிந்ததும் பிரபாகரனும் ஏனைய முன்னணித் தலைவர்களும் அதில் கைச்சாத்திட்டனர். பின்னர் அந்தக் கூட்டறிக்கை றோ புலனாய்வு அதிகாரிகள் மூலமாக புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக் கூட்டறிக்கையில் சில முக்கிய பந்திகள் வருமாறு:
“எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும் சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும் மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும் நல்லெண்ண சமரச முயற்சிகளையும் மனமார வரவேற்று, எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும் உத்தரவாதங்களையும் ஏற்றுக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போர் நிறுத்தம் செய்வதென இம் மகஜரில் கைச்சாத்திட்ட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும் இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமென எதிர்பார்க்கின்றோம். இத் தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்து பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்.
ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு போர்நிறுத்தம் செய்ய நாம் இணங்கியபோதும், போர்நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கடப்பாடுகளும் நிபந்தனைகளும் எமக்கு அனுகூலமற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும் மாற்று யோசனைகளையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத் திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ள கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக் கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து, காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள், தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்துகொண்ட உடன்பாடுகள் ஒப்பந்தங்களை நிறைவுசெய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமன்றி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைத் தட்டிக் கழித்து இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும் சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே, இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான், பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்.”11
ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை. டில்லியிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திரு. சந்திரசேகரன் எமது நிலைப்பாட்டில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாக அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன். இப் பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும் என பிரபாகரனும் ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர்.
முன்னணித் தலைவர்களின் முடிவை திரு. சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப்படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த சந்திரசேகரன், பிரபாகரனையும் ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார். ரஜீவ் அரசுக்கும் தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும் மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத் தென்பட்டது.
1985ம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் நாள், பிரபாகரனும் நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும் அவர்களது அரசியல் உதவியாளர்களும் இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம். நாம் அங்கு சென்றதும் றோ புலனாய்வு அதிகாரிகளும் இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயரதிகாரிகளும் மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப் பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப் புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள், இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறினார்கள். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக்கூடாது என்பதே இந்த விளக்கவுரைகளின் அடிநாதமான வேண்டுகோளாக அமைந்தது. இந்திய அரச அதிகாரிகளின் அறிவுரைகளும் அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி, பணிந்து இணங்கிப் போகவில்லை. எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப் பிரச்சினை இறுதியாக றோ புலனாய்வுத்துறை அதிபர் திரு. சக்சேனாவிடம் கையளிக்கப்பட்டது.
புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு. சக்சேனா. பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம். கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த கரும்பூனை அதிரடிப் படை வீரர்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டு, உயர்மாடியிலுள்ள சக்சேனாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். கடுமையான முகத்துடன் முறைப்பான பார்வையுடன் எமக்காகக் காத்திருந்தார் றோ அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும் நானும் மற்றும் ரெலோ தலைவர் சிறீ சபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில், தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டு தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார். தமிழரின் இனப் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கூறிய திரு. சக்சேனா, ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். “உங்களது விட்டுக் கொடாத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக் கொள்ளாது. உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது” என மிரட்டினார் சக்சேனா. “பூட்டான் தலைநகரமான திம்புவில், இன்னும் இரு வாரங்களில் பேச்சுக்கள் ஆரம்பமாக உள்ளன. இப் பேச்சுக்கள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும். பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால், இந்திய மண்ணிலும் இந்திய கடற்பரப்பிலும் நீங்கள் செயற்பட முடியாது போகும்.” என்று கண்டிப்பான குரலில் கத்தினார். நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் சக்சேனாவை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா. ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்துபோயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாகரன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா, “நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும்” என்றார். அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.
நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்தரையாடலை நிகழ்த்தினோம். தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். “பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு, எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி” என்றார் பிரபாகரன். அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர். நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்றுவது என்ற ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
திம்புப் பேச்சுக்கள்
பூட்டான் தலைநகரான திம்புவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் இரண்டு சுற்றுகளாக அமைந்தன. முதலாவது சுற்றுப் பேச்சு 1985 ஜுலை 8ஆம் நாள் தொடங்கி ஆறு நாட்களாக நடைபெற்று ஜுலை 13இல் முடிவுற்றது. சிறீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு அரச அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரரும் வழக்கறிஞருமான திரு. எச்.டபிள்யூ ஜெயவர்த்தனா தலைமை வகித்தார். ஏனைய பிரதிநிதிகள் சட்டத்தரணிகளாகவும் அரச நிர்வாகிகளாகவும் அமையப் பெற்றனர்.
சிறீலங்கா அரசின் பேச்சுக் குழுவில் அமைச்சர் மட்டத்திலான அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கவில்லை என்பதால், விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய அமைப்புகளும் தமது மூத்த உறுப்பினர்களை மட்டும் திம்புப் பேச்சுக்களுக்கு அனுப்பி வைத்தனர். இதன்படி முதலாவது சுற்றுப் பேச்சில் விடுதலைப் புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகரும், சிவகுமாரனும் (அன்ரன்), பின்னர் நிகழ்ந்த இரண்டாவது சுற்றுப் பேச்சில் யோகரெத்தினம் யோகியும் அவர்களுடன் கலந்து கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் சார்பில் வரதராஜப் பெருமாளும், கேதீஸ்வரன் லோகநாதனும் கலந்து கொண்டனர். ரெலோ அமைப்பின் சார்பில் முதற் சுற்றுப்பேச்சில் சார்ள்சும், பொபியும் கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றுப் பேச்சில் இவர்களுடன் நடேசன் சத்தியேந்திரா பங்குபற்றினார். ஈரோஸ் அமைப்பின் சார்பில் மூத்த நிறுவன உறுப்பினர்களான இளையதம்பி இரத்தினசபாபதியும், சங்கர் ராஜியும் பங்குபற்றினார்கள். சித்தார்த்தனும், வாசுதேவாவும் புளொட் அமைப்பைப் பிரதிநிதப்படுத்தினர். எல்லோரிலிருந்தும் மாறுபட்டதாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியை அதன் மூத்த தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் பிரதிநிதப்படுத்தினர்.
திம்பு பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், விவாதத்தை முன்னெடுத்தல், தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்களில் தமிழ் விடுதலை அமைப்புகளின் முக்கிய கூட்டணியாக ஈழத் தேசிய விடுதலை முன்னணி முக்கிய பாத்திரத்தை வகித்தது. ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் அவர்களது பிரதிநிதிகளும் தொடர்புகொண்டு கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் திம்புக்கும் சென்னைக்குமான ஒரு நேரடி தொலைத் தொடர்பு வசதியை (Hot Line) சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு விவகாரத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விட்டு, சேலத்திலுள்ள எமது இராணுவப் பயிற்சி முகாமிற்குச் சென்றுவிட்டார் பிரபாகரன். ஜெயவர்த்தனா ஆட்சிபீடத்தின் இனவாதப் போக்கை செம்மையாக எடைபோட்டிருந்த பிரபாகரனுக்கு பேச்சுமூலம் உருப்படியான பலாபலன் ஏதும் கிட்டுமென நம்பிக்கை இருக்கவில்லை. இந்திய அரசைப் பகைக்காமல், இந்தியா அரங்கேற்றும் அரசியல் நாடகத்தில் நடித்தால் போதும் என்று அவர் கருதினார். ஆயினும் என்மீது சுமத்தப்பட்ட பொறுப்பைச் சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பேச்சுக்கள் ஆரம்பமாகி முடிவுபெறும் காலம்வரை, நாள் தோறும் கோடம்பாக்கத்திலுள்ள தொலைபேசி மையத்திற்கு நான் சென்று வந்தேன். ஏனைய ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும் தினம்தோறும் அங்கு வருவார்கள். திம்புவில் நடைபெற்ற அரசியல் நாடகத்தின் சகல அம்சங்களையும் எமது பிரதிநிதிகள் மூலமாக அறிந்து அவர்களை வழிநடத்தினோம்.
பூட்டான் அரசாங்கத்தின் ஆதரவில் பேச்சுக்கள் நடைபெற்றன. பூட்டான் வெளியுறவு அமைச்சர் லியன்போ சேரிங் அதிகாரபூர்வமாகப் பேச்சுக்களை ஆரம்பித்து வைத்தார். இந்தியா மத்தியஸ்துவம் வகித்தது. திரு. சந்திரசேகரன் உட்பட இந்திய உயர் அதிகாரிகள் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். ஆனால் அவர்கள் பேச்சுக்களில் பங்குபற்றவில்லை. சமாதானப் பேச்சு ஆரம்பமாகிய சொற்ப நேரத்திற்குள் அது ஒரு சொற் போராக வடிவம் எடுத்தது. தமிழ்ப் போராளி அமைப்புகளின் சட்டரீதியான தகைமையை கேள்விக் குறிக்கு ஆளாக்கினார்கள் அரச பிரதிநிதிகள். இந்த அமைப்புகளின் உறுப்பினர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என வாதிட்டார்கள். இதனையடுத்து விவாதம் சூடு பிடித்தது. இரு தரப்பிலிருந்தும் கசப்பான, காரசாரமாக வார்த்தைகள் பரிமாறப்பட்டன. அரச தரப்பின் பண்பற்ற அநாகரீகப் போக்கினால் ஆத்திரமடைந்த தமிழ்ப் பிரதிநிதிகள் ஒரு முடிவு எடுத்தனர். அதாவது, தமிழர் தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களிலும் அறிக்கைகளிலும் ‘தமிழ் மக்களின் பிரதிநிதிகள்’ என்றே சகல தமிழ் அமைப்புகளும் கைச்சாத்திடுவதெனக் கூட்டாக தீர்மானம் எடுத்தனர். அரச பிரதிநிதிகள் வெளிப்படுத்திய பகையுணர்வு தமிழ்ப் பிரதிநிதிகள் மத்தியில் நல்லுறவையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தியது. திம்பு பேச்சுக்கள் மூலம் ஏற்பட்ட ஒரு ஆக்கபூர்வமான விளைவு என்றால் அது தமிழர் தரப்பு ஒருமைப்பாடுதான்.
சிங்கள அரச பேச்சுக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா ஒரு தீர்வுத் திட்ட யோசனையை முன்வைத்தார். சகல கட்சி மாநாட்டின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட பழைய, செயலிழந்து செத்துப் போன மாவட்ட அபிவிருத்திச் சபைத் திட்டத்தை அவர் சமர்ப்பித்தார். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகியது. சமாதானப் பேச்சு மூலம் தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வுகாணும் நோக்கம் எதுவும் ஜெயவர்த்தனா அரசுக்கு இருக்கவில்லை என்பது தெட்டத் தெளிவாகியது. தமிழ்ப் பிரதிநிதிகள் எடுத்த எடுப்பில் அரச தரப்பு யோசனையை நிராகரித்தது மட்டுமல்லாது அதுபற்றி விவாதிக்கவும் மறுத்துவிட்டனர். முந்திய உடன்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் முறித்துக் கொண்ட நம்பிக்கைத் துரோக வரலாற்றை எடுத்துக் காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இம் முறையாவது தமிழர்கள் கருத்தில் எடுக்கக்கூடிய, உருப்படியான, நியாயமான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பது சிங்கள அரசின் தட்டிக் கழிக்க முடியாத கடப்பாடு என வாதிட்டனர். தமிழரின் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படையான மூலக் கோட்பாடுகளை மட்டும் விதந்துரைப்பதாகச் சுட்டிக் காட்டிய தமிழ்ப் பிரதிநிதிகள், இக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து அரசாங்கம் ஒரு விரிவான உருப்படியான தீர்வுத் திட்டத்தை வகுத்துத் தரவேண்டும் என வாதாடினார்கள். தமிழர் தரப்பால் ஏகமனதாக முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் வருமாறு.
1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக்கட்டமைப்பைக் கொண்டவர்கள்.
2) தமிழ் மக்களுக்கு இனம் காணக்கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
3) தமிழர் தேசத்திற்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
4) சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமையும் மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
முதற் சுற்றுப் பேச்சு முடிவடைந்த நாள் அன்று (ஜுலை 13) தமிழ்ப் பிரதிநிதிகள் கூட்டாக விடுத்த திம்புப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
“இந்த மூலக் கோட்பாடுகளைப் பேணிப் பாதுகாப்பதற்காக வெவ்வேறு நாடுகள் வெவ்வேறான அரசாட்சி முறைமைகளை வடிவமைத்துள்ளன. எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால் நாம் சுதந்திரமான தமிழரசுக் கோரிக்கையை முன்வைத்து, அதற்காகப் போராடி வந்துள்ளோம். தமிழரின் பிரச்சினைக்கு தீர்வாக சிறீலங்கா அரச பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. ஆதலால் நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்… எனினும் சமாதானத்தில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதால் நாம் முன்மொழிந்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்குமானால் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்.”
1985 ஆகஸ்ட் 12ஆம் நாள் இரண்டாவது சுற்றுப் பேச்சு திம்புவில் ஆரம்பமானது. அரச பேச்சுக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா தான் ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்த அறிக்கையை வாசித்தார். குடியுரிமைக் கோரிக்கையை தவிர்ந்த முதல் மூன்று திம்புக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாதவை என நிராகரித்தார். குடியுரிமை சம்பந்தப்பட்ட கோட்பாட்டை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுக்கும் என்றார். தமிழர் தாயகக் கோட்பாட்டை நிராகரித்த அவர், தமிழ் மக்கள் சிறீலங்கா அடங்கிலும் வாழ்ந்து வருவதால் சிறீலங்காவே தமிழர், சிங்களவர் மற்றும் ஏனைய சமூகத்தவர்களதும் தாயகம் என வற்புறுத்தினார். தமிழ்த் தேசியக் கோட்பாட்டையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்றும் தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனக் குழுமம் என்றும் வாதிட்டார். அந்நிய குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள தேசங்களுக்கு மட்டுமே சுயநிர்ணய உரிமை உரித்தாகும் என விளக்கம் அளித்த அவர், ஒரு சுதந்திரமான இறையாண்மையுடைய அரச ஆட்சியின் கீழுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சுயநிர்ணய உரிமை கோரமுடியாது என வலியுறுத்தினார். தனது விளக்க உரையின் முடிவில் ஹெக்டர் ஜெயவர்த்தனா குறிப்பிட்டதாவது:
“திம்பு பிரகடனத்தின் முதல் மூன்று கோட்பாடுகளையும், அவற்றிற்கு வழங்கப்பட்ட சட்டரீதியான அர்த்தத்துடன் மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், அரசாங்கத்தால் அவற்றை முற்றாக ஏற்றுக் கொள்ளமுடியாது. சிறீலங்காவின் இறையாண்மைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் தீமை விளைவிக்கும் என்பதாலும், ஒன்றுபட்ட சிறீலங்காவுக்குப் பங்கம் ஏற்படுத்துவதுடன் இந் நாட்டில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகத்தவர்களின் நலன்களுக்கும் விரோதமாக அமையும் என்ற காரணத்தினால் இக் கோட்பாடுகள் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும்.”
அரசாங்கப் பேச்சுக் குழுவின் விட்டுக்கொடாத கடும்போக்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள் வலுவாகக் கண்டித்தனர். திம்புக் கோட்பாடுகளை ஆதரித்து, தர்க்கரீதியான வாதங்களை முன்வைத்துப் பேசிய அவர்கள், தமிழ் மக்கள் தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள் என்பதையும், அவர்களுக்கு இனம் காணக்கூடிய, வரலாற்று ரீதியான தாயகப் பிரதேசம் உண்டு என்பதையும், எல்லாவற்றிலும் முக்கியமாக, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதையும் வலியுறுத்தினார்கள். அவர்களது விளக்கவுரையிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறேன்:
“எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்று வடிவம் எடுத்ததுதான் எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத் தமிழர்கள் அல்லது தமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். அத்தோடு, அவர்கள் அடிமைப்பட்ட மக்கள் என்பதால், அந்நிய ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. இதன் அடிப்படையில்தான் சர்வதேசச் சட்டத்தின் முக்கிய நியமமாக சுயநிர்ணய உரிமை இன்று அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த சுயநிர்ணய உரிமையை ஆதாரமாகக் கொண்டுதான் எமது அரசியற் தகமையை நாமே நிர்ணயிக்கும் உரிமை எமக்குண்டு. அதாவது சிறீலங்கா அரசுடன் ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்வதா அல்லது பிரிந்து சென்று சுதந்திரமான தனியரசை நிறுவிக் கொள்வதா என்ற உரிமை எமக்குண்டு. இந்த நான்கு கோட்பாடுகளையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்ததிலிருந்து, இக் கோட்பாடுகளின் அடிப்படையில் நாம் பேச்சுக்களை நடத்த விரும்பவில்லை எனக் கருதிவிடக் கூடாது…
நாம் பிரகடனம் செய்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் எம்முடன் பேச்சுக்களை நடத்துவதற்கு சிறீலங்கா அரச பிரதிநிதிகள் தவறிவிட்டனர். பரஸ்பரம் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வோம் என சிறீலங்கா அரச பிரதிநிதிகள் ஆகஸ்ட் 12இல் விடுத்த அறிக்கையில் உறுதியளித்தபோதும் அவர்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை. அதற்குப் பதிலாக 1985 ஆகஸ்ட் 16ஆம் நாள் அரச பிரதிநிதிகள் ‘புதிய யோசனைகள்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தைச் சமர்ப்பித்தனர். மாவட்ட சபைகளுக்கு முன்பு வழங்கப்பட்ட செயற்பாட்டு உரிமைகளை மாகாண சபைகளுக்கு மாற்றிப் பழைய யோசனைகளுக்கு புதிய முலாம் பூசப்பட்டதாக இப் ‘புதிய திட்டம்’ அமைந்தது. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதை இப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் பேசும் மக்கள் தமது தாயக நிலத்திற்கு உரிமையானவர்கள் என்பதை இப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் இந்தப் ‘புதிய யோசனைகள்’ ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியாக இந்தப் ‘புதிய யோசனைகள்’ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் உத்தரவாதம் தரவில்லை… ஒட்டுமொத்தத்தில் இந்தப் ‘புதிய யோசனைகள்’ தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டன….
சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அடிப்படையாக நாம் திம்புவில் முன்வைத்த நான்கு மூலக் கோட்பாடுகளும் வெறும் அறிவியற் கருத்தாக்கம் அல்ல. அடிப்படையான மூல உரிமைகள் கோரி, தமிழ் மக்கள் நிகழ்த்திய போராட்டத்தினது யதார்த்த மெய்யுண்மையின் வெளிப்பாடாகவே அவை அமைந்தன. ஆரம்பத்தில், 1950களில் சமஷ்டி ஆட்சிமுறை கோரி நடைபெற்ற போராட்டமானது காலப் போக்கில் அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சுதந்திரத் தமிழீழ தனியரசு கோரும் போராட்டமாக வடிவம் எடுத்தது… இப் பேச்சுக்களில் நாம் பிரகடனம் செய்த மூலக் கோட்பாடுகளின் அடிப்படையில் நியாயபூர்வமான பேச்சுக்களை நடத்துவதற்கு தயாரா என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுமாறு நாம் சிறீலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.”12
இரு தரப்புப் பேச்சுக் குழுக்களும் தங்களது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்காத கடும்போக்கைக் கடைப்பிடித்ததன் காரணமாக பேச்சுக்கள் முன்னேற்றம் காணாது முடங்கிப் போயின. அத்தோடு போர்நிறுத்த மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக இரு தரப்பும் பரஸ்பரம் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கின. பேச்சுக்கள் முறிந்து விடும் கட்டத்தை எட்டியபோது இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஸ் பண்டாரி, நிலைமையை சமாளிக்கும் நோக்குடன் தலையிட்டார். இன நெருக்கடியின் வரலாறு பற்றியோ அதன் சிக்கலான பரிமாணங்கள் பற்றியோ தெளிந்த பார்வை எதுவுமற்ற திரு. பண்டாரி, பேச்சுகள் முடங்கியமைக்கு தமிழர் தரப்பின் விட்டுக்கொடா கடும்போக்கே காரணமெனக் குற்றம் சுமத்தினார். மத்தியஸ்துவ ராஜதந்திரத்தின் சாணக்கியம் எதுவுமற்ற அவர் தமிழர் தரப்பு மீதே முழுப் பழியையும் சுமத்தினார். தமிழ்ப் பிரதிநிதிகள் முன்வைத்த கோட்பாடுகளை ‘பூடகமான கருத்துருவங்கள்’ என வர்ணித்த பண்டாரி, தமிழர் தரப்பு மாற்று யோசனைகளை முன்வைக்க வேண்டும் என வற்புறுத்தினார். நியாயமற்ற, ஒருதலைப்பட்சமான பண்டாரியின் தலையீடு தமிழர் தரப்பில் கொதிப்புணர்வை ஏற்படுத்தியது. தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் ஒருவரான நடேசன் சத்தியேந்திரா சினத்துடன் பண்டாரி மீது சீறினார். மிகக் காரசாரமான வார்த்தைகளை பிரயோகித்து பண்டாரியை அவமானப்படுத்தி அடக்கி வைத்தார்.
திம்புவில் சமாதானப் பேச்சுக்கள் கொந்தளிப்பான நிலையை எட்டிக் கொண்டிருந்த வேளையில், சென்னையிலிருந்த எமக்கு, கள நிலைமை சம்பந்தமாக பாரதூரமான தகவல்கள் கிடைத்தன. தமிழர் தாயகத்தில் சிங்கள ஆயுதக் படைகள் போர்நிறுத்தத்தை மீறி, தமிழ்ப் பொதுமக்களை பெருமளவில் கொன்று குவித்திருப்பதாக அறிந்தோம். அதிர்ச்சியூட்டும் பாரதூரமான சம்பவங்கள் வவுனியாவிலும் திருகோணமலையிலும் நிகழ்ந்தன. 1985 ஆகஸ்ட் 16இல் வவுனியா நகரில் சிங்கள ஆயுதப் படைகள் நிகழ்த்திய வெறியாட்டத்தில் பெருந்தொகையில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் தமிழரின் கடைகள், சொத்துக்கள் தீ மூட்டி அழிக்கப்பட்டன. மறுநாள் ஆகஸ்ட் 17இல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்க் கிராமம் மீது இராணுவத்தினரும் ஆயுதம் தரித்த சிங்களக் காடையரும் சேர்ந்து தாக்குதலை நிகழ்த்தி, கிராமியவாசிகளைப் பெருந்தொகையில் கொன்று குவித்தனர்.
இந்தக் கொடூரமான படுகொலைச் சம்பவங்கள் பிரபாகரனைக் கொதிப்புறச் செய்தன. பிரபாகரன் எதிர்பார்த்தது போலவே சிங்கள ஆயுதப் படைகள் அப்பட்டமாகப் போர்நிறுத்தத்தை மீறி தமிழருக்கு எதிராகப் படுபாதகச் செயல்களில் ஈடுபட்டன. ஈழத் தேசிய விடுதலை முன்னணி அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. திம்பு சமாதானப் பேச்சு என்ற ஒரு போலித் திரைக்குப் பின்னால் தமிழினப் படுகொலையை ஜெயவர்த்தனா அரசு நடத்திக்கொண்டிருப்பதாக அக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார் பிரபாகரன். சிங்கள ஆயுதப் படைகளின் வெறியாட்டத்திற்கு எமது ஆழமான அதிருப்தியைத் தெரிவிக்கும் முகமாகத் திம்புப் பேச்சுக்களை உடனடியாகப் பகிஸ்கரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். விடுதலைப் புலிகளின் தலைவரது யோசனையை ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். ஈழத் தேசிய விடுதலை முன்னணி தலைமைப்பீடத்தின் முடிவை திம்புப் பேச்சுக்களில் பங்குகொள்ளும் பிரதிநிதிகளுக்கு அறிவித்து, அவர்களைப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்யுமாறு என்னிடம் பணிக்கப்பட்டது. நான் உடனடியாகவே கோடம்பாக்கத்திலுள்ள தொலைபேசி மையத்திற்கு சென்று திம்புவிலுள்ள எமது பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் தீர்மானத்தை அறிவித்தேன். எல்லாத் தமிழ் அமைப்புகளும் கூட்டாகச் சேர்ந்து பேச்சு மேசையிலிருந்து வெளிநடப்புச் செய்வதே சாலச் சிறந்ததெனவும் ஆலோசனை வழங்கினேன். திம்புவில் எமது பிரதிநிதிகளுடன் பேசி முடித்த சில நிமிடங்களுக்குள் றோ அதிகாரியான திரு. உன்னிக் கிருஷ்ணன் தொலைபேசி மையக் கட்டிடத்திற்குள் பிரவேசித்து என்மீது சீறி விழுந்தார். தமிழ்ப் பிரதிநிதிகள் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்து, திம்பு சமாதானப் பேச்சு முறிவடைந்தால் அதற்கு நான்தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அதனால் இந்திய அரசின் சீற்றத்திற்கும் ஆளாக வேண்டும் என்றும் மிரட்டினார். ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் ஏகோபித்த முடிவையே நான் திம்புவில் எமது பிரதிநிதிகளுக்கு அறிவித்தேன் என நான் விளக்கம் கொடுத்தும் அவர் அதனை ஏற்க மறுத்து, என்னைத் திட்டித் தீர்த்தார். இதிலிருந்து ஒரு உண்மை புலனாகியது. அதாவது, சென்னை கோடம்பாக்கத்திலிருந்து திம்புவில் எமது பிரதிநிதிகளுடன் பேசியவற்றை எல்லாம் றோ புலனாய்வுத் துறையினர் ஒட்டுக் கேட்டு வந்தனர் என்பது தெளிவாகியது.
நான் கொடுத்த தகவலை அடுத்து, திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட சகல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கீழ்க் கண்ட அறிக்கையை வெளியிட்ட பின்பு கூட்டாக வெளிநடப்புச் செய்தனர்:
“நாம் இங்கு பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், எமது தாயக மண்ணில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர். இது சிறீலங்கா அரசின் இனக்கொலைத் திட்டத்தினது ஒரு வெளிப்பாடு என்றே நாம் கருதுகிறோம். கடந்த சில நாட்களாக, வவுனியாவிலும் ஏனைய தமிழ்ப் பகுதிகளிலும் சிங்கள ஆயுதப் படைகளின் வெறியாட்டத்திற்கு ஏதுமறியாத சிறார்கள் உட்பட இருநூறுக்கும் அதிகமான அப்பாவிக் குடிமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் திம்புவில் நாம் சமாதானப் பேச்சுக்களை தொடர்ந்து நடத்துவது கேலிக்கூத்தானது. திம்புப் பேச்சுக்களை முறித்துக் கொள்வது எமது நோக்கமல்ல. ஆயினும் திம்புப் பேச்சுகளுக்கு ஆதாரமாக அமைந்துள்ள போர்நிறுத்த உடன்பாட்டினை மீறுவதாகச் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் இருப்பதால் இப் பேச்சுக்களில் நாம் பங்குகொள்வது முற்றிலும் பொருத்தமற்ற முடியாத காரியமாகிவிட்டது.”13
திம்பு பேச்சுக்கள் முறிவடைந்துபோனது இந்திய மத்தியஸ்துவ இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும். இந்தத் தோல்விக்குப் பல காரணங்களை சுட்டிக் காட்டலாம். மிகவும் நுட்பமாகக் கையாள வேண்டிய ஒரு சிக்கலான இராஜதந்திர முயற்சியை முன்னெடுக்கும் சாதுரியமும் சாணக்கியமும் இந்தியாவின் மத்தியஸ்துவராகச் செயற்பட்ட ரொமேஸ் பண்டாரியிடம் இருக்கவில்லை. இவரது முன்னோடியான திரு. பார்த்தசாரதியிடம் காணப்பட்ட மதிநுட்பமும் அரசியல் ஞானமும் பண்டாரியிடம் சிறிதளவேனும் இருக்கவில்லை. தமிழரது தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் சிங்கள தேசிய இனங்கள் மத்தியில் நிலவிய முரண்பாடுகளையும், மாறுபட்ட பார்வைகளையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் இருக்கவில்லை. மிகவும் சிக்கலான, கடினமான பிரச்சினைகளுக்கு உடனடியான, இலகுவான தீர்வுகாண அவர் எதிர்பார்த்தமை அவரது அவசர புத்தியை வெளிக்காட்டியது. பண்டாரியின் மனப்பாங்கு பற்றி விளக்கிய ஒரு இந்திய இராஜதந்திரி குறிப்பிட்டதாவது: “தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மத்தியில் நிலவிய அபிப்பிராய பேதங்களின் சிக்கலான பரிமாணங்கள் பற்றி அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழர்கள் தமது அபிலாசைகளையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தியதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை… இந்தப் பொறுமையீனம் காரணமாகவே, திம்புவில் தமிழ்ப் பேச்சுக் குழு தலைவர்களுடன் கசப்பான சொற்போரில் ஈடுபட்டார்.”14 துரதிர்ஷ்டவசமாக, டில்லி ஆட்சியாளர்கள் பண்டாரியின் தவறான மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டே தமது கொள்கைகளை வகுத்தார்கள். தமிழ்ப் பிரதிநிதிகள் ஆணவம் பிடித்தவர்கள் என்றும் விட்டுக்கொடாக் கடும்போக்காளர்கள் என்றும் ஒரு தவறான மதிப்பீட்டையே அவர் இந்திய அரசுக்கு வழங்கியிருந்தார்.
இந்திய மத்தியஸ்துவ இராஜதந்திரத்தின் தோல்விக்கு இரண்டாவது காரணம் ஒரு கசப்பான விவகாரமே. உலக புலனாய்வுத் துறையினரின் தந்திரோபாய அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இதுவொரு புதுமையான விவகாரம் அல்ல. போராளி அமைப்புகளின் அரசியல் உணர்வுகளுக்கு சற்றேனும் மதிப்பளிக்காத றோ புலனாய்வு அதிகாரிகளின் நெருக்குவார மிரட்டல் அணுகுமுறையும் திம்புப் பேச்சுக்களின் முறிவுக்குக் காரணமாக அமைந்தது. எஜமான்-அடிமை என்ற மனப்பான்மையுடனேயே றோ அதிகாரிகள் தமிழ் விடுதலை அமைப்புகளைக் கையாள முயன்றனர். தமிழ் அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சியும், ஆயுத உதவியும், இருப்பிடத் தஞ்சமும் வழங்கியதால் அவர்களைப் பொம்மைகளைப் போலக் கட்டுப்படுத்தி தாம் நினைத்தது போல வழி நடத்தலாம் என இந்திய புலனாய்வுத் துறையினர் கருதினர். தமிழ்ப் போராளி அமைப்புகள் தமக்கென்ற அரசியற் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டிருந்தனர் என்பதும் இந்திய அழுத்தங்களுக்கு அவர்கள் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்பதும் திம்புப் பேச்சுக்களிலிருந்து தெளிவாகியது. சிங்கள இனவாத அடக்குமுறை அரசை எதிர்த்துப் போராடுவதற்கும், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கவும் இந்தியாவின் அரசியல், இராணுவ, இராஜதந்திர ஆதரவு அவசியமென்பதை போராளி அமைப்புகள் முழுமையாக உணர்ந்திருந்தன. அதற்கு மேலாக, இந்தியாவைப் பகைத்துக் கொள்ளவோ இந்திய நலன்களுக்கு விரோதமாகச் செயற்படவோ அவர்கள் விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய அமைப்புகளையும் பொறுத்தவரை, அவை அனைத்துமே ஒடுக்கப்பட்ட தமிழீழ மக்களின் நலனையும் அரசியல் அபிலாசையையும் முதன்மைப்படுத்தி நின்றதால் அவர்கள் தமது இலட்சிய உறுதிப்பாட்டிலிருந்து தளர்ந்து கொடுக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்து கொள்வதற்கு முன்பாக ஈழத் தேசிய விடுதலை முன்னணி சந்திரகாசனின் செல்வாக்கின் கீழ் செயற்பட்டது. அவ்வேளை முன்னணியின் தலைமை மீது இந்திய அரசின் ஆதிக்கம் இருந்தது. ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரெத்தினம் இந்தியாவின் விருப்பத்திற்குரியவராக இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற அமைப்புகள் மார்க்சீய தரிசனத்தை தமது கருத்தியலாக தழுவி நின்றன. எந்தவொரு கருத்தியல் சார்புமற்று நின்றதால் ரெலோ அமைப்பு மீது இந்திய அரசு கூடுதலான ஆதரவு காட்டியது. தமிழ்த் தேசிய பற்றுறுதிமிக்க விடுதலைப் புலிகள், ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்து கொண்டதை அடுத்து, முன்னணித் தலைமையானது இந்தியாவின் ஆதிக்கத்திற்கு அடிபணியாது, சுதந்திரமாகச் சிந்தித்துச் செயற்படும் மாபெரும் அரசியல்-இராணுவ சக்தியாக வளர்ந்துள்ளது என றோ புலனாய்வுத் துறையினர் கணிப்பிட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் எம்.ஜி.ஆருக்கும் மத்தியிலான நெருங்கிய உறவு, தமிழ் நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் புலிகளுக்கிருந்த பேராதரவு ஆகியன முன்னணியின் தனித்துவத்திற்கு வலுச் சேர்த்தன. இந்தியாவின் ஆதரவிலும் அனுதாபத்திலும் பெருமளவு தங்கியிருந்த போதும், தமிழ் அமைப்புகள், தம்மை விடுதலைப் போராளிகளாகக் கருதிப் பெருமைப்பட்டார்களே தவிர, இந்தியாவின் சதுரங்க ஆட்டத்திற்கு அசைந்து கொடுக்கும் பகடைக் காய்களாகச் செயற்பட விரும்பவில்லை.
சிறீலங்கா அரசின் பேச்சுக் குழுத் தலைவராகப் பணிபுரிந்த ஹெக்டர் ஜெயவர்த்தனாவின் நெகிழ்வற்ற, கடும்போக்கும் பேச்சுக்களின் முறிவுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு மதிப்பளித்து, தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு சமரச வழியில் ஒரு நியாயபூர்வமான தீர்வை வழங்கும் நேர்மையான நோக்கம் எதுவுமற்ற ஒரு இனவாத அரசையே ஹெக்டர் பிரதிபலித்தார். அரசியலமைப்புச் சட்டநிபுணர் என்ற ரீதியில், அவர் சிறீலங்காவின் அரசியல் யாப்பு எல்லைக்குள் நின்றே விவாதங்களை நடத்தினார். இலங்கையின் ஒற்றையாட்சி முறைமையை வலியுறுத்திய அவர், வறண்ட இறுக்கமான கடும்போக்கைக் கடைப்பிடித்தாரே தவிர, தமிழரின் நியாயமான கோரிக்கைகள் மீது எவ்வித அனுதாபமும் காட்டவில்லை. புதிதாகப் புதுமையாகச் சிந்தித்து பிரச்சினைகளை அணுகும் ஆற்றல் அவரிடம் இருக்கவில்லை. அவரது அணுகுமுறை பற்றி திரு.டிக்சிட் குறிப்பிடுகையில், “எச்.டபிள்யூ.ஜெயவர்த்தனாவின் பேச்சுக்கான அணுகுமுறையானது உயிரோட்டமற்றது. இயந்திரமாகச் சட்ட நியமங்களுக்குள் மட்டும் இயங்கியது. தமிழரின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் போதெல்லாம் அவை சிறீலங்காவின் யாப்பையும் ஒற்றையாட்சி முறைமையையும் மீறுவதாக அமைந்திருப்பதாகத் தொடர்ச்சியாக அவர் வலியுறுத்தினார். இதனால் திம்புப் பேச்சுகள் செவிடர்களின் கருத்தாடலாக மாறியது.”15 என்றார்.
தமிழ் அமைப்புகளின் வெளிநடப்பை அடுத்து திம்புப் பேச்சுகள் முறிவடைந்து போனதினால் இந்திய அரசு சினம்கொண்டது. ஏதோ ஒரு வடிவில் இந்திய அரசு தண்டிக்கும் நடவடிக்கை எடுக்குமென நாம் சரியாகவே எடைபோட்டோம். சென்னைக்கும் திம்புவுக்கும் மத்தியில் எமது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட றோ அதிகாரிகள், எனது அறிவுறுத்தலின் பேரிலேயே தமிழ்ப் பிரதிநிதிகள் பேச்சு மேசையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்கள் எனக் கருதி, திம்புப் பேச்சுக்களின் தோல்விக்கு நானே சூத்திரதாரி எனத் தவறாக எடைபோட்டிருந்தனர். இது குறித்து இந்திய அரசு என்மீது அதிருப்தி அடைந்திருப்பதாக றோ அதிகாரியான உன்னிக்கிருஷ்ணன் எனக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். எதிர்பார்த்தது போல, இந்திய அரசின் தண்டனை நாடு கடத்தல் உத்தரவாக என்மீது பிறப்பிக்கப்பட்டது.
1985 ஆகஸ்ட் 23ஆம் நாள், சென்னை பெசன்ட் நகரிலிருந்த எனது இல்லத்தைச் சுற்றிவளைத்த தமிழ்நாடு காவல்துறையினர் என்னைக் கைதுசெய்து, ஒரு இரகசிய இடத்தில் தடுத்து வைத்தனர். மறுநாள், ‘ஏயர் இந்தியா’ விமானம் மூலம் நான் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.16 நான் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவத்தின் முழு விபரங்களும் திருமதி. அடேல் பாலசிங்கத்தின் ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலில் விபரமாகத் தரப்படுகிறது. நடேசன் சத்தியேந்திராவுக்கும் சந்திரகாசனுக்கும் நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடுகடத்தல் உத்தரவு கிடைப்பதற்கு முன்னராகவே சத்தியேந்திரா லண்டன் பயணமாகிவிட்டார். சத்தியேந்திரா மீது நாடுகடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை ரொமேஸ் பண்டாரியின் திருவிளையாடல் என்பது பின்பு தெரியவந்தது. சந்திரகாசனுக்கும் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கும் தொடர்புண்டு என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் நாடு கடத்தப்பட்டாரென பின்பு ஒரு தடவை றோ உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். இந்திய அரசின் இந்த நாடு கடத்தல் நடவடிக்கை தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு ஒரு உண்மையைப் புலப்படுத்தியது. அதாவது, இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டால், இந்திய நல்லாதரவு தொடர்ந்து இருக்கப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
தமிழர் தரப்புக்கு எதிராக இந்திய அரசின் ஒருதலைப்பட்சமான ஒழுங்கு நடவடிக்கையை இந்திய ஊடகங்கள் வன்மையாகக் கண்டித்தன. ‘அவசரப்பட்டு எடுக்கப்பட்ட முட்டாள்தனமான நடவடிக்கை’ என ஒரு இந்திய ஆங்கில நாளிதழ் கண்டித்தது. தமிழ்ப் பிரதிநிதிகள் நாடு கடத்தப்பட்டமைக்கு எதிராக தமிழ்நாடு அரசியற் தலைவர்களும் ஆவேசமாகக் குரலெழுப்பினர். ‘இந்திய அரசு தமிழர்களின் உணர்வை மதிக்கத் தவறிவிட்டது’ எனக் கண்டித்து தமிழகத் தலைவர்கள் பிரமாண்டமான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நிகழ்த்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். என்மீது பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவு மீளப் பெறப்பட்டு, நான் மீண்டும் இந்தியாவுக்கு அழைக்கப்பட வேண்டுமென்றும், நான் திரும்பும்வரை சமாதானப் பேச்சுக்களில் பங்குகொள்ளப் போவதில்லை என்றும் பிரபாகரனும் ஏனைய ஈழத் தேசிய முன்னணித் தலைவர்களும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தனர். இப்படியான நிலைமைகளை எதிர்கொண்ட ரஜீவ் அரசாங்கம் என்மீது பிறப்பிக்கப்பட்ட நாடுகடத்தல் உத்தரவை மீளப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்குப் பின்னர் நான் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினேன்.
பங்களூர் பேச்சுக்கள்
தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் மத்தியஸ்துவ முயற்சியில் தோல்வி கண்டதால் விரக்தியடைந்த இராஜதந்திரியாக 1986 மார்ச்சில் ரொமேஸ் பண்டாரி ஓய்வு பெற்றார். அவரது பொறுப்பில் இந்திய வெளியுறவுச் செயலராக திரு. ஏ.பி.வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டார். திரு. வெங்கடேஸ்வரன் ரஜீவ் காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரல்ல. அத்தோடு இருவருக்கும் மத்தியில் ஒத்திசைவான நல்லுறவும் நிலவவில்லை. ஏற்கனவே தோல்வியைச் சந்தித்தபோதும் இந்தியாவின் மத்தியஸ்துவ முயற்சியை கைவிடுவதற்கு ரஜீவ் காந்தி தயாராக இல்லை. ஜெயவர்த்தனாவுடன் தொடர்ந்து சமரச முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான திரு. பி.சிதம்பரம், திரு. நட்வார் சிங் ஆகிய இரு அமைச்சர்களை இந்திய அரசின் விசேட பிரதிநிதிகளாக ரஜீவ் காந்தி நியமித்தார்.
1986 நவம்பர் நடுப் பகுதியில் தென்னாசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டுறவு (சார்க்) மாநாடு பங்களூரில் நடைபெறவிருந்தது. இம் மாநாட்டின்போது இந்திய இலங்கை அரச தலைவர்களது சந்திப்பு இடம்பெறவிருந்தது. இது ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்பதால், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டு அதனை ஒரு மகத்தான இராஜதந்திர சாதனையாக இம் மாநாட்டில் அறிவித்து புகழீட்ட விரும்பினார் ரஜீவ் காந்தி. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு தீர்வுத் திட்டத்தை வகுக்குமாறு, உள்நாட்டுப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு. சிதம்பரத்திடமும், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திரு. நட்வார் சிங்கிடமும் பிரதமர் ரஜீவ் கேட்டுக் கொண்டார்.
1986 ஏப்ரல் கடைசியில் திரு. சிதம்பரமும் திரு. நட்வார் சிங்கும் கொழும்புக்கு வருகை தந்து, தலைநகரில் நான்கு நாட்கள் தங்கி நின்றனர். அக் காலகட்டத்தில் அதிபர் ஜெயவர்த்தனாவையும், அவரது மூத்த அமைச்சர்களான லலித் அத்துலத்முதலி (தேசிய பாதுகாப்பு அமைச்சர்), காமினி திசநாயக்கா (மகாவலி அபிவிருத்தி அமைச்சர்), ஏ.சி.எஸ்.ஹமீது (வெளியுறவு அமைச்சர்) ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினர். சிங்கள அரசியற் தலைவர்களுடன் நிகழ்த்திய நீண்ட கருத்துப் பரிமாற்றத்தின் விளைவாக இந்திய மத்தியஸ்தர்களுக்கு ஒரு உண்மை புலனாகத் தொடங்கியது. தமிழர்களின் அடிப்படை அபிலாசைகள் சம்பந்தப்பட்ட மட்டில், குறிப்பாகத் தமிழ்த் தாயகக் கோரிக்கை குறித்து சிங்களத் தலைமை இறுக்கமான கடும் போக்கை கடைப்பிடித்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள முடிந்தது. வடகிழக்கு மாகாணங்களை ஒரு தனித்துவமான தொடர் பிரதேசமாக மாற்றுவதற்கும் கடும் எதிர்ப்பு இருந்ததையும் அவர்கள் கண்டு கொண்டார்கள்.
1986 ஜுன் மாதக் கடைசியில், இந்திய அமைச்சர்களின் விஜயத்தை அடுத்து, இனப் பிரச்சினை பற்றி விவாதிக்கும் நோக்குடன் அரசியற் கட்சிகளின் மாநாடு ஒன்றைக் கூட்டினார் ஜெயவர்த்தனா. தமிழர் தரப்பில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி இம் மாநாட்டில் கலந்து கொண்டது. பிரதான எதிர்க் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி இம் மாநாட்டை பகிஸ்கரித்தது. இம் மாநாடு நான்கு மாதங்களாக நடைபெற்றுத் தமிழ் மாகாணங்களுக்கு மிகக் குறைந்த அளவில் அதிகாரப் பரவலாக்கம் வழங்கும் ஒரு தீர்வுத் திட்டத்தை வகுத்ததுடன் முடிவுற்றது. வருமான அதிகாரங்கள் மறுக்கப்பட்ட, நிலவுரிமையற்ற, சட்ட ஒழுங்கு நிர்வாக அதிகாரம் இல்லாத வெறும் கண்துடைப்பான தீர்வுத் திட்டமாக அது அமைந்தது. தமிழ் மக்களின் மையமான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களுக்கு மொழிவாரியான ஒரு தனித்துவமான மாநிலம் உருவாக்கப்பட்டு, தமிழர் தாயகக் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென்ற அடிப்படைக் கோரிக்கையை மாநாட்டில் பங்குகொண்ட சகல சிங்கள அரசியற் கட்சிகளும் நிராகரித்தன. அனைத்துக் கட்சிகள் மாநாடு போன்றே அரசியற் கட்சிகள் மாநாடும் தோல்வியில் முடிந்தது.
போரும் சமாதானமும் என்ற இருமுனைத் தந்திரோபாய அணுகுமுறையைக் கடைப்பிடித்தார் ஜெயவர்த்தனா. தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண நேர்மையான முறையில் தான் முயற்சிப்பதாக இந்தியாவுக்கும் உலகிற்கும் ஏமாற்று வித்தை காட்டுவதற்காக, மாறி மாறி அரசியற் கட்சிகளின் மாநாடுகளைக் கூட்டி இனப் பிரச்சினையை இழுத்தடித்து வந்தார். அதே சமயம், பாகிஸ்தானுடனும் இஸ்ரேலுடனும் ஒப்பந்தங்கள் செய்து, பெரும்தொகையான ஆயுத உதவிகளைப் பெற்று, சிங்கள இராணுவ இயந்திரத்தை வலுப்படுத்தி வந்தார். அத்துடன் இந்தியாவுக்கு மத்தியஸ்துவ பாத்திரத்தை வழங்கி, தமிழ் விடுதலை அமைப்புகளுக்கு இந்திய அரசு வழங்கி வந்த அரசியல் ஆதரவையும் இராணுவ உதவிகளையும் நிறுத்துவதில் வெற்றியும் கண்டார். சமாதானப் பேச்சுக்களில் தமிழ் அமைப்புகள் விட்டுக்கொடாத கடும்போக்கைக் கடைப்பிடிப்பதாக புது டில்லியை நம்பவைத்து, ரஜீவ் ஆட்சிப்பீடத்திற்கும் தமிழர்களுக்கும் மத்தியில் ஒரு பெரும் பிளவையும் ஏற்படுத்தினார். பேச்சுக்களை சூத்திரக் கருவியாகப் பாவித்து, இந்திய அரசுக்கும் தமிழர்களுக்கும் மத்தியில், ஒருபுறம் முரண்பாட்டையும் பகைமையையும் வளர்த்துக் கொண்டு மறுபுறம், தமிழரின் சுதந்திர இயக்கத்தை இராணுவ பலம் மூலம் நசுக்கிவிடும் நோக்கத்துடன் சிங்கள ஆயுதப் படைகளை நவீனமயப்படுத்தி விரிவாக்கம் செய்தார். ஜெயவர்த்தனாவின் நயவஞ்சக அரசியலைப் புரிந்து கொள்ளத் தவறிய ரஜீவ் காந்தி, அந்தக் கிழட்டு நரியின் சூத்திரதாரப் பொறிக்குள் சிக்கிக் கொண்டார்.
1986 நவம்பர் மாதம் 17, 18ஆம் நாட்களில் பங்களூரில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இந்த மாநாட்டில் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு ஜெயவர்த்தனா நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்படி, கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் திட்டம் ஒன்றை அவர் தயாரித்தார். வடகிழக்கைத் தனி மாநிலமாகக் கொண்ட தமிழர் தாயகக் கோரிக்கைக்கு சாவுமணி அடிக்கும் நோக்குடன், இனத்துவ, மத வேறுபாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் இந்த நாசகாரத் திட்டத்தை ஜெயவர்த்தனாவின் ஆட்சிப்பீடம் மிகவும் சூழ்ச்சித் திறனுடன் தயாரித்திருந்தது. இத் திட்டத்தின்படி, தமிழர்கள், சிங்களவர், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவர்களுக்குமாக, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைகள் மூன்று பிரதேசக் கூறுகளாக மாற்றியமைக்கப்படவிருந்தன. இத் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் கிழக்கிலிருந்து துண்டாடப்பட்டு ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படும். திருகோணமலை நகரமும், துறைமுகமும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிங்கள மாநிலமாக மாற்றப்படும். இச் சிங்கள மாநிலம் சிங்கள அரச நிர்வாகத்தின் கீழ்ச் செயற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இணைந்ததாக முஸ்லிம் பிரதேசம் உருவாக்கப்படும். திருகோணமலையில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் (திருகோணமலை நகரம், துறைமுகம், சிங்களக் குடியிருப்புகள் தவிர்ந்த பகுதிகள்) மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளும் இணைந்ததாக தமிழர் மாகாணம் உருவாக்கப்படும். மிக நுட்பமாகத் தயாரிக்கப்பட்ட இந்த எல்லைவரையறைத் திட்டம் சிங்களவர்களுக்கே சாதகமாக அமையப் பெற்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலைத் துறைமுகமும், நகரமும் அடங்கியதாகக் கிழக்கில் பெரியளவு பிரதேசங்களைக் கொண்ட நிலப்பரப்பை சிங்களவருக்கு தாரைவார்த்துக் கொடுக்க இத் திட்டம் வழிசெய்தது. கிழக்கில் தமிழருக்காக ஒதுக்கப்பட்ட குறுகிய நிலப்பரப்பை வடக்கு மாநிலத்துடன் இணைத்து, தமிழரின் தாயகக் கோரிக்கையை நிறைவு செய்யலாம் எனவும் ஜெயவர்த்தனா சிந்தித்தார். மூன்று கூறுகளைக் கொண்ட தனது எல்லை வரையறைத் திட்டத்தின் விபரங்களை இந்தியத் தூதுவர் டிக்சிட்டுக்கு விளக்கிய ஜெயவர்த்தனா, கிழக்கு மாகாணத்தில் வதியும் முஸ்லிம்கள், சிங்களவரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்திய அமைச்சர்களான சிதம்பரமும் நட்வார் சிங்கும் ஆலோசனை கூறியதன் அடிப்படையிலேயே இப் ‘புதிய யோசனைகள்’ வகுக்கப்பட்டதாகக் கூறினார். பங்களூரில் நடைபெறப் போகும் ‘சார்க்’ உச்சி மாநாட்டின்போது இப் ‘புதிய திட்டத்தை’ இந்தியப் பிரதமர் ரஜீவிடம் கையளிக்கப் போவதாகவும் அவர் கூறினார். டிக்சிட்டுக்கு இத் திட்டம் திருப்தியை அளிக்கவில்லை. இது பற்றி தனது கருத்தை ஜெயவர்த்தனாவிடம் தெரிவிக்கையில்: “வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து, அதனை ஒன்றுபட்ட தமிழ்த் தாயகமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தமிழரின் கோரிக்கையை தட்டிக் கழித்து ஓரம்கட்டும் நோக்கத்துடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டதாகவே தமிழ் மக்களும் இந்திய அரசும் கருதக்கூடுமென நான் அவரிடம் வெளிப்படையாகவே கூறினேன். திட்டமிடப்பட்ட ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே இந்த யோசனையை தமிழர் தரப்பு எண்ணலாம் என்றும் நான் அச்சம் தெரிவித்தேன்.”17 எனக் குறிப்பிட்டார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழ்த் தாயகக் கோரிக்கையை ஜெயவர்த்தனாவும் அவரது மூத்த அமைச்சர்களும் வன்மையாக எதிர்த்தனர். கிழக்கு மாகாணத்தைக் கூறுபோட்டு, தமிழ் மாநிலத்தின் பிரதேசத் தொடர்ச்சியையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து, சிங்களக் குடியேற்றங்களால் தமிழரின் தாயக நிலத்தை கபளீகரம் செய்வதே சிங்கள அரசின் நோக்கமாகும். எனவே, கிழக்கு மாகாணத்தை மூன்று பிரதேசங்களாகக் கூறுபோடும் எல்லைவரையறுப்புத் திட்டத்தை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என திரு. டிக்சிட் சரியாக எடைபோட்டார். ஆயினும் ஜெயவர்த்தனா தனது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. தமிழரின் தாயகக் கோரிக்கைக்கு ஏற்ப தனது யோசனைத் திட்டத்தை மாற்றியமைக்கவும் அவர் மறுத்துவிட்டார். ஒரு இடைக்காலத் தீர்வாக இந்த எல்லைவரையறுப்புத் திட்டத்தை இந்தியாவிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்தார். ரஜீவ் ஆட்சிபீடம் ஜெயவர்த்தனாவின் இத் திட்டத்தை ஏற்றுக் கொண்டதோடு, அதனை அடிப்படையாக வைத்து பங்களூரில் 1986 நவம்பரில் பேச்சுக்களை நடத்தும்படி விடுதலைப் புலிகளை நிர்ப்பந்திக்கவும் தீர்மானித்தது.
திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்து நான் இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டதிலிருந்து பங்களூர் சார்க் உச்சி மாநாடு வரையிலான கால இடைவெளியில் தமிழரின் தேசியப் போராட்ட அரங்கில் பாரதூரமான நிகழ்வுகள் நடந்தேறின. எல்லாவற்றிற்கும் முக்கியமாக, தமிழ் விடுதலை அமைப்புகளின் ஒன்றுபட்ட கூட்டணியாகச் செயற்பட்ட ஈழத் தேசிய விடுதலை முன்னணி பிளவுபட்டுச் சீர்குலைந்தது. முன்னணியில் அங்கத்துவம் வகித்த முக்கிய இரு அமைப்புகளான விடுதலைப் புலிகளுக்கும், ரெலோ இயக்கத்திற்கும் மத்தியில் 1986 ஏப்ரல்-மே காலப் பகுதியில் ஆயுத மோதல் வெடித்தது. ரெலோ தலைவர் சிறீ சபாரெத்தினமும், பெருந்தொகையான அவரது போராளிகளும் இச் சண்டையில் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் பகை மூண்டது. தமிழீழத்தில் இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ் போராளிகள் விடுதலைப் புலிகளால் நிராயுதபாணிகளாக ஆக்கப்பட்டனர். விடுதலைப் புலிகளின் அழுத்தத்திற்குப் பணிந்த புளொட் அமைப்பு, தமிழர் தாயகத்தில் தனது இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. ஈரோஸ் அமைப்பின் தலைவர் திரு. பாலகுமார் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் நட்புறவைப் பேணி நல்லுறவை வளர்த்ததால் இரு அமைப்புகளுக்கும் மத்தியில் தொடர்ந்து நல்லெண்ணம் நிலவியது. ரெலோ, ஈ.பீ.ஆர்.எல்.எவ் அமைப்புகளுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி அவற்றை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் தளபதி கிட்டுவாகும். மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்டத்திற்கே அவப் பெயரை ஏற்படுத்திய ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்கி, யாழ்ப்பாண சமூகத்தில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிறுவிய பெருமை தளபதி கிட்டுவையே சாரும். ஒரு புறம் மாற்று அமைப்புகளின் அட்டகாசத்தை அடக்கியதுடன், தொடர்ச்சியாக சிங்கள ஆயுதப் படைகள் மீது துணிகரத் தாக்குதல்களை நடத்தி, படையினரை முகாம்களுக்குள் முடங்க வைத்து யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மகத்தான வரலாற்று சாதனையைப் படைத்ததும் தளபதி கிட்டுவாகும். இத்தகைய திருப்பங்கள் காரணமாக 1986 நவம்பரில் சார்க் உச்சி மாநாடு கூடுவதற்கு முந்திய கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே ஈழத் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்தை நிர்ணயிக்கும் மிகப் பலம்பொருந்திய அரசியல் சக்தியாக விளங்கிற்று.
ஈழத் தேசிய விடுதலை முன்னணியைப் பிளவுபடுத்தி, அம் முன்னணியில் அங்கம் வகித்த விடுதலை அமைப்புகளை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்த றோ புலனாய்வுத் துறையினர் தீட்டிய சதித் திட்டம் படுதோல்வியில் முடிந்தது. முன்பைவிடப் பல மடங்கு பலம்பெற்ற சக்தியாக புலிகள் இயக்கம் பூதாகர வளர்ச்சிபெற்றமை ரஜீவ் அரசுக்கு ஏமாற்றத்தையும் கடுப்பையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி, இலங்கையின் இனப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் தலைமையை அனுசரித்துப் போகவேண்டிய கட்டாயமும் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு வித்தியாசமான ஆளுமையுடைய மனிதர். கொள்கையில் உருக்கை ஒத்த உறுதி உடையவர். நெருக்குவாரத்திற்கு நெகிழ்ந்து கொடுக்கமாட்டார். அதிகாரக் கெடுபிடிகளுக்கு அடிபணியமாட்டார். இப்படியான போக்குடைய ஒரு தலைவனை எப்படியாவது தனது வழிக்கு கொண்டுவரவேண்டும் என இந்திய அரசு கருதியது. 1986 நவம்பர் நடுப்பகுதியில் நிகழவிருக்கும் பங்களூர் பேச்சுகளுக்கு முன்னராகப் பிரபாகரனைப் படிமானப்படுத்த இந்திய அதிகாரப்பீடம் எண்ணியது. அதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் அது எதிர்பார்த்துக் காத்திருந்தது. அந்த சந்தர்ப்ப சூழ்நிலை 1986 நவம்பர் தொடக்கத்தில் உருவாகியது.
1986 நவம்பர் 1ஆம் நாள். அன்று தீபாவளி பண்டிகை. சென்னை நகரத்தின் மையத்திலுள்ள சூளைமேடு என்னுமிடத்தில் ஒரு கோரமான இரத்தவெறிச் சம்பவம் நிகழ்கிறது. இத் துன்பியல் நாடகத்தின் கதாநாயகன் டக்ளஸ் தேவானந்தா. இன்று ஈ.பி.டி.பியின் தலைவராகவும் இந்து மத அமைச்சருமாகவும் பதவி வகிக்கும் தேவானந்தா அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவ பிரிவில் பணிபுரிந்தார். திபாவளி தினமாகிய அன்று நண்பகல் சூளைமேட்டிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைமைச் செயலகத்திற்கு முன்பாக ஒரு ஓட்டோவில் வந்திறங்கிய தேவானந்தாவுக்கும் ஓட்டோ சாரதிக்கும் மத்தியில் சிறு தகராறு. ஓட்டோ கூலிக்கு பேரம் பேசியதில் ஏற்பட்ட வாக்குவாதம் கோபாவேசம் மிக்க சொற் சண்டையாக வெடித்தது. உணர்ச்சி வசப்பட்ட தேவானந்தா தனது செயலகத்தினுள் பாய்தோடிச் சென்று ஒரு தானியங்கித் துப்பாக்கியுடன் திரும்பி வந்தார். துப்பாக்கியை கண்டதுமே பயந்து நடுங்கிய ஓட்டோ சாரதி ஓட்டோவை விட்டு ஓட்டம் பிடித்தான். அவன் ஓடிய திசையை நோக்கி, தேவானந்தா துப்பாக்கியால் சிலாவிச் சுட, துப்பாக்கிச் சன்னங்கள் வீதியில் நடமாடிய அப்பாவிப் பொதுமக்களைப் பதம் பார்த்தன. பத்துப் பேர்வரை படுகாயத்துடன் வீதியில் சாய்ந்தனர். ஒரு இளம் வழக்கறிஞர் தலத்திலேயே கொல்லப்பட்டார். சூளைமேடு அல்லோல கல்லோலப்பட்டது. தமிழ்நாடு எங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தமிழ் நாட்டில் இயங்கும் ஈழ விடுதலை அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஊடகங்கள் வற்புறுத்தின. கர்நாடகத்தின் தலைநகரான பங்களூரில் விரைவில் சார்க் உச்சி மாநாடு நடைபெறவிருப்பதால் தமிழ் அமைப்புகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துமாறு பிரதமர் ரஜீவ் காந்தி தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரனைக் கேட்டுக் கொண்டார். இந்தப் பொறுப்பை தமிழக முதல்வர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் திரு. மோகனதாஸிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, தமிழீழ விடுதலை அமைப்புகளை நிராயுதபாணிகளாக்கும் ‘புலி நடவடிக்கையை’ (Operation Tiger) திரு.மோகனதாஸ் முடுக்கி விட்டார். 1986 நவம்பர் 8ஆம் நாள் அதிகாலை தமிழ்நாடு காவல்துறையின் அதிரடிப் படையினர் விடுதலைப் புலிகளதும் ஏனைய தமிழ் அமைப்புகளதும் இரகசியத் தங்குமிடங்கள், வீடுகள், முகாம்கள், பயிற்சிப் பாசறைகள் ஆகியவற்றைச் சூறையாடி ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியதுடன், அமைப்புகளின் தலைவர்களையும் கைதுசெய்தனர்.
பிரபாகரனும் நானும் அன்றைய நாள் அதிகாலை எமது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வெவ்வேறு காவல்நிலையங்களுக்கு கொண்டு சொல்லப்பட்டோம். அங்கு பல மணிநேரம் தடுத்துவைக்கப்பட்டு குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தப்பட்டோம். எங்கள் இருவரையும் பல கோணத்தில் நிறுத்தி படம் எடுத்தார்கள். கைரேகையைப் பதிவு செய்தார்கள். பண்பற்ற வார்த்தைகளால் அவமானப்படுத்தினார்கள். இவை எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்ட இம்சைபோலத் தோன்றியது. இழிவுபடுத்தி, சிறுமைப்படுத்தி பணியவைக்கலாம் என்ற கபட நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந் நடவடிக்கையானது பிரபாகரனைப் பொறுத்தவரை எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியது. பிரபாகரன் கொதிப்படைந்தார். ஒரு குற்றவாளிபோல இழிவுபடுத்தப்பட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. தனது சுய-கௌரவத்திற்கு மட்டுமன்றி தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாகவும் அந் நிகழ்வை அவர் கருதினார். எந்த வகையிலும் இந்திய அழுத்தத்திற்கு நெகிழ்ந்து கொடுப்பதில்லை என உறுதிபூண்டார். இந்தப் ‘புலி நடவடிக்கை’யானது, சூளைமேட்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையாக நாம் கருதவில்லை. ஏனென்றால் சூளைமேட்டுச் சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமையை மிரட்டிப் பணியவைத்து இந்திய சமரச முயற்சிக்கு விட்டுக்கொடுத்து இணங்க வைக்கும் தந்திரோபாயத்துடன் மத்திய, மாநில அரசுகளால் கூட்டாகத் திட்டமிடப்பட்ட சதியின் அடிப்படையிலேயே இப் ‘புலி நடவடிக்கை’ எடுக்கப்பட்டது என்பது எமக்கு நன்கு புலனாகியது. ஒன்பது நாட்கள் எமது வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்பு, பிரபாகரனும் நானும் பேச்சுக்களுக்காகப் பங்களூர் அழைத்துச் செல்லப்பட்டபோதே இந்தியாவின் சூத்திரதார நோக்கு எமக்குப் புலப்பட்டது.
1986 நவம்பர் 17ஆம் நாள். சென்னை நகரப் புறத்திலுள்ள தாம்பரம் விமானத் தளத்திலிருந்து இந்திய வான்படை விமானம் மூலம் பிரபாகரனும் நானும் பங்களூர் கொண்டு செல்லப்பட்டோம். அங்கு ராஜ்பவன் விடுதியில் எம்மைத் தங்க வைத்தார்கள். அந்த விடுதிக்குச் சென்றடைய இரவு 10 மணி ஆகிவிட்டது. ஒருபுறம் பசி வயிற்றைப் பிடுங்க, களைத்துச் சோர்ந்து போய் விடுதிக்கு சென்ற எம்முடன் இரவிரவாகப் பேச்சுக்களை நடத்தும் நோக்குடன் இந்திய அரச பிரதிநிதிகள் குழு ஒன்று அங்கு காத்து நின்றது. இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் திரு. நட்வார் சிங், இந்திய வெளியுறவுச் செயலர் திரு. வெங்கடேஸ்வரன், வெளியுறவு அமைச்சின் இணைச் செயலர் குல்திப் சதேவ், இலங்கைக்கான இந்திய தூதுவர் திரு. டிக்சிட் ஆகியோர் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிக்கும் ஜெயவர்த்தனாவின் எல்லை வரையறைத் திட்டத்தை உடனடியாகவே இந்தியப் பிரதிநிதிகள் எமக்கு எடுத்து விளக்கினார்கள். இந்தியப் பிரதம மந்திரியும் சிறீலங்கா ஜனாதிபதியும் ஏற்கனவே பங்களூருக்கு வருகை தந்து, வின்சர் மனோர் விடுதியில் தங்கி நிற்பதாகவும் எமக்குத் தகவல் தெரிவித்த இந்தியப் பிரதிநிதிகள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்காலத் தீர்வாக இந்த எல்லை வரையறுப்பு யோசனையை நாம் ஏற்றுக் கொண்டால் ஜெயவர்த்தனா எம்மிடம் பேசுவதற்குத் தயாராக இருப்பதாகவும் எமக்குத் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் விபரமான வரைபடம் ஒன்றை எமக்கு முன்பாக விரித்து, கிழக்கு மாகாணத்தை முக்கூறுபோடும் ஜெயவர்த்தனாவின் ‘புதிய திட்டம்’ பற்றி எமக்கு விபரமாக விளக்கிக் கொண்டிருந்தார் திரு. டிக்சிட். இத் திட்டமானது வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை இறுதியாக ஒன்றிணைக்க வழிவகுக்கும் என்று கூறிய அவர் இதுவொரு தற்காலிக ஒழுங்கு என்றும் இத் திட்டம் பற்றித் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி முன்னேற்றம் காணலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். நள்ளிரவு பூராகவும் ஜெயவர்த்தனாவின் திட்டத்தை அக்குவேறு ஆணிவேறாக விளங்கப்படுத்தி, எமது பொறுமையைக் கொலை செய்துவிட்டு, களைத்துப் போய்க் கடுப்புடனிருந்த பிரபாகரனைப் பார்த்து அத் திட்டம் பற்றி அவரது கருத்தைக் கேட்டார் டிக்சிட். நான் எதிர்பார்த்தது போலவே வெடுக்கென்று, சுருக்கமாகப் பதிலளித்தார் பிரபாகரன். அவரது தொனியில் ஆத்திரம் தெறித்தது. “தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான். அதனைப் பிரிக்க முடியாது. ஜெயவர்த்தனா அதைப் பிரித்துக் கூறுபோட நாம் அனுமதிக்கப் போவதில்லை.” என்று உறுதிபடச் சொன்னார். பிரபாகரனின் அந்த வசனத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறியபொழுது டிக்சிட்டின் முகம் சுருங்கியது. ஜெயவர்த்தனாவின் திட்டத்திலுள்ள குறைபாடுகளையும் ஆபத்துகளையும் நான் டிக்சிட்டுக்கு விளக்கிக் கூறினேன். விடுதலைப் புலிகளின் தலைமையோ அன்றித் தமிழீழ மக்களோ இத் திட்டத்தை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதைத் தெட்டத் தெளிவாக அவரிடம் எடுத்துரைத்தேன். தனது நிலைப்பாட்டிலிருந்து பிரபாகரன் சிறிதளவும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்பதை நன்குணர்ந்த இந்திய தூதுவர் தனது முயற்சியைக் கைவிட்டு, வெளியுறவுச் செயலர் வெங்கடேஸ்வரனை எம்முடன் பேசுமாறு அழைத்தார்.
நாம் மிகவும் சோர்ந்துபோய் சினத்துடன் இருப்பதை அவதானித்த வெங்கடேஸ்வரன் எம்முடன் மிகவும் அன்பாகப் பண்பாகத் தமிழில் பேசினார். ஜெயவர்த்தனாவின் திட்டம் தொடர்பாக நாம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை திரு. டிக்சிட் தமக்கு எடுத்துக் கூறியதாகச் சொன்னார். அந்தத் திட்டத்தை திரும்பவும் விபரித்து விளக்க அவர் முனையவில்லை. தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைபற்றி ரஜீவ் காந்தி ஆழமான கவலை கொண்டிருப்பதாகத் தனது உரையாடலை ஆரம்பித்த வெங்கடேஸ்வரன், இனப் பிரச்சினைக்கு நியாயமான ஒரு தீர்வைக் காண்பதில் இந்தியப் பிரதமர் நேர்மையாக அக்கறை கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஜெயவர்த்தனாவை இணங்க வைக்க முடியுமென ரஜீவ் காந்தி நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஜெயவர்த்தனா அரசு முன்வைத்துள்ள திட்டம் தமிழ்மொழி வாரியான தாயகப் பிரதேசக் கோரிக்கையை ஒரு மட்டத்திற்கு நிறைவுசெய்ய முனைவதாகக் கூறிய வெங்கடேஸ்வரன், இதனை ஒரு இடைக்காலத் தீர்வாக நாம் கருதவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த இடைக்காலத் தீர்வை நாம் ஏற்றுக் கொண்டால், ரஜீவ் காந்திக்கு அது பெரும் இராஜதந்திரச் சாதனையாக அமையும் என்றும் சொன்னார். இந்த சார்க் உச்சி மாநாடு இந்தியப் பிரதமருக்கு ஒரு வெற்றிகரமான அரங்காக மாறுவதற்கு நாம் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். முடிவில், நாம் எமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து ஆக்கபூர்வமான முடிவை எடுக்கும்படியும் வேண்டினார். பிரபாகரனால் சினத்தை அடக்க முடியவில்லை. அது சொற்களாகச் சீறியது. “ரஜீவ் காந்தியைத் திருப்திப்படுத்தி அவரது புகழை ஓங்கச் செய்வதற்காக எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை கைவிடச் சொல்கிறீர்களா?” பிரபாகரனின் சீற்றத்தால் வெங்கடேஸ்வரன் ஆடிப்போனார். எமது உணர்ச்சியைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது எனச் சமாதானம் கூறிச் சமாளித்தார். அங்கிருந்து வெங்கடேஸ்வரன் நழுவிச் சென்றதை அடுத்து, நட்வர் சிங் எம்மை அணுகினார். அவர் பேச்சைத் தொடங்குவதற்கு முன்னரே நான் குறுக்கிட்டு, சிறீலங்கா அரசின் திட்டத்திலுள்ள குறைபாடுகளை எடுத்து விளக்கி, அந்த யோசனையை எமது இயக்கமும் எமது மக்களும் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறினேன். நட்வார் சிங் ஒரு வித்தியாசமான மனிதர். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர். நான் கூறியதை அவர் பொறுமையாகக் கேட்டார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாட்டினைத் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்றார். ஜெயவர்த்தனாவின் யோசனையை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொள்ளவில்லை. மூளைக்கு வதையாக அமைந்த இந்த நீண்ட பேச்சுக்கள் ஒருவாறு முடிவுக்கு வர அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. அதன்பின்னர் எமது அறைகளுக்குச் சென்று ஓய்வு எடுக்க அனுமதி கிடைத்தது.
ஜெயவர்த்தனாவின் யோசனையை நாம் மிகவும் வன்மையாக எதிர்த்து நின்றபோதும் ரஜீவ் காந்தி இலகுவில் விட்டுக் கொடுப்பது போலத் தெரியவில்லை. அத் திட்டத்தை எப்படியாவது எம்மீது திணித்துவிட வேண்டும் என்பதில் விடாப் பிடியாக நின்றார். எம்மை இணங்க வைக்கும் இறுதி ஆயுதமாகத் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் பங்களூருக்கு அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்கும் பிரபாகரனுக்கும் மத்தியிலான நெருங்கிய நட்புறவைப் பயன்படுத்திப் புலிகளின் தலைவரைப் பணிய வைக்கலாம் என ரஜீவ் காந்தி எண்ணினார் போலும்.
மறுநாள் மாலை பங்களூரிலுள்ள ராஜ் பவான் மாளிகையில் தமிழக முதல்வரை நாம் சந்தித்தோம். முதல்வருக்கு உதவியாக, தமிழ்நாடு உணவு அமைச்சர் திரு. பண்டுருட்டி இராமச்சந்திரனும் அங்கிருந்தார். சிங்கள அரசு முன்வைத்துள்ள யோசனைத் திட்டத்தில் அடங்கியுள்ள பாரதூரமான எதிர்மறை அம்சங்களை நாம் எம்.ஜி.ஆருக்குத் தெளிவாக எடுத்து விளக்கினோம். தமிழ்மொழி வாரியான தமிழ்த் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்கு முற்றிலும் மாறாக, கிழக்கு மாகாணத்தை இனரீதியாகவும், மதரீதியாகவும் முக்கூறுபோடும் நாசகாரத் திட்டமொன்றை ஜெயவர்த்தனா முன்வைத்திருக்கிறார். இத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ரஜீவ் அரசு எமக்கு அழுத்தம் போடுகிறது. இத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தமிழ்த் தாயக நிலம் பிளவடைந்து சிதைந்து போகும். அத்துடன் தமிழ், முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான பெருநிலப் பரப்புகள் சிங்களவர்களுக்கு உரித்தாகிவிடும். இதனாலேயே இந்த எல்லை வரையறுப்புத் திட்டத்தை நாம் வன்மையாக எதிர்க்கிறோம் எனத் தமிழகத் தலைவர்களுக்கு விரிவாகத் தெளிவாக எடுத்து விளக்கினோம்.
எம்.ஜி.ஆரின் மதிநுட்பமான மூளை, ஜெயவர்த்தனாவின் சதித் திட்டத்தை உடனடியாகவே கிரகித்துக் கொண்டது. அந்தத் திட்டத்திலுள்ள எதிர்மறை அம்சங்களை இந்திய மத்திய அரசும், குறிப்பாக ரஜீவ் காந்தியும் புரிந்து கொள்ளாததையிட்டு அவர் ஆச்சரியப்பட்டார். எமது நிலைப்பாடு நியாயமானது, யதார்த்தமானது எனக் கூறிய எம்.ஜி.ஆர், இவ் விவகாரத்தில் எமது விருப்புக்கு மாறாகத் தான் தலையிடப் போவதில்லை என உறுதியளித்தார். அத்துடன் பங்களூர் பேச்சுக்கள் முடிவுக்கு வந்தன.
தமிழரின் நலனிலும், அரசியல் இலட்சியத்திலும் பற்றுறுதிகொண்ட புலிகளின் தலைவனை எந்த வழியிலும் மடக்கிவிட முடியாது என உணர்ந்து கொண்ட இந்திய ஆட்சியாளர்கள் இறுதியில் எம்மை சென்னைக்குத் திரும்ப அனுமதித்தார்கள். ஆயினும், புலிகளின் தலைமை மீது இந்திய அரசுக்கு ஆத்திரமும் அதிருப்தியும் ஏற்படவே செய்தது. பங்களூர் சார்க் மாநாட்டில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ஒரு ராஜதந்திர சாதனையைப் பறைசாற்றலாம் எனக் கனவு கண்ட ரஜீவ் காந்திக்கு மீண்டும் இந்திய மத்தியஸ்துவ முயற்சி பின்னடைவு கண்டது பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. அத்தோடு சார்க் உச்சி மாநாட்டில் இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து ஜெயவர்த்தனா ஆற்றிய உரை ரஜீவை மேலும் சினத்திற்கு ஆளாக்கியது. சமாதான சக வாழ்வு, அயல்நாடுகளில் தலையிடாக் கொள்கை போன்ற சார்க் நாடுகளின் இலட்சியங்களை மீறி ‘தமிழ்ப் பயங்கரவாதத்திற்கு’ இரகசிய உதவிகளை வழங்கி வருவதாக இந்தியா மீது ஜெயவர்த்தனா குற்றம் சுமத்தினார். உலக அரங்கில் பகிரங்கமாகப் பழிசுமத்தப்பட்டது இந்திய அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. இதற்காக இந்திய அரசு ஜெயவர்த்தனாவைப் பகைத்துக் கொள்ளவில்லை. இந்த அவமானமும் அவமதிப்பும் ஆத்திரமாக வடிவெடுத்து விடுதலைப் புலிகள் மீது திரும்பியது. இந்தியாவின் நல்லாதரவு தொடர்ந்தும் நீடிக்காது என்பதை உணர்த்தி, பிரபாகரனுக்கு தனது ஆழ்ந்த அதிருப்தியைத் தெரிவிக்க ரஜீவ் அரசு முடிவெடுத்தது. நாங்கள் பங்களூரிலிருந்து சென்னைக்குத் திரும்பிய ஒரு சில நாட்களில் ஆத்திரமூட்டும் அச் சம்பவம் நிகழ்ந்தது.
உதவிப் பொலீஸ் மாஅதிபர் மோகனதாஸின் கீழ் இயங்கும் தமிழ் நாட்டு இரகசிய பொலீஸார் விடுதலைப் புலிகளின் இரகசியத் தங்குமிடங்கள், செயலகங்கள், பயிற்சி முகாம்கள் ஆகியனவற்றில் திடீர்ச் சோதனை நடத்தி, நவீன தொலைத் தொடர்புக் கருவிகள் அனைத்தையுமே பறிமுதல் செய்தனர். இதன் விளைவாக பிரபாகரனுக்கும் தமிழீழத்திலும், தமிழகத்திலும் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் படை முகாம்களுக்கும் பயிற்சி முகாம்களுக்கும் மத்தியிலான தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டது. சென்னை நகரிலிருந்து தனது கட்டளைக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை இயக்கி வந்த பிரபாகரன் தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் செயலிழந்து முடங்கினார். இந்திய மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கை பிரபாகரனைக் கொதிப்படையச் செய்தது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை தொடர்புகொள்ள நான் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அவர் சேலத்தில் தங்கியிருப்பதாகவும் அவருடன் தொடர்பு கொள்வது சாத்தியமில்லை எனவும் எமக்குத் தெரிவிக்கப்பட்டது.
கோபாவேசத்துடன் எனது இருப்பிடத்திற்கு வந்த பிரபாகரன் “நரம்பு மையத்தில் கை வைத்து விட்டார்கள். இதனை அனுமதிக்க முடியாது. எப்படியாவது இந்தக் கருவிகளை திருப்பிப் பெறவேண்டும்” என்றார். எம்.ஜி.ஆர் மீதும் அவருக்கு ஆத்திரம். மோகனதாஸ் எம்.ஜி.ஆரின் கையாள். ஆகவே, முதல்வருக்குத் தெரியாமல் இந்தக் காரியம் நடந்திராது என்பது பிரபாகரனது வாதம். மத்திய, மாநில அரசுகளை இனிமேல் நம்ப முடியாது என்றும் தொடர்ந்தும் தமிழ் நாட்டில் தங்கியிருப்பது தனது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் சொன்னார். தொலைத் தொடர்புக் கருவிகளைத் திருப்பிப் பெறுவது எப்படி என நான் மூளையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது, ‘அதற்கு ஒரே வழிதான் உண்டு’ என்றார் பிரபாகரன். அப்பொழுதுதான் அந்த வியப்பூட்டும் தீர்மானத்தை அறிவித்தார். தொலைத்தொடர்புக் கருவிகளை திருப்பிக் கொடுக்குமாறு கோரி தான் சாகும்வரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்கப் போவதாகச் சொன்னார். உடனடியாகவே, அந்தக் கணத்திலிருந்தே எனது வீட்டில் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப் போவதாகக் கூறினார். நான் சிறிது தடுமாறிப் போனேன். என்ன சொல்லியும் அவர் கேட்டபாடில்லை. தனது தீர்மானத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாக நின்றார். என்னவாக முடியுமோ என்ற அச்சம் எனது ஆன்மாவின் ஆழத்தில் படர்ந்தது. பிரபாகரன் நம்பிக்கையுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். தனது முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும் என அவரது உள்ளுணர்வுக்குத் தெரிந்தது போலும். உணவையும் நீரையும் துறந்த கடும் விரதமாக, சென்னை இந்திரா நகரிலுள்ள எனது வீட்டில் தனது சாகும்வரையிலான சாத்வீகப் போராட்டத்தை ஆரம்பித்தார் பிரபாகரன்.
உண்ணாவிரதம் ஆரம்பமாகியதை அடுத்து உடனடியாகவே நான் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி, பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான காரணத்தை உலகிற்கு தெரியப்படுத்தினேன். மறுநாள் காலை விடுதலைப் புலிகளின் தலைவரது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழக ஊடகங்கள் செய்தியைப் பிரசுரித்தன. அந்தச் செய்தி தமிழ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாகவே தமிழக அரசியல்வாதிகள், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், ஊடகவியலாளர், தமிழீழ விடுதலை விரும்பிகள் என்ற ரீதியில் ஏராளமானோர் எனது இல்லத்திற்கு வருகை தந்து புலிகளின் தலைவருக்குத் தமது நல்லாதரவைத் தெரிவித்தார்கள். ஆர்வம்கொண்ட தமிழ்நாட்டுப் பொதுமக்களும் எனது வீட்டுக்கு முன்பாகப் பெரும்தொகையில் அணிதிரண்டு உண்ணாவிரதத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள். பல்வேறு அரசியற் கட்சிகளும், சமூக அமைப்புகளும், பத்திரிகைகளும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன. பிரபாகரனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சூறாவளியைக் கிளப்பிவிட்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கதி கலங்கிப் போனார். பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்துமென அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என அறிக்கை வெளியிட்டார். மாநில அரசு மத்திய அரசு மேல் பழி சுமத்த, மத்திய அரசு மாநில அரசு மீது குற்றம் சுமத்தியது. இறுதியில் மத்திய மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து தமிழகக் காவல்துறை மீது பழியைச் சுமத்தின. ஈழ விடுதலைப் போராட்டமும், விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழ் நாட்டில் மிகப் பிரபல்யம் பெற்றிருந்த கால கட்டம் அது. புலிகளின் வீரம்செறிந்த ஆயுதப் போராட்டமும் அவர்களது அற்புதமான தியாகங்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தன. தலைவர் பிரபாகரன் மாவீரனாகவும் ஒரு வரலாற்று நாயகனாகவும் போற்றப்பட்டு மதிக்கப்பட்டார். அத்தகைய ஒரு சுதந்திர வீரனை இம்சைப்படுத்தி, ஈழத் தமிழரின் சுதந்திரப் போராட்டத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயற்பட்டமை தமிழக மக்களுக்கு சினத்தைக் கொடுத்தது. சிங்கள இனவாத ஆட்சியாளரை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருந்த புலிகள் இயக்கத் தலைமை மீது காவல்துறையினர் பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்க அனுமதி வழங்கியதையிட்டு எம்.ஜி.ஆரின் நிர்வாகம் மீதும் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது. சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உயிராபத்து நிகழ்ந்தால் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் பாரதூரமாக அமையுமென எம்.ஜி.ஆர் அச்சம் கொண்டார்.
பிரபாகரன் உண்ணாவிரதம் ஆரம்பித்து இரண்டாவது நாள் தமிழக முதல்வர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தொலைத்தொடர்பு சாதனங்களை திருப்பி ஒப்படைக்குமாறு தான் தமிழக காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பிரபாகரனிடம் ஆலோசனை கூறுமாறும் எம்.ஜி.ஆர் என்னிடம் கேட்டுக் கொண்டார். எம்.ஜி.ஆரின் வேண்டுகோளுக்கு பிரபாகரன் இணங்கவில்லை. தொலைத்தொடர்புக் கருவிகளை திருப்பிப் பெறும் வரைக்கும் தான் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை என அவர் உறுதிபட நின்றார். பிரபாகரனின் பிடிவாதமான நிலைப்பாட்டை தமிழக முதல்வருக்கு நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். “பிரபாகரன் ஆழமாக வேதனை அடைந்திருக்கிறார். தொலைதொடர்புக் கருவிகளைப் பறித்து, தமிழீழக் களங்களிலுள்ள போராளிகளுடன் தொடர்பைத் துண்டித்தது பாரதூரமான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் கருதுகிறார். தொலைத்தொடர்புச் சாதனங்கள் திருப்பி அவரிடம் ஒப்படைக்கப்பட்டாலன்றி அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடப் போவதில்லை” என்று அவரிடம் கூறினேன். எம்.ஜி.ஆர் சிறிது நேரம் சிந்தித்தார். தமிழகக் காவல்துறை உயர்பீடத்துடன் கலந்தாலோசித்து சீக்கிரமாக ஒரு முடிவு எடுப்பதாகச் சொன்னார். விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை பறிமுதல் செய்த விவகாரம் தமிழ்நாட்டில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்துமென எம்.ஜி.ஆர் எதிர்பார்க்கவில்லை.
பிரபாகரனின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இந்திய ஊடக உலகம் கொடுத்த முக்கியத்துவமும், ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அநீதி இழைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரமும் தமிழக முதல்வரை ஒரு சங்கடமான நிலைக்குத் தள்ளியது. ஈழத் தமிழரது விடுதலைப் போராட்டத்தின் காவல்தெய்வம் என அவருக்கு இருந்த புகழ்ச்சியையும் இழந்து, புலிகளின் தலைமையுடன் கொண்டிருந்த நெருங்கிய நட்புறவையும் துறந்துவிட எம்.ஜி.ஆர் விரும்பவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, பிரபாகரனுக்கு உண்ணாவிரதத்தால் ஏதாவது, தீங்கு நேருமோ என அவர் அச்சம் கொண்டார். புலிகளின் தலைவருக்கு உயிராபத்து நிகழ்ந்தால் அதன் அரசியல் விளைவுகள் படுபாதகமாக இருக்கும் என்பதும் அவருக்கு நன்கு தெரியும். இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்ட விவகாரத்திற்கும் மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என இந்திய மத்திய அமைச்சரான திரு. சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை தமிழக அரசு மீது முழுப் பழியையும் சுமத்தியதால் எம்.ஜி.ஆருக்கு அது அவமானத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இப்படியான நிலைமைகளினால் சினமடைந்த எம்.ஜி.ஆர், விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை உடனடியாகத் திருப்பி ஒப்படைக்குமாறு தமிழகக் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். பறிமுதலான கருவிகள் அனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. தமிழக காவல்துறை அதிகாரிகள் அவற்றை எடுத்து வந்து பிரபாகரன் முன்பாக வைத்தார்கள். தனது சாத்வீகப் போராட்டம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் பிரபாகரன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். நாற்பத்து எட்டு மணிநேர உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது.
உண்ணாவிரதம் கைவிடப்பட்டு சில நாட்களுக்குப் பின்பு, பிரபாகரனையும் என்னையும் தனது இல்லத்திற்கு அழைத்தார் எம்.ஜி.ஆர். நீண்ட நேரமாக மனம்திறந்து பேசினோம். ஜெயவர்த்தனாவின் சூத்திரதாரச் சதிவலைக்குள் ரஜீவ் அரசு சிக்கி வருகிறதென்பதை எடுத்து விளக்கிய நாம், இந்தப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆழமாகப் பாதிக்கும் எனவும் கூறினோம். தமிழகக் காவல்துறையினரது அடாவடி நடவடிக்கைகளுக்கு மோகனதாஸ் மீது முழுப் பழியையும் சுமத்திய முதலமைச்சர், எமது விடுதலைப் போராட்டத்திற்கு தம்மாலான சகல உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக சொன்னார். நல்லதொரு நல்லெண்ண சூழ்நிலையை நழுவவிடக்கூடாது என்பதற்கு அமைய, அன்றைய சந்திப்பில் நாம் எம்.ஜி.ஆரிடம் சில சலுகைகளைக் கேட்டோம். எமது இயக்கத்திடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களையும் ஏனைய அமைப்புகளிடமிருந்தும் கைப்பற்றிய ஆயுதங்களையும் எமக்குத் திருப்பி ஒப்படைக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தோம். எவ்வித தயக்கமுமின்றி அதற்கு இணங்கினார் எம்.ஜி.ஆர். மோகனதாஸ் மூலமாகவே பறிமுதலாகிய ஆயுதங்கள் அனைத்தையும் விரைவில் எங்கள் வசம் ஒப்படைக்கப் போவதாக உறுதியளித்தார். அவர் உறுதியளித்தது போலவே பெருந் தொகையான ஆயுத தளபாடங்கள் எமது அமைப்பிடம் கையளிக்கப்பட்டன. ஆயுத பறிமுதல் ஈற்றில் எமது ஆயுத பலத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் நோக்குடனேயே எம்.ஜி.ஆர் ஆயுதப் பறிமுதல் என்ற நாடகத்தை மேடையேற்றினார் என்றும் எழுதியிருக்கிறார் ஒரு சிங்கள அரசியல் ஆய்வாளர்.
“தீவிரவாத அமைப்புகளிடம் ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக மோகனதாஸ் கூறியிருப்பது தவறாகும். விடுதலைப் புலிகளிடம் மட்டுமே ஆயுதங்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. புலிகளின் ஆயுதங்கள் மட்டுமன்றி ஏனைய அமைப்புகளிடமிருந்து பறிமுதலான ஆயுதங்களும் புலிகளிடமே கொடுக்கப்பட்டன. இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது. அதாவது, ஏனைய அமைப்புகளைப் பலவீனப்படுத்தி, விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தும் நோக்குடனேயே முதலமைச்சர் இந்த ஆயுதப் பறிமுதல் நடவடிக்கையை எடுத்திருந்தார்.”18
எம்.ஜி.ஆர் அவர்களின் அன்பும், மனித பண்பும், அவரது தாராள மனப்பான்மையும், ஈழத் தமிழரின் அவல வாழ்க்கை பற்றி அவருக்கிருந்த ஆழமான புரிந்துணர்வும், ஆயுதப் போராட்டத்திற்கு அவர் வழங்கிய பேராதரவும் – இப்படியாக, தனிச் சிறப்பு வாய்ந்த அவரது குணாம்சங்கள் பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தது. முதலமைச்சரின் அன்பும் ஆதரவும் இருந்தபோதும், தமிழ் நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து ரஜீவ் நிர்வாக பீடத்தின் அழுத்தங்களுக்கும் நெருக்குவார ராஜதந்திரத்திற்கும் ஆளாவதைப் பிரபாகரன் விரும்பவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவமானத்திற்கு ஆளான சம்பவமும் உண்ணாவிரத அனுபவமும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தது. இந்தியாவின் தயவில் தங்கியிருக்க முடியாது என்பதை இந்த அனுபவங்கள் அவருக்கு உணர்த்தியது. இந்திய அரசின் ஆதிக்கப் பிடியிலிருந்து முற்றாக விடுபட்டு, தமிழீழத்தில் சுதந்திரமாகச் செயற்பட்டு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதையே பிரபாகரன் விரும்பினார். இதன்படி அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற ஒழுங்குகள் செய்தார். 1987 ஜனவரி மாதம் முற்பகுதியில், இரகசியமாகப் பாக்கு நீரிணையைக் கடந்து யாழ்ப்பாணம் சென்றடைந்தார் பிரபாகரன். அவரது பணிப்பின் பேரில் நானும் எனது மனைவியும் மற்றும் சில மூத்த உறுப்பினர்களும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து அரசியல் பணியாற்றினோம்.
யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு
வன்முறைச் சூறாவளி வீசும் இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றிலே 1987ஆம் ஆண்டு மிகவும் கொந்தளிப்பான காலமாக அமைந்தது. வழமைக்கு மாறான நிகழ்வுகளும், பயங்கரமான வன்முறைச் சம்பவங்களும் இக் கால கட்டத்தில் இடம்பெற்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் நிகழ்ந்த அரச ஆயுதப் படைகளின் வன்முறையும் அதற்குப் பதிலடியாக இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களும் இன நெருக்கடியை மேலும் உக்கிரமடையச் செய்தன. புலிகளின் கெரில்லாப் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அரச படைகளுக்குப் பாரிய உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இதனால் திகிலடைந்த ஜெயவர்த்தனா தமிழரின் ஆயுத இயக்கத்திற்கு எதிராக பெரியதொரு யுத்தத்தை ஏவிவிடும் நோக்குடன் சிங்கள இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்த முயற்சிகளை எடுத்தார். இந்திய மத்தியஸ்துவ முயற்சியின் நேர்மையில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இந்திய மத்தியஸ்துவமானது விடுதலைப் புலிகளை சாந்தப்படுத்தி வழிக்குக் கொண்டுவரத் தவறிவிட்டது என்பதே அவரது கணிப்பீடு. அதி தீவிரமாக வளர்ந்து வந்த தமிழ்ப் புலிகளின் இராணுவ வலுவும் போரியல் ஆற்றலும் ஜெயவர்த்தனாவைப் பிரமிக்க வைத்தது. இந்திய மத்திய அரசும், தமிழ்நாட்டு மாநில அரசும் இராணுவ, நிதி உதவிகள் வழங்கி வருவது காரணமாகவே புலிகள் இயக்கம் போரியல் ரீதியாகப் பெருவளர்ச்சி கண்டுள்ளதாக அவர் சந்தேகித்தார். இந்திய மத்தியஸ்துவ முயற்சிக்கு ஆதரவு வழங்குவது போல நடித்து, ரஜீவ் காந்தியை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மறுபுறத்தில் பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிடம் ஆயுத உதவிகளையும் இராணுவப் பயிற்சியையும் பெற்று, படை பலத்தை வலுப்படுத்தி, யாழ்ப்பாணக் குடாநாடு மீதான பெரியதொரு படையெடுப்புக்கு ஆயத்தங்களைச் செய்தார் ஜெயவர்த்தனா. அதே சமயம், வடக்கு மாகாணம் மீது ஒரு இறுக்கமான பொருளாதாரத் தடையையும் சிங்கள அரசு திணித்தது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு நல்லாதரவை வழங்கிய தமிழ் மக்களுக்கு ஒரு கூட்டுத் தண்டனையாகவே இப் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இவை ஒருபுறமிருக்க, காவல்துறையினரின் விசேட அதிரடிப் படையை ஒரு சிறப்புப் படையணியாக விரிவாக்கம் செய்து நவீனமயப்படுத்திய ஜெயவர்த்தனா, அதன் மூத்த அதிகாரிகளை விசேட பயிற்சிக்காக இஸ்ரேலுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பி வைத்தார். 1987இன் ஆரம்ப மாதங்களில் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் குழுவொன்று கொழும்புக்கு வருகை தந்து, எதிர்ப் புரட்சித் தந்திரோபாயங்கள் குறித்துச் சிங்கள இராணுவ உயர்பீடத்திற்கு ஆலோசனை வழங்கியது. இவ்வாறு யாழ்ப்பாணம் மீதான படையெடுப்புக்கு மிகவும் கவனமாகவும், படிப்படியாகவும் ஆயுதப் படைகளைப் பலப்படுத்தி, தயார் நிலைப்படுத்தினார் ஜெயவர்த்தனா.
எதிர்பார்த்தது போல, யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு 1987 மே மாதம் 26ஆம் நாள் அதிகாலை தொடங்கியது. ‘விடுதலை நடவடிக்கை’ (Operation Liberation) என்ற குறியீட்டுப் பெயருடன், விமான, கடற்படைத் தாக்குதலின் உதவியுடன் பத்தாயிரம் துருப்புக்களைக் கொண்ட படையணிகள் கனரகப் பீரங்கிகள், டாங்கிகள் சகிதம் குடாநாடு மீது பெரும் படையெடுப்பைத் தொடங்கின. ‘புலிகளின் இதயபூமி’ எனக் கருதப்பட்ட வடமராட்சிப் பிரதேசத்தை சிங்கள இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே இப் படை நடவடிக்கையின் முதற்கட்டத் தந்திரோபாய நோக்காக அமைந்தது. வடமராட்சிக் கடலோரப் பட்டினங்கள், கிராமங்கள் மீது விமானங்களும் கடற்படைப் போர்க் கப்பல்களும் குண்டுமழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்திய வேளை தரைப் படையணிகள் கடலோரமாக முன்னேறின. சிங்கள ஆயுதப் படைகளின் வியூகப் பொறிக்குள் சிக்குவதைத் தவிர்க்கும் நோக்கில் விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் வடமராட்சியிலிருந்து, தந்திரோபாயமாகப் பின்வாங்கின. சிங்களப் படையணிகள் வடமராட்சி உட்பகுதிக்குள் நுழைந்து தம்மை நிலைப்படுத்திய பின்னர் அவர்கள் மீது கெரில்லாத் தாக்குதல்களை நடத்துவதெனப் புலிகளின் தலைமைப் பீடம் திட்டமிட்டிருந்தது. புலிப் படைகளின் எதிர்ப்பு இல்லாத சூழ்நிலையில், ஆகாய கடற்படைத் தாக்குதலின் உதவியுடன் முன்னேறிய சிங்கள இராணுவத்தினர் அப்பாவிப் பொதுமக்கள் மீது படுபாதகமான கொடும் செயல்களைப் புரிந்தனர். நிராயுதபாணிகளாக, நிர்க்கதியாக நின்ற எமது மக்கள் பெரும் தொகையில் கொன்று குவிக்கப்பட்டனர். வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், பொதுக் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. வடமராட்சிக் கரையோரமாக அமையப் பெற்றிருந்த வரலாற்றுப் புகழ்பெற்ற தமிழர்களது புராதன பட்டினங்கள் சிதைத்து அழிக்கப்பட்டன. ஒரு வாரத்திற்குள் வடமராட்சிப் பிரதேசம் சிங்கள இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கியது. இந்தப் படை நடவடிக்கையில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏனையோர் தென்னிலங்கையிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். தமிழரின் உயிருக்கும் உடமைக்கும் பாரிய அழிவை ஏற்படுத்தி, தமிழ் மக்கள் மத்தியில் திகிலையும் பீதியையும் உண்டு பண்ணுவதே இந்த படை நடவடிக்கையின் மூலோபாயமாக இருந்தது. வடமராட்சிப் படையெடுப்பை அடுத்து, ஒரு வங்கித் திறப்பு விழாவில் உரையாற்றியபொழுது ஜெயவர்த்தனா கூறிய வார்த்தைகள் அவரது நயவஞ்சக உள்நோக்கத்தை வெளிப்படுத்தின. “இந்தச் சண்டைதான் எல்லாவற்றிற்கும் முடிவு கட்டும் இறுதிச் சண்டையாக இருக்கும்” என அவர் பிரகடனம் செய்தார்.
வடமராட்சிப் பிரதேசம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, வலிகாமம் மீது பெரும் படையெடுப்பை நிகழ்த்துவதற்கு சிங்கள ஆயுதப் படைகள் தயாராகின. வலிகாமம் பிரதேசம் மீதான படையெடுப்பின் போது தமிழீழ மக்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணம் மீதும் பெரும் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டது. “யாழ்ப்பாணத்தை எரித்து தரைமட்டம் ஆக்க வேண்டும். பின்னர் மீண்டும் கட்டி எழுப்பலாம்”19 என்று ஜெயவர்த்தனா தனது இராணுவத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார். தனது நூல் ஒன்றில் திரு. டிக்சிட் இத் தகவலைத் தருகிறார். பொதுமக்கள் மிகச் செறிவாக வசிக்கும் யாழ்ப்பாண நகரிலும், வலிகாமப் பகுதியிலும் பெரும் படையெடுப்பு நடத்தப்பட்டால் குறைந்தது பத்தாயிரம் தமிழ்க் குடிமக்கள் கொல்லப்படலாமெனச் சிங்கள இராணுவத் தலைமை ஜெயவர்த்தனாவுக்கு அறிவித்திருந்தது. அப்படியிருந்தும் படை நடவடிக்கையை முடுக்கிவிட அவர் உறுதிபூண்டு நின்றார். சிறீலங்கா அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற, கொடூரமான படை நடவடிக்கைகள் டில்லி ஆட்சியாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தமிழ்ப் பொதுமக்கள் மீது பாரிய உயிர்ச் சேதத்தை விளைவித்த சிங்கள இராணுவத்தினரின் மிருகத்தனமான போக்கு ரஜீவ் காந்தியைத் திகைக்க வைத்தது. இராஜதந்திர வழிமூலம் தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளையும் உதாசீனம் செய்து, மனிதாபிமானமற்ற கடும் போக்கைக் கடைப்பிடித்த ஜெயவர்த்தனா மீது இந்தியப் பிரதமருக்கு ஏமாற்றமும் வெறுப்பும் ஏற்பட்டது. இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட இனக்கொலைத் தாக்குதலும், அதைத் தடுத்து நிறுத்த முடியாத இந்திய அரசின் கையாலாகாத்தனமும் தமிழ் நாட்டு மக்களிடையே கொதிப்புணர்வை ஏற்படுத்தியது. பொருளாதாரத் தடைகளை விதித்து, யாழ்ப்பாணத் தமிழர்களை பட்டினி போட்டு வதைக்கும் சிங்கள அரசு மீது சீற்றம் கொண்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், இந்திய மத்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் யாழ்ப்பாண மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் நிவாரண உதவிகளை கடல்மார்க்கமாக அனுப்பி வைக்க இந்திய அரசு முடிவெடுத்தது.
1987 ஜுலை 3ஆம் நாள், 40 தொன் உணவுப் பண்டங்களுடன் 19 இழுவைப் படகுகளைக் கொண்ட கப்பல் அணி ஒன்று இராமேஸ்வரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டது. இந்திய அரசின் இத் தலையீடு ஜெயவர்த்தனாவை கொதிப்படையச் செய்தது. தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு வரும் இந்தியப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு கடற்படைக்கு உத்தரவிட்டார் ஜெயவர்த்தனா. சிறீலங்காவின் போர்க் கப்பல்கள் இந்தியப் படகுகளை தடுத்து நிறுத்தின. நடுக்கடலில் ஆறுமணி நேரம்வரை நிகழ்ந்த இழுபறியின் பின்பு இந்தியப் படகுகள் திருப்பி அனுப்பப்பட்டன. ‘யாழ்ப்பாணப் பொதுமக்களின் சகல தேவைகளையும் சிறீலங்கா அரசாங்கம் நிறைவுசெய்ய முடியும் என்பதால் வெளிநாட்டிலிருந்து உதவிகள் அவசியமில்லை’ என ஜெயவர்த்தனாவின் ஆட்சிப்பீடம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கைக்கு எதிராக ஜெயவர்த்தனா அரசு கடைப்பிடித்த இறுமாப்பான கடும்போக்கு டில்லி ஆட்சியாளருக்குச் சினமூட்டியது. தமிழ் மக்களை இனக்கொலையிலிருந்து காப்பாற்றுவதற்குத் தேவை ஏற்படின் இராணுவ ரீதியாகவும் தலையிடுவதற்கு இந்தியா தயங்காது என்பதை ஜெயவர்த்தனாவுக்கு உணர்த்த வேண்டுமென ரஜீவ் காந்தி விரும்பினார். இந்தச் செய்தியை சிறீலங்கா அரசுக்குப் புரிய வைக்கும் நோக்குடன், இந்திய விமானப் படையின் உதவியுடன் ஆகாய மார்க்கமாக யாழ்ப்பாண மக்களுக்கு நிவாரண உணவுப் பொருட்களை விநியோகிக்க இந்திய அரசு முடிவெடுத்தது. 1987 ஜுலை 4ஆம் நாள், மிராஜ் போர் விமானங்கள் வழித் துணை வழங்க, ஐந்து ஏ.என்.32 ரக இந்திய போக்குவரத்து விமானங்கள் 25 தொன் எடையுள்ள உணவுப் பொட்டலங்களை ஆகாயத்திலிருந்து யாழ்ப்பாண மண் மீது கொட்டின. இந்த ஆகாய மார்க்கமான நிவாரண விநியோகத்தில் தலையிட்டால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவருமென சிறீலங்கா அரசுக்கு இந்தியா கடும் எச்சரிக்கையையும் விடுத்திருந்தது.
இந்திய அரசின் இந்த மனிதாபிமானத் தலையீடு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் நடவடிக்கையானது சிறீலங்காவின் இறையாண்மையை மீறிய பாரதூரமான விவகாரம் என்று வெளிவிவகார அமைச்சு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இலங்கையின் உள்விவகாரத்தில் அத்துமீறித் தலையிட்டதாகவும் இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது. தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தால் இராணுவ ரீதியாக இந்தியா தலையிடலாம் என்ற ஒரு கசப்பான செய்தியை எடுத்துக் கூறவும் இந்திய நடவடிக்கை தவறவில்லை. இந்திய அரசை ஆத்திரமூட்டுவதற்கு அஞ்சிய ஜெயவர்த்தனா யாழ்ப்பாணக் குடாநாடு மீது படை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைத்தார். யாழ்ப்பாண மக்களுக்கு அவசர மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்திய விநியோகக் கப்பல்களை காங்கேசன்துறை துறைமுகம் வாயிலாக அனுமதிக்கவும் சிறீலங்கா அரசு இணங்கியது.
இது இவ்வாறிருக்க, யாழ் குடாநாட்டில் சிங்கள இராணுவம் கைப்பற்றிய பிரதேசத்தினுள் ஊடுருவிய விடுதலைப் புலிக் கெரில்லா அணிகள், எதிர்த் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்ட சிங்கள ஆயுதப் படைகளின் சுற்றுக் காவல் அணிகள் மீது தொடர்ச்சியான கெரில்லாத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இராணுவத் தரப்பில் பெரிய அளவில் உயிச்சேதம் விளைவிக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தால் போன்று 1987 ஜுலை 5ஆம் நாள் நள்ளிரவு சிங்கள இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அன்றைய நாளில், முதற் தடவையாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கரும்புலித் தற்கொடை அணி போர்க் களத்தில் குதித்தது. அன்றுதான் எமது இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஒரு மாபெரும் போரியல் சாதனையை நிலைநாட்டிக் களப் பலியானான். வெடிமருந்து நிரப்பப்பட்ட பார ஊந்தினை ஓட்டிச் சென்று இராணுவத்தின் தலைமைச் செயலகமாக இயங்கி வந்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தினுள் உட்புகுந்து, அதனை வெடிக்க வைத்தான் மில்லர். நெல்லியடிப் பிரதேசத்தையே அதிரவைத்த அந்த வெடி, மகா வித்தியாலயக் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது. வெடி அதிர்விலும் இடிபாடுகளிலும் சிக்கி நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதல் ஜெயவர்த்தனாவையும் சிங்கள இராணுவத் தலைமையையும் கலங்க வைத்தது. இராணுவத்தினரது உயிர்ச் சேத உண்மை விபரங்களைத் தெரியப்படுத்தினால் படைதரப்பில் மனமுறிவு ஏற்படலாமென அச்சம் கொண்ட அரசு உயிர்ச் சேதத்தை இருட்டடிப்புச் செய்தது. எனினும் இந்திய அரசுக்கு உயிர்ச் சேத உண்மை விபரங்கள் தெரிய வந்தன. சிங்கள இராணுவத்திற்கு ஏற்பட்டிருக்கும் பாரிய உயிர்ச்சேதம் காரணமாக ஜெயவர்த்தனா அரசு பணிந்து வந்து சமாதானப் பேச்சுக்கு விரைவில் இணக்கம் தெரிவிக்குமென இந்தியப் புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் சென்னையில் எனக்குத் தெரிவித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தம்
இலங்கையின் ஆகாய வெளியை அத்துமீறிய இந்தியாவின் கண்டிப்பான போக்கும், நெல்லியடியில் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய கோரமான தாக்குதலும் ஜெயவர்த்தனாவையும் அவரது இனவெறிகொண்ட அமைச்சர்களையும் பணிய வைத்தது. இந்திய மத்தியஸ்துவ முயற்சிக்கு சிறீலங்கா அரசு இணக்கம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையில் சுறுசுறுப்பான இராஜதந்திர நகர்வுகள் இடம்பெற்றன. தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு அதிகாரப் பரவலாக்கத் திட்டம் உட்பட இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை வரையவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட பின்னணி நிகழ்வுகளைத் திரு. டிக்சிட், ‘கொழும்பில் எனது பணி’ என்ற தனது நூலில் நாற்பது பக்கங்களைக் கொண்ட ஒரு அத்தியாயத்தில் விபரமாக விளக்கினார்.
ஒப்பந்தம் உருப்பெற்றதன் மூலக் கதையை விபரித்துச் சொல்லும் டிக்சிட் விடுதலைப் புலிகள் சம்பந்தமான ஒரு விசித்திர நிகழ்வையும் சொல்கிறார். சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட புலிகளின் பிரதிநிதி ஒருவர், இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை ‘இந்து’ பத்திரிகை ஆசிரியரான ராம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினாராம். இத் தீர்வுத் திட்டம் ஆறு அம்சங்களைக் கொண்டதாக டிக்சிட் எழுதுகிறார். (1) சிறீலங்கா இராணுவம் தனது படை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டும். (2) தமிழ்த் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். (3) 1983-86 கால இடைவெளிக்குள் பேசப்பட்ட தீர்வு யோசனைகளின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வெண்டும். (4) தமிழ் மொழி தேசிய மொழியாகவும், உத்தியோக மொழியாகவும் ஏற்கப்பட வேண்டும். (5) இறுதித் தீர்வுக்கு முன்னராக ஒரு இடைக்காலத் தீர்வு செயற்படுத்தப்பட வேண்டும். (6) இன விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சிறீலங்கா இராணுவக் கட்டமைப்பில் தமிழர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும். இந்த ஆறம்ச யோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போருக்கு நிரந்தர ஓய்வுகொடுத்துத் தமிழீழத் தனியரசுக் கோரிக்கையையும் கைவிடும் என திரு.ராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாம். இந்த யோசனைகள் உள்ளடங்கியதாகத் தயாரிக்கப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்கள் சார்பாக இந்திய இலங்கை அரசுகள் கைச்சாத்திட வேண்டும் எனவும் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி ராமுக்குத் தெரிவித்தாராம்.20 சீனாவுக்கு விஜயம் செய்த பின்பு சிங்கப்பூரில் தங்கி நிற்கும் பொழுது, தொலைபேசி மூலமாக ராமுக்கு இத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக டிக்சிட் எழுதுகிறார். புலிகளின் பிரதிநிதி மூலம் தனக்குக் கிடைத்த செய்தியை, காணி, மகாவலி அபிவிருத்தி அமைச்சரும் தனது நண்பருமான திரு.காமினி திசநாயக்கா வாயிலாகச் சிறீலங்கா அரசுக்கு தெரியப்படுத்தினாராம் இந்துப் பத்திரிகையாசிரியர். இப்படியான ஒரு விசித்திரமான கட்டுக்கதை டிக்சிட்டின் நூலில் தரப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதியால் திரு. ராமுக்கு தெரிவிக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டதாக எழுதுகிறார் டிக்சிட். இதில் சர்ச்சைக்குரிய கேள்வி என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கம் இப்படியான யோசனைகளை அல்லது கோரிக்கைகளை இந்துப் பத்திரிகை ஆசிரியர் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததா என்பதுதான். அதுவும் பெயர் குறிப்பிடப்படாத மர்மமான நபர் ஒருவர், புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி என உரிமைகோரி, அரசியல் தீர்வு யோசனைகளைத் தொலைபேசியில் தெரிவித்தார் என்ற இந்தக் கட்டுக்கதைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் இலட்சியத்தையும், ஒட்டுமொத்தத்தில் தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் இந்தப் புனைகதையை யார் புனைந்தார்களோ தெரியவில்லை. எனினும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகளையும் சம்பந்தப்படுத்தி, நியாயப்படுத்தும் நோக்குடன் இந்த விபரீதமான சம்பவம் சோடிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதையும், இத் தகவல் பரிமாற்றத்திற்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் நான் உறுதிபடக் கூறுவேன். ‘இந்து’ ஆசிரியர் திரு. ராம், இந்திய தூதுவர் திரு. டிக்சிட், சிங்கள அமைச்சர் திரு. காமினி ஆகியோரும் ‘றோ’ புலனாய்வுத் துறையினரும் சேர்ந்து திரித்த கட்டுக் கதை என்றே இதை நான் கருதுகிறேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு விடுதலைப் புலிகளின் இந்த யோசனைகளே அடிப்படையாக அமைந்திருந்ததால் பிரபாகரனும் நானும் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியைச் சந்தித்தபொழுது இவ்விடயம் பற்றி அவர் எதுவுமே பேசவில்லையே? திரு. ராமும் திரு. டிக்சிட்டும் அனுபவ முதிர்ச்சிபெற்ற புத்திஜீவிகள் என்பதால், விடுதலைப் புலிகளின் சிங்கப்பூர் பிரதிநிதி என உரிமைகோரி யாரோ இனம்தெரியாத நபர் இனப் பிரச்சினைக்கு ஒரு யோசனைத் திட்டத்தை தொலைபேசியில் தெரிவித்தபோது, அதன் நம்பகத்தன்மை பற்றி புலிகளின் தலைவர்களுடன் அவர்கள் கலந்தாலோசிக்க தவறியது ஏன்? அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால் விடுதலைப் புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கும் கொள்கைக்கும் மாறுபட்டதாக இந்த யோசனைகள் அமையப் பெற்று இருப்பதை எவரும் இலகுவில் கண்டு கொள்ளலாம். குறிப்பாக, புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழரின் சுயநிர்ணய உரிமை போன்ற அடிப்படைக் கோரிக்கைகள் எதுவுமே இந்த யோசனைத் திட்டத்தில் அடங்கவில்லை. இவற்றிலிருந்து ஒரு உண்மை புலனாகும். அதாவது, இந்த சிங்கப்பூர் நாடகம் ஒரு கட்டுக்கதையன்றி வேறொன்றும் அல்ல என்பதுதான்.21
இந்திய இலங்கை அரசுகளின் கூட்டு முயற்சியாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. ரஜீவ் அரசினதும் ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடத்தினதும் பிரதிநிதிகள் கூடிக் கலந்தாலோசித்து இவ்வொப்பந்தத்தைத் தயாரித்தனர். இந்த ஒப்பந்தத்தின் உருவாக்கத்தில் தமிழ் மக்களோ அன்றிச் சிங்கள மக்களோ சம்பந்தப்படவில்லை. இந்தியப் பாராளுமன்றத்திலோ அன்றி இலங்கை பாராளுமன்றத்திலோ இவ்விடயம் விவாதிக்கப்படவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியைப் பாதித்த இவ்வொப்பந்தம் எவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது ஒரு விசித்திரமான கதை.
1987 ஜுலை 19ஆம் நாள், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் முதற் செயலராகப் (அரசியல்) பணி ஆற்றிய திரு. ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து விடுதலைப் புலிகளின் தலைவரை அவசரமாக சந்திக்கவேண்டுமென வற்புறுத்தினார். தனக்கு உதவியாக யோகரெத்தினம் யோகியை அழைத்துச் சென்ற பிரபாகரன் இந்தியத் தூதரக அதிகாரியைச் சந்தித்தார். இந்திய இலங்கை அரசுகள் இணைந்து, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் தயாரித்துள்ளதாகத் தெரிவித்த திரு. பூரி, இத் திட்டத்தைத் தெளிவாக விளக்குவதற்காக இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி புதுடில்லியில் தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். இத் தீர்வுத் திட்டம் பற்றி விரிவாகக் கூறுமாறு பிரபாகரனும் யோகியும் கேட்டுக் கொண்டபோது, அதுபற்றி விரிவாகக் கூற மறுத்த இந்திய இராஜதந்திரி, புது டில்லியில் அதன் உள்ளடக்கம் விரிவாக விளக்கப்படும் என்றார். தமிழீழ மக்களின் அரசியல் வாழ்வைப் பாதிக்கும் ஒரு முக்கியமான தீர்வுத் திட்டத்தை இரு அரசுகளும் இணைந்து தயாரித்துள்ளதால் அதனை உதாசீனம் செய்ய முடியாது என பிரபாகரன் கருதினார். அத்துடன் இந்தியாவின் பிரதம மந்திரி அதிகாரபூர்வமாக அழைப்பு விடும்பொழுது அதனை தட்டிக் கழிக்கவும் அவரால் முடியவில்லை. ஆகவே, புதுடில்லி செல்வதற்குப் பிரபாகரன் இணங்கினார். அவ்வேளை சென்னையில் தங்கியிருந்த என்னையும் தன்னுடன் புதுடில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் பிரபாகரன் வலியுறுத்தினார்.
1987 ஜுலை 23ஆம் நாள், யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் வளாகத்தில் தரையிறங்கிய இரு இந்திய விமானப் படையின் உலங்குவானூர்திகள், பிரபாகரன், யோகரெத்தினம் யோகி, திலீபன் ஆகியோர் அடங்கிய விடுதலைப் புலிகளின் தூதுக் குழுவை ஏற்றிக் கொண்டு சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டன. அவ்வேளை சென்னையில் என்னைச் சந்தித்த தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் பிரபாகரனது வருகையையும் அவரது வேண்டுகோளையும் எனக்குத் தெரிவித்தனர். நான் உடனடியாகவே மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றேன். அங்கு பிரபாகரனைச் சந்தித்தபொழுது, இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் புதுடில்லி செல்வதாகச் சொன்னார். இந்திய இலங்கை அரசுகள் கூட்டாகச் சேர்ந்து தமிழர் பிரச்சினை குறித்து ஒரு தீர்வுத் திட்டம் வரைந்திருப்பதாகவும் அதன் விபரங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார். விமான நிலையத்தில் வைத்து பூரியைச் சந்தித்த நான் அவரிடம் அத் தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றி விசாரித்தேன். அதுபற்றி எதுவுமே கூற அவர் மறுத்துவிட்டார். புதுடில்லியில் இந்தியத் தூதுவர் திரு. டிக்சிட் எம்மை சந்தித்து விபரமாக எல்லாவற்றையும் எமக்கு விளக்குவார் என அவர் உறுதியளித்தார். பூரியின் முகபாவத்திலிருந்தும், மனம் திறந்து கதைப்பதற்கு அவர் தயங்குவதிலிருந்தும் எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம். எதையோ ஒளித்து மறைத்து எம்மை ஏமாற்றி புதுடில்லிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பது மட்டும் புலனாகியது. சிறிது நேரத்தில் இந்திய வான்படையின் விமானம் மூலம் புதுடில்லி வந்தடைந்தோம்.
புதுடில்லி விமான நிலையத்திலிருந்து தலைநகரின் மையத்தில் அமைந்திருக்கும் அசோக் விடுதிக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். புதுடில்லியில் பிரபல்யமான இந்த விடுதியின் வளாகத்தினுள் எமது வாகனங்கள் நுழைந்தபோது, பெருந்தொகையான ‘கரும்பூனைகள்’ என்றழைக்கப்படும் இந்திய அதிரடிப் படையினர் விடுதியைச் சூழ நிலையெடுத்து நிற்பதை நாம் அவதானித்தோம். எமது முகங்களில் வியப்பும் சந்தேகமும் எழுவதைக் கண்ணுற்ற பூரி, எமக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவே விடுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பிரபாகரனின் ஏளனப் புன்னகையிலிருந்து அவர் பூரியின் கூற்றை நம்பவில்லை என்பது எனக்குப் புலனாகியது. பல மாடிக் கட்டிடங்களைக் கொண்ட அந்த விடுதியின் உயர்மாடியும் விசாலமான சந்திப்பு அறையும் எமக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எமது அறைகளுக்கு முன்பாக ‘கரும்பூனைகள்’ ஆயுதபாணிகளாக நிலையெடுத்து நின்றனர். நாம் உயர்மாடிக்கு அழித்துச் செல்லப்பட்ட பொழுது அங்கு ஒரு றோ புலனாய்வு அதிகாரி எம்மைச் சந்தித்தார். நாம் பாதுகாப்பான தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்றும், விடுதி மாடியிலிருந்து நாம் வெளியே செல்ல முடியாது என்றும், வெளியிலிருந்தும் எம்மைச் சந்திக்க எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சொன்னார். எமது மாடியிலுள்ள தொலைபேசிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ‘பாதுகாப்பான தடுப்புக் காவல்’ என்ற பெயரில், வெளியுலகத்துடன் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் நாம் அந்த விடுதி மாடியில் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற கசப்பான உண்மை எமக்குப் புலனாகியது. “பாலா அண்ணா, நான் மீண்டும் பொறியில் மாட்டிக் கொண்டேன்,” என ஆதங்கத்துடன் சொன்னார் பிரபாகரன்.
நாம் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் திரு. டிக்சிட் அங்கு வருகை தந்தார். ஏதோ பாரதூரமான விடயத்தைச் சொல்லப் போவது போன்று அவரது முகபாவம் கடுகடுப்பாகத் தோற்றமளித்தது. அந்த விசாலமான சந்திப்பு அறையில், ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டு, தனது சுங்கானை எடுத்துப் பற்ற வைத்து இரு தடவைகள் புகையை உள்வாங்கி ஊதினார். அவருக்கு முன்பாக அமைதியுடன் ஆழ்ந்த கவனத்துடன் நாம் அமர்ந்திருந்தோம். எம்மை உன்னிப்பாகப் பார்த்தபடியே தனது மௌனத்தை முறித்தார் டிக்சிட். “இந்திய இலங்கை அரசுகளுக்கு மத்தியில் இருதலைப்பட்சமான ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் திரு. ரஜீவ் காந்தி விரைவில் கொழும்புக்கு விஜயம் செய்து அந்த உடன்பாட்டில் கைச்சாத்திடுவார். தமிழரின் இனப் பிரச்சினைக்கு ஒரு நீதியான, தீர்வும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கி இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார் டிக்சிட். தனது அங்கிக்குள் கைவிட்டு, ஒரு ஆவணத்தை வெளியே எடுத்து என்னிடம் கையளித்தார். “தயவு செய்து இதனை மொழிபெயர்த்து, இதன் உள்ளடக்கத்தைத் திரு. பிரபாகரனுக்கு விளங்கப்படுத்துங்கள், இரண்டு மணிநேரம் கழித்த பின் நான் திரும்பி வருவேன். அப்பொழுது நீங்கள் நல்லதொரு முடிவுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கூறிவிட்டு, திடீரென எழுந்து அந்த அறையிலிருந்து வெளியேறினார் திரு. டிக்சிட்.
நான் அந்த ஆவணத்தை மொழிபெயர்த்துக் கூறியதுடன் அந்தத் தீர்வு யோசனைகளிலுள்ள சிக்கலான பரிமாணங்களையும் பிரபாகரனுக்கு விளக்கினேன். ஒப்பந்தத்தில் அடங்கியிருந்த தீர்வுத் திட்டம் எமக்குத் திருப்தியை அளிக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கத்தைக் கொண்ட இந்த யோசனைகள் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை. ‘சிறீலங்கா மக்கள் சமூகம் பல்லினக் கட்டமைப்பைக்’ கொண்டதாகச் சித்தரிக்கும் இத் திட்டம், இந் நாட்டில் மொழி, பண்பாட்டு ரீதியான பல இனக் குழுமங்கள் வாழ்ந்து வருவதாகக் கூறுகிறது. இப்படியான சமூகப் பார்வை தேசம், தேசிய இனம் என்ற அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்துள்ளது. இலங்கைத் தீவின் இறையாண்மை, ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்திய இந்த உடன்பாடு, நாட்டின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் தமிழரின் இனச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ‘வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வதிவிடம்’ என ஒரு பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளமையை மட்டும் ஒரு ஆக்கபூர்வமான அம்சமாகச் சொல்லலாம். ஒரு தனித்துவமான நிர்வாக அலகாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது இத் தீர்வுத் திட்டத்தின் மிக முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானதாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் வதியும் எல்லா இன மக்களதும் கருத்து வாக்களிப்பு அங்கீகாரத்துடனேயே கிழக்கு மாகாணம் வடக்குடன் நிரந்தரமாக இணைக்கப்படலாம் என்ற ஒரு விதியும் இந்த ஒப்பந்தத்தில் உண்டு. ஒரு தற்காலிக வடகிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்கும் இது வழிவகுக்கிறது. ஒரு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சரவை ஆகியோரடங்க நிர்வாக அமைப்பையும் இது சிபாரிசு செய்கிறது. ஆயினும் நிர்வாகக் கட்டமைப்பின் அதிகாரங்கள், செயற்பாடுகள் பற்றி தெளிவாக வரையறுக்கப்படவில்லை. 1986 மே 4ஆம் நாளிலிருந்து 1986 டிசம்பர் 19ஆம் நாள் வரை இந்திய இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களுக்கும் மத்தியில் கலந்துரையாடப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் இறுதித் தீர்வு வகுக்கப்படலாமெனவும் இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கப் போனால், தமிழீழ மக்களது தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகள் எதற்குமே தீர்வாக இத் திட்ட யோசனைகள் அமையவில்லை. இத் திட்டத்தில் ஆயுதக் களைவு பற்றி வலியுறுத்தப்பட்டமையே எமக்குப் பாரதூரமான விடயமாகத் தோன்றியது. இந்த உடன்பாடு கைச்சாத்தாகி 72 மணி நேரத்திற்குள் தமிழ் விடுதலை அமைப்புகள் அனைத்தும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனக் கண்டிப்பாக விதிக்கப்பட்டிருந்தது. இந்த விதியை நான் மொழிபெயர்த்துக் கூறியபொழுது பிரபாகரனின் முகம் கோபத்தால் சிவந்தது. இந்த உடன்பாட்டில் தெரிவிக்கப்பட்ட யோசனைகள் பரிசீலனை செய்வதற்கு எமக்கு வழங்கப்பட்ட இரு மணி நேர கால அவகாசத்தினுள் பிரபாகரன் ஒரு தீர்க்கமான உறுதியான முடிவை எடுத்தார். எப்படியான சூழ்நிலையிலும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதில்லை என அவர் உறுதிபடத் தீர்மானித்தார்.
இரண்டு மணி நேரத்தின் பின்னர் திரு. டிக்சிட் எம்மைச் சந்தித்தார். இந்திய – இலங்கை உடன்பாடு சம்பந்தமாக எமது முடிவு என்னவென விசாரித்தார். இந்த உடன்பாட்டை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாம் திட்டவட்டமாக எடுத்துக் கூறினோம். எமது தீர்மானத்திற்கு விளக்கம் கேட்டார் டிக்சிட். உடன்பாட்டில் அடங்கியுள்ள தீர்வுத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை விளக்கிக் கூறிய நான், இத் தீர்வு யோசனைகள் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் எதனையுமே நிறைவுசெய்யவில்லை என்றேன். ஆகவே, இத் தீர்வு யோசனைகளை எமது விடுதலை இயக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு, நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு முன்னராக, தமிழரின் சுதந்திர இயக்கத்தை நிராயுதபாணியாக்க இந்திய அரசு வற்புறுத்துவது அநீதியானது, நியாயமற்றது என வாதாடினார் பிரபாகரன். “கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, இரத்தம் சிந்திப் போராடி, எதிரிப் படைகளிடமிருந்து பறித்தெடுத்த ஆயுதங்களை எழுபத்திரெண்டு மணிநேரத்தில் சரணடையச் செய்யுமாறு இந்திய அரசு எவ்வாறு கோரலாம்” என்று கேள்வி எழுப்பினார் பிரபாகரன். அவரது கனத்த தொனியில் ஆத்திரம் நிறைந்திருந்தது. எமது கண்டன விமர்சனங்களை செல்லுபடியாகாதவை என தூக்கியெறிந்து விவாதித்த டிக்சிட், தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதைவிடக் கூடுதலான அதிகாரங்கள் மாகாண சபைத் திட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். ஒரு நிரந்தரமான போர்நிறுத்தம் நடைமுறைக்கு வர இருப்பதாலும், இந்திய அமைதி காக்கும் படைகள் சமாதானத்தைப் பேண இருப்பதாலும் தமிழர்களுக்கு ஆயுதங்கள் அவசியமில்லை எனக் கூறினார் டிக்சிட். இந்திய அரசு மீது நம்பிக்கை வைக்குமாறு எம்மைக் கேட்டுக் கொண்ட அவர், எமது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டினார். நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றோம். ஜெயவர்த்தனா அரசுமீதும், அரச ஆயுதப் படைகள் மீதும் எமக்கு அறவே நம்பிக்கையில்லை என்பதை இடித்துச் சொன்னோம்.
எமது நிலைப்பாட்டிலிருந்து சற்றேனும் விட்டுக் கொடுக்காது நாம் உறுதிகொண்டு நின்றதால் டிக்சிட் பொறுமையிழந்து ஆத்திரமடைந்தார். கனிவாகப் பணிவாக மன்றாடியவர் குரலை உயர்த்திக் கடுமையாக்கி மிரட்டத் தொடங்கினார். “நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தம் நிச்சயமாகக் கைச்சாத்திடப்படும். இது இறையாண்மையுடைய இரு நாடுகளுக்கு மத்தியிலான உடன்பாடு. இதனை நீங்கள் எதிர்த்தால் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என மிரட்டினார் டிக்சிட். யோகரெத்தினம் யோகிக்கு இந்த மிரட்டல் இராஜதந்திரம் பிடிக்கவில்லை. “எவ்வகையான பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும்?” என்று நக்கலாகக் கேட்டார் யோகி.
“இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் வரை உங்களை இங்கு தடுப்புக் காவலில் நாம் வைத்திருப்போம்” என்றார் டிக்சிட்.
“நீங்கள் எங்களை வருடக்கணக்காகத் தடுப்புக் காவலில் வைத்தாலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. ஆயுதங்களைக் கையளிக்கப் போவதுமில்லை.” என்று சீறினார் பிரபாகரன்.
ஆவேசமடைந்த டிக்சிட் பிரபாகரனை வெறித்துப் பார்த்தபடி குரலை உயர்த்திக் கத்தினார். “நீங்கள் ஆயுதங்களைக் கையளிக்க மறுத்தால் இந்திய இராணுவத்தின் உதவியுடன் நாம் வலுவந்தமாக அவற்றைப் பறித்தெடுப்போம். சக்தி வாய்ந்த இந்திய இராணுவத்தின் முன்பாக உங்களது போராளிகள் வெறும் தூசு”, என்றார் டிக்சிட். பின்பு தனது சுங்கானை எடுத்து பிரபாகரனுக்கு காண்பித்தவாறு “இந்தச் சுங்கானை நான் பற்றவைத்து புகைத்து முடிப்பதற்குள் இந்திய இராணுவம் உங்களது போராளிகளை துவம்சம் செய்து விடும்” என்று குமுறினார்.
பிரபாகரன் ஆத்திரப்படவில்லை. ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தார். “உங்களால் எதைச் செய்யமுடியுமோ அதைச் செய்து பாருங்கள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.” என்று உறுதியாகச் சொன்னார் பிரபாகரன்.
கொதிப்படைந்தார் டிக்சிட். ஆத்திரத்தில் அவரது உதடுகள் நடுங்கின. “மிஸ்டர் பிரபாகரன், இத்துடன் நான்காவது தடவையாக நீங்கள் இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள்.” என்றார் அவர்.
“அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து நான் எனது மக்களைக் காப்பாற்றி இருக்கிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்றார் பிரபாகரன்.
இயல்பாகவே உணர்ச்சிவயப்படும் டிக்சிட் ஆத்திரத்தின் சிகரத்தை அடைந்தார். அந்நிலையில் அவரால் பேச முடியவில்லை. திடீரென எழுந்து அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.
மிரட்டி அழுத்தம் கொடுக்கும் இராஜதந்திர அணுகுமுறை மூலம், பிரபாகரனின் உறுதியான நிலைப்பாட்டை தளர்த்த முடியாது என உணர்ந்து கொண்ட இந்திய அதிகாரிகள், மென்மையான முறையைக் கையாண்டு அவரை இணங்க வைக்க முயன்றனர். இந்திய உள்ளகப் புலனாய்வுத் துறையின் அதிபர் திரு. எம்.கே.நாராயணன், வெளிவிவகார அமைச்சின் கூட்டுச் செயலர் திரு. சகாதேவ், வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த திரு. நிகில் சேத், கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தைச் சேர்ந்த திரு. ஹர்தீப் பூரி ஆகியோர் மாறி, மாறி ஒவ்வொருவராக எம்மைச் சந்தித்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் எடுத்து விளக்கினார்கள். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறி, அவை மூலம் தமிழ் மக்களின் நலன்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் என நாம் அவர்களுக்கு எடுத்துக் கூறியும் அவர்கள் தமது முயற்சியை கைவிடுவதாகத் தெரியவில்லை. ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றி பின்னர் பேச்சுக்களை நடத்தி, தீர்வுத் திட்டத்தை திருத்தியமைத்து, தமிழர்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் முழுமைப்படுத்தலாம் என வாதாடிய அவர்கள், ரஜீவ் காந்தி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் இணக்கப்பாடு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள். மென்மையான இராஜதந்திர அழுத்தத்திற்கும் பிரபாகரன் அசைந்து கொடுக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உருக்குப் போன்ற உறுதியுடன் நின்றார் அவர். எப்படியாவது ஒப்பந்தத்தை எம் மீது திணித்துவிட வேண்டும் என்ற முயற்சியும் சளைக்காது தொடர்ந்தது. புதுடில்லி அசோக் விடுதியில் இந்தத் திரைமறைவு இராஜதந்திர நாடகம் சில நாட்களாகத் தொடர்ந்தது. மணிக்கணக்கில், நாட்கணக்கில், தொடர்ந்து உரையாடி சலிப்படையச் செய்து, உறுதியைத் தளர்த்தும் இராஜதந்திர நுட்பம் பிரபாகரனிடம் பலிக்கவில்லை. இறுதியாக, தமது முயற்சியைக் கைவிட்ட இந்திய அதிகாரிகள், விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கிறார்கள் என ரஜீவ் காந்தியிடம் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளை இணங்கச் செய்வதற்கு ஒரு வழிமுறையாக தமிழக முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களை பயன்படுத்தலாம் என இந்தியப் பிரதமருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ரஜீவ் காந்திக்கு அதுவொரு நல்ல யோசனையாகத் தெரிந்தது. ஜுலை 26ஆம் நாள், இந்தியப் பிரதமரின் விசேட விமானத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் புதுடில்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
அன்றிரவே புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவர் பிரபாகரனும், நானும், யோகரெத்தினம் யோகியும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதல்வருடன் தமிழக உணவு மந்திரி திரு. பண்டுருட்டி இராமச்சந்திரனும், திரு. டிக்சிட்டும் இருந்தனர். சிரித்த முகத்துடன் எம்.ஜி.ஆர் எம்மை வரவேற்றார். நாங்கள் அங்கு சென்று அமர்ந்து கொண்டதையும் அலட்சியம் செய்தவாறு இந்தியத் தூதுவர் எம்.ஜி.ஆர். உடன் உரையாடிக் கொண்டிருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் அடங்கியுள்ள மாகாண சபைத் திட்டம் பற்றியும், இத் தீர்வு யோசனைகள் ஈழத் தமிழரின் நலன்களையும் அரசியல் அபிலாசைகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளதாகவும் விளக்கிக் கொண்டிருந்தார் டிக்சிட். உள்ளங்கையில் நாடியை ஊன்றியவாறு பொறுமையுடன் செவிமடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். ஒன்றுபட்ட தாயகமாக, தமிழ்மொழி வாரியான மாநிலமாக, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டிருக்கும் இத் தீர்வுத் திட்டத்தை சிங்களத் தீவிரவாத அரசியல்வாதிகள் மீது அழுத்தம் போட்டு இணங்க வைத்து ஒரு இராஜதந்திர சாதனையை இந்தியா நிலைநாட்டியுள்ளதாகப் புகழ் பாடிக் கொண்டிருந்தார் டிக்சிட். இப்படியான பிரமாதமான தீர்வுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஈழத் தமிழர் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவருமே இந்தியாவுக்கு என்றும் கடமைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பெருமிதப்பட்டார்.
“தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஏனைய அரசியற் கட்சிகளும் போராளி அமைப்புகளும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக ஆதரிக்கின்றன” என்று கூறிய டிக்சிட், எம்மைச் சுட்டிக் காட்டி, “இந்தப் பிரமுகர்கள் மட்டும் இந்த உடன்பாட்டை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்கமாட்டார்கள். ஆனால் இந்திய அரசு தனியரசு அமைக்கப்படுவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இந்தியாவை பகைத்துக் கொண்டால் பாரதூரமான விளைவுகளை இவர்கள் சந்திக்க நேரிடும்.” என்று மிரட்டினார் டிக்சிட்
யோகரெத்தினம் யோகிக்கு இனியும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியான அதிகாரப் பகிர்வு எதுவுமே இல்லை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதையுமே இத் தீர்வுத் திட்டம் நிறைவு செய்யத் தவறிவிட்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் தற்காலிகமானது. கிழக்கு மாகாணத்தின் பொதுசன வாக்களிப்பு என்ற நிபந்தனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்படியான வாக்களிப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மையான சிங்களவர்களும் முஸ்லிம்களும் இணைப்புக்கு எதிராக வாக்களித்தால் தமிழ்த் தாயகம் நிரந்தரமாகவே பிளவுபட்டுப் போகும். இப்படியான குறைபாடுகளைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் யோகரெத்தினம் யோகி. இதனைத் தொடர்ந்து யோகிக்கும் டிக்சிட்டுக்கும் மத்தியில் கடும் வாக்குவாதம் மூண்டது.
“சென்ற வாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த திரு. பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் அதிலுள்ள மாகாண சபைத் திட்டம் பற்றியும் உமக்கு விபரமாக விளக்கினாராம். அப்பொழுது ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்பொழுது எதிர்ப்புப் தெரிவிக்கிறீர்கள். என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ஒரு குண்டைப் போட்டார் டிக்சிட். யோகியும் விட்டுக் கொடுக்கவில்லை. “யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை” என மறுத்துரைத்தார் யோகி.
“அப்பொழுது என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?” என்று ஆத்திரத்துடன் சிறீனார் டிக்சிட். “நீங்கள் உண்மையைப் பேசவில்லை” என்றார் யோகி. பொறி பறந்து வாக்குவாதம் சூடுபிடித்தது. கோபாவேசத்தில் கண்கள் பிதுங்க, முதலமைச்சரைப் பார்த்து, “பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்” என்று கதறினார் டிக்சிட்.
ஒரு ஏளனப் புன்னகையுடன் மௌனம் சாதித்தார் பிரபாகரன். இந்த சுவாரஸ்யமான விவாதத்தில் குறுக்கிட்டுக் குழப்ப நான் விரும்பவில்லை. எம்.ஜி.ஆருக்கு நிலைமை சங்கடமாகியது. விவாதம் காழ்ப்புணர்வைச் சீண்டி வருவதையும், இந்திய தூதுவர் நிதானமிழந்து உணர்ச்சிவசப்படுகிறார் என்பதையும் உணர்ந்து கொண்டார் முதல்வர்.
“நான் அவர்களுடன் தனியே பேச விரும்புகிறேன். தயவு செய்து, நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா?” எனப் பண்பாக டிக்சிட்டை வேண்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர். தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் காரணத்தை வினவினார் எம்.ஜி.ஆர். ஒப்பந்தத்திலுள்ள அடிப்படையான குறைபாடுகளை தமிழகத் தலைவர்களுக்கு நாம் விரிவாக எடுத்து விளக்கினோம். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைத் திட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் எதனையும் நிறைவு செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினோம். பொதுசனக் கருத்து வாக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ் மாநிலத்தை தற்காலிகமாக இணைப்பதிலுள்ள ஆபத்தையும் தெளிவுபடுத்தினோம். ஈழத்து அரசியற் கட்சிகளும், ஏனைய விடுதலை அமைப்புகளும் இந்திய அரசின் அழுத்தத்திற்கும் மிரட்டலுக்கும் பணிந்து ஒப்பந்தத்தை ஆதரிக்கிறார்கள் என்றும், எமது மக்களின் அரசியல் இலட்சியத்தை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை என்பதையும் உறுதிபடக் கூறினோம். தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், தமிழரின் தாயக மண்ணை சிங்கள ஆயுதப் படைகள் ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில் எமது ஆயுதங்கள் அனைத்தையும் கையளித்து, எமது போராளிகளை சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது. அநீதியானது என்பதையும் எம்.ஜி.ஆரிடம் எடுத்துக் கூறினோம்.
மிகவும் பொறுமையுடன் எமது விளக்கத்தை கேட்டறிந்து கொண்டார் முதலமைச்சர். எமது நிலைப்பாட்டிலுள்ள நியாயப்பாட்டை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர – புவியியல் நலனைப் பேணும் நோக்கத்திற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் அவர் உணர்ந்து கொண்டார். இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிட்டாத சூழ்நிலையில் ஆயுதங்கள் கையளிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. அத்துடன் விடுதலைப் புலிகள் வசமிருந்து ஆயுதங்களில் கணிசமான தொகை தனது அன்பளிப்பு நிதியில் பெறப்பட்டது என்பதும் அவருக்குத் தெரியும். சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு நீங்காத சூழ்நிலையில் தமிழரின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கைவிடுவது ஆபத்தானது என்பதை அவர் ஏற்றுக் கொண்டார். பிரபாகரனின் உறுதி தளரா நிலைப்பாட்டைப் பாராட்டிய எம்.ஜி.ஆர், ஒப்பந்த விவகாரத்தில் புலிகளின் தலைமை எத்தகைய முடிவை எடுக்கின்றதோ அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார். முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினோம்.
முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே ஒரு இந்திய அதிகாரியுடன் கதைத்துக் கொண்டிருந்த திரு.டிக்சிட் எம்மை வழிமறித்தார். “ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?” என்று கேட்டார். நாம் சொல்வதறியாது தடுமாறி மௌனமாக நின்றோம். “முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்” என்றார் டிக்சிட். “அப்படியே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். நாம் உற்சாகத்துடன் அளித்த பதிலுக்குப் பின்னணியிலுள்ள புதிரை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பிரபாகரனின் அங்கீகாரத்தைப் பெறுவதில் தமிழக முதல்வரின் முயற்சி வெற்றிபெறவில்லை என இந்தியப் பிரதமருக்குத் தெரிய வந்தது. இதனால் ரஜீவ் காந்தி பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். எனினும் தனது முயற்சியைக் கைவிட அவர் தயாராக இல்லை. கொழும்பு சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்து இடுவதற்கு முன்பாக விடுதலைப் புலிகளின் தலைவரது அங்கீகாரத்தைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் ரஜீவ் காந்தி உறுதிபூண்டிருந்தார். எம்முடன் பேசி, எமது கருத்துக்களை கேட்டறிந்து, எமது இணக்கத்தைப் பெறுவதற்கு முயன்று பார்க்க அவர் முடிவெடுத்தார்.
1987 ஜுலை 28ஆம் நாள் நள்ளிரவு. அசோக் விடுதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிரபாகரனையும் என்னையும் அவசர அவசரமாக எழுப்பிய இந்தியப் புலனாய்வு அதிகாரிகள், பிரதமர் ரஜீவ் காந்தி எம்மை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறினார்கள். உடனடியாகப் புறப்படுமாறு பணித்தார்கள். ஆயுதம் தரித்த கரும்பூனை அதிரடிப் படையினரின் வாகன அணி பின்தொடர பிரதம மந்திரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வீட்டு வாசலில், வெள்ளை நிறத் தேசிய அங்கி அணிந்தவாறு எமக்காகக் காத்து நின்றார் பிரதமர். ரஜீவ் காந்தியுடன் இந்திய உள்ளகப் புலனாய்வுத் துறை அதிபர் திரு. நாராயணனும் தமிழக மந்திரி திரு. பண்டுருட்டி இராமச்சந்திரனும் நின்று கொண்டிருந்தனர். கவர்ச்சியூட்டும் புன்முறுவல் பூத்தபடி எம்மை அன்புடன் வரவேற்றார் பிரதமர். பிரபாகரனின் கரத்தைப் பற்றிக் குலுக்கியவாறு, “உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார் ரஜீவ் காந்தி. “இவர்களை நான் அறிமுகம் செய்து வைப்பது அவசியமில்லை. இவர்கள் உங்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள்” என்று திரு. இராமச்சந்திரனையும், திரு. நாராயணனையும் சுட்டியபடி சொன்னார் ரஜீவ் காந்தி. பிரதமரின் சந்திப்பு அறையில் கலந்துரையாடல் உடனே ஆரம்பித்தது. “இந்திய – இலங்கை உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக அறிந்தேன். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றி விபரமாகக் கூறுவீர்களா?” என்று கேட்டார் ரஜீவ். எமது நிலைப்பாட்டை விபரமாக விளக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளை நான் ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.
முதலில், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமான, நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் யாப்பின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப் பகிர்வு செய்வது இயலாத காரியம் என விளக்கினேன்.
பரந்த நிறைவேற்று அதிகாரங்களையுமுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஒரு இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்கம் செய்துள்ளது. இந்த ஆட்சியமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒற்றையாட்சி யாப்பை இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிபந்தனையின்றி முழுமையாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, நியாயபூர்வமாக அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக் காட்டினேன்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளில் பல குறைபாடுகள் உள்ளதெனச் சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.
தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கை தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான பெருநிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம், அவர்களது பாரம்பரிய தாயக நிலம். இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதையும் ரஜீவ் காந்தியிடம் எடுத்துரைத்தேன். வடகிழக்கு மாகாணங்கள் தனித்தவொரு நிர்வாகப் பிரதேசமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருப்பது ஒரு ஆக்கபூர்வமான சாதனை. ஆயினும் இந்த இணைப்பு தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசனக் கருத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஏனென்றால், வாக்கெடுப்பில் சிங்கள முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால் வடகிழக்கு நிரந்தரமாகப் பிளவுபடுவதுடன், தமிழ்த் தாயகம் காலப் போக்கில் சிதைந்து விடும் என விளக்கினேன். பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துக்களைக் கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், அவ்வப்போது குறிப்புகளை எடுத்தார்.
மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் விளக்கினேன். “வடகிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். தமிழ் மக்களுக்கு விரோதமானவர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை” என்று கூறினார் பிரபாகரன்.
இறுதியாக, விடுதலைப் புலிப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைக் களையும் விவகாரத்தை எடுத்துக் கொண்டோம். “இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்கவேண்டுமென விதிப்பது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடி, உயிர்களைத் தியாகம் செய்து பெறப்பட்ட ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள் சரணடையுமாறு ஒப்பந்தம் வற்புறுத்துகிறது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்பாக, தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னராக, எமது மக்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ் வகையிலும் நியாயமாகாது.” என்றார் பிரபாகரன்.
நாம் உரையாடி முடிக்கும்வரை, குறுக்கிட்டுப் பேசாது, பொறுமையுடன் எமது கருத்துகளை மிகக் கவனத்துடன் கேட்டறிந்தார் இந்தியப் பிரதமர். சர்ச்சைக்குரிய விடயங்களை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டார். நாம் முடித்ததும், “உங்களது பிரச்சினைகளை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது,” என்றார் ரஜீவ் காந்தி.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட மாகாண சபைத் திட்டம் ஒரு தற்காலிக ஒழுங்குதான் எனக் கூறிய அவர், அதிலுள்ள குறைபாடுகளை பின்னராக ஜெயவர்த்தனா அரசுடன் பேசி நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாக உறுதியளித்தார். “கட்டம் கட்டமாகவே தமிழரின் பிரச்சினையை அணுகித் தீர்வுகாண முடியும். ஒரே தடவையில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது. கடுமையான முயற்சியின் பின்பு இணைக்கப்பட்ட மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு பிரதேச சுயாட்சியைப் பெற்றுள்ளோம். இதுவொரு பெரிய முன்னேற்றம்” என்றார் ரஜீவ்.
இந்த ஒப்பந்தத்தில், நாம் சுட்டிக் காட்டியது போல நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர், வடகிழக்கின் நிரந்தர இணைப்பை கருத்து வாக்கெடுப்புக்கு விடுவதிலுள்ள சிக்கலைப் புரிந்துள்ளதாகக் கூறினார். “இது பற்றி நான் ஜெயவர்த்தனாவுடன் பேசுவேன். கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் அதனை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்வேன். எதற்கும் நீங்கள் இந்திய அரசை நம்ப வேண்டும். தமிழ் மக்களின் நலனை மேம்பாடு செய்வதில்தான் நாம் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறோம். எனவே, உங்களது அமைப்பின் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்குத் தேவை. தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுத்து, அவர்களது பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தும். இந்த ஒப்பந்தத்தை நீங்கள் ஆதரித்தால் அது எமது கைகளைப் பலப்படுத்துவது மட்டுமன்றி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் ஏதுவாக அமையும்” என விளக்கினார் ரஜீவ் காந்தி. இந்தக் கட்டத்தில் குறுக்கிட்டார் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரன். ரஜீவ் காந்தி கூறியவற்றை தமிழில் மொழிபெயர்த்து ஒரு விரிவான விளக்கம் அளித்தார் அவர். ரஜீவின் கூற்றுகளும், பண்டுருட்டி அளித்த விளக்கங்களும் பிரபாகரனுக்கு திருப்தி அளிக்கவில்லை.
“இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக, தமிழ் மக்களின் நலனைப் பாதிக்கிறது. ஆகவே, இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பிரபாகரன். புலிகளின் தலைவரது கூற்றை, சொல்லுக்குச் சொல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் அமைச்சர் இராமச்சந்திரன். தனது நிலைப்பாட்டில் பிரபாகரன் உறுதியாக, இறுக்கமாக நிற்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் ரஜீவ். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு, தனது முயற்சியை முறித்துக் கொள்ள விரும்பாத பிரதமர், திடீரென தனது அணுகுமறையை மாற்றிக் கொண்டார்.
“உங்களது நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ, கொள்கையையோ மாற்றச் சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில். ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தால் போதும்.” என்றார் ரஜீவ் காந்தி. அவ்வேளை தலையிட்டுப் பேசிய பண்டுருட்டி இராமச்சந்திரன் ரஜீவ் காந்தியின் கூற்றுக்கு மெருகூட்டி ஒரு விளக்கம் கொடுத்தார். “இது ஒரு அற்புதமான திருப்பம் அல்லவா? பிரதம மந்திரியே உங்களது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். இந்தச் சிறிய சலுகையையாவது இந்திய அரசுக்கு நீங்கள் செய்யக் கூடாதா?” என்று கேட்டார் தமிழக அமைச்சர்.
ரஜீவின் கூற்றும் அதற்கு திரு. இராமச்சந்திரன் அளித்த விளக்கமும் பிரபாகரனுக்கும் எனக்கும் திருப்தி அளிக்கவில்லை. “ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அதை நாம் எதிர்க்கிறோம் என்பதுதானே அர்த்தம். ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதேவேளை எதிர்க்காமலும் இருப்பது எப்படி? இதுவொரு விந்தையான வாதம்” என்று எனது காதுக்குள் குசுகுசுத்தார் பிரபாகரன். தனது கூற்றிலுள்ள புதிரை நாம் புரிந்து கொண்டோம் என்பதை உணர்ந்த பிரதமர், பிரச்சினையை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றார்.
“உங்களது இயக்கத்திற்கும், உங்களது மக்களுக்கும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா மீது நம்பிக்கையில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். எனக்கும் அவர் மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர் மீது கடுமையான அழுத்தம் பிரயோகித்து, முக்கியமான சலுகைகளைப் பெற்று இந்த ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம். மாகாண சபைத் திட்டத்தில் குறைகள் இருக்கலாம். எனினும் நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி, பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். இந்த மாகாண சபைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஆதலால் அந்தக் கால இடைவெளியில், வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவ முடியும். அந்த இடைக்கால அரசில் உங்களது அமைப்பு பிரதான பங்கை வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஒரு இடைக்கால அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்” என்றார் ரஜீவ் காந்தி.
பாரதப் பிரதமரின் யோசனை பண்டுருட்டி இராமச்சந்திரனை பரவசத்தில் ஆழ்த்தியது. உற்சாகம் மேலிட உணர்ச்சிவசப்பட்ட அவர், “இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவவிடவேண்டாம். தமிழ்த் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம். அதற்கு முன்னராக ரஜீவ் – பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம்.” என்று கூறினார்.
ஆழமான சிந்தனையில் ஆழ்ந்துபோயிருந்தார் பிரபாகரன். இந்த இரகசிய ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உறுதிமொழிகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. எதிலுமே ஆர்வம் காட்டாது தனக்குள்ளே தியானத்தில் ஒடுங்கிப் போயிருந்தார் அவர். ஆனால் பண்டுருட்டி இராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன் ரஜீவ் – பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு பிரமாதமான வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.
மாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர், வடகிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு, அதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. சகல தமிழ்ப் போராளி அமைப்புகளுக்கும் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென ரஜீவ் காந்தி கேட்டுக் கொண்டார். அதற்குப் பிரபாகரன் இணங்கவில்லை. இறுதியில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்புக்கும் மட்டும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவதென இணக்கம் காணப்பட்டது. வடகிழக்கு இடைக்கால ஆட்சியின் கட்டமைப்பு, அதிகாரம், செயற்பாடு போன்ற விடயங்களை அரச அதிபர், ஜெயவர்த்தனாவுடன் பேசி முடிவு எடுப்பதாக ரஜீவ் காந்தி உறுதியளித்தார்.
தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசாங்கம் காவல்துறை நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ரஜீவ் காந்தி இணக்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு வரி வசூலித்து வருவதாகச் சிறீலங்கா அரசு குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்த பிரதமர், இந்த வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா என வினவினார். மக்களிடமிருந்து பெறப்படும் வரிப் பணம் எமது அமைப்பின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுவதாகக் கூறிய பிரபாகரன், அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தர இணங்கினால் வரி அறவிடுவதை கைவிடலாம் என்றார். விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செலவுக்காக மாதாந்தம் ஐம்பது லட்சம் ரூபா (இந்திய நாணயமாக) வழங்குவதற்கு இணங்கினார் ரஜீவ். வரி வசூலிப்பை நிறுத்துவதாக வாக்களித்தார் பிரபாகரன்.
அடுத்ததாக, விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்கும் சர்ச்சைக்குரிய விவகாரம் பற்றிப் பேசப்பட்டது. “உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லாப் படையணிகளையும் கலைத்துவிடுமாறும் நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாகச் சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். இந்திய – இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் செயற்படுகிறார்கள் என சிறீலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்பவைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது முக்கியம். தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயற்படும். அத்துடன் சிங்கள ஆயுதப் படைகள் போர்நிறுத்தம் பேணியவாறு முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?” என்று கூறினார் ரஜீவ் காந்தி.
பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாகச் சிந்தித்தபடி இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்டார் பண்டுருட்டி. “எதற்காகக் கடுமையாக யோசிக்க வேண்டும்? இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த, பாவிக்கமுடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றைக் கையளித்தால் போச்சு” என்றார் இராமச்சந்திரன்.
“இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவை எல்லாமே பழுதடைந்த, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள்தான்” என்று கிண்டலாகப் பதிலளித்தார் பிரபாகரன்.
“பரவாயில்லையே, அந்தப் பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம்.” என்றார் அமைச்சர்.
தமிழ் மொழியில் நிகழ்ந்த இந்த சுவையான உரையாடலின் அர்த்தத்தை அறிய விரும்பினார் ரஜீவ். அதனை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார் பண்டுருட்டி. அதை ஆமோதித்தபடி புன்முறுவலுடன் தலையசைத்தார் பிரதம மந்திரி.
அப்பொழுது அதிகாலை இரண்டு மணி இருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவருடன் ஏதோவொரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார் ரஜீவ் காந்தி. அன்று காலை ஒன்பது மணியளவில் அவர் புதுடில்லியிலிருந்து கொழும்பு புறப்பட ஏற்பாடாகியிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட வேண்டும். இந்தியப் பிரதமரிடம் எந்தவிதமான சோர்வோ, களைப்போ தென்படவில்லை. ஏதோவொரு சாதனை ஈட்டியது போல தெம்பாகக் காணப்பட்டார். பண்டுருட்டி இராமச்சந்திரனுக்குப் பரம திருப்தி. ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார் பிரபாகரன். அவரது கண்களில் ஏமாற்றமும் சோகமும் தெரிந்தது. சந்திப்பு முடிவடையும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்டுருட்டியிடம் கேட்டேன். “ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் எனப் பல முக்கிய விடயங்கள் இங்கு பேசப்பட்டன. பிரதம மந்திரி அவர்களும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இவற்றை எல்லாம் எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கைச்சாத்துப் பெற்றால் என்ன? அது இந்த இரகசிய உடன்பாட்டுக்கு வலுச்சேர்க்கும் அல்லவா?” என்றேன்.
எனது யோசனை பண்டுருட்டி இராமச்சந்திரனை ஆட்டம் காண வைத்தது. ஒரு கணத்தில் அவரது முகத்திலிருந்த மகிழ்ச்சி எல்லாம் மறைந்து போனது. சிறிது நேரம் யோசித்தார். “மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் நாம் இணக்கப்பாடு கண்டோம். கறுப்புப் பணமாக மாதாந்தம் உங்களுக்கு கப்பம் வழங்குவதிலிருந்து ஆயுதக் கையளிப்பிலும் ஒளிவு மறைவாக உடன்பாடு செய்திருக்கிறோம். இந்த விடயங்கள் அம்பலமானால் அது இந்தியாவிலும் இலங்கையிலும் பெரியதொரு அரசியற் சூறாவளியை உண்டுபண்ணும் அல்லவா? எமது பிரதமரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இது ஒரு Gentlemen Agreement. இரு உத்தமமான மனிதர்களின் எழுத்தப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?” என்றார் அமைச்சர் பண்டுருட்டி. தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ரஜீவ் காந்திக்கும் விளக்கினார்.
“நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத Gentlemen Agreement ஆக இருக்கட்டும்” என்றார் ரஜீவ் காந்தி. இந்த விடயத்தில் நாம் பிரதம மந்திரியுடன் முரண்பட விரும்பவில்லை. அத்தோடு இந்த இரகசிய ஒப்பந்தத்தில் பிரபாகரனும் எவ்வித அக்கறை காட்டுவது போலவும் தெரியவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல்பற்றி பிரதமரிடம் முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரை யாழ்ப்பாணம் அனுப்புவதற்கு உடன் ஒழுங்கு செய்வதாக உறுதியளித்தார் ரஜீவ்.
ரஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோக் விடுதிக்கு நாம் போய்ச்சேர அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. “அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை” என்று விரக்தியுடன் கூறிவிட்டு தனது அறைக்குள் சென்றார் பிரபாகரன்.
சோர்ந்து களைத்து எனது அறைக்குள் சென்றபோது விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. இந்தியப் பிரதமருடன் நடந்த கலந்துரையாடல் பற்றியும், ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் பற்றியும், திலீபனிடம் விபரமாகக் கூறினேன். எல்லாவற்றையும் மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவன், “அண்ணா என்ன சொல்கிறார்” எனக் கேட்டான். “பிரபாகரனுக்கு திருப்தியில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இல்லை” என்றேன். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, “அண்ணன் நினைப்பதுதான் நடக்கும்” என்றான் திலீபன். உண்மையில் அப்படித்தான் நடந்தது. ரஜீவ் – பிரபா ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் நிறுவப்படவில்லை.
மறுநாள் காலை இந்தியப் பிரதமர் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார். பிற்பகல் நடைபெற்ற ஆடம்பர வைபவத்தின் போது ரஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். எம் மீதான தடுப்புக் காவல் அகற்றப்பட்டதால் நாம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றோம். 1987 ஆகஸ்ட் 2ஆம் நாள், பிரபாகரனும், யோகரெத்தினம் யோகியும், திலீபனும் இந்திய இராணுவ விமானம் மூலம் யாழ்ப்பாணம் சென்றடைந்தனர்.
பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனம்
இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான இந்தியத் துருப்புகள் பலாலி விமானத் தளம் ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தன. அமைதி காக்கும் படை என்ற பெயரில் தமிழர் தாயகத்தினுள் நுழைந்த இந்தியப் படையணிகள், டாங்கிகள், பீரங்கிகள், மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்ற ரீதியில் கனரக ஆயுதங்களைத் தாங்கி வந்தன. இந்திய – இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைய, சிங்கள ஆயுதப் படைகள் முகாம்களுக்குள் முடங்கிக் கொள்ள, தமிழ் பேசும் சென்னைப் படையணி உட்பட, இந்திய இராணுவ வீரர்கள் யாழ்ப்பாண வீதிகளூடாக அணிவகுத்துச் சென்றனர். வரலாற்று ரீதியாகப் பாரத தேசத்தை நண்பனாகவும் பாதுகாவலனாகவும் வழிபட்ட தமிழ் மக்கள், இந்திய இராணுவத்தினரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மாலையிட்டு வரவேற்றனர். நிரந்தரமான அமைதி பிறந்துவிட்டது போன்ற உணர்வுடன் ஆனந்தம் அடைந்தனர்.
தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிலவிய அதேவேளை, தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இந்தியாவுக்கு எதிரான பகையுணர்வு தாண்டவமாடியது. ஆர்ப்பாட்டங்கள், கண்டன ஊர்வலங்கள் நடத்தி சிங்கள மக்கள் இந்தியாவுக்கு எதிராகக் குரலெழுப்பினர். மாக்சிய தீவிரவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியது. இலங்கையின் உள்விவகாரத்தில் அத்துமீறித் தலையிட்டுள்ளதாக இந்திய அரசு மீது ஜே.வி.பி. குற்றம் சுமத்தியது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியதன் விளைவாக தென்னிலங்கையில் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை எழுந்தது. சிங்கள தேசத்தில் இந்திய எதிர்ப்புணர்ச்சி வலுப்பெற்று வந்த வேளையில், தமிழர் தாயகத்தில் விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் குறித்து ஒரு குழப்ப நிலை எழுந்தது. விடுதலைப் புலிகளின் அரசியற் திட்டம் பற்றியும் இந்திய அரசுடனான உறவு பற்றியும், இந்திய – இலங்கை ஒப்பந்தம் குறித்து எமது அமைப்பின் நிலைப்பாடு பற்றியும் எமது போராளிகளுக்கு மட்டுமன்றி, எமது மக்களுக்கும் ஒரு தெளிவான விளக்கம் கொடுக்க நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். பொதுமக்கள் போராளிகள் மத்தியில் ஒரு கொள்கை விளக்க உரையை நிகழ்த்த தலைவர் பிரபாகரன் முடிவெடுத்தார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் கூட்ட நிகழ்வு 1987 ஆகஸ்ட் 4ஆம் நாள் நிகழ்ந்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றித் தலைவர் பிரபாகரன் என்ன சொல்லப் போகின்றார் என்பதைக் கேட்டறியும் ஆர்வத்துடன் ஒரு லட்சம் மக்களைக் கொண்ட பெரும் அளவிலான சனத் திரள் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் அணிதிரண்டது. பிரபாகரன் தனது உரையை ஆரம்பித்தார்.
“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவது போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டது போல, இந்தத் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இதன் விளைவுகள் எமக்கு சாதகமாக அமையுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதிகளாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல், இந்தியாவும் இலங்கையும் செய்து கொண்ட ஒப்பந்தம் இப்பொழுது அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி என்னை டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்கும் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தத் தீர்வு ஏற்படுமா என்பது பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது. ஆகவே இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெட்டத் தெளிவாக விளக்கினோம்.
ஆனால் நாம் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாது போனாலும் இந்த ஒப்பந்தத்தை அமுலாக்கியே தீருவோமென இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது. இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. இலங்கையில் அந்நிய நாசகார சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது. ஆகவேதான் இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்வதில் அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதே சமயம், ஈழத் தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது. ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது, எமது கருத்துக்களைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக ஆட்சேபித்தோம். ஆனால் நாம் ஆட்சேபித்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும் பொழுது நாம் என்ன செய்வது?
இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது; எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது; எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது; எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக, இரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனைகள் ஈட்டி எத்தனையோ உயிர்ப்பலி கொடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒரு சில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது. திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணிகளாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ரஜீவ் காந்தி அவர்கள் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் எமது பிரச்சினைகளை மனம் திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசில் எமக்கு துளிகூட நம்பிக்கை இல்லையென்பதையும் இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் அவரிடம் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். எமது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில்தான் நாம் இந்திய சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்தோம்.
நாம் எமது மக்களின் பாதுகாப்பிற்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது இலட்சியப் பற்றும், தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்பிற்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விமோசனத்திற்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தைத்தான் குறிக்கிறது.
நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக் கூற விரும்புகின்றேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை; சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட்சியம் வெற்றி பெறுவதானால் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும்.
தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்று தனது உரையை முடித்தார் பிரபாகரன்.
“நாம் இந்தியாவை நேசிக்கிறோம்” என்ற தலைப்புடன் புகழீட்டிய பிரபாகரனின் சுதுமலைச் சொற்பொழிவு இலங்கையிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி உலக ஊடகங்களிலும் முக்கியம் கொடுத்துப் பிரசுரமாகியது. மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் செதுக்கப்பட்ட உரையென பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தை சில இந்தியப் பத்திரிகைகள் பாராட்டின. இந்தியாவின் புவியியல் – கேந்திர நலனுக்கும், தேச சுதந்திரம் வேண்டும் ஈழத் தமிழரின் அபிலாசைக்கும் மத்தியில் எழுந்துள்ள முரண்பாட்டினை மதிநுட்பமாக சமநிலைப்படுத்தும் வகையில் இந்த உரை அமைந்திருப்பதாக இப் பத்திரிகைகள் கருத்து தெரிவித்தன. ஒருபுறம் இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் நேசமும், மறுபுறம் சிங்கள இனவாத அரசு மீது வெறுப்புமாக இரு முரண்பட்ட உணர்வலைக்குள் சிக்குண்டு அங்கலாய்க்கும் புலிகளின் தலைவரது மனநிலையை இந்த உரை சித்தரித்துக் காட்டுவதாக ஒரு இந்திய நாளிதழ் எழுதியது.
சுதுமலைப் பிரகடனத்தில் பிரபாகரன் வாக்களித்ததுபோல, மறுநாள் ஆகஸ்ட் 5ஆம் நாள், கணிசமான தொகை ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய அமைதிப் படையிடம் கையளித்தது. இந்த ஆயுதக் கையளிப்பு வைபவம் ஒரு ஆடம்பரமான சடங்காகப் பலாலி விமானத் தளத்தில் இடம்பெற்றது. விடுதலைப் புலி கெரில்லா வீரர்களிடமிருந்து ஆயுதக் களைவு நடைபெறும் வைபவத்திற்கு பரந்த அளவில் விளம்பரம் கொடுக்கும் நோக்கத்துடன் நூறு பேருக்கும் மேற்பட்ட இலங்கை, இந்திய, வெளிநாட்டு ஊடகவியலாளர் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த வைபவத்தில் சிறீலங்கா அரச அதிபரின் பிரதிநிதியாக பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சேபால அட்டிகலை கலந்து கொண்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய அமைதிப் படையின் உயரதிகாரிகளான ஜெனரல் திபேந்தர் சிங், ஜெனரல் ஹாக்கிரட் சிங் ஆகியோர் பங்குகொண்டனர். இந்திய அமைதிப் படையையும், சிறீலங்கா ஆயுதப் படைகளையும் சேர்ந்த அதிகாரிகளும் வைபவத்தைச் சிறப்பிக்க வந்திருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வமான பிரதிநிதியாக திரு. யோகரெத்தினம் யோகி இவ் வைபவத்தில் கலந்து கொண்டார்.
இந்த வைபவத்தின்போது, ஆயுதச் சரணடைவின் குறியீடாக, ஒரு ஜேர்மானிய மௌசர் கைத்துப்பாக்கியை யோகரெத்தினம் யோகி ஜெனரல் அட்டிகலையிடம் கையளிக்க ஏற்பாடாகியிருந்தது. விடுதலைப் புலிகளின் தன்மானமுடைய ஒரு இளம் அரசியல் பொறுப்பாளர் என்ற ரீதியில் இந்த ஆயுதச் சரணடைவுப் பாத்திரத்தை அவர் ஆழமாக வெறுத்தார். பலத்த அழுத்தத்தின் பேரில் மிகவும் தயக்கத்துடனேயே இந்த வைபவத்திற்கு அவர் சமூகமளித்தார். வைபவத்தின்போது அவர் யாருடனும் பேசவில்லை. மிகவும் இறுக்கமான மௌனம் சாதித்தார். முகத்தையும் கடுகடுப்பாக வைத்துக் கொண்டார். வைபவம் ஆரம்பமாகி, சரணடைவு நிகழ்வு வந்தபோது, எல்லோரையுமே வியப்பில் ஆழ்த்தும் வகையில் திடீரென எழுந்த யோகரெத்தினம் யோகி, மேசைமீது கைத்துப்பாக்கியை வைத்துவிட்டுத் தனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். குறியீடான ஆயுதச் சரணடைவு நிகழ்வைப் படமெடுக்கக் காத்திருந்த ஊடகவியலாளர் அனைவருமே ஏமாற்றம் அடைந்தனர். யோகியின் இந்தச் செயற்திறனை தலைவர் பிரபாகரன் பின்பு பாராட்டவும் தவறவில்லை. யோகியின் சாதுரியத்தால் ஏமாற்றமும் சங்கடமும் அடைந்த ஜெனரல் அட்டிகலை மேசை மீதிருந்த கைத் துப்பாக்கி மீது உள்ளங்கையை ஊன்றியவாறு, மிகச் சுருக்கமான தனது அறிக்கையை வாசித்தார். “எமது சனநாயகச் சமுதாயத்தை பரந்த அளவில் பாதித்த வன்முறைக்கும் இரத்தக் களரிக்கும் முடிவுகட்டும் ஒரு குறியீடாக இந்த ஆயுதக் கையளிப்பு அமைகிறது.” என்றார். உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தன்வசமுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் கையளிக்கவில்லை. வடகிழக்கில் இடைக்கால நிர்வாக ஆட்சி அமைக்கப்பட்டு, அது விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே மிகுதியான ஆயுதங்கள் கையளிக்கப்படுமென இந்திய அமைதிப் படைத் தலைமைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. “இந்திய அரசு வழங்கிய ஆயுத தளபாடங்களில் ஒரு தொகுதியை, அதுவும் பழுதடைந்த, பயன்படுத்த முடியாத, பழைய ஆயுதங்களை இரண்டு வாகனங்களில் ஏற்றி வந்து கையளித்தனர் விடுதலைப் புலிகள்” என்று இவ் வைபவம் பற்றி ஒரு இந்திய பத்திரிகையாளர் எழுதினார்.
ஒப்பந்தம் தோல்வியுற்றதன் காரணங்கள்
பிரதமர் ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்டது போல, எமது நல்லெண்ணத்தின் குறியீட்டுச் சமிக்கையாக எமது ஆயுதங்களின் ஒரு தொகுதியை இந்திய இராணுவத்திடம் கையளித்த பின்னர், இடைக்கால நிர்வாக அரசை நிறுவுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கப் போகிறது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமைபீடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆயினும் இவ் விடயத்தில் இந்திய அரசு எவ்வித முன்முயற்சிகளையும் எடுப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அதேவேளை, தமிழர் தாயகத்தில் அரச நிர்வாக இயந்திரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிறீலங்கா அரசு பல புதிய காவல்துறை நிலையங்களைத் திறந்து வைத்தது. அத்துடன் அரசாங்கத்தின் ஆதரவோடு தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத் திட்டங்களும் நிறுவப்பட்டன. புதிய குடியேற்றத் திட்டங்களுக்குச் சிங்கள இராணுவ முகாம்கள் பாதுகாப்பு அரண்களாக அமைந்தன. விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செலவினங்களாக இந்தியப் பிரதமர் உறுதியளித்த நிதியுதவி ஒரு மாதக் கொடுப்பனவுடன் நிறுத்தப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட, ஒரு விவகாரம் மட்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆழமாகப் பாதித்தது. எமது அமைப்புக்கு விரோதமாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற இயக்கங்களைச் சேர்ந்த ஆயுதம் தரித்த அங்கத்தவர்கள் பெரும்தொகையில் இந்தியாவிலிருந்து தமிழீழம் வந்தடைந்தனர். விடுதலைப் புலிப் போராளிகளால் கைது செய்யப்பட்ட இந்த ஆயுததாரிகள் சிலரின் வாக்குமூலப்படி தமிழீழம் வந்திறங்கிய அனைவரும் றோ புலனாய்வுத் துறையினரால் புதிதாகப் பயிற்றப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டவர்கள் ஆவர். ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இரவுவேளையில் இரகசியமான முறையில் கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் இறக்கப்பட்டனர். அதேவேளை, ரெலோ உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட கரையோரக் கிராமங்களை வந்தடைந்தனர். இவ் விரோதச் சக்திகளின் திடீர் வருகையால், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அங்குமிங்குமாக நிகழ்ந்த ஆயுத மோதல்களில் புலிகள் தரப்பில் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையினரிடம் இவ் விவகாரம் குறித்து முறைப்பாடு செய்தபோதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனர். இதனால் பிரபாகரன் விரக்தியும் கோபமும் அடைந்தார்.
ரஜீவ் – பிரபா இரகசிய ஒப்பந்தம் எனக் கூறி, வாக்குறுதிகளை அளித்த இந்தியப் பிரதமர், அவற்றை நிறைவுசெய்யத் தவறியமை குறித்து ஆழ்ந்த வேதனை அடைந்தான் திலீபன். யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அரசியல் போராளியாக விளங்கிய திலீபன், இந்திய அரசின் நம்பிக்கைத் துரோகத்தை உலகிற்கு அம்பலப்படுத்த விரும்பினான். எம்முடன் டில்லிக்கு வந்து ரஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட Gentlemen Agreement பற்றிய முழு விபரங்களும் என்னிடமிருந்து அறிந்து வைத்திருந்த திலீபன், அந்தக் கைச்சாத்திடப்படாத ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி சாகும் வரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்க முடிவெடுத்தான். ‘சுதந்திர வேட்கை’ என்ற தனது நூலில் எனது மனைவி அடேல் பாலசிங்கம் திலீபனின் உண்ணாவிரதம் பற்றியும் அவனது அற்புதமான உயிர்த் தியாகம் பற்றியும் விபரமாக விளக்கியிருக்கிறார். எனவே, இந் நிகழ்வை இந் நூலில் மீண்டும் விபரிப்பது அவசியமில்லை. திலீபனின் தியாகம் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வு. தனிமனிதனாகத் துணிந்து நின்று ஆசிய வல்லரசுக்கு எதிராக அறப்போர் நிகழ்த்தினான் அந்த மாவீரன். ஈடிணையற்ற அவனது அர்ப்பணிப்பால் தமிழர் தேசம் ஒன்றுபட்ட சக்தியாக எழுச்சி கொண்டு, இந்திய வல்லாதிக்கம் பற்றிப் புதிய விழிப்புணர்வு பெற்றது.
திலீபனது சாகும் வரை நோன்பின் இறுதி நாட்களில், அவன் மரணத்தின் வாயிலை அண்மித்த வேளையில் பலாலி விமானத் தளத்தில், இந்திய அமைதி காக்கும் படையின் தலைமைச் செயலகத்தில் பிரபாகரனும் நானும் இந்தியத் தூதுவர் திரு. டிக்சிட்டைச் சந்தித்தோம். சாவுடன் போராடிக் கொண்டிருக்கும் திலீபனது அறப் போராட்டத்திற்கு பின்னால் அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு நிற்பதாக டிக்சிட்டுக்கு நிலைமையை எடுத்து விளக்கிய நாம், திலீபனை வந்து சந்தித்து ஆறுதல் மொழி கூறுமாறு வேண்டினோம். கொடுத்த வாக்குறுதிகளை இந்திய அரசு நிறைவேற்றி வைக்கும் என இந்தியத் தூதுவர் அவனுக்கு உறுதியளித்தால் அவன் நிச்சயமாகத் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுவான் என டிக்சிட்டிடம் மன்றாட்டமாகக் கேட்டோம். ஆனால் அந்த மனிதர் அதற்கு மறுத்துவிட்டார். எமது அமைப்புக்குப் பின்னணியில் ஒரு சூழ்ச்சிகரமான சதி இருக்கலாமென அவர் கருதினார். இந்த விடயம் பற்றி அவர் தனது நூலில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறார்.
“இந்த அழைப்புக்குப் பின்னால் ஒரு சதித் திட்டம் இருப்பதாக, இந்திய அமைதிப் படையினரும் எமது புலனாய்வுத் துறையினரும் எனக்கு அறிவித்தனர். இத் திட்டத்தின்படி திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு என்னை அழைத்துச் சென்று, அங்கு இந்தியாவுக்கும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கும் எதிராகப் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்தி, அங்கு பகிரங்கமாக எனது வேண்டுகோளை நிராகரித்து, இந்திய தூதரின் முயற்சி தோல்வியில் முடிந்ததாக விளம்பரம் செய்வதுதான் நோக்கம். இந்திய அரசாங்கத்தை இப்படியாக அவமானப்படுத்துவதற்கு இடமளிக்க கூடாதென நான் உறுதியாக முடிவெடுத்தேன்.”22
இந்தியத் தூதுவர் டிக்சிட் எண்ணியதுபோல இந்திய அரசை அவமானப்படுத்தும் சதித் திட்டம் எதுவும் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. திரு. டிக்சிட் உருவகித்த சதி திட்டம் அவரது கற்பனாவுலகில்தான் உதித்திருக்க வேண்டும். நல்லதொரு நல்லெண்ணச் சந்தர்ப்பத்தை நழுவவிட்ட இந்தியத் தூதுவர் தனது தவறை நியாயப்படுத்த புனைந்த கட்டுக்கதைதான் இந்தச் சதித் திட்டம். எமது வேண்டுகோளுக்கு அமைய, திலீபனை சந்தித்து திரு. டிக்சிட் உறுதிமொழி அளித்திருந்தால் அவனது சாவை நிறுத்தி, அந்த மாபெரும் துன்பியல் நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம். அத்துடன் முக்கியமாக இந்திய – புலிகள் முரண்பாட்டையும் பகையுணர்வையும் நீக்கி நல்லுறவை வளர்த்திருக்கலாம்.
திலீபனின் வீரச் சாவும், அதனால் இந்திய அரசு மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கொதிப்புணர்வும் புதுடில்லி ஆட்சிப் பீடத்திற்குச் சங்கடத்தைக் கொடுத்தது. அது ரஜீவ் காந்தியின் மனச்சாட்சியையும் உறுத்தியிருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கிய பங்கு அளித்து, வடகிழக்கிற்கென ஒரு இடைக்கால நிர்வாக அரசை நிறுவும்படி அரச அதிபர் ஜெயவர்த்தனாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு டில்லி அரசு டிக்சிட்டைப் பணித்தது. இந்தப் பணிப்பை அடுத்து, பலாலியிலுள்ள இந்திய அமைதிப் படையின் தலைமைச் செயலகத்தில் இடைக்கால நிர்வாக அரசு பற்றி திரு. டிக்சிட் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்தினார். தலைவர் பிரபாகரனுடன் நானும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றினேன். திரு. டிக்சிட்டுடன் கொழும்பிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் பேச்சுக்களில் கலந்து கொண்டனர். விரிவான பேச்சுக்கள் பல நாட்களாகத் தொடர்ந்தன. ஒரு இடைக்கால நிர்வாக சபைக்கான அதிகாரம், செயற்பாடு, கட்டமைப்பு போன்ற விடயங்களில் இறுதியாக இணக்கப்பாடு ஏற்பட்டது. ஆரம்பப் பேச்சுக்களின்போது சட்டம் ஒழுங்கு, வரிவசூலிப்பு போன்ற விடயங்களில் இடைக்கால நிர்வாக சபைக்கு போதிய நிர்வாக அதிகாரங்களை வழங்க ஜெயவர்த்தனா தயங்கினார். நீண்ட இழுபறியின் பின்னர், சட்டம் ஒழுங்கைப் பேணும் விடயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்குவதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார். ஆயினும், நாட்டின் அரச அதிபர் என்ற ரீதியில், இடைக்கால நிர்வாக சபையின் பிரதம நிர்வாக அதிகாரியை தாமே நியமிக்கவேண்டும் என வற்புறுத்தினார். விடுதலைப் புலிகளின் தலைமை மூன்று பெயர்களைப் பரிந்துரைக்க வேண்டும் என்றும் அதில் ஒருவரைத் தான் தெரிவு செய்வதாகவும் அவர் கேட்டுக் கொண்டார். ஜெயவர்த்தனாவின் நிபந்தனையில் எமக்கு சந்தேகம் எழுந்தது. ஏதோ ஏமாற்றுவித்தை காட்டி இடைக்கால நிர்வாக சபை நிறுவுவதைக் குழப்பியடிக்கத் திட்டமிடுகிறார் என நாம் எண்ணினோம். மட்டக்களப்பின் முன்னாள் உதவி அரசாங்க அதிபர் திரு. என்.பத்மநாதனை பிரதம நிர்வாகியாக நியமிக்க பிரபாகரன் ஏற்கனவே முடிவு செய்திருந்தார். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை இப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது என அவர் கருதினார். ஆயினும் மூவரது பெயர்களை சிபாரிசு செய்யுமாறு அரச அதிபர் நிபந்தனை விதித்திருப்பதால், எமது தெரிவு வரிசையில் முதல்வராக திரு. பத்மநாதனையும் ஏனைய இருவரது பெயர்களையும் பரிந்துரைத்தோம். பிரதம அதிகாரியின் தெரிவில், ஜெயவர்த்தனா தனது சூத்திரதாரித்தனத்தைக் காண்பிக்கத் தவறவில்லை. எமது பெயர்ப் பட்டியலில் முதல்வராக நாம் பரிந்துரைத்த பத்மநாதனுக்குப் பதிலாக இரண்டாவது நபரான யாழ்ப்பாண நகரசபை ஆணையாளர் திரு. சி.வி.கே.சிவஞானத்தை தெரிவு செய்தார் ஜெயவர்த்தனா.
ஜெயவர்த்தனாவின் தெரிவு பிரபாகரனுக்குச் சினத்தை மூட்டியது. வேண்டுமென்றே ஒரு பிரச்சினையை உருவாக்கி, புலிகளின் ஆட்சியின் கீழ் இடைக்கால நிர்வாக சபை நிறுவப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அரச அதிபர் குளறுபடி செய்கிறார் என அவர் கருதினார். பிரதம நிர்வாக அதிகாரியின் பதவிக்கு திரு. பத்மநாதனை மட்டுமே நியமிக்குமாறு திரு. டிக்சிட்டிடம் அறிவிக்கும்படி பிரபாகரன் என்னைப் பணித்தார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதானால் பலாலியிலுள்ள இந்திய அமைதிப் படையின் செயலகத்திற்கு செல்ல வேண்டும். அன்று பூராவும் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பிரபாகரனின் இல்லத்திற்கும் பலாலிக்குமாக மாறி மாறி அலைந்து களைத்துப் போனேன். ஜெயவர்த்தனா தனது நிலைப்பாட்டில் அமுங்குப் பிடியாக நிற்பதாக டிக்சிட் தொலைபேசியில் என்னிடம் சொன்னார். பிரபாகரனும் தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொள்ளத் தயாராக இல்லை என்று நான் டிக்சிட்டிடம் கூறினேன். ஜெயவர்த்தனாவுடன் கலந்தாலோசனை நடத்தி விட்டு மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டார் இந்தியத் தூதுவர். திரு. பத்மநாதன் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விசுவாசமானவர் அல்லர் என்றும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கே விசுவாசமானவர் என்றும் ஜனாதிபதி கருதுகிறார் என்று சொன்னார் டிக்சிட். விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட மட்டக்களப்புச் சிறை உடைப்புச் சம்பவத்திற்கு பத்மநாதன் உதவி புரிந்ததால் அரசாங்கத்திற்கு விசுவாசம் தெரிவிக்கும் சத்தியப் பிரமாணத்தை அவர் மீறிவிட்டார் என்றும் ஜெயவர்த்தனா கூறியதாக டிக்சிட் மேலும் தெரிவித்தார். இந்தியத் தூதரிடம் ஆத்திரத்தோடு ஜெயவர்த்தனா கூறினாராம். “நான்தான் இப்பொழுது இந்த நாட்டின் ஜனாதிபதி. எனது நாட்டின் ஒரு பகுதியை நான் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பதை ஒரு பிரிவினைவாதத் தீவிரவாதக் குழு எனக்கு ஆணையிட முடியாது.”23 இப்படியாக ஜெயவர்த்தனாவின் விட்டுக் கொடாக் கடும்போக்கும், இந்திய அரசின் கையாலாகாத்தனமும் இடைக்கால நிர்வாக அதிகார சபைக்குச் சாவு மணி அடித்தன. விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இந்தியப் பிரதமர் அளித்த வாக்குறுதி வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசியெறியப்பட்டது.
தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாகக் கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ஆம் நாள், பருத்தித்துறைக் கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத்தனத்தாலும், சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்டப் புலி வீரர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலி விமானத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில், இந்திய அமைதிப் படைத் தலைமையுடனும் இந்தியத் தூதுவருடனும் பேச்சு நடத்தி, கைதாகிக் காவலில் வைக்கப்பட்டிருந்த எமது தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் மீட்டெடுக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியத் தூதுவர் திரு. டிக்சிட் அவ்வேளை புது டில்லியில் இருந்தார். நிலைமை பாரதூரமானது என அறிவிக்கப்பட்டதும் அவர் தனது விடுமுறையை ரத்துச் செய்துவிட்டு அவசர அவசரமாக கொழும்பு வந்து சேர்ந்தார். பலாலியிலுள்ள இந்திய இராணுவ தலைமையகத்திலிருந்து திரு. டிக்சிட்டுடன் தொலைபேசியில் கதைத்த போது அவர் என்னைப் பதட்டப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இந்தப் பிரச்சினையை உடனே தீர்த்து வைக்கலாம் என்றும் கைதாகித் தடுத்து வைக்கப்பட்ட தளபதிகளும் போராளிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் உறுதியளித்தார். நிலைமை மோசமடையுமென நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்த நேரத்தில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சிங்கள ஆயுதப் படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருந்தன. தமிழர் தாயகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு இந்திய அமைதிப் படைகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் விடுதலைப் புலிகளின் மாவட்டத் தளபதிகள் என்ற ரீதியில் குமரப்பாவும் புலேந்திரனும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு பழக்கமானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய-இலங்கை ஒப்பந்த விதிகளுக்கு அமைய தமிழ்ப் போராளிகளுக்கு அரச அதிபரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த அமைதிச் சூழ்நிலையில் எதுவித குற்றமும் புரியாத, போர்நிறுத்த விதிகளையும் மீறாத எமது போராளிகளை கைது செய்து, தடுத்து வைப்பது நியாயமற்றது. இதன் அடிப்படையில்தான் எமது போராளிகளுக்கு எவ்வித ஆபத்தும் நேர்ந்துவிடாது எனக் கருதினேன்.
பலாலி விமானத் தளத்தில் இந்தியத் தூதரின் தொலைபேசிப் பதிலுக்காக காத்து நின்றபோது இந்திய அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் என்னை தனது செயலகத்திற்கு அழைத்தார். அவர் எனக்கு ஏற்கனவே நன்கு பழக்கமானவர். எமது தளபதிகளையும் போராளிகளையும் சிறைவைத்திருப்பது அநீதியானது, அவர்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கு இந்திய அமைதிப் படைத் தலைமைப்பீடமே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று இந்தியத் தளபதியுடன் வாதாடிய நான், எம்மவரை உடன் விடுவிக்குமாறு அவரிடம் மன்றாட்டமாகக் கேட்டேன்.
வழமையாக கலகலப்பாகவிருக்கும் ஹக்கிரட் சிங் அன்று முகத்தைத் தொங்கப் போட்டபடி இருந்தார். அவரது பார்வையில் ஒரு இனம்தெரியாத சோகமும் கவலையும் தொனித்தது. எமது போராளிகளின் நிலைகுறித்துத் தனது தனிப்பட்ட வேதனையை தெரிவித்த அவர், இவ் விடயத்தில் ஜெயவர்த்தனா கடும்போக்கை எடுப்பதாகவும், ஒரு சிறிய பிரச்சினையை பெரும் அரசியல் நெருக்கடியாக அவர் மாற்ற முனைவதாகவும் அரச அதிபர் மீது பழி சுமத்தினார் ஹக்கிரட் சிங். எமது போராளிகளைக் கைது செய்த சிங்களக் கடற்படை, அவர்களை பலாலித் தளத்திலுள்ள சிங்கள இராணுவப் படையணியிடம் ஒப்படைத்திருப்பதாகவும், அப்படையணி தேசியப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்றி அவர்களை விடுதலை செய்ய மறுப்பதாகவும் சொன்னார். ஹக்கிரட் சிங் கூறிய இன்னொரு விடயம் எனக்கு ஏக்கத்தைக் கொடுத்தது. எமது போராளிகளை விசாரணைக்காக கொழும்புக்கு விமானத்தில் கொண்டு செல்லும் இரகசியத் திட்டம் ஒன்று இருப்பதாக சிறீலங்கா இராணுவ உயர் அதிகாரி தன்னிடம் கூறியதாகவும் அவர் சொன்னபோது எனக்கு இதயம் கனத்தது. எனது முகம் திடீரென இருண்டு போனதை அவதானித்த இந்திய இராணுவத் தளபதி, எல்லாமே ஜெயவர்த்தனாவினதும் இந்தியத் தூதுவரதும் கைகளில் தங்கியிருப்பதாகக் கூறினார்.
இந்திய அமைதிப் படைத் தளபதியின் அனுமதியுடன் இந்திய இராணுவ அதிகாரியான கேணல் பெர்னான்டஸ், எமது போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். சிறீலங்கா இராணுவத்தின், பலத்த பாதுகாப்புடன் அமையப்பெற்ற பகுதி அது. அங்குள்ள கட்டிடம் ஒன்றில் எமது போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தரையில் அவர்கள் அமர்ந்திருக்க அவர்களைச் சூழ, ஆயுதபாணிகளாக, துப்பாக்கி முனைகளை அவர்மீது திருப்பிய வண்ணம் நின்று கொண்டிருந்தார்கள் சிங்கள இராணுவத்தினர். அவர்களது முகங்களில் கடுப்பும் வெறுப்பும் தெரிந்தது. அங்கு நின்ற சிங்கள இராணுவ அதிகாரியிடம் கேணல் பெர்னான்டஸ் கதைத்ததை அடுத்து, போராளிகளைச் சந்திக்க எனக்கு அனுமதி கிடைத்தது.
குமரப்பா, புலேந்திரன் மற்றும் எமது போராளிகள் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்றனர். எந்த விதமான அச்சமோ, அங்கலாய்ப்போ அவர்களிடம் காணப்படவில்லை. தங்களுக்கு வெகு சீக்கிரமாக விடுதலை கிட்டிவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள். புதிதாகத் திருமணமாகிய தமது மனைவிமாருக்கு ஆறுதல் கூறும்படி குமரப்பாவும், புலேந்திரனும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். இம்மூத்த தளபதிகள் இருவருடனும் எனக்கு நீண்ட கால நட்பு இருந்ததாலும் இவர்களது காதல் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் முக்கிய பங்கு வகித்ததாலும், அவர்களது குடும்பங்களுடன் எனக்கு நெருங்கிய உறவு இருந்தது. அன்றிரவே அவர்களது மனைவிமாரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதாகச் சொன்னேன். அவர்களது நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக எதையுமே கூறி அவர்களது மனநிலையைக் குழப்பிவிட நான் விரும்பவில்லை. அவர்களது விடுதலையைப் பெற்றெடுக்க இந்தியத் தூதுவர் டிக்சிட் கடும் முயற்சி எடுத்து வருவதாகச் சொன்னேன். நாளை காலை மீண்டும் பலாலிக்கு வந்து, டிக்சிட்டுடன் தொலைபேசியில் கதைத்தபின்பு அவர்களுக்குத் தகவல் தெரிவிப்பதாகக் கூறினேன். ஒரு மணி நேரம்வரை அவர்களுடன் உரையாடிவிட்டு, அவர்களைப் பிரிந்து சென்றுபோது விபரிக்க முடியாத துயரமும் ஏக்கமும் என் நெஞ்சத்தை அழுத்தின.
மறு நாள் காலை (அக்டோபர் 4ஆம் நாள்) நான் பலாலிக்கு வருகை தந்து திரு. டிக்சிட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரது தொனியில் மாற்றம் தெரிந்தது. நம்பிக்கை இடிந்து போன குரலில் பேசினார். ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்பதாகச் சொன்னார். கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலித் தளபதிகளையும் போராளிகளையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி24 அடாப்பிடியாக நிற்பதாகவும் தனது அமைச்சர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக செயற்பட முடியாதென அரச அதிபர் கூறுவதாகவும் இந்தியத் தூதுவர் சொன்னார். “ஜெயவர்த்தனாவும் அவரது அமைச்சர்களும் ஒரு இனவாதக் கும்பல். விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் அவர்களது குறிக்கோள். எமது மாவட்டத் தளபதிகளையும் மூத்த உறுப்பினர்களையும் கொழும்புக்குக் கொண்டு சென்று விசாரணை என்ற பெயரில் அவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது. ஆயுதக் கையளிப்பை அடுத்து எமது போராளிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதாக ஏற்கனவே அரச அதிபர் பிரகடனம் செய்துள்ளார். அதன் பின்னர், எமது போராளிகளை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முனைவது இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அத்துமீறும் பாரதூரமான நடவடிக்கையாகும்.” என்று டிக்சிட்டிடம் விளக்கினேன். எமது போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்தால் பாரதூரமான விளைவுகள் நேரிடும் என்றும் இந்திய தூதருக்கு எச்சரிக்கை விடுத்தேன். எமது போராளிகளுக்குத் தீங்கு எதுவும் நேரிடாமல் அவர்களை மீட்டெடுத்துத் தருவது இந்திய அரசின் பொறுப்பு என்றும் அவருக்குச் சுட்டிக் காட்டினேன். பலாலி விமானத் தளம் இந்திய அமைதிப் படைகளின் தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டு, இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கும் போராளிகளை விடுவிப்பது இந்தியாவின் தவிர்க்க முடியாத கடமை என்றும் வலியுறுத்தினேன். விடுதலைப் புலிப் போராளிகளை விடுதலை செய்ய ஜெயவர்த்தனா அரசு மறுத்தால், அவர்களை விடுவிக்குமாறு இந்திய அமைதிப் படைத் தளபதி ஹக்கிரட் சிங்கை தான் கேட்டுக் கொள்ளப் போவதாக டிக்சிட் எனக்கு உறுதியளித்தார்.
இந்தியத் தூதுவர் எவ்வளவோ முயற்சித்தும் ஜெயவர்த்தனாவும் அத்துலத்முதலியும் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாக நின்றனர். இதற்கிடையில் காலம் ஓடிக் கொண்டிருந்தது. தடுத்து வைக்கப்பட்ட போராளிகளை கொழும்புக்கு கொண்டு செல்வதற்காக சில ஒழுங்குகளை அத்துலத் முதலி செய்து வருவதாகவும் டிக்சிட்டுக்குத் தகவல் கிடைத்தது. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த அவர் இந்திய அமைதிப் படைத் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங்குடன் தொடர்பு கொண்டார். பலாலி விமானத் தளத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, விடுதலைப் புலிகளின் தளபதிகளையும் போராளிகளையும் சிறீலங்கா இராணுவம் கொழும்புக்கு கொண்டு செல்வதைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இந்தியத் தூதுவர் ஜெனரல் ஹக்கிரட் சிங்கை கேட்டுக் கொண்டார். நான் ஏற்கனவே இந்திய அமைதிப் படைத் தளபதியுடன் உறவாடியதிலிருந்து அவருக்கும் இந்தியத் தூதுவருக்கும் மத்தியில் நல்லுறவு நிலவவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஏதோ காரணத்தினால் இருவருக்கு மத்தியில் பகையுறவு நிலவியது. ஆகவே, திரு. டிக்சிட்டின் வேண்டுகோளை இந்தியத் தளபதி நிராகரித்துவிட்டார். தான் ஒரு இராணுவக் கட்டமைப்பில் பணிபுரிவதால் இந்திய இராணுவ உயர் பீடத்திலிருந்தே தனக்குக் கட்டளைகள் வழங்கப்பட வேண்டும் என்பது ஹக்கிரட் சிங்கின் வாதம். அன்று நான் அமைதிப் படைத் தளபதியைச் சந்தித்தபோது அவர் கோபாவேசத்துடன் காணப்பட்டார். “எனக்கு உத்தரவிடுவதற்கு யார் இவர்? இவர் எனக்கு மேலுள்ள உயர் அதிகாரியுமில்லை. இவரது உத்தரவை செயற்படுத்த நான் நடவடிக்கை எடுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும். விடுதலைப் புலிப் போராளிகளைத் தடுத்து வைத்திருக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் எனது படையினருக்கும் மத்தியில் நிச்சயமாக மோதல் வெடிக்கும்.” என்று கதறினார் ஜெனரல் ஹக்கிரட் சிங். இந்த அமைதிச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மூத்த போராளிகளும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தையிட்டு தான் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இதுவொரு அரசியல் விவகாரம் என்றும் இது கொழும்புக்கும் டில்லிக்குமிடையே மிக உயர்டமட்டத்தில் தீர்க்கப்பட வேண்டியது என்றும் என்னிடம் கூறினார்.
அன்று குமரப்பா, புலேந்திரன் மற்றும் எமது போராளிகளைச் சந்தித்தபோது நான் அவர்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னேன். கைதாகிய புலிப் போராளிகள் அனைவரையும் கொழும்புக்குக் கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கங்கணம் கட்டி நிற்பதால் நிலைமை மோசமாகி ஆபத்தான திருப்பத்தை எடுத்திருப்பதாக விளக்கினேன். இவ் விவகாரத்தில் ஜெயவர்த்தனா அரசு பிடிவாதமான கடும்போக்கை கடைப்பிடிப்பதால் இந்தியத் தூதுவரது முயற்சிகள் வெற்றியளிப்பது சாத்தியமில்லை என்றும், போதாக் குறைக்கு இந்திய அமைதிப் படைத் தளபதிக்கும் டிக்சிட்டுக்கும் மத்தியில் கருத்து முரண்பாடும் காழ்ப்புணர்வும் நிலவுவதாகவும் முழு விபரத்தையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டதும் போராளிகள் அனைவரும் இடிந்து போனார்கள். நம்பிக்கை தளர்ந்து போனதால் அவர்களது முகங்களில் ஏக்கக் குறிகள் படர்ந்தன. சிங்கள இனவாத அரசின் அகராதியில் ‘விசாரணை’ என்ற சொல்லுக்குச் சித்திரவதை என்பதுதான் அர்த்தம். அதுவும் விடுதலைப் புலிகளுக்கான ‘விசாரணை’ என்றால் அது மிகவும் கொடூரமான சித்திரவதையையும் சாவையும் குறிக்கும். அதற்கு மேலாக, அத்துலத்முதலி விசாரணையில் அக்கறை காட்டுகிறார் என்றால் அதன் அர்த்தம் என்னவென்பது எமது போராளிகளுக்கு நன்கு புரியும். மிகக் கொடூரமான சித்திரவதையையும், அவலமான சாவையும் தாம் எதிர்கொண்டு நிற்பதாக அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மட்டக்களப்பு, திருகோணமலைக் களமுனைகளில் அத்துலத்முதலியின் இராணுவத்தினர் பலரைக் கொன்று குவித்து, சாதனைகள் படைத்த தாக்குதற் தளபதிகள் இருவர், இப்பொழுது சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்குப்பட்டிருப்பது பழி தீர்க்கும் வெறியுடன் காத்திருந்த தேசியப் பாதுகாப்பு அமைச்சருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து போனது. பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போராளிகளை விடுதலை செய்தால் தனது அமைச்சர் பதவியை துறந்து விடுவேன் என்று ஜெயவர்த்தனாவை மிரட்டிப் பணியவைத்துத் தனது திட்டத்திற்கு இணங்க வைத்தார் அத்துலத்முதலி. தனது அமைச்சர்களின் அழுத்தத்திற்கு எதிராக தான் செயற்பட முடியாது எனப் பொய்ச் சாக்குச் சொல்லி இவ் விவகாரத்தில் தலையிட மறுத்திருக்கிறார் அரச அதிபர். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் பகை முரண்பாட்டையும் மோதலையும் உண்டுபண்ணச் செய்வதுதான் ஜெயவர்த்தனாவின் கபட நோக்கம்.
எதிரியால் கொடூரமாக வதைபட்டுச் சாவதை எமது போராளிகள் விரும்பவில்லை. இனி என்ன செய்வது என்பது பற்றி அவர்கள் கலந்தாலோசனை நடத்தினார்கள். இறுதியில், எல்லோரும் ஏகமனதாக ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தார்கள். அந்தத் தீர்மானத்தை எழுத்தில் வரைந்து, அதில் எல்லோரும் கையொப்பமிட்டு, அந்தக் கடிதத்தைத் தலைவர் பிரபாகரனிடம் சேர்க்குமாறு என்னிடம் ஒப்படைத்தார்கள். எதிரியால் கொடூரச் சித்திரவதைக்கு ஆளாகி, அவமானப்பட்டு உயிர் நீப்பதைவிட, இயக்கத்தின் வீரப் போரியல் மரபுக்கு அமைவாக, தமது உயிரைத் தாமே அழித்து, கௌரவமாக சாவைத் தழுவிக் கொள்ள தாம் உறுதிபூண்டுள்ளதாக அவர்கள் தலைவருக்கு எழுதியிருக்கிறார்கள். தமது உயிர்த் தியாக இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, சைனைட் விசக் குப்பிகளைத் தமக்கு அனுப்பி வைக்குமாறு, கடித முடிவில் உருக்கமாகத் தலைவரைக் கேட்டிருந்தார்கள்.
அன்றிரவு நான் பிரபாகரனை சந்தித்தபோது பலாலியில் நிகழ்ந்த சம்பவங்கள், உரையாடல்களை விபரமாக எடுத்துக் கூறினேன். ஜெயவர்த்தனாவின் கடும்போக்கு, அத்துலத் முதலியின் வஞ்சகம், டிக்சிட்டின் கையாலாகாத்தனம், அமைதிப் படைத் தளபதியின் அகம்பாவம், எமது போராளிகளின் அவல நிலை ஆகியவைகளை விளக்கினேன். இறுதியாக, எம்மவர்கள் எழுதிக் கூட்டாகக் கைச்சாத்திட்ட கடிதத்தையும் கையளித்தேன். அந்தக் கடிதத்தை வாசித்தபொழுது பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தவாறு சிறிது நேரம் யோசித்தார். “எமது போராளிகளை மீட்டெடுப்பது இந்திய அரசின் பொறுப்பு. ரஜீவ் காந்தியின் வாக்குறுதிகளை நம்பி, இந்தியாவுக்கு ஒத்துழைத்த காரணத்தினால்தான் இந்த இக்கட்டான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்” என்றார் பிரபாகரன் கோபாவேசத்துடன். எமது போராளிகளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென்றும் அதற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டுமென்றும், நாளை காலை இந்தியத் தூதுவரிடம் கூறி, போராளிகள் விவகாரத்தில் இறுதியான முடிவை தனக்கு அறிவிக்குமாறு என்னைப் பணித்தார் பிரபாகரன்.
மறுநாட் காலை (1983 அக்டோபர், 5ஆம் நாள்) பலாலி விமானத் தளத்திற்கு விரைந்து சென்று இந்தியத் தூதுவருடன் தொடர்பு கொண்டு பிரபாகரன் விடுத்த எச்சரிக்கையை அவருக்குத் தெரிவித்தேன். டிக்சிட் பதட்டமடைந்தார். போராளிகளுக்குத் தீங்கு நேர்ந்தால் பாரதூரமான எதிர்விளைவுகள் நிகழ்ந்தே தீரும் என்பது அவருக்கு நன்கு தெரியும். இறுதித் தடவையாக முயன்று பார்க்கிறேன் என்றார். தளர்ந்துபோன அவரது தொனியிலிருந்து அவர் மேற்கொள்ள இருக்கும் இறுதி முயற்சி வெற்றி பெறுமென நான் நம்பவில்லை. சரியாக ஒரு மணி நேரத்தின் பின்பு மீண்டும் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். தன்னால் ஒன்றுமே செய்யமுடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தான திருப்பத்தை அடைந்து விட்டதாகச் சொன்னார் டிக்சிட். எமது போராளிகளைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக, தேசியப் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தனது சொந்த அதிகாரத்தைப் பாவித்து, அத்துலத்முதலி ஒரு விசேட இராணுவ விமானத்தை பலாலிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் வலுவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் டிக்சிட் என்னிடம் கூறினார். நான் உடனடியாகவே பிரபாகரனிடம் விரைந்து சென்று தகவலைத் தெரிவித்தேன். பிரபாகரன் சிறிது நேரம் ஆழமாகச் சிந்தித்தார். துயரமும் கவலையும் கோபமும் விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால் அவரது முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்தில் தொங்கிய சைனைட் விசக் குப்பிகளை சேர்த்தெடுத்து எனதும் மாத்தையாவினதும் கழுத்தில் மாலைகளாக அணிவித்தார். எப்படியாவது இந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலித் தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டுகோளை நாம் நிறைவு செய்தோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட இலட்சியத்திற்காக நான் ஆற்றிய செயற்பாடுகளில் இதுவே எனது ஆன்மாவை உலுப்பிய மிக வேதனையான பணியாகும்.
எமது போராட்ட வரலாற்றிலேயே இருண்ட நாளான அன்று மாலை அளவில் பலாலி சிறீலங்கா விமானத் தளத் தளபதி பிரிகேடியர் ஜெயரெத்தினா, எமது போராளிகளை வலுவந்தமான விமானத்தில் ஏற்றத் தனது படையணிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். சிங்கள இராணுவத்தினர் எமது போராளிகளை நெருங்கியபோது அவர்கள் அனைவரும் சைனைட் குப்பிகளை விழுங்கிக் கொண்டனர். சிங்கள இராணுவம் இதனைச் சற்றுமே எதிர்பார்க்கவில்லை. இந்தக் கூட்டுத் தற்கொலையைத் தடுத்துவிடும் நோக்குடன் எமது போராளிகள் மீது துப்பாக்கிப் பிடிகளால் தாக்கி, அவர்களது தொண்டைகளைத் திருகி சிங்கள இராணுவத்தினர் வெறியாட்டம் ஆடியபோதும் இந்த துன்பியல் நிகழ்வை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. மூத்த தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரெண்டு போராளிகள் அவ்விடத்திலேயே வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். மிகுதியான ஐந்து போராளிகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மூத்த போராளிகளும் கூட்டாகத் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற செய்தி காட்டுத் தீ போல தமிழ்த் தாயகம் எங்கும் பரவியதால் மக்கள் கோபாவேசம் கொண்டு கொதித்தெழுந்தனர். இந்திய அமைதிப் படையின் தலைமையகத்தில் இக் கொடுமை நிகழ்ந்ததால் இந்திய இராணுவத்தினர் மீது மக்களின் ஆவேசம் திரும்பியது. இந்திய இராணுவத்திற்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்கள், காவல் சாவடிகள் மீது கல் வீசினார்கள், இராணுவ வாகனங்கள் முன்பாக வீதிமறியல் செய்தார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறை கோரத் தாண்டவமாடியது. சிங்களப் பொதுமக்களும் தாக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் வன்முறை தீவிரமடைந்து தமிழ் சிங்கள இனக் கலவரங்கள் வெடித்தன. கலவரங்களில் சிங்கள மக்கள் தாக்கப்படுவதை அறிந்து ஜெயவர்த்தனா ஆவேசமடைந்தார். விடுதலைப் புலிப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை ரத்துச் செய்வதாக அறிவித்த அவர், தமிழ்ப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
1987 அக்டோபர் 7ஆம் நாள் அன்று, இந்திய பாதுகாப்பு அமைச்சர் திரு. கே.சி.பாண்ட், இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கொழும்புக்கு வருகை தந்து அரச அதிபர் ஜெயவர்த்தனாவுடன் மந்திராலோசனை நடத்தினர். அவ்வேளை டில்லி ஆட்சிப்பீடத்தின் அதிமுக்கிய தீர்மானம் பற்றி ஜெயவர்த்தனாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதாவது, இராணுவ பலத்தைப் பிரயோகித்து விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை வலுவந்தமாக களைவு செய்வதென இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அவருக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயவர்த்தனாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்திய அரசை விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் திருப்பிவிட வேண்டுமென்ற தனது தந்திரோபாயம் இறுதியில் பலித்து விட்டது என்பதில் அவருக்கு அலாதியான திருப்தி. யாழ்ப்பாணக் குடாநாடு மீது படையெடுத்து, அப் பிரதேசத்தை இந்திய இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, புலிப் போராளிகளை நிராயுதபாணிகளாக்கும் ‘பவான்’ படை நடவடிக்கையை (Operation Pawan) அக்டோபர் 10ஆம் நாள் ஆரம்பிப்பதென முடிவெடுக்கப்பட்டது.
இலங்கையிலிருந்த இந்தியப் படையணிகள் அனைத்துக்கும் பொறுப்பதிகாரியான ஜெனரல் திபேந்தர் சிங், யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து அமைதிப் படைகளின் தளபதி ஜெனரல் ஹக்கிரட் சிங் ஆகியோர் விடுதலைப் புலிகளுடன் இந்திய அமைதிப் படைகள் இராணுவ ரீதியாக மோதுவதை விரும்பவில்லை. அப்படியான மோதல் நீண்ட காலப் போராக முடிவின்றி இழுபடும் என்பது இவர்களது மதிப்பீடு. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கடப்பாடுகளுக்கு அமையத் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி, தமிழர் தாயகத்தில் அமைதியைப் பேணும் பெரும் பொறுப்பைச் சுமந்து நிற்கும் இந்திய இராணுவம், அந்த மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்துவது அதர்மமானது என்பது இந்தியத் தளபதிகளின் கருத்தாகும். ஆகவே, அவர்கள் இந்தப் போரை அறவே விரும்பவில்லை. அக்டோபர் 6ஆம் நாளன்று, ஜெனரல் சுந்தர்ஜி பலாலியிலுள்ள இந்திய அமைதிப் படைகளது தலைமையகத்திற்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்த் தந்திரோபாயங்கள் பற்றி ஏனைய தளபதிகளுடன் மந்திராலோசனை நடத்தினர். அப்பொழுது, திபேந்தர் சிங், இந்த இராணுவ நடவடிக்கைக்கு எதிரான தனது கருத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
1992ஆம் ஆண்டு தான் எழுதி வெளியிட்ட ‘சிறீலங்காவில் இந்திய அமைதிப் படை’ (The IPKF in Sri Lanka) என்ற நூலில் இந்தியப் போர் நடவடிக்கையின் தோல்விக்கான காரணங்களை விளக்கினார் ஜெனரல் திபேந்தர் சிங். அந் நூலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கையின் தந்திரோபாயம் பற்றி இந்திய இராணுவத் தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் நடத்திய உரையாடலின் போது வெளியிட்ட கருத்துப்பற்றி ஜெனரல் திபேந்தர் சிங் பின்வருமாறு எழுதுகிறார்:
“விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகப் படை பலத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்ற அரசியல் தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக இருந்தது. நாம் கடும்போக்கான முடிவை எடுக்கக் கூடாது என்று ஜெனரல் சுந்தர்ஜிக்கு நான் ஆலோசனை வழங்கினேன். நாம் அப்படி முடிவு எடுத்தால் அடுத்த இருபது ஆண்டு காலம் வரை ஒரு எதிர்க் கிளர்ச்சிச் சூழ்நிலைக்கு நாம் முகம்கொடுத்தாக வேண்டும் எனக் கூறினேன். எனது நிலைப்பாடு தோல்வி மனப்பான்மையை பிரதிபலிப்பதாக என்னைக் கண்டித்தார்கள். நான் யதார்த்தத்தைக் கூறுவதாகச் சொன்னேன். அதற்கப்புறம் ஜெனரல் சுந்தர்ஜி கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ பலத்தைப் பிரயோகிக்குமாறு மறுநாள் அவரிடமிருந்து நேரடி உத்தரவு இந்திய அமைதிப் படைச் செயலகத்திற்கு வந்தது.”25
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு ஜெனரல் திபேந்தர் சிங் கடும் முயற்சிகளை எடுத்தார். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தார். துரதிர்ஷ்டவசமாக அவ்வேளை தமிழக முதல்வர் கடும் சுகவீனமுற்று அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்குப் பதிலாக சென்னையில் பண்டுருட்டி இராமச்சந்திரனைச் சந்தித்த ஜெனரல் திபேந்தர் சிங், இந்திய அமைதிப் படைகளுக்கும் விடுதலைப் புலி கெரில்லா வீரர்களுக்கும் மத்தியில் போர் வெடித்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தமிழக அமைச்சருக்கு அவர் தெளிவுபடுத்தினார். இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியுடன் பேசி, போர் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளும்படி சொன்னார். அமைச்சர் பண்டுருட்டியின் முயற்சி பயனளிக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு நல்லதொரு பாடம் புகட்டப்பட வேண்டும் என்ற கடும்போக்கு டில்லியில் நிலவுவதாக திரு. இராமச்சந்திரன் திபேந்தர் சிங்கிடம் தெரிவித்தார்.26
தனது ஆலோசனைக்கும் ஆட்சேபனைக்கும் மாறாக தமிழ்ப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற முடிவு அரசியல் உயர் மட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது என்கிறார் ஜெனரல் திபேந்தர் சிங். இது பற்றி அவர் தனது நூலில் குறிப்பிடுவதாவது:
“கடும்போக்கைக் கடைப்பிடிப்பது பற்றிய எனது கருத்து வேறுபாட்டையும் மற்றும் துருப்புப் பற்றாக்குறைப் பிரச்சினையையும் எனது இராணுவ உயரதிகாரி (ஜெனரல் சுந்தர்ஜி) பாதுகாப்பு அமைச்சரிடமும் பிரதம மந்திரியிடமும் தெரிவித்திருப்பார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. அப்படியான ஆலோசனை தெரிவிக்கப்பட்ட பொழுதும் இராணுவ நடவடிக்கையை நிறைவேற்றுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதிலிருந்து இதனையொரு அரசியல் முடிவு என்றே கருத வேண்டும்.”27
இந்திய – இலங்கை ஒப்பந்த விதிகளை நிறைவு செய்வது என்ற சாக்கில் இராணுவ பலத்தைப் பிரயோகித்து வலுவந்தமாக விடுதலைப் புலிப் போராளிகளை நிராயுதபாணிகள் ஆக்குவதென இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருந்தார். இந்த இராணுவ நடவடிக்கை பற்றி இந்திய இராணுவத் தளகர்த்தா ஜெனரல் சுந்தர்ஜியுடன் இந்தியப் புலனாய்வுத்துறை உயரதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடிய பொழுது அதன் விளைவுகள் பற்றியும் விசாரித்திருக்கிறார். புது டில்லியில் நிகழ்ந்த இந்த இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் ஒன்றுபற்றி திரு. டிக்சிட் தனது நூலில் குறிப்பிடுகிறார். அக் கட்டத்தில், விடுதலைப் புலிகளுடன் போர் தொடுப்பதால் எழக்கூடிய விளைவுகள் குறித்து ஜெனரல் சுந்தர்ஜியிடம் ரஜீவ் காந்தி வினவியபோது, “இந்திய ஆயுதப் படைகள் அவர்களை (விடுதலைப் புலிகளை) இரண்டு வாரத்திற்குள் செயலிழக்கச் செய்து விடுவார்கள்.”28 என்றார் இந்தியத் தளபதி. இத்தகைய மதிப்பீடு வழங்கப்பட்ட காரணத்தால் இராணுவ நடவடிக்கையின் எதிர்விளைவுகள் பற்றி ரஜீவ் காந்தி பெரிதாகக் கவலைப்படவில்லை.
1987 அக்டோபர் 10ஆம் நாள், இந்திய அமைதி காக்கும் படைகள் போரில் குதித்தன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடக நிறுவனங்களே முதலில் இந்தப் போருக்குக் களப் பலியாகின. அன்றைய நாள் அதிகாலை, ‘ஈழமுரசு’, ‘முரசொலி’ ஆகிய நாளிதழ்களின் செயலகங்களுக்குள் புகுந்து சூறையாடிய இந்திய இராணுவத்தினர், பத்திரிகைக் கட்டிடங்களைக் குண்டு வைத்துத் தகர்த்ததுடன் பத்திரிகையாளர்களையும் கைது செய்தனர். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி நிறுவனமான நிதர்சனம் காரியாலயமும் தீ வைத்துக் கொழுத்தப்பட்டது. அன்று காலை யாழ்ப்பாணக் கோட்டைப் படைமுகாமிலிருந்து கவச வாகனங்கள் சகிதம் வெளியேற முயற்சித்த இந்தியத் துருப்புக்கள் மீது விடுதலைப் புலி வீரர்கள் மோட்டார்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் தாக்கியதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் கோட்டைக்குள் பின்வாங்கின. தெல்லிப்பளைச் சந்தியில் அமையப்பெற்றிருந்த இந்திய இராணுவத்தின் படைநிலைமீதும் விடுதலைப் புலிப் போராளிகள் மோட்டார் குண்டுகளைப் பொழிந்து தாக்கினர். இப்படியாக, முழு அளவிலான இந்திய-புலிகள் யுத்தம் அன்று ஆரம்பமாகியது. இந்தப் போர் வெடித்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
“அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்த சோகமான சூழ்நிலையில், இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி, தமிழர்களுக்கு எதிராக ஒரு கொடிய யுத்தத்தை ஏவிவிட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்கமாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனர். அன்பையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து, தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும், அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேசநாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. ஆகவேதான், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகப் போர்தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.”29
இந்திய – புலிகள் யுத்தம் இரண்டு வருடங்களும் ஏழு மாதங்களுமாக நீடித்தது. இந்திய தேசம் எதிர்கொண்ட மிக நீண்ட யுத்தம் இதுவாகும். இந்தப் போரில் இந்திய இராணுவம் பலத்த உயிர்ச் சேதத்தைச் சந்தித்தது. ஆயிரத்து ஐநூறு இந்தியப் படையினர் உயிரிழந்தனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் ஊனமடைந்தனர்.30 இந்தப் போர் பற்றி ஒரு இந்தியப் பத்திரிகையாளர் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பயனற்ற யுத்தத்தில் அமைதி காக்கும் படைகளைச் சிக்குப்பட வைத்தமை ஒரு மாபெரும் தவறாகும். 1990 மார்ச் மாதம் கடைசி இந்தியப் படையணிகள் தமது தாய்நாட்டுக்குத் திருப்பிப் பெறப்பட்ட வேளையில், இந்தப் போரை மதிப்பிடும்பொழுது, 1962ஆம் ஆண்டின் சீன யுத்தத்தின் பின்னர் இந்தியா சந்தித்த மிகப்பெரிய இராஜதந்திர – புலனாய்வுப் பின்னடைவு இதுதான்.”31
இந்திய – புலிகள் யுத்தம் பற்றி ஒரு சிங்கள ஆய்வாளர் எழுதும் பொழுது அதனை ‘இந்தியாவின் வியட்னாம்’ என வர்ணித்திருக்கிறார். ஒரு மாபெரும் வல்லரசுக்கும் ஒரு சிறிய பலவீனமான எதிரிக்கும் மத்தியில் நிகழ்ந்த போராக இருப்பினும் அந்த எதிரியானவர்கள் இரும்பை ஒத்த உறுதி கொண்டவர்களாகவும் ‘மக்களின் வீர நாயகர்கள்’ என்ற வெகுசன ஆதரவு பெற்றவர்களாகவும் விளங்கினர் என அவர் எழுதுகிறார். அவர் குறிப்பிட்டதாவது:
“இருபதாம் நூற்றாண்டு வரலாற்றினை எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யும்பொழுது நான்கு பின்னடைவு கண்ட யுத்தங்களை இணையொத்து மதிப்பிடுவர். வியட்னாமில் அமெரிக்கப் படைகள், கம்போடியாவில் சீனப் படைகள், ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகள், இலங்கையில் இந்தியப் படைகள் ஆகியனவே இப் பின்னடைவு கண்ட போர்களாகும். இப் போர்களில் நான்கு பெரும் வல்லரசுகள், தொகையில் மிகச் சிறிய, பலத்தில் மிகக் குறைந்த, பயிற்சியில் மிகப் பின்தங்கிய எதிரிகளுக்கு முகம் கொடுத்தனர். ஆனால் அந்த எதிராளிகளோ இரும்பை ஒத்த உறுதி கொண்டவர்கள், தந்திரோபாயத்தில் சாணக்கியர்கள், பகைவர் மீது ஈவிரக்கமற்றவர்கள்… இந்தியாவின் ‘எதிரிகள்’ எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் இருக்கவே செய்தார்கள். அவர்கள் மக்களிடமிருந்து வந்தார்கள்’ மக்களின் வீர நாயகர்களாகப் போற்றப்பட்டார்கள்; உள்ளூர் மக்களால் பேணப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, அவர்களது நல்லாதரவைப் பெற்றவர்களாக விளங்கினார்கள்.”32
அனைவரும் படிக்க வேண்டிய நூல்