1987 October 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய ராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ” ஈழ முரசு ” ” முரசொலி ” என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது அதுமட்டுமல்ல அச்சு எந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர்.
அதே நாளில் கொக்குவில் இயங்கிய விடுதலைப்புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய ராணுவம் புகுந்து ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது. ஈழ முரசு , முரசொலி நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள், நிதர்சனம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை இந்தியாவின் ‘ தூர்தர்ஷன் ’ அதிகாரிகள் கேட்டுப் பெற்று ஒளிபரப்பிய சம்பவங்களும் உண்டு. முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு இந்திய ராணுவம் மக்களுக்கு எதிரான ராணுவ வேட்டையில் இறங்கியது.
மறுநாள் அக்டோபர் பதினோராம் திகதி பிரம்படிப் பகுதியில் தலைவர் மறைந்திருக்கிறார் என்ற தகவலால் டாங்கிகள் கவச வாகனங்கள் சிறு பீரங்கிகள் சகிதம் அங்குசென்ற அமைதிப்படை அவர்களைக் காணாத விரக்தியில் 40 பொதுமக்களை சுட்டும் வீதியில் படுக்கவைத்தும் டாங்கியால் ஏற்றியும் கொன்றது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய ராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987, நவம்பர் 7 )
அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய ராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். ராணுவத்தினர் உடனடியாக 50நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன. அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் – ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை ராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல், அடையாளங்களை காண முடியில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள், அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன. மருத்துவ மனையில் மின்சாரத்தை ராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.
தெல்லிப்பளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மானிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும் ராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. மருத்துவமனையில் – ஷெல் வீசியது மட்டுமல்ல எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது.
அக்டோபர் 27 இந்திய இராணுவக்
ஹெலிகள் எறிகணைகளாலும் இயந்திரத் துப்பாக்கிகளாலும் சாவகச்சேரி சந்தையில் மேற்கொண்ட தாக்குதலில் 30 பொதுமக்கள் கொல்லப் பட்டதுடன் 75 பேர் படுகாயமடைந்தனர்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள், இதைக் கண்டித்தன.
“ வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து, பற்றாக்குறை கடுமையாகிவிட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய ராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும் ” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர். ( தி ஏஜ் ஏடு 16.10.87 )
இந்திய ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநாவில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987 பிப் 1 முதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த ஐநாவின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை !
வெள்ளைக் கொடிகளை ரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய ராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய ராணுவம் நவாலியில் வைத்துக் காரை நோக்கிச் சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் .
அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரந்த் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ” வெள்ளைக் கொடி ” யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சித் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சித் கூறினார். அப்போதும் அந்த அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரந்த் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.
(கேள்வி : விடுதலைப் புலிகளுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சியில், தீட்சித் அணுகுமுறை எப்படி இருந்தது?
பதில் : தீட்சித் ஒரு முறை என்னிடம், பிரபாகரனை சுட்டுவிடு என்றார். மன்னிக்கவும், என்னால் முடியாது என்று நான் கூறி விட்டேன். இது அவரது உத்தரவாகவே இருந்தது. சில பணிகளுக்காக, என்னை சந்திக்க 12 மணிக்குக்கூட, பிரபாகரன் வந்தார். அதைப் பயன்படுத்தி, சுட்டுவிடுமாறு சொன்னார். தனக்கு, மேலிடத்திலிருந்து கிடைத்த உத்தரவைத்தான் கூறுகிறேன் என்றார். ‘உங்களுடைய உத்தரவை நான் செயல்படுத்த முடியாது. நாங்கள் வெள்ளைக் கொடியின் கீழ் சந்தித்துப் பேசுகிறோம்; வெள்ளைக் கொடியின் கீழ் பேசும்போது, யாரையும் சுட முடியாது’ என்று பதில் சொன்னேன்.)
இந்தியப் படையினர் செய்த படுகொலைகள் (1987 முதல் 1989 வரை) இது முழுமை இல்லை
1. பிரம்படி, பொற்பதி படுகொலை -12 அக்டோபர் 1987
2. புதுக்காடு சந்தி படுகொலை– 11 அக்டோபர் 1987
3. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலை – 21, 22 அக்டோபர் 1987
4. அராலித்துறை படுகொலை – 22 அக்டோபர் 1987
5. கொக்குவில் இந்துக்கல்லூரி – 24 அக்டோபர் 1987
6. அளவெட்டி அக்கிரமம் – 26 அக்டோபர் 1987
7. சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27 அக்டோபர் 1987‘
8. மூளாய் மருத்துவமனை படுகொலை – 5 நவம்பர் 1987
9. நெடுங்கேணி சந்தி படுகொலை – 11 நவம்பர் 1987
10. மட்டக்களப்பு பொதுச்சந்தை படுகொலை – 12 டிசம்பர் 1987
11. கத்தார் சின்னக்குளம் படுகொலை – 07 ஜனவரி 1989
12. வல்வை படுகொலை 2, 3, 4 ஆகஸ்ட் 1989
21.11.1987 அன்று இந்திய ராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அடுத்த 48 மணி நேரத்தில்திருகோணமலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய ராணுவம் சுட்டது.
1987ல் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய ராணுவம்
•15,000க்கு அதிகமாக அப்பாவி தமிழ் மக்களைக் கொன்றது
•600 க்கு அதிமான தமிழ் போராளிகளைக் கொன்றது
•1000 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை பாலியல் வன்முறை செய்தது
•பல கோடி ரூபா பெறுமதியான தமிழர்களின் சொத்துகளை சேதமாக்கியது
1000 மேற்பட்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள்
இந்தியா தமிழீழத்தை எப்போதும் தனது துருப்பு சீட்டாகவே பயன்படுத்தி வந்தது. அந்தவகையில் தான் ஆரம்பத்தில் அதாவது இந்திரா காந்தி காலத்தில் தனது நலன் சார்ந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிகள் செய்தது. ஆனால் இந்தியாவிலுள்ள உயர்சாதிகளின் திட்டத்திற்கு ஈழத்தமிழர்கள் இணைங்க மாட்டார்களென்று தெரிந்த பின் நிலைமைகள் வெகுவாக மாறியது. ஈழத்தமிழர்களை கொல்ல இந்திய அமைதிப்படையை (IPKF) அனுப்பியதிலிருந்து நிறைய சொல்லலாம்.
அதேநேரத்தில் தனது நோக்கம் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பை உண்டாக்கியதை அடுத்து இராஜீவ் காந்தியின் கொலையை காரணமாக காட்டி தமிழீழ மக்களை ஒடுக்கவும் தனது வன்மத்தை மறைக்கவும் அதனை பயன்படுத்தியது. இலங்கை எவ்வளவு தூரம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இருந்ததுவோ, அதே அளவு இந்திய அரசாங்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. ஒரே வித்தியாசம், இலங்கை அரசாங்கத்தை விட, இந்தியா உலக அளவில் தன் ஆளுமையை செலுத்தக் கூடிய நாடாக இருந்தது. ஒரு வேளை இந்தியா விடுதலைப் புலிகளை ஆதரித்திருந்தால், தனித் தமிழீழத் தேசம் மலர்ந்திருக்கும்.
இந்தியா இரண்டு விடையங்களுக்காக அஞ்சியது:
- தமிழீழம் விடுதலை அடைந்தால், தமிழ்நாடும் விடுதலைக் கோரும். இது இந்தியாவின் புவிசார் அரசியல் நிலையையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
- தமிழீழம் அங்கீகரிக்கப் படாத நாடாக இருந்த காலத்தில், பிற அங்கீகரிக்கப் படாத நாடுகளைக் காட்டிலும், இராணுவம் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறி இருந்தது. அமைதி காலகட்டத்தில் (2001-2006) தமிழீழம் அடைந்திருந்த வளர்ச்சி இந்திய உயர்சாதியினர்களுக்கு எரிச்சலை கொடுத்தது.
1991 க்கு பிறகு, இலங்கைக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை இந்தியா தொடர்ச்சியாக அளிக்கத் தொடங்கியது. மூன்றாம் ஈழப் போரின் போது, விடுதலைப் புலிகள் தொடர்ச்சியான பல யுத்தங்களை வென்ற போது, இலங்கை அரசுடன் இராணுவ வர்த்தகத்திலும், நிதியுதவி அளிப்பதிலும் இந்திய அரசாங்கமே முன்னிலையில் இருந்தது.
2018 ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க இந்தியா வந்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே “நான் இலங்கையின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மிகவும் பலமாக இருந்தது. எங்களின் பொருளாதாரமும் நலிந்திருந்தது. திரு.வாஜ்பாயி அவர்கள் தான் எங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவினார். எங்களுக்கு தேவையான இராணுவ பயிற்சிகளையும் அளித்தார். இந்த உதவிகளாலேயே கடல் புலிகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது” என்று கூறினார்.
இலங்கையின் இன்றைய அதிபரான கோத்தபய இராஜபக்சே, “காங்கிரஸ் அரசாங்கத்துடனும், அதன் அதிகாரிகளுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பத்தில் எங்களுக்கு அவர்களின் முழு ஆதரவு இருந்தது” என்று கூறியுள்ளார்.
இலங்கையில் கடைசி கட்ட போரின் போது, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியே நடைபெற்றது. சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸின் ஆட்சி இருந்தது.
1. இந்தியாவின் நலன்களை இலங்கையில் பாதுக்காக்கவும், பாக்கிஸ்தான் மற்றும் சீனா இலங்கையில் நிலை பெறுவதை தடுக்கவும், விடுதலைப் புலிகளை அழிப்பதும், பிரபாகரனைக் கொல்வதும் மட்டும் தான் ஒரே வழி என்ற நிலைப்பாட்டை எடுத்த சோனியா காந்தியின் அதை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அமைதி காலத்தின் போது ஈழச் சிக்கலுக்கு இராணுவத் தலையீட்டின் மூலமே முடிவு காண வேண்டும் என்று சோனியா காந்தி விடாப் பிடியாக இருந்தார். இராணுவ உத்திகள், பொதுமக்களை கட்டுப்படுத்துதல், ஊடகங்களை ஒடுக்குதல் அகியவற்றுடன் முற்று முழுதான போரிற்கான அறிவுரைகளை அமைதி காலத்திலும் கூட சோனியா காந்தி இலங்கை அரசாங்கத்திற்கு அளித்து வந்தார். கருணா மற்றும் கே.பி ஆகியோர் உட்பட விடுதலைப் புலிகள் தலைமையில் பிளவு ஏற்பட சோனியா காந்தி மற்றும் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
2. “The Statesman” இதழின் பத்திரிக்கையாளர், சாம் ராஜப்பாவின் கூற்றுப் படி: இலங்கையில் நடைபெறும் இன விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ நடவடிக்கை மூலம் முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு பச்சைக் கொடி காட்டியது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் அளிக்கத் தயார் என்று சோனியா காந்தி கூறியதாக கொழும்புவில் இருந்து வரும் செய்திகள் தெரிவித்தன.
இந்திய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணன், வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் உட்பட பிரதமர் அலுவலகத்தில் இருந்த பல்வேறு அதிகாரிகள் தேசிய நலனை விட சோனியா காந்தியின் நலனிற்கு முக்கியத்துவம் கொடுத்து, இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவி செய்தனர். உலகமே இலங்கையில் நடந்தவற்றை கண்டு கொந்தளித்துக் கொண்டு இருந்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அமைதியாக இருந்தது. இராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படும் பட்சத்தில், இந்திய அராங்கம் மட்டும் தப்பித்து விட முடியாது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு துணை நின்றார். அவரின் அமைதியும் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவும் கேடு விளைவித்தது. பிரபாகரன் கோரிய உதவிகளை புறம் தள்ளிவிட்டு, தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, காங்கிரஸ் கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள மறுத்தார்.
3. Tamil Nadu Coastal Security Group உதவியுடன், இந்திய உளவுத் துறை அமைப்பான RAW 2007 இல், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் செயல்பாட்டையும், விடுதலைப் புலிகள் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு தப்பி வருவதை தடுக்கவும், ஆயுதங்கள் பெறுவதற்கு தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் வைத்திருந்த தொடர்புகளையும் முடக்கியது.
4. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், இனப்படுகொலை மற்றும் போர் குற்றத்திற்கு காரணமானவர்களை விசாரிக்க ஐ.நா’வில் தீர்மானம் கொண்டு வரவும் வற்புறுத்தி, தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு செயல்படுத்த போதிய அழுத்தங்களை கருணாநிதி மத்திய அரசிற்கு அளிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை அவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்திய அரசாங்கம் முக்கியப் பங்காற்றியது. அதையும் கருணாநிதி கண்டிக்கவில்லை. தங்கள் வற்புறுத்தலின் பெயரிலேயே தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டது என்று மன்மோகன் சிங் கடிதம் வாயிலாக கூறிய பிறகும் கூட கருணாநிதி அமைதி காத்தார்.
5. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்புப் பட்டியலில் வைப்பது, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாப்பது, கனடாவின் வலதுசாரி கட்சிகளில் உள்ள இந்தியர்களை கொண்டு விடுதலைப் புலித் தலைவர்களை தடை செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வருவது போன்ற அரசியல் ரீதியான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் செய்தது.
6. இராணுவ ரீதியில், இலங்கை அரசாங்கத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாகவும், போர் விமானங்கள், தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியா அளித்தது. அமைதி காலத்தில் மட்டும் இந்திய அரசாங்கம்: JY11 3D ரேடார் கருவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு 5 மில்லியன் டாலருக்கு விற்றது; இரண்டு Indra IN-PC-2D ராடார் கருவிகள், இலவசமாக அளித்தது; 13 MG போர் விமானங்கள், நூற்றுக்கணகான போர்வீரர்கள் அணியும் உடுப்புகள், மற்றும் தாக்குதலுக்கு தேவையான ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வழங்கியது.
7. இந்தியாவின் செயற்கைக் கோள்களை பயன்படுத்திக் கொள்ள இலங்கை இராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன் மூலமும், தானியங்கி விமானங்கள் (Drone) மூலமும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இலங்கை இராணுவம் கண்காணித்தது. கடல் புலிகளின் கலன்கள் மீது, ஆயுதம் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது இந்திய விமானப் படை தொடர் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களை இறக்குமதி செய்வதை, விடுதலைப் புலிகள் தலைவர்கள் தப்பிச் செல்வதையும் தடுக்க இந்திய கப்பற்படை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்திய கப்பல் படை, விடுதலைப் புலிகளின் கிடங்குகளாக பயன்படுத்திய பத்து கலன்களை (floating warehouses) அழித்தது. இதனால் கடற் புலிகள் அமைப்பு மிகவும் பலவீனம் அடைந்தது. கடற்பகுதிகளை கண்காணித்து, சேகரித்த தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு அளித்தது, கடற் புலிகளின் கலன்கள் மீது விமானப் படைத் தாக்குதல்களையும் நடத்தியது. இந்தியாவில் இராணுவ பயிற்சி பெறும் முதன்மை நாடாக இலங்கை இருந்தது. 2008 இல், இலங்கை இராணுவத்திற்கு வருடாந்திர பயிற்சிகளை அளிக்கவும் இந்தியா ஏற்பாடுகள் செய்தது. இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர், வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் இராஜபக்சேவின் சகோதரர்கள் மற்றும் அவர்களின் செயலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அல்லாமால், தனிப்பட்ட முறையில் தகவல்களை பறிமாறிக்கொள்வதற்கான முறைமைகள் ஏற்படுத்தப்பட்டன. 2007-2009 கால கட்டத்தில் இவர்கள் பல முறை சந்தித்துக் கொண்டனர்.
8. இலங்கையின் கடற்படை தளபதியான வசந்தா கரணகோடா “விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்கள் இந்திய கப்பற்படை அளித்த தகவல்களை கொண்டு ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்கு எல்லா வகையான பொருட்களும் கொண்டு செல்லப்படுவது தடுக்கப்பட்டது. இதனால் எங்களால் வேகமாக முன்னேற முடிந்தது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் புலிகள் கட்டியமைத்திருந்த தேசத்தை எங்களால் அழிக்க முடிந்தது.” என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசு மீதான சர்வதேச போர் குற்றங்களை விசாரிக்க ஐநா மனித உரிமைகள் ஆணையம் எடுக்கும் முயற்சிகளை இந்திய அரசாங்கம் இன்றளவும் விடாப்பிடியாக தடுத்து வருகிறது.