சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம் ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே.
மகிந்த அணியினர் இழந்த தம் அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காக உச்சகட்ட அளவு பிரச்சாரங்களை அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் எதுவெனில் தெற்கில் ஆட்சிக் கவிழ்ப்பும், இனவாதமும் தலைதூக்கும் அதே சமயம் வடக்கில் வேறு வகையில் ஓர் பிரச்சினை ஆரம்பமாகின்றது.
உதாரணமாக இந்த இனவாதம் சென்றவருடம் தமிழர்களுக்கு எதிராகவே பாரிய அளவில் வெளிப்பட்டது. முஸ்லிம் மக்கள் மீது இனவாதம் பரப்பப்பட்டாலும் அதன் தாக்கம் தமிழர்களையும் உள்ளடக்கியே வெளிப்பட்டது.
என்றாலும் தற்போது தமிழர்களை கைவிட்டு விட்டு முஸ்லிம் மக்கள் மீது இனவாதப் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த இடத்தில் தமிழர்கள் இன்னொரு வகையில் முடக்கப்படுகின்றார்கள்.
கடந்த வருடத்தில் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமும், ஆட்சிக் கவிழ்ப்பும் சூடு பிடிக்கும் தருணம் வடக்கில் பொலிஸார் மீது வாள் வெட்டும், பாதுகாப்பு பிரச்சினைகளும் தலைதூக்கின.
இந்த இடத்தில் தெற்கில் இனவாதம் அடக்கி வைக்கப்பட வடக்கிலும் அமைதி நிலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் (உண்மையான) குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படவோ, தண்டிப்புகளோ இடம்பெறவில்லை.
அதேபோன்று தற்போதும் தெற்கில் இனவாதம் காரணமாக பிரச்சினைகள் தலைதூக்கும் அதே சமயம், யாழில் பொலிஸார் வாகனம் மீது தாக்குதலும், வடக்கில் மிகையான இராணுவக் குவிப்பும் இடம் பெறுகின்றது.
இந்த இடத்தில் இதற்கு காரணம் எதுவென அறியாத போதும் வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டு மீண்டும் ஓர் யுத்த நிலை ஏற்பட்ட தோற்றத்தினை ஏற்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை வேடிக்கையானதே.
இதே சமயம் தெற்கில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பாரிய பிரச்சினையாக வெளிப்பட்டு, கலவரங்கள் ஏற்படும் சாத்தியக்கூறினை ஏற்படுத்திக் கொண்டு வரப்படுகின்றது.
இதன் விளைவாக பள்ளிவாசல்கள் மீது தாக்குதலும், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீதும் ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல் சம்பவங்களும் இடம் பெறுகின்றது.
அத்தோடு சிங்கள இளைஞர்களையும் திரட்டும் பணி வேகமாக தொடரப்படுவதோடு, சமூக வலைத்தளங்களில் இனவாதம் பகிரங்கமாகவே தொடருகின்றது.
அது மட்டுமல்லாது பிரச்சினைகள் ஆரம்பிக்கப்படும் முன்பாக, “பௌத்தம் அழிந்து விட்டது, இது பௌத்தர்களுக்கு பாரிய அழிவினை ஏற்படுத்திவிடும், இது பௌத்த நாடு..,
ஆனால் சிங்கள இளைஞர்கள் இந்த சூழ்நிலையில் அமைதியாக இருக்க வேண்டும், கலவரங்களிலோ, தாக்குதல்களிலோ ஈடுபடவேண்டாம்” என அழுத்திக் கூறப்பட்டு கொண்டு வரும் நிலை தெற்கில் தொடருகின்றது.
என்றபோதும் இதன் உள்ளர்த்தம் தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்ற தூண்டுதலே என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
இதேவேளை வடக்கில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என ஆட்சியாளர்கள் கூறும் அதே சமயம் காரணம் இன்றி பொலிஸாரும், இராணுவமும் குவிக்கப்பட்டு கொண்டே வருகின்றது.
ஆனால் குற்றவாளிகள் எவரும் அடையாளப்படுத்தப்படவும் இல்லை என்பது வேடிக்கையானது. இதன் காரணமாக வடக்கில் தழிழர்கள் ஒருவிதமாகவும், நாட்டில் முஸ்லிம்கள் ஒருவிதமாகவும் அடக்கப்பட்டு கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.
ஆனால் இதன் மூலம் கிடைக்கப்பெறும் பதில் எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்கு மட்டும் இப்போதைக்கு வெளிப்படையான பதில்கள் கிடைக்கப்பெறவில்லை.
இவை இவ்வாறு இருக்க உச்ச கட்டத்தில் இருந்த ஆட்சிக் கவிழ்ப்பு பிரச்சாரங்கள் அப்படியே அடங்கிப் போய் விட்டது.
ஆனாலும் இனவாதமும் சரி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினைகளும் சரி ஆட்சி மீதான குற்றச்சாட்டை மட்டுமே முன்வைத்து வருகின்றது.
அதனால் இவையும் பௌத்தம் ஊடாக ஆட்சிக் கவிழ்ப்பிற்கான செயற்பாடுகளே என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் அரசு இந்த விடயங்கள் அனைத்தையும் வெறும் மேற்பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வருவது மற்றொரு பக்கம் சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
இவை அனைத்தையும் நோக்கும் போது இனவாதம், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான விமர்சனங்கள் அனைத்துமே அரசியல் உள்நோக்கங்களுக்காக நடத்தப்பட்டு வரும் நாடகங்களாகவே நோக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் ஒரே கல்லில் இரண்டு அல்ல கொத்தாகவே மாங்காய்களை வீழ்த்தும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் இவற்றால் கிடைக்கப்போகும் பதில் இலங்கை பின்னோக்கிப் பயணிப்பதா?
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிக்கொள்ளும் அரசு, உண்மையில் மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுமா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்து விட்டது.
தீர்வுகளுக்கான இழுத்தடிப்புகளும் இப்போதும் தொடர்ந்து கொண்டே வருகின்றது. அத்தோடு புது அரசியல் யாப்பு வருகின்றது.., வருகின்றது எனக் கூறும் அரசு அதனை இழுத்தடிக்கும் செயற்பாடாகவே நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
ஆக இவை அனைத்தும் அரசும் இணைந்து நடத்தும் ஓர் நாடகம் என்றே தென்னிலங்கை அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.