வெறுப்பு மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் என்பவற்றை இலக்கு வைத்து அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இலங்கைக்கான ஐ.நா. அமைப்பின் வதிவிட பிரதிநிதி உனா மக்குலே வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த வாரம் சர்வதேச வெசாக் தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டது. இந்த வாரம் புத்தரின் கொள்கைகள் உதாசீனம் செய்யப்படுகின்றன.
இவ்வாறாக வன்முறைகளை தூண்டி, நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் இணைந்து நாட்டு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மத வெறுப்பை தூண்டும் நபர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.